மன்னிப்பு கேட்டும் மாறா மனம்!
மலரவள் மனதில் வார்த்தைகளின் கனம்!
காயங்கள் பட்டதின் கனிவு மறந்த க்ஷணம்!
ஏற்கவும் எதிர்க்கவும் திணறும் இதயம்!
மல்கிய கண்ணீரில் கனவுகள் கரையும்!
நிழலாய் அருகில் இருந்தும் ஏனிந்த தூரம்?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நிசப்தங்கள் கூட நிஜம் செப்பும் நேரம்!
-அட்சரனின் வேதா
காலையில் அட்சரனின் குட் மானிங் செய்தியைப் பார்த்ததுமே பற்றிக்கொண்டு வந்தது வேதவதிக்கு. என்னதான் நிரூபிக்க நினைக்கிறான் இவன் என்று எரிச்சலோடு ஆடியோ நோட் ஒன்றை போட்டுவிட்டாள்.
“நீங்க என்ன ட்ரை பண்ணுறிங்கனு எனக்குப் புரியல. நான் இங்க வந்திருக்குறது என்னை மனரீதியா அமைதிப்படுத்துறதுக்காகவும், எதிர்காலத்துல நடக்கப்போற பிரிவுக்காக என் பேரண்ட்ஸைத் தயார்ப்படுத்துறதுக்காகவும்தான். நீங்க என் பிரச்சனையை ரொம்ப ரிலாக்ஸா டீல் பண்ணுறிங்க. நான் எல்லாத்துக்கும் ஃபுல்ஸ்டாப் வைக்கணும்னு நினைக்குறேன். நான் உங்க வீட்டுக்கு வந்த புதுசுல கல்லோ மண்ணோ கிடக்குற மாதிரி என்னை நடத்துவீங்கள்ல, அதே மாதிரி இனியும் நடத்துங்க. எதிர்காலமே இல்லாத உறவுக்கு நீங்க எந்தத் தப்பான நம்பிக்கையும் குடுக்காதிங்க. என்னால முடிஞ்சவரைக்கும் மரியாதையோட சொல்லிட்டேன். இனியும் இது போல கேசுவலா பிஹேவ் பண்ணுனீங்கனா உங்களோட எந்தப் பேச்சுக்கும் என்னோட பதில் மௌனமாக மட்டும்தான் இருக்கும்.”

மொத்தக் கோபத்தையும் கொட்டி மனதிலுள்ள ஆதங்கத்தை ஆடியோவாய்ப் பதிவு செய்து அவனுக்கு அனுப்பிவிட்டாள். மனதிலிருந்த மாபெரும் பாரம் அகன்றது போன்ற உணர்வு வேதவதிக்கு. முகம் கழுவிக் காபி அருந்தியபோது கஜேந்திரனும் விழித்துவிட்டார்.
“இன்னைக்கு உங்க அம்மா உனக்காகப் பிரியாணி பண்ணப்போறாளாம். சிக்கன் வாங்கிட்டு வரச் சொல்லுறா. நான் உன்னை நம்ம ஊர் லைப்ரரிக்கு அழைச்சிட்டுப் போகலாம்னு நினைச்சேன்” என்றார் அவர்.
“புது புக் எதுவும் வந்திருக்காப்பா?”
“ம்ம்! அகதா கிறிஸ்டியோட புக் சிலது வந்திருக்கு. நீ புக்ஃபேர்ல ரெண்டு புக் வாங்குனதா சொன்னியே? அது என்ன?”
கஜேந்திரன் புத்தகக் கண்காட்சியை நினைவூட்டியதும் வேதவதியின் முகம் வாடிப்போனது. தந்தை கவனிக்கும் முன்னர் உணர்ச்சிகளை முகத்திலிருந்து துடைத்தவள், தான் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைச் சொல்ல கஜேந்திரனும் காபி குடித்தபடி கேட்டுக்கொண்டார்.
“ம்மா! உன் தையல் கிளாஸுக்கு ஆளுங்க வருவாங்களே! நீ எப்பிடிப் பிரியாணி பண்ணுவ? நான் பண்ணட்டுமா?”
“ப்ச்! நான் சொல்லிக் குடுத்துட்டு வேலையைக் கவனிப்பேன் வேதா. நீ இங்க இருக்குற வரைக்கும்தானே என்னால உனக்கு ஆசையா சமைச்சுப் போடமுடியும்?”
