Header Image

 

அலைவரிசை 38

மைக்ரோபோனை மியூட் செய்துவிட்டு ஆடியோ கன்சோலை அழுத்த ஸ்வர்ணலதாவின் குரல் காற்றிலே கசிந்து பண்பலையாய் நேயர்களின் செவியை அடைந்தது. அன்றைய நிகழ்ச்சி முடிந்து அவள் எழுந்து ஸ்டூடியோவை விட்டு வெளியேறினாள்.

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்

PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை”

காலையில் நடந்த நிகழ்வுகள் எதையும் அவளால் மறக்க முடியவில்லை. பத்து நாட்களில் பகீரத பிரயத்தனம் செய்து கேசவைப் பற்றிய நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க பழகியிருந்தாள்.

ஆனால் இன்றைய சம்பவம் அவளது முயற்சியைத் தவிடுபொடியாக்கி விட்டதென்றே சொல்ல வேண்டும். அதை வாய் விட்டு புலம்பவோ அழவோ விருப்பமற்றவளாக தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள் பிரக்ருதி.

வழக்கம் போல ரேபிடோவுக்காக காத்திராமல் கவினின் பைக்கில் அமர்ந்தவள் அவனது லொடலொடா பேச்சைக் கவனியாமல் சோகமாக பயணித்தாள்.

அதே நேரம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கார்கி குழுமத்திற்கு சொந்தமான வீட்டின் மாடி வராண்டாவில் கிடந்த சாய்விருக்கையில் கால் நீட்டி அமர்ந்தபடி இண்டர்நெட் ரேடியோவில் சென்னை சிட்டி எஃப்.எம்மில் பிரக்ருதியின் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தான் கேசவ். நிகழ்ச்சி முடிந்து கடைசி பாடல் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.

“புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்”

சினிமா பாடல்களை கேட்கும் போது சில நேரங்களில் அவை நமக்காகவே எழுதப்பட்டது போன்ற மாயை உண்டாகும். அதே மாயையில் இப்போது அமிழ்ந்திருந்தான் கேசவ்.

அவனுக்குப் பிரக்ருதி மீதிருப்பது காதலா வெறுப்பா என வகை பிரித்தறிய முடியாத வரை இந்த மாயை தொடரும்.

பாடல் முடிந்ததும் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பித்துவிட ரேடியோவை நிறுத்திவிட்டு மொபைலை ஒரு ஓரமாக வைத்து கண் மூடி அமர்ந்தான்.

அப்போது படிகளில் ஷூ கால்கள் அடியெடுத்து வைக்கும் சத்தத்தோடு ஷ்ரவனின் குரல் இன்னொரு ஆடவனின் குரலோடு கலந்து கேட்டது.

அந்தக் குரல்களின் கலவை தன்னை நெருங்கியதும் கண் திறந்தான் கேசவ்.

“ஹாய் சார்! ட்ராவல் எப்பிடி இருந்துச்சு?” என்ற கேள்வியுடன் அவன் முன்னே வந்து நின்றான் தனஞ்செயன். வாகமன் அருகில் இருக்கும் கார்கி குழுமத்துக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தின் மேலாளர்.

“நாட் பேட் தனா… நீங்க எப்பிடி இருக்கீங்க? நான் கேட்ட டீடெய்ல்ஸ் எல்லாம் கிடைச்சுதா?” என்று கேட்டபடி அவனை அமரச் சொன்னான் கேசவ்.

ஷ்ரவனும் தனஞ்செயன் தன்னிடம் அளித்த மருத்துவ அறிக்கைகள் மற்றும் சில பேப்பர்களைக் காட்டினான்.

“சோ நிகிதா ப்ரெக்னெண்டா இருக்குறது பொய்யில்ல..” – கேசவ்.

“ஆமா சார்! நீரவ் சாரோட டெத்துக்கு அப்புறமும் கொஞ்சநாள் அவங்க கார்கி டீ எஸ்டேட்டோட அக்கவுண்டெண்டா ஒர்க் பண்ணுனாங்க… திடுதிடுப்புனு ஒரு நாள் ரிசைன் பண்ணிட்டு அவங்க சொந்த ஊருக்குப் போயிட்டாங்க” – தனஞ்செயன்.

“நிகிதாவோட சொந்த ஊர் குடையாத்தூர் தான?” – இது ஷ்ரவன்.

“ஆமா சார்! லாஸ்ட் டைம் நிலச்சரிவு நடந்த அதே ஊர் தான்”

“இப்ப நிகிதா எங்க இருக்காங்க?”

