“உண்மையான காதல் உங்களை எப்பவும் எக்சைட்மெண்ட்ல வச்சிருக்காது. எவ்ளோ பெரிய ப்ரஷர் இருந்தாலும் அந்தக் காதல் உங்க நரம்பு மண்டலமே ஒட்டுமொத்தமா ஸ்ட்ரெஸ்ல தவிச்சாலும் உங்களை அமைதியாக்கும். உங்களோட பலவீனங்களைக் கூட காதல் ரசிக்கும். எப்பவும் அதை வச்சு உங்களை மட்டம் தட்டாது. அதீதக் காதலோட உச்சமே நம்ம இணை கிட்ட நாம தேடுற அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும்தான்”
–ஈஸ்வரி
மாணிக்கவேலு கொதிநிலையில் இருந்தார். மனைவியையும் மகளையும் அவர் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போகாதது ஆச்சரியமே!
மருமகனோடு மேரு பில்டர்சுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தவர் சம்பந்தியம்மா மட்டும் வீட்டில் இருப்பதைக் கண்டுகொண்டு மனைவியும் மகளும் எங்கே என விசாரித்தார்.
சகுந்தலாவுக்கு அவர்கள் இருவரும் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு கிளம்பியதுவரை தெரியும். கோவிலுக்குச் சென்று வருவதாக மதுமதி தன்னிடம் சொன்னதை அப்படியே மாணிக்கவேலுவிடம் சொல்லிவிட்டார்.
மாணிக்கவேலுவும் பெரிதாய் யோசிக்கவில்லை. பவிதரன் வீட்டை விட்டுச் சென்ற தினத்திலிருந்து நிலவழகி கோவில், குளமென அலைவதை அவரும் அறிவார். அதனால் அவருக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்த ராமசாமி சொன்னதைக் கேட்டதும் வீட்டில் அனல் பறக்காத குறை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ராமசாமி வந்தது என்னவோ இனி மேரு பில்டர்சுக்கு வேலை வர தனக்கோ தனக்குக் கீழ் பணியாற்றும் பையன்களுக்கோ விருப்பமில்லை என்பதைச் சொல்லிவிட்டுப் போகத்தான்.
“என் கம்பெனிய விட வேற எவன் உனக்கு அள்ளி குடுப்பான்ல? குடவுன்ல நடந்த திருட்டுல உன் பேரையும் அந்த வடக்கனுங்க பேரையும் சேர்க்குறதுக்கு எங்களுக்கு முகாந்திரம் இருந்துச்சு. அதனால புகார் பண்ணுனோம். என்னமோ உலகமே அழிஞ்ச மாதிரி நாடகம் போடுத? இங்க இருந்து போனா உனக்குக் கஞ்சிக்குக் கூட வழியிருக்காது, பாத்துக்க”
இதற்கு பிறகு எந்த மனிதனால் அமைதியாய் பொறுமையாய் பதிலளிக்க முடியும்?
“அதுசரி! பெத்த மவனையே நேத்து வந்த மருமவன் பேச்சைக் கேட்டு விரட்டி விட்டவரு தானே நீரு. எங்களை மாதிரி ஏழைபாழைங்கனா உமக்கு அவ்ளோ எளக்காரம். உம்ம புத்திக்குத்தான்வே பவி தம்பி கல்யாணத்துக்குக் கூட உம்மையும் உம்ம குடும்பத்தையும் அழைக்கல. ஈஸ்வரி புள்ளைய உங்க வீட்டுக்காரம்மா பேசுன பேச்சு என்ன? இன்னைக்கு உங்களை ஒதுக்கி வைச்சுட்டு அந்தப் பிள்ளைய பொண்டாட்டி ஆக்கிக்கிட்டான் உம்ம மவன். இதுலயே உம்ம பவுசு தெரியலையா? நீரு என்னவே என் பேரைக் கெடுக்குறது? ராமசாமி ஆளுங்களோட வீட்டு கொத்தவேலை பாத்தான்னா வீடு காலத்துக்கு நிக்கும்னு நான் பேர் சம்பாதிச்சிட்டேன். அது என்னையும் என் பயலுவளையும் காப்பாத்தும். நீரு முதல்ல உம்மையும் இந்த வீட்டையும் உம்ம மருமவன் கிட்ட இருந்து காப்பாத்திக்கப் பாரும். பகாசுரன் மாதிரி எல்லாத்தையும் முழுங்க அவன் கங்கணம் கட்டிக்கிட்டுத் திரியுதான்”

வசைமொழிகளை உதிர்த்த ராமசாமி துண்டை உதறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் பவிதரனின் திருமணம் பற்றி அவர் சொன்ன செய்தி மாணிக்கவேலுவின் இதயத்தில் முள்ளாய்த் தைத்து வேதனையைக் கொடுப்பதாய்!
