“பாசம் கொண்ட சிலரது செய்கைகள் மனதுக்குப் பிடிக்காமல் போனாமலும் அவர்களை ஒதுக்கி வைக்க முடியவில்லை. காரணம் நாம் அவர்களின் நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்திருப்போம். யாரோ ஒருவர் வந்து அவர்களின் கருப்பு பக்கங்களை புரட்டிக் காட்டினாலும் அப்பக்கங்களை எரித்து மீண்டும் அவர்களை நல்லவர்களாக பார்க்கவே நம் மனம் விரும்பும். இது நியாயமில்லை தான், ஆனால் பாசத்திற்கு நியாய அநியாயங்கள் கிடையாதே!”
-ருத்ரதேவ்
பிருந்தாவனம்…
“நீ பேசவே பேசாத நவி… இன்னைக்கு என் லைஃப்ல எவ்ளோ முக்கியமான நாள் தெரியுமா? இத்தனை வருசத்துல எனக்குனு நான் தேடிக்கிட்ட ஃப்ரெண்ட் நீ ஒருத்தி மட்டும் தான்… ஆனா நீ என் மேரேஜுக்கு வரல… போடி நான் செம கோவமா இருக்குறேன்”
தக்ஷிண்யா கடுப்புடன் நவ்யாவிடம் கத்திக்கொண்டிருந்தாள்.
“அண்ணி ஏன் கோவப்படுறிங்க?” என்றபடி அவளருகே நின்று கொண்டிருந்தாள் மாலினி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவள் கண்கள் மேல் மாடியைக் காட்டவும் தக்ஷிண்யா அவளைக் கண்டிப்பது போல பார்க்க, சிரித்துச் சமாளித்தாள் இளையவள்.
தக்ஷிண்யாவின் தலையில் மல்லிகைச்சரத்தைச் சூடிய சசிகலா மகளை முறைக்க
“என்னை ஏன்மா முறைக்கிறிங்க? அண்ணா எவ்ளோ நேரமா அண்ணிக்காக வெயிட் பண்ணிட்டிருக்குறார்… இவங்க என்னடானா மேரேஜுக்கு வராத ஃப்ரெண்ட் கூட சின்சியரா சண்டை போட்டுட்டிருக்காங்க” என்றாள் அவள்.
“உங்கண்ணனும் அவன் ஃப்ரெண்ட் கூட சண்டை போடுறான்” என்றார் சசிகலா.
அதற்குள் நவ்யாவிடம் பேசி முடித்துவிட்ட தக்ஷிண்யா “அனுதீப் சார் கூடவா?” என்று கேட்க
“ஆமாடா… பாவம், அனுதீப்போட ரிசார்ட்டுக்கு சென்ட்ரல் மினிஸ்டர் ஃபேமிலியோட வந்திருக்குறாராம்… இந்த மாதிரி நேரத்துல செக்யூரிட்டி டைட்டா இருக்குறதால ரிசார்ட் ஸ்டாஃபோ எம்.டியோ வெளியூருக்குப் போக கூடாதுனு கெடுபிடி வேறயாம்… என்ன சொன்னாலும் நான் பெத்த மகனால ஏத்துக்க முடியல… சரி அதை விடு… இது உங்க லைஃபோட முக்கியமான நேரம்… நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்ல… என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கோங்க… கமலும் இதை தான் என் கிட்ட சொல்லிவிட்டான்” என்க
“கம் ஆன்மா! வீட்டுல ஃபர்ஸ்ட் நைட் அரேன்ஜ் பண்ணுறதுலாம் டூ ஓல்ட் ஃபேஷன்… பெரிய க்ரேட் மவுண்டன் ஹோட்டல் அண்ட் ரிசார்ட் குரூப்னு பேர்… ஆனா பழைய பஞ்சாங்கம் மாதிரி வீட்டுல ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணுறிங்க” என்று மாலினி சலித்துக் கொள்ள அவள் தலையில் நறுக்கென்று குட்டினார் சசிகலா.
அதைக் கண்டு தக்ஷிண்யா சிரிக்க இக்காட்சியை வேண்டாவெறுப்பாக தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார் லலிதா. இன்னொரு பக்கமோ வீட்டின் பெரியவர்கள் லோகநாதன், ராஜேந்திரனோடு கமல்நாத்தையும் வீட்டின் உறுப்பினர் போல மதித்து அவர்களுக்கு இணையாக வைத்து பேசிக்கொண்டிருந்தனர்.
