“கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. செய்யும் செயல்களை யோசித்து செய்தால் அது எக்காலத்திலும் நமது மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உலை வைக்காது. என்னைக் கேள்வி கேட்க எவருமில்லை, நான் செய்தவற்றை யாரும் பார்க்கப் போவதில்லை என்ற குருட்டுத்தைரியத்தில் தான் பெரும்பாலான தவறுகள் செய்யப்படுகின்றன. ஆனால் காலம் என்ற நீதிபதி நமக்கான தண்டனையைக் கொடுக்க கண்ணி வைத்து காத்திருக்கும் என்பது தான் நிதர்சனம்”
-ருத்ரதேவ்
“இந்த விசயம் எதுவும் எனக்குத் தெரியாது அனுதீப்… இப்ப நீ சொல்லலைனா காலம் முழுக்க, நடந்த எதுவும் எனக்குத் தெரிஞ்சிருக்கவே செய்யாதுப்பா… இவ்ளோ தூரம் ஆனதுக்கு அப்புறம் கூட அவங்க ரெண்டு பேரும் பிடிவாதத்துல இருந்து இறங்கி வரவே இல்லப்பா… இனிமே ஆகவேண்டியதை நான் பாத்துக்குறேன்… நீ எனக்கு இன்னொரு உதவியும் பண்ணணும் அனுதீப்”
ருத்ரதேவின் நண்பன் அனுதீப்பிடம் பேசிக்கொண்டிருந்தார் சசிகலா. அவனும் தக்ஷிண்யாவும் எந்தளவுக்கு ஆழமாக காதலித்திருக்கிறார்கள் என்பதை அனுதீப் கூறவும் அவருக்கு வேதனை தான்.
இவ்வளவு தூரம் காதலித்தவர்கள் அற்ப காரணங்களால் பிரிந்திருப்பது எவ்வளவு பெரிய தவறு? அந்தளவிற்கா பிடிவாதமும் ஈகோவும் அவர்கள் கண்ணை மறைக்கிறது?
நினைக்க நினைக்க கோபம் பொங்கியது சசிகலாவுக்கு. உடனே அவர் வெளியே கிளம்பவும் லலிதா வழக்கம் போல குறுக்கு விசாரணயை ஆரம்பித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எங்க போற சசி?”
“போறப்பவே எங்க போறனு கேட்டுட்டல்ல, விளங்கிடும்”
லலிதாவின் முகம் சுருங்கவும் “நான் என் மருமகளைப் பாக்கப் போறேன்” என்று அமர்த்தலாக கூறிவிட்டு அவரது பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார் சசிகலா.
லலிதாவின் காதுகள் அவர் கூறியதை கேட்டதும் புகைய ஆரம்பித்தது. இதை ருத்ரதேவிடம் கூறு என மனம் பரபரத்தது.
அன்று அவன் பொள்ளாச்சியிலிருக்கும் கோகோ லகூன் ரிசார்ட்டுக்குச் செல்வதாக இருந்ததால் இன்னும் வீட்டில் தான் இருந்தான்.
நேரே அவனது அறைக்குச் சென்றவர் அவன் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கவும் பொறுமை காத்தார்.
“ஒன்னும் பிரச்சனை இல்ல அசோக்… நான் லெவன் ஓ க்ளாக் அங்க இருப்பேன்… நீயும் உன் ஒய்ப் மாயாவும் எப்ப வந்தாலும் நான் உங்களை வெல்கம் பண்ண ரெடியா இருப்பேன்டா”
அவன் பேசி முடித்ததும் “இன்னும் ரிசார்ட்டுக்குக் கிளம்பலயா ருத்ரா?” என்றபடி உள்ளே பிரவேசித்தவரிடம்
“இதோ கிளம்பிக்கிட்டே இருக்குறேன் அத்தை… எதுவும் முக்கியமா என் கிட்ட சொல்லணுமா?” என்று கேட்டான் அவன்.
