அனலாய் தகிக்கும் அணைப்பு
அபூர்வராகமாய்!
உயிரைத் துளைக்கும் ஸ்பரிசம்
உன்னத ஆசையாய்!
கரைய வைத்திடும் கழுத்து முத்தம்
காதல் யுத்தமாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பிணைப்பும் அணைப்பும் இறுகியதில்
இனியில்லை பிரிவொன்று!
-அட்சரனின் வேதா
அட்சரனின் பிறந்தநாளுக்கு முந்தைய மாலையில் ஹெல்வட்டாஸுக்கு அவனைத் தேடி வந்தான் அருள்மொழி. அவனை மட்டுமல்ல. இலக்கியா, சஞ்சயையும்தான்.
வந்தவனின் கையில் சாக்லேட் பாக்ஸ்.
“ஹேய் அருள்!” மூவரும் ஒரே குரலாக அழைத்தபடி ஒன்று கூடிவிட்டார்கள்.
“சாக்லேட் எடுத்துக்கோங்கடா! நதி இஸ் ப்ரெக்னெண்ட்”
ஆண்கள் எடுத்துக்கொண்டாலும் இலக்கியா அவனை முறைத்தாள்.
“என்ன முறைக்குற? இருக்குறதுலயே பெரிய சாக்லேட் உனக்குத்தான். இந்தா” என அவளது வாயில் சாக்லேட்டைத் திணித்தான் அருள்மொழி.
அதைச் சாப்பிட்டபடியே “அதென்ன நதி ப்ரெக்னெண்டா இருக்கா? இப்ப எல்லாரும் வீ ஆர் ப்ரெக்னெண்ட்னு சொல்லுறாங்க. அப்பதான் குழந்தையோட ரெஸ்பான்ஸிபிலிட்டிய பகிர்ந்துக்கணும்ங்கிற எண்ணம் ஆம்பளைங்க மனசுல அழுத்தமா உருவாகுமாம். நீ இத்தனை வருஷம் லண்டன்ல இருந்திருக்க. நம்ம ஊர் ஆம்பளைங்க மாதிரி என் பொண்டாட்டி மாசமா இருக்காங்கிற ரீதில சொல்லுற. போ! ஐ அம் டிசப்பாயிண்டட்” என்றாள் முகச்சுணக்கத்தோடு.
“ஓஹ்! இதனாலதான் அவளும் கடுப்பா இருந்தாளா?” என்றவனை இப்போது மூவரும் முறைத்தார்கள்.
பின்னர் தலையிலடித்துக் கொண்டார்கள்.
“சரிடா! அந்த சாக்லேட் பாக்ஸை குடு” என்று அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டாள் இலக்கியா.
“இன்னைக்கு நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். இந்த வீக்கெண்ட் உன்னோட ட்ரீட். சொல்லிடு அச்சு. இல்லனா இவன் எஸ்கேப் ஆகிடுவான்” என்று அட்சரனிடம் நினைவுறுத்திவிட்டுச் சென்றாள் அவள்.
“தனியாவா போற? இரு நான் வர்றேன்” என்று சஞ்சயும் கிளம்ப இருவரையும் நமட்டுச்சிரிப்போடு பார்த்தான் அருள்மொழி.
“தே ஆர் குக்கிங் சம்திங்” என்று அவன் போகிறவர்களைக் கைகாட்ட அட்சரன் அவனது தோளில் அடித்தான் விளையாட்டாக.
“வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ் மேன்” என்றான் தொடர்ந்து.
“நானும் நதியும்கூடதான் ஃப்ரெண்ட்ஸ். நாங்க கல்யாணம் பண்ணிக்கலையா? ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இன்விடேஷன் குடுப்பாங்க. அப்ப நீ என்னோட தொலைநோக்குப் பார்வையோட பவரைப் புரிஞ்சிப்ப அச்சு”

நண்பர்கள் இருவரும் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. ராஜேஸ்வரியின் மொபைலுக்கு அழைத்துத் தனக்கு இரவுணவு வேண்டாமெனச் சொல்லிவிட்டான் அட்சரன்.
இருவரும் சேர்ந்து பக்கத்தில் ஒரு ஹோட்டலில் இரவுணவை முடித்துக்கொண்டார்கள்.
“இந்த வீக்கெண்ட் உன் ட்ரீட். நதியும் வரணும்.”
