“இந்த மனசு ரொம்ப விசித்திரமானது… அதுக்குப் பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் ரொம்ப ஈசியா அதை கடந்துடும்… பிடிச்சவங்க சின்னதா ஒரு தப்பு பண்ணுனாலும் அதை பூதாகரமாக்கி நினைச்சு நினைச்சு வருத்தப்படும்… பிடிக்காதவங்க செஞ்ச தப்பை விட பிடிச்சவங்க தப்பை தான் பெரிய பாவமா நினைக்கும்… எப்பிடி இவங்க இந்த மாதிரி நடந்துக்கலாம்னு புலம்பித் தீர்க்கும்… அதை வெளிய சொல்லுறதுக்கு நம்மளோட ஈகோ இடம் குடுக்காது… மனசு படுற கஷ்டத்தை நினைச்சு சீக்கிரமா நம்ம அந்த நபரை வெறுக்க ஆரம்பிச்சிடுவோம்… இப்பிடி தான் ஒரு காலத்துல நம்மளால நேசிக்கப்பட்டவங்க நம்ம வெறுப்பைச் சம்பாதிக்கிறாங்க… பிடிச்சவங்கனு சால்ஜாப்பு சொல்லி அவங்க செஞ்ச தவறை ஏத்துக்குற பக்குவம் எல்லா மனுசங்களுக்கும் இருக்காது… முக்கியமா எனக்கு அந்தப் பக்குவம் கிடையாது… இது தான் இப்ப வரைக்கும் நித்திலாக்கு எங்க பிரிவுக்கு முன்னாடி நடந்த சம்பவம் பத்தி நான் விளக்கம் குடுக்காம இருக்குறதுக்கு முக்கியக் காரணம்… விளக்கம் குடுத்து காப்பாத்திக்கிற அளவுக்கு எங்க ரிலேசன்ஷிப் அவ்ளோ உன்னதமானது இல்லனு தோணுது”
-கிரிஷ்
க்ளீன் ஈகீல்ஸ் மருத்துவமனை…
அவசர சிகிச்சை பிரிவில் கிருஷ்ணராஜசாகரின் உடலில் பாய்ந்த இரு தோட்டாக்களை நீக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போதே இரத்த இழப்பு ஏற்பட்டிருந்ததால் இரத்தம் ஏற்றப்பட்டு முதலுதவியையும் சிகிச்சையையும் உடனடியாக ஆரம்பித்தனர் மருத்துவர்கள்.

சந்தீப்பும் இப்ராஹிமும் பாதுகாவலர்களைக் கொலையாளியைக் கண்டறிய முடுக்கிவிட்டனர். இருப்பினும் அவன் தப்பிவிட்டான் என்ற செய்தியே கிடைத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஹீ மைட் பி அ புரொஃபஷனல் கில்லர்”
இது காவல்துறையின் பதில்.
நடந்த அனர்த்தம் ஆனந்த்சாகரையும் நர்மதாவையும் நிலை குலைய செய்துவிட்டது.
ஒன்றுக்கு இரண்டு தோட்டாக்களை உடலில் தாங்கியவனின் பெற்றோர் அல்லவா! அம்ரித்தை அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனைக்கு சந்தீப் மற்றும் இப்ராஹிமோடு வந்திருந்த நித்திலா திக்பிரமை பிடித்தவளைப் போல கிருஷ்ணராஜசாகரின் உதிரம் தோய்ந்த தனது உடையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளுக்குக் கிருஷ்ணராஜசாகர் மீது வருத்தம் இருக்கிறது. ஆனால் அவன் குண்டடி பட்டு விழுந்த கணத்தில் அவனுக்காக துடித்துப் போனாள்.
அதே துடிப்பு தான் அவனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைத்த போதும். எவ்வளவு இரத்தம்? எத்துணை வேதனை?
அம்ரித்தைக் காப்பாற்ற முதல் தோட்டாவை ஏற்றுக்கொண்டவன் அடுத்த தோட்டாவை வயிற்றில் ஏற்றுக்கொள்ள காரணம் என்ன?
