“குழந்தைகள் படங்களிலும் ஓ.டி.டி தளங்களிலும் காணும் யாவற்றையும் பாவித்துக் காட்ட ஆசைப்படுவது இயல்பு தான். படங்களில் வரும் வசனங்கள், நடன அசைவுகளை தாங்களும் செய்து காட்ட குழந்தைகள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அவை வயதுக்குப் பொருந்தாத ஆபாசமான கன்டெண்டுகளாக மாறும் போது தான் பெற்றோரின் கண்டிப்பு அவசியமாகிறது. அதோடு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளை மிகை பாலினமயமாக்குவது இயல்பாக நடந்தேறுகிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா”
-சாரதா, தி நியூஸ் மினிட் – 25 பிப்ரவரி 2022
விவேகானந்தா வித்யாலயா பள்ளி…
இருபாலர்கள் படிக்கும் பள்ளி அது. நல்ல கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் போனது. பெரும்பாலும் அங்கே படிப்பவர்கள் நடுத்தரவர்க்கத்து மாணவ மாணவிகளே!
ஸ்ருதியின் வகுப்பான பத்தாம் வகுப்பு ஈ பிரிவில் இன்னும் ஆசிரியை வராததால் மாணவர்கள் தத்தம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
ஸ்ருதியும் அவளது தோழியும் தீவிரமாக இண்ஸ்டாக்ராம் ரீல்ஸ் பிரபலமான கேரள இளம்பெண் ஒருத்திக்கு மாதாமாதம் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சிங் மூலமாகவே மூன்று இலட்சம் வருமானம் வருவதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அந்தப் பொண்ணு அகிராவும் அவ சிஸ்டர் அஹானாவும் புதுசா வந்த எல்லா சாங்ஸும் ரீல்ஸ் பண்ணிடுவாங்க… அவங்களும் நம்மளை மாதிரி ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் தான் தெரியுமா? லாஸ்ட் வீக் அவளோட கங்குபாய் வீடியோக்கு வந்த லைக்ஸ் மட்டும் த்ரீ லாக்ஸ்டி”
ஸ்ருதி வாயைப் பிளந்தாள்.
“அப்ப அவளுக்குச் சீக்கிரமே மூவி சான்ஸ் கிடைச்சிடும்ல ரேஷ்”
“ப்ச்! மூவி சான்ஸை விடு… அவ இப்பவே எவ்ளோ ஃபேமஸ் பெர்ஷனா மாறிருக்கா பாரு… அதுக்குலாம் லக் வேணும்யா”
ஏக்கமாகச் சொன்னாள் ரேஷ் என்ற ரேஷ்மி.
கூடவே “நம்ம கடைசி வரைக்கும் வடிவேலு சந்தானம்னு காமெடி பண்ணிட்டிருந்தா ஃபைவ் கே ஃபாலோயர்ஸ்ல தான் நிப்போம்.. நம்மளும் அதே மாதிரி அப்பப்ப ட்ரெண்ட் ஆகுற சினி சாங்ஸ் வச்சு ரீல்ஸ் போட்டா நமக்கும் ஃபாலோயர்ஸ் வருவாங்க… இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சிங்ல நிறைய சம்பாதிக்கலாம்… ஃப்ரீ அவுட்ஃபிட்ஸ், ஃப்ரீ ஜுவெல்ஸ், அஷசரிஸ், ப்யூட்டி புராடெக்ட்னு பி.ஆர்கு நம்மளை தேடி வருவாங்க ஸ்ருதி” என்றவளின் கண்களில் ஆர்வம் மின்னியது.
ஆனால் ஸ்ருதிக்குத் தான் தயக்கம். ரேஷ்மி குறிப்பிட்ட கேரளப்பெண்ணும் அவளது தங்கையும் கமெண்ட்களில் ஆண்களால் எவ்வாறேல்லாம் வக்கிரமாக வர்ணிக்கப்படுகிறார்கள் என்பதை அவளும் பார்க்கிறாள் தானே!