“கண்டிப்பா. அவளும் ஆன்ட்டி அங்கிளைப் பாக்கணும்னு சொன்னா”
அருள்மொழி இயல்பாகத்தான் பேசினான். ஆனாலும் அட்சரனுக்குச் சின்னதாய் ஒரு இடறல்.
“எல்லாம் ஓகேதானே?” என்று வினவினான் அவனிடம்.
அருள்மொழி முதலில் திகைத்துப் பின்னர் ஆமென்றதும் “நதி ரெண்டு நாளுக்கு முன்னாடி ஹாஸ்பிட்டலுக்கு வேதாகூட போயிருக்கா. உனக்குத் தெரியுமா?” என்று வினவினான்.
“தெரியும்! நான் கொஞ்சம் பிஸி”
“டேய்! எவ்ளோ பிஸியா இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப அழகான மொமண்ட், நீதான் அவகூட இருக்கணும்”
“ப்ச்! நான்தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனேன்டா. இதுக்கு மேல என்ன பண்ணனும் நான்?” பொறுமையில்லை அருள்மொழியின் குரலில்.
அட்சரனுக்கு இது சரியாகத் தோன்றவில்லை. அவனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தான் அட்சரன்.
“இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாடா? உன் மோட்டிவ் என்னனு எனக்குப் புரியுது. ஆனா எந்த இடத்துலயும் நதிய நீ இழந்துடாத. அவளை இழந்து நீ ஜெயிச்சாலும் அது உனக்குத் தோல்விதான். மறந்துடாத”
அட்சரன் அழுத்தமாய்ச் சொன்னதும் ஏதோ புரிந்தாற்போலத் தலையாட்டினான் அருள்மொழி.
சாப்பிட்டு முடித்து இருவரும் தரிப்பிடத்தை அடைந்ததும் அட்சரனிடம் அருள்மொழி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினான்
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அச்சு” நீண்டதொரு பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தவனின் காருக்குள் போய் அமர்ந்துகொண்டான் அட்சரன்.
வெளியே நின்று பேசுவது சரியில்லை என்பது அருள்மொழியின் எண்ணம். பகலில் பார்த்துப் பேசு, இரவில் அதையும் பேசாதே என்பார்களே! அதே நேரம் தனது தற்போதைய திட்டத்தை அட்சரனிடம் பகிராமல் இருக்கவும் பிடிக்கவில்லை அவனுக்கு.
அருள்மொழி லண்டனிலிருந்து வந்ததில் ஆரம்பித்து இப்போது வரை அவனுக்குத் தேவையான எண்ணற்ற உதவிகளை அட்சரன் செய்திருக்கிறான். ஏனெனில் அருள்மொழிக்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகள் அவனுக்குத் தெரிந்திருந்தன. அதோடு கூடுதலாய்ச் சமீப நாட்களில் அவன் போட்டிருக்கும் அனைத்துத் திட்டங்களையும் மூச்சு விடாமல் நண்பனிடம் கொட்டிவிட்டான்.
அவன் பேசி முடித்ததும் கவலையோடு பார்த்தான் அட்சரன்.
“உன்னோட ப்ளான் பக்காவா இருக்கு. ஆனா நதி? அவளுக்கு இதெல்லாம் தெரிய வந்துச்சுனா…”
“இந்த ஆறு மாசத்துல ஒரு தடவை கூட நான் அவகிட்ட மாட்டிக்கல. அவளுக்கு என் மேல சந்தேகம் இருக்கு. நானா சொல்லாத வரைக்கும் அவளுக்கு எதுவுமே தெரியாது.”
நண்பர்களின் பேச்சில் நேரம் கழிந்துவிட அருள்மொழியை ஹோட்டலில் இருந்து வழியனுப்பிவிட்டு அட்சரன் அன்று வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டது.
வழக்கம் போலத் தன்னிடமிருக்கும் சாவியை வைத்துக் கதவைத் திறந்து வீட்டுக்குள் வந்தவன் வீடே இருளில் மூழ்கியிருப்பதைப் பார்த்துவிட்டுத் தனது அறைக்கதவில் கை வைத்தான்.
அது திறந்துகொண்டதும் ஆச்சரியம். ராஜேஸ்வரி எப்போதும் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிடுவார். யார் திறந்து வைத்தது?
கேள்வியோடு உள்ளே வந்தவன் விளக்கைப் போட முயல மின்சாரம் உயிரிழந்திருந்ததே அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு.