அந்த தோட்டாவின் இலக்காக நின்றவள் நித்திலா தானே? சிம்லாவில் தனக்கு முப்பது சதவிகிதம் வாய்ப்பிருப்பதாகச் சொல்லி குதூகலித்தவன் ஏன் தனக்காக தோட்டாவை ஏற்றான்?
மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் வலம் வந்து கொண்டிருக்க கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள் நித்திலா.
அப்போது சந்தீப்பும் இப்ராஹிமும் வந்தனர்.
“நீங்க அந்த கில்லரை பாத்திங்கல்ல அண்ணி? அவனை அடையாளம் காட்ட முடியுமா?”
சந்தீப் கேட்க நித்திலா பிரமை கலைந்து அவனை ஏறிட்டாள்.
“அவன் அம்ருவ குறி வச்சான் சந்தீப்… அதுக்குள்ள சாகர்… சாகர் அவனைக் காப்பாத்திட்டார்… அடுத்து என்னை… ம்ம்… என்னையும் அவர் தான் காப்பாத்துனார்”
கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காது கண்களை இமைக்காமல் அவள் பதில் சொன்ன விதம் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து நித்திலா மீளவில்லை என்பதை புரிந்துகொண்டான் சந்தீப்.
இத்தனை அன்பா அண்ணன் மீது? இவ்வளவு அன்பை வைத்துக்கொண்டு ஏன் பிரிந்திருந்தார்கள்?
மனதில் ஆதங்கம் சூழ அவளிடம் ஆறுதலாய் பேசினான் சந்தீப்.
“கிரிஷ்கு ஒன்னும் ஆகாது அண்ணி… டாக்டர்ஸ் சர்ஜரி முடிஞ்சதும் அண்ணாவோட கண்டிசன் என்னனு சொல்லுவாங்க… நீங்க பேனிக் ஆகாதிங்க”
நித்திலா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“போலீஸ் கில்லரோட அடையாளத்தைக் கேக்குறாங்க மேடம்… நீங்க தான் அவரைப் பாத்திருக்கிங்க” என்றான் இப்ராஹிம்.
“இப்ப நான் பதில் சொல்லுற மனநிலைல இல்ல இப்ராஹிம்… சாகருக்குச் சர்ஜரி முடிஞ்சு கான்சியஸ் வர்ற வரைக்கும் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதிங்க ப்ளீஸ்!”
இதற்கு மேல் அவளை வற்புத்த விரும்பாத இரு ஆடவர்களும் தீக்ஷித்தை வீட்டுக்குள் அனுமதித்த பாதுகாவலனிடம் மேற்கொண்டு விசாரிக்கும் முடிவுக்கு வந்தனர்.
அதே நேரம் சாகர் நிவாசில் ஆனந்த்சாகரும் நர்மதாவும் கிருஷ்ணராஜசாகருக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அம்ரித் அவர்களோடு இருப்பதால் வருத்தத்தை வெளிக்காட்டும் சுதந்திரம் பறிபோயிருந்தது.
அவன் அவ்வளவு பயந்து போயிருந்தான்.
“டாடிக்கு என்னாச்சு? எப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்து வருவாங்க?”
இதே கேள்விகளை அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தான். கண் முன்னே இரத்தம் வழிய தந்தை சரிந்த காட்சியைப் பார்க்கும் வயதா அவனுக்கு?
நர்மதா அவனுக்குப் பதில் சொல்வாரா? மைந்தனை எண்ணி மருகுவாரா? ஏற்கெனவே மாரடைப்பில் இருந்து மீண்ட கணவரைக் கவனிப்பாரா?
அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் ஜனார்தனன் இடையிடையே அம்ரித்துக்குத் தைரியம் அளித்து அவனது கவனத்தைத் திருப்பியது தான்.
நல்ல மனிதர் என அவரைப் பற்றி எண்ணும் போதே அந்தச் சூழ்நிலையிலும் தனியே நின்று இரகசியம் பேசிக்கொண்டிருந்த சம்பந்தியம்மாவையும் இளைய மருமகளையும் பற்றிய கசப்பான உணர்வொன்று உதித்தது.
கிருஷ்ணராஜசாகரை இரத்தம் வழிய சந்தீப் சுமந்து சென்றபோது கூட இருவரும் பெரிதாக அதிரவில்லை. வருத்தத்தைக் கூட முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.
