“குறைகள் எப்ப பூதாகரமா நம்ம கண்ணுக்குத் தெரியும்? எங்க ஒருத்தருக்காக நாம இறங்கி வரத் தயங்குறோமோ, அந்த ஒருத்தருக்காகச் சின்னச் சின்னக் குறைகளைத் தாங்கிக்கிற சகிப்புத்தன்மையை இழக்குறோமோ அப்பதான் சின்னச் சின்ன குறைகள்கூட பூதாகரமா தெரியும். எப்பவும் உங்க பக்கம் இருக்குற குறைகளைக் கடந்து உங்களை நேசிக்குற பார்ட்னரை பூதக்கண்ணாடி வெச்சுக் குறைகளைக் கண்டுபிடிக்குற நபரா மாத்திடாதீங்க. அது உங்களுக்கு நீங்களே செஞ்சுக்குற அநியாயம்.”
-வசுமதி
மருத்துவமனையின் அந்த அமைதியான காத்திருப்புக் கூடத்தில், வசுமதியின் கண்கள் லேசான பதற்றத்தில் அலைபாய்ந்துகொண்டிருந்தன. கருவுற்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையில், சிசுவின் முழுமையான வளர்ச்சியைக் கண்டறியும் முக்கியமான ‘அனாமலி ஸ்கேன்’ எடுப்பதற்காக இன்று வந்திருந்தனர்.
வார இறுதி இருவருக்கும் வசதியாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் மருத்துவரிடம் அனாமலி ஸ்கேனுக்காகத் தேதி கேட்டு வந்திருந்தார்கள்.
வசுமதி அணிந்திருந்த சந்தன நிற காட்டன் சுடிதாரில், அவளது தாய்மையின் பூரிப்பும், அவளது முகத்தில் தெரிந்த தனித்துவமான ஒளியும் புதுவிதமான சோபையைக் கொடுத்திருந்தன. அவளுக்குப் பக்கத்தில் அவனது கூர்மையான கண்களில் இப்போது மனைவியின் மீதான பரிவும், குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்பும் தேங்கிக் கிடந்தன.
அவளது மென்மையான கையைத் தன் உள்ளங்கைக்குள் பொதிந்துகொண்ட வசீகரன், “என்ன வசு, பயமா இருக்கா?” என்று மிக மெல்லிய குரலில் கேட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“பயமில்ல வசீ. ஆனா ஒருமாதிரி படபடப்பா இருக்கு. உள்ள பாப்பா எப்படி இருக்கோ, எல்லாம் நார்மலா இருக்குமானு நினைக்குறப்ப கொஞ்சம் நெஞ்சுக்குள்ள ஏதோ பண்ணுற மாதிரி இருக்கு” என்று தன் குரலில் இருந்த பதற்றத்தை மறைக்காமல் சொன்னாள் வசுமதி.
அவனது பெருவிரல் அவளது புறங்கையை இதமாக வருடியது.
“ஒண்ணும் ஆகாது வசு. நம்ம குழந்தை சூப்பரா இருக்கும். நீ அனாவசியமா ஸ்ட்ரெஸ் ஆகாம, கொஞ்சம் ரிலாக்ஸா மூச்சை இழுத்து விடு,” என்று அவளுக்கு நம்பிக்கையூட்டினான்.
“மிஸஸ். வசுமதி…” என்று நர்ஸ் அழைத்ததும், வசீகரன் அவளது கையைப் பிடித்தபடியே எழுந்து ஸ்கேன் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஒரு மெல்லிய இருள் சூழ்ந்திருந்தது. குளிரூட்டியின் சில்லிட்ட காற்று அவளைத் தீண்டியது. அங்கிருந்த படுக்கையில் அவளை மெதுவாகப் படுக்க வைத்தான் வசீகரன்.
மருத்துவர் உள்ளே வந்து புன்னகையுடன் வரவேற்றார்.
