நமது உலகங்களுக்கு இடையிலான வேலிகளைத் தகர்க்கும் காட்டுத்தீயாய் மாறவே என் இதயம் ஏங்குகிறது. ஆனாலும், உன் மனமெனும் அழகிய வனத்தைப் பாதுகாப்பதற்காக என்னை நானே தூரத்தில் நிறுத்திக் கொள்கிறேன்.
அழகான மெஜந்தா பிங்கில் கட்டங்களாய் ஓடும் ஜரிகைக்கு இடையே பூ வடிவ மோட்டிஃப்கள் உடலெங்கும் பரவிக்கிடக்க பெரிய ஆலிவ் பிரவுன் நிற பார்டரில் மலர்க்கொடிகள் ஜரிகையாய் விரிந்துகிடந்த பட்டுப்புடவையை வருங்கால மருமகளுக்கான பரிசாகத் தேர்வு செய்திருந்தார் குந்தவை.
அவர் தேர்வு செய்தபோதே ஓரக்கண்ணால் மகனோடு பேசிக்கொண்டிருக்கும் வெண்பாவைப் பார்க்கத் தவறவில்லை.
‘இவர்கள்தான் கால அவகாசம் கேட்டார்கள். ஆனால் இத்துணை சகஜமாகப் பேசிக்கொள்பவர்களுக்குத் திருமணம் மட்டும் ஏன் தயக்கத்தைக் கொடுக்கிறது?’
அந்தக் காலத்துப் பெண்மணிக்கே உரிய புதிரான எண்ணவோட்டம் அவருக்குள்.
“புடவை பிடிச்சிருக்கா வெண்பா?” அவர் ஆசையாகக் கேட்க வெண்பாவும் முகம் மலரத் தனது பிடித்தத்தை வெளிப்படுத்தினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீ நிச்சயத்துக்கு வேற ட்ரெஸ் வாங்கியிருக்கியா?”
“இல்ல அத்தை. என்கிட்ட ஆல்ரெடி ஒரு புடவை இருந்துச்சு. அதைக் கட்டலாம்னு நினைச்சேன்.”
“அப்ப இந்தப் புடவையைக் கட்டிக்குறியாடா?”
“கட்டிக்கிட்டா போச்சு. இன்னைக்கே பிளவுஸ் தைக்கக் குடுத்துடுறேன்”
அன்னையும் அவளும் பேசுகையில் இடையில் புகுந்தான் நேத்ரன்.
“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருந்தா நான் எதுக்கு இங்க?”
குந்தவை மகனின் தோளில் தட்டிக்கொடுத்தபடி “சரியா சொன்ன. இதை நாங்க பாத்துக்குறோம், நீ கிளம்பு” என்று சொல்லவும் அவன் முகம் பரிதாபமாய் மாறியது.
“நிஜமாவா? நான் கிளம்பட்டுமா?” என்று அன்னையிடம் கேட்பதுபோல வெண்பாவிடம் பார்வையால் வினவ அவளோ பதில் சொல்லாமல் தவித்தாள்.
“அப்ப நிஜமா போயிடுவேன்” என்று திரும்பப்போன சமயத்தில்
“அது… அத்தை எனக்குப் பசிக்குற மாதிரி இருக்கு. நான் ஃபுட் கோர்ட்ல போய் சாப்பிட்டுட்டு அப்பிடியே உங்க எல்லாருக்கும் ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்” என்றவள் “நீங்க என்கூட வர்றீங்களா?” என அவனை அழைத்தாள்.
குந்தவைக்கு அவள் மகனைப் போகக் கூடாதெனக் குறிப்பால் உணர்த்திய விதம் புரிந்துவிட நமட்டுச் சிரிப்போடு தலையாட்டினார்.
“ஓஹ்! போகலாமே” என நேத்ரன் நடக்க அவனது வேகநடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னே தேவதையாய் ஓடியவள் மனதில் நிறைந்துபோனாள் அந்த வருங்கால மாமியாருக்கு.
குழந்தைகள் பிரிவோடு சேர்ந்திருந்த ‘ஆஹார்’ என்ற உணவகத்தை அடைந்ததும் பழச்சாறு ஆர்டர் செய்ய மெனு கார்டைப் பார்க்க ஆரம்பித்தாள் வெண்பா.
“அத்தைக்கு, பெரியத்தைக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்?” எனத் தீவிரக் குரலில் அவள் கேட்க நேத்ரனும் அவர்களுக்குப் பிடித்த பழச்சாறைக் குறிப்பிட்டான். தனது அன்னை, பெரியம்மா, துர்காவுக்கான பழச்சாறைத் தேடி எடுத்தாள்.
