“என் யூடியூப் சேனல் ரெவன்யூ டீடெய்ல் செக் பண்ணுனேன்… இப்ப வரைக்கும் தொண்ணூத்தேழு டாலரோட நிக்குது…. இன்னும் மூனு டாலர் வந்துச்சுனா பேமெண்ட் க்ரெடிட் ஆகிடும்… அதுல ஃபிப்டி பர்சென்ட் ரெவன்யூவை நான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்டியூட்டுக்கு டொனேட் பண்ணலாம்னு இருக்கேன்… அப்பா கிட்ட இதை பத்தி பேசிட்டேன்… அவருக்கும் இதுல ரொம்ப சந்தோசம்… என் வீடியோஸ்லயும் சப்ஸ்கிரைபர்ஸ் கிட்ட டொனேட் பண்ணுங்கனு ரெக்வஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்”
-நித்திலா
கெட்வெல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிம்லா…
அறுவைச்சிகிச்சை முடிந்து அனஸ்தீசியாவின் வீரியம் அரைகுறையாக இறங்கி இருக்க கனவா நிஜமா என புரியாத இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தாள் நித்திலா.
அவளுக்குத் துணையாக சாவித்திரி மருத்துவமனையில் தங்கியிருந்தார். தேவராஜனும் விக்ரமும் வீட்டையும் கபேயையும் கவனித்துக்கொண்டனர்.
அறுவைச்சிகிச்சை முடிந்து இரண்டாம் நாள் நித்திலா இயல்புக்குத் திரும்பினாள். அவளுக்கு அம்ரித்திடம் பேசவேண்டும் போல இருந்தது. சாவித்திரி களைப்பாக இருப்பதால் வீட்டிற்கு சென்றுவிட்டார். பாவம்! அவரும் இரு நாட்கள் அவளுக்காக மருத்துவமனையில் தங்கியிருந்தார் அல்லவா!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர் சென்றதும் நித்திலாவுக்குத் துணையாக மருத்துவமனை நிர்வாகம் ஒரு செவிலியை நியமித்திருந்தது. செய்த தவறுக்குப் பரிகாரமா? கிண்டலாகச் சிரித்துக்கொண்டாள் அவள்.
ட்ரிப் ஏறுவதைப் பார்த்துவிட்டு திரவ ஆகாரம் எடுத்து வந்த செவிலியிடம் தனது மொபைலை எடுத்து தரும்படி வேண்டினாள் அவள்.
அவரும் மொபைலை எடுத்துக்கொடுக்க அம்ரித்தின் டேப் எண்ணுக்கு அழைக்கப் போனவள் வேகமாக உள்ளே நுழைந்த இன்னொரு செவிலியைக் கண்டதும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“ப்ரீத்தி”
வந்தவரின் பெயர் ப்ரீத்தி போல.
“மஞ்சு இந்த பேஷண்ட் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்”
அவசரப்பட்டார் ப்ரீத்தி என்ற செவிலி.
“என்ன விசயம்பா?” என்ற மஞ்சுவிடம் வெளியே நின்று மருத்துவர் வருகிறாரா என்று பார்க்கும்படி கூற அவரும் வெளியேறினார்.
ப்ரீத்தி மூச்சு வாங்க நித்திலாவிடம் வந்தவர் “உங்க கிட்ட ஒரு உண்மைய சொல்லணும் மேடம்” என்றார்.
நித்திலா அவரைப் பார்த்து குழம்பினாள். ஆங்காலஜிஸ்டிடம் வாக்குவாதம் செய்த போது உடனிருந்த செவிலி அல்லவா இவர்!
“நீங்க அன்னைக்கு டாக்டர் கூட இருந்த நர்ஸ் தானே?” சந்தேகமாகக் கேட்டாள்.
“ஆமா மேடம்” என்றவரின் கண்கள் அறைக்கதவை நொடிக்கொருமுறை தொட்டு மீள்வதை கவனித்தவள் அவர் பேசட்டுமென பொறுமை காத்தாள்.
“ஆங்காலஜிஸ்ட் சர்மா உங்களுக்கு கேன்சர் ரெக்கரன்ஸ்னு பயாப்சி ரிப்போர்ட் தப்பா வந்ததா சொன்னது பொய் மேடம்”
நித்திலாவின் கண்கள் அதிர்ச்சியில் இமைக்க மறந்தது. இது என்ன புதுக்கதை என்ற ரீதியில் மனம் திடுக்கிட்டது.
“ஆமா மேடம்… இப்ராஹிம்னு ஒருத்தர் வந்தார்… அவர் தான் உங்களுக்கு வந்திருக்கிற சாதாரண டியூமரை கேன்சர் டியூமர்னு சொல்ல சொன்னார்… சர்மா சாரும் எய்ம்ஸ்ல நல்ல பொசிசன் கிடைக்கும்னு ஆசைப்பட்டுப் பொய் சொல்ல ஒத்துக்கிட்டார்… எனக்கும் பணம் குடுத்தாங்க மேடம்”
இப்ராஹிமா? அவன் அவ்வாறு செய்யக்கூடியவன் இல்லையே என்று நித்திலா யோசித்தபோது யார் நினைத்ததை எல்லாம் சாதிக்க எந்த எல்லைக்கும் போவானோ அவன் நினைவுக்கு வந்தான்.
