கைலாசநாதன் வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார்.
“குளிச்சிட்டு வந்துடுறேன். எனக்குக் காபி மட்டும் போட்டு வை காமாட்சி”
காமாட்சியின் முகம் சோர்ந்து போயிருப்பதைக் கவனித்தபடியே குளிக்கப்போனவர் மாற்றுடை தரித்து வந்தபோது டபரா செட்டில் நீட்டப்பட்டது காபி.
அதை வாங்கிக்கொண்டவர் காற்றாட வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டு “நீயும் வா காமாட்சி. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று பீடிகை போட, காமாட்சியும் வந்து கணவர் அருகில் அமர்ந்தார்.
“உன் முகம் ரெண்டு நாளா சரியில்ல. என்னாச்சு காமாட்சி? உடம்பு எதுவும் சரியில்லையா? போன மாசம் மூட்டுவலினு சொன்னியே. நம்ம வேணும்னா எலும்பு டாக்டரைப் பாத்துட்டு வந்துடுவோமா?”
அக்கறையோடு கேட்டவரிடம் சோர்வோடு மறுத்தார் காமாட்சி. இரு தினங்களாக அவரை வதைப்பது உடல்வாதை இல்லையே! அந்த வாதை மனதை இரணப்படுத்துவதைக் கணவரிடம் பகிரவும் தயக்கமாக இருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்னனு சொல்லு காமாட்சி. இனிமே உன்னை நானும் என்னை நீயும்தானே கவனிக்கணும்? உடம்புக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் முதல்லயே டாக்டர் கிட்ட போயிடணும்னு தேவா சொல்லுவா. லேட் பண்ண பண்ண நமக்குத்தான் கஷ்டம்”
“ஹூம்! உடம்புக்கு என்னங்க? கல்லு மாதிரி இருக்கு. மனசுதான் தொட்டாலே உடையுற கண்ணாடி மாதிரி ஆகிப்போச்சு. அதனால ஈசியா அடுத்தவங்க வார்த்தை அதை உடைச்சிடுது” என்றார் காமாட்சி.

காபி அருந்துவதை நிறுத்தினார் கைலாசநாதன். அவரது விழிகளில் அத்துணை கூர்மை! இத்தகைய கவலையோடு காமாட்சி ஒரு நாள் கூட அவரிடம் பேசியதில்லை.
“ரெண்டு நாளுக்கு முன்னாடி சம்பந்தி மதினி கூட சேர்ந்து ரங்கநல்லூர் சிவன் கோயில் அன்னாபிஷேகத்துக்குப் போயிருந்தேன். அங்க….” தடுமாறியது காமாட்சியின் குரல்.
“என்ன நடந்துச்சு? சொல்லு காமாட்சி”
“அங்க முல்லைனு ஒரு அம்மாவ பாத்தேன். கனகு மதினி வயசுதான் இருக்கும் அவங்களுக்கும். மதினி கூட இருந்தப்ப என் கிட்ட அவங்க பேசல. என்னைப் பரிதாபமா பாத்தாங்க. மதினி பிரசாதம் வாங்க போனப்ப என் கிட்ட வந்து பேசுனாங்க. அவங்க கூட ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்தப் பொண்ணு நம்ம தேவா கல்யாணத்துக்குக் கூட வந்தா”
“இதுக்கும் உன் சோர்வுக்கும் என்ன சம்பந்தம்?”
“அந்தம்மாவோட மகளுக்கும் நம்ம மாப்பிள்ளைக்கும் முன்னாடி காதல் இருந்துச்சாம். மாப்பிள்ளை அந்தப் பொண்ணு கூட பழகிட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டாராம். ரெண்டு பேரும் திருநெல்வேலில சுத்தாத இடமே இல்லைனு அந்தப் பொண்ணும் சொல்லிச்சுங்க. எனக்கு மனசு தாங்கல. நம்மளும் ஒரு பொம்பளைப்புள்ளைய பெத்திருக்கோமே”
கலக்கத்தோடு அவர் பேசவும் குடித்துக்கொண்டிருந்த காபியை அப்படியே திண்ணையில் வைத்துவிட்டார் கைலாசநாதன்.