போதாக்குறைக்கு சர்வானந்த் ஆரோஹியை குட்டித்தங்கையாக ஏற்றுக்கொண்டுவிட்டான். மொத்த பிருந்தாவனமும் தனது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியதாக தோன்றியது லலிதாவுக்கு.
மகளின் வாழ்க்கை முன்பு தேவிகா பெரிதாக தோன்றாதது போல, இப்போது பேரனின் வாழ்க்கை முன்பு மகளின் பிடிவாதமோ வெறுப்போ சதாசிவத்துக்கும் பார்வதிக்கும் பெரிதாக தோன்றவில்லை.
அவர்கள் அனைவருக்குமே லலிதாவும் மனம் மாறினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான். கடந்த காலத்தில் நடந்த எதையும் மாற்ற முடியாது. ஆனால் மறக்கலாமே!
பெரியவர்கள் அந்தக் கொள்கையைக் கடைபிடித்ததால் அவர்களால் கமல்நாத்திடம் விரோதம் கொள்ள முடியவில்லை. ஆரோஹியோ குழந்தை. அவளை வெறுப்பதால் யாருக்கு என்ன இலாபம்?
ஆனால் லலிதாவை யாராலும் மாற்ற முடியவில்லை. எனவே அவரைத் தனியே விட்டுவிட்டனர்.
நடக்கும் அனைத்தையும் கண்டு மனம் பொருமியவர் தக்ஷிண்யா மாடிப்படியேறிச் செல்வதைப் பார்த்துவிட்டு தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.
தக்ஷிண்யாவோ ருத்ரதேவின் அறையை அடைந்தவள் அங்கே இருந்த அலங்காரத்தைக் கண்டு முகம் சுளித்தாள்.
அனுதீப்பிடம் பேசி முடித்துவிட்டுத் திரும்பிய ருத்ரதேவ் அவளின் முகச்சுளிப்பை பார்த்துவிட்டான்.
“ஏன் முகத்தை அஷ்டகோணலா வைக்குற?” என்றவனிடம்
“எனக்கு இந்த ஃபர்ஸ்ட் நைட் செட்டப் கொஞ்சம் கூட பிடிக்கல” என்று பதிலளித்த தக்ஷிண்யாவின் முகம் இன்னும் இயல்பாகவில்லை.
ருத்ரதேவ் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான். இன்னும் அவளைச் சீண்டித் தான் பார்ப்போமே என்ற எண்ணத்தோடு “உனக்குப் பிடிக்குதா இல்லையானு இப்ப யார் கேட்டாங்க?” என அசட்டையாக கேட்கவும் அவனது கேள்வியில் வாயடைத்துப்போனாள் தக்ஷிண்யா.
ருத்ரதேவ் அதோடு நிற்காமல் கதவை அடைத்துவிட்டு வந்தவன் சாவகாசமாக சட்டையின் பட்டனில் கை வைக்கவும்
“என்ன பண்ணுறிங்க நீங்க? நமக்குள்ள வேர்ல்ட் வார்ட் த்ரீ மாதிரி எவ்ளோ பெரிய சண்டை போயிட்டிருக்கு? அது உங்களுக்குச் சுத்தமா ஞாபகம் இல்லையா?” என்று பதற்றத்துடன் வினவினாள் அவள்.
ருத்ரதேவ் நாவினால் கன்னத்தின் தசையை உந்தி தள்ளியபடி ஹேசல்நட் விழிகளில் விசமப்பார்வை மின்ன அடி அடியாக எடுத்து வைத்து அவளை நெருங்கவும் தக்ஷிண்யாவுக்குள் பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
அவன் நெருங்க நெருங்க பின்னே சென்று ஒரு கட்டத்தில் படுக்கை இடிக்கவும் நிலை தடுமாறி அமர்ந்தவளின் இருபுறமும் கையூன்றி பார்த்தான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா அவனது பார்வையைத் தவிர்க்க முடியாமல் “நமக்குள்ள எந்த ஃபைட்டும் இன்னும் முடியல ருத்ரா” என்று ஞாபகப்படுத்தினாள்.
“எனக்கும் ஞாபகம் இருக்கு டார்லிங்… ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா? புருசன் பொண்டாட்டி சண்டை ஒரு ராத்திரியோட சரி… அர்த்தம் புரியுதா?”