அவன் தான், அந்த கிருஷ்ணராஜசாகர் தான் இந்தக் கேவலமான திட்டத்தைப் போட்டிருக்கவேண்டும். மருத்துவருக்குப் பதவியையும் செவிலிக்குப் பணத்தையும் கொடுத்து சாதாரண கட்டியை புற்றுநோய் என்று சொல்லும்படி பணித்தவன் அவனாக மட்டும் தான் இருக்க முடியும்.
அம்ரித்தை நீயே என்னிடம் ஒப்படைப்பாய் என கர்வமாக உரைத்தவனாயிற்றே! அதற்கு இவ்வளவு கீழ்த்தரமாய் சதி செய்யவேண்டுமா?
அன்று அம்ரித்தைக் காண வந்தபோது அவளது வேதனை, பயம், கையறுநிலையை ரசித்திருப்பான் தானே! கட்டாயம் ரசித்திருப்பான். வெற்றி பெற்றுவிட்ட மமதையில் மனதுக்குள் கொண்டாடித் தீர்த்திருப்பான். இதயமற்ற மிருகம்!
“நீங்க டாக்டர் கிட்ட பேசுன ஒவ்வொரு வார்த்தையும் என்னை பாதிச்சிடுச்சு… எந்த அம்மாக்கும் பிள்ளைய தனியா விட்டுட்டுச் சாகப்போற பயம் வேதனைய குடுக்கும்ல… அவர் குடுத்த பணத்தை எங்க ஹாஸ்பிட்டல் ஷேரிட்டிக்கு டொனேட் பண்ணிட்டேன்… என் பிள்ளை இந்தப் பாவப்பட்ட காசுல சாப்பிடக்கூடாது… என்னை மன்னிச்சிடுங்க மேடம்…”

கை கூப்பியவரின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவரது வார்த்தைகளில் போலியான பவ்வியம் இல்லை. அவர் சொல்லவில்லை என்றால் இந்த உண்மையை வேறு எவரும் நித்திலாவுக்குச் சொல்லப்போவதும் இல்லை. தானே முன்வந்து உண்மையைக் கூறி மன்னிப்பு வேண்டியவரை மன்னித்துவிட்டாள் நித்திலா
“நீங்க வருத்தப்படாதிங்க… நான் உங்களை தப்பா நினைக்கல… உங்க குழந்தைய நல்லபடியா பாத்துக்கோங்க” என்று கனிவாய் பேசி ப்ரீத்தியை அனுப்பிவைத்தவளின் மனம் எரிமலையாய் தகித்தது.
இவ்வளவு சாதுரியமாக திட்டம் தீட்டிவிட்டு அன்று வலிக்கிறதா என்று உருகினானே! நாடகக்காரன். அவன் முன்னால் பயமாக இருக்கிறதென அழுது தொலைத்தோமே! அந்தக் காட்சியில் அவனது ஈகோ டன் கணக்கில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல குளிர்ந்து கும்மாளமிட்டிருக்கும்.
இதில் இறந்துவிடுவேன் என்ற வார்த்தையை உச்சரிக்காதே என காதல் கணவன் போல கட்டளை வேறு! கொடுத்த வாக்கை இம்முறையாவது காப்பாற்று என குத்தல் பேச்சு!
எப்பேர்ப்பட்ட சதியை தனது முதுகுக்குப் பின்னால் நிகழ்த்தி இனி அம்ரித்தை உரிமைகொண்டாடக்கூடாதென எனக்கே நிபந்தனை விதித்தான். எதற்காக என் மைந்தனை என்னை விட்டுப் பிரித்தான் அவன்?
தனது இரத்தம் என்ற உரிமையா? கட்டாயம் அது மட்டும் காரணமாக இருக்கமுடியாது. வேறு ஏதோ காரணம் உள்ளது. அதை யாரிடம் கேட்பது?
இப்ராஹிமின் மொபைல் எண் நித்திலாவிடம் இல்லை. கிருஷ்ணராஜசாகரின் தொடர்பு விவரத்தைக் கூட அம்ரித்திடம் தானே கேட்டறிந்தாள்.
இம்முறை அவனை சும்மா விடக்கூடாது. எப்படி சாமர்த்தியமாக என் மைந்தனை என்னிடமிருந்து பறித்தானோ அதே போல சாமர்த்தியமாகச் செயல்படவேண்டும்.
சர்க்கசுக்கு யானையைப் பிடிப்பவர்கள் ஒரு தந்திரத்தைச் செய்வார்கள் என சிறுவயதில் நாவல் ஒன்றில் படித்தது நினைவுக்கு வந்தது.
கதாநாயகன் நாயகியைத் தனது வழிக்குக் கொண்டுவர அந்த முறையைப் பயன்படுத்துவான். கிட்டத்தட்ட கிருஷ்ணராஜசாகரும் அம்ரித்தைத் தன்னோடு அழைத்துச் செல்ல அதை தானே பயன்படுத்தியிருக்கிறான்.