“ஹலோ வசுமதி, ரிலாக்ஸா படுத்துக்கோங்க. இப்ப நாம பாப்பாவப் பாக்கப்போறோம்,” என்றபடியே, அவளது மேடிட்ட வயிற்றின் மீது ஸ்கேன் செய்வதற்கான அந்தக் குளிர்ந்த ஜெல்லைத் தடவினார். அந்தச் சில்லிட்ட உணர்வில் வசுமதி லேசாகச் சிலிர்க்க, அவளது தலைமாட்டில் நின்றிருந்த வசீகரன், அவளது நெற்றியோரம் சரிந்திருந்த கருங்கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவளது கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
மருத்துவர் தன் கையில் இருந்த ப்ரோபை அவளது வயிற்றின் மீது மெதுவாக நகர்த்தத் தொடங்கினார். எதிரே இருந்த பெரிய மானிட்டர் திரையில், கறுப்பும் வெள்ளையுமான நிழற்படங்கள் அசையத் தொடங்கின. வசீகரனின் கூர்மையான பார்வையும், வசுமதியின் தவிப்பான பார்வையும் அந்தத் திரையின் மீதே பதிந்திருந்தன.
“பாருங்க! இதுதான் உங்க பாப்பாவோட தலை…” என்று மருத்துவர் திரையில் சுட்டிக்காட்டினார். “இது முதுகுத் தண்டுவடம். ரொம்ப அழகா, பெர்ஃபெக்ட்டா வளர்ந்திருக்கு.”
அடுத்த நொடி, அறை முழுவதும் ஒரு புதிய சத்தம் எதிரொலித்தது. “டப்… டப்… டப்… டப்…” குதிரைக் குளம்படிகள் போல, ஆனால் மிக வேகமாக, ஒரு சின்னஞ்சிறு உயிர் தன்னுள் துடிக்கும் அந்த இதயத் துடிப்பின் சத்தத்தைக் கேட்டதும் வசுமதியின் கண்கள் தானாகப் பனித்தன. அவளது கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.
“வசீ! இங்க பாருங்க…” என்று உணர்ச்சிவயப்பட்ட குரலில் தழுதழுத்தபடி தன் கணவனிடம் திரையைக் காட்டினாள் வசுமதி. அவனாய் நிமிர்ந்து பார்த்தாள்.
வசீகரனின் தீவிரமான கண்கள் இப்போது முழுமையாக உருகியிருந்தன. அவனது கட்டுமஸ்தான தேகத்திற்குள் இருந்த ஒரு தகப்பனின் இதயம் அந்தச் சத்தத்தில் சிலிர்த்துப்போனது. எவ்விதப் அலட்டலுமில்லாமல் குனிந்து, அவளது நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி, ஒரு ஆழமான முத்தத்தை முத்திரையாகப் பதித்தான்.
அவனது தாடியின் மெல்லிய உரசல் அவளுக்குப் பெரும் அரவணைப்பைக் கொடுத்தது.
“பாத்தேன் வசு. நம்ம குழந்தை.” என்று அவனது குரலும் லேசாகக் கரகரத்தது. பெருமிதமாகவும் அதே சமயம் நெக்குருகியும் போயிருந்தான் வசீகரன்.
“இங்க பாருங்க வசுமதி. பாப்பா கை விரலை எப்படி மூடித் திறக்குதுனு. ரொம்ப ஆக்டிவான குழந்தை. ஹார்ட் பீட், பிரெயின் டெவலப்மென்ட், கை கால் விரல்கள்னு எல்லாமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்கு. அனாமலி ஸ்கேன்ல எந்தக் குறையும் இல்ல. பேபி இஸ் அப்சல்யூட்லி ஃபைன் அண்ட் ஹெல்தி!”
மருத்துவர் சொன்ன அந்த வார்த்தைகள், அவர்கள் இருவர் மனதிலும் இருந்த அத்தனை பாரங்களையும் இறக்கி வைத்தன.
ஸ்கேன் முடிந்து, வயிற்றைத் துடைத்துவிட்டு வசுமதி எழுந்து அமர்ந்தாள். மருத்துவரின் அறைக்குச் சென்று ஆலோசனைகளுக்காக எதிரே அமர்ந்தனர்.
“வசுமதி! உங்க ஸ்கேன் ரிப்போர்ட் ரொம்பவே திருப்தியா இருக்கு. இதே மாதிரி நல்லா சாப்பிடுங்க, சந்தோஷமா இருங்க,” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார் மருத்துவர்.
