“நிறைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் சமூக வலைதளக்கணக்குகள் அவர்களாலோ அவர்களின் பெற்றோராலோ கையாளப்படுகிறது. இதனால் குழந்தைகள் ட்ரெண்டாக உள்ள நடனங்கள், நகைச்சுவை உதட்டசைவு நடிப்பு போன்றவற்றை தயக்கமின்றி செய்வது வாடிக்கையாகி விட்டது. ஒரு கட்டத்தில் தங்களின் கணக்குகளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பிரபலத்துவம் ஏற்படுவதும் தங்களது வயதுக்குப் பொருந்தாத கன்டெண்டுகளையும் அவர்கள் நடிக்க காரணமாகி விடுகிறது. சிலரது பெற்றோரே குழந்தைகளை ஊடக வெளிச்சத்தில் தள்ளுவதற்காக அவர்களை போக பொருளாகச் சித்தரிக்கும் மிகை பாலினமயமாக்கும் வீடியோக்களைச் செய்யத் தூண்டுகின்றனர் என்பது வேதனை. பெற்றொருக்கு அத்தகைய எண்ணமில்லை என்றாலும் இணையத்தில் உலாவும் குழந்தைகளின் வீடியோக்களை சில வக்கிரமனம் படைத்த கயவர்கள் ஆபாசவீடியோக்களாக மார்ஃபிங் செய்து குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் மிரட்டிப் பணம் பறிக்கும் கொடூரமும் ஆங்காங்கே நடந்தேறுகிறது”
-சாரதா, தி நியூஸ் மினிட் – 25 பிப்ரவரி 2022
சென்னை, பட்டரவாக்கம்…
ஆட்டோவில் வந்து இறங்கினர் முத்துகுமரனும் செண்பகவள்ளியும். பட்டரவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் குடியிருப்பின் முன்னே இறங்கியவர்கள் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.
மொத்தம் ஆறு வீடுகள் மட்டும் இருக்கும் குடியிருப்பு அது. வீட்டின் உரிமையாளர் திருப்பூரில் இருக்க முத்துகுமரன் தான் அங்கே குடியிருப்பவர்களில் அதிக நாட்கள் இருப்பவர் என்பதால் அவன் மீது நம்பிக்கை வைத்து மத்த குடித்தனக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியை அவனிடம் ஒப்படைத்திருந்தார்.
“இருபத்து நாலு மணிநேரமும் தண்ணி வரும்மா… மெட்ரோ வாட்டர் கனெக்சனும் இருக்கு… பக்கத்துலயே சூப்பர் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் இருக்கு… பக்கத்துல இருக்குற சி.பி.எஸ்.ஈல தான் நம்ம ஸ்ருதி படிக்குறா… அம்மா உணவகம் கிட்ட பஸ் ஏறணும்னு சொன்னேன்ல அங்க தான் அவளோட ஸ்கூல் வேன் வரும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வீட்டைப் பற்றி விலாவரியாக சொல்லிக்கொண்டு தாயாரை தனது வீடு அமைந்திருக்கும் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றான் முத்துகுமரன்.
மாடி ஏறியதும் முதல் வீடு அவருடையது. நீண்ட வராண்டாவில் சிலுசிலுவென காற்று அடித்தது. ஆனால் வராண்டாவின் பக்கச்சுவரில் கிரில் ஏதுமில்லை.
“என்னப்பா இதுல கிரில் இல்ல? குழந்தைங்க இருந்தா கஷ்டமே”
மகனிடம் சொல்லிக்கொண்டு வந்தவர் வீட்டின் கதவு திறந்து ராதாவின் முகம் தெரியவும் அமைதியானார்.
“வாங்கத்தை”
வெறும் வார்த்தையாய் உதிர்த்தால் எங்கே தனது அதிருப்தி தெரிந்துவிடுமோ என யோசித்து புன்னகையோடு இழுத்துக் கூறினாள் ராதா.