கொஞ்சம் போல பாசத்தைக் காட்டி ஏங்க விட்டு அந்த ஏக்கம் பூதாகரமாகி தந்தையின் அன்பு இல்லையேல் என்னால் இருக்கமுடியாதென்ற நிலைக்கு அம்ரித்தைக் கொண்டு வந்து திடீர் விஜயத்தால் அவனது மனதை குளிர வைத்து தாயை விட தந்தையே மேல் என்ற எண்ணத்தை அவனுக்குள் விதைத்துவிட்டான்.
குழந்தைகளின் மனநிலையைப் பற்றி தெளிவாக அறிந்துகொண்டு காய் நகர்த்தியிருக்கிறான். கூடவே உயிர்கொல்லி நோயிலிருந்து மீண்டவளின் பயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவளது மரணபயத்தையும் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கேள்வியையும் தனது சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு கடைசியில் அதில் வென்றும் விட்டான்.
ஆனால் அவனுக்குச் சளைத்தவள் அல்ல என கிருஷ்ணராஜசாகரிடம் நிரூபிக்க எண்ணினாள் நித்திலா.
அவனது பாணியிலே போய் அவனைத் தோற்கடிக்கவேண்டும். நித்திலா தீவிரமாக யோசித்த போது அம்ரித்திடமிருந்து அழைப்பு வந்தது.
உடனே அழைப்பை ஏற்க தாய்மனம் துடித்தது. கண்ணீர் கண்ணை மறைக்க மொபைலில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த பச்சைவண்ண சிம்பலை அழுத்தப்போனவள் சட்டென விரலை பின்னே இழுத்துக்கொண்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அம்ரித் நித்திலாவின் முகத்தைப் பார்க்கவில்லை. பிள்ளை கட்டாயம் தன்னைத் தேடுவான். விலையுயர்ந்த விளையாட்டுப்பொருட்கள், சொகுசு கப்பல் பயணங்கள் என என்ன தான் கிருஷ்ணராஜசாகரின் ஆடம்பரவுலகில் அம்ரித் இலயித்திருந்தாலும் குறைந்தபட்சம் அன்னையின் முகத்தைக் காணும் வீடியோ காலுக்காக அவன் காத்திருப்பான்.
இப்போது அவனிடம் பேசி அவனது வாட்டத்தைப் போக்கிவிடலாம்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடும்.
தந்தையுடன் ஜாலியாக இருந்துகொண்டு அன்னையின் அன்பை வீடியோ கால்களிலும், அவ்வபோதைய சந்திப்புகளிலும் அனுபவித்துக்கொள்ளலாமென அம்ரித் நினைத்துவிடுவான். குழந்தைகளின் இயல்பே அது தான். யார் கூடவே இருக்கிறார்களோ அவர்களுடன் ஒன்றிப்போவார்கள். தூரத்தில் இருப்பவர்களின் அன்பை தேவைப்படும் நேரத்தில் வாங்கி அனுபவித்துக்கொள்வார்கள்.
வேலைக்குச் செல்லும் அப்பாவை விட வீட்டில் இருக்கும் அம்மாவிடம் நெருக்கமாக இருக்கும் குழந்தைகளை வைத்து அதைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக அந்தக் குழந்தைக்குத் தந்தை மீது பாசம் இருக்காதா என்ன? வேலையை விட்டு வந்ததும் அவனிடம் ஓடிப்போய் கொஞ்சத் தானே செய்யும்! எப்படி இருந்தாலும் அப்பாவைப் பார்த்துவிடாலமென்ற நம்பிக்கை!
அம்ரித்தும் அப்படி நினைத்துவிட்டால்?
இதை முளையிலேயே கிள்ளி அம்ரித் சாகராக இருக்கும் அவனை பழையபடி தனது அம்ருவாக மாற்ற நித்திலா முடிவு செய்தாள். அம்ரித்தின் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருந்தாள். இனி அவனிடம் இருந்து வரும் எந்த அழைப்பையும் அவள் ஏற்கப்போவதில்லை.
தந்தை கொடுக்கும் ஆடம்பர வசதிகளை விட தாயின் பாசம் மேலானது என அவன் புரிந்துகொள்ளும்வரை அவள் அம்ரித்தின் அழைப்பை ஏற்கவே போவதில்லை.
மூன்று வயது பிள்ளையிடம் இத்தகைய கடுமையைக் காட்ட நித்திலாவின் மனதிற்கும் பிடிக்கவில்லை. ஆனால் இந்தக் கஷ்டத்தை நினைத்தால் காலம் முழுவதும் கிருஷ்ணராஜசாகர் எனும் சதிகாரனோடு அல்லவா அம்ரித் இருந்துவிடுவான்!
கிருஷ்ணராஜசாகர் சொன்னது போல அம்ரித்தே நித்திலாவைத் தேடவேண்டும். தேடி இங்கே வரவேண்டும். தந்தையுடன் போகமாட்டேன் என சொல்லவேண்டும். நான் அப்படி சொல்லவைப்பேன் என சபதமிட்டாள் நித்திலா.
*******
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