“உங்களுக்கு என்ன பிடிக்கும்?” மெனுவைப் பார்த்தபடியே வினவ
“இப்போதைக்கு எனக்கு டீச்சரம்மாவத் தவிர யாரையும் பிடிக்குறது இல்ல” என்றான் அவன் வேண்டுமென்றே!
வெண்பா தலையை உயர்த்தியவள் “ஜூஸ் என்ன பிடிக்கும்னு கேட்டேன்” என அமர்த்தலாய் மொழிய
“அப்பிடித் தெளிவா கேக்கணும்.” என்றவன் “வாட்டர் மெலன்” என்க
“எனக்கும் அதுதான் பிடிக்கும்” என அவனிடம் ஹைஃபை கொடுக்க உயர்த்திய கையை அதிகப் பிரசங்கித்தனமென எண்ணித் தணித்துக்கொள்ள எத்தனித்தாள் வெண்பா.
நேத்ரன் அவளது உள்ளுணர்வை முகபாவனையில் அறிந்தவனாக வேகமாகத் தணிந்த கையைப் பற்றிக்கொண்டான்.
“நமக்கு ஒரே மாதிரி டேஸ்ட்” என்று அவன் சொல்ல வெண்பாவின் கவனம் குவிந்தது என்னவோ அவனது பெரிய கரத்தில் சிறைபட்ட தனது கையின் மீதே!
அவள் ஆர்டரைச் சொல்லப்போவதில்லை என உணர்ந்தவன் தானே பழச்சாறுகளை ஆர்டர் செய்துவிட்டுப் பொறுமையாய் அவளது கரத்தை விடுவித்தான்.
வெண்பா தனக்குள்ளிருந்த படபடப்பை மறைத்தவளாய் “உங்களுக்கு ஸ்ட்ரைப்ட் பேட்டர்ன் ஷர்ட், பிளைன் ஷர்ட்டை விட நல்லா இருக்கு.” என்றாள்.
“தேங்க்ஸ்! அப்பிடியே நாலு ஷர்ட் வாங்கிக் குடுத்தா நல்லா இருக்கும்” என்றான் அவன் சீண்டலாய்.
“வாங்கித் தருவேன்! ஆனா அதை வரதட்சணையில கழிச்சிடுவோம். பரவால்லையா?”
பதிலடி தருகிறேனென எண்ணிக்கொண்டு அவனை மணப்பதற்கான ஆயத்தத்தில் ஈடுபடுவதை வெளிக்காட்டிவிட்டாள் வெண்பா.
நேத்ரனின் கண்களில் குறும்பின் சாயல் குடியேறியது. பளபளத்த விழிகளோடு அவளது தோள்பட்டை அருகே குனிந்தவன் “டீச்சரம்மா இவ்ளோ சீக்கிரம் ஓகே சொன்னதால வரதட்சணையே இல்லாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். எப்ப வெச்சுக்கலாம் நம்ம கல்யாணத்தை?” என வினவ
“அ.. அது.. நான் ஒரு கவுன்ட்டர் அட்டாக் மாதிரிதான் சொன்னேன்” எனத் திணறியபடி பின்னே ஓரடி எடுத்துவைத்தாள் வெண்பா.
தோள்பட்டையில் அவனது சூடான மூச்சுக் காற்றின் வெம்மை இன்னும் இருப்பதாய் ஒரு பிரமை அவளுக்குள்!
“ஹூம்!” ஏமாற்றமாய்ப் பெருமூச்சை இழுத்துவிட்டவனின் கண்களில் சன்னமாய்த் தவிப்பின் தூறல்கள்!
அதில் வெண்பாவின் விழிகள் இன்னும் மிரட்சியாய் விரியவே நேத்ரனின் இதழ்க் கடையில் எட்டிப்பார்த்தது முறுவல்.
ஆர்டர் செய்த பழச்சாறு வந்ததும் அதைப் பாதிபாதியாகச் சுமந்துகொண்டு மீண்டும் பட்டுப்புடவைப் பிரிவுக்கு வந்தார்கள் இருவரும். அங்கே இன்னும் துர்காவுக்குப் புடவை எடுத்தபாடில்லை.
“ஹாய் லேடீஸ்! ஜூஸ் குடிச்சிட்டுத் தெம்பாப் புடவை ஹன்ட்டிங் பண்ணுங்க” என்றவனாய் பழச்சாறு அடங்கிய பிளாஸ்டிக் கோப்பைகளை ஸ்ட்ராக்களோடு நீட்டினான் நேத்ரன்.