முன்பு பார்த்ததற்கு இப்போது கொஞ்சம் நிறம் கூடியிருந்தாள். அவளிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டான நீளக்கூந்தல் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.
“நல்லா இருக்கியா ராதா?” என சுமூகமாக விசாரித்தபடி உள்ளே நுழைந்த செண்பகவள்ளியின் கண்கள் பேத்தியைத் தேடியது.
அவளது அறையிலிருந்து துள்ளிசைப்பாடல் ஒன்று சத்தமாக ஒலித்தது. வரிகள் கொஞ்சம் மோசம் தான். அவற்றில் பாதி புரியவில்லை என்பது வேறு விசயம்.
அந்தக் காலப்பாடல்களில் பாடல் வரிகளை உச்சரிக்கும் குரல்களின் ஆதிக்கம் அதிகம். ஆனால் இன்றைய பாடல்களில் அளவுக்கு மீறிய இசை குரல்களை மறைக்கிறது.
டம் டம்மென்ற சத்தம் மட்டும் தான் என்று செண்பகவள்ளி எண்ணமிடுகையிலேயே பேத்தியின் அறைக்கதவு திறந்து அவள் பள்ளி சீருடையோடு வெளியே வந்தாள்.
வந்தவள் ஒரு காலத்தில் அவளது அன்னையின் நிறமான கருமைக்கும் மாநிறத்துக்கும் இடையில் சுருட்டைக்கூந்தலுடன் நிற்கவும் செண்பகவள்ளிக்கு வருத்தமோ வருத்தம்.
ஒரே ஒரு பேத்தி! கொஞ்சம் நிறமாக இருந்திருந்தால் நன்றாக இருக்குமே!
“ஹாய் ஆச்சி” என்றபடி வந்தவளின் நிறம் குறித்த ஆற்றாமையை ஒதுக்கித் தள்ளிவிட்டு அணைத்துக் கொண்டார் செண்பகவள்ளி. அவளிடம் ஏதோ பேச முயல
“ஸ்ருதி ஸ்கூல் வேன் வந்துடும்… சீக்கிரம் தலைய காய வை” என்று இடையிட்டது ராதாவின் குரல்.
தன் மகளை மாமியார் பார்த்த விதம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பார்த்த அதே விதம் தான் என்று கூடவா அவளுக்குப் புரியாது!
முத்துகுமரன் தாயின் முகம் சோர்வுறவும் “நீ உன்னோட லக்கேஜை ஸ்ருதி ரூம்ல வச்சுக்கம்மா… அவ ரூம்ல குளிச்சுடு… ராதா அம்மாக்கு காபி போடு” என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினார்.
ராதா சமையலறை பக்கம் நகர செண்பகவள்ளியும் பேத்தியின் அறைக்குள் சென்றார்.
அங்கே அவளது உடைமைகள் சிதறி கிடக்க படுக்கையிலோ புத்தகங்கள் இறைந்து கிடந்தது.
மேஜை விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதை அணைக்க சென்றவர் மேஜை மீது சார்ஜ் போடப்பட்டிருந்த ஸ்ருதியின் மொபைல் தொடுதிரை ஒளிரவும் என்னவென பார்த்தார்.
ஆங்கியலத்தில் பெயர் இருந்ததால் ஓரளவுக்கு வாசித்தவர் ‘நிவாஸ்’ என்று உச்சரித்து முடித்து மொபைலை எடுத்த போது வெடுக்கென அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள் ஸ்ருதி.
இவள் எப்போது இங்கே வந்தாள் என கேள்வியாய் செண்பகவள்ளி நோக்கும் போதே
“என் திங்சை எடுக்காதிங்க ஆச்சி… அம்மா கூட என் மொபைலை எடுத்துப் பாக்க மாட்டாங்க” என்று சிடுசிடுத்துவிட்டு “ஹலோ சொல்லு நிவாஸ்” என்றபடி வெளியேறிவிட்டாள்.