“அத்தையும் இப்பிடித்தான். என்னை வேலை செய்யவிடவே மாட்டாங்க. நான் அடம்பிடிச்சுப் பண்ணுவேன்.”
அவளே நினைத்தாலும் புகுந்தகம் பற்றிய எண்ணங்கள் அவளது பேச்சில் கலந்துவிடுகின்றன. ஆனால் அவள் அவ்வாறு பேசுவது கஜேந்திரனுக்கும் கனகவல்லிக்கும் அவ்வளவு சந்தோஷம். அவள் இங்கிருந்து கிளம்பிய பிறகு சாந்தாவும் அவரைப் போலப் பெண்களும் பார்க்குமிடங்களில் எல்லாம் குத்திக் காட்டிப் பேசிய வார்த்தைகள் ஒன்றா இரண்டா?
வேதவதி மட்டும் தேன்மலையில் இருந்திருந்தால் அவர்களின் வார்த்தைகள் அவளது மெல்லிய மனதை உடைத்துப் போட்டிருக்கும். அத்தகைய அனர்த்தம் நிகழாமல் அவளைத் தங்களோடு அழைத்துச் சென்று அவளுக்குத் தைரியமூட்டி இன்று நிமிர்வான பெண்ணாக மாற்றியிருக்கிறார்களே! எந்த மாமனார் மாமியாருக்கு இதெல்லாம் செய்ய மனம் வரும்? தங்களது பிள்ளைக்கு ஊழியம் பார்ப்பதே மருமகளின் கடமையென எண்ணும் ஆண்பிள்ளைகளின் பெற்றோர்கள்தானே நம்மில் அனேகம்.
மருமகனுக்கும் மகளுக்கும் நடந்த பூசல்களை அறியாத உள்ளங்களுக்கு அவள் சொன்ன விஷயங்களின் சாராம்சம் கொடுத்த இதமே போதுமானதாய்! அதைக் கெடுக்க விரும்பவில்லை அவர்களின் மகளும்.
கஜேந்திரன் சிக்கன் வாங்கக் கிளம்பிவிட, தையல் வகுப்புக்கு வந்த பெண்கள் வேதவதியிடம் நலம் விசாரித்தார்கள். அனைவரிடமும் அவள் இன்முகத்துடன் பதிலளித்தாள்.
“ஏன் வேதா எதுவும் விசேஷமா?” எனப் பூடகமாக வினவி அவளைக் குழம்ப வைத்தார் ஒரு பெண்மணி.
“அவ படிப்பு இன்னும் முடியலையே” – கேள்விக்கு அர்த்தம் புரியாமல் விழித்த மகளுக்குப் பதிலாய் தானே விடையளித்தார் கனகவல்லி.
“அதுவும் சரிதான்! பிள்ளை முகம் வாடியிருக்குதே! அதான் கேட்டேன்.”
“நைட் முழுக்கக் கதை எழுதுனேன்கா. அதான் முகம் அப்பிடி இருக்கு” எனச் சமாளித்தாள் வேதவதி. மகளைத் தன்னோடு சமையலறைக்கு அழைத்துப் போய்விட்டார் கனகவல்லி.
“நீ வேணும்னா யாழு வீட்டுக்குப் போய் கதை டைப் பண்ணு. மதியம் அவளையும் மீனாட்சி அத்தையையும் சாப்பிட வரச் சொல்லிடு.”
வேதவதிக்கும் அதுவே சரியெனப் பட, குளித்து மாற்றுடை தரித்து மடிக்கணினியோடு யாழினியின் வீட்டுக்குப் போய்விட்டாள்.
“சப்பாத்தியும் குருமாவும் இருக்குடி. சாப்பிடுறியா?” என்று கேட்டபடி வந்தாள் யாழினி.
“வேண்டாம் யாழு. நாலு தோசை முழுங்கிட்டேன். ஹான்! மதியம் வீட்டுல பிரியாணி. நீ சமைக்காத. ஆச்சியும் நீயும் அங்க வந்துடுங்க.”

பிரியாணி என்றதும் யாழினிக்குக் குதூகலம். “சிக்கனா? மட்டனா?”
“சிக்கன்தான்.”
மீனாட்சி பக்கத்துவீட்டு வேங்கடம்மாளுடன் கதை பேசச் சென்றுவிட, யாழினி தோழியிடம் அட்சரனைக் குறித்து விசாரித்தாள்.
