பேரிரைச்சலோடு பொங்கி கடற்கரை மணலைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிவிடும் அலைகளுக்குத் தெரிவதில்லை, அவை விட்டுச் சென்ற ஈரம் இன்னும் மணலில் ஒட்டியிருப்பது. இவ்வாறே பல நேரங்களில் மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் நேசிப்பவர்களை ஆழமாகக் காயப்படுத்திவிடுகின்றன. அவற்றுக்குத் தங்களால் காயமுற்ற மனதில் காலாகாலத்துக்கும் வேதனை ஒட்டியிருக்கும் என்பதெல்லாம் தெரியாது! உதிர்த்தவனின் நாவுக்கும்.
–அன்பனின் சிந்தனை சிதறல்கள்
அன்பரசனிடம் பேசிவிட்டு வந்ததும் முதல் வேலையாக அன்னை சுடர்விழியின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைக் கூறினாள் ஆரபி.
“நீ ஒன்னும் அவர் கிட்ட வாயைத் திறந்து உளறலையே?” என உறுதி செய்யக் கேட்டார் சுடர்விழி.
“இல்லம்மா… ஆனா அவருக்குப் பொய் சொன்னா பிடிக்காதுனு சொன்னார்மா… அதை நினைச்சா பயமா இருக்கு… நான் அவர் கிட்ட நடந்ததை சொல்லிடட்டுமா?”
ஆரபி கேட்டதுதான் தாமதம், மறுமுனையில் எண்ணெய்யில் இட்ட அப்பளமாகக் குதிக்கத் தொடங்கினார் சுடர்விழி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அதைச் செய்யுறதுக்குப் பதிலா மெட்ராசுல இருந்து ஆளுக்கு ஒரு பாட்டில் விஷம் வாங்கி அனுப்பு… உன்னைப் பெத்த பாவத்துக்கு நானும் உன் அப்பாவும் குடிச்சிட்டுச் செத்துப்போறோம்”
செத்துப்போகிறோமென்ற வார்த்தை அன்னையின் வாயிலிருந்து வந்ததும் ஆரபி துடித்துப்போய்விட்டாள்.
“ஏன்மா இப்பிடிலாம் பேசுற? பொய் சொல்லி ஒரு உறவை ஆரம்பிக்கணுமானு பயமா இருக்கு… அன்பு கொஞ்சம் டாமினேட்டட் ஆளா தெரியுறார்… அவர் கிட்ட நான் உண்மைய சொல்லிட்டா பெட்டர்னு தோணுச்சு… பின்னாடி அவருக்குத் தெரியவந்து என் மேல கோவப்பட்டுட்டார்னா என்ன செய்யுறதுனு பயமா இருக்கும்மா”
அழுதபடியே உரைத்தாள் அவள்.
