“அளவுக்கடந்த பாசத்தை நம் மீது கொட்டுபவர்களைக் கவனமாக கையாள கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் எதையும் அதீதமாக காட்டியே பழகியவர்களின் அன்பு எவ்வளவு இனிமையானதோ, அவர்களின் வெறுப்பு அவ்வளவு கொடுமையானது. அவர்களின் அன்பை இழந்த பின் நீங்கள் பாலைவனத்தின் நடுவே தாகத்தால் தவிக்கும் மனிதனை போன்ற நிலையை அடைவீர்கள். நெருங்கியவர்களின் அன்பு பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பானது என்றால் அவர்கள் நம் மீது காட்டும் வெறுப்போ அந்தக் கவசத்தை உடைத்து நமது உடலைக் கிழிக்கும் வாளுக்கு ஒப்பானது.
-தக்ஷிண்யா
பிருந்தாவனம்…
அன்று மகாதேவ் வீடு திரும்புவதற்கு தாமதமாகி விட்டிருந்தது. சில நாட்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்த வீட்டில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும் என்றெண்ணி வந்தவனுக்கு அங்கே நிலவிய அமைதி புதிராகத் தோன்றியது.
தமையனின் காதலுக்குப் பெரியவர்கள் பச்சைக்கொடி காட்டியிருப்பார்கள், சீக்கிரம் திருமணப்பேச்சையும் ஆரம்பித்து விடுவார்கள் என்றெல்லாம் யோசித்தபடி வந்தவனுக்கு ஏமாற்றமாகி விட இரவுணவு எடுத்து வைக்கவா என்று கேட்ட ருக்மணியிடம் வேண்டாமென மறுத்துவிட்டு ருத்ரதேவின் அறை இருக்கும் மேல்தளத்தை அடைந்தான்.
அறைக்குள் அவன் இல்லை என்றதும் பால்கனியை எட்டிப் பார்த்தவன் அங்கே நிழலாடவும் “அண்ணா வீடு ஏன் சைலண்டா இருக்கு?” என்றபடி அங்கே சென்றான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அங்கே கண்ட காட்சியில் அடுத்த கணம் பதறியும் போனான்.
கையில் இருந்த சிராய்ப்புக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தான் ருத்ரதேவ்.
“என்னாச்சுண்ணா? இவ்ளோ பெருசா க்ராச் ஆகிருக்கு… எப்பிடி காயம் பட்டுச்சு?” என்று பதறியவனிடம்
“வீட்டுல இருந்து தக்ஷிண்யாவைப் பாக்க போனப்ப கார்ல சின்ன ப்ராப்ளம்… அதை சரி பண்ண இறங்குனப்ப ஒரு கார் என்னை இடிக்க வந்துச்சு… ஓரமா ஒதுங்குனப்ப சருக்கி விழுந்து காயம் பட்டுடுச்சு” என்றான் அவன் நிதானமாக.
மகாதேவுக்கு இப்போதும் ஆச்சரியம் தான். ஏனெனில் ருத்ரதேவுக்கு எறும்பு கடித்தால் கூட வீட்டை இரண்டாக்கிவிடும் லலிதா இவ்வளவு பெரிய சிராய்ப்புக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன்?
அதை தமையனிடமே கேட்க அவனோ யாரிடமும் காயம் பட்டதை தெரிவிக்கவில்லை என்றான்.
“அதை விடுங்கண்ணா… ஹவ் இஸ் யுவர் டே?”
“வெரி க்ரூயல்”
ருத்ரதேவ் உணர்ச்சிகளற்ற வெற்றுக்குரலில் கூறவும்
“வாட்? ப்ளீஸ்ணா, விளையாடாதிங்க” என்றான் மகாதேவ் நம்பாதவனாக.
அவனை புன்சிரிப்புடன் ஏறிட்டபடி எழுந்தான் ருத்ரதேவ்.