மனைவியும் மகளும் பட்டாடை புனைந்து கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றாரே சம்பந்தியம்மா! ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிடுவதற்கு மாணிக்கவேலுவுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை.
சரியாக அந்நேரத்தில் நிலவழகியும் மதுமதியும் காரிலிருந்து இறங்கினார்கள். நிலவழகியின் கையில் நகைப்பெட்டி இருந்தது. மாணிக்கவேலு உறுதியே செய்துவிட்டார்.
வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் அனலாய் உறுத்து விழித்தவர் பேசவே இல்லை. மதுமதியும் நிலவழகியும் எச்சில் விழுங்கியபடி வந்து அவர் முன்னே நின்றார்கள். அந்த அறையின் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த சகுந்தலா அவர்கள் இருவரையும் பரிதாபமாய் பார்த்தார். அவரது மனம் அதை விட அதிகமாய் மகனை ராமசாமி பகாசுரன் என்று வைததை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தது.
“கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?” கேள்வியே உறுமலாய்தான் கேட்டது இரு பெண்களுக்கும்.
“எ… எந்தக் கல்யாணம்பா?” மதுமதி சமாளிக்க முயன்றாள்.
“உன் உடன்பிறந்தான் கல்யாணம்தான்”
கண்டுபிடித்துவிட்டாரே என்று நிலவழகி அதிர மதுமதியோ கைகளைப் பிசைந்தாள்.
“நாம யாரும் வேணாம்னு சொல்லிட்டுப் போனவன் கல்யாணத்துல உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேலை?”
“அவன் நம்ம புள்ளைங்க”
“அதை அவன் யோசிச்சானா? பெத்தவங்க இருக்காங்க, அவங்களைக் கல்யாணத்துக்குக் கூப்பிடுவோம்னு நினைச்சானா? என் மானத்தை வாங்கணும்னே அந்தக் கழுதைய கல்யாணம் பண்ணிருக்கான்”

“முடிஞ்சதைப் பேசி என்ன ஆகப்போகுதுங்க? இப்ப அவ நம்ம மருமவ”
“மகனே உறவில்லனு ஆயாச்சு. இதுல மருமவ கிட்ட உறவு கொண்டாட ஆசைப்படுறியா நீ?”
மாணிக்கவேலு எகிறிக்கொண்டு வர மதுமதி அவரை அமைதியாக்கினாள்.
“அவனுக்குப் பிடிச்சவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்பா. விடுங்க. அவன் வேணும்னா கண்டவங்க கூட கூட்டு வச்சுக்கிட்டு நம்மளை விலக்கி வைக்கலாம். நாம அப்பிடி விடமுடியாதுல்ல?”
“அப்பிடியெல்லாம் விடமுடியாது. மாணிக்கவேலுவ அவன் என்னனு நினைச்சான்? வேலைக்குப் போய் சம்பாதிக்குற திமிரு. அந்த வேலைய ஒழிச்சுக் கட்டுனா இங்க வந்து தானே நிக்கணும். அப்ப அந்தக் கழுதைய வெட்டிவிட்டுட்டு வந்தா அவனை வீட்டுக்குள்ள சேர்த்துப்பேன். இது நடக்கும். அம்மையும் மவளும் பாக்கத்தானே போறிய?”
வெஞ்சினத்தோடு சவால் விட்ட மாணிக்கவேலுவின் மனம் அன்றைய தினம் முழுவதும் ஆறவில்லை.
அதே நேரத்தில் புதுமணத்தம்பதிகளுக்குத் திருமணத்திற்கு பிந்தைய சடங்குகளில் நேரம் கழிந்தது. இத்தனை வகை உணவு, இவ்வளவு அதிகமாய் உறவுக்காரக் கூட்டம், ஆடம்பரமான வரவேற்பு என இந்தக் காலத்திய திருமணத்துக்கான எந்த அடையாளமுமில்லாமல் நடந்தேறியிருந்த திருமணத்தில் மகிழ்ச்சிக்கும் பெரியவர்களின் ஆசிக்கும் குறைவில்லை.