அவர்களும் வயதுக்குப் பொருத்தமின்றி கண்களில் மோகரசம் சொட்ட சொட்ட இரட்டை அர்த்த பாடல்களுக்கு ரீல்ஸ் செய்கிறார்கள். அதை குறிப்பிடவும்
“க்கும்! சோ வாட் ஸ்ருதி? அந்த மாதிரி ரீல்ஸ் போட்டதால தானே அவங்க ஃபேமஸ் ஆனாங்க? இன்னைக்கு அவங்களைத் திட்டுறவங்க மட்டும் வீடியோவ பாக்காமலா இருப்பாங்க? திட்டிக்கிட்டே அவங்க ரீல்ஸை ஜொல்லு விட்டபடி பாத்துட்டுப் போற ஜென்ட்ஸ் அதிகம்… இப்ப சொல்லு, வியூஸ் அண்ட் ஃபாலோயர்ஸ் முக்கியமா? இல்ல திட்டுறதை நினைச்சு சைலண்ட் ஆகுறது முக்கியமா?”
ஸ்ருதிக்கு அந்தக் கேரளப்பெண்கள் அணியும் ஆடை அணிகலன்கள், செய்யும் முக அலங்காரங்கள், அவர்களின் பிரபலத்துவம் எல்லாம் கண் முன் வந்து செல்ல “வியூஸ் அண்ட் ஃபாலோயர்ஸ் தான் முக்கியம் ரேஷ்” என்றாள் கண்களில் கனவு மின்ன.
இந்த விவாதம் வகுப்பாசிரியை வந்ததும் முடிய அதன் பின்னர் பாடங்களில் மூழ்கினர் அனைவரும்.
பதினோரு மணி இடைவேளையின் போது ரேஷ்மியும் ஸ்ருதியும் என்னென்ன செய்து தங்களின் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்க அதை போகிற போக்கில் கேட்டுவிட்டாள் அவர்கள் வகுப்பிலேயே அழகியும் அறிவாளியுமான மாணவியான அஞ்சனா.
நமட்டுச்சிரிப்புடன் அவர்களைக் கடந்தவள் தனது தோழியர் குழாமிடம் இருவரையும் காட்டி பகபகவென நகைத்தபடி கேலி செய்தாள்.
“அதுங்க பண்ணுர ரீல்ஸே கொடுமை… இதுல அகிரா அஹானா சிஸ்டர்ஸ் ரேஞ்சுக்கு இவங்களுக்கு ஃபாலோயர்ஸ் வரணும்னு ப்ளான் பண்ணுறாளுங்க… இதுங்க காம்ப்ளக்சனுக்கு வடிவேலு காமெடி வச்சு ரீல்ஸ் பண்ணுனா தானே பெர்ஃபெக்டா இருக்கும்”
அவள் குபீரென நகைக்க அவளது தோழிகளும் உடன் சேர்ந்து நகைத்தனர்.
“அதிலயும் ஸ்ருதி பக்கா டாம் பாய்… யூ நோ ஒன் திங்? அவ ஹேண்ட்ஸ்ல இருக்குற ஹேரை கூட ரிமூவ் பண்ணலை” என்றாள் முகத்தை அருவருப்பாக வைத்துக்கொண்டபடி.
“ஆமா! கைப்புள்ள வடிவேலு ரீல்ஸ் ஒன்னு பண்ணுனால்ல, அதுல அவ வடிவேலு மாதிரி பென்சில் மீசை வரைய தேவையே இல்லாத அளவுக்கு அப்பர் லிப்ல குட்டி குட்டியா ஹேர் தெரியுது… இவ அகிரா அஹானா மாதிரி கியூட்டான ரீல்ஸ் ஸ்டார் ஆகப் போறாளாம்… செல்ஃப் க்ரூமிங் பத்தி ஏபிசிடி கூட தெரியாத பட்டிக்காடு”
அவர்கள் கேலி செய்தது ஸ்ருதியின் காதில் விழுந்துவிட அவள் முகம் வாடிப்போனது. இருப்பினும் ரோஷம் பொங்க அவர்களிடம் சண்டையிடச் சென்றாள்.
“தேவையில்லாம என்னை பத்தி பேசாத அஞ்சு… நான் ஒன்னும் உன்னை மாதிரி ஆர்ட்டிஃபீசியல் பியூட்டி இல்ல… சாய்பல்லவி மாதிரி நேச்சுரல் பியூட்டி”
அவள் கூறவும் அந்தப் பெண்கள் சிரித்தனர்.