“வயநாட்டுல இருக்காங்க சார்… இது வயநாட்டுல அவங்க வாங்குன ப்ராப்பர்ட்டிக்கான டாக்குமெண்ட்ஸ்… ப்ராப்பர்ட்டி வேல்யூ ஒன் அண்ட் ஹாப் க்ரோர்ஸ்”

ஷ்ரவன் எதுவோ புரிந்தது போல கேசவைப் பார்த்தான்.

அவனோ “இந்த ஒன் அண்ட் ஹாப் க்ரோர்ஸ் அவங்களுக்கு எப்பிடி வந்துச்சுனு எதாச்சும் தெரிஞ்சுச்சா?” என்று கேட்க

“செக் ட்ரான்சாக்சன் தான் சார்… அவங்க அக்கவுண்ட் மெயிண்டெயின் பண்ணுற பேங்க் மேனேஜர் இதை சொன்னார்… யாரோ பெரியாளுங்க இன்ஃப்ளூயன்ஸ்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனதாவும் பிசினஸ்ல வந்த ப்ராஃபிட் மாதிரி டூ க்ரோர்சை காட்டியிருக்கிறதாவும் சொன்னார் அவங்க கன்சல்ட் பண்ணுற ஆடிட்டர்… அதுல ஒன் அண்ட் ஹாஃப் க்ரோர்சை ப்ராப்பர்டி வாங்குறதுக்காக செலவு பண்ணிருக்காங்க… மீதிய அவங்க ஃபிக்சட் இன்னும் சில இன்வெஸ்ட்மெண்ட் ஸ்கீம்ல போட்டுருக்காங்க” என்றான் தனஞ்செயன்.

கேசவ் எழுந்து அவனது கையைக் குலுக்கி நன்றி தெரிவித்தான்.

“இவ்ளோ டீடெய்ல்சை ஷார்ட் டைம்ல கலெக்ட் பண்ணி குடுத்ததுக்கு தேங்க்ஸ் தனா… கல்யாண மாப்பிள்ளைய டிஸ்டர்ப் பண்ணிட்டேன்ல, அதுக்கு சாரி”

“இதுல என்ன சார் இருக்கு? நீரவ் சார் எங்க எல்லாருக்கும் ஃப்ரெண்ட் மாதிரி… எப்பவும் நீங்க எனக்குக் கீழ வேலை பாக்குறவங்கங்கிற அலட்சியமோ ஆணவமோ அவர் கிட்ட கிடையாது… ஹீ வாஸ் சஸ் அ ப்யூர் சோல்… அவரோட டெத்கு பின்னாடி இருக்குற சதிய பத்தி நாங்களும் தெரிஞ்சிக்க கடமைப்பட்டிருக்கோம் சார்”

“நீரவ் நிறைய நல்ல மனுசங்களை சம்பாதிச்சு வச்சிட்டுப் போயிருக்குறான்னு புரியுது… தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்… இனிமே ரெண்டு வாரத்துக்கு என்னோட தொந்தரவு இல்லாம மேரேஜ், ஹனிமூனை என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்ற கேசவிடம்

“நீங்களும் ஷ்ரவன் சாரும் கட்டாயம் என் மேரேஜுக்கு வரணும் சார்… மேரேஜ் சென்னைல தான்” என்றான் தனஞ்செயன்.

ஷ்ரவனும் கேசவும் வருவதாக கூறவும் அவனுக்கு மகிழ்ச்சி. இருவரையும் ஓய்வெடுக்க சொல்லிவிட்டுச் சென்றான் தனஞ்செயன்.

அவன் சென்றதும் கையிலிருந்த ஆதாரங்களைப் பார்த்தபடியே “இது மட்டும் போதாது ஷ்ரவன்… அந்த நிகிதாவோட வயித்துல வளருற பேபி சரணோடதுனு ப்ரூவ் பண்ணணும்… அதுக்கு முதல்ல நம்ம நிகிதாவ நம்மளோட கண்ட்ரோலுக்குக் கொண்டு வரணும்” என்றான் கேசவ்.

“நீ ஒன்னும் கவலைப்படாத… நாளைக்கே வயநாடு போறோம்… அவ வாயாலயே சரணுக்கும் அவளுக்கு இருந்த தொடர்பை ஒத்துக்க வைக்குறோம்” என்றான் ஷ்ரவன்.

“அவ அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்கமாட்டா ஷ்ரவன்… நீரவ் இறந்தப்ப நான் எவ்ளோ மிரட்டிருப்பேன்? அப்ப கூட அவ திமிரா பதில் சொன்னா… அவளை வேற வழில மடக்கணும்” என்று தீவிர யோசனையோடு கூறினான் கேசவ்.