சுடர்விழி மறுமுனையில் நீண்டதொரு பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
“கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா ஆம்பளையும் அப்பிடி தான் இருப்பாங்க… என் பொண்டாட்டி என்னை அனுசரிச்சு போகணும்னு நினைப்பாங்க… ஏன்னா அப்ப அவங்களுக்கு வாழ்க்கையோட நீக்குப்போக்கு தெரியாது… கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அந்தக் குணம் மாறிடும்… மாப்பிள்ளையும் மாறிடுவார்,… நீயா சொல்லலைனா மாப்பிள்ளைக்கு இந்த விசயம் தெரியப்போறேதே இல்ல… உண்மைய சொல்லுறதா மாப்பிள்ளை வீடுகளைத் தட்டிக் கழிச்சது போதும் ஆரு… அந்த பிரச்சனைக்கு அப்புறம் உன் அப்பா வெளிய தலைகாட்டாம வீட்டோட முடங்கிட்டார்… மளிகைக்கடை வருமானம், நீ சம்பாதிக்குற பணத்தை வச்சு உனக்கு நகை போட்டுக் கட்டிக்குடுக்க மட்டும் தான் எங்களால முடியும்… மத்தபடி கிடைச்ச வாழ்க்கைய நீதான் தக்க வச்சிக்கணும்.. நான் சம்பந்தியம்மா கிட்ட பேசுனேன்… ரொம்ப தங்கமான மனுசி… சம்பந்தியும் நல்ல மாதிரினு உங்கப்பா சொன்னார்… அடுத்த மாசம் மாப்பிள்ளை சொந்தமா தொழில் ஆரம்பிக்கப்போறாரு… அதுக்கு அப்புறம் நிச்சயம், கல்யாணத்தை வச்சுக்கலாம்னு கொஞ்சநேரத்துக்கு முன்னாடி சம்பந்தி கால் பண்ணி உங்கப்பா கிட்ட பேசுனார்…. வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல தாழி உடைஞ்ச கதையா எதையும் சொல்லி குட்டைய குழப்பிடாத… உன்னைப் பெத்ததுக்கு இந்த ஒரு நல்லதையாச்சும் எங்களுக்குப் பண்ணு… ஊர்க்காரங்க பேசுற பேச்சை எல்லாம் தாங்கிக்க எனக்கும் உன் அப்பாக்கும் மனசு ஒன்னும் இரும்புல அடிச்சு வைக்கல ஆரு”
இதற்கு பின்னரும் எப்படி ஆரபியால் அன்பரசனிடம் உண்மையைக் கூற முடியும்?
அவன் மனம் திறந்து வருங்கால திட்டங்களைப் பேசும்போது சிறகடித்துப் பறக்கும் இதயம் இரவானால் இப்படிப்பட்டவனிடம் உண்மையை மறைக்கிறாயே என ஆரபியைக் குத்திக் காட்டும்.
எதுவும் செய்யமுடியாமல் திணறுபவள் வேலை முடிந்து மாலையில் அவனைச் சந்திக்கும்போது அனைத்தையும் மறந்துவிடுவாள்.
அன்பரசனும் அவளிடம் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொண்டான். தன் வருங்கால மனைவிக்குத் தெரியாத இரகசியம் என எதுவும் தன்னிடம் இருக்கக்கூடாதென்ற எண்ணம்.
என் மனைவிக்கு நான் முதல் காதலாக இருக்கவேண்டுமென எண்ணம் பெரும்பாலான ஆண்களுக்கு உண்டு.
திருமணம் பேசியதும் தனது முன்னாள் காதலிகளைப் பற்றி வருங்கால மனைவியிடம் பகிர்ந்துகொள்ளும் பரந்த மனம் படைத்தவர்கள், வருங்கால மனைவியும் அவ்வாறு பகிர்ந்தால் கட்டாயம் ஒருவித ஏமாற்றத்தை உணர்வார்கள்.
அவர்களது திருமண வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் மனைவியின் முன்னாள் காதலைக் குத்திக்காட்டி அவளை இளக்காரமாகப் பேசாத கணவன்மார்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த எதிர்பார்ப்பு ஆண்களின் இயல்பாகவே மாறிப்போயிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
“நீ லவ் பண்ணுற பொண்ணை மரியாதையா நல்லபடியா நடத்து மச்சான்… என்னைக்கு இருந்தாலும் இன்னொரு வீட்டுக்குப் போகப்போற பொண்ணுல்ல” இந்த மாதிரி மீம்ஸ்களைச் சாதாரணமாக சமூக வலைதளங்களில் காண முடியும்.
இது ஒன்றே போதும் பெண்களின் காதல் பற்றிய ஆண்களின் பொதுபுத்தியை விளக்குவதற்கு.
இந்த மாதிரி நிலமையில் எப்படி ஆரபியால் அன்பரசனிடம் உண்மையைக் கூற முடியும்?