“வாட்? நீ சாய்பல்லவி மாதிரியா? அவங்க காம்ப்ளெக்சன் என்ன? உன் காபி பவுடர் காம்ப்ளெக்சனும் அதுவும் ஒன்னா? அவங்க ரோஸ் பட் பிம்பிள் மார்க்கும் உன்னோட சாக்லேட் கலர் பிம்பிள் மார்க்கும் ஒன்னா? அவங்களை மாதிரி கர்லி ஹேர் இருக்குறதால நீ உன்னை டார்க் ஸ்கின் சாய்பல்லவினு நினைச்சுக்கிட்டியா ஸ்ருதி? இங்க காமெடி பண்ணுறதை விட்டுட்டு ரீல்ஸ்ல போய் காமெடி பண்ணு… ஹான், மறக்காம வடிவேலு கெட்டப்ல பண்ணு… அது தான் உனக்குப் பொருத்தமா இருக்கு”
அஞ்சனா கேலியாய் சொல்லிவிட்டு தனது இடத்திற்கு சென்றுவிட ஸ்ருதிக்கு அந்தப் பெண்களின் சிரிப்பில் அவமானமாகி விட்டது.
அவளது நிறம், தோற்றத்தைக் குறித்த கேலிப்பேச்சுகள் ஸ்ருதிக்கு ஒன்றும் புதிதில்லை.
கிண்டர் கார்டனில் வெல்கம் டான்ஸ் ஆடும் போது நிறம் மட்டு என்பதற்காக பின்வரிசைக்குத் தள்ளப்பட்ட போதே அது ஆரம்பித்துவிட்டது.
“வெயில்ல விளையாடப்போகாத ஸ்ருதி… இன்னும் கறுத்துடுவ”
“இந்த க்ரீமை போட்டுக்க… ஒன் வீக்ல ஸ்கின் டோன்ல சேஞ்ச் தெரியுமாம்”
“நோ காபி அண்ட் சாக்லேட்ஸ்… கலர் கம்மி ஆயிடுவ”
அன்னையின் இம்மாதிரியான அக்கறை பேச்சுகளும் கட்டுப்பாடுகளும் நொடிக்கொரு முறை அடியே ஸ்ருதி நீ கறுப்பி என சொல்லாமல் சொல்லும்.
“ப்ச்! செண்பகவள்ளியக்கா பேத்தியா இது? அவங்கம்மா மாதிரியே கலர் கம்மி… நம்ம குமார் கலர்ல பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும்”
“ஏன் லைட் கலர் ட்ரஸ் போடுறம்மா? அது உன்னை இன்னும் கறுப்பா காட்டுது பாரு”
“எதுக்கும் பொண்ணுக்கு நகை கொஞ்சம் அதிகமா சேர்த்து வை குமார்… ஏன்னா இந்தக் காலத்துல அழகான பொண்ணுக்கே வரன் கிடைக்குறது குதிரைகொம்பா இருக்கு… உன் மகள் வேற கறுப்பு”
அழகு என்பதே வெள்ளைத்தோல் தான் என்ற ரீதியில் அவளை கீழ்க்கண்ணால் பார்க்கும் உறவுக்காரக்கூட்டம் நீயெல்லாம் பெண்ணாய் பிறந்ததற்கே வருத்தப்பட வேண்டுமென அவளைக் குத்திக் காட்டிய தருணங்கள் ஆயிரம்.
“உன்னோட ஸ்கின் டோனுக்கு இந்த ரெட் கலர் லிப்ஸ்டிக் நல்லாவே இல்ல… நீ நியூட் லிப்ஸ்டிக் போட்டாலும் போட்ட மாதிரியே தெரியாது”
“வாட்? நீ மேக்கப் போடப் போறியா? மேக்கப் போட்டா மட்டும் நீ கலர் ஆகிடுவியா?”
“நீ எவ்ளோ காஸ்ட்லியான க்ரீம் யூஸ் பண்ணுனாலும் கலர் மாற மாட்ட… உனக்கு ஃபேர் அண்ட் லவ்லியே அதிகம்”
தனது வெண்ணிறத்தோலின் கர்வத்தால் ஸ்ருதியின் மனதை உடைத்த தோழி ஒருத்தியின் தத்துவமுத்துகள் இவை.
இவை எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வித அழுத்தத்துக்குள் தள்ளியது தான் உண்மை.
என்னையா கறுப்பு என்று கேலி செய்கிறீர்கள்? என்னைப் பற்றி பிறர் புகழும்படி நான் பிரபலம் ஆகி காட்டுகிறேன் பாருங்கள் என ஆண்டாண்டு காலமாக மட்டம் தட்டப்பட்ட அவளின் மனம் கறுவிக்கொண்டதன் விளைவு தான் அவள் இன்ஸ்டா ரீல்ஸ் உலகில் கால் பதித்ததற்கு காரணம்.