அவள் வராண்டாவில் நடந்தபடி பேசுவதை பார்த்த செண்பகவள்ளிக்கு இன்றைய தலைமுறை தங்களுக்கென ஒரு எல்லை வகுத்துக்கொண்டு தான் நெருங்கிய உறவுகளிடமே பழகுகின்றனர் என்பது புரிந்தது.
மெதுவாக தனது உடைமைகள் நிரம்பியிருந்த பேக்கைத் திறந்து துண்டு, சோப்பு, மாற்றுடைகளை எடுத்துக் கொண்டவர் குளிக்கச் சென்றார்.
தண்ணீர் சில்லென்று இருந்தது. இரயிலில் வந்த களைப்பு தீர துவைத்து குளித்து முடித்தவர் ஈரத்துணிகளை ப்ளாஸ்டிக் வாளியில் போட்டுக்கொண்டு துணி உலர்த்த வராண்டாவை அடைந்த போது ராதா கணவனிடம் கிசுகிசுப்பது தெரிந்தது.
“இவங்க துணி துவைக்குறதுக்கே ஒரு டேங்க் தண்ணிய காலி பண்ணிருப்பாங்க போல… வாரத்துல ஒரு நாள் மெஷின்ல போட்டுக்கலாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடுங்க”
அடுத்து ஸ்ருதியின் குரல்.
“ஆச்சி என்னோட மொபைலை எடுக்காங்கப்பா… எனக்கு இதுல்லாம் சுத்தமா பிடிக்கல… அடுத்தவங்க ப்ரைவேசில தலையிடக்கூடாதுனு ப்ளீஸ் அவங்க கிட்ட சொல்லிடுங்க”
செண்பகவள்ளிக்குச் சுருக்கென்றது. பதினைந்து வயதிலேயே தான், தனது என பேசத் தெரிந்திருக்கிறது இத்தலைமுறைக்கு என்று பெருமூச்சு விட்டபடி துணியைக் கொடியில் போட்டு க்ளிப் மாட்டியவர் வீட்டுக்குள் வர
“சாப்பிட வாம்மா” என்றார் முத்துகுமரன்.
வாளியைக் குளியலறையில் வைத்துவிட்டு நரைகூந்தலை நுனியில் முடிச்சிட்டவர் நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு உணவுமேஜைக்கு வந்தார்.
ராதா அவருக்கு ஒரு தட்டை வைத்து இட்லியும் சாம்பாரும் ஊற்ற சாப்பிட ஆரம்பித்தவர் பேத்தி இன்னும் விரித்த கூந்தலோடு இருக்கவும்
“இன்னும் ஜடை பின்னலையா ஸ்ருதி? ஆச்சி கட்டி விடவா?” என்று பாசமாக கேட்க
“வேண்டாம் ஆச்சி… நானே கட்டிப்பேன்” என்றவாறு இட்லிகளை விழுங்கியவளின் கண் முழுவதும் மொபைலில் தான்.
ராதா செண்பகவள்ளிக்குச் சட்னியை ஊற்றியவள் “வீடு காலி பண்ணுறப்ப உங்க மருமகள் மகா வந்திருப்பாளே” என்று இழுக்க
“ஆமா ராதா… லெட்சுமி இல்லைனா எனக்கு ஒரு கை உடைஞ்ச மாதிரி ஆகியிருக்கும்… சுறுசுறுப்பா எல்லா பாத்திரத்தையும் கட்டி லக்கேஜை எடுத்து வச்சு எல்லா வேலையையும் செஞ்சு முடிச்சிட்டா” என்றார் செண்பகவள்ளி வெளிப்படையாக.
அவர் பேச பேச ராதா முத்துகுமரனை முறைப்பதை அந்த மூதாட்டியின் மூளை புரிந்துகொள்ளவில்லை.