இப்படியே நாட்கள் போன நிலையில் இருவரும் மற்றொருவரின் குடும்பத்தாரிடம் நல்லபடியாகப் பேசினார்கள். மரியாதையை வளர்த்துக் கொண்டார்கள்.
ஒரு நாள் இருவரும் கோவிலுக்குச் சென்றபோது ஒரு இளைஞன் அன்பரசனிடம் திருப்பதிக்கு நடந்தே போவதாகச் சொல்லி பணம் கேட்டான். தெய்வகாரியம் என்பதால் அவனும் தயங்காமல் பணம் கொடுத்துவிட்டான்.
அச்சம்பவத்தின் நீட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தேறியது அதே வார ஞாயிறன்று!
அன்பரசனும் ஆரபியும் மெரீனா கடற்கரைக்குச் சென்றிருந்தார்கள். கடற்காற்றை வாங்கியபடி இருவரும் அமர்ந்து சுட்ட சோளத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களை ஒரு இளசுகள் கும்பல் கடந்து போனது.

ஆரபி அதை கவனிக்காமல் “அன்பு நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே?” என்று கேட்க
“ம்ம்” என்றான் அவனோ கவனத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு.
அவனது கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை அறியாமல் ஆரபி அவள் பாட்டுக்குப் பேச ஆரம்பித்தாள்.
“சப்போஸ் உங்களுக்கு முன்னாடியே நான் இன்னொருத்தரைக் காதலிச்சிருந்து அந்த உண்மைய உங்க கிட்ட இருந்து மறைச்சது பின்னாடி தெரிய வந்துச்சுனா என்ன பண்ணுவிங்க?”
அவன் முகத்தைப் பார்த்தால் தானே பயம், தயக்கம் எல்லாம் வரும் என்று கடலைப் பார்த்து பேசிமுடித்தவள் திரும்பியபோது அங்கே அன்பரசன் இல்லை.
“அன்பு”
உரத்தக் குரலில் அழைத்தபடி ஆரபி எழுந்தாள்.
சுற்றி முற்றிப் பார்த்தவளின் கண்களில் இளசு கும்பலின் மத்தியில் ஒரு இளம்பெண்ணைக் காட்டி இளைஞன் ஒருவனிடம் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்த அன்பரசன் பட்டுவிட்டான்.
அவன் குரல் கேட்காத தூரத்தில் எல்லாம் இல்லை. ஆனால் கடல் அலைகளின் இரைச்சலால் அன்பரசன் பேசியது ஆரபியின் செவியில் விழவில்லை.
அவனை நோக்கிப் போகாமல் அங்கேயே நின்றிருப்பாள், அன்பரசன் மட்டும் அந்த இளைஞனிடம் கை நீட்டாமல் இருந்திருந்தால்.
பேசிக்கொண்டிருக்கும்போதே அவனைக் கன்னத்தில் அறைந்துவிட்டான் அன்பரசன்.
பிரச்சனை எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பயத்தில் அவனை நோக்கி ஓடினாள் ஆரபி.
அங்கே போனதும் அன்பரசனிடம் “அன்பு எதுக்காக அடிக்குறிங்க? விடுங்க… எதுவும் பிரச்சனை ஆகிடப்போகுது” என்று சொல்லி அவனைத் தடுக்க முயன்றாள். அவனோ அவளது சொற்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அந்த இளைஞனின் கன்னத்தில் பளாரென அறைந்தான்.
அன்பரசனின் இந்த ஆக்ரோசத்தில் உறைந்து போய்விட்டாள் ஆரபி. இயல்பிலேயே சண்டை சச்சரவை விரும்பாத அமைதியான பெண்ணவள். எங்கேனும் கைகலப்பு நடந்தேறினால் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காதவள். இன்றோ கண் முன்னே வருங்கால கணவனாக வரிக்கப்பட்டவன் யாரோ ஒருவனை கோபத்தோடு அணுகுவதைப் பார்த்தே தீரவேண்டிய கட்டாயம்!