“நீ இப்ப என்ன சொல்ல வர்ற?” என்று காமாட்சியிடம் கேட்டார்.
“அது… நம்ம கிட்ட சம்பந்தம் பேசுனப்ப மதினியும் அண்ணனும் இதைச் சொல்லிருக்கணுமேங்க. ஏன் சொல்லலை? அப்ப தப்பு அவங்க பக்கம் தானே?”
“காமாட்சி!”
கைலாசநாதனின் குரல் இறுகி ஒலித்தது. அதைக் கேட்டதும் காமாட்சிக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“நம்ம மாப்பிள்ளைய சந்தேகப்படுறியா? அவர் தங்கம். அவர் வயரிங் பண்ணுற இடத்துல நான் வேலை பாத்திருக்கேன். எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பாக்காத ஆள் நம்ம மாப்பிள்ளை”
“அப்ப அந்தம்மாவும் பொண்ணும் பொய் சொல்லுறாங்கனு சொல்ல வர்றிங்களா? இந்த விசயத்துல யாரும் பொய் சொல்லுவாங்களா?”
“எனக்கு அதுல்லாம் தெரியாது. மாப்பிள்ளை அப்பிடி ஒரு பொண்ணைக் கை கழுவி விடுறவர் இல்ல. இன்னொரு தடவை யாரோ எதுவோ சொன்னாங்கனு நம்ம மாப்பிள்ளைய தப்பா நினைக்காத”
“பெத்த மனசு தவிக்குதுங்க. உங்களுக்கு அது புரியாது. எனக்குத் தேவா வாழ்க்கைய நினைச்சா பயம் வராதா? ரெண்டு நாளா ஒரு பொட்டுத் தூக்கம் இல்லாம அல்லாடுறேன். அந்த முல்லையம்மா என்ன சொன்னாங்க தெரியுமா? மாப்பிள்ளை மனசுக்குள்ள இன்னும் அவங்க பொண்ணு மேல பிரியம் இருக்குதாம். ரெண்டு தடவை அவங்க காதல் பிரிஞ்சு சேர்ந்த மாதிரி மூனாவது தடவையும் சேர வாய்ப்பிருக்குனு சொன்னாங்க. அப்ப நம்ம பொண்ணு வாழ்க்கை என்னாகும்?”
“காமாட்சி அந்தம்மாதானே அவங்க பொண்ணை மாப்பிள்ளை கைவிட்டுட்டார்னு உன் கிட்ட குறை சொன்னாங்க. அப்பிடி கைவிட்டவர் ஏன் இன்னும் மனசுல அவளை வச்சிருக்காராம்? அவங்க பேச்சுல உள்ள முரண் உனக்குப் புரியலையா காமாட்சி? அவங்க பொய் சொல்லுறாங்க”
“சொந்தப் பொண்ணு பத்தி யாரும் பொய் சொல்லுவாங்களா?”
“நீ கண்டதையும் நினைச்சு பயப்படாத காமாட்சி”
கைலாசநாதன் அதோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால் காமாட்சியால் அவ்வளவு எளிதில் முல்லை சொன்ன எதையும் அலட்சியம் செய்ய முடியவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற அன்னை அல்லவா! அவரது இந்த மனவுளைச்சல் உடல்நிலையைப் பாதிக்குமளவுக்குப் போனது.
ஆம்! சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இருந்ததால் இரத்த அழுத்தத்தில் உண்டான ஏற்ற இறக்கம் வேலை செய்துகொண்டிருந்த சமயத்தில் மயக்கத்தை வரவழைத்துவிட, அவர் தரையில் விழுந்து நெற்றியில் அடிபட்டு, அந்தக் காயத்தால் விரயமான உதிரம் அவரை மருத்துவமனை படுக்கையில் தள்ளிவிட்டது.
