ஒரு பழமைவாதியைக் கோபப்படுத்த வேண்டுமாயின் அவரிடம் பொய் கூறுங்கள், அதே நேரம் ஒரு சுதந்திரமான பெருந்தன்மைவாதியைக் கோபப்படுத்த வேண்டுமாயின் அவரிடம் உண்மையைக் கூறுங்கள்!
-தியோடர் ரூஸ்வெல்ட்
ராமமூர்த்தி எதிர்பார்த்த மாநாட்டிற்காக மதுரை ஒத்தக்கடை பகுதியில் பிரம்மாண்ட மேடையும் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் அமர எண்பது ஏக்கர் அளவில் மைதானமும் தயாராக இருந்தது. இருபத்தெட்டாம் தேதி மாலை மூன்று மணியளவில் தொடங்கவிருக்கும் அம்மாநாட்டில் சிறப்புரை ஆற்றப்போவது ராமமூர்த்தி என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது.
அவரது பேச்சை மாநாட்டிற்கு வருகை தரும் உறுப்பினர்கள் கேட்கும் வகையில் மேடையின் இரு பக்கமும் எல்.ஈ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. கூடவே ஆங்காங்கு மைதானத்தில் உறுப்பினர்கள் அமரும் இடங்களுக்கு இடையே பெரிய தொலைக்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டு ஏற்பாட்டை சந்திரகுமாரின் உதவியாளர் மூலம் வீடியோ கான்பரன்சில் பார்த்த அருள்மொழி மாநாட்டு மேடை பின்னணியில் படமாக இருந்த தந்தை மற்றும் சகோதரனைப் பார்த்ததும் நெகிழ்ந்து போனான்.
ராமமூர்த்தி மதுரை வந்தடைந்த தகவலை அவனிடம் தெரிவித்த சந்திரகுமாரின் உதவியாளர் “நீங்க மூனு மணிக்கு மதுரை ஏர்ப்போர்ட்டுக்கு வந்ததும் நம்ம வண்டில நான் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன் சார்… எல்லா ஏற்பாடும் ரகசியமா இருக்கணும்னு நீங்க சொன்னதால உங்களுக்கு முறைப்படி வரவேற்பு குடுக்க முடியாத சிச்சுவேசன்” என்று கூற
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நோ நோ! வரவேற்பு, ஊர்வலம்ங்கிற மாதிரி ட்ராமாஸ்ல எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல… நான் அங்க வர்றது கட்சி மெம்பர்சை மூனு குழுவா பிரிச்சு அதுக்கு தலைவர்களை நியமிக்கிறதுக்குத் தான்… சோ அந்த மாதிரி டைம்வேஸ்ட் பண்ணுறதுக்கு பதிலா உருப்படியா கட்சியோட முக்கியமான பிரமுகர்கள் கூட நான் கொஞ்சம் பேசணும்னு ஆசைப்படுறேன்” என்று பதிலளித்தான் அருள்மொழி.
அத்துடன் அவர்களின் உரையாடல் முடிந்துவிட சந்திரகுமாரிடம் வந்த அவரது உதவியாளர் அருள்மொழியிடம் மாநாட்டு ஏற்பாடுகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக காட்டிவிட்டதாக கூறினார்.
“நாளைக்கு என் அரசியல் வாழ்க்கைல முக்கியமான நாள்… இத்தனை நாள் குனிஞ்சு கும்பிடு போட்டு வாழ்ந்ததுக்கு நாளைக்கு ஒரு முடிவு வரப்போகுது” என்று எண்ணியவராய் தனது உதவியாளரிடம் அருள்மொழியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வினவ
“ப்ரைவேட் பவுன்சர்ஸ் நாலு பேரை அப்பாயிண்ட் பண்ணிருக்கேன் சார்… ஏர்ப்போர்ட்ல சாரை பிக்கப் பண்ணி ஒத்தக்கடை மாநாட்டு மேடைக்கு அழைச்சிட்டு வர்ற வரைக்கும் அவங்க சார் கூடவே இருப்பாங்க… அப்புறம் மாநாடு முடிஞ்சதும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நடக்கப்போற மீட்டிங்குக்கும் அவங்க சாரோட வருவாங்க” என்று உதவியாளர் பதிலளிக்க சந்திரகுமாரின் முகத்தில் திருப்தி பரவியது.
அதே நேரம் மதுரையில் அவருக்குச் சொந்தமான பங்களாவில் இளைப்பாறிக் கொண்டிருந்த ராமமூர்த்தி தலைமைக்குத் தனது செல்வாக்கைக் காட்டப்போகும் நாளைய மாநாட்டுக்கான கனவில் மூழ்கியிருந்தார்.
இவ்வாறு அனைவரும் எதிர்பார்த்த அம்மாநாட்டுக்காக டிசம்பர் இருபத்தெட்டாம் தேதி காலையிலிருந்தே தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து குமிய ஆரம்பித்தனர்.
பேனர் கலாச்சாரத்தால் பல உயிர்கள் போனாலும் அதை பற்றிய கவலை எல்லாம் எங்களுக்கு இல்லை என்பது போல அந்த மாநாட்டைப் பறை சாற்றும் பேனர்கள் மதுரை நகரின் முக்கிய சாலைகளிலும், அலங்கார வளைவுகளிலும் அலங்கரித்தன.
அனைத்திலும் ராமமூர்த்தி முப்பத்திரண்டு பற்களை மறைக்காது காட்டி புன்னகைத்து கரம் குவித்தபடி நின்றிருந்தார். சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் சிறு வட்டத்தில் ஒடுங்கிவிட அருள்மொழியின் முகம் அவருக்குப் பின்னணியில் வாட்டர்மார்க் போல அச்சடிக்கப்பட்டிருந்த விதமே அவரது எண்ணப்போக்கைச் சொல்லாமல் சொன்னது.
வந்திருந்த தொண்டர்களை மாவட்ட வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரை வைக்கும் பணி மதியம் ஒரு மணியளவில் ஆரம்பித்தது. மைதானத்தில் போடப்பட்டிருந்த மாநாட்டுப்பந்தல் வெயிலில் இருந்து தொண்டர்களைக் காப்பாற்றியது.
இரண்டு மணிக்கு மாநாட்டு மைதானம் நிரம்பிவிட மைதானத்தின் இரு பிரிவாக போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு நடுவே சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
மூன்று மணியளவில் ராமமூர்த்தி வந்துவிட கட்சியின் முக்கியப்பிரமுகர்கள் அனைவரும் மேடையில் அணி வகுத்திருக்க அவர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார் கவியன்பன். அவரை வைத்து தான் மாநாடு பற்றிய தகவலை தலைமையின் காதில் போட்டிருந்தார் ராமமூர்த்தி. தலைமையைப் பொறுத்தவரை மதுரையில் அவர்களது ஓட்டுவங்கியைப் பலப்படுத்தும் நிகழ்வாக எண்ணியே இம்மாநாட்டை அனுமதித்திருக்கின்றனர் என்பது ராமமூர்த்தியின் எண்ணம்!
மாநாட்டு மைதானத்தில் வந்திறங்கியவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் பொன்னாடைகளுடன் வரவேற்பு பலமாக இருக்கவும் பூரித்துப் போனவர் சந்திரகுமார், மந்திரமூர்த்தி