அந்த யாரோ ஒருவன் அன்பரசனிடம் வாங்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆரபியின் அடிவயிறு கலங்கியது. கோபத்தோடு உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை மிரட்சியடைய செய்து கொண்டிருந்ததை அறியாதவனாக கையில் சிக்கியவனை அறைந்து தள்ளிக்கொண்டிருந்தான் அன்பரசன்.
“கை கால் நல்லா தானே இருக்கு… திருப்பதிக்கு நடந்துபோறேன் காசு குடுங்க ப்ரோனு அடுத்தவங்க பக்தியைச் சாதகமா பயன்படுத்தி பொய் சொல்லி ஏமாத்தி பணம் பறிக்குறதுக்குப் பதிலா உழைச்சு சம்பாதிக்கலாம்ல… நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கூட குடி, கஞ்சானு கூத்தடிக்குறதுக்கு என்னை மாதிரி ஆளுங்களோட காசுதான் கிடைச்சுதாடா? பொய் சொல்லுவியா இனிமே?”
ஆத்திரம் ஓயும் மட்டும் அடித்தான் என கதைகளில் படித்த வரிகளை அன்று நேரடி காட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரபி.
அன்பரசனிடம் சிக்கியிருந்த இளைஞனின் கதியோ அதோ கதியாகப் போய்விட்டது. கடைசியில் ரோந்து போன போலீசார் வந்து தடுத்து அந்த இளைஞனைக் காப்பாற்றினார்கள். அன்பரசனிடம் என்னவென விசாரிக்க அவன் நடந்ததைக் கூறினான். இப்போது காவல்துறையின் கோபப்பார்வைக்கு அந்த இளைஞனும் அவனது தோழர்களும் ஆளாகி நின்றார்கள். `
“படிக்குற வயசுல கஞ்சா… நடங்கடா”
பிடறியில் தட்டி அவர்களை இழுத்துச் சென்றார்கள் காவலர்கள்.
அவர்கள் போவதை அரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்த ஆரபியிடம் வந்தான் அன்பரசன்.
கைகளில் இல்லாத தூசியைத் தட்டிவிட்டவன் “ஏதோ பேசணும்னு ஆரம்பிச்சியே ஆரு.. நான் சரியா கேக்கல, இப்ப சொல்லு” என்றான்.
ஆரபிக்குச் சற்று முன்னர் நடந்த காட்சியில் மேலன்னத்தில் ஒட்டிக் கொண்ட நாக்கு கீழே இறங்கினால் தானே! மௌனமாய் ஒன்றுமில்லையென தலையசைத்தாள்.
அவளின் கண்களில் ஒட்டியிருந்த பயத்தைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த கடுமை அகன்று புன்சிரிப்பை உதிர்த்தான் அன்பரசன்.
“அந்தப் பையனை அடிச்சதை பாத்து பயந்துட்டியா? ரெண்டு நாளுக்கு முன்னாடி சிவன் கோயில்ல வச்சு பாத்தப்ப திருப்பதிக்குப் பாதயாத்திரை போறேன்னு சொல்லி பணம் வாங்குனான்ல, அதே பையன் தான்… இப்ப ஃப்ரெண்ட்ஸ் கூட குடி கஞ்சானு ஆட்டம் போட்டுட்டு அந்தப் பொண்ணுகிட்ட மிஸ்பிஹேவ் பண்ணுறான்… எனக்குப் பொய் சொல்லுறவங்களைச் சுத்தமா பிடிக்காது ஆரு… அதான் கோவத்துல அடிச்சிட்டேன்… நீயே சொல்லு, பொய் சொல்லுறது தப்பு தானே?”
‘பொய்’யில் அவன் அழுத்திய விதம் ஆரபியின் மனதில் சுமக்க முடியாத பாரத்தை வைத்து அழுத்தியது.
“ஆரு..”