ஊர்க்காரர்கள் சிகாமணியின் வீட்டுக்கு வந்து திருநீறு பூசி மணமக்களை ஆசிர்வதித்தார்கள். கூடவே மொய் கவரையும் இருவருக்கும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.
வாங்க மறுத்தாலோ “உங்க ரெண்டு பேரு அப்பாவும் எங்க குடும்பத்து விசேசத்துக்கு மறக்காம வந்துடுவாவ. அவங்க செஞ்சதைத் திருப்பி நானும் செய்யணும்ல” என்று சொல்லிவிட்டார்கள். கிராமங்களில் இன்றும் இந்தப் பழக்கங்கள் மாறவில்லை.
குழலியும் இளவரசியும் இதையெல்லாம் பார்த்துவிட்டுச் சிவகாமியிடம் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள்.
“கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிடலனு ஊக்காரவிய வருத்தப்பட்டுடக்கூடாது மதினி” என்றார் குழலி கவலையோடு.
“இதுக்கு ஏன் கவலைப்படுறிங்க? எல்லா வீட்டுக்கும் ஊர்ப்பலகாரம் போட்டுட்டா அவங்க சந்தோசப்படப்போறாங்க. மாறன் மலர் கல்யாணம் திடீர்னு நடந்துச்சு. அப்ப என் ஊர்க்காரங்க கொஞ்சம் அதிருப்தில இருந்தாங்க. ஊர்ப்பலகாரம் குடுத்துதான் அவங்களைச் சமாதானம் பண்ணுனோம்” என்றார் சிவகாமி.
தென்மாவட்டங்களில் குடும்பங்களில் எந்த விசேசம் நடந்தாலும் இந்த ஊர்ப்பலகாரம் போடும் முறை பிரபலம்.
கைச்சுற்று முறுக்கு, அதிரசம், லட்டு, மிக்சர், காரச்சேவு, உளுந்தவடை, பருப்புவடை என அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து விசேச வீட்டுப் பெண்மணிகள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று கொடுப்பார்கள். பெண் குழந்தை வயதுக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்து, திருமணம், மறுவீடு, ஆடி, தீபாவளி என அனைத்து விசேசங்களுக்கும் இந்த ஊர்ப்பலகாரத்தைக் கொடுப்பார்கள்.
பொதுவாக ஆண் பிள்ளைகளின் திருமணம் முடிந்தால் மாப்பிள்ளை வீட்டார் இதைச் செய்தே ஆகவேண்டும். சிவகாமி யோசனை சொன்னதோடு மேற்கூறிய அனைத்து பலகாரங்களையும் தலா ஐநூறு எண்ணிக்கையில் வாங்கி வரவும் சொல்லிவிட்டார்.
பலகாரங்கள் வந்து இறங்கியதும் குழலியும் இளவரசியும் தங்களோடு ஷண்மதி, மலர்விழியை அழைத்துக்கொண்டு ஊர்ப்பலகாரம் கொடுக்கச் சென்றுவிட்டார்கள். ஆதிராவும் சிவகாமியும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள்.
மதிய விருந்தும், மாலை பலகாரப் பந்தியும் சுமூகமாய் நடந்தேறின.
இரவானதும் சிகாமணியின் இல்லம், தட்சிணாமூர்த்தியின் இல்லம், மணமக்கள் வாழப்போகிற வீடு மூன்றும் எல்.ஈ.டி விளக்குச் சரங்களின் அலங்காரத்தில் ஜொலித்தன.
“இந்த லைட்டு போடலனா கல்யாண வீடுனு எப்பிடி தெரியும்?” ஈஸ்வரி ஆட்சேபித்தபோது தட்சிணாமூர்த்தி சொன்ன பதில் இது.
இரவில் பார்க்க என்னவோ அழகாகவே இருந்தது. இரவு விருந்தும் முடிந்து ஈஸ்வரியை அலங்கரித்தார்கள் பெண்கள். அவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொள்ள அவள்தான் மலங்க மலங்க விழித்துவைத்தாள்.