“உனக்கும் அவருக்கும் எதுவும் பிரச்சனையா?”
முதல் கேள்வியிலேயே அதிர்ந்தாள் வேதவதி. இருப்பினும் சிரித்துச் சமாளித்தாள். “இல்லையே யாழு! அவர் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். எழுதவே கூடாதுனு இருந்தவளைப் போராடி எழுதவச்சார் தெரியுமா? எங்களுக்குள்ள என்ன பிரச்சனை வரப்போகுது?”
“புருஷன் ஃப்ரெண்டா இருக்குறது அதிர்ஷ்டம்தான். ஆனா அவன் புருஷனா இருக்குறப்ப சரியா நடந்துக்கணுமே. நீ என்கிட்ட எதையோ மறைக்குற. நான் உன்னைச் சங்கடப்படுத்த விரும்பல. ஆனா உனக்கு எப்பவும் நாங்க இருக்குறோம்.”
யாழினி சொன்னதும் அவள் கையைப் பற்றி முத்தமிட்டாள் வேதவதி. “தேங்க்யூ” என்று கன்னத்தைக் கிள்ளியவளை முறுவலோடு கவனித்தாள் யாழினி.
“நீ ஊரை நினைச்சுப் பயப்பட வேண்டாம். இந்த ஊர் யாரைத்தான் பேசல? போன வாரம் கூட ஆபீஸர் ரேஷன் கடைக்கு ரெய்ட் வந்தார்னு அவருக்குச் சாப்பாடு கொண்டு போனேன். நல்ல மனுஷன். கஜா மாமா வயசு ஆளு. அவரையும் என்னையும் தப்பா பேசுதுங்க சில குந்தாணிங்க. இதுக்கெல்லாம் யோசிச்சா வாழமுடியாது வேதா.”
“ஹூம்! சரிதான். ஆனா உன்னைப் பத்தி இப்பிடிப் பேசுறப்ப ஆச்சிக்கு மனசு வலிக்கும்ல. நாம இதைக் கண்டுக்காம விட்டாலும் நம்மளைச் சார்ந்தவங்க அந்தப் பேச்சால காயப்படுவாங்க யாழு. அதுக்காகத்தானே யோசிக்க வேண்டியதா இருக்கு.”
வேதவதியின் மனநிலை இவ்வாறு இருக்க, அவள் அனுப்பிய ஆடியோவை முழுதாகக் கேட்ட அட்சரனுக்கோ சென்னையில் மனம் ஒரு நிலையில் இல்லை. மீண்டும் மீண்டும் அதை ஒலிக்கச் செய்து கேட்டுவிட்டான். மனம் அமைதியிழக்கச் சிகரெட்டைப் பற்ற வைக்கத் துடித்த கரங்கள், வேதவதி புகைப்பதைக் குறைத்துக்கொள்ளுமாறு சொன்ன அறிவுரைக்காக அடங்கிப்போயின.
“அச்சு! நீ ஹெல்வட்டாசுக்குக் கிளம்பல?” கதவைத் தட்டியபடி வினவினார் சதானந்தன். விறுவிறுவென நடந்து போய் அவரிடம் மொபைலைக் கொடுத்தான் அட்சரன்.
“இந்த ஆடியோவைக் கேளுங்கப்பா.”

அவரோ மறுத்தார். “இது உங்களோட அந்தரங்கம். என்னவா இருந்தாலும் நான் கேக்கத் தயாரா இல்ல. என்ன பிரச்சனைனு சொல்லு.”
“வேதா என்னை ரொம்ப தள்ளி நிறுத்துறாப்பா. அவ இங்க திரும்பி வந்தாலும் சேர்ந்து வாழுற ஐடியா இல்லையாம். கூலிங் ஆஃப் பீரியட்ல ஒன்றரை வருஷத்தைக் கழிச்சிட்டு என்னை விட்டுப் பிரிஞ்சிடுவேனு சொல்லுறா.”
“கூலிங் ஆஃப் பீரியடா? என்ன சொல்லுற? எனக்குப் புரியல.”
அட்சரனுக்குத் தலையைச் சுற்றியது. இதுவரை பெற்றோரிடம் சொல்லாத இரகசியம் அது. உளறிவிட்டானே! இனி மறைக்க முடியாது.
