“வாய்ப்புகள் நம்மளைத் தேடி வரட்டும்னு காத்திருப்பாங்க சில பேர். ஜன்னல் கதவை மூடி வச்சுட்டுச் சூரிய வெளிச்சம் வரலனு சொல்லுறதுல எப்பிடி அர்த்தமில்லயோ அப்பிடித்தான் வாய்ப்புகள் வரட்டும்னு காத்திருக்குறதுலயும் அர்த்தமில்ல. நமக்கான வாய்ப்பு வரலனா நம்மளே முன்வந்து ஒரு பாதைய உருவாக்கி நடக்க ஆரம்பிச்சிடனும். இல்லனா நம்ம கனவு காலம் முழுக்க கற்பனையாவே முடிஞ்சிடும்”
-பவிதரன்
மேரு பில்டர்சில் ஈஸ்வரி நன்றாகப் பொருந்திக்கொண்டாள். சுமதியிடம் வேலையைக் கற்றுக்கொள்வது அவளுக்குச் சிரமமாக இல்லை. வணிகவியலில் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் சேர்ந்ததும் கணினியைக் கொடுத்து கணக்குவழக்கைப் பார்க்குமாறு சொல்லிவிடுவார்கள் என்று அவளுக்கு இருந்த மாயை உடைந்தது.
தன்னைக் கற்றுக்குட்டி என்று பவிதரன் விளித்ததில் உண்டானச் சுணக்கம் அங்கிருக்கும் வேலையின் தன்மையை அறிந்த பிற்பாடு முற்றிலும் நீங்கியது.
பணம் புழங்குமிடம், பணத்தை வைத்து எழுதப்படும் கணக்குவழக்கு இதெல்லாம் அனுபவமில்லாத ஒருத்தியிடம் கொடுக்கவேண்டுமென எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமெனப் புரிந்துகொண்டாள் அவள்.
அதே நேரம் அவ்வபோது தன்னைக் கடக்கிற பவிதரனின் பார்வையுடைய தீட்சண்யம் அவளது இதயத்தின் ஆழத்தை வாசிக்க முயல்வதாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பவிதரனுக்கு ஒரு முதலாளிக்குரிய மரியாதையைத் தர அவள் சுணங்கியதில்லை. ஆனால் அவனது குடும்பத்தினரின் அதிகாரப்போக்கும் துச்சமான நடத்தையும் பற்றி முன்கூட்டியே அறிந்தவள் என்பதால் கண்ணுக்குத் தெரியாத வேலி ஒன்றை போட்டுக்கொண்டு அதற்குள் இருந்தபடி அவனிடம் படுகவனமாக பணிரீதியானப் பேச்சை மட்டும் வைத்துக்கொண்டாள் ஈஸ்வரி.
அதிகாரமும் செருக்கும் கொண்ட பணக்காரச்சூழலின் நிழல் கூட தன் மீது படுவதில் அவளுக்கு விருப்பமில்லை.
இன்னொரு பக்கம் சுமதி கற்றுக்கொடுத்த அனைத்தையும் கர்மசிரத்தையோடு கற்றுக்கொண்டாள். சரியாக அவளது பணியின் இரண்டாம் வாரத்தில் நிறுவனத்தின் அலுவலக ஊழியர்களைத் தவிர்த்து கட்டுமான வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்கானச் சம்பளக் கணக்கு, சைட்டில் அவர்களுக்குச் செய்யப்படும் சில்லறை கணக்குகளை எல்லாம் பார்க்கும் பணி அவளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூடவே ஒரு கணினியும் கொடுக்கப்பட குஷியாகிவிட்டாள் ஈஸ்வரி.
அந்த வாரத்தின் சனிக்கிழமை சம்பளப் பட்டுவாடா செய்ய அவள்தான் கே.டி.சி நகர் சைட்டுக்குப் போகவேண்டுமெனச் சொல்லிவிட்டான் பவிதரன்.
“நானா?” என முதலில் திகைத்தாள்.
