“அழகான கவிதை மாதிரியான வாழ்க்கையில சில நேரம் முரண்களும் வரலாம். எல்லா நேரமும் எதுகை மோனையோட, அழகியலோட அந்தக் கவிதை அமையணும்னு அவசியமில்ல. சில நேரங்கள்ல அந்த முரண்கள் கவிதையோட வீரியத்தை இன்னும் அதிகமாக்கிக்கூட காட்டலாம்! எல்லாத்தையும் கடக்கவும் ரசிக்கவும் கத்துக்கிட்டா எதுவும் பெரிய பிரச்சனையா மாறாது”
-வசுமதி
வசீகரனிடம் மகனைக் கொடுத்தான் சர்வானந்தன். பூப்போல மென்மையான சிற்றுருவத்தைக் கைகளில் ஏந்தியதும் வசீகரனின் முகமும் மென்மையாய்க் கனிந்தது.
இன்னும் வெளிச்சம் பழகாததால் விழிகளைச் சிமிட்டியது குழந்தை. சின்ன வாயைப் பிளந்து அடிக்கடி கொட்டாவி விட்டு அழகு காட்டியது.
“குட்டிக் கண்ணா! மாமாவைப் பாரு.”
கொஞ்சியவனின் பார்வை மகிழினியிடம் பேசிக்கொண்டிருந்த மனைவியிடம் தாவியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மனக்கசப்பு எதையும் காட்டிக்கொள்ளாமல் தங்கையிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தவளிடமிருந்து கவனம் சர்வானந்தனிடம் திரும்பியது.
“என்ன முடிவு பண்ணிருக்கீங்க சர்வா? மகிழ்கிட்ட மாற்றம் தெரியுதே” என மெதுவாய்ப் பேச்சை எடுத்தான் அவன். தங்கையின் வாழ்க்கையைப் பற்றி இந்தக் கவலை மட்டும் தீர்ந்துவிட்டால் அவன் நிம்மதியாக இருப்பான்.
சர்வானந்தன் அர்த்தபுஷ்டியோடு சிரித்தான்.
“இன்னும் உங்க தங்கச்சிதான் பேசுன பேச்சுக்கு மன்னிப்பு கேக்கல வசீ. தப்பை நினைச்சு மனசு வருந்துனா மட்டும் ஆச்சா? அந்த நேரத்துல அவ உச்சரிச்ச ஒவ்வொரு வார்த்தையும் என்னை ஹர்ட் பண்ணுனப்ப நான் உணர்ந்த வலிக்கு இது பதில் இல்லையே”
வசீகரனுக்கும் புரிந்தது. குழந்தை பிறந்த தகவலறிந்து அவனும் வசுமதியும் திருநெல்வேலிக்கு வந்து ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது. சர்வானந்தன் முந்தைய தினம் இரவே கோவையிலிருந்து வந்துவிட்டான் என்றார்கள்.
இன்னுமா கணவனும் மனைவியும் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்காது? அங்கலாய்ப்பாக இருந்தது அவனுக்குத் தங்கையின் போக்கை எண்ணி.
தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதுதானே நியாயம். அதற்கு என்ன ஈகோ என முரண்டியது அவனது மனம்.
அதே நேரம் வசுமதி மகிழினியின் நெற்றியில் கைவைத்துப்பார்த்தாள்.
“சுடுதே உடம்பு! நர்ஸ் எப்ப வருவாங்க? ஃபீவர் மாதிரி தெரியுது. யாரும் கவனிக்கலையா உன்னை?” என அவள் வினவ
“எல்லாரும் பாப்பாவைப் பாத்துட்டிருந்தாங்க மதினி” என்றாள் அவள் சோர்வாக. அவளது கரம் நெஞ்சை அழுத்திவிட்டுக்கொண்டது.
அதிலேயே அவளுக்குப் புரிந்துபோனது
“ஆர்ம்பிட்ல வலிக்குதா மகிழ்? கையைத் தூக்க முடியுதா?” என விசாரித்தாள்.
“இல்ல மதினி! கையைத் தூக்க முடியல. அங்க வீங்கியிருக்கு” என்றாள் மகிழினி.
வசுமதிக்கு ஓரளவுக்கு விஷயம் புரிந்துபோனது.