தயக்கத்தோடு, “கூலிங் ஆஃப் பீரியட்னா ரிலேஷன்ஷிப்ல இருந்து விலகுறதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையைக் கவனிப்பாங்க. விரோதம் வெறுப்பு இல்லாம சுமூகமா இருப்பாங்க. வெளிப்பார்வைக்கு அவங்க ஒன்னா இருக்குற மாதிரி தெரிஞ்சாலும் அவங்க மனதளவுல விலகிடுவாங்க. ஓரளவுக்குப் பக்குவம் வந்ததும் பிரிஞ்சிடுவாங்க. சில நேரம் சேர்ந்து வாழவும் ஆரம்பிப்பாங்க. அவங்களுக்குள்ள இருக்குற வெறுப்பும் ஆற்றாமையும் தணியுறதுக்கான கால அவகாசம்தான் இந்தக் கூலிங் ஆஃப் பீரியட்பா” என்று அட்சரன் விளக்கம் கொடுத்து முடிக்கவும் சதானந்தனுக்குத் தலை சுற்றாத குறை.
“உங்க ஜெனரேஷனை எங்களால என்னைக்கும் புரிஞ்சிக்க முடியாதுடா” என ஆயாசத்துடன் சொன்னவர் மகன் முகம் சோர்வுறவும் தோளில் தட்டிக்கொடுத்தார். “இதுக்கு ஒரே தீர்வுதான்! உன் ஈகோ, வேதா – ரெண்டுல ஒன்னை நீ செலக்ட் பண்ணனும். பொண்டாட்டிகிட்ட அடங்கிப் போறதுல அசிங்கம் எதுவுமில்ல அச்சு.”
சதானந்தன் சொல்லிவிட்டுப் போக, அட்சரனால் உடனடியாக அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் இஷ்டத்துக்குப் பிடிவாதம் பிடித்தே வாழ்ந்துவிட்டான் அல்லவா! திடுதிடுப்பென மாறு என்றால் கஷ்டமாகத்தானே இருக்கும்.
அதே அறைக்குள் நடந்து நடந்து கால்கள் வலி கண்ட பிறகு இலக்கியாவின் மொபைலுக்கு அழைத்தான். “இப்ப அவசரமா முடிக்க வேண்டிய பிட்ச் ஒர்க் எதுவும் இருக்கா இலக்கியா?”
“இல்ல அச்சு. ஏன் கேக்குற?”
“அப்ப எனக்கு லீவ் வேணும். நான் தேன்மலைக்குப் போறேன்.”
இலக்கியா மறுமுனையில் அமைதியானாள். “ஹலோ?”
“ஹான்! சொல்லு அருள்! நீயா பேசுற?” – நம்பவியலாமல் கேட்டாள் அவள்.
“நான் தான்! எதுவா இருந்தாலும் நீ எனக்குக் கால் பண்ணு. நான் பாத்துக்குறேன். அந்த ஊர்ல நெட்வொர்க் தகராறு அதிகம். அதனால கொஞ்சம் லேட்டா ரிப்ளை பண்ணுவேன். கண்டுக்காத.”
மடமடவென சொன்னவன் கைக்குக் கிடைத்த ஆடைகளை எல்லாம் அள்ளிப் பேக்கில் திணித்தான். குளித்து மாற்றுடை தரித்துக் கார்ச்சாவியும் உடைமைகள் அடங்கிய ஷோல்டர் பேக்குமாய்ப் படியிறங்கி வந்த மகனைப் பார்த்த ராஜேஸ்வரி கணவரின் முழங்கையை இடித்தார்.
“வேதாவைப் பத்தித் துளி கூட கவலையில்லாம எங்க கிளம்புறான்?” அவர் முணுமுணுத்தது தெளிவாகவே அட்சரனின் காதில் விழுந்தது.
“நீங்க டைரக்டா என்கிட்ட பேசலாம். என் நேரம், முன்னாடி அப்பா இன்டைரக்டா பேசுவார். அடுத்து வேதா, இப்ப நீங்க.”
“இதுக்கெல்லாம் காரணம் யாரு?” என்று இப்போதும் அவனைப் பார்க்காமல் கணவரிடம் கேட்டார் ராஜேஸ்வரி.
அட்சரன் பதில் சொல்லவில்லை. “எனக்கு அவங்க மருமகள் மேல அக்கறை இருக்கு. அதுக்குத்தான் தேன்மலைக்குப் போறேன்” என்றான் எங்கோ பார்த்தபடி.