“ஆமா! இதுநாள் வரை சுமதி மேடம் போவாங்க. இனிமே நீதான் போகணும். பேமெண்ட்டுக்குத் தனி ரிஜிஸ்டர் இருக்கும். வவுச்சர் புக்கும் இருக்கும். ரெண்டையும் சுமதி மேடம் கிட்ட வாங்கிட்டு ஈவ்னிங் நான் சைட்டுக்குப் போறப்ப என் கூட வா. முதல் நாள்ங்கிறதால நான் கூட இருந்து சொல்லித் தர்றேன்” என்றான் பவிதரன்.
ஈஸ்வரிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. சரி இதுவும் ஒரு அனுபவம்தானே எனத் தலையசைத்துவைத்தாள். மனதுக்குள்ளோ ‘இவனுடன் போகவேண்டுமா?’ என்ற கேள்வி பரபரப்பையும் படபடப்பையும் விதைத்தது.
மாலையில் பவிதரன் கிளம்பியபோது பணக்கட்டு அடங்கிய கவரை ஈஸ்வரியிடம் கொடுத்த சுமதி கூடவே ரிஜிஸ்டர் மற்றும் ரசீது புக் ஒன்றையும் கொடுத்தார்.
“சம்பளத்தைக் குடுத்ததும் அவங்க கிட்ட இந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து வாங்கிடு. சிலர் தம்ப் இம்ப்ரெசன் வைப்பாங்க. இந்த ஸ்டாம்ப் பேட் வச்சுக்க. இது வவுச்சர் புக். இதுல அமவுண்ட் எழுதி இதுலயும் அவங்க கிட்ட ஒரு கையெழுத்து வாங்கி இங்க உன்னோட கையெழுத்தைப் போட்டுடு”
“எதுக்கு அக்கா இவ்ளோ பண்ணனும்? பேங்க் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடலாமே?”
“நமக்குச் சேலரி பேங்க் அக்கவுண்டுக்குத்தான் வரும். இது சைட்டுல வேலை பாக்குறவங்களுக்கான புரொசிஜர். நம்ம கம்பெனில இதுதான் வழக்கம்”
தலையாட்டியவள் பவிதரன் வரவும் சுமதி கொடுத்த அனைத்தையும் தனது ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு அவனோடு கிளம்பத் தயாரானாள்.
“போகலாமா?”
“ம்ம்”
அலுவலகத்தை விட்டு வெளியேறி படிகட்டுகளில் இறங்கும்போதே “அடுத்த வாரம் நீயே சனிக்கிழமை ஈவ்னிங் இதே டைமுக்குக் கிளம்பிடு. இன்னைக்கு உனக்கு முதல் தடவைங்கிறதால நான் வர்றேன்” என்று கூறினான் அவன்.
“ம்ம்”
சட்டென நடப்பதை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் பவிதரன்.
“ஏன் நிக்குறிங்க? போங்க”
படிகட்டுகளைக் கையால் காட்டினாள் ஈஸ்வரி.
“நீயென்ன ரொம்ப நல்லப்புள்ளையா இருக்குற? என்ன சொன்னாலும் சரி சரிங்கிற. நான் உன்னை என்னமோ நினைச்சேன்”
சீண்டியவன் அவள் பதிலளிக்கும் முன்னரே படிகளில் காலைப் பதித்து இறங்கினான்.
மலர்விழியின் தோழி என்பதால் சந்தித்தத் தருணங்கள் அவள் மீது காரணமற்ற ஆர்வத்தை அவனுக்குள் விதைத்திருந்தது என்பது உண்மை.
சுமதி கொடுத்துவிடும் அலுவலகக் கோப்புகளைத் தன்னிடம் நீட்டும்போதும், ஆலோசனைக் கூட்டங்களில் அமரும்போதும், அவளது முகத்தில் படரும் தொழில்முறை விலகல் அவனுக்குப் புரியாமல் இல்லை. அதே நேரம் தனது ஆர்வப்பார்வையைச் சுருக்கிக்கொள்ளும் எண்ணமும் பவிதரனுக்கு இல்லை.
இப்போது ஈஸ்வரிக்கோ தனது விலகலைக் கண்டுகொண்டானே என்ற தவிப்பு. விரல்களால் ஹேண்ட்பேக்கை இறுகப் பற்றிக்கொண்டவளுக்குத் தன்னைப் பற்றி அவன் என்ன கணிப்பு வைத்திருந்தான் என்று அறியும் ஆர்வம் மனதுக்குள் துளிர்ப்பதாய்!