ஸ்ருதி சாப்பிட்டதும் கிளம்பிவிட முத்துகுமரனும் எழுந்து கொண்டார்.
செண்பகவள்ளி சாப்பிடும் போதே ராதா அவனை அறைக்குள் அழைத்து கிசுகிசுத்தாள்.
“என்னமோ அவ வரமாட்டானு சொன்னீங்க, ஆனா அந்த மகாராணி வந்திருக்கா போலயே”
“அம்மாக்கு ஒத்தாசை பண்ணுறதுக்கு வந்தா ராதா”
“இதை நான் நம்பணுமா?”
“நீ நம்புனாலும் நம்பலனாலும் எனக்குக் கவலை இல்ல”
“நீங்க என்னைக்கு என்னைப் பத்தி கவலைப்பட்டிருக்கீங்க? உங்களுக்கு எப்பவும் அவளைப் பத்தி தானே நினைப்பு”
“என்ன பேசுறனு புரிஞ்சு பேசு ராதா… நம்ம ஒன்னும் புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல… நம்ம மகளுக்கே பதினைஞ்சு வயசு ஆயாச்சு… இன்னும் உன் சந்தேகம் ஓயல”
“எப்பிடி ஓயும்? உங்கம்மாக்கு என்னைக் கண்டாலே ஆகாது… ஆனா அந்த மகராசினா மட்டும் இனிக்கும்… என்னைப் பொண்ணு பாக்குறப்ப என்ன சொன்னாங்க தெரியுமா? பொண்ணோட நிறம் மட்டு தான்… என் நாத்தனார் மக ஒருத்தி செவசெவேர்னு கிளி மாதிரி இருப்பா… அதை விட்டுட்டு உங்க பொண்ணை கேட்டதுக்குக் காரணமே எங்க குடும்பம் மரியாதையான குடும்பம்னு தானாம்… அதுக்கு அப்புறமும் எத்தனை தடவை என்னை மாதிரி கருங்காக்காவ உங்க தலையில எங்கப்பா அம்மா கட்டி வச்சிட்டாங்கனு குத்தி காட்டிருப்பாங்க? அவங்களைப் பாக்குறப்ப எனக்கு அது தான் ஞாபகம் வருது”
“பழசை பேசாத ராதா”
முத்துகுமரன் பற்களைக் கடிப்பது கேட்டது செண்பகவள்ளிக்கு.
“உங்கம்மாவ இங்க கூட்டிட்டு வரலைனா நான் ஏன் பழசைப் பேசப் போறேன்? அவங்க நம்ம ஸ்ருதியையும் என்னைப் பார்த்த மாதிரியே பாக்காங்க… உங்க கவனத்துல அது விழலையா?”
“காமாலை நோய்க்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்… உனக்கு எங்கம்மாவ பிடிக்காது… அதான் அவங்க சாதாரணமா பாக்குறது கூட உனக்குத் தப்பா தெரியுது”
இருவரது சண்டையைக் கேட்டதும் செண்பகவள்ளிக்கு தனது வாழ்க்கை குறிப்பேட்டின் இரண்டாம் எழுத்துப்பிழை நினைவுக்கு வந்தது.
அது தான் நிறம் கம்மி என்று ஆரம்பநாட்களில் ராதாவை மட்டம் தட்டியது.
“என்ன செண்பா, உன் மகன் கலருக்கு வேற பொண்ணா கிடைக்கல? பொண்ணு மாநிறம்னு சொன்னாங்க… ஆனா கருப்பால்லா இருக்கா… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து போன கட்சிக்கொடி மாதிரி இருக்கும்”
இம்மாதிரியான வார்த்தைகள் செண்பகவள்ளியை அன்று உசுப்பேற்றிவிட்டது. அதன் விளைவு மருமகளிடம் வன்மத்தைக் கொட்டி அவளை மட்டம் தட்டினார்.