“குழந்தைக்கு ஃபீட் பண்ணுனது போக மில்க் செக்ரியேஷன் அதிகமானா பால் கட்டிக்கும்னு சொல்லுவாங்க. நர்ஸ் வரட்டும். என்னனு கேப்போம்” என்றவள் செவிலி வரவும் ஆண்கள் இருவரையும் வெளியேறுமாறு சொன்னாள்.
அவர்களும் குழந்தையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.
“நான் மகிழ்கிட்ட பேசுறேன் சர்வா” என்றான் வசீகரன் அவனை அமைதியாக்குவதற்காக.
“இப்ப அதெல்லாம் வேண்டாம் வசீ. இன்னும் கொஞ்ச நாளாகட்டும்.”
“இப்பிடியே போச்சுனா என்னதான் முடிவு இந்தப் பிரச்சனைக்கு? குழந்தையைப் பத்தி யோசிக்கணும்ல சர்வா?”
கவலையாய்ச் சொன்ன வசீகரனின் தோளில் தோழமையாய்த் தட்டினான் சர்வானந்தன்.
“எனக்கு மகிழும் முக்கியம் வசீ. அவ வேணும்னா அவசரத்துல பொருள் புரியாம பேசி வாழ்க்கையைக் கெடுத்துக்குறவளா இருக்கலாம். நான் அப்பிடி இல்ல. எனக்கு என் பொண்டாட்டி புள்ளைகூட வாழணும். அவ கொஞ்சம் இறங்கி வந்தா சந்தோஷம். இல்லனாலும் அவளை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் அவ மனசு மாறுறதுக்கான அவகாசத்தை எடுத்துக்கட்டும்னு விட்டுடுவேன். நீங்க கவலைப்படாதிங்க”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவசரமாய் உள்ளே இருந்து வெளியே வந்தாள் வசுமதி.
“அப்பல்லோல பிரெஸ்ட் பம்ப் கிடைக்கும் வசீ. அது ஒண்ணு வாங்கிட்டு வாங்க” என்றாள் அவள்.
வசீகரனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. சர்வானந்தனுக்கும்தான். இருவரும் திருதிருவென விழிக்கவும் வசுமதி தலையிலடித்துக்கொள்ளாத குறை!
‘இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், ஆம்பளைக்கிட்ட என்னத்த சொல்லிக்கிட்டு’ என்று மாதவிடாயில் ஆரம்பித்துக் குழந்தைப்பேறு வரை ஒரு பெண் படும் வேதனைகளையும் அவளுக்கு அச்சமயங்களில் வரும் உடல்நலக் கோளாறுகளையும் மறைத்து மறைத்து வைத்ததன் பலன்தான் இன்று பெரும்பான்மை ஆண்களுக்கு இவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை.
வசுமதி கூகுளில் அதை எடுத்துக் காட்டிச் சொல்லவும் புரிந்துகொண்டவர்கள் உடனே வாங்கவும் சென்றார்கள்.
செவிலி மகிழினியைப் பரிசோதித்துவிட்டு காய்ச்சலுக்கான மருந்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“பிரெஸ்ட் பம்ப் வாங்கப் போயிருக்காங்க மகிழ். வந்துடுவாங்க. அவங்க வந்ததும் நான் நர்ஸைக் கூப்பிடுறேன். அவங்க எப்பிடி யூஸ் பண்ணனும்னு சொல்லித் தருவாங்க” என ஆதுரத்துடன் சொன்ன வசுமதியைக் குற்றம் நிரம்பிய விழிகளால் ஏறிட்டாள் மகிழினி.
“ரொம்ப சாரி மதினி. என்னென்னமோ பேசிட்டேன் உங்களை. எதுவுமே சரியான பேச்சில்ல. எப்பவும் நீங்க எனக்குச் சமமானு கேப்பேன். நிச்சயமா நீங்க எனக்குச் சமம் இல்ல. நீங்க என்னை விட பல மடங்கு உயரத்துல இருக்கீங்க மதினி. நான் ஒரு மடச்சி”
சொல்லும்போதே கண்களில் கண்ணீர் குளம் கட்டியது அவளுக்கு. வசுமதி அவளது கரத்தைப் பற்றிக்கொண்டாள்.