செய்தி கேள்விப்பட்டதும் துடித்துப் போய்விட்டாள் தேவயானி. ரங்கநல்லூரில் இருக்கும் சிறிய கிளினிக் ஒன்றில்தான் கைலாசநாதன் காமாட்சியைச் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். அங்கே வந்தவள் படுக்கையில் இருந்த அன்னையைப் பார்த்ததும் கண் கலங்கினாள்.
“மயக்கம் போட்டு விழுற அளவுக்கு ஏன்மா கவனமில்லாம இருந்த? ஹெல்த்தை கவனிக்க மாட்டியா?”

“எப்பவும் உள்ளதுதானே தேவா. கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன்”
காமாட்சி பேசிக்கொண்டிருக்கையிலேயே செவிலியோடு வந்தார் கைலாசநாதன்.
“அவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏறி முடிஞ்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க சார். மாத்திரை எல்லாம் இதுல இருக்கு. வேளை தவறாம சாப்பிடணும்”
செவிலி காமாட்சியின் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பைப் பரிசோதித்துவிட்டுக் குறித்துக்கொண்டார். பின்னர் அவர் வெளியேறியதும் கைலாசநாதன் மகளைச் சோர்வோடு பார்த்தார்.
“நீயாச்சும் உன் அம்மைக்குச் சொல்லிப் புரிய வை தேவா. தேவயில்லாததை யோசிச்சு மனசைக் குழப்பிக்கிட்டு உடம்பைக் கெடுத்துக்குறா”
“என்னப்பா பிரச்சனை?” வருத்தத்தோடு கேட்ட மகளிடம் அங்கே வைத்து எப்படி பிரச்சனையை விளக்குவதெனப் புரியாமல் இருவரும் திகைத்தார்கள்.
“சரி! வீட்டுல போய் பேசிக்கலாம்” எனத் தேவயானியே சொல்லிவிட நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
சொன்னது போலவே வீட்டுக்கு வந்ததும் பிரச்சனை என்னவெனத் தேவயானி வினவினாள். மாத்திரையை விழுங்கிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்திருந்த காமாட்சிக்குத் தொண்டை கட்டிக்கொண்ட உணர்வு. எப்படி மகளிடம் பேச்சை ஆரம்பிப்பதெனத் தெரியாமல் திகைத்தார்.
‘உன் கணவன் முன்பே ஒருத்தியைக் காதலித்துக் கைவிட்டானா?’ என்று ஒரு அன்னையால் எப்படி மகளிடம் கேட்க முடியும்!
கைலாசநாதன் அப்படி தயங்கவில்லை. தேவையில்லாத ஒன்றை எண்ணி மனைவி வருந்தி உடல்நிலையைக் கெடுத்துக்கொண்டதாக மகளிடம் பொதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“அப்பிடி என்ன விசயம்? பொடி வச்சு பேசாம டேரக்டா சொல்லுங்கப்பா. என் கிட்ட மறைக்குற அளவுக்கு என்ன இருக்கு? கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்காக இந்த வீட்டுல நடக்குற சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லனு நினைக்குறிங்களாப்பா?”
கைலாசநாதன் பதறிப்போனார்.
“அப்பிடில்லாம் இல்லம்மா. என்ன நடந்துச்சுனா…” என்று ஆரம்பித்தவர் முல்லையையும் பவித்ராவையும் ரங்கநல்லூர் சிவன் கோவிலில் காமாட்சி பார்த்ததிலிருந்து ஆரம்பித்து அவர்களது பேச்சை எண்ணி உடலை வருத்திக்கொண்டது வரை அனைத்தையும் மகளிடம் மறைக்காமல் சொல்லிவிட்டார்.