அதன் விளைவு தான் இன்று வரை ராதாவின் மனக்குறை. கூடவே மகாலெட்சுமியைச் சுட்டிக்காட்டி அடிக்கடி மட்டம் தட்டியதால் ராதாவுக்கு மகாலெட்சுமி என்றாலே எட்டிக்காய். போதாக்குறைக்கு முத்துகுமரன் வேறு ஒரு காலத்தில் மகாலெட்சுமியை நேசித்ததை ஒளிவு மறைவின்றி கூறிவிட அன்று ஆரம்பித்தது கருத்து வேறுபாடு. அது இன்று வரை தொடர்கிறது.
அதற்கு விதை போட்டவர் செண்பகாதேவி அல்லவா! எனவே அமைதியாக வராண்டா பக்கம் ஒதுங்கிவிட்டார் அவர். முத்துகுமரனும் தொழிற்சாலைக்குக் கிளம்பிவிட்டான்.
அங்கே ராதாவோ மனக்குமுறலுடன் நின்று கொண்டிருந்தாள்.
அவள் மனதில் ஏனோ கணவன் மீது நம்பிக்கை வர மறுத்தது. தனது நிறத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு கணம் கூட முத்துகுமரனை நம்பி விடாதே என்று அவளுக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருந்தது.
அதிலும் ஸ்ருதி தன்னைப் போலவே மாநிறத்தில் பிறந்துவிட நொந்து போனாள் ராதா.
குழந்தையைப் பார்த்ததும் செண்பகவள்ளி சொன்னதும் அதே வார்த்தை தான்.
“ஹூம்… குமாரை மாதிரி பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும்”
அன்றிலிருந்து ஸ்ருதியை நிறமாக்க என்னென்னவோ செய்து பார்த்தாள் ராதா. நலங்குமாவில் ஆரம்பித்து எத்தனையோ மாவுகளை அரைத்துப் பூசியும் பார்த்தாள். வெயிலில் விளையாட அனுமதிக்கமாட்டாள்.
காபி குடித்தால் நிறம் கறுத்துவிடும் என்று யாரோ கூற காபி கூட கிடையாது ஸ்ருதிக்கு. மார்க்கெட்டில் விற்கும் அனைத்து முகப்பூச்சு க்ரீம்களுக்கும் சோதனைக்கூடம் ஸ்ருதியின் முகம் தான்.
ஆனால் குழந்தை அவளது இயல்பான நிறத்திலேயே வளர அவளது நிறக்குறைபாட்டை தாண்டி ஸ்ருதியை ஜொலிக்க வைக்க என்ன செய்யலாம் என்ற சிந்தனையிலேயே அவளின் வாழ்நாட்கள் இப்போதெல்லாம் கழிகிறது.
மகள் ஒவ்வொரு முறை இண்ஸ்டா ரீல்சை நடித்துக் காட்டும் போதும் ராதாவின் முகம் பெருமிதத்தில் மிளிரும். என் மகளுக்கு நிறம் கம்மி தான். ஆனால் அவளது நடிப்புத்திறமை அபாரம் என்ற கர்வம் கூட பிறந்தது.
இப்போதெல்லாம் ஸ்ருதிக்கு இண்ஸ்டாவில் ஃபாலோயர்கள் கூட கூட, மகள் ரீல்ஸில் நடிக்க ராதா தடை சொல்லுவதே இல்லை. அவளை ஊக்குவிக்கவும் செய்தாள்.
அப்படியாவது தனது மகள் பிரபலமாகட்டுமே என்ற ஆசை. ஆனால் அவளது இந்த ஆசை கானல் நீரைப் போன்றது என்று இப்போது அவளுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் ஊடகவெளிச்சம் யார் மீதும் நிரந்தரமாக விழுவதில்லை என்பது புரியாத அந்தப் பேதை மகளை எண்ணிக் கனவு கண்டுகொண்டிருந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