“ஸ்ட்ரீட்ல லைட் எரியுது. வர்ற வழிலயும் பவர் கட் ஆன மாதிரி தெரியலையே” என்றவன் “இன்வெர்ட்டருக்கு என்னாச்சு?” என்று அடுத்தக் கேள்வியை எழுப்புகையில் அந்த அறையின் இருளைத் துடைத்து எடுத்துக்கொண்டு ஒளிர்ந்தது மெழுகுவர்த்தியின் ஒளி.
சுடரொளியில் கூடவே அழகாய் வேதவதியின் முகமும் ஒளிர “வேதா! பவர் கட் ஆகிடுச்சா?” என்றபடி வந்தவன் அந்த மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருப்பது ஒரு கேக்கின் மீது என்பதைக் கண்டதும் கண்களில் ஆர்வம் ததும்ப அவளை நெருங்கினான்.
வேதவதி குட்டியாய் ஒரு கேக்கைக் கையில் ஏந்தியிருந்தவள் “ஹேப்பி பர்த்டே” என்று சொல்லிப் புன்னகைக்கச் சிரித்தவளைத் தன்னோடு சேர்த்து அள்ளிக்கொள்ளப் பரபரத்தன அவனது கரங்கள்.
இத்தனை அழகாய் இருளைக் கிழித்து நிற்கும் தேவதையாய் ஒருத்தி பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லுகிறபோது யாரால்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?
“வேதா!” என்று ஏதோ சொல்லப்போனவனை இழுத்து அவனது நெற்றியில் தனது நெற்றியை ஒட்டிக்கொண்டவள் “சூ! பேசாதீங்க” என்க ஒன்றாய்ச் சேர்ந்த இரு உள்ளங்களும் மெழுகுவர்த்தியின் இதமானச் சூட்டில் உருகிக் கரைந்தன.

சில நொடிகள் இதில் கரைய வேதவதி அவனது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
“கேக் கட் பண்ணலாமா?” என்று குழந்தையாய் ஒரு கேள்வியும்.
“மெழுகுவர்த்திய ஊதிட்டா சுத்தமா இருட்டாகிடும்.”
“இன்வெர்ட்டர் சுவிட்சை நான் ஆன் பண்ணிடுறேன்”
“அடிப்பாவி! அப்ப நீதான் ஆஃப் பண்ணுனியா?”
“ம்ம்! சர்ப்ரைஸ் பர்த்டே விஷ்காக ஆஃப் பண்ணுனேன். ஆக்சுவலி மெயினை ஆஃப் பண்ணனும்னு நினைச்சேன். எனக்காக ஈ.பி டிப்பார்ட்மெண்ட் அந்த வேலையப் பாத்துட்டாங்க” என்றவள் கீழ்த்தளத்தில் இருக்கும் இன்வெர்ட்டரின் சுவிட்சைத் தட்டிவிட்டு வந்ததும் அட்சரனின் அறைக்குள் வெளிச்ச வெள்ளம் பாய்ந்தது.
“இப்பக் கட் பண்ணலாமா?”
அட்சரன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துக் கேக்கைத் துண்டுகளாக்கி அதில் ஒன்றை வேதவதிக்கு ஊட்ட “முதல்ல பர்த்டே பாய்க்குத்தான்” என்றவள் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
சாப்பிடும்போதே “எனக்குக் குலாப் ஜாமூன் ஞாபகம் வருது” என்றவன் உதட்டை நாவால் ஈரம் செய்ய
“எப்ப பாரு அதே நினைப்பு” என்றவள் கேக்கின் க்ரீமை அவனது நாசியில் பூசிவிட்டாள்.
அவள் க்ரீமை அள்ளுவதற்காகக் கேக்கைச் சிதைக்கப் போக “அந்த அண்டா சைஸ் கைய வச்சுக் கேக்கை ஸ்பாயில் பண்ணிடாதீங்க. ஃப்ரிட்ஜ்ல வச்சிட்டு வர்றேன். மார்னிங் சாப்பிடலாம்” என்று சமையலறைக்கு ஓடிவிட்டாள் வேதவதி.
திரும்பி வந்தவள் அவன் முகம் கழுவி நிற்பதைக் கண்டதும் “உங்களுக்கு ஒரு கிஃப்ட் இருக்கு” என்றாள் புன்சிரிப்போடு.