“சூ! ஈஸு பாவம்!” என அவளுக்கு ஆதரவாய்ப் பேசுவதுபோல மலர்விழி காட்டிக்கொண்டாலும் அவளும் மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கத் தவறவில்லை.
அவர்கள் சிரிப்பின் பின்னணியில் இன்னொரு ஆண் குரல் கேட்டது. அது கர்ணனுடையது.
“கிக்கி பிக்கினு சிரிக்குறதுல பழம் சாப்பிட மறந்துட்டா இவ” என்று சொன்னபடியே வந்தவனின் கையில் ஒரு கிண்ணத்தில் துண்டுகளாக நறுக்கப்பட்ட பழக்கலவை இருந்தது. மிருணாளினி கால்சியம், இரும்புச்சத்துக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் நார்ச்சத்துள்ள பழங்களைக் கட்டாயம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார்.
வேலை பிசியில் பல நேரங்களில் அவள் மறந்தாலும் கர்ணன் மறக்கமாட்டான். இதோ இப்போது போல.
“அந்தப் புள்ளைய இல்லாதது பொல்லாதது சொல்லி பயமுறுத்தியாச்சா?” என்றபடி வந்தவன் மிருணாளினியிடம் கையில் கிண்ணத்தைத் திணித்தான்.

“நாங்க என்ன பிசாசா? பயமுறுத்துறதுக்கு?” ஷண்மதி கேட்க,
“அதை ரவியண்ணன் கிட்ட தான் கேக்கணும்” என்று நமட்டுச்சிரிப்போடு சொன்னவன் மிருணாளினியைத் தன்னோடு அழைத்துப் போய்விட்டான்.
“பாத்தியா இவனுக்கு எவ்ளோ லொல்லுனு” என ஷண்மதி திகைக்க,
“உங்களைப் பாக்குறதுக்கு எங்க ஆச்சி மாதிரி தெரியுதான் அவனுக்கு. அதான் கவுண்டர் அட்டாக் குடுத்துட்டே இருக்கான்” என்று ஆதிரா சொல்லவும் அங்கே சிரிப்பலை.
சிரிப்பு அடங்கியதும் ஈஸ்வரியும் இலகுவானாள். மலர்விழியும் ஷண்மதியும் அவளை இனி அவள் வாழப்போகும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
“கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்க. மானிங் நாங்க எழுப்புறப்ப வந்து திறந்தா போதும்.” என்ற மலர்விழியின் கையை அழுத்தினாள் ஷண்மதி.
“அவ உன்னை விட விவரமானவ. நாம போகலாம்டி”
இரு சகோதரிகளும் சென்றதும் ஈஸ்வரி வீட்டுக்குள் சென்று பிரதானக்கதவை தாழிட்டாள். கதவு சாத்திய சத்தத்தில் பவிதரன் எட்டிப் பார்த்தான் அங்கே. அவனைப் பார்த்ததும் பளிச் புன்னகை அவளிடம்.
“நான் எப்பிடி இருக்கேன்?” தனது புடவையைச் சுற்றி காட்டினாள்.
பவிதரன் கண்களைச் சுருக்கியவன் “கொஞ்சம் குண்டா தெரியுற” என்றான் நமட்டுச்சிரிப்போடு.
ஈஸ்வரி சுற்றுவதை நிறுத்தியவள் “அப்ப நான் நல்லா இல்லயா?” என்று வினவ,
“குண்டா இருந்தா நல்லா இல்லனு அர்த்தமாடி சண்டைக்காரி? ரொம்ப அழகா இருக்க” என்றவன் விடாமல் “உனக்குச் சந்தேகமா இருந்தா நீ நிக்குற இடத்துல தரைய பாரு! தள ஓட்டுல கீறல் விழுந்திருக்கு” என்றதும் அவள் அவசரமாய் தான் நிற்கும் இடத்தில் குனிந்து பார்த்தாள்.
பவிதரனும் அவளோடு வந்து சேர்ந்தே குனிந்து எங்கே விரிசல் எனக் காட்டினான்.
மெய்யாகவே அங்கே தள ஓட்டில் விரிசல் இருந்தது. ஆனால் புதிய விரிசல் இல்லை அது.
“இது பழசு! பொய் பொய்” என்றபடி சட்டென தலையை உயர்த்தியவள் அவளது பின்னந்தலை அவனது முகத்தில் நச்சென இடிக்கவும் சட்டென விலகினாள்.