லலிதா மருமகனின் புத்திக்கூர்மையை மெச்சியவர் “உங்கம்மா இப்ப தான் அந்த தக்ஷிய பாக்க கிளம்பிப் போனா ருத்ரா… நீயே அவளை வேண்டாம்னு ஒதுக்கி வச்சதுக்கு அப்புறம் சசி மட்டும் ஏன் அவ கிட்ட உறவு கொண்டாடுறா?” என்று கேட்க
“விடுங்கத்தை… அவளுக்கு நடந்த ஆக்சிடெண்டால அம்மாக்கு அவ மேல ஒரு சாப்ட் கார்னர்… பத்து நாளா ரெண்டு பாட்டிகளோட சேர்ந்து அவங்க தானே அவளை பாத்துக்குறாங்க… என்னால அவங்களை எதுவும் சொல்லவும் முடியல” என்றவன் சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டான்.
“உன் ஃப்ரெண்ட் அனுதீப்புக்கு வேற உங்கம்மா கால் பண்ணி பேசுனா” என்று லலிதா கூறவும் ருத்ரதேவ் யோசித்தான்.
ஒருவேளை ஷான்ஃபியில் நடந்த அனைத்தையும் அவன் அன்னையிடம் கூறியிருப்பானோ?
உடனே விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினான் அவன். தான் எண்ணியது ஈடேறிய மகிழ்ச்சியில் லலிதா இருக்க ருத்ரதேவின் கார் பிருந்தாவனத்தை விட்டு கிளம்பியது.
அவனது அன்னை சசிகலா கெஸ்ட் ஹவுஸில் தக்ஷிண்யாவுக்குச் சூப்பை ஊட்டிக்கொண்டிருந்தார்.
“போதும்”
மறுத்தவளின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாமல் முழு கிண்ணம் சூப்பும் காலியான பிறகு தான் விட்டார் சசிகலா.
ஆரோஹி டேன்சிங் கேக்டசுடன் விளையாடிக் கொண்டிருக்க அவளுக்குக் காலையுணவை ஊட்டிக்கொண்டிருந்தார் பணிப்பெண்மணி.
தக்ஷிண்யாவின் வாயைத் துணியால் துடைத்து விட்டவர் “உன் கிட்ட முக்கியமா ஒரு விசயம் பேசணும்” என்கவும்
“பேசுங்க” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் அவள்.
“ஏன் மருமகளே உன் வாயில இருந்து அத்தைங்கிற வார்த்தை வராதா?” என்று கேலி செய்து அவளைச் சிரிக்க வைக்க முயன்றார்.
ஆனால் அவள் சிரித்தால் தானே. ஸ்கை க்ளாம்பிங் பகுதியில் அவள் சறுக்கி விழுந்து அன்றோடு பத்து நாட்கள் கடந்து விட்டது.
கை, கால், முகத்தில் சிராய்ப்பும் சுளுக்குமாக அவளை மீட்ட கணத்திலிருந்து தக்ஷிண்யாவைக் கண்ணும் கருத்துமாக கவனித்தது பார்வதியும் மீனாட்சியும் தான். அவர்களுக்கு உதவியாக சசிகலாவும் கடந்த பத்து நாட்களை இங்கேயே தான் கழிக்கிறார்.
அந்தப் பத்து நாட்களில் அவர்கள் மூவரும் ருத்ரதேவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவனுமே தக்ஷிண்யாவை காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த கையோடு மீண்டும் அவளது முகத்தில் விழிக்கவில்லை.
லலிதா அவனது குற்றவுணர்ச்சி அவனை தக்ஷிண்யாவின் முகத்தில் விழிக்கவிடாதென கூற பெரியவர்கள் இருவரும் அதை ஆமோதித்தனர். ஆனால் விபத்துக்குள்ளானவளோ எதுவும் பேசவில்லை.
இதோ இப்போது சசிகலா அவளது கையைப் பிடித்து மெதுவாக அந்த அறைக்குள் நடக்கும்படி கூறிய போது கூட அமைதி தான்.