வசீகரன் அக்கறையோடு முன்சாய்ந்து, “டயட் சார்ட் ஏதாச்சும் மாத்தணுமா டாக்டர்? இப்ப ஃப்ரூட்ஸ், நட்ஸ் எல்லாம் ரெகுலரா குடுத்துட்டு இருக்கேன். வேற ஏதும் எக்ஸ்ட்ராவா கவனிக்கணுமா?” என்று கேட்டான்.
“அதுவே போதும் மிஸ்டர் வசீகரன். நீங்க பண்ற கேரிங்தான் அவங்களுக்கு இப்போதைக்கு ரொம்ப முக்கியம். ரொம்ப நேரம் ஒரே இடத்துல உக்கார வேண்டாம்னு மட்டும் சொல்லுங்க. மத்தபடி எவ்ரிதிங் இஸ் குட்,” என்று வாழ்த்தி ரிப்போர்ட்டை அவர்களிடம் கொடுத்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்து காரில் ஏறியதும், அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை ஒரு பொக்கிஷத்தைப்போலத் தன் நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தாள் வசுமதி. அவளது முகத்தில் இருந்த அந்த அமைதியான, முழுமையான சந்தோஷத்தைப் பார்த்த வசீகரன், காரை ஸ்டார்ட் செய்யாமல் அவளையே சற்று நேரம் ரசித்துப் பார்த்தான்.
“இப்ப நிம்மதியா இருக்கா உனக்கு?” என்றான் மென்மையாக.
“ரொம்ப வசீ. அந்த மானிட்டர்ல பாப்பாவோட குட்டி குட்டி விரலைப் பாத்ததும் எனக்குள்ள என்னமோ பண்ணிடுச்சு. நம்ம ரெண்டு பேருக்கும் சொந்தமான ஒரு குட்டி உயிர் அங்க துடிச்சிட்டு இருக்குனு நினைக்குறப்ப, சந்தோஷத்துல அழுகையே வந்துருச்சு வசீ,” என்றாள் உணர்வுப்பூர்வமாக.
அவளது மென்மையான கன்னத்தைத் தன் விரல்களால் இதமாக வருடியவன், “நானும் பாத்தேன் வசு. அது அவ்ளோ அற்புதம்ல. எனக்கு வார்த்தையே வரல. நீ பயந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்ல, நம்ம பாப்பா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குது,” என்று சிரித்தான்.
“தேங்க்ஸ் வசீ! என்னை இவ்வளவு நல்லா பாத்துக்குறதுக்கு,” என்று நெகிழ்ச்சியோடு சொன்னவளின் கைகளை எடுத்துத் தன் உதடுகளில் ஒற்றிக்கொண்டான் வசீகரன்.
“இதெல்லாம் நான் செய்யாம வேற யார் செய்வாங்க உனக்கு? இதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லுற. சொல்லுற வாய்க்கு இனிமே பனிஷ்மென்ட் குடுத்துடணும் அப்பப்ப. இல்லனா அடிக்கடி அதிகப்பிரசங்கித்தனமா இந்த வாய் பேசும்” என்று சொன்னவனாய் அவளது கீழுதட்டை விளையாட்டாய்க் கிள்ளி வைத்தான் அவன்.
வசுமதி கண்களைப் பெரிதாக்கி “ப்ச்! யாரும் பாத்துடப்போறாங்க” என்க
“அப்ப காருக்குள்ள போய் பனிஷ்மென்ட் குடுக்கவா?” என வேண்டுமென்றே அவளைச் சீண்டினான் அவன்.
“நீங்க ஒண்ணும் பண்ணவேண்டாம். வீட்டுக்குக் கிளம்பலாம் வாங்க” என அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்று காருக்குள் தள்ளினாள் வசுமதி.
அதே நேரம் மகிழினியைப் பார்ப்பதற்காக வசீகரனின் வீட்டுக்கு வந்திருந்தார்கள் வீரலட்சுமியும் செல்வராஜும். கூடவே சுகமதியும் வந்திருந்தாள்.