அவர்கள் அதை வாங்கிக்கொண்டதும் அவனும் வெண்பாவும் மட்டுமே இரண்டு எட்டு தள்ளி வந்தார்கள்.
“டீச்சரம்மா! உனக்குப் புடவையை அம்மா செலக்ட் பண்ணிட்டாங்க. எனக்கு இங்க வேற வேலையே இல்லையே. என்ன செய்யலாம்?”
“நான் சொன்னா நீங்க கேக்குறதா சொன்னீங்க. டெஸ்ட் பண்ணிப் பாக்கக் கூப்பிட்டேன். சொன்ன மாதிரியே வந்துட்டீங்க. இந்த டெஸ்ட்ல நீங்க பாஸ்தான்”
நேத்ரன் பழச்சாறு குடிப்பதை நிறுத்திவிட்டு விஷமச் சிரிப்போடு சொன்னவளைப் பிரமிப்பாய் ஏறிட்டான். பின்னர் பிடரியை வருடிக்கொண்டு சிரித்தவனாய் “டீச்சரம்மா என்பதை நொடிக்கு ஒரு தடவை நிரூபிக்குற” என்று சொல்ல வெண்பாவிடமும் அவனது புன்னகை தாவியது.
“அதுக்குனு நான் சும்மா வந்துட்டுப் போன மாதிரி ஆகிடக் கூடாது. நானும் உனக்கு ஏதாச்சும் வாங்கித் தந்தாதான் நல்லா இருக்கும். ஜூஸ் குடி! அப்புறமா ஷாப்பிங்கை ஆரம்பிக்கலாம்”
வெண்பாவும் பழச்சாறைக் காலி செய்தாள். இருவரும் சேர்ந்து சுடிதார் பிரிவுக்குச் சென்றார்கள். வெண்பா தனக்கு அதிகமாய் ஜிகுஜிகுவென இருக்கும் உடைகள் பிடிக்காதெனச் சொல்ல நேத்ரன் அதை மனதில் குறித்துக்கொண்டான்.
செட்டிநாடு காட்டனில் சுடிதார்கள் இருக்கவும் அந்தப் பக்கம் அவனது கவனம் போனது. அங்கே தேடியதில் அழகான மாம்பழ மஞ்சள் வண்ணச் செட்டிநாடு காட்டன் அனார்கலி அவனது பார்வையில் சிக்கியது. அடர்சிவப்பில் பார்டரில் மட்டும் ஜரிகை ஓடும் துப்பட்டாவோடு எளிமையில் நேர்த்தியாக இருந்தது அந்தச் சுடிதார் செட்.
“அந்த மேங்கோ எல்லோ எடுங்க” என விற்பனைப் பெண்ணிடம் சொல்ல அவரும் எடுத்துக்கொடுத்தார்.
வெண்பாவிடம் அதைக் கொடுத்தான் நேத்ரன்.
“இது உனக்கு நல்லா இருக்கும். ட்ரையல் ரூம்ல போய் போட்டுப் பாத்துட்டு வா. சைஸ் சரியில்லனா மாத்திக்கலாம்” என்றான் அவன்.
வெண்பாவுக்கும் அந்த நிறம் பிடித்திருந்தது. முழுவதும் ஒரே வண்ணமாக இல்லாமல் கழுத்திலிருந்து இடைவரை அடர்சிவப்பு நிறத் துணி கொடுத்து அதில் ஜரிகையில் ஆரம் போல நெய்திருந்தார்கள். தோளில் ஆரம்பித்து முழங்கைவரை அடர்சிவப்புத் துணியும் அதன் கீழே துளியாய் மாம்பழ வண்ணத் துணியும் ஓடின. கையின் பக்கவாட்டில் ஜரிகையில் ஜிமிக்கி போல நெய்திருந்தார்கள்.
“ரொம்ப அழகா இருக்கு” எனக் கண்களில் ரசனை வழியச் சொன்னவள் ஆசையோடு ட்ரையல் ரூமில் சென்று அதை அணிந்துகொண்டாள்.
வெளியே வந்தவள் ஒரு பக்கம் மட்டும் துப்பட்டாவை வழியவிட்டு நேத்ரனிடம் அனார்கலியை அழகாய் இரு கரங்களாலும் விரித்துக் காட்ட அவனது விழிகளும் அவளில் ஒட்டிக்கொண்டன.