“ஐ அம் சீரியஸ்லி ஸ்பீக்கிங்… டுடே இஸ் வெரி வெரி க்ரூயல் டே இன் மை லைஃப் ஹிஸ்டரி… பிகாஸ் ஐ லாஸ்ட் மை லவ்… ப்ச்… லவ்னு ஒன்னு இருந்தா தானே இழந்திருப்பேன்… அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையே… ஒரு பொண்ணு என்னை முட்டாள் ஆக்கிட்டா மகா… எல்லாரும் வெரி ஸ்மார்ட் அண்ட் ஷார்ப்னு சொல்லுற என்னை இத்தனை நாளா காதலிக்கிறதா நம்ப வச்சு இப்ப தூக்கி எறிஞ்சிட்டா… ஷீ ஹர்ட்ஸ் மை ஈகோ… ஒரே கொதிப்பா இருக்கு”
சிரிப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடித்தான் அவன்.
மகாதேவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது முகபாவனையை வைத்தே கண்டுகொண்ட ருத்ரதேவ் நடந்த அனைத்தையும் கூற இளையவன் வாயடைத்துப் போனான்.
“தக்ஷிண்யாங்கிற பேரைக் கேட்டப்பவே நான் யோசிச்சேன்ணா”
“எனக்கு ஏன்டா அந்த யோசனை வரல? என் மூளை களிமண்ணா போயிருந்துச்சு போல… இந்த வீட்டுல அவளை தக்ஷிண்யானு யாருமே கூப்பிடாதது கூட ஒரு காரணமா இருக்கலாம்… அதை விடு… என்ன வேணாலும் நடக்கட்டும்… உண்மையா காதலிச்சா அந்தக் காதலை ஒரு பொண்ணு எதுக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டா… அவ்ளோ ஈசியா தூக்கியெறிஞ்சுட்டு என் கிட்டவே ஆட்டிடியூட்டா பேசுனதை தான் தாங்கிக்க முடியல”
“கோவப்படாதிங்கண்ணா… அவங்களுக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்”
“அவளை வேண்டாம்னு சொல்லுறதுக்கு அவங்கம்மா தேவிகாங்கிற ஒரு காரணம் எனக்குப் போதும்… அவங்களால அத்தை எவ்ளோ கஷ்டப்பட்டாங்கனு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… ஆனா நான் அவளை ஒதுக்கலையே”
ருத்ரதேவ் தனது ஆற்றாமையை வார்த்தைகளில் வெளிப்படுத்த மகாதேவோ பிரகல்யாவைப் பற்றி அவனிடம் சொல்லும் எண்ணத்தை அப்போதைக்குக் கைவிட்டான்.
மறுநாள் காலையில் ருத்ரதேவ் ஹோட்டலுக்குச் சென்ற போது எதிர்பார்த்தபடியே கோபத்தில் சிவந்த வதனத்துடன் அவனுக்காக காத்திருந்தாள் தக்ஷிண்யா.
லாபியில் காத்திருந்தவளை சட்டை செய்யாமல் ஏளனச்சிரிப்புடன் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தான் அவன்.
சுழல் நாற்காலியில் சரிந்தவன் கண்ணாடி கதவு ‘டொக் டொக்’கென தட்டப்படவும் “கமின்” என்கவும் உள்ளே வந்தவள்
“நீங்க உங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க?” என்று கொதிக்கவும்
“உன்னைத் தான்” என்று சொல்லி அவளை வாயடைக்க வைத்தான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா கண் சிமிட்ட மறந்து நிற்கவும் அலட்சியப்பார்வை பார்த்தவன்
“அப்பிடி சொல்லுவேன்னு நினைச்சியா? நெவர்… எனக்கு இருக்குற ஆயிரம் உபயோகமான வேலையில துரோகிங்களை பத்தி நினைக்குறதுக்கு எனக்கு நேரமில்ல” என்றான்.
“ஆயிரம் உபயோகமான வேலை இருக்குறவர் ஏன் என்னோட ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் பண்ண வச்சீங்க?”
“யூ ஹர்ட்ஸ் மை ஈகோ… உன்னை அப்பிடியே விட்டுட்டா என் மனசு ஆறாது… சோ…”
“சோ…?”