மகிழினிக்காகச் செய்த பலகாரங்களைக் கையோடு எடுத்து வந்திருந்தார் வீரலட்சுமி. கர்ப்பவதிப் பெண்ணைப் பார்க்கச் செல்கையில் பலகாரம் கொண்டு செல்வது அவர்கள் பக்கத்தில் வழக்கம். அதிலும் சம்பந்தி வீட்டுப் பெண் என்றால் இதெல்லாம் கட்டாயம். கொண்டு செல்லாவிட்டால் அதையே ஒரு பேச்சுபொருள் ஆக்குவார்கள்.
மகிழினிக்குத் திரட்டுப்பால் பிடிக்குமென எப்போதோ வசுமதி சொன்ன ஞாபகத்தில் திரட்டுப்பாலும், ரிப்பன் பக்கோடாவும் கொண்டு வந்தவர் குமுதவல்லியிடம் பாத்திரங்களைக் கொடுக்க அவருக்கு வாயெல்லாம் பல்.
“மதினி எங்க?” என்று சுகமதி வினவவும் அவளது அறையில் இருப்பதாகச் சொன்னார் அவர்.
அவளும் மகிழினியின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அங்கே மொபைலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மகிழினி. சுகமதியைப் பார்த்ததும் சுரத்தின்றி வரவேற்றாள்.
“படிப்பு எப்பிடி போகுது?”
“ம்ம்! நல்லா போகுது மதினி. நீங்க எப்பிடி இருக்கீங்க? பாப்பா என்ன சொல்லுது?”
“பாப்பா இன்னும் கொஞ்ச நாள்ல உலகத்துக்கு வந்துடும். நீயே கேட்டுக்கோயேன்”
“ஓஹ்! அதுவரை அம்மாக்கும் பேபிக்கும் இடையில இருக்குற சீக்ரெட்டைச் சொல்லமாட்டீங்க. அப்பிடித்தானே?”
சுகமதி கேட்ட விதத்தில் சிரித்தாள் மகிழினி. ஆனாலும் அதில் நிறைவில்லை. அடுத்தடுத்து அவள் பேச மகிழினி பதில் சொல்லவென நேரம் நகர்ந்தது.
சரியாக அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது சர்வானந்தனும் அவனது பெற்றோரும் வந்தார்கள். நீண்டநாட்களுக்குப் பிறகு வீரலட்சுமியையும் செல்வராஜையும் பார்த்தவன் முகமலர்ச்சியோடு நலம் விசாரித்தான்.
“நல்லா இருக்கோம் தம்பி. ஹோட்டல் எல்லாம் நல்லா போகுதா?”
“அருமையா போகுது சித்தப்பா.” என்றவன் சுகமதியிடம் “என்னம்மா படிப்பு எப்பிடி போகுது?” என்று வினவ
“நல்லா போகுது அண்ணா!” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டாள் சுகமதி. என்னதான் வசுமதி சொன்ன அறிவுரைகள் மனதில் இருந்தாலும் மகிழினியின் உயிர்ப்பற்ற பேச்சுகளுக்குச் சர்வானந்தனை ஜவாப்தாரியாக எண்ணியது அவளது மனம். எனவே அவளால் நிறைவாக உரையாட முடியவில்லை.
சர்வானந்தனுக்கு அவளது பேச்சில் வித்தியாசம் எதுவும் தெரியாததால் மனநிறைவோடு அவளது பெற்றோரிடம் பேசி வழியனுப்பிவிட்டான்.
பரமேஸ்வரியும், வரகுணபாண்டியனும் மகிழினியின் பெற்றோரிடம் பேச அவனோ மனைவியைத் தேடிச் சென்றான். அவளுக்காக வாங்கி வந்த பழங்களையும் அவளுக்கு விருப்பமான இனிப்புகளையும் கொடுத்தான்.
அதை மௌனமாக வாங்கிக்கொண்டவள் “இதுல எல்லாம் என் மனசு நிறைஞ்சிடும்னு நம்புறீங்களா?” என மெதுவாக வினவினாள்.
“என் நம்பிக்கை என்னோட. உனக்கு அதைப் பத்தி கவலை வேண்டாம். டேக் கேர்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற எத்தனித்தான்.
மகிழினி வேகமாக அவனது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள். சர்வானந்தன் என்னவென்பது போல ஏறிட்டான் அவளை.