தேவயானி அனைத்தையும் இறுகிய முகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது முகத்தைப் பார்க்கவே காமாட்சிக்குத் தைரியமில்லை. கைலாசநாதன் சொல்லி முடித்ததும் அன்னையை ஏறிட்டாள் அவள்.
“நீ எப்பிடிம்மா என் புருசனைச் சந்தேகப்பட்ட?”

“நான் உன்னைப் பெத்தவ தேவா”
“சரவணன் என்னோட புருசன். அவரைப் பத்தி யாரோ என்னவோ சொன்னாங்கனு நீ எப்பிடி அவரைச் சந்தேகப்படலாம்? கல்யாணமாகி இத்தனை நாள்ல என் மாமியாரும் மாமனாரும் என்னை ஒரு சொல் தப்பா சொன்னதில்ல. ஆனா நீ அவங்க மகனோட குணத்தைத் தப்பா நினைச்சுருக்க. ஏன்மா இப்பிடி?”
“எந்த அம்மாவும் மக விசயத்துல பொய் சொல்லமாட்டா தேவா. அந்தம்மா பொய் சொல்லுற மாதிரி தெரியல. பேசிட்டிருக்கப்ப அழுதுட்டாங்க. எனக்கு மனசுக்குச் சங்கடமா போயிடுச்சு”
“அதை விட இப்ப என் மனசு ஆயிரம் மடங்கு சங்கடப்படுதும்மா. நான் வேற, என் புருசன் வேற இல்லயே. ஒன்னு மட்டும் கேட்டுக்க! சரவணனுக்கு நான்தான் வாழ்க்கை. என்னை எந்தச் சூழ்நிலையிலயும் அவர் தவிக்கவிடமாட்டார். அவரோட வாழ்க்கையில நான் வர்றதுக்கு முன்னாடி என்ன நடந்திருந்தாலும் அதைத் தெரிஞ்சிக்குறதுக்கான உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு. நான் தெரிஞ்சிக்கிட்டேன். அவர் என் கிட்ட எதையும் மறைக்கல. அவர் மேல பழி போட்டவங்களைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல. அவங்க வெளியாளுங்க. நீ அவரைத் தப்பா நினைக்காத. அவரோட கடந்தகாலத்துல அவர் யாருக்கும் துரோகம் பண்ணல. வருங்காலத்துல எனக்கும் துரோகம் பண்ணமாட்டார். இதை மட்டும் மனசுல வச்சுக்க”
முல்லை யாரோ ஒருவர். அவர் இரு சொட்டு கண்ணீர் விட்டதற்கு மனம் கலங்கிய காமாட்சி, மகள் இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்ன பிறகு கேட்காமல் இருப்பாரா?
மகளுக்கு மருமகன்மீது இவ்வளவு பலமான நம்பிக்கை இருக்கிறது என்றால் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக மருமகன் நடந்துகொள்கிறான் என்றுதானே அர்த்தம்! கூடவே கடந்தகாலம் பற்றி மகளிடமும் கூறியிருக்கிறான் என்றால் கட்டாயம் சரவணன்மீது தவறிருக்காது. தெளிந்த மனமும், மலர்ந்த முகமுமாக மகளை வழியனுப்பி வைத்தார் காமாட்சி.
அன்னையைக் காண மருத்துவமனையில் அரை நாள் அனுமதி வாங்கிக்கொண்டு வந்தவள் அன்றைய தினம் ரத்தினவேலுவும் கனகவல்லியும் ஒரு திருமணவீட்டுக்குச் சென்றிருப்பதால் இப்போது வீட்டுக்குச் சென்றாலும் தனியே இருக்கவேண்டும் என்பதால் சரவணனின் கடைக்குப் போகத் தீர்மானித்தாள்.
பேருந்தில் ரங்கநல்லூர் வந்து இறங்கியவள் சரவணனின் கடையை நோக்கி விரைந்தாள். ‘கே.வி.ஆர் ரிப்பேர் சர்வீஸ்’ என்ற அறிவிப்பு பலகையோடு மூடிய ஷட்டர் அவளை வரவேற்றது.