“எந்த வேலைக்காக இங்க வந்தியோ அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு கிளம்பு… அதுக்குள்ள உனக்கு வட்டியும் முதலுமா திருப்பிக் குடுக்க வேண்டியதை நானும் குடுத்துடுவேன்”
“எனக்கு உங்க கூட ஒர்க் பண்ண பிடிக்கல… நான் எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்குறேன்… இன்ஃபேக்ட், அது தான் உங்களுக்கும் நல்லது”
“வாழ்க்கையில நமக்கு நடந்த நல்லதை கூட மறக்கலாம்… ஆனா கெட்டதையும் அதை செஞ்சவங்களையும் மறக்கவே கூடாது மிஸ் தக்ஷிண்யா ராஜேந்திரன்… ப்ச்… மிஸ் தக்ஷிண்யா கமல்நாத்? அடடா, மிஸ் ராஜேந்திரனா மிஸ் கமல்நாத்தானு ஒரே கன்ஃபியூசனா இருக்கே… எப்பிடி கூப்பிட்டா உங்களுக்கு கம்ஃபர்டபிளா இருக்கும்?”
கேலியாய் சொல்வது போன்று அவன் பேசிய வார்த்தைகள் தைக்க வேண்டிய இடத்தில் சரியாய் தைத்துவிட தக்ஷிண்யாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
நாசி நுனி சிவந்து அழுகை இதோ வரப்போகிறேன் என்று அறிவிக்க அதை கண்டுகொள்ளாதவனாக தனது மடிக்கணினியை அவள் பக்கம் திருப்பினான் ருத்ரதேவ்.
அதில் ‘ஸ்கை க்ளாம்பிங்’ ஆரம்பிக்கவிருக்கும் ஃபெர்ன் ஹில் பகுதியிலிருக்கும் பள்ளத்தாக்கு தெரிந்தது.
அதில் கைகாட்டியவன் “இந்த பள்ளத்தாக்குல இருக்குற ரைட் சைட் சரிவு ரொம்ப அபாயகரமானது… நிறைய தடவை தேயிலை பறிக்க போற பொண்ணுங்க அதுல சரிஞ்சு விழுந்து கை காலை உடைச்சிருக்காங்க”
இதை எதற்கு என்னிடம் கூறுகிறாய் என்பது போல பார்த்தவளை கண்டு நக்கலாய் சிரித்தவன்
“இங்க தான் இப்ப ஆரோஹி இருக்குறா” என்று முடிக்கவும் தக்ஷிண்யாவின் இதயம் துடிக்க மறந்து நின்றே போனது.
“ஆரோஹி? அங்க எப்பிடி?” என்று பதறியவள் வேகமாக அங்கிருந்து சென்று தங்கையை காக்க எண்ணுவதற்குள் அவளது பிடி ருத்ரதேவின் வசம் சென்றுவிட்டது.
“ப்ளீஸ் லெட் மீ கோ… அவ குழந்தை ருத்ரா” என்று கெஞ்சினாள் அவள்.
“உனக்குப் பிடிக்காதவ தானே… அவ இருந்தா என்ன செத்தா என்ன?” என குரூரமாக அவன் கேட்கவும்
“ப்ளீஸ்… அப்பிடிலாம் சொல்லாதீங்க… என்னைப் போக விடுங்க ருத்ரா” என கைகளை உதற முயன்றாள்.
“எவ்ளோ கஷ்டப்பட்டு நீ அங்க தான் இருக்குறேனு சொல்லி அவளை நம்ப வச்சு என் பி.ஏ மூலமா அங்க அனுப்பி வச்சிருக்குறேன்… இந்நேரம் அவ அங்க இருக்குறாளோ இல்ல போய் சேர்ந்துட்டாளோ?”
தக்ஷிண்யாவுக்கு அவனது பேச்சில் கோபம் மூண்டுவிட முழு பலத்தோடு அவனது பிடியை உதறித் தள்ளினாள்.
“எப்பிடி உங்களால இந்த மாதிரி யோசிக்க முடியுது? தேவ் மாமானு உங்க மேல உயிரா இருக்குற பொண்ணை அபாயமான இடத்துல கொண்டு போய் விடச் சொல்ல உங்களுக்கு எப்பிடி மனசு வந்துச்சு? உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா?”