“என்னமோ நினைச்சேன்னா என்ன அர்த்தம்?” வரவழைத்துக்கொண்டு நிமிர்வோடு துடுக்காகவே வினவினாள்.
“உலகமகா வாயாடினு நினைச்சேன்” சொல்லும்போதே நமட்டுச்சிரிப்பு பவிதரனிடம்.
தரைத்தளம் வந்துவிட்டது. தரிப்பிடத்துக்கு நடந்தார்கள் இருவரும்.
“அதுக்குனு சம்பளம் குடுக்குற முதலாளி கிட்டவா அரட்டை அடிக்க முடியும்? அது மரியாதையா இருக்காதுல்ல?”
ஈஸ்வரி சீரியசாகச் சொல்ல மெச்சுதலாகப் புருவம் உயர்த்தியவன் காரை நெருங்கியதும் கதவைத் திறந்துவிட்டான்.
ஈஸ்வரி ஒரு நொடி தயங்கி பின்னர் அவனைக் கடந்து உள்ளே அமர்ந்ததும் கதவை அடைத்தவன் சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.
கார் அந்த வணிக வளாகத்தை விட்டு வெளியேறி சாலையில் வேகமெடுத்தது.
ஈஸ்வரி அலுவலகத்தில் உதித்த சந்தேகத்தை அவனிடம் இப்போது வினவினாள்.
“எதுக்கு ஹாட் கேஷா கையில சம்பளத்தைக் குடுக்குறிங்க? பேங்க் அக்கவுண்டுல போட்டுவிட்டா இந்தத் தொ… இந்தளவுக்கு வேலை பாக்கணும்னு அவசியமில்லல்ல”
தொல்லை என்ற வார்த்தையை விழுங்கிவிட்டு அவள் கேட்ட சந்தேகத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“இந்த வேலைக்கு வர்றவங்க மேக்சிமம் படிக்காத மக்கள். அவங்க அக்கவுண்டுல காசைப் போட்டு, அதை அவங்க ஏ.டி.எம்ல எடுக்க யாரோ ஒருத்தரோட உதவிக்குக் காத்திருக்குறது எல்லாம் தேவையில்லாத தொல்லையா எனக்குத் தோணுச்சு. அதனாலதான் பணமா குடுக்குறோம்”
“எங்க ஊர் ராமசாமியண்ணன் உங்க கிட்ட தானே மேஸ்திரியா வேலை பாக்குறார். அந்தண்ணன் ஆண்ட்ராய்ட் போன் தான் வச்சிருக்கார். அவருக்கு ஏ.டி.எம் யூஸ் பண்ணத் தெரியாதா?”
“ஆண்ட்ராய்ட் போன் வச்சிருக்குற எல்லாருக்கும் எல்லா மெக்கானிசத்தையும் யூஸ் பண்ணத் தெரியணும்னு எந்தக் கட்டாயமும் இல்லயே”
ஈஸ்வரி அவனை ஓரக்கண்ணால் அளவிட்டவள் “எல்லா கேள்விக்கும் நீங்க பதில் வச்சிருப்பிங்களோ?” என்று இழுக்க
“எனக்குப் பதில் தெரிஞ்ச கேள்விய மட்டுமே நீ கேக்குறதா கூட வச்சுக்கலாம்” என்றான் அவன்.
“இப்பிடி டக்கு டக்குனு பேசுற ஆள் கிட்ட எங்க இருந்து அரட்டை அடிக்குறது?”
சலித்துக்கொண்டவளைச் சன்னச்சிரிப்போடு ஏறிட்டான் பவிதரன்.
“அது மட்டுமில்லாம உங்க கிட்ட நான் என்ன பேசுறது? உங்க குணம் எப்பிடினு கூட எனக்குத் தெரியாது” வெளியே வேடிக்கை பார்த்தபடியே சொன்னாள் அவள்.
“மலர் சொன்னது இல்லையா?”