அட்சரன் கண்களில் குறும்பு மின்ன “எனக்குத் தெரியுமே” என்றவன் விஷமச்சிரிப்போடு மெல்ல நகன்று கதவை அடைத்துவிட்டு வர அவளோ பரிசுப்பெட்டியை எடுத்துக்கொண்டிருந்தாள்.
சோஃபாவில் வைத்திருந்த சிறியபெட்டியை எடுத்துகொண்டு நிமிர்ந்தவள் கதவு அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் “எதுக்குக் கதவைச் சாத்துனீங்க?” என அப்பாவியாய் வினவ
“இந்தப் பர்த்டேக்கு எனக்கு நீ தரக்கூடிய பெஸ்ட் கிஃப்ட், நீதான்” என்றபடி மையலோடு அருகில் வந்து அவளையும் படுக்கையையும் மாறி மாறி பார்த்துவிட்டுப் புருவத்தை உயர்த்தினான் அட்சரன்.
“என்ன? அதெல்லாம்…”
மிரண்டு திணறியவளை முத்தமிட அருகே வரவும், சரியாக அவனுக்கும் தனக்கும் இடையே பரிசுப்பெட்டியை வேதவதி புகுத்திவிட அட்சரனின் உதடுகளுக்கு அந்தப் பெட்டியை முத்தமிடும் பாக்கியம்தான் கிடைத்தது.

ஏமாற்றத்தோடு உச்சுக் கொட்டியவனின் கையில் அதைத் திணித்தவள் “ஓப்பன் பண்ணிப் பாருங்க” என்க
“எனக்கு இதெல்லாம் வேண்டாம்” என்றான் அவன் சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தோடு.
வேதவதி இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தவள் “பெரிய காதல் மன்னன் இவரு! ஒழுங்கா ஓப்பன் பண்ணிப் பாருங்க” என்று மிரட்ட அட்சரனும் பரிசுப்பெட்டியைத் திறந்து பார்த்தான்.
ஒயிட் மற்றும் ரோஸ் கோல்டில் கருப்பு வண்ணங்கள் மின்னிய ஆண்கள் அணியும் ப்ரேஸ்லெட் அதில் ஜொலித்துக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்தவனின் கண்களில் மெல்லிய ரசனை.
“பிடிச்சிருக்கா?”
“ரொம்பப்” என்றவன் “நீயே போட்டு விடு” என்று கையை நீட்ட வேதவதியும் அவனது கையில் மாட்டிவிட்டாள்.

“நல்லா இருக்குல்ல” என்றவன் அதன் உட்பகுதியில் லேசரால் எழுதப்பட்ட இருவரது பெயர்களின் முதல் எழுத்தைப் படித்ததும் உருகிப்போனான்.
அந்த எழுத்துகளை வருடியபடியே “இதுக்கெல்லாம் நான் எப்பிடி அர்த்தம் எடுத்துக்குறது வேதா?” என்று அவளைப் பார்த்துக் கேட்க
“நான் இதைக் குடுத்ததுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். உங்க மேல எனக்கு இருக்குற காதல்! இந்தத் தாலிய என் கழுத்துல மாட்டுனதால வந்த காதல் இல்ல இது. சொல்லப்போனா எதனால வந்துச்சுனே தெரியல. புரியவும் இல்ல. புரியாத விஷயங்கள்ல ஒரு வெகுளித்தனமான அன்பு ஒளிஞ்சிருக்கும் அட்சரன். என் காதலும் அப்பிடித்தான். எனக்காக நான் பேசணும்னு அடிக்கடி சொல்லுவீங்கல்ல. அதான் பேசிட்டேன். பிடிக்கலனா சொல்லிடுங்க” என்றவளின் கன்னத்தைப் பற்றித் தன்னோடு இழுத்துக்கொண்டான் அவன்.
“உன்னை எனக்குப் பிடிக்காமப் போகுமா?” என்றவனின் கண்கள் அந்தத் தருணத்தில் கலங்கிவிட்டன.
அவள் மீதான பிடித்தமும் நேசமும் அவனுக்கும் அதீதம். சொல்லப்போனால் அவர்களின் உறவில் முதலில் நேசம் துளிர்த்தது அவனிடமே! அந்த வகையில் காதலில் அவன் வேதவதிக்குச் சீனியர்.
ஆனால் ஏதோ ஒரு தடை! இதுநாள் வரை அவனால் வெளிப்படையாகத் தனது நேசத்தைச் சொல்லவே முடிந்ததில்லை.