நடை பழகியபடியே “நீயும் ருத்ராவும் நைனிடாலுக்கு ஒன்னா போனிங்களா?” என்று அவர் கேட்க தக்ஷிண்யா அதிர்ந்தாள்.
“உங்களுக்கு யார் சொன்னாங்க?” என்று அவள் கேட்க
“அனுதீப் சொன்னான்” என்றார் அவர்.
“அதுல்லாம் பழைய கதை? நான் மறக்கணும்னு நினைக்குறதை ஞாபகப்படுத்தாதிங்க… ப்ளீஸ்”
சொன்னதோடு அவள் தனியே நடக்க ஆரம்பிக்கவும் அவளைத் தாங்கிப் பிடிக்க வந்தவரிடம் தானே நடப்பதாக கூறினாள்.
“எதை மறக்கணும்னு நினைக்குற நீ? நீங்க காதலிச்சதையா இல்ல பாதி கல்யாணம் பண்ணுனதையா?”
மீண்டும் அதிர்ந்தவள் ஏதோ சொல்ல வர “எல்லாத்தையும் தான் மறக்கணும்மா” என்றபடி அங்கே வந்து சேர்ந்தான் ருத்ரதேவ்.
“நீ ஏன் இங்க வந்த?”
குற்றம் சாட்டும் குரலில் சசிகலா கேட்க தக்ஷிண்யாவோ அவனைப் பார்க்கப் பிடிக்காதவளாக திரும்பி நின்றுகொண்டாள்.
அவனோ தக்ஷிண்யா என்ற ஒருத்தி அங்கே இருப்பதையே பொருட்படுத்தாமல் “இன்னும் என்ன பணிவிடை பாக்கி இருக்கும்மா? நீங்க கிளம்புங்க” என்று அதட்ட
“அதுக்கு முன்னாடி நான் உங்க ரெண்டு பேர் கிட்டவும் கொஞ்சம் பேசணும்… இப்பிடி வந்து உக்காரு” என்று அங்கே கிடந்த பீன் பேக்கை காட்டினார்.
அன்னையின் பேச்சை மறுக்காமல் அமர்ந்தவன் “என்ன பேசணும்?” என்கவும் அனுதீப் கூறியதை கேட்க ஆரம்பித்தார் அவர்.
“நைனிடால்ல நீ தக்ஷியோட நெத்தில குங்குமம் வச்சியா?”
“இதை கேக்குறதுக்கு தான் உக்கார சொன்னிங்களா? சாரி எனக்கு டைம் இல்ல” என்று எழுந்தவன் போக எத்தனிக்க சசிகலா அவனை விட வேகமாக சென்று வழிமறித்தார்.
“கேட்டதுக்குப் பதில் சொல்லுடா”
“ஆமா! அதுக்கு இப்ப என்ன? அங்க மட்டுமில்ல, அனுதீப் கல்யாணத்துல சப்தபதி வச்சு கிட்டத்தட்ட இவளை என்னோட மனைவியா அங்கீகரிச்சிட்டேன்.. போதுமா?”
“இவ்ளோ செஞ்சுட்டு நீ இவளை ஒதுக்கி வைக்குறீயா?”
“ஆமா! என் காதலை மதிக்காத ஒருத்திக்கு என் வாழ்க்கையில இடம் கிடையாதும்மா”
அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி சசிகலாவின் கரம் அவனது கன்னத்தில் வேகமாக படிந்தது.
பளார் சத்தத்தில் அவ்வளவு நேரம் தலை குனிந்தபடி அமர்ந்திருந்த தக்ஷிண்யா அதிர்ந்து தலையை உயர்த்தி அன்னையையும் மகனையும் பார்த்தாள்.
ருத்ரதேவ் அதிர்ச்சியுடன் கன்னத்தைப் பிடித்தபடி நிற்க சசிகலாவோ கோபம் மின்னிய விழிகளுடன் அவனை உறுத்துப் பார்த்தார்.