“ம்ம்! சொல்லிருக்கா. அதை வச்சு மட்டும் ஒரு ஆளை எப்பிடி எடை போட முடியும்? அவ சொன்னதைத் தாண்டி நான் நிறைய சம்பவங்களை நேர்ல பாத்திருக்கேன். அதுவும் உங்க வீட்டாளுங்க சம்பந்தப்பட்டது. அப்புறம் எங்க இருந்து உங்க கிட்ட பேசுறது?”
“சோ எங்க வீட்டாளுங்களை வச்சு என்னை நீ எடை போடுற?”
“அது… ப்ச்… நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளைனு பழமொழியே இருக்கு”
அவள் எச்சரிக்கையோடும் ஒதுக்கத்தோடும் தன்னை அணுகுவதற்கானக் காரணத்தை எப்படியோ கண்டறிந்துவிட்டான் பவிதரன்.
நியாயமானக் காரணமாகவே அவனுக்கும் தோன்றியது.
ஈஸ்வரி மலர்விழியும் அவளது குடும்பமும் தனது குடும்பத்தாரால் அடைந்த துன்பங்களை அருகிலிருந்து பார்த்து வருந்தியவள். என்ன தான் தன் மீது மலர்விழிக்கும் அவளது குடும்பத்துக்கும் பாசம் இருந்தாலும் தனது குடும்பத்தினரை மனதில் வைத்துதானே ஈஸ்வரி தன்னை எடைபோடுவாள்!
பெருமூச்சு விட்டவன் காரை கே.டி.சி நகருக்கு விரட்டினான். ஒரு வழியாகச் சைட்டும் வந்துவிட்டது.
கார்க்கதவைத் திறக்க ஈஸ்வரி கொஞ்சம் திணறினாள் எனலாம். கார்ப்பயணம் அவளுக்குப் பழக்கமற்றது என்பதால் உண்டான திணறல் இது.
“இரு! நான் திறந்துவிடுறேன்”
பவிதரன் கதவைத் திறக்க அவள் பக்கமாய் சரிந்தபோது ஈஸ்வரி மெழுகுச்சிலையாய் உறைந்து போனாள். கண்களைக் கூட இமைக்காமல் அவள் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த விதம் பவிதரனின் விழிகளைக் கவர்வதாய்!
தனது விழிகளை அவளது வதனத்தில் நிறுத்தியவன் அவளைப் பார்த்த விதம் நிச்சமாய் ஒரு முதலாளி தனது தொழிலாளியைப் பார்க்கும் விதமேயில்லை.
ஒரு கவிஞன் தான் எழுதிய கவிதையில் தனக்குப் பிடித்தமான வரிகளை ஆழ்ந்து ரசித்துப் படிப்பானே, அப்படியொரு ரசனையுடன் கூடிய தீவிரமானப் பார்வை அது!
ஏனோ காருக்குள் ஆக்சிஜன் குறைந்தது போல உணர்ந்தாள் ஈஸ்வரி.
பிஞ்சுப்பறவையொன்று பறக்கத் தவிப்பது போல அவளும் அவன் விலகுவதற்காக தவித்தாள் எனலாம்.
அவளை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாதவனாய் பவிதரன் கார்க்கதவைத் திறக்க உதவியதும் நன்றியுணர்ச்சியோடு பார்வையை மற்றும் பரிமாறிக்கொண்டவளுக்கு இப்போதுதான் மூச்சு சரியாய் வந்தது.
‘எல்லாரும் மூக்கு வழியா ஆக்சிஜனைச் சுவாசிச்சா, இந்தாளு மட்டும் பார்வை வழியா சுவாசிப்பார் போல. பக்கதுல வந்ததுல இருந்து மூச்சே நின்னு போச்சு எனக்கு’ இதெல்லாம் ஈஸ்வரியின் மனதின் குரல் மட்டுமே!
அவளது நன்றியுணர்ச்சி ததும்பும் பார்வைக்கு மறுமொழியாய் பவிதரனின் இதழ்கள் முறுவலிக்க இருவரும் காரிலிருந்து இறங்கி, கட்டுமான வேலையை முடித்துவிட்டுக் கை கால்களைக் கழுவிக்கொண்டிருந்த ஊழியர்களை நோக்கிச் சென்றார்கள்.