வயநாடு போகும் முடிவை இருவரும் மாற்றிக்கொள்ளவில்லை. மறுநாள் நிகிதாவைச் சந்திக்கும் முடிவில் மட்டும் சில மாற்றங்களை செய்து கொண்டனர்.

அதே நேரம் பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்டில் பிரக்ருதியை இறக்கிவிட்டான் கவின்.

காலையிலிருந்தே அவளது முகவாட்டத்தைக் கவனித்துக்கொண்டு தானே இருந்தான்.

“சோ இப்பவும் என்ன பிரச்சனைனு என் கிட்ட சொல்ல மாட்டல்ல?”

பிரக்ருதி பதில் கூறாமல் சிரித்து மலுப்ப பார்க்க பட்டென்று அவளது தோளில் அடித்தான் கவின்.

“சும்மா ஈனு சிரிச்சு ஏமாத்தலாம்னு பாக்காத பக்கி… ஐ நோ வெரி வெல் அபவுட் யூ… யார் அவன்? உன்னை கன்னாபின்னானு பேசுறான்… நீயும் அவனை கழுவி ஊத்துற… உனக்குத் தெரிஞ்சவனா? சொந்தக்காரனா? ஏதோ பகையாளிங்க மாதிரி ரெண்டு பேரும் பேசிக்கிறிங்க… என்ன தான் நடக்குது கிருதி?”

மூச்சுவிடாமல் அவன் பேசியதைக் கேட்டவள் “நாளைக்கு மானிங் மஹி ஷாப்பிங் போகணும்னு சொன்னா… அங்க வச்சு எல்லாத்தையும் சொல்லுறேன்… இப்ப கிளம்பு” என்றாள்.

“நாளைக்கு மட்டும் நீ சொல்லல….” என அவளை மிரட்டியபடி பைக்கை கிளப்பியவன் அப்பார்ட்மெண்ட் வளாகத்தை விட்டு வெளியேறும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தாள் பிரக்ருதி.

புயலின் காரணமாக மழை ஆரம்பிக்கவும் மின் தூக்கியை நோக்கி சென்றாள்.

ஃப்ளாட்டின் மாற்று சாவியைப் போட்டு திறந்து உள்ளே சென்றவள் இன்னும் பிரணவியின் அறையில் விளக்கெரியவும் அவளது அறைக்குச் சென்றாள்.

“தூங்கலயா நவி?”

பிரக்ருதியின் குரல் கேட்டதும் எதையோ வேகமாக மறைத்து வைத்தாள் பிரணவி. அதை பிரக்ருதி கண்டுகொண்டாள்.

“ஏய்! எதை மறைக்குற? டாக்டர் உன்னை சால்டை கம்மி பண்ணிக்க சொன்னாங்க… நீ  எனக்குத் தெரியாம சிப்ஸ் எதுவும் சாப்பிடுறியா?”

அதட்டியபடி அவளருகே சென்று கையில் மறைத்து வைத்திருப்பது என்ன என சோதித்தாள் பிரக்ருதி.

பிரணவி வேகமாக மறைத்தபடி “ஒன்னுமில்ல” என்று நகர அவளது கையிலிருந்து நழுவி விழுந்தது போட்டோ ஃப்ரேம் ஒன்று.

பிரக்ருதி அது என்னவென பார்க்க, அங்கே கிடந்தது பிரணவியும் பிருத்வியும் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

காதல் திருமணம் என்பதால் இருவரின் முகத்திலும் காதல் ஜெயித்துவிட்ட பூரிப்பு கொட்டிக்கிடந்தது.

பிரக்ருதி அதை கையில் எடுத்தவள் “மேரேஜ் டைம்ல நீயும் மாமாவும் எவ்ளோ கியூரியாசிட்டியோட ஒவ்வொரு ரிச்சுவலையும் பண்ணுனிங்கல்ல” என்க

“ம்ம்… கல்யாண வாழ்க்கைனா இப்பிடி தான் இருக்கும்ங்கிற ஞானம் அப்ப இல்லையே… தெரிஞ்சிருந்தா அப்பவே சுதாரிச்சிருப்பேன்” என்றாள் பிரணவி.

பிரக்ருதி போட்டோ ஃப்ரேமை அங்கிருந்த மேஜை மீது வைத்துவிட்டு தமக்கையை அமரச் சொல்லிவிட்டுத் தானும் அருகே அமர்ந்தாள்.