“தோளுக்கு மேல வளர்ந்த பையன் கிட்ட கை நீட்டக்கூடாதுனு பொறுமையா இருந்தா நீ எல்லைய மீறிப் பேசுற ருத்ரா… நீ இந்தப் பொண்ணை தேடி தேடி போய் லவ் பண்ணிருக்க… அப்பிடி லவ் பண்ணுனப்பவே அவ குணம் என்னனு உனக்குப் புரிஞ்சிருக்கும் தானே… எந்த மாதிரி சூழ்நிலையில அவ உன்னை வேண்டாம்னு சொன்னாங்கிறத கூட உன்னால புரிஞ்சுக்க முடியலனா நீ என்ன லெட்சணத்துல காதலிச்ச?”
மூச்சு வாங்க பேசியவர் அடுத்து திரும்பியது தக்ஷிண்யாவின் புறம்.
சசிகலாவின் சீற்றத்தைப் பார்த்து மருண்டு போய் அமர்ந்திருந்தவள் ருத்ரதேவை ஏறிட்டுப் பார்ப்பதை தவிர்த்தாள்.
அவளெதிரே நின்ற சசிகலா “நீ என்னம்மா நினைக்குற? உன் மனசுல என்ன ஓடுது?” என்று கேட்க
தயங்கியவள் “எங்கம்மாவ வாழ விடாம பண்ணுனவங்களோட மருமகனை என்னால லைப் பார்ட்னரா நினைச்சுக் கூட பாக்க முடியாது… ருத்ரானு ஒருத்தரை பாத்து பழகி காதலிச்சதை நான் மறந்துடுறேன்” என்றாள் மெதுவாக.
சசிகலாவின் கண்களில் மீண்டும் கோபத்தீ.
“உடம்பு சரியில்லாத பொண்ணுனு பாக்குறேன், இல்லனா எனக்கு வர்ற கோவத்துக்கு உனக்கும் நாலு அடி குடுப்பேன்… என்ன பாக்குற? உங்கம்மா என்னோட ஃப்ரெண்ட்… அவ பொண்ணு தப்பான முடிவெடுத்தா திருத்துற உரிமை எனக்கு இருக்கு… அவன் தான் அறிவுக்கெட்டத்தனமா பேசுறான்னா உனக்குமா மூளை இல்ல? நீ காதலிச்சது ருத்ராவ, அவன் அத்தை லலிதாவ இல்ல… உங்க வாழ்க்கையில அவ எங்க இருந்து வந்தா?”
“அவங்களை உங்க மகனுக்கு ரொம்ப பிடிக்கும்”
“அவளை பிடிக்கும்னா உன்னை பிடிக்காதுனு அர்த்தமா தக்ஷி?”
தக்ஷிண்யா பதில் சொல்லாமல் மௌனம் காத்தாள். ருத்ரதேவோ வாங்கிய அறையின் அதிர்ச்சி விலகாமல் மரம் போல நின்று கொண்டிருந்தான்.
இருவரையும் விழிகளால் அலசியவர் “நீங்க ரெண்டு பேரும் உண்மையாவே காதலிச்சிங்களா இல்ல வயசுக்கோளாறுல…” என்று சொல்லி முடிப்பதற்குள் “அம்மா!” என ருத்ரதேவும் “அத்தை!” என்று தக்ஷிண்யாவும் இடைமறித்து அலறிவிட்டனர்.
இருவரது முகத்திலும் அவமானக்கன்றல். சசிகலா போன்ற பெரியவரிடம் இப்படி கெட்டப்பெயர் வாங்குகிறோமே என்ற வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதில் திருப்தியுற்ற சசிகலா இருவருக்கும் அதட்டலோடு அறிவுரை பகர ஆரம்பித்தார்.