ட்ரம்மிலிருந்த தண்ணீரை வைத்து கை கால்களில் ஒட்டியிருந்த சிமெண்ட், கான்க்ரீட் தூசுக்களைக் கழுவிக்கொண்டிருந்தார்கள் சிலர். சிலரோ கை கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.
மாலை வெயில் அங்கிருந்த செங்கற்களின் மீது மங்கலாகப் படர்ந்திருந்தது. கான்க்ரீட் கலவை கலக்கும் இயந்திரம் ஓய்ந்திருந்ததால் அந்த இடமே ஒருவிதமான அமைதிக்குத் திரும்பியிருந்தது.
ராமசாமி ஈஸ்வரியைக் கவனித்துவிட்டார்.
“நீ தம்பி ஆபிசுலயா வேலை பாக்குறல?”
“ஆமாண்ணே! ரெண்டு வாரமாகுது” என்றாள் ஈஸ்வரி மலர்ச்சியோடு.
“இனிமே ஈஸ்வரிதான் சம்பளம் குடுக்க வருவாண்ணே!” – பவிதரன்.
“சரிங்க தம்பி. நான் ஆளுங்களைக் கூப்பிடுறேன்”
மேஸ்திரி, அவருக்குக் கீழ் பணியாற்றும் கொத்தனார்கள், சிற்றாள்கள் என அனைவரும் வர ஈஸ்வரி பணத்தை எண்ணி அவர்களுக்குக் கொடுக்கலானாள்.
அவளுக்குச் சில விசயங்களைச் சொல்லிக்கொடுத்துவிட்டுச் சற்று தள்ளி போய் நின்று கொண்டான் பவிதரன். கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் தூண்கள் கான்க்ரீட் உபயத்தில் உயர்ந்து எழுந்திருந்தன. அவனுக்குக் கட்டிடங்கள் மேலே எழுவதைப் பார்ப்பதில் அலாதி பிரியமுண்டு.
தூண்களுக்காக எழுப்பப்பட்ட கான்க்ரீட்டைச் சுற்றி இரும்பு தகரங்களை வைத்து அடைத்திருந்தார்கள். கான்க்ரீட் செட் ஆனதும் தான் தகரத்தைப் பிரித்து எடுப்பார்கள்.
அதில் ஒரு தகரம் மட்டும் துரு பிடித்து நீட்டிக்கொண்டிருக்க பவிதரன் அதைக் கவனிக்கவில்லை.
சரியாக அந்நேரத்தில் அன்னையிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது அவனுக்கு.
“சொல்லுங்கம்மா. என்ன விசயம்?”
நிலவழகி வருங்கால மருமகன் வைத்த நிபந்தனைகளுக்குப் பவிதரன் சம்மதித்ததைக் கேள்விப்பட்டுப் பேச அழைத்ததாகக் கூறவும் அதிருப்தியான பெருமூச்சு வந்தது பவிதரனிடம்.
“நான் சம்மதிக்கலனா நீங்க கால் பண்ணிருக்க மாட்டிங்கல்ல?”
“என்ன பவி இப்பிடியெல்லாம்…”
“உங்களால தெளிவா பதில் சொல்ல முடியாது. விடுங்க! நான் எதிர்பாக்கல”
“அப்பிடி இல்லய்யா. மது பொட்டப்புள்ளை. அவ வாழ்க்கை செட்டில் ஆக நாம ஏன் தடையா இருக்கணும்?”
“தடையா யாரும் நிக்கலம்மா. அவ ஒழுங்கா அவளோட வாழ்க்கைய மட்டும் வாழ்ந்தா என்னை விட அதிகமா சந்தோசப்படுறவன் வேற யாருமில்ல”
“புரியுதுய்யா! நீ அவளுக்குக் கெட்டது நினைக்கமாட்ட. ஆனா சூழ்நிலை உன்னை அவளுக்கு எதிரா நிறுத்தி வைக்குற மாதிரி இருக்கே. எனக்கும் உன் அப்பாக்கும் நீங்க மூனு பேரும் ஒற்றுமையா இருக்குறதை விட வேற என்ன வேணும் சொல்லு. மது கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதுனா உனக்கும் ஒருத்திய பாத்து..”