தக்ஷிண்யா அவனது பேச்சின் அர்த்தம் புரிபடவும் “என்னது? இப்பிடி டர்ட்டியா பேசுறதுக்கு உங்களுக்கு ஒரு மாதிரி இல்ல?” என்று கோபமாக கேட்க
“நீ என் பொண்டாட்டி.. உன் கிட்ட டர்ட்டியா பேசலைனா தான் இந்த சமூகம் என்னை ஒரு மாதிரி பேசும் தக்ஷி… அதுவும் நீ இப்பிடி மருண்டு பாக்குறப்ப கிக்கா இருக்கு” என்று குறும்பாக மொழிந்தவன் இன்னும் நெருங்கினான்.
தக்ஷிண்யா செய்வதறியாது திகைக்கும் போதே விலகி நின்றவன் “போதும் பயப்படாத… இத்தனை நாளா என்னை எவ்ளோ டென்சன் பண்ணுன? அதுக்கு ரெவன்ஜ் எடுத்தேன்… ரிலாக்ஸ்!…. இன்னைக்கு எனக்கும் கொஞ்சம் டயர்டா தான் இருக்கு… சோ ரெஸ்ட் எடுக்கப் போறேன்… நீயும் தூங்கு” என்றபடி உடை மாற்றியவன் படுக்கையின் அடுத்தப்பக்கம் போய் படுத்துக்கொண்டான்.
தக்ஷிண்யாவும் நிம்மதியென எண்ணி கண்ணை மூட எத்தனிக்க திடீரென ருத்ரதேவ் அவள் புறம் திரும்பிப் படுக்கவும் நகர்ந்து படுக்கப் போனாள்.
ஆனால் அவளது கரத்தைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
தக்ஷிண்யா திமிறிய போதே “இன்னைக்கு மட்டும் தான் ரெஸ்ட்னு சொன்னேன்… உடனே சினிமா சீரியல்ல வர்ற மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டை ஒரு வருசம் ரெண்டு வருசம் தள்ளிப் போடலாம்னு நினைச்சுக்காத” என்று அவன் கூற
“நீங்க சீரியசாவா பேசறிங்க?” என்று கண்களை விரித்துக் கேட்டாள் அவள்.
“ஆமா! நான் உன்னை பைத்தியமா லவ் பண்ணிருக்குறேன், போதாக்குறையா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கல்யாணம் வேற பண்ணிருக்குறேன்… அப்புறம் எதுக்கும்மா நான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கணும்?”
சாதாரணமாக கேட்டுவிட்டு அவன் கண்ணை மூடி உறங்கிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டு தக்ஷிண்யா தான் தூக்கம் வராமல் அல்லாடி விட்டு நீண்டநேர போராட்டத்துக்குப் பின்னர் நித்திரைக்குள் நுழைந்தாள்.
அதே நேரம் ராஜேந்திரனோ தனிமையில் அமர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.
தேவிகாவைக் காதலித்தது, குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் முடித்தது, தக்ஷிண்யா பிறந்தது வரை எல்லாம் நன்றாய் தானே போய் கொண்டிருந்தது.
ஆனால் எப்போது பிரச்சனை ஆரம்பித்தது? யோசித்தவரின் மனக்கண்ணில் லலிதா வந்து போனார்.
தக்ஷிண்யாவுக்குப் பெயர் வைக்கும் போதே பிரச்சனை ஆரம்பித்திருக்க வேண்டும் போல. தன்னால் தான் அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை!
தக்ஷிண்யா பிறந்து தேவிகாவும் அவளும் மருத்துவமனையில் இருந்த சமயம் அது. பிருந்தாவனத்தினர் குடும்பத்தோடு வந்து தாயையும் சேயையும் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு, மாணிக்கவாசகம் தனது ஆசையை மகனிடம் கூறினார்.
அதை தேவிகாவிடம் கேட்க சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்தவர் கிடைத்த நேரத்தில் கேட்டும் விட்டார்.
“குழந்தை எவ்ளோ அழகா இருக்குறால்ல, அப்பிடியே உன் ஜாடை தேவி”
“முகஜாடை என்னை மாதிரி இருக்கலாம்… பட் குணத்துல உங்களை மாதிரி இருந்தா எனக்குச் சந்தோசம் ராஜா… நீங்க என்னை மாதிரி அடமண்ட் இல்ல… ரொம்ப அன்பானவர்… மரியாதை தெரிஞ்சவர்… சோ குழந்தை உங்க குணத்தோட இருந்தா நல்லா இருக்கும்”
“அப்பிடிங்கிற? ஓ.கே… இவளுக்கு என்ன நேம் வைக்கலாம்னு வீட்டுல டிஸ்கஸன் போயிட்டிருக்கு… அப்பாவும் அம்மாவும் கலந்து பேசி ஃபைனலா ஒரு நேமை செலக்ட் பண்ணிருக்காங்க”
ராஜேந்திரன் இவ்வாறு கூறியதும் தேவிகாவின் முகம் கூம்பிப் போனது.