ஆனந்த்சாகர் இடிந்து போயிருக்க அவரை தேற்றுவதில் நேரம் கழிந்தது நர்மதாவுக்கு.
மருத்துவமனைக்குச் சென்ற மருமகளும் இளைய மகனும் இன்னும் எந்த செய்தியையும் தெரிவிக்கவில்லை என்ற கவலை இருவருக்கும்.
அந்நேரம் ஸ்ரீநயனி வீட்டிலிருந்த பாதுகாவலர்களிடம் விசாரணையை ஆரம்பித்திருந்தாள். சாவித்திரியையும் தேவராஜனையும் ஹோட்டலுக்குச் செல்லும்படி அனுப்பி வைத்த விக்ரம் அவளுக்குத் துணையாய் பாதுகாவலர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
நுழைவுவாயில் அருகே நின்றிருந்த பாதுகாவலர் தான் ஃப்ளாரண்ட் டி க்ருஸ் என்ற பெயரில் வந்த தீக்ஷித்தை உள்ளே அனுமதித்திருந்தார்.
அவரிடம் தான் இப்போது விசாரித்துக்கொண்டிருந்தனர் ஸ்ரீநயனியும் விக்ரமும்.
“கிரிஷ் சாரோட ஃப்ரெண்டோட பி.ஏனு சொன்னான் மேடம்”
“நீங்க அவனோட ஐடிய செக் பண்ணலையா?”
“நாங்க செக் பண்ணுனோம்… ஐ.டி எல்லாம் பெர்ஃபெக்டா இருந்துச்சு.. அப்ப தான் நிஹாரிகா மேடம் வந்தாங்க”
நிஹாரிகாவின் பெயர் அடிபட்டதும் ஸ்ரீநயனி சுதாரித்தாள்.
“அவங்க என்ன சொன்னாங்க?”
“கிரிஷ் சார் அந்த ஆள் கிட்ட அர்ஜெண்டா பேசணும்னு சொன்னாங்க… நான் கிரிஷ் சாருக்குக் கால் பண்ணி கன்ஃபர்ம் பண்ண நினைச்சப்ப என்னை நம்ப மாட்டிங்களானு கோவப்பட்டாங்க… அதான் நான் அந்த ஆளை அலோ பண்ணுனேன்”
நிஹாரிகா தான் அந்நபரை உள்ளே அழைத்து வந்திருக்கிறாள் என்பதை விசாரித்து அறிந்ததும் ஸ்ரீநயனியின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது. அதை கவனித்த விக்ரம் பாதுகாவலர் முன்னிலையில் அவள் உணர்ச்சிவசப்பட்டால் நிஹாரிகா சுதாரித்துவிடுவாள் என்பதால் அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு ஸ்ரீநயனியின் கோபத்தை மட்டுப்படுத்த முயன்றான்.
“ஓ! நீங்க அந்த ஆளை மறுபடி பாத்தா அடையாளம் காட்டுவிங்க தானே? போலீஸ் என்கொயரில மாத்தி பேசிடமாட்டிங்களே?”
“என்ன நடந்துச்சோ அதை சொல்லுவேன் சார்… நீங்க என்னை தாராளமா நம்பலாம்”
அவரை அனுப்பி வைத்தவன் ஸ்ரீநயனி நிஹாரிகாவை நோக்கி செல்ல எத்தனிக்கவும் வேகமாக அவளது கையைப் பற்றி தடுத்தான்.
அவனை வெட்டுவதை போல அவள் முறைக்கவும் கையை விட்டவன் “கோவப்பட்டு காரியத்தைக் கெடுத்துடாதிங்க… இப்ப நீங்க ஆத்திரத்தோட போய் விசாரிச்சா மட்டும் அவங்க உண்மைய சொல்லிடுவாங்களா? நீங்களே அவங்களை சுதாரிக்க வச்சிடுவிங்க போல” என்றான் விக்ரம்.
“ஹாஸ்பிட்டல்ல கிடக்குறது என் அண்ணா… அதுக்குக் காரணமானவளை சும்மா விடச் சொல்லுறிங்களா?”
கோபத்தில் கத்த ஆரம்பித்தவளின் வாயைப் பொத்திய விக்ரம் அவள் கையை விலக்க போராடும் போதே நிஹாரிகாவுக்குத் தங்கள் பேச்சு கேட்காத தொலைவுக்கு இழுத்துச் சென்றான்.