வெண்பா அப்படியே சுற்றிக் காட்டவும் ஒரு சின்னக் குறை அவனது கண்களில் பட்டது. மெதுவாய் அவளருகே சென்றவன் அவளது உயரத்துக்குக் குனிந்தான்.
“உனக்காகவே டிசைன் பண்ணுன மாதிரி இருக்கு இந்த அனார்கலி. ஆனா ஒரு சின்னக் குறை”
“என்ன?”
அவள் கேட்கும்போதே அவளது அலை அலையான நீண்ட கூந்தலை மொத்தமாய் அள்ளி ஒருபக்கக் கழுத்தோரமாய் வழியவிட்டான் நேத்ரன்.
அவளது அனார்கலி குர்தியின் தோள்பக்கம் நழுவாமல் இருக்க இரு பக்கமும் கயிறு கொடுத்து அதில் டேசல்கள் தொங்கின. வெண்பா அதைக் கட்டாமல் வந்திருந்தாள். அவள் சுற்றியபோது அது நேத்ரனின் பார்வையில் பட்டுவிட்டது.
அப்போது போல இப்போதும் வெண்பாவின் முன்னே நின்றபடி அவளது தோள் வழியே குனிந்து இரு கயிறுகளையும் இணைத்து முடிச்சிட்டான்.

மீண்டும் அவனது மூச்சின் உஷ்ணத் தகிப்பு அவளது தோள்பட்டையில். முடிச்சிடுகையில் உராய்ந்த விரல்களின் ஸ்பரிசத்தில் உதறல் எடுக்காத குறை.
முடிச்சிட்டு முடித்தவன் கூந்தலின் தொல்லையின்றிப் பளிச்சென்று தெரிந்த முதுகில் ஆட்காட்டி விரலால் கோடிழுத்துவிட்டு “இப்பதான் முழு அழகு” என்று அவள் காதருகே மெதுவாய்ச் சொல்ல வெண்பா மூச்சுவிட மறந்துபோனாள்.
நேத்ரன் அவளை அதிகம் சோதிக்காமல் விலகிக்கொண்டவன் மயக்கப் புன்னகையோடு நிற்க வெண்பாவிடம் தடுமாற்றம்.
“நீங்க சொல்லியிருந்தா நானே நாட் போட்டிருப்பேன்” என்றாள் மெல்ல.
“கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ண நான் என்ன பைத்தியமா?” என்றவனின் குரலில் கொட்டியிருந்த ஏக்கமும் குறும்பும் அவளுக்குப் புரியாமல் இல்லை.
அமைதியாக நின்றவளை விட அவனுக்கும் மனமில்லை.
“டீச்சரம்மாக்குக் கோபம் வந்துடுச்சா என்ன?”
“அப்பிடில்லாம் இல்ல” என அவள் பதிலளித்த வேகத்திலேயே தனது செயல்கள் அவளுக்கு வருத்தத்தை உண்டாக்கவில்லை எனப் புரிந்துகொண்டான் நேத்ரன்.
அவனது ஒரு கரம் நீண்டு அவளது கன்னத்தைப் பற்றிக்கொண்டது.
“நான் செய்யுற எதுவும் பிடிக்கலனா சொல்லிடணும். இப்ப மட்டுமில்ல. எப்பவும். சரி தப்பை நீ தயக்கமில்லாம சொல்லுவங்கிறதாலதான் எனக்கு உன்னைப் பிடிச்சுது, புரியுதா?” அழுத்தமான ஆனால் மெல்லிய குரலில் அவன் கேட்கவும் ‘புரிந்தது’ என அவளையறியாமல் தலையாட்டி வைத்தாள் வெண்பா.
அவளையறியாமல் அவனது பேச்சை இரண்டாவது பரீட்சையாக எடுத்துக்கொண்டது அவளது மனம்.
‘ரெண்டாவது டெஸ்ட்லயும் பாஸ்’
நேத்ரன் கையை விலக்கிக்கொண்டான். அவனுக்கும் எல்லை தெரியும் அல்லவா!
“சரி! ட்ரெஸுக்கு பே பண்ணிடு” என அவன் இலகுவாகச் சொல்ல
“எதே? நீங்கதானே வாங்கித் தர்றதா சொன்னீங்க?” என்றாள் அவள் சட்டென.
“ஆமா! அவங்ககிட்ட இருந்து வாங்கி உன் கையில குடுத்துட்டேன். பில் பே பண்ணுவேன்னு சொன்னேனா?”
தன்னிடம் வேண்டுமென்றே வம்பிழுப்பதை அறிந்துகொண்டாள் வெண்பா.