“போற இடத்துல வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்கச் சொல்லுங்க.”
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.”
“அதான் பாத்தோமே! அந்தப் பொண்ணைத் திட்டித் தீர்த்ததை?”
“அவ என்னைத் திட்டுனதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. அதை விடுங்க. நான் போயிட்டு வர்றேன். சாப்பாடு வெளிய பாத்துக்குறேன். இப்ப கிளம்புனாலே தேன்மலை போய் சேர மிட்நைட் ஆகிடும்” என்றவன் அன்னை முரண்டினாலும் அவரைத் தோளோடு அணைத்துவிட்டுத்தான் கிளம்பினான். சதானந்தன் பெருமூச்சுவிட்டார். “வேதா சமாதானமாகிடணும்” – ராஜேஸ்வரி கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.
காரிலேறியவன் தேசிய நெடுஞ்சாலையில் ரேஞ்சு ரோவரை விரட்டினான். காலையுணவைத் தவிர்த்து மதியத்துக்கும் பெயரளவுக்குக் கொறித்தவனின் பயணத்தில் தேன்மலை வந்தடைய இரவு பதினொன்றாகி இருந்தது. எந்த ஊரை வெறுத்து இதே போல நள்ளிரவில் கிளம்பினானோ அதே ஊருக்கு இன்று விரும்பி வரவைத்திருந்தது விதி.

மலைக்காற்றின் குளுமை, நிலவின் மெல்லிய வெளிச்சம், குன்றுகளின் கம்பீரம் என இரவு நேரத் தேன்மலை ஆட்களைத் தொலைத்து அமைதியில் உறைந்திருந்தது. வேதவதியின் வீட்டை அருள்மொழியின் திருமணத்துக்கு வருகை தந்தபோது ஒருமுறை வானதி காட்டியிருந்தாள். அதை வைத்து வீட்டின் முன்னே காரை நிறுத்தித் தனது ஷோல்டர் பேக்கை எடுத்துகொண்டவன், காரைப் பூட்டிவிட்டு மொபைலில் வேதவதியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
நள்ளிரவில் அவனது அழைப்பு வந்தது உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவள் திடுக்கிட்டு விழித்தாள். தொடுதிரையில் அவனது பெயரைக் கண்டதும் திகைத்தாள். பத்தரைக்கே நித்திரையில் மூழ்குபவன் பதினொன்றரை வரை உறங்காமல் இருப்பது அவளுக்கு ஆச்சரியமூட்டுவதாய்! அழைப்பைத் தவிர்க்க எண்ணிப் பின்னர் அவன் மீண்டும் மீண்டும் அழைக்கவும் வேறு வழியின்றி ஏற்றாள்.
“சொல்லுங்க.”
“கதவைத் திற வேதா. நான் வீட்டுவாசல்ல நிக்குறேன்.”
“குடிச்சிருக்கீங்களா? நான் சென்னைல இல்ல.”
“அதெல்லாம் தெரியும்டி. நான் சொன்னது தேன்மலை வீட்டு வாசல்.”
அதிர்ச்சியில் போனைத் தவறவிட்டாள் வேதவதி. அவசரமாய்த் தனது அறை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அட்சரனின் கார் நிற்பது தெரிந்தது. ‘இங்கே வந்துவிட்டானா? எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?’
உறக்கத்திலிருக்கும் பெற்றோரைத் தொந்தரவு செய்யாத விதமாய் மெதுவாய்ப் போய் கதவைத் திறந்தவள், அங்கே குளிரில் கைகளை உரசியபடி நின்றவனைப் பார்த்ததும் சிலையானாள். நாற்பத்தெட்டு மணி நேரத்தை அவள் இல்லாமல் கழித்திருந்தவனுக்கு நான்கு யுகங்கள் பிரிந்திருந்தது போல மாயை. பேசத் தோன்றவில்லை. வேகமாக முன்னேறிச் சிலையாய் நின்றவளை அணைத்துக்கொண்டான். அணைப்பின் அதீத இறுக்கத்தில் அவளையே தனக்குள் புதைத்துக்கொள்வதாய் ஒரு கற்பனை!