பவிதரன் வலித்த மூக்கைப் பொத்தியபடி கண்களை மூடிக்கொள்ள “ஐயோ ரொம்ப வலிக்குதா?” என்றபடி அருகே வந்தவள் அவனது கையை விலக்கி அவனது மூக்கை ஆராய அவளது தலை மோதிய இடமெல்லாம் சிவந்து போயிருந்தது.
“ப்பா” என்றவனைப் பார்க்க கொஞ்சம் பரிதாபம் வந்தாலும் “உங்களுக்குப் பிஞ்சு உடம்பு. லைட்டா இடிச்சதுக்கே மூக்கு சிவந்து போச்சு பாருங்க” என்றாள் சன்னச் சிரிப்போடு.
“பொறி கலங்குற மாதிரி இடிச்சிட்டுக் கிண்டல் வேற உனக்கு”
வலித்த மூக்கை அழுத்தியபடி கேட்டவன் அவளது கண்களில் கலக்கம் பரவுவதைக் கண்டதும், “இப்ப பரவால்ல! வலிக்கல” என்றான் அந்தக் கலக்கத்தைப் போக்கும் விதமாய்.
“நிஜமா வலிக்கலதானே?” அவள் உறுதிபடுத்தக் கேட்கவும்,
“இல்லடி! லைட்டா எறும்பு கடிக்கிற மாதிரி..” என்று அவன் சொல்லும்போதே எம்பி அவனது நாசியில் முத்தமிட்டாள் இதமாய்.
அந்த ஒற்றை முத்தம், இவ்வளவு நேரம் அந்த வீட்டுக்குள் இருக்கும் இருவரிடையே நிலவிய விளையாட்டுப்போக்கைக் கரைத்துவிட்டது.
சூரியனின் வெம்மையில் பனித்துளி உருகுவது போல ஈஸ்வரியின் இதழ்கள் கொடுத்த ஈர முத்தத்தில் பவிதரனின் வலி பறந்தோட அவனது உடலும் உருகிப்போனது. ஆகிருதியான தனது ஐந்தடி பத்தங்குல தோற்றம் ஒற்றை முத்தத்தில் வலுவிழந்து போனதாய் உணர்ந்தான்.
காயத்துக்கு மருந்திட வந்தவளின் ஸ்பரிசம் அவனுக்குள் மின்சாரத்தின் அதிர்வாய்!
மெல்ல மெல்ல மையல் கொண்ட காதலனாய் கண்கள் கனிய, உடல் உருக மனைவியை நோக்கினான் பவிதரன். அதைக் கண்டுகொண்ட ஈஸ்வரியின் விழிகளில் குறும்பு எல்லாம் எப்போதோ விடைபெற்றுவிட்டது. இப்போது அங்கே புதுமணப்பெண்ணின் நாணத்திரை விழித்திரையாய் மாறியிருந்தது.
மழைக்காலக் காற்றின் குளுமையில் தேகம் நடுங்குமே அப்படியொரு ஜில்லென்ற உணர்வோடு கூடிய நடுக்கம் அவளது முதுகுத்தண்டு வரை பரவியது.
அந்த கணம் பவிதரன் அவளை விலக விடவில்லை. தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவளது விழிகளை ஆழ்ந்து நோக்கியவனின் பார்வையில் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்க முயலுகிறவனின் தாகம்!
அவளது கூந்தலில் இருந்த பிச்சிப்பூவின் நறுமணம் இந்த நெருக்கத்தில் இன்னுமே போதையூட்டுவதாய்!
“என் வலிக்கு நீ குடுத்த மருந்து வேலை செய்யுதானு பாக்க வேண்டாமா?” என்றவனின் குரலில் இருந்த மென்மைக்கு எதிர்பதமாய் அவனது கரங்கள் அவளது இடையை இறுகப் பற்றிக்கொண்டன.
நாணத்தால் திக்குமுக்காடினாலும் அவனது சண்டைக்காரி தலைகுனிந்து எல்லாம் நிற்கவில்லை. நேருக்கு நேராய் அவனது விழிகளைச் சந்தித்தாள்.
“மருந்து வேலை செஞ்சிடுச்சு. இங்க சிவப்பு இல்லையே”
குறும்பாய் அவனது நாசியை நிமிண்டினாள்.