என் குழந்தைக்குப் பெயர் வைக்கும் உரிமை எனக்குத் தானே உண்டு. இவர்கள் ஏன் முந்திக்கொண்டு என் உரிமையைப் பறிக்கிறார்கள் என்ற எரிச்சல். அதை மறைக்காமல் முகத்தில் காட்டியவர்
“சோ என் குழந்தைக்கு நான் எதையும் செஞ்சுடக்கூடாதுங்கிறதுல உங்க பேரண்ட்ஸ் ரொம்ப கவனமா இருக்குறாங்க போல” என்றார் எள்ளலுடன்.
அதை கேட்டதும் ராஜேந்திரனின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போனது.
“என் பேரண்ட்ஸ்னு மூனாவது மனுசங்களைக் கூப்புடுற மாதிரி சொல்லுற… அவங்க உனக்கு அத்தை மாமா இல்லயா?” என்றார் அவர்.
தேவிகா அசட்டையாகத் தோளைக் குலுக்கி “அவங்க என்னை எப்ப மருமகளா மதிச்சிருக்காங்க? எனி ஹவ், இப்ப பிரச்சனை அவங்களை நான் என்ன சொல்லி கூப்புடணும்ங்கிறது இல்ல… என் குழந்தைக்கு என் கிட்ட கேக்காம அவங்க இஷ்டத்துக்கு எப்பிடி நேம் செலக்ட் பண்ணுவாங்க? ஒரு கர்டசிக்குக் கூட பெத்தவ கிட்ட கேக்கணும்னு தோணலையா?” என்று கேட்க
“இதுல என்ன இருக்கு தேவி? இவ அவங்களோட பேத்தி தானே… அவங்களுக்கு இல்லாத உரிமையா?” என்றார் ராஜேந்திரன்.
“எந்த உரிமையா இருந்தாலும் அது ஒரு அம்மாவோட உரிமைக்கு அப்புறம் தான் ராஜா… ஈவன் நீங்க கூட எனக்கு அப்புறம் தான் என் குழந்தை மேல் உரிமை கொண்டாட முடியும்… பிகாஸ் ஒவ்வொரு நொடியும் வலிய அனுபவிச்சு இவளை உலகத்துக்குக் கொண்டு வந்தவ நான்… பெத்தவளை முந்திக்கிட்டு குழந்தை மேல உரிமை கொண்டாடுறவங்களை பிரசவ வார்டுல கொண்டு போய் விட்டுடணும்… அப்ப தான் அந்தக் குழந்தைய பிரசவிக்க ஒரு அம்மா எவ்ளோ கஷ்டப்படுறானு புரியும்… அந்தக் கஷ்டத்தை அனுபவிச்சவளுக்குக் கிடைக்குற சந்தோசம் அவ குழந்தை கிட்ட அவளுக்கு இருக்குற முதல் உரிமை தான்… ஆனா அதையும் பறிக்குறதுக்குச் சொந்தக்காரங்கங்கிற பேர்ல ஒரு கூட்டம் கொள்ளைக்காரங்க மாதிரி காத்திருக்கு பாருங்க, அதை நினைச்சா தான் எரிச்சலா இருக்கு”
“தேவி, மைண்ட் யுவர் வேர்ட்ஸ்… பேரக்குழந்தைக்குப் பேர் வைக்குற உரிமை தாத்தா பாட்டிக்குக் கிடையாதா?”
“உள்ளதை சொன்னா ஏன் உங்களுக்குக் கோவம் வருது ராஜா? உங்க பேரண்ட்சோட உரிமைக்கோரலை உங்களோட நிறுத்திக்கச் சொல்லுங்க… என் குழந்தை கிட்ட அவங்க அதிகாரம் வரக்கூடாது”
ராஜேந்திரனுக்குக் கோபம் வந்தாலும் தேவிகாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கோபத்தை அடக்கிக்கொண்டார். பொறுமையோடு அவளருகே அமர்ந்தவர்
“அது அதிகாரம் இல்ல தேவி… அன்பு… எங்கப்பாக்கு அவங்கம்மானா ரொம்ப பிடிக்கும்… எனக்குப் பொண்ணு பிறந்தா என் பாட்டியோட பேரை வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டார்” என்கவும்
“உங்க பாட்டி பேர் என்ன ராஜா?” என்றார் தேவிகா.