வேதவதியின் கரங்கள் அவனது முதுகை வளைக்க விரும்பவில்லை. மனம் தோற்றாலும் உடல் என்னவோ ரோசத்தோடுதான் அவனை அணுகியது. உடலின் ரோசம் மனதுக்கு வந்ததும் படபடப்போடும் பதற்றத்தோடும் விலகிக்கொண்டவள், வெடுக்கெனத் திரும்பி உள்ளே போய்விட, அட்சரன் பம்மியவனாக அவளைத் தொடர்ந்தான்.
கதவை எப்படி தாழிடுவது எனத் தெரியாமல் விழித்தவனை முறைத்தபடி கதவைச் சாத்தியவள், விறுவிறுவெனத் தனது அறைக்குள் போய்விட, முதல் முறையாக அந்த வீட்டுக்கு வருகை தருபவன் அவளையே தொடர்ந்து போனான்.
“எதுக்கு நீங்க இங்க வந்தீங்க?” சற்று முன்னர் இருந்த படபடப்பையும் பதற்றத்தையும் அடக்கிக்கொண்டு கேட்டாள் வேதவதி.
அட்சரன் அவளைப் பொறுமையாக ஏறிட்டபடி தனது ஷோல்டர் பேக்கைக் கழற்றினான். பிடறியைத் தடவியபடியே, “ட்ராவல் பண்ணுனதுல உடம்பெல்லாம் வலி. நான் குளிக்கக்கணும்” என்றான்.

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலைனா இந்த பேக்கோட சேர்த்து உங்களையும் வெளிய தள்ள வேண்டியதா இருக்கும். எல்லா இடத்துலயும் ஆர்டர் போடுற மாதிரியே பேசிச் சமாளிக்கலாம்னு நினைக்காதிங்க.”
அட்சரன் அவளை ஆழ்ந்து பார்த்தவன் பொறுமையின்றி தலையை உலுக்கிக்கொண்டான். “எனக்கு நீ இப்பிடி அந்நியமா நிக்குறது பிடிக்கல. ஐ வாண்ட் மை வேதா பேக்” – நெகிழ்ந்த குரலில் சொன்னவன் அவளை நெருங்க முயல, கையுயர்த்தித் தடுத்தாள் வேதவதி.
“உங்க வேதாவா? எப்பிடி நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன்னு தலையாட்டுனேனே! அந்த வேதாவா? அப்பிடி இருந்தாதானே என்கிட்ட பொய் பேசி என்னை ஜோக்கர் ஆக்க முடியும்? அது ஏன் ஆம்பளைங்களுக்குத் தெளிவா யோசிக்குற பொண்ணுங்களைப் பிடிக்கமாட்டேங்குது?”
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல வேதா” – பொறுமை விடைபெற்றது அவனிடமிருந்து.
“ரெண்டு நிமிஷம் பொறுமையா ஒரு விஷயத்தைப் பேச முடியல. தப்பு உங்க மேல இருக்குனு தெரிஞ்சும் இதோ கொதிக்க ஆரம்பிச்சாச்சு. நம்ம மேல தப்பு இருந்தா அமைதியா இருக்கணும். எதிர்ல இருக்குறவங்க என்ன அசிங்கப்படுத்துனாலும் அமைதியா நிக்கணும். நான் நின்னேன்ல. நீங்க திட்டுனப்ப அசிங்கப்படுத்துனப்ப நான் கொதிச்சேனா? உங்களுக்கு என்ன கோபம் வருது?”
அட்சரன் இரு கைகளையும் உயர்த்தி, “சரி! நான் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணல. நீ பேசு. நான் கேக்குறேன். அசிங்கமா பேசுனா கூட” என்றான் கண்களை இறுக மூடித் திறந்தவனாய்.
“சொல்லுக்கும் பாடி லாங்வேஜுக்கும் சம்பந்தமே இல்ல” – சலிப்போடு சொல்லிவிட்டுக் குளியலறையைக் காட்டினாள். “போய்க் குளிங்க. ஹீட்டர் போட்டுக்கோங்க.”
காதல் எல்லா நேரங்களிலும் ‘ஐ லவ் யூ’வால் மட்டும் பிரகடனப்படுத்தப்படுவதில்லை. பெருங்கோபத்தின் இடையே சின்னதாய்த் தலை நீட்டும் அக்கறையில் கூடக் காதலின் ஸ்பரிசம் இருக்கும். அட்சரனின் இதழ்கள் முறுவலித்தன. அவள் சொன்னபடி ஹீட்டரைப் போட்டுக் குளித்து வேறு உடைக்கு மாறி அவன் வந்தபோது வேதவதி உறங்கியிருந்தாள்.