“அதெல்லாம் மறந்துடு. இருக்குற வேதனையில அதைப் பத்தி ஏன் யோசிக்குற? நேத்து நைட்ல இருந்து நெறிகட்டிருக்கு. நீ ஏன் யார்கிட்டயும் சொல்லலை?”
“அம்மாகிட்ட சொன்னேன் மதினி. பிள்ளை பால் குடிச்சா சரியாகிடும்னு சொன்னாங்க”
“பிறந்த குழந்தை வயிறு கோலிக்குண்டு சைஸ்லதான் இருக்குமாம். என் கைனகாலஜிஸ்ட் சொன்னாங்க. அது எவ்ளோ பால்தான் குடிக்கும்? இவன் பால் குடியை மறக்குற வரைக்கும் இந்தப் பிரெஸ்ட் பம்பை உன்கூடவே வெச்சுக்க. சரியா?”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே வசீகரனும் சர்வானந்தனும் வசுமதி சொன்ன பிரெஸ்ட் பம்பை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.
“இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க வசீ” கணவனிடம் சொல்லி அனுப்பிவைத்தாள் வசுமதி.
சிறிது நேரம் கழித்து வசீகரனும் சர்வானந்தனும் மகிழினியைப் பார்த்தபோது அவள் முகம் தெளிவாகியிருந்தது.
“இன்னும் நீ சர்வா கிட்ட மன்னிப்பு கேக்கலையா?” வசீகரன் ஆரம்பிக்கவும் வசுமதி அவனை இழுத்துக்கொண்டு வெளியேறினாள்.
“அவ மன்னிப்பு கேக்காம அவர் மனசை இப்பவும் நோகடிக்குறா. நேத்து நைட்டே சர்வா வந்துட்டாராம். மன்னிப்பு கேக்க என்ன கேடு? இவ்ளோ ஈகோ ஆகாது அவளுக்கு” எனப் படபடத்தபடி வெளியே கிடந்த நாற்காலியை ஆக்கிரமித்தான் மனைவியோடு.
வசுமதி அவனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தாள்.
“ப்ச்! கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? அவ ஒண்ணும் ஈகோவால அமைதியா இருக்கல. அவளுக்கு ரெண்டு ஆர்ம்பிட்லயும் நெறிகட்டிருச்சு. நெறிகட்டுனா எப்பிடி வலிக்கும்னு தெரியும்ல?”
“ஏன்? என்னாச்சு? எங்கேயும் விழுந்துட்டாளா?” எனக் கலக்கத்தோடு வினவினான் வசீகரன்.
“அதெல்லாம் இல்ல வசீ! குழந்தைக்கு ஃபீட் பண்ணுனது போக மில்க் செக்ரியேஷன் அதிகமா இருந்திருக்கு மகிழுக்கு. குழந்தை எவ்ளோ பாலைதான் குடிக்கும்? மிச்ச பால் நெஞ்சுல கட்டிடுச்சு. உங்கம்மாகிட்ட நைட்டே வலிக்குதுனு சொல்லியிருக்கா. அவங்க குழந்தை குடிச்சா சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க. குழந்தை நைட் நல்லா தூங்கிடுச்சு. மார்னிங்கும் அது பால் குடிக்கல. அவ என்ன பண்ணுவா? பால் கட்டுனது ஆர்ம்பிட்ல நெறிகட்டிடுச்சு. அவ வேதனையோட இருக்கப்ப என்ன செய்ய முடியும் வசீ? பிள்ளை பெத்தவளைப் புரிஞ்சிக்கவே மாட்டீங்கல்ல யாரும்?”
வசீகரனுக்கு மெய்யாகவே இப்போதுதான் இதெல்லாம் தெரியும். தங்கை இயல்பாகவே பிடிவாதக்காரி என்பதால் ஈகோ பிடித்து சர்வானந்தனிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றே எண்ணிவிட்டான் அவன். மனைவி நிலைமையை விளக்கியதும் தன் மீதே அவனுக்கு வருத்தம் எக்கச்சக்கமாய்!
உள்ளேயோ மகிழினி தயங்கித் தயங்கிச் சர்வானந்தனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டிருந்தாள். கண்ணீர் வடிய அவள் அமர்ந்திருக்க அவளை ஆதுரமாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் அவன். நெற்றி கொதித்ததும் விலகினான்.