“தாட்சாயணி”
ராஜேந்திரன் இவ்வாறு கூறியதும் தேவிகாவின் முகம் சுருங்கிப் போனது.
“இந்தப் பாடாவதி பேரையா என் குழந்தைக்கு வைக்கப் போறிங்க? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்… உங்கப்பாக்கு அவ்ளோ ஆசையா இருந்துச்சுனா, சசிக்குப் பொண்ணு பிறந்தா இந்தப் பேரை வைக்கச் சொல்லுங்க… காந்தி காலத்துல காலாவதி ஆன பேரெல்லாம் என் பொண்ணுக்கு வைக்கக்கூடாது”
பிடிவாதமாக கூறினார் தேவிகா. தனது பேச்சில் ராஜேந்திரன் வருந்துவது அவரது முகத்தில் தெரியவும், சற்று தனது பிடிவாதத்தை ஒதுக்கி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர்
“ராஜா, ப்ளீஸ் உங்களை ஹர்ட் பண்ணணும்னு நான் நினைக்கல… இப்ப என்ன உங்க பாட்டியோட நேமை குழந்தைக்கு வைக்கணும், அவ்ளோ தானே? சரி அதையே வச்சுக்கலாம்… ஆனா தாட்சாயணினு அப்பிடியே வைக்காம கொஞ்சம் மாடர்னா வைக்கலாமே” என்றாள்.
ராஜேந்திரன் புருவம் சுருக்கியவர் “தக்சனோட மக சதியோட இன்னொரு பேர் தான் தாட்சாயணி… அதை எப்பிடி மாடர்னா மாத்துறது?” என்று கேட்க
“பெரியவங்க கிட்டவே கேளுங்க… இல்லனா சசி கிட்ட கேளுங்க… அவளுக்குக் கடவுள் பக்தி ஜாஸ்தி… சோ இந்த மாதிரி புராணக்கதை எல்லாம் அவளுக்கு அத்துப்படியா இருக்கும்… தட்சனோட மகளுக்கு வேற பேர் இருக்கானு கேளுங்க… சசி கரெக்டா சொல்லுவா” என்றார் அவர்.
ராஜேந்திரனும் அவர் கூறியபடி சசிகலாவிடம் கேட்க அவளும் ஏதேதோ புராணக்கதைகளை எல்லாம் வாசித்து விட்டுக் கண்டறிந்த நாமம் தான் ‘தக்ஷிண்யா’. தட்ச பிரஜாபதியின் மகள் சதியின் இன்னொரு நாமமான தாட்சாயணிக்கு இணையான பெயர் அது.
இந்தப் பெயரை வைத்தால் பெற்றோருக்கும் வருத்தம் நேராது, மனைவியின் ஆசைப்படி நவீனகாலப்பெயராகவும் இருக்கும் என்பதால் ராஜேந்திரனுக்கு மகிழ்ச்சி.
அன்று தேவிகாவின் வதனம் ஜொலித்தது இன்று கூட நினைவிலாடியது. தேவிகாவின் பிடிவாதமும் கோபமும் தான் தன்னை அவர் மீது தப்பான அபிப்ராயம் கொள்ள வைத்துவிட்டது.
அதில் தான் செய்த தவறுகளை லலிதாவின் பக்கம் திருப்பி தப்பித்துக்கொள்ளும் எண்ணம் ராஜேந்திரனுக்கு இல்லை. செய்த தவறுக்குத் தண்டனையாக தான் மகளிடம் உரிமை கொண்டாட முடியாமல் தவிக்கிறாரே! எப்படியோ கடவுளுக்குத் தன் மீது கொஞ்சம் கருணை இருக்கிறது போல! அதனால் தான் எங்கேயோ கண் காணாத இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மகளை கண் முன்னே நடமாட வைத்திருக்கிறார். அவளை மகளாக உரிமை கொண்டாடி பாசத்தைக் கொட்ட முடியாவிட்டாலும் அவளும் மருமகனும் சந்தோசமாக வாழ்வதைக் காணும் கொடுப்பினையாவது தனக்கு வாய்த்திருக்கிறதே என்ற ஆறுதலுடன் நெடுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உணர்ந்தார் ராஜேந்திரன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