“கஞ்சூஸ்” என அவள் கறுவியபடி ட்ரையல் ரூமுக்குள் செல்லவும் செட்டிநாடு காட்டன் சுடிதார் பிரிவுக்கே திரும்பிச் சென்றான் நேத்ரன்.
சிறிது நேரத்தில் வெண்பா வெளியே வரவும் அவளிடமிருந்து சுடிதாரை வாங்கி விற்பனைப் பெண்ணிடம் கொடுத்தான்.
“பேக் பண்ணிடுங்க. பில் இவங்க பே பண்ணுவாங்க” என்று மீண்டும் வம்பிழுக்க
“ரியலி?” என அவனை முறைத்த வெண்பாவின் கையைப் பிடித்துக்கொண்டவன் அங்கிருந்து வெளியேறினான்.
துர்காவுக்கும் புடவை எடுத்தாயிற்று! புடவைக்கான பில்கள் தனியே செலுத்தப்பட அனார்கலிக்கான பில்லைத் தானே செலுத்தினான் நேத்ரன்.
சுடிதார் அடங்கிய பையை வெண்பாவிடம் அவன் நீட்ட அவளும் தயக்கமின்றி வாங்கிக்கொள்ள நான்கு பெண்மணிகளும் ஒருவரையொருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டார்கள்.
மனோன்மணிக்கும், உமையாளுக்கும் ‘நேத்ரன் – வெண்பா’ திருமணம் முடிவானது போன்ற திருப்தி இப்போதே வந்துவிட்டது!
குந்தவையும் அங்கயற்கண்ணியும் நமட்டுச் சிரிப்போடு புடவைகள் இருந்த பையை வாங்கிக்கொண்டார்கள்.
வெளியே வரும்போது “எனக்கு ஒரு யோசனை தோணுது. ஏன் இன்னொரு கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுட்டு? ஒரே மேடையில வெச்சிடலாமே?” என அங்கயற்கண்ணி சொல்ல
“பெரியம்மா!” என அழுத்தமாய் அழைத்தான் நேத்ரன்.
“ஏன்டா? நீங்க நடந்துக்குறதைப் பாத்தா அவகாசம் கேட்டது வேற எந்த நேத்ரன் வெண்பாவோனு தோணுது.”
“எலக்சன் வேலை இருக்கு பெரியம்மா.”
“எலக்சன் வேலையை வெச்சுக்கிட்டு இங்க வந்தவன் கல்யாணத்தை மட்டும் தள்ளிப்போடுவியாக்கும்?”
“எனக்கு நோ அப்ஜெக்ஷன். வெண்பாவைக் கேட்டுக்கோங்க” என்று அவள் பக்கம் கைகாட்டிவிட்டு அவன் காரை நோக்கி விரைய அனைத்துப் பெண்களின் கவனமும் இப்போது வெண்பாவிடம் குவிந்தது.
அவளோ இத்தனை பேரையும் தனியாளாய்ச் சமாளிக்க வெச்சுட்டு இவன் கிளம்பிவிட்டானே என்று நொந்துபோனவளாய் “அது… நாங்க முன்னாடியே சொன்ன மாதிரிதான். முதல்ல துர்கா புகழ் மாமா கல்யாணம் நடக்கட்டும். எலக்சன் முடிஞ்சதும் நாங்க,…” என்று முடிக்காமல் “அப்புறமாப் பாத்துக்கலாம்” என அவசரமாய்ச் சொல்லிவிட்டு ஓடினாள் அவனை நோக்கி.
துர்காவுக்கு அவளது திணறலில் சிரிப்பு வந்துவிட்டது.
“விடுங்க அத்தை! பாவமா இருக்கு. எலக்சனுக்கு அப்புறம் நாங்க கல்யாணம் பண்ணிக்குறோம்னு சொல்லுற அளவுக்கு வந்திருக்காளே, அதுவே நமக்கு வெற்றிதான்” என்றாள் அவள்.
கூடவே “சித்தி! உங்க மகளுக்கு என் கொழுந்தனாரைப் பிடிச்சிருக்கு. தயங்காம கல்யாணத்துக்கான ஏற்பாட்டை நீங்களும் ஆரம்பிக்கலாம் இனி” என்க மனோன்மணியின் முகமெல்லாம் பூரித்துப்போனது.
நிறைந்த மனதோடு அனைவரும் வீடு திரும்பினார்கள். அன்றைய தினத்தில் திருமணம் பற்றிய நேத்ரனின் தியரியே நிதர்சனம் என்பதைப் புரிந்துகொண்டாள் வெண்பா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