ஸ்ரீநயனி கண்களில் கனல் பொங்க அவனை முறைக்கவும் மன்னிப்பு கேட்டான் விக்ரம்.
“இந்தக் கோவம் தான் உங்க அண்ணாவுக்கும்… அவர் கோவத்தால நித்திய இழந்துட்டார்… நீங்க உங்களோட கோவத்தால மிஸ்டர் கிரிஷோட இந்த நிலமைக்குக் காரணமான குற்றவாளிய தப்பிக்க வைக்கப் பாக்குறிங்க”
“என்ன உளறுறிங்க விக்ரம்?”
“நான் உளறலை… கொஞ்சம் பொறுமையா இருங்கனு சொல்லுறேன்… இப்ப நீங்க அவசரப்பட்டிங்கனா மிசஸ் சந்தீப் எப்பிடியாச்சும் பிரச்சனைல இருந்து தப்பிக்க குறுக்குவழில முயற்சி பண்ணுவாங்க… அவங்களை விட்டுப் பிடிங்க”
“இப்ப விட்டா அவ பெங்களூரு போயிடுவா… அங்க போய் எப்பிடியாச்சும் சந்தீப் அண்ணா மனசை மாத்திடுவா”
“அவங்களைப் போகவிடாம செய்யுங்க… போலீஸ் என்கொயரி முடியுற வரைக்கும் ஃபேமிலி மெம்பர்ஸ் அண்ட் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் வேற ஸ்டேட்டுக்குப் போகமுடியாதுனு சொல்லுங்க”
“லிசன் விக்ரம்! அவ உலகமகா கேடி… இதெல்லாம் காதுல போட்டுக்க மாட்டா”
விக்ரமும் ஸ்ரீநயனியும் தீவிரமாக வாக்குவாதம் செய்துகொண்டிருக்கையில் சைலேந்திரி மகளிடம் ஆயிரமாவது முறையாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
“நடந்த சம்பவத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?”
நிஹாரிகாவும் இல்லை என்ற பொய்யை எத்தனை விதமாக அழுத்தி கூறுவாள்? ஒரு கட்டத்தில் சோர்ந்துவிட்டாள் அவள்.
“ப்ச்! சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லம்மா… நீ என்னை ஏன் சந்தேகப்படுற?”
“நீ தானே அந்தப் பையனை தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போனடி… என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் அதை கவனிச்சாங்களோ?”
“யார் கவனிச்சா எனக்கு என்ன? அவனைக் குளத்துக்குக் கூட்டிட்டுப் போனது தாமரையைப் பாக்குறதுக்குத் தான்… நீ ஏன் என்னை நம்பமாட்ற?”
“நித்திலா மகன் மேல திடீர்னு பாசத்தை பொழிஞ்சியே, அதான் நம்ப முடியல நிஹி”
“அந்தச் சின்னப்பையன் மேல எனக்கு என்ன வெறுப்பு? அவனோட பேரண்ட்ஸை எனக்குச் சுத்தமா பிடிக்காது… அவனோட அம்மா எனக்கு அப்பா பாசம் கிடைக்கவிடாம செஞ்சவ… அவங்கப்பன் என் சந்தீப்போட இடத்தை பறிச்சவன்… அதுங்களை ஒன்னுமில்லாம செய்ய நான் எந்த எல்லைக்கும் போவேன்”
“எந்த எல்லைக்கும் போவியா? அப்ப இன்னைக்கு நடந்தது…”
மீண்டும் சைலேந்திரி ஆரம்பிக்க நிஹாரிகா அவரைச் சமாதானம் செய்யவென நேரம் கடந்துபோனது.
மருத்துவமனையில் கிருஷ்ணராஜசாகருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்தது. இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அப்படி திரும்பினாலும் குறைந்தது பத்து நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவன் இருக்கவேண்டும்.
துப்பாக்கிக்குண்டு ஏற்படுத்திய காயங்கள் ஆறவேண்டும். புறக்காரணிகளால் அந்தக் காயங்களில் இன்ஃபெக்சன் ஆகிவிடக்கூடாது என்பதால் மருத்துவர்கள் அவனைச் சந்திக்க யாரையும் இன்னும் இரு நாட்களுக்கு அனுமதிக்க முடியாது என்றார்கள்.