“இவ்ளோ காய்ச்சலோடதான் நைட் முழுக்க இருந்தியா? வாயைத் திறந்து சொல்லுறதுக்கென்ன?”
“யார்கிட்ட சொல்லுறது? யார் வந்தாலும் பாப்பா என்ன பண்ணுதுனுதான் கவனிக்குறாங்க. எனக்கு என்ன செய்யுதுனு யாருமே கேக்கல. அண்ணாகூட வந்ததும் பாப்பாவைதான் பாத்தான்”
மூக்கை உறிஞ்சியபடி சொன்னவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் சர்வானந்தன்.
“என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. இப்ப வசு மட்டும் என்னனு கேட்டு நர்ஸ்கிட்ட பேசலனா இப்பவும் நீ நெறிகட்டுன வலியோடவும் காய்ச்சலோடவும்தான் இருந்திருப்ப. ஏதாச்சும் செஞ்சா சொல்லு மகிழ்.”
“அம்மாதான் இதெல்லாம் வெளிய சொல்லிட்டிருக்காதனு சொன்னாங்க. பக்கத்து வார்டுல ஒரு பொண்ணு மில்க் செக்ரியேஷன் சுத்தமா இல்லையாம். எனக்கு அதிகமா இருக்குனு தெரிஞ்சா கண்ணு வெச்சுப் பாப்பாக்கு உடம்பு முடியாம போயிடும்னு…”
“ப்ச்! இதெல்லாம் சுத்த நான்சென்ஸ். முதல்ல நீ எடுத்ததுக்கெல்லாம் உங்கம்மாகிட்ட கேக்குறதை நிறுத்து. அவங்க அந்தக் காலத்து மனுஷி. ரெண்டு புள்ளை பெத்து வளர்த்துட்டாங்கனாலும் அப்ப உள்ள சூழலுக்கும் இப்ப உள்ள சூழலுக்கும் உள்ள வித்தியாசம் புரியாது அவங்களுக்கு. நீ எங்கம்மாகிட்ட சொல்லியிருந்தாலும் இதேதான் சொல்லியிருப்பாங்க. அவங்க யோசிக்குற விதம் இப்பிடித்தான் இருக்கும். நீ நர்ஸ்கிட்ட சொல்லியிருக்கணும். சரி விடு! பையனுக்கு ஏதாச்சும் பேர் யோசிச்சு வெச்சிருக்கியா?”
“இல்ல! இன்னும் கொஞ்ச நேரத்துல பெர்த் சர்டிஃபிகேட்டுக்கு எழுதிக் கேட்டு வருவாங்க. நீங்க பேர் யோசிச்சு வெச்சிருக்கீங்களா?”
“ம்ம்! சமரன். என் பேரோட முதல் எழுத்தும் உன் பேரோட முதல் எழுத்தும் சேர்ந்து வர்ற மாதிரி செலக்ட் பண்ணுனேன். நல்லா இருக்கா?”
“சூப்பரா இருக்கு.”
பிரிந்த இரு உள்ளங்கள் சமாதானப் படலத்திலிருந்து மகிழ்ச்சியான தருணத்துக்குத் தாவியிருந்தன.
அங்கே அனைத்தும் சுமுகமான பிறகு பெரியவர்கள் வந்து சேர்ந்தார்கள். வசீகரனையும் வசுமதியையும் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு சொன்னார் கமலநாதன்.
குமுதவல்லி மகளுக்குப் பத்தியச் சாப்பாடு சமைத்துக் கொண்டு வந்திருந்தார்.
“வீட்டுல உங்க ரெண்டு பேருக்கும் சமைச்சு வெச்சிட்டேன். அவ வேலை ஒண்ணும் செய்ய வேண்டாம். மதியம் சாப்பிடுறப்ப குழம்பையும் தொடுகறியையும் மட்டும் சூடு பண்ணிக்கோங்க” என்று மகனிடம் சொன்னார் அவர்.
மருமகள் பிரச்சனைகளை மறந்துவிட்டு மகளையும் பேரனையும் பார்க்க வந்ததால் சின்னதாய் ஓர் இளக்கம். அதோடு அவள் வயிற்றில் வளருவது அவர்கள் குடும்பத்து வாரிசாயிற்றே!