அஞ்சனா சொல்வது போல வடிவேலு, சந்தானம், சூரி என நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவையை வைத்து அவ்வபோது ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு திருப்திப்பட்டுக்கொண்டாள்.
அவளுக்கு இப்போது எட்டாயிரம் ஃபாலோயர்ஸ். மகளின் ஆர்வத்தைக் கண்ட ராதா வீடியோ எடுப்பதற்கு மகளுக்கு உதவியதால் முன்பை விட அவளது ரீல்ஸ்கள் தரமான வீடியோக்களாக அமைந்தது.
இருப்பினும் தன் வயதையொத்த பெண்கள் மாசு மருவற்ற வெண்ணிற சருமத்துடன் இண்ஸ்டா ரீல்ஸில் ஜொலிப்பதை காணும் போதெல்லாம் பெருமூச்சு எழும் அவளிடம்.
இதோ இன்று அஞ்சனா அவளது மனதில் உறைந்து கிடந்த தாழ்வு மனப்பான்மையை எழுப்பி விட்டாள்.
பாவம் அப்போதிலிருந்து ஸ்ருதிக்கு முகமே செத்துவிட்டது.
பள்ளி முடிவடைந்ததும் வீட்டிற்கு கிளம்பியவளின் வாடிய முகம் வீட்டை அடையும் வரை தொடர்ந்தது.
வீட்டை அடைந்ததும் மாடிப்படிகளில் ஏறும் போதே அன்னையும் ஆச்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது அவளது செவியில் விழுந்தது.
“பொம்பளைப்புள்ளை ரூம் இப்பிடியா இருக்கும்னு ஒதுங்க வச்சது தப்பா? அவ கடை பரத்தி போட்டிருந்ததை எல்லாம் ஒழுங்கா எடுத்து அடுக்கி தானே வச்சேன் ராதா”
“நீங்க அடுக்கி வச்சேன்னு ஈசியா சொல்லிடுவிங்க… ஆனா ஸ்ருதி வந்து அது எங்க இது எங்கனு கேட்டா கண்ணு முழி பிதுங்க தேடப் போறது நான் தானே… கைய காலை வச்சுட்டுச் சும்மா இல்லாம ஏன் இந்த வீண்வேலை?”
ஆச்சி அமைதியாகிவிட ஸ்ருதியும் வீட்டுக்குள் வந்தாள். அவளின் சோர்ந்த முகத்துக்கான காரணம் பசியென எண்ணிய ராதா மகளிடம் உடை மாற்றிவிட்டு சிற்றுண்டியைச் சாப்பிடும்படி கூற அவளோ சுரத்தின்றி தனது அறைக்குள் நுழைந்தாள்.
தந்தை அவளுக்காக வாங்கி கொடுத்த ஆளுயர கண்ணாடி வைத்த பீரோவின் முன்னே சென்று நின்று கொண்டவள் புத்தகப்பையை படுக்கையில் உதறினாள்.
அறையைச் சுற்றிலும் கண்களைச் சுழலவிட்டவள் தனது பார்வையைக் கண்ணாடியில் தெரியும் தனது பிம்பத்திடம் நிலைக்க விட்டாள்.
கொஞ்சம் குள்ளம், சதைப்பற்றான உடல்வாகு, சுருள் சுருளான கூந்தல், பேசும் பெரிய கண்கள், இன்னும் குழந்தைத்தனம் மாறாத முகம்.
ஆனால் அவளது கருத்தில் பட்டதென்னவோ அவளது சரும நிறம் தான். முகத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டவள் தனது கரங்களை நோட்டமிட்டாள்.
அஞ்சனாவின் தோழி சொன்னது போல கரங்களில் முடி ஆங்காங்கே இருந்தது. கண்ணாடியின் அருகே சென்று மேலுதட்டை உற்றுப் பார்த்தவளுக்கு அங்கேயும் பூனை ரோமம் தென்பட மொத்தத்தில் தான் அழகியே இல்லை என்று நொந்தபடி படுக்கையில் அமர்ந்தாள் அந்தச் சின்னப்பெண்.
அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முகப்பூச்சுகள் அவளைப் பார்த்து சிரித்தது.
பேசாமல் தனது தோலை அகற்றிவிட்டு வெண்ணிறத்தோலை ஒட்டிக்கொண்டால் தானும் அழகியாகிவிடுவோம் தானே என்று பைத்தியக்காரத்தனமாகச் சிந்தித்தது அவளது குழந்தை மனம்.