சந்தீப்பும் இப்ராஹிமும் காவல்துறையினரிடம் தங்களுக்குத் தெரிந்ததை கூறிவிட நித்திலா தீக்ஷித்தின் உருவ அமைப்பு எப்படி இருந்தது என்பதை விளக்கினாள்.
மறுநாள் சாகர் நிவாசிற்கு வந்து அங்குள்ளவர்களை விசாரிப்போம், அதுவரை குடும்பத்தினர் யாரும் வேறெங்கும் செல்லக்கூடாதென காவல்துறையினர் சந்தீப்பிடம் கேட்டுக்கொண்டனர்.
அவனும் சம்மதிக்க கிருஷ்ணராஜசாகரோடு இப்ராஹிம் தங்கிக்கொள்கிறேன் என்றான்.
நித்திலா தயங்கவும் “கவலைப்படாதிங்க மேடம்… சாருக்குக் கான்சியஸ் வந்ததும் முதல்ல உங்களுக்குத் தான் கால் பண்ணுவேன்” என உறுதியளித்தான்.
காவல்துறை கிருஷ்ணராஜசாகரின் பாதுகாப்புக்காக இரண்டு காவலர்களை அங்கே அனுப்பி வைத்திருந்ததால் சந்தீப்போடு நித்திலா கிளம்பினாள்.
காரில் ஏறியதும் சந்தீப் மற்றும் நித்திலா இருவரது மனமும் அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளை ரீவைண்ட் செய்து பார்க்கத் துவங்கியது.
முதலில் நிஹாரிகா அம்ரித்திடம் பேசியது, அவனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது, பின்னர் அவளைத் தொடர்ந்து கிருஷ்ணராஜசாகரும் நித்திலாவும் போனதை சந்தீப் யோசித்துக்கொண்டிருந்தான்.
சந்தீப் துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு அங்கே சென்று பார்த்த போது இரத்தவெள்ளத்தில் கிருஷ்ணராஜசாகரும், அவனை மடியில் சாய்த்து கண்ணீரும் கம்பலையுமாக அழுதுகொண்டிருந்த நித்திலாவும் அவனது பார்வைக்குக் கிடைத்தார்கள்.
அன்னையின் தோளை பற்றிக்கொண்டு அழுதபடி நின்ற அம்ரித்தும் அவனது கவனத்தில் பதிந்தான். அவனை அங்கே அழைத்து வந்த நிஹாரிகா மட்டும் எங்கே போனாள்?
அம்ரித்தை அங்கே அழைத்து வந்தவளின் பார்வையில் கொலைகாரன் படவில்லையா? அப்படி பட்டிருந்தால் அம்ரித்தை ஏன் அங்கேயே விட்டுச் சென்றாள்? கொலைகாரனை கவனிக்கவில்லை என்றாலும் தனியே ஒரு சிறுவனை குளத்தின் கரையில் அவள் ஏன் விட்டுவிட்டு வந்தாள்?
அனைத்து கேள்விகளும் நிஹாரிகாவைச் சுற்றியே நகர சமீப நாட்களாக சாகர் நிவாசின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தது குறித்து இப்ராஹிம் பகிர்ந்த காரணம் ஞாபகத்திற்கு வந்தது.
“பர்மான் ஃபேமிலியோட சதியா இருக்கும்னு தோணுது சந்தீப் சார்… ஆயுஷ் பர்மான் நம்ம கிரிஷ் சாரை ஒன்னுமில்லாம ஆக்குறதா ப்ரஷ் முன்னாடி ஓப்பன் சேலஞ்ச் பண்ணுனார்… அப்பவே கார்ட்ஸ் வச்சு செக்யூரிட்டிய டைட் பண்ணுனோம்… இது அவங்க வேலையா இருக்குமோனு சந்தேகமா இருக்கு… நான் போலீஸ் கிட்டவும் என் சந்தேகத்தைச் சொல்லிருக்கேன் சார்”
அடுத்த நொடி நிஹாரிகா பெங்களூருவில் பேசியது நினைவிலாடியது.