“ஆனா வலி இன்னும் போகலயே!” போலியான வேதனையை முகத்தில் காட்டினான் பவிதரன்.
“பொய்”
“நிஜமாடி! ஒரு முத்தமெல்லாம் போதாது.”
கட்டளையிட்ட மன்னவனிடம் இரு கரங்களையும் விரித்துக் காட்டினாள் ஈஸ்வரி.

“குண்டா இருக்கேன்னு சொன்னிங்கல்ல. தூக்குங்க”
அவள் சொல்லி முடிக்கும் முன்னரே தூக்கிக்கொண்டவன் இனியும் அங்கேயே நேரத்தை விரயமாக்குவானா என்ன?
தனது முகத்தில் மோதும் அவனது சுவாசத்தின் வெம்மையில் கன்னக்கதுப்புகளும், செவிமடலும் சிவந்து கனிந்தன ஈஸ்வரிக்கு.
கயல்களாய் படபடத்த அவளது விழிகள் பவிதரனின் ஊடுருவும் பார்வையில் துள்ளல் அடங்கி சரணாகதி அடையும் பாவனை அங்கே குடியேறியது.
இனி வார்த்தைகளின் தேவை அங்கில்லை. பேச நினைத்த மொழிகள் எல்லாம் ஒதுங்கி நிற்க மௌனமெனும் அழகிய மொழி அங்கே மோனநிலையை உருவாக்கிக்கொண்டிருந்தது.
இருவர் மட்டுமிருந்த தனியறையில் அவர்களது பிரசன்னத்தை விட ஈஸ்வரி சூடியிருந்த பிச்சிப்பூவின் நறுமணத்தின் ஆதிக்கம் அதீதமாய்!
அவனது கழுத்தோரம் முகம் புதைத்துக் கண்மூடிக்கொண்டவளின் ஸ்பரிசம் மயிலிறகின் வருடலாக அவனுக்குப் பரவசமூட்டுவதாய்!
பார்வை மொழி முடிந்து ஸ்பரிசத்தின் கவிதை ஆரம்பித்தது வெண்பஞ்சு மஞ்சத்தில். கழுத்தோரம் முகம் புதைத்திருந்தவளின் மோவாயைப் பற்றி நிமிர்த்தியவன் அங்கே பரவசத்தின் விளிம்பில் நின்றுகொண்டு மொத்தமாகத் தன்னை அவனிடம் ஒப்படைக்கும் ஒரு ஆன்மாவின் துடிப்பும் சிலிர்ப்பும் இருப்பதைக் கண்டுகொண்டான்.
அவளின் உடல்மொழியே அவனுக்குப் பதிலாய்!
குங்குமம் சிரிக்கும் அவளது நெற்றியில் அவன் அழுத்தமாய் முத்தமிட, ஈஸ்வரிக்குள் மிச்சச்சொச்சம் இருந்த நாணமும் விடைபெற்றது.
மழைக்கால மேகமொன்று மலைச்சிகரங்களை வருடிப்போவது போல மென்மையாய் அரவணைப்பாய் பவிதரனின் ஆலிங்கனம் அவளைத் தாபத்தில் மூழ்கடிக்கப் போதுமானதாய்!
அவனது இதழ்கள் அவளது கன்னக்கதுப்புகளையும், செவிமடலையும் வருடி கவிதை எழுதியபோது தாம்பத்திய வீணை அங்கே மீட்டப்பட்டது.
இதழ்கள் இணைந்துகொண்டு சிருங்கார நாதமிசைக்கும் வேளையில் நிகழ்ந்த அந்த அழகிய கூடலில் காலமும் நேரமும் கூட அர்த்தமற்றதாய் மாறிப்போயின.
அவனது அணைப்பில் அவள் உருகிவிட அவளுக்குள் ஐக்கியமானான் பவிதரன். காதலாய் உடல்கள் சங்கமிக்கையில் அங்கே காமமும் கூட புனிதத்துவம் பெற்றுவிடுமாம்! மோகம் கூட முக்தியுறுமாம்!
அத்தகையதொரு அழகான பொழுதில் மெய்மறந்து மெய் கலந்து மெய்யுருகி இணைந்து போனார்கள் பவிதரனும் ஈஸ்வரியும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