“நீ என் மகனை உண்மையா காதலிச்சிருந்தா எந்தச் சூழ்நிலையிலயும் அவனை வேண்டாம்னு உதறியிருக்க மாட்ட தக்ஷி… ருத்ரா! நீ இந்தப் பொண்ணை முழுசா புரிஞ்சு வச்சிருந்தா அவ ஏன் இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தானு யோசிச்சு அவ மனசை மாத்த நினைச்சிருப்ப… உங்களுக்குள்ள காதலும் இல்ல, புரிதலும் இல்ல… அதான் ஒருத்தரை ஒருத்தர் ஹர்ட் பண்ணுறதுக்குத் துடிக்குறிங்க… இவ உன்னை வார்த்தையால குத்திக் கிழிச்சா, நீ அவளை பயமுறுத்தி கண்ணீர் சிந்த வச்சு சந்தோசப்பட்டுக்குற… இதுக்காகவா நீங்க காதலிச்சு எங்க சம்மதம் இல்லாம பாதி கல்யாணமும் பண்ணிக்கிட்டிங்க?”
இருவரும் வாயடைத்துப் போய்விட சசிகலா ஒரு முடிவுக்கு வந்தவராக பேச்சைத் தொடர்ந்தார்.
“பதினாலும் வருசத்துக்கு முன்னாடி நடந்தது மட்டும் தான் உங்களுக்குத் தெரியும்… ஆனா அதுக்கு முன்னாடி நடந்த எல்லாம் எனக்கு மட்டும் தான் தெரியும்… சின்னப்பசங்க மனசுல விரோத மனப்பான்மைய வளக்க வேண்டாம்னு நான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்… ஆனா யாரோ செஞ்ச தப்புக்கு நீங்க பிரிஞ்சு நிக்குறதை இனிமேலும் என்னால வேடிக்கை பாக்க முடியாது… தேவிகா எங்கண்ணனோட வாழ்க்கையில வந்ததுக்கு அப்புறம் நடந்த எல்லாமே லலிதாவோட ஆணவத்தால நடந்தது தான்”
அப்படி என்ன நடந்திருக்கும் என தக்ஷிண்யாவோடு ருத்ரதேவும் கேள்வியாய் நோக்க சசிகலா தனது அண்ணனின் வாழ்க்கையில் நடந்தேறிய சம்பவங்களை விலாவரியாக விளக்க ஆரம்பித்தார்.
தக்ஷிண்யாவும் ருத்ரதேவும் இந்த உலகுக்கு வரும் முன்னர் நடந்த சம்பவங்கள் அவை.
மாணிக்கவாசகமும் சதாசிவமும் நட்பையும் தாண்டி நெருங்கிய உறவினர்களாய் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இருவருக்கும் ஆணும் பெண்ணுமாய் பிள்ளைகள் பிறக்கவும் அவர்களின் சகதர்மிணிகளான பார்வதியும் மீனாட்சியும் தங்கள் பிள்ளைகளுக்குள் முடிச்சிட்டுப் பேசிக்கொள்வர்.
லோகநாதனுக்கு சசிகலாவையும், ராஜேந்திரனுக்கு லலிதாவையும் மணமுடித்து வைக்க வேண்டுமென விளையாட்டாக அவர்கள் கூறியதை ஒரு கட்டத்தில் அவர்களே தீவிரமாக நம்பத் துவங்கிவிட அவர்களின் வாரிசுகளும் அந்த நம்பிக்கையுடனே வளர்ந்தனர்.
அனைத்தும் நன்றாகப் போய் கொண்டிருந்தது, சசிகலாவின் கல்லூரித்தோழி தேவிகா இளங்கலை முடிந்ததும் அவளைக் காண பிருந்தாவனம் வரும் வரை.
துறுதுறுவென கண்ணுக்கு அம்சமாக நேர்த்தியான உடையணிந்து வலம் வந்த தேவிகாவைப் பார்த்ததும் ராஜேந்திரன் காதல்வயப்பட்டுவிட லலிதாவுக்கோ சசிகலாவின் தோழியான தேவிகாவை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது.
அதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம் தேவிகா பெற்றோர் இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். இரண்டாவது காரணம் அவள் பழகும் விதத்தில் ராஜேந்திரன் கவரப்பட்டது.