“அதெல்லாம் வேண்டாம்மா. கல்யாணம்ங்கிற வார்த்தையே கசக்குது எனக்கு. முதல்ல மது நல்லபடியா செட்டில் ஆகட்டும். அப்புறம் பாத்துக்கலாம்”
விட்டேற்றியாய் சொன்னவன் கையை அழுந்த பதித்திருந்தது கான்க்ரீட் தூணைச் சுற்றியிருந்த இரும்பு தகரத்தில்.
நிலவழகியிடம் பேசிவிட்டு அதே அழுத்தத்தோடு கையை இழுத்தவன் இரும்பு தகரத்தின் துருப்பிடித்த கூர்முனையில் உள்ளங்கையைக் கிழித்துக்கொண்டான் அவனை அறியாமல்.
சுரீரென வலியெடுத்து சூடாய் உதிரம் எட்டிப் பார்க்க ஹ்ம்ம்…” என்று ஒரு சிறிய முனகல் அவனிடம். வலியில் சுழித்த முகத்தோடு அவனது குரல் ஈஸ்வரியின் காதை எட்டியது.
கையை உதறியபடி அவன் நிற்பதும், அவன் நிற்குமிடத்தில் சில துளி உதிரம் சிந்திக் கிடப்பதும் அவளது பார்வையில் விழவும் சட்டென எழுந்தாள்.
“அண்ணே நீங்க இதைப் பாத்துக்கோங்க” என்று அவசரமாகச் சொல்லிவிட்டுத் தனது ஹேண்ட்பேக்கிலிருந்து கைக்குட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு பவிதரனை நோக்கி விரைந்தாள்.
“என்னாச்சு? எப்பிடி கையில காயம் ஆச்சு?” பதற்றம் ஈஸ்வரியின் குரலில்.
அவனிடம் வினவியபடி உள்ளங்கையைப் பார்த்தவள் நன்றாகக் கிழித்திருப்பதைப் பார்த்ததும் “ஷ்ஷ்” என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
இது போல காயங்கள், இரத்தம் இதெல்லாம் ஈஸ்வரிக்கு அலர்ஜி. அலர்ஜி என்பதை விட இம்மாதிரி சூழல்களில் அவளுக்கு அந்தக் காயத்தின் வலியைத் தானே உணர்வது போல தோன்றும்.
பொதுவாக ஒருவருக்கு அடிபடும்போது, நாம் அவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம். இதைக் கரிசனம் எனலாம். ஆனால், சிலருக்கு அந்தக் கரிசனம் மிகவும் அதிகமாகி அது அவர்களுக்கே வலியாக மாறும். இதை ‘Empathic Distress’ என்பார்கள். இதில் மற்றவர்களின் வலியைப் பார்க்கும்போது இதயம் பாரமாவது போன்ற உணர்வும், ஒருவித வலியும் வயிற்றிலிருந்து குமட்டலும் ஏற்படும்.
ஈஸ்வரியின் நிலையும் அதுவே. அதையும் தாண்டி அங்கிருந்த இளைஞன் ஒருவனிடம் தண்ணீர் கொண்டு வருமாறு சொல்லி காயத்தில் தண்ணீரை ஊற்றி உதிரத்தைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுத் தனது கைகுட்டையைக் காயத்தில் சுற்றினாள்.
“எங்க கிழிச்சிக்கிட்டிங்க?” எனக் கேட்டவளின் பார்வை அனிச்சையாக அருகிலிருந்த இரும்புத் தகரத்தைப் பார்த்ததும் அதன் நுனியில் ஒட்டியிருந்த உதிரத்தை வைத்து அங்கே தான் கையைக் கிழித்திருப்பான் என அறிந்துகொண்டாள்.
“இப்பிடியே விடாதிங்க. துருப்பிடிச்ச தகரத்துல கிழிச்சா கண்டிப்பா டி.டி இன்ஜெக்சன் போடணும். இல்லனா கஷ்டம்”
அந்த நிமிடத்தில் அவனிடம் நிலவியது ஒரு கனமான மௌனம் மட்டுமே. சில அடிகள் தொலைவில் நின்று கொண்டிருந்த மேஸ்திரியின் சத்தமோ, தொழிலாளர்களின் பேச்சோ அவனது காதுகளில் விழவில்லை.