“இல்ல”
ஒற்றை வார்த்தையாய் நிறுத்தியவன் இசைத்த மொபைலை எடுத்து “சொல்லுங்க விக்னேஷ்… அந்தப் பொண்ணை நான் சொன்ன ஸ்பாட்ல விட்டுட்டிங்களா?… நான் சொன்னதை செஞ்சதோட உங்க வேலை முடிஞ்சுது… பாவம் பரிதாபம் பாக்குறதுக்கு நான் உங்களுக்குச் சம்பளம் குடுக்கல… அங்க இருந்து வந்துடுங்க… இனிமே அவ தலையெழுத்து என்னவோ அதுபடி நடக்கும்” என்றான்.
அவன் பேச பேச தக்ஷிண்யாவுக்குள் பயம் பீடிக்க உடலெல்லாம் உதற ஆரம்பித்தது. ஆனால் ருத்ரதேவுக்கு இரக்கம் வரவேண்டுமே! சற்றும் இளகாமல் நின்றவன் அறைக்கதவை நோக்கி கை காட்டினான்.
“இப்ப நீ போகலாம்… ஆனா உன் தங்கச்சிய உன்னால காப்பாத்த முடியுமானு கேட்டா அதுக்கு என் கிட்ட பதில் இல்ல”
கைகளை விரித்து தோளைக் குலுக்கியவனின் கண்களில் பொய் இல்லை.
தக்ஷிண்யா அழுகையோடு அங்கிருந்து பதறியோட அவனும் சாவகாசமாக சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.
மீண்டும் அவனது உதவியாளர் அழைக்கவும் மொபைலை எடுத்தவன் “அந்தப் பொண்ணை கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுட்டிங்களா விக்னேஷ்? அவ தக்ஷிய தேடலை தானே?” என்று கேட்க
“இல்ல சார்… உங்களைப் பாக்கணும்னு தான் சார் சொன்னா… நீங்க வரச் சொன்னிங்கனு சொன்னதும் அந்தப் பொண்ணு ரொம்ப சந்தோசமா என் கூட வந்துச்சு… நீங்க அந்த ஸ்பாட்ல இல்லனதும் குழந்தை முகம் வாடிடுச்சு சார்” என்றார் விக்னேஷ்.
அவர் கூறியதைக் கேட்டு ருத்ரதேவின் மனமும் வாடிப்போனது. அந்தக் குழந்தை மீது அவனுக்கு எந்த வன்மமும் இல்லை.
தக்ஷிண்யாவை வருத்த வேண்டும் என்ற யோசனை உதயமானதும் நினைவுக்கு வந்தவள் ஆரோஹி மட்டுமே! அவளுக்கு ஆபத்து என்றால் தக்ஷிண்யா துடித்து போவாள். அரை நிமிடமே ஆனாலும் அவள் துடித்தால் அவனுக்குச் சந்தோசமே!
எனவே தான் உதவியாளரை அனுப்பி ஆரோஹியை வெளியே அழைத்துச் செல்ல கூறிவிட்டு தக்ஷிண்யாவிடம் ஃபெர்ன் ஹில் பள்ளத்தாக்குக்கு அனுப்பியதாக பொய் கூறினான்.
தங்கைக்கு ஒன்று என்றதும் அவள் துடித்தாலும் ருத்ரதேவ் அப்படி செய்வானா என்று ஒரு நொடி கூட அவள் யோசிக்கவில்லையே. பதறியடித்துக் கொண்டு ஓடுபவளுக்கு பயத்தில் அறிவு வேலை செய்யவில்லையா? அல்லது தன்னை அவள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா?
எரிச்சலுடன் விக்னேஷை ஹோட்டலுக்கு வரும்படி கூறிவிட்டு அவனது வேலையில் ஆழ்ந்தான் ருத்ரதேவ்.
அதே நேரம் தக்ஷிண்யாவோ அவன் கூறிய அந்தப் பள்ளத்தாக்கு பகுதியை அடைந்திருந்தாள். ருத்ரதேவ் கூறியது உண்மையா என கெஸ்ட் ஹவுஸ் பணிப்பெண்ணிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டு தான் வந்திருந்தாள் அவள்.