“ஸ்பால மிசஸ் திலீப் பர்மானை மீட் பண்ணுற சான்ஸ் கிடைச்சுது சந்தீப்… பரம்பரை பணக்காரினு துளி கூட கர்வமில்ல”
“இன்னைக்கு மிசஸ் திலீப் பர்மான் அவங்க வீட்டு பார்ட்டிக்கு என்னை இன்வைட் பண்ணிருக்காங்க சந்தீப்”
“பார்ட்டில மிஸ்டர் திலீப் பர்மானை மீட் பண்ணுனேன்… ஹவ் ஸ்மார்ட் ஹீ இஸ்… அவர் உங்களோட சேர்ந்து ஸ்கின்கேர் ப்ராடக்ட் கம்பெனி ஒன்னு ஆரம்பிக்கலாமானு யோசிக்கிறாராம்… உங்களை விரட்டுன மாமாக்கும் உங்க அண்ணாவுக்கும் நீங்க யார்னு நிரூபிக்கிறதுக்கு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு சந்தீப்… உங்கண்ணாவோட ராந்த்வாவ அடிக்கிறதுக்கு ஏன் அவரோட ப்ரபோசலை யூஸ் பண்ணிக்கக்கூடாது?”
நிஹாரிகாவின் பேச்சை அவன் துளி கூட மதிக்கவில்லை அப்போது. இருப்பினும் அவளது வார்த்தைகள் எதுவும் மறக்கவில்லை. தன் அண்ணன் மீது அவளுக்குக் காழ்ப்புணர்ச்சியும் பழியுணர்வும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்ட பிற்பாடு அவளது பேச்சை அலட்சியப்படுத்த ஆரம்பித்தான் அல்லவா!
இப்ராஹிமின் கூற்றும், நிஹாரிகாவின் பேச்சும் சந்திக்கும் புள்ளி திலீப் பர்மான். நிஹாரிகாவின் இன்றைய நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக மாறியதையும் பர்மான் குடும்பத்தோடு அவளது நட்பையும் இப்ராஹிமின் சந்தேகத்தோடு முடிச்சு போட்டு பார்த்தவனின் மனக்கண்ணில் நிஹாரிகா குற்றவாளியாகத் தோற்றமளித்தாள்.
ஆனால் பாழாய் போன காதல் அவனை பாடாய் படுத்துகிறதே!
தனக்கு வந்த சந்தேகம் வீட்டினருக்கும் காவல்துறையினருக்கும் வந்திருக்காதா என்ன? இதோ அருகில் அமர்ந்திருக்கிறாளே நித்திலா, அவளுக்கும் இச்சந்தேகம் கட்டாயம் இருக்கும்.
சந்தீப் இவ்வாறு யோசித்த போதே நித்திலா அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
“அம்ருவ தான் அந்தக் கில்லர் கொல்லப் பாத்தான்… அவனை கில்லர் இருந்த இடத்துக்கு அழைச்சிட்டுப் போனவ உங்க ஒய்ப்… அவளுக்கு என்னையும் சாகரையும் சுத்தமா பிடிக்காது… ஒருவேளை என் பிள்ளைய கொலை பண்ணுறதுக்கு….”
நித்திலாவால் வாக்கியத்தை முடிக்கக்கூட முடியவில்லை.
“அப்பிடிலாம் நினைக்காதிங்க அண்ணி… உங்க விசயத்துல நிஹாரிகா நல்லவளா நடந்துக்கல… பட் குழந்தைய கொல்லுற அளவுக்கு அவ அரக்கி இல்ல… ஏதோ தப்பு நடந்திருக்கு”
நித்திலா சந்தீப்பை நோக்கி விரக்தியாகச் சிரித்தாள்.
“உங்க லவ் இப்பிடி பேச வைக்குது சந்தீப்… இன்னைக்கு நடந்த சம்பவத்துல அவளுக்குத் தொடர்பு இருக்குனு தெரிய வந்துச்சுனா கூட அவளைக் காப்பாத்துவிங்கல்ல?”
சந்தீப்பிற்கு தொண்டையில் எதுவோ அடைத்தது போன்ற உணர்வு! காதலா நீதியா என்ற தர்மச்சங்கடம் அவனை அமைதியாக்கிவிட்டது.
வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் பெற்றோரிடம் வந்தான். அண்ணனுக்குப் பயப்படும் எதுவுமில்லை என்று கூறினான். அம்ரித்திடம் தைரியமாக இருக்கும்படி பேசினான்.
நித்திலாவை ஓய்வெடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.
ஜனார்தனன் இளைய மருமகனின் ஓய்ந்த தோற்றத்தைக் கண்டு பரிதாபப்பட்டார்.
அவரையும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நகர்ந்தவனை ஸ்ரீநயனி பிடித்துக்கொண்டாள். கூடவே விக்ரமும் நின்று கொண்டிருந்தான்.
“உன் பொண்டாட்டி தான் அந்த கில்லரை வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்திருக்கா… அதுக்கு என்ட்ரன்ஸ்ல இருந்த கார்ட் ஒருத்தர் சாட்சி… இது அவ மட்டும் போட்ட ப்ளானா? இல்ல புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து என் அண்ணனைக் கொலை பண்ண திட்டம் போட்டிங்களா?”
நெருப்பை அள்ளி கொட்டியது போல துடித்துப்போனான் சந்தீப்.
“நயனி” அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான்.
அதற்குள் விக்ரம் அவனது கையைப் பற்றி தடுத்தான்.
“இவங்களை ஏன் சார் அடிக்க வர்றிங்க? அவங்க ஒன்னும் பொய் சொல்லலை… உங்க ஃபேமிலி மேட்டர்ல இன்வால்வ் ஆக எனக்கு விருப்பமில்ல… ஆனா நித்தி என் கிட்ட உங்க ஒய்ப் பத்தி முன்னாடி சொன்னதை வச்சு பாத்தா அவங்க ஏதோ ஒருவிதத்துல இந்த மர்டர் அட்டெம்ப்ட்ல கனெக்ட் ஆகுறாங்கனு தோணுது… ரொம்ப ஸ்மார்ட்டா என்ட்ரன்ஸ்ல இருந்த சி.சி.டி.விய டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு காய் நகர்த்திருக்காங்க உங்க ஒய்ப்… கார்ட்ஸ், சி.சி.டி.வி கன்ட்ரோலர் எல்லாரையும் விசாரிச்சிட்டு தான் நயனி இப்பிடிலாம் பேசுறாங்க மிஸ்டர் சந்தீப்… நீங்க நியாயமானவரா இருந்தா உங்க ஒய்ப் கிட்ட போய் விசாரணை பண்ணுங்க… இவங்க கிட்ட கை நீட்டாதிங்க”
சந்தீப்பின் கையை உதறினான் விக்ரம். மனைவியைக் காப்பாற்ற துடிக்கிறான் என்று அவனும் சந்தீப்பை தவறாக எண்ணிக்கொண்டான்.
“இவன் ஏன் விசாரிக்கப்போறான் விக்ரம்? இவனும் கூட்டுக்களவாணியா தான் இருப்பான்… நாளைக்கு போலீஸ் என்கொயரில புருசனும் பொண்டாட்டியும் என்ன பொய் சொன்னாலும் தப்பிக்க முடியாது… பாவிங்க, என் அண்ணன், அண்ணி, அம்ருவை இல்லாம அழிக்கிறதுக்கு எவ்ளோ கீழ்த்தரமா வேலை பாத்திருக்காங்க… போலீஸ் என்கொயரினு சொன்னதும் இவனும் இவன் பொண்டாட்டியும் எப்பிடி தப்பிக்கலாம்னு ப்ளான் பண்ணுவாங்க பாருங்க”
ஸ்ரீநயனியின் வெறுப்பில் சந்தீப் கண் கலங்கினான். ஏன் தன் மேல் இவ்வளவு வெறுப்பு என இத்தனை நாட்கள் யோசித்தவனுக்கு நிஹாரிகாவின் செயல்பாடுகள் தான் அதற்கு விதை போட்டது என்பது வெகு தாமதமாகப் புரிந்தது.
எதுவும் பேசாமல் தனது அறைக்குப் போனவன் அங்கே நிஹாரிகா உடமைகளை அடுக்கி வைப்பதைக் கண்டதும் சந்தேகத்துடன் அவளை நெருங்கினான்.