“நீ ஏன் கெட்டத பத்தி மட்டும் யோசிக்குற? மாமா உனக்காக எவ்ளோ நல்ல விசயங்களை பண்ணிருப்பார்… அதை யோசி நவி… உங்களோட ரிலேசன்ஷிப் அழகான ரோஜா மாதிரி… அதுல சண்டை சச்சரவுங்கிறதுலாம் முள்ளு மாதிரி… ஐயோ முள்ளு இருக்கேனு ரோஜாவை தூக்கி தூர வீசப்போறியா? இல்ல, முள்ளை உடைச்சு தூர வீசிட்டு ரோஜாவை சொந்தமாக்கப் போறியானு நீயே முடிவு பண்ணிக்க… இப்ப ரொம்ப யோசிக்காம தூங்கு” என்றதோடு அவளை மெத்தையில் படுக்க வைத்து போர்வையை மூடிவிட்டாள்.

பிரணவி அவளை வைத்தக் கண் வாங்கமால் பார்க்க “தூங்கு… இல்லனா பூச்சாண்டி கிட்ட பிடிச்சு குடுத்துடுவேன்” என கண்களை உருட்டி மிரட்டியவள் அவள் சிரிக்கவும் நெற்றியில் முத்தமிட்டாள்.

“இன்னைக்கு ஏர்போர்ட்டுக்குப் போயிட்டு வந்ததுல இருந்து நீ சரியில்ல… என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என தங்கையிடம் வினவினாள் அவள்.

“என்னை பத்தி யோசிக்காம உன் பிசிக்கல் அண்ட் மெண்டல் ஹெல்த்ல கான்சென்ட்ரேட் பண்ணு… எதை நினைச்சும் பயப்படாத… சோட்டிய இந்த உலகத்துக்கு நீ சந்தோசமான மனநிலையோட கொண்டு வரணும்” என பிரணவியும் சரியென தலையசைத்தாள்.

விளக்கை அணைத்தவள் கதவை மூடிவிட்டு தானும் பிரக்யாவும் தங்கியுள்ள அறைக்குள்  பிரவேசித்தாள்.

அங்கே பிரக்யா உறங்கி கொண்டிருந்தாள். அவளருகே கிடந்த மொபைல் மினுக் மினுக்கென மிணுங்கியது. என்னவென எடுத்து பார்த்தால் ஷ்ரவனிடமிருந்து துண்டிக்கப்பட்ட அழைப்புகள் ஐம்பதுக்கும் மேல் வந்திருந்தது.

டேபிள் விளக்கை போட்டவள் பிரக்யாவை எழுப்பலாமென பார்க்க அதற்குள் “குட் நைட்… எதுவா இருந்தாலும் நான் சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்… சண்டை போட்டு டயர்டா இருப்ப… தூங்கு” என வாட்சப்பில் ஷ்ரவனிடமிருந்து செய்தி வந்திருந்தது.

பிரக்யாவும் ஷ்ரவனும் சண்டையிட்டிருக்கிறார்களா? கேள்வியாய் உறங்குபவளைப் பார்த்தாள் பிரக்ருதி.

சோர்ந்த முகம், களைந்த முடி, கண்ணாடியைக் கூட கழற்றாமல் தூங்கி போயிருந்தாள். அதை கழற்றி மேஜை மீது வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள் பிரக்ருதி.

ஏனோ அவளுக்கு உறக்கம் வரவில்லை. சமையலறையில் புகுந்து காபி போட்டு எடுத்துக்கொண்டு பால்கனியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துவிட்டாள். காதுகளில் போட் ப்ளூடூத் ஹெட்செட்.

மொபைலில் ‘என் இனிய பொன் நிலாவே’ என பாடிக்கொண்டிருந்தார் ஜேசுதாஸ்.

பாடலின் வரிகளில் இலயித்திருந்த வேளையிலும் தாங்கள் மூவரில் யாருமே நிம்மதியாக இல்லை என்று எண்ணம் உதயமாக விசித்திரமான வகையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என்னாசை உன்னோரமே
வென்னீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே!

ஜேசுதாஸுடன் ஹம்மிங் செய்தபடியே காபியை அருந்திக்கொண்டு சிந்தனைகளில் தொலைந்து போனவள் உறக்கத்தை தொலைத்து விழித்திருக்க அவளுக்குத் துணையாக மேகமூட்டத்தையும் சிந்தும் மழைத்துளிகளையும் கலைத்துக்கொண்டு ஒளி வீசியது வெண்ணிலவு.

NM Tamil Novel World

📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!

 

Share your Reaction

Loading spinner