தனக்கு மட்டுமே சொந்தமென நம்பியிருந்தவன் இன்னொரு பெண்ணை பார்த்ததற்கே விரோதம் கொண்ட லலிதா அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும் அவளையே மணமுடிக்கப் போவதாகவும் கூறிக்கொண்டு பெற்றோரிடம் அனுமதி வாங்க வரவும் கோபத்தில் கொந்தளித்தாள்.
அழுது அரற்றி எப்படியோ தனது தந்தையையும் மாமாவையும் ராஜேந்திரனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வைத்தவள் பெரியவர்களின் சம்மதத்தோடு இரு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் திருமணம் என்ற முடிவையும் எடுக்க வைத்தாள். ராஜேந்திரன் தங்கள் குடும்பத்தை மீறி தேவிகாவை மணக்க மாட்டான் என அழுத்தமாக நம்பினாள்.
ஆனால் அவன் அவர்களது எதிர்ப்பை மீறி தேவிகாவை திருமணம் செய்து ஆசிர்வாதம் வாங்க வந்துவிட, இரு ஜோடிகளின் திருமணத்துக்குப் பதிலாக லோகநாதனும் சசிகலாவும் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். அந்த கணத்தில் தேவிகாவையும் ராஜேந்திரனையும் நிம்மதியாக வாழவிடக்கூடாதென சபதமே எடுத்துக் கொண்டாள் அவள்.
லலிதா செய்த ஆர்ப்பாட்டத்தால் மாணிக்கவாசகமே தனது மகனை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட அதற்கு பிறகும் அவள் அடங்கவில்லை. ராஜேந்திரனும் தேவிகாவும் ஒரு முறை கோவிலில் சந்தோசமாகப் பேசிக்கொண்டிருப்பதை கண்டு நெஞ்சு பொறுக்காதவள் பொறாமையின் உச்சத்தில் விஷம் அருந்தினாள்.
அவளை அரும்பாடுப்பட்டு குடும்பத்தினர் காப்பாற்றினாலும் எப்படியாவது தேவிகாவை ராஜேந்திரனிடமிருந்து பிரித்து அவளிடத்தில் தான் இருக்க வேண்டுமென்ற கீழ்த்தரமான எண்ணம் மட்டும் மாறவேயில்லை.
இத்தனைக்கும் குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் சசிகலா எப்போதும் போல தோழியையும் தமையனையும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். இதற்கிடையே அவள் ருத்ரதேவை கருவுற்று பெற்றும் விட்டாள்.
ராஜேந்திரனின் அனுமதியோடு தேவிகா கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் காஸ்ட்யூம் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜியில் முதுகலை படிப்பை தொலைதூரக்கல்வி முறையில் படித்து முடித்துவிட்டாள்.
பெற்றோரிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை என்பதால் கோவையில் ஏற்றுமதி நிறுவனமொன்றில் மேலாளராக பணியாற்றியபடி மனைவியையும் படிக்க வைத்த ராஜேந்திரன் குழந்தைப்பேறை தள்ளிப் போட்டிருந்தது ஒன்று தான் லலிதாவுக்கு ஆறுதல். குழந்தை இல்லை என்றால் அவர்களை சுலபமாக பிரித்துவிடலாம் என்ற நம்பிக்கை.
ஆனால் கணவனுக்குத் துணையாக, தானும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் தேவிகா பணியில் சேர்ந்துவிட அவர்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. அச்சமயத்தில் தக்ஷிண்யா தேவிகாவின் வயிற்றில் உதித்தாள்.
அத்துணை நாட்கள் ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர் ராஜேந்திரனுக்கு வாரிசு வரப்போகிறது என்றதும் மனம் இளகி அடிக்கடி தேவிகாவைக் காண கோவைக்கு வந்தனர். தேவிகாவால் ஏனோ அவர்களை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ராஜேந்திரனுக்காக அவர்களை மரியாதையுடன் நடத்தினாள்.