‘சரவணன் எங்கே சென்றான்? இந்நேரத்தில்தான் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள் என்று சொல்வானே!’
யோசனையோடு கண்களை அலைபாய விட்டவளின் பார்வையில் விழுந்தார் பக்கத்து மெக்கானிக் ஷாப் உரிமையாளரான ஆவுடையப்பன்.
“என்னம்மா தங்கச்சி உன் புருசனைத் தேடுறியா?” திருமணத்திற்கு வருகை தந்தவர் என்பதால் ஆவுடையப்பனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டாள் தேவயானி.
“ஆமாண்ணே! இந்நேரத்துல கடைய பூட்டிட்டு அவர் எங்க போனார்?” என யோசனையோடு கேட்டாள் அவரிடம்.
“தெரிஞ்ச ஒருத்தருக்குத் திடீர்னு நெஞ்சுவலி. அவங்க வீட்டாளுங்க வந்து கூப்பிட்டதும் உதவிக்குப் போயிருக்கான்மா. ஆம்புலன்ஸ்ல ஏத்திவிட்டுட்டு வந்துடுவான். நீ அதுவரைக்கும் நம்ம கடையில உக்காரு.” என்று சொல்லி நாற்காலியை எடுத்துப் போட்டார்.
அவரது பாசமான ‘தங்கை’ என்ற அழைப்பும், உரிமையானப் பேச்சும் தேவயானியை அவரிடம் இயல்பாக உரையாட வைத்தது. ஆவுடையப்பனும் தேநீர், போண்டா என விருந்தோம்பலில் குறைவில்லாமல் நடந்துகொண்டார்.
“உன் புருசனுக்கு இரக்கச் சுபாவம்மா. அதைச் சிலர் சாதகமா பயன்படுத்திக்கிறாங்க. ஆள் பாத்து இரக்கம் காட்டச் சொல்லு உன் புருசனை” என்று பேச்சோடு பேச்சாகச் சொல்லியும் வைத்தார்.

“ஹூம்! அதெல்லாம் அவரோட இயல்புண்ணே! அவ்ளோ சீக்கிரம் மாறிடுமா?” என்றவளிடம்
“நீ சொன்னா அவன் மாட்டேன்னு சொல்லிடுவானா? உன் மேல அவ்ளோ அன்பு ஐயாவுக்கு. நீ வந்த அப்புறம் அவன் கிட்டவும் நிறைய மாற்றங்கள் தெரியுது. இதோ இந்தப் பக்கம் வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருப்பான். வாழ்க்கையே போன மாதிரி பேசுவான். இப்ப எட்டு மணிக்குக் கடை கதவைச் சாத்திட்டு ஓட்டம் பிடிக்குறானே! அவன் இவ்ளோ சந்தோசமா இருக்குறதைப் பாத்தா மனசுக்கு நிறைவா இருக்கு” என்றார் குரல் கமற.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சரவணனும் சுரேஷோடு வந்துவிட்டான். வந்தவனின் முகத்தில் தேவயானியைக் கண்டதும் சின்ன தடுமாற்றம்! கூடவே உடல்மொழியில் பதற்றமும்! க்ஷணநேரத்தில் அவனது விழிகள் ஆவுடையப்பனிடம் ஏதோ கேட்க அவரோ ‘ஒன்றுமில்லை, கலங்காதே!’ என்று பார்வையில் அபயம் அளிக்க நிம்மதி பெருமூச்சு சரவணனிடம்.
‘இந்தப் பதற்றம், தடுமாற்றம், இரகசியமாக விழிகளால் நிகழ்ந்த உரையாடல் இதெல்லாம் எதற்கு?’
மனம் துணுக்குற்றாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் சிரித்தாள் தேவயானி, அவற்றுக்குப் பின்னே இருக்கும் காரணி யாரென அறியாமல்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