“ஸ்ருதி டியூசனுக்குப் போகாம என்ன பண்ணுற?”
அன்னையின் குரல் காதில் விழவும் எழுந்தவள் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு இவ்வளவு நேரம் அவளது ஸ்டடி டேபிளில் உறக்கத்திலிருந்த மொபைலை உயிர்ப்பித்தாள்.
டேட்டாவை ஆன் செய்ததும் டொய்ங் டொய்ங் சத்தம் தான். வாட்சப், முகப்புத்தகம், இண்ஸ்டாகிராம் என அனைத்திலிருந்தும் நோட்டிபிகேசன்கள் வந்து குவிந்திருந்தன.
ஒவ்வொன்றாக பார்த்து முடித்தவளின் கருத்தைக் கவர்ந்தது அவளது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அவள் பதிவிட்டிருந்த ரீல்ஸுக்கு வந்த ஒரு கமெண்ட்.
“வாவ்! ஹிலாரியஸ் ஸ்ருதி… நான் அஜய்… உன்னோட ரீல்ஸ் எல்லாமே ஃபெண்டாஸ்டிக்… நான் உன்னோட பெரிய ஃபேன் தெரியுமா? நம்ம ஒரே டியூசன்ல தான் படிக்குறோம்… என் கமெண்டை படிச்சேனா ஒரு ஹார்ட்டின் ப்ளீஸ்”
அதைப் படித்ததும் இவ்வளவு நேரம் இருந்த சோர்வு சற்றே அகன்றது. வேகமாக அந்தக் கமெண்டுக்குப் பக்கத்திலுள்ள இதயவடிவத்தை அழுத்தினாள் ஸ்ருதி. ஆனால் பதிலளிக்க மனமில்லை. ஏதோ தடுத்தது.
உடனே அவனது புரொபைலை சென்று பாரேன் என்று மனசாட்சி தூண்டி விட்டது.
‘அஜய்_தி ரைடர்
ப்ரவுட் டு பி 2கே கிட்
காபிமேனியா
‘ஃபர்ஸ்ட் க்ரை ஆன் 12.02.2007
டார்க் சோல் எஸ்கேப்ட் ஃப்ரம் தி ஹெல்’
இப்படி வினோதமான பயோவோடு அந்த அஜய்யின் புரொபைல் காணக் கிடைத்தது.
“ஸ்ருதி என்ன பண்ணுற?”
இரண்டாம் முறையாக ஒலித்தது ராதாவின் குரல்.
“ஒன்னுமில்லம்மா” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தவள் டியூசனுக்கு எடுத்துச் செல்லும் பையில் தனது மொபைலை பத்திரப்படுத்தினாள்.
மடமடவென கூந்தலை போனி டெயிலாக்கி கொண்டவள் புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு தனது அறையைப் பூட்டினாள்.
ராதா விளக்கேற்றிக் கொண்டிருக்க “நான் கிளம்புறேன்மா” என்று சொல்லிக்கொண்டு அடுத்த தெருவிலிருக்கும் தனது டியூசன் சென்டருக்குக் கிளம்ப காலெடுத்து வைத்தவள் வராண்டாவில் அமர்ந்திருந்த ஆச்சியைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
“என் ரூமை நீங்க தான் க்ளீன் பண்ணுனிங்களா ஆச்சி? ரொம்ப நீட்டா இருக்கு… தேங்க்யூ”
தலை சரித்துச் சொல்லிவிட்டு செண்பகவள்ளியை அணைத்தவள் டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பினாள்.
அவளின் இந்தத் திடீர் உற்சாகத்துக்குச் செண்பகவள்ளிக்குக் காரணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு காரணம் அவளது வீடியோவுக்கு வந்த அஜய்யின் கமெண்ட் தான் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.
பாராட்டுகள் மனிதரை உற்சாகப்படுத்தும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆனால் முகஸ்துதியாக வழங்கப்படும் புகழ்ச்சியால் எந்தப் பலனுமில்லை என்பது பாவம் ஸ்ருதிக்குத் தெரியாதல்லவா!
தான் இப்போது அடைந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் வெறும் கானல் தான் என்பதை அறியாத அந்தப் பதின்வயது சிட்டு தனது மிதிவண்டியை அழுத்திக்கொண்டு டியூசன் சென்டரை நோக்கி பறந்துவிட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