இச்சூழலில் ராஜேந்திரனும் சகஜமாக பிருந்தாவனத்துக்கு வர ஆரம்பித்தான். அப்போதெல்லாம் அவன் மனைவிக்கு மீனாட்சி வாய்க்கு ருசியாக ஏதேனும் செய்து அனுப்புவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருப்பாள் லலிதா.
எனவே அவ்வபோது ராஜேந்திரன் வரும் போதெல்லாம் நல்லவள் போல தேவிகாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வாள். அதிலேயே அவள் குணத்தை முழுவதுமாக உணர்ந்தவள் அதை வைத்தே ராஜேந்திரனுக்கு தூபம் போட ஆரம்பித்தாள்.
தேவிகா ஆசிரமத்தில் வளர்ந்தாலும் சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண். பொருளாதாரத்துக்காக யாரையும் சார்ந்திருக்க எண்ணாதவள், அது கணவனாக இருந்தால் கூட. எனவே தான் கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கூட அவள் தொடர்ந்து வேலைக்குச் சென்று குடும்பத்திற்காக தனது பங்கை அளித்து வந்தாள். அதே நேரம் அவளுக்கு ராஜேந்திரன் மீது உரிமையுணர்வும் அதிகம்.
ராஜேந்திரனுக்கு தேவிகா மீது அளவுக்கடந்த காதல் தான். ஆனால் அவனது மனமோ சராசரி ஆண்மகனைப் போன்றது. குடும்பத்தலைவன் வேலை செய்து பொருளீட்ட வேண்டும், மனைவி என்பவள் வீட்டையும் குடும்பத்தையும் பொறுப்போடு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டவன். அவனது குடும்பத்தில் அவன் பார்த்து வளர்ந்ததும் அதை தானே!
அதை தேவிகாவிடம் எதிர்பார்த்தவன் அவளது பொருளாதார சுதந்திர மனநிலையை விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் அதை தேவிகாவிடம் அவனது காதல் தெரிவிக்கவிடவில்லை.
அவன் செய்த மாபெரும் தவறே அவ்வபோது பிருந்தாவனத்துக்கு வரும் போது சொந்தக்காலில் நிற்க விரும்பும் தேவிகாவின் குணத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறேன் என்று தனது குடும்பத்தினரிடம் கூறியது தான். ராஜேந்திரனின் பிற்போக்குச் சிந்தனையை நன்கு அறிந்த லலிதா தேவிகாவின் இக்குணத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டத் துவங்கினாள்.
மெதுமெதுவாக தேவிகாவின் பொருளாதார சுதந்திர மனப்பான்மையையும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறும் குணத்தையும் ‘சம்பாதிக்கும் திமிர்’ என்று ராஜேந்திரனின் மனதில் உருவேற்றினாள். புகுந்த வீட்டினரோடு ஒட்டாத தேவிகாவின் குணத்தால் அதை சசிகலாவைத் தவிர மற்ற அனைவரும் நம்பவும் தொடங்கினர். அதற்கு ஏற்றாற்போல தக்ஷிண்யாவும் தாயாருக்குப் பிடிக்காத பிருந்தாவனம் வீட்டினரிடம் பேசிப் பழக மாட்டாள்.
இதற்கிடையே சசிகலாவின் புத்திரர்கள் ருத்ரதேவ் மற்றும் மகாதேவுக்குத் துணையாக மாலினியும் பிறந்துவிட்டாள். லலிதா வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என சங்கல்பம் எடுத்துக்கொண்டு ராஜேந்திரனை தன் வசப்படுத்த காத்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு சாதகமாக இன்னொரு சம்பவமும் நடந்தது. அது தான் தேவிகாவின் வாழ்வில் கமல்நாத்தின் வருகை. அவனது வருகை லலிதாவுக்குச் சாதகமாகவும் தேவிகாவுக்குப் பாதகமாகவும் மாறியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