வேதவதி வெளிப்படையாகச் சொன்ன விதத்தில் அவனது மனம் அடிவாங்கியது. மனம் கொண்ட காதலை உரைக்காமல் திரிந்தவனுக்கு அவளின் வெளிப்படையான காதல் பிரகடனம் பெரும் அடியாய்! ஆனால் சந்தோஷமான வேதனையைத் தரும் அடியாய்!
“உன் அளவுக்கு எனக்குப் பெரிய மனசில்ல வேதா. நீ இன்னைக்குச் சொன்னதை நான் என்னைக்கோ சொல்லிருக்கணும்”
சொல்லாமல் விட்டவை, வேண்டுமென்றே இட்டுக்கட்டியவை எல்லாம் அவர்களுக்குள் இன்னும் முரண்டிக்கொண்டிருக்க இப்போதும் அதை மறைத்தவனாய், அதே நேரம் தனது செயலுக்கு வெட்கியவனாய் அட்சரன் பேச வேதவதிக்கு அவனது மூடுமந்திரமானப் பேச்சு புரியாவிட்டாலும் அதில் இழையோடிய வருத்தமும் ஆதங்கமும் புரிந்தது.
அவன் கண்கள் கண்ணீரைக் கசிய விடுவதை அவள் விரும்பவில்லை. பேச்சை மாற்ற எண்ணினாள்.
“கன்னம் வலிக்குது” அவன் இவ்வளவு நேரம் இரு கரங்களால் அழுந்தப் பற்றியிருந்த கன்னங்கள் மெய்யாகவே வலியெடுத்தன. பதறிப்போய் விடுவித்தான் அட்சரன்.
“சாரி!” என்றவன் ஆசையாய் அவள் கொடுத்த ப்ரேஸ்லெட்டைப் பார்த்துக்கொண்டான் மீண்டும் ஒரு முறை.
“நான் போகட்டுமா?” வேதவதி கேட்டதும் திடுக்கிட்டவன்
“நோ! நீ என்கூட இரு” என்றான் கட்டளையாய்!
“அதில்ல… எனக்கு எக்ஸாம்…” டாப்ட்ஸின் நுனியைத் திருகியவளை ஏக்கமாய்ப் பார்த்தன அட்சரனின் விழிகள்.
“ஒரே ஒரு எக்ஸாம்தானே?”
“ஆனா மாமா நமக்குக் கல்யாணம்னு…”
“அதெல்லாம் ஆல்ரெடி ஆயாச்சுல்ல. மறுபடி மறுபடி பண்ணுனாலும் நீ மிஸஸ் அட்சரன்தான். ரெண்டு தடவை தாலி கட்டுனா மிஸஸ் அட்சரன் ஸ்கொயர், மூணு தடவை கட்டுனா மிஸஸ் அட்சரன் க்யூப்னு உன் பேர் மாறவாப் போகுது? ப்ளீஸ் வேதா”
“இப்பிடியெல்லாம் பேசுனா நான் எப்பிடிப் போறது?”
“போகாத! அட்லீஸ்ட் கிவ் மீ அ ஹக்” இரு கரங்களையும் விரித்தான் அவன்.
சிரிப்போடு அதற்குள் சிறைப்பட்டவளை இறுக அணைத்துக்கொண்டவன் “மாட்டுனியா? நான் உன்னை விடமாட்டேன்” என்று சொன்னான்.
சொல்தான் அப்படி. கைகள் எப்போதோ அவளை விடுவித்துவிட்டன. அவளது தயக்கம் அறிந்தவன் எப்படி அத்துமீறுவான்? இந்தப் பிறந்தநாளை மறக்க முடியாத அளவுக்குப் பெரிய பரிசாய் வேதவதியின் காதல் அவனுக்குக் கிடைத்திருக்கிறதே!
“குட் நைட்!”
“உன் ரூம் வரைக்கும் வந்து வழியனுப்பட்டுமா?”
“என் ரூம் என்ன அமெரிக்காலயா இருக்கு?”
“சின்ன சான்ஸ் கூடத் தரமாட்டல்ல நீ”
“குடுக்கமாட்டேன்”
தலையாட்டி மறுத்தவள் மீண்டும் ஒரு முறை அவனது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு “நல்லாத் தூங்குங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
மறுநாள் விடிந்ததும் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் மகனை எழுப்பினார் ராஜேஸ்வரி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