“ஹாஸ்பிட்டலுக்குப் போங்கனு சொன்னேன்” அவன் சிலையாய் நிற்பதைப் பார்த்துவிட்டு அழுத்தமாய்ச் சொன்னாள் ஈஸ்வரி.
“இருக்கட்டும். இன்னும் நீ சம்பளம் குடுத்து முடிக்கலயே?”
“அதை நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க. இங்க இருந்து ஆட்டோல வீட்டுக்குப் போயிடுவேன் நான்”
பவிதரனுக்கும் உள்ளங்கையில் காயமானது எரிச்சல் எடுத்தது. அதைத் தாண்டி அவளது குரலில் தெரிந்த அக்கறை அவனைக் குளிர்விப்பதாய்!
சரியெனத் தலையாட்டியபடி அங்கிருந்து கிளம்பினான்.
“நீ மீதி சம்பளத்தையும் செட்டில் பண்ணிட்டு இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குக் கிளம்பு”
அவளது பாதுகாப்பு அவனுக்கு முக்கியம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனான் பவிதரன்.
சில்லென்று இதயத்தில் ஒரு இதம் பரவியது. நாற்காலியில் அமர்ந்தவள் காரை நோக்கிச் செல்பவனைப் பார்த்தாள்.
‘இந்தக் கையை வைத்துக்கொண்டு எப்படி காரை ஓட்டுவான் இவன்?’
யோசித்தவள் “ராமசாமிண்ணே! அவங்க கையில ஆழமா காயம் பட்டிருக்கு. உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியும்ல? அவங்களை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்களேன்” என்று சொல்ல சம்பளத்தை வாங்கிக் கையெழுத்திட்டு முடித்த ராமசாமியும் “சரில! நான் போறேன்” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.
“தம்பி தம்பி!” வேகமாக ஓடி வந்தவரைப் பார்த்ததும் கார்க்கண்ணாடியைக் கீழிறக்கினான் பவிதரன்.
“உங்க கையில காயம் ஆழமா இருக்குதாம். ஈஸ்வரி புள்ளை உங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிச்சு. நீங்க காரை ஓட்டுனா கை இன்னும் வலிக்குமே?’
பவிதரன் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்தான். கண்ணுக்குத் தெளிவாய்த் தெரியும் தொலைவில்தான் ஈஸ்வரி சம்பளப்பட்டுவாடா செய்துகொண்டிருந்தாள்.
அவனது பார்வை அவளுக்கு உறுத்தலைக் கொடுத்ததோ என்னவோ, திரும்பிப் பார்த்தாள்.
இருவரது பார்வையும் ஒரு கோட்டில் சந்தித்துக்கொண்டன. சந்தித்த நொடிதனில் சற்று முன்னர் உணர்ந்த இதம் இன்னும் அதிகமாய் ஈஸ்வரியின் இதயத்தில் நீள்வதாய்! அவளது அக்கறையில் குளிர்ந்திருந்த பவிதரனின் மனமோ இப்போது இன்னும் அதீதமாய் அந்தக் குளிர்ச்சியில் இலயிப்பதாய்!
தனது காயம் ஈஸ்வரியின் இன்னொரு அக்கறையான முகத்தை அறிமுகப்படுத்தியதில் பவிதரனுக்கு மகிழ்ச்சியே! ஏன் இந்த மகிழ்ச்சி? இந்த ஆராய்ச்சியில் எல்லாம் அவன் இறங்கவில்லை.
மற்ற அனைவரும் தனக்காகக் கவலைப்பட்டாலும் அதை விட அதிகமாய் தன் மீதான அக்கறையில் ஈஸ்வரி நடந்துகொண்ட விதம் அவளை வெறும் ஊழியையாக இனி பார்க்க முடியாது என்ற எண்ணத்தைப் பவிதரனுக்குள் வலுவாக்கியது.
வார்த்தைகள் கேட்காதத் தொலைவில் இருந்தாலும் இருவரும் உணர்ந்த இந்த மௌனம் பேசாத வார்த்தைகளை விட அதிக அர்த்தங்களைச் சுமந்திருப்பதாய் உணர்ந்தார்கள் ஈஸ்வரியும் பவிதரனும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