அவன் தோளைத் தொட்டு உலுக்கியதும் உடல் சிலிர்த்தவள் “ஆமா அன்பு! த… தப்புதான்” என்று தட்டச்சு பாணியில் வார்த்தைகளை வெளியிட்டாள்.
“இதெல்லாம் பாத்துட்டு ஏன்டா இவனை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதிச்சோம்னு இருக்கா?”
கிண்டலாய்க் கேட்டபடி அன்பரசன் புருவம் உயர்த்தியதும் ஆரபியின் மனம் பெற்றோரிடம் சில நாட்களுக்கு முன்னர் மொபைலில் பேசியதை அசை போட்டது.
“மாப்பிள்ளை கிட்ட உண்மைய சொல்லுறேன்னு எங்க மானத்தை வாங்கிடாத… உன்னால நம்ம ஊருல எங்க மானம் போன வரைக்கும் போதும்… அசலூர்லயும் எங்க மானத்தைக் கூறு போட்டு வித்து எதுக்குடா இவளைப் பெத்தோம்னு நினைக்க வச்சிடாத… இதை மாதிரி இன்னொரு நல்ல வரன் கிடைக்குறது கஷ்டம்… புரிஞ்சு நடந்துக்க”
கண்கள் கலங்க “அப்பிடில்லாம் இல்ல அன்பு” என்றாள் ஆரபி.
அன்பரசனின் முறுவல் புன்னகையாக விரிந்தது.
“வாய்தான் அப்பிடி சொல்லுது… கண் ரெண்டும் கலங்குதே… என்னடா ஆச்சு ஆரு?”
கனிவாய் அவன் கேட்டதும் கலங்கிய கண்கள் கண்ணீரைச் சிந்திவிடாமல் தடுக்க பிரயத்தனப்பட்டாள் ஆரபி.
“கண்ணுல தூசி பட்டுடுச்சு அன்பு… வேற ஒன்னுமில்ல” சமாளித்துவிட்டுப் புன்னகைத்தாள் அவள்.
“ஐயோ தூசி பட்டுடுச்சா?” என்றவன் அவளது துப்பாட்டாவை இழுக்கவும்
“என்ன பண்ணுறிங்க?” என அவள் பதறிப்போனாள்.
அன்பரசனோ அதை சட்டை செய்யாமல் துப்பாட்டாவை சிறிய வட்டமாகச் சுருட்டி வாயில் வைத்து ஊதி “கண்ணைக் காட்டு” என்க ஆரபியும் கண்களை விரித்துக் காட்டினாள்.
“கண்ணை இமைச்சுடாத” என்றபடி விழி வெண்படலத்தில் ஒற்றியெடுத்தான் அவன்.
துணியின் வெப்பத்தில் தூசி அதில் ஒட்டிக்கொள்ளுமென சிறுவயதில் அவனது அன்னை சொன்னதாக ஞாபகம்! ஆரபியின் கண்களில் தூசி விழுந்தால் தானே வரும்!
“உறுத்தல் நின்னிடுச்சு அன்பு” என்று அவள் சொல்லவும் துப்பட்டாவை விடுவித்தான் அவன்.
ஆரபிக்கோ பேச்சுவாக்கில் விளையாட்டாகத் தன்னிலையை உணர்த்திவிடலாம் என்ற எண்ணம் அடியோடு அழிந்து போனது. பின்னரும் அவர்கள் நிறைய பேசினார்கள். ஆனால் ஒரு போதும் தனக்குள் மறைந்திருக்கும் உண்மையை வெளியே சொல்லும் தைரியம் ஆரபிக்கு வரவில்லை.
நான் இப்படி தான் என்பதை அடிக்கொரு முறை அன்பரசன் உணர்த்திக்கொண்டிருக்க, மறுபுறமோ எங்கள் மானத்தை வாங்கிவிடாதே என எச்சரித்துக்கொண்டே இருக்க நடுவில் அடிபட்டதென்னவோ ஆரபியின் மனம்தான்.