“என்ன பண்ணுற? ஏன் லக்கேஜை பேக் பண்ணுற?”
இது என்ன கேள்வி என்ற ரீதியில் பார்த்த நிஹாரிகாவோ உடைகளை அடுக்கியபடியே பதிலளித்தாள்.
“இதுக்கு மேல இங்க இருந்தோம்னா நம்ம தான் உங்கண்ணனுக்கு நடந்த சம்பவத்துக்குக் காரணம்னு நமக்குக் கொலைகாரப்பட்டம் குடுத்துடுவாங்க உங்க ஃபேமிலி… சீக்கிரம் கிளம்புங்க சந்தீப்… நம்ம பெங்களூருக்குப் போகணும்”
கட்டளையாய் ஒலித்த அவளது குரலில் சந்தீப்பின் சந்தேகம் இன்னும் அதிகரித்தது.
“ஏன் இவ்ளோ அவசரப்படுற? நாளைக்குப் போலீஸ் என்கொயரி இருக்கு… அதுக்கு அப்புறம் தான் ஃபேமிலி மெம்பர்ஸ் வெளி ஸ்டேட்டுக்குப் போக முடியும் நிஹி”
உணர்ச்சியற்ற குரலில் உரைத்தான் சந்தீப். கடவுளே! இங்கே நடந்ததற்கும் இவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கக்கூடாதென அவனது காதல் கொண்ட மனம் ஊரிலிருக்கும் அனைத்து தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டது.
“வாட்? நம்ம ஏன் போலீஸ் என்கொயரிக்கு கோ-ஆப்ரேட் பண்ணணும் சந்தீப்?”
“தப்பு பண்ணலைனா தாராளமா போலீஸ் என்கொயரிக்கு கோ-ஆப்ரேட் பண்ணலாம் நிஹி… நீ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற?”
உடனே நிஹாரிகா சமாளிக்க முயன்றாள்.
“நமக்கு அங்க தலைக்கு மேல வேலை இருக்கு சந்தீப்… இந்த விசயத்துல போலீஸ் நித்திலாவ தான் சந்தேகப்படணும்… இத்தனை வருசம் எங்கயோ போயிட்டு இங்க வந்தவ ஏன் பணத்துக்காக உங்கண்ணாவ கொலை பண்ண ஆள் செட் பண்ணிருக்கக்கூடாதுனு தான் அவங்க யோசிக்கணும்”
எப்போதும் போல நித்திலாவை மாட்டிவிட எண்ணினாள் அவள். ஆனால் அவன் ஒன்றும் பழைய சந்தீப் இல்லையே, நிஹாரிகா என்ன சொன்னாலும் தலையாட்டுவதற்கு!
“அவங்களுக்கு உன் மேல டவுட்… நீ தான் அம்ருவ பாண்ட் பக்கம் கூட்டிட்டுப் போயிருக்க… அவங்க அங்க வந்தப்ப நீ இல்ல… நானும் அதை கவனிச்சேன்… அந்தக் கில்லரை நீ தான் வீட்டுக்குள்ள அழைச்சிட்டுப் போனனு கார்ட் ஒருத்தர் சொல்லிருக்கார்”
சந்தீப் பேச பேச நிஹாரிகாவுக்கு வியர்த்தது.
“உன் டார்கெட் அம்ருனு அவங்க சந்தேகப்படுறாங்க நிஹி”
“அவ உங்க கிட்ட சொன்னாளா சந்தீப்? நீங்க அவளை சும்மாவா விட்டிங்க?”
“அவங்க பாதிக்கப்பட்டவங்க நிஹி… அவங்களோட சந்தேகம் நியாயமானதும் கூட… உன் மேல தப்பிருக்காதுனு நான் நம்புறேன்… லக்கேஜை எடுத்த இடத்துல வச்சிட்டுப் படு”
கணவன் தன்னை நம்புகிறான்! நாளைக்கு எதுவும் பிரச்சனை வந்தால் கூட அவன் தன்னைக் காப்பான் என்ற நம்பிக்கையோடு அரைமனதாக எடுத்த உடைகளை மீண்டும் வார்ட்ரோபில் வைத்தாள் நிஹாரிகா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