அவன் சொன்னபடியே விக்னேஷ் ஆரோஹியை அழைத்துச் சென்றதாக பணிப்பெண்ணும் கூற தக்ஷிண்யாவால் பயத்தையும் அழுகையையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
தேயிலைத்தோட்ட காவலாளியிடம் ருத்ரதேவ் அனுப்பியதாகச் சொல்லி அனுமதி வாங்கி உள்ளே நுழைந்துவிட்டாள். மூன்று பக்கமும் சரிவுகளில் தேயிலைத் தோட்டங்கள் மின்னியது.
இன்னும் சில நாட்களில் இலைகள் பறிக்கப்பட்டு அந்த இடமே ஸ்கை க்ளாம்பிங் கட்டுமானத்துக்குத் தயாராகிவிடும்.
தேயிலை செடிகளின் மத்தியில் நின்றவள் ருத்ரதேவ் கூறிய வலதுபக்கச் சரிவு சற்று அபாயமாக கீழே இறங்கவும் அதை கண்டு விக்கித்து நின்றாள்.
பரந்து விரிந்த அந்த இடத்தில் அடிக்கடி தேயிலை பறிக்க வரும் பெண்கள் தெரியாமல் விழுந்து காயமடைந்ததால் அங்கு வேலைக்கு வரவே மக்கள் யோசித்தனர்.
எனவே தான் ருத்ரதேவ் கேட்டதும் தேயிலைத்தோட்டத்தின் உரிமையாளர் அந்த இடத்தை அவனுக்கு விற்க உடனே ஒப்புக்கொண்டார்.
அவ்வளவு அபாயமான இடத்தில் க்ளாம்பிங் டென்ட்களை நிறுவ அவன் எப்படி யோசித்தான் என்ற எண்ணம் தக்ஷிண்யாவின் மனதில் உதிக்காமல் இல்லை. ஆனால் அவளது தற்போதைய கவலை அது இல்லையே!
ஆரோஹியை இங்கே அனுப்பி வைத்திருக்கிறானே! அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்?
மனம் பதபதைக்க “ஆரோஹிஈஈஈஈஈ!” என்று உரத்தக்குரலில் கத்தினாள் தக்ஷிண்யா.
கண்ணெதிரே நின்றிருந்த மலைகளில் அவளது குரல் எதிரொலித்ததே தவிர ஆரோஹி அங்கில்லை.
அரைமணி நேரம் அந்த இடத்தை அவள் சல்லடை போட்டு சலித்து ஓய்ந்து போனாள். எங்கு தேடியும் அவளது தங்கை கிடைக்கவில்லை. மனதில் பீடித்த பயத்துடன் வலதுபக்கச் சரிவை எட்டிப் பார்த்தவள் வேறு வழியின்றி மெதுவாக அச்சரிவில் இறங்கத் தொடங்கினாள்.
எவ்வளவு கவனமாக காலடி எடுத்து வைத்தாலும் சரியத் தொடங்கிய பாதையில் செருப்பைக் கழற்றிக்கொண்டு இறங்கினாள் தக்ஷிண்யா. பற்றுகோலாக சரிவில் வளர்ந்திருந்த தேயிலைச் செடிகளைப் பிடித்தபடி நடந்தாள்.
திடீரென காலடியில் ஏதோ ஓடும் சத்தம் கேட்கவும் “அம்மாஆஆஆ” என்று பதறியவள் பிடித்திருந்த தேயிலைச்செடிகளை விட்டுவிட அடுத்த நொடி கால் சறுக்கி விழுந்தாள்.
நீண்டநேரமாகியும் உள்ளே சென்றவள் வரவில்லையே என காவலாளி தோட்டத்துக்குள் வந்து அவளைத் தேட ஆரம்பித்தார். வலதுபக்க சரிவில் அவளது காலணிகள் கிடக்கவும் பதறியடித்துக்கொண்டு ஓடினார் அவர்.
இப்படியே நேரம் போக மதியமாகிவிட்டது.