“எங்கப்பா சென்னைக்குப் போயிட்டு வந்ததுல இருந்து அண்ணன் – மதினி புராணத்தைப் பாடுறார். எங்க அண்ணா மதினியைத் தங்கத்தட்டுல வெச்சுத் தாங்காதக் குறையாம். எந்த விதத்துல மதினியை விட நான் குறைஞ்சு போயிட்டேன்னு எனக்கு இப்பிடி ஒரு சீரழிவு?”
“இப்பவும் நீ உன்னை உயர்த்திக் காட்ட வசுவை மட்டமா பேசுற. உன்னோட இந்தக் குணம்தான் நீ சொன்னியே, அந்தச் சீரழிவுக்குக் காரணம். என் கையை விடு. இதுக்கு மேல இங்க நின்னா அது உனக்கும் நல்லதில்ல, எனக்கும் நல்லதில்ல.”
“அவங்க மேல இவ்ளோ அக்கறை. என் மேல துளிக்கூட இல்லல்ல?”
“உன் மேல அக்கறை இல்லனா நீ பேசுன கேவலமான வார்த்தைகளை மறந்துட்டு இங்க வந்து நின்னிருக்கமாட்டேன். நீ தேவையில்லாம உன் அண்ணனையும் மதினியையும் நமக்குள்ள கொண்டு வராத. அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும். நீ முதல்ல உன் வாழ்க்கையை ஐ மீன் நம்ம வாழ்க்கையைச் சீரமைக்க என்ன செய்யணும்னு யோசி. எப்பவும் மதினி அது பண்ணுறா இது பண்ணுறானு வசுவை நினைச்சு மனசு பொருமாத”
“அப்ப எனக்குப் பொறாமைனு சொல்லுறீங்களா?”
“இல்லனு சொல்லுறியா? உனக்கு டே ஒன்ல இருந்து வசு மேல பொறாமை. உன் அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்குத் தகுதியில்லனு நீயா ஒரு நினைப்பை உனக்குள்ள வளர்த்திருக்க. அப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருந்துச்சுனு நானும் பேசலாமா? பேசுனா நீ தாங்குவியா? ஆனா நீ ஒவ்வொரு தடவையும் இதையே சொல்லுற. வசுமதி காதுக்குப் போகாததால நீ பேசுனது, பேசிக்கிட்டிருக்குறது எதுவும் நியாயமாகாது மகிழ்.”
“நீங்க… நீங்க எப்ப எனக்குச் சப்போர்ட்டா பேசுவீங்க?”
“எப்ப நீ உன் மனசுல இருக்குற பொறாமை, உன்னோட சின்னப்புத்தி எல்லாத்தையும் விட்டுட்டு முதிர்ச்சியானவளா மாறுறியோ அன்னைக்கு உனக்கு நான் முழு சப்போர்ட்டா இருப்பேன். ஆனா அந்த நாள் நம்ம வாழ்க்கையில வராதுங்கிற மாதிரிதான் நீ நடந்துக்குற. சீக்கிரம் மாறு மகிழ். இல்லனா ரொம்பக் கஷ்டம்”
சலிப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சர்வானந்தன். அவன் சென்றதும் ஆதங்கத்தோடு படுக்கையில் அமர்ந்தாள் மகிழினி.
மனமெங்கும் சுகமதியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பார்த்த அண்ணன் மதினியின் புகைப்படங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தன. பார்க்கப் பார்க்கத் தனக்கு இதெல்லாம் வாய்க்கவில்லையே என்ற வயிற்றெரிச்சல் மிகுந்தது அவளுக்கு.
அதிலும் வசுமதியின் முகத்திலிருந்த தாய்மையின் பூரிப்பும், அண்ணன் அவளை உரிமையாய் அணைத்திருந்த விதமும் அவளுக்குள் பொறாமையைத் தூண்டியது. ஒருவேளை சர்வானந்தனும் அவளும் நல்லபடியாக வாழ்ந்திருந்தால் இந்தப் பொறாமை, வயிற்றெரிச்சல் எல்லாம் வந்திருக்காதோ என்னவோ?
மொத்தத்தில் சர்வானந்தன் அத்துணை தூரம் அறிவுறுத்தியும் மனதிலிருக்கும் எதிர்மறை உணர்வுகளை மறைக்க வழி தெரியாதவளாய் நொந்துபோனாள் மகிழினி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