அதிலும் அவள் ஆறுதலுறவும், சந்தோசமுறவும் ஏதேனும் இருந்தது என்றால் அது அன்பரசனின் நேசம் மட்டுமே!
ஒருமுறை சிடுசிடுவென சுடர்விழி ஆரபியிடம் மொபைலில் பேசியதை அன்பரசன் கேட்க நேர்ந்தது. அவனுக்கு மனதே சரியில்லை.
ஆரபியோ லவுட்ஸ்பீக்கரில் அன்னை அவளைத் துச்சமாகப் பேசியதை எண்ணி கூனிக் குறுகி அமர்ந்துவிட்டாள். அன்பரசன் அவளிடம் என்னவென விசாரிக்கவில்லை.
மாறாக அவமானத்தின் குன்றிப்போய் அமர்ந்திருந்தவளைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டான். இன்னுமே அவமானத்தின் நடுக்கம் அவளது தேகத்தில் இருப்பதை உணர்ந்தவன் குனிந்திருந்தவளின் மோவாயைத் தொட்டு நிமிர்த்தி அழப்போவதற்கு அடையாளமாக துடித்துக் கொண்டிருந்த இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.
ஆரபித் தனது பரிபூரண அதிர்ச்சியை விழிகளை ‘ஓ’ வடிவில் விரித்துக் காட்டினாள். அன்னையின் பேச்சு ஏதோ போன ஜென்மத்தில் நடந்தது போலத் தோன்றியது அவளுக்கு. அன்பரசனின் முரட்டு இதழ்களின் ஒற்றலும், இலவச இணைப்பாக அவனது மீசையின் ரோமங்களின் தீண்டலும் மட்டுமே நினைவிருந்தன.
அவளின் திகைத்த தோற்றத்தைக் கண்டு மென்மையாக முறுவலித்தவன் “என் கூட இருக்குறப்ப நீ எதுக்காகவும் எப்பவும் கலங்கக்கூடாது ஆரு… உன் அம்மா ஏன் திட்டுனாங்கனு கேட்டு உன்னைச் சங்கடப்படுத்தமாட்டேன் நான்… என்னால உனக்கு ஒரே ஒரு கேரண்டி குடுக்க முடியும்… ஆப்டர் மேரேஜ் உனக்கு அம்மா அப்பாவா நான் இருப்பேன்… அதுக்காக உன்னைத் திட்டமாட்டேனுலாம் அர்த்தமில்ல… கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நீ கூனிக் குறுகிப்போனியே அந்த மாதிரி நிலமைய என்னைக்கும் என் வார்த்தைகள் உனக்குக் குடுக்காது” என்று உறுதியளித்தான்.
அன்றைக்கு இருந்த நிலையில் ஆரபிக்கு அன்பரசனின் உறுதிமொழி தன் வருங்காலம் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரித்தது. ஒருவேளை அன்பரசனுக்குத் தன்னைப் பற்றிய விவரம் தெரியவந்தாலும் முதிர்ச்சியாகக் கையாளுவான் என்ற எண்ணம் அவளுக்குள் உதயமானது.
பாவம்! பெண்ணை, அதிலும் மனைவி/காதலியைத் தன் சொத்தாகப் பாவிப்பவர்கள் இந்திய ஆண்கள். மனைவிமாரின் இரகசியங்களை அறிந்துகொண்டால் அவர்கள் எவ்வளவு மனமுதிர்ச்சி கொண்டவர்களாக இருந்தாலும் அவற்றை இலேசில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பது ஆரபிக்குப் புரியவில்லை.

“தேங்க்ஸ் அன்பு” கண்களில் கண்ணீர் பளபளக்க அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டாள். அன்பரசனின் கரங்கள் அவளை உறுதியாக அணைத்துக்கொண்டன.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