மதியவுணவுக்காக ருத்ரதேவ் தயாராகும் போது ஆரோஹி அழுவதாக கெஸ்ட் ஹவுஸில் அவர்களுக்காக நியமித்திருந்த பணிப்பெண் ருத்ரதேவின் உதவியாளர் விக்னேஷின் எண்ணுக்கு அழைத்து கூறினார்.
“அந்தப் பாப்பா அழுகைய நிறுத்தவே மாட்டேங்குறா சார்… அக்காவ பாக்கணும்னு கேட்டா… நானும் பெரிய பொண்ணு நம்பருக்குக் கால் பண்ணுனேன்… ஆனா அந்தப் பொண்ணு போனை அட்டெண்ட் பண்ணவே இல்ல… என்னால சமாளிக்க முடியல சார்”
“இன்னுமா அவங்க அக்கா வீட்டுக்கு வரல?”
“இல்ல சார்… காத்தால ஹோட்டலுக்குக் கிளம்பிப்போறதா சொன்னாங்க சார்… அப்புறம் அவங்க வரவேல்ல”
“சரி நான் அவங்களுக்குக் கால் பண்ணி பாக்குறேன்… நீங்க குழந்தைய சமாளிச்சு சாப்பிட வைங்க”
ருத்ரதேவ் என்ன என்பது போல் விக்னேஷை பார்க்க அவரும் நடந்ததை விளக்கினார்.
அதை கேட்டதும் அவனது நெற்றியில் யோசனைக்கோடுகள். பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவன்
“நான் லஞ்சுக்கு வீட்டுக்குப் போறேன்… அப்பிடியே ஆரோஹிய என் கூட அழைச்சிட்டுப் போயிடுறேன்… நீங்க எதுக்கும் எஸ்டேட் செக்யூரிட்டிக்குக் கால் பண்ணி தக்ஷி எப்ப அங்க இருந்து கிளம்புனானு கேட்டுடுங்க” என்று கட்டளையிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
தனது காரில் ஏறி கெஸ்ட் ஹவுஸை அடையும் வரை வீடு திரும்பாத தக்ஷிண்யாவை மனதுக்குள் திட்டித் தீர்த்தவன் அங்கே அழுத முகமாக இருந்த ஆரோஹியைப் பார்த்ததும் அனைத்தையும் மறந்தான்.
“தேவ் மாமா” என விசும்பலுடன் ஓடி வந்தவளை அணைத்துக் கொண்டவன்
“என்னாச்சுடாம்மா? அக்காவ தேடுறியா? அக்கா இப்ப ஒர்க்ல பிஸி… நீ மாமா கூட வீட்டுக்கு வர்றியா?” என்று கொஞ்சி சமாளித்து தன்னுடன் பிருந்தாவனத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
ஆரோஹியைக் கண்டதும் லலிதா முகச்சுழிப்போடு ஒதுங்கிக்கொள்ள சசிகலாவோ அன்புடன் அச்சிறுமியை அரவணைத்துக் கொண்டார்.
பெரியவர்கள் அனைவரின் பார்வையும் தக்ஷிண்யா எங்கே என்று அவனைக் கேட்க
“அவளுக்கு க்ளாம்பிங் லொக்கேஷன்ல வேலை இருக்கு… அவ இல்லைனு ஆரோஹி அழ ஆரம்பிச்சிட்டா… சர்வெண்ட் அம்மா கால் பண்ணுனாங்க… அதான் நான் இங்க அழைச்சிட்டு வந்துட்டேன்… மா! நீங்க இன்னைக்கு ஈவ்னிங் வரைக்கும் ஆரோஹிய பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டு சாப்பிடுவதற்காக கை கழுவ சென்றுவிட்டான்.
தக்ஷிண்யா எங்கே சென்றிருப்பாள் என விக்னேஷைத் தேடச் சொன்னவனின் மனம் அலைக்கழிப்புற்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அதே நேரம் தக்ஷிண்யாவோ சரிவில் உருண்டு விழுந்தவள் சிற்சில காயங்களுடன் புதர்ச்செடிகளினூடே மயக்கமுற்று கிடந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