இருவரும் சரியெனத் தலையாட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
குமுதவல்லி சொன்னது போலவே மகனுக்கும் மகளுக்கும் சமைத்து வைத்திருந்தார்.
திருநெல்வேலியில் அந்த மூன்று நாட்களும் சுழன்றடித்த ஓர் இனிய சூறாவளியைப் போலக் கடந்து சென்றன. வசுமதியின் தாய் வீட்டில் அவளது பெற்றோர் கொடுத்த அளவற்ற உபசரிப்பு அவளை நெகிழ வைத்தது.
வீரலட்சுமி அவளிடம் வளைகாப்பு பற்றிய பேச்சை எடுத்ததும் வசீகரன் அதைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டான்.
“நீங்க வேற எதையும் யோசிக்காதீங்க. அங்க வந்து வசுவையும் குழந்தையையும் பாத்துக்கிட்டா மட்டும் போதும் அத்தை”
மருமகன் இவ்வாறு சொன்ன பிறகு செல்வராஜுக்கும் வீரலட்சுமிக்கும் மறுத்துப் பேசத் தோன்றவில்லை.
குழந்தை பிறந்து மூன்றாம் நாள் மகிழினி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகித் தனது பிறந்த வீட்டிற்கு வந்ததும், வசீகரனும் வசுமதியும் சென்னைக்குத் திரும்பக் கிளம்பினார்கள். பேருந்தில் முன்பதிவு செய்திருந்தார்கள் ஏற்கெனவே!
தங்கையின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்த திருப்தி வசீகரனின் முகத்தில் ஒரு பிரகாசத்தைப் படரவிட்டிருந்தது. பேருந்து நிலையத்தின் சலசலப்புக்கு நடுவே, குளிர்சாதனப் பேருந்தின் அந்தச் சாய்வு இருக்கைகளில் இருவரும் அருகருகே அமர்ந்தனர்.
பேருந்து மெல்ல வேகம் எடுத்து திருநெல்வேலியின் எல்லையைத் தாண்டியதும், ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
வசீகரன் தன் மொபைலில் ப்ளூடூத் இயர்போன்ஸை எடுத்து, ஒன்றை வசுமதியின் காதில் மாட்டிவிட்டு, மற்றொன்றைத் தன் காதில் பொருத்திக்கொண்டான்.
சின்னக் கண்ணன் அழைக்கிறான்… சின்னக் கண்ணன் அழைக்கிறான்… ராதையை பூங்கோதையை… அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி… சின்னக் கண்ணன் அழைக்கிறான்…
பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் இசைஞானியின் இசையில் மென்மையாக ஒலிக்கத் தொடங்கிய அப்பாடலில் இருவருக்குள்ளும் இனம்புரியாத சிலிர்ப்பொன்று பரவியது. அந்த இதமான இரவு நேரப் பயணத்தில், இசையும் இருளின் அமைதியும் அவர்களை ஒரு மாய உலகத்திற்குள் அழைத்துச் சென்றன.
தோளில் சாய்ந்து கிடந்தவளின் அடர்ந்த கருங்கூந்தலை வசீகரன் தன் விரல்களால் மெதுவாக ஒதுக்கிவிட்டான். ஒருகாலத்தில் தனிமையின் பிடியில் கோர்க்க யாருமின்றி உறைந்து கிடந்த அவனது விரல்கள், இப்போது வசந்த காலத்தின் முதல் தென்றலைப் போல அவளது கூந்தலைத் தீண்டின.
பேருந்து குண்டும் குழியுமான பாதையில் லேசாகக் குலுங்கியபோது, வசுமதியின் தலை வசீகரனின் கழுத்தோரமாய் இயல்பாகச் சாய்ந்தது. எதிர்பாராத அந்த ஸ்பரிசத்தால் வசீகரனின் இதழோரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. தன் இடது கையை அவளது தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். வலது கரமோ அவளது வயிற்றை அணைவாய்ப் பிடித்திருந்தது.
பேருந்து நெடுஞ்சாலையில் புயலாய்ப் பறந்துகொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியே நட்சத்திரங்கள் கண்சிமிட்ட, அந்த இரவின் அமைதியோடு தங்களது சிறுகூட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