அந்த அறையோரமாய்க் கிடந்த மேஜை மீது எவர்சில்வர் தட்டு ஒன்று மூடிவைக்கப்பட்டிருந்தது. திறந்து பார்த்தவன் அதில் தோசைகளும் இட்லிப்பொடியும் இருக்கவே உறங்கிக்கொண்டிருந்தவளைத் திரும்பிப் பார்த்தான்.
‘ஒரு ஆணின் அதீதக் காதல் எல்லாம் தனது ஈகோவைத் தூக்கியெறிந்துவிட்டு நேசிப்பவளிடம் சரணடைவதில்தானே இருக்கிறது’ – எங்கோ படித்த வரிகள் அவனுக்குக் காலம் சமீபத்தில் கொடுத்த அறிவுரையாய்! முன்பு படித்தபோது இறுமாப்பும் ஏளனச்சிரிப்புமாய் உணர்ந்தவன், இப்போது வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடத்தால் அது எவ்வளவு தூரம் உண்மையெனப் புரிந்துகொண்டான்.
உறங்குபவளைப் பார்த்தபடியே சாப்பிட்டுவிட்டுத் தட்டை ஓரமாய் வைத்து மூடியவன், கை கழுவிவிட்டு வந்து சிக்கனமாய் வெளிச்சம் தந்த இரவு விளக்கை ஆஃப் செய்துவிட்டுப் படுக்கையில் கவிழ்ந்தான். முதல் முறையாய் அவளோடு ஒரே அறையில் ஒரே படுக்கையில் இருக்கிறான்.

அன்றொரு நாளில் அவள் கழுத்தில் அவன் தாலி கட்டிய போது அவனது உள்ளத்தில் இருந்த கோபத்திற்கும் ஆற்றாமைக்கும் சற்றும் குறையாத கோபம் அவளுக்கும் இருக்கிறது. ஆனால் வேதவதி அவனைப் போலத் துச்சமாக நடத்தவில்லை. ஆனால் அப்படி நடத்தியிருந்தால் கூட அட்சரனுக்கு வலித்திருக்குமோ என்னவோ, இப்போது இந்த விலகல் வலித்தது. விலகி நிற்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அவள் காட்டிய சின்னதொரு ஆதுரம் இன்னும் வலித்தது.
‘இந்த ஆதுரத்தையும் பிரியத்தையும் அக்கறையையும் இழந்துவிடுவேனோ?’ மனம் ஒரு பக்கம் மருண்டது. மருட்சியின் இடையே தன்னிடமிருந்து மூச்சுக்காற்று தொடும் தூரத்தில் படுத்திருந்த வேதவதியை உற்று நோக்கினான் அட்சரன். முகம் தெரியா இருளில் நிழலுருவமாய்த் தெரிந்தவளுக்கும் தனக்கும் சின்னதொரு விலகல் இருந்தாலும் வேதவதியின் அண்மையே அட்சரனுக்கு நிம்மதியான நித்திரையைத் தருவதாய்!
தனித் தலையணையை விலக்கிவிட்டு அவளது தலையணையில் தலை வைத்துப் படுத்துக்கொண்டவனின் முகத்தில் வேதவதியின் மூச்சுக்காற்று மோதவும் கண்கள் தாமாய் மூடிக்கொண்டன. எவ்வித தாபத்தையும் கொடுக்காத நெருக்கம் அது. இத்துணை நெருக்கத்திலும் மோகம் தூண்டப்படாமல் ஆசுவாசமாய் உணரச் செய்த அன்னைமடியின் இதத்தைத் தரும் நெருக்கம் அது. எங்கே அவளை இழந்துவிடுவோமோ என்ற பயத்தின் நீட்சி தொடராமல் முற்றுப்புள்ளி வைத்த நெருக்கம் அது. ‘சிரித்துக்கொண்டோ முறைத்துக்கொண்டோ நீ என்னோடு இருந்தால் மட்டும் போதும்’ என்ற ஜென் நிலைக்கு வந்துவிட்ட பிறகுதான் மெய்யாகவே வாழ்க்கை தொடங்குகிறது என்பதன் அர்த்தத்தை இன்றுதான் புரிந்துகொண்டான் அட்சரன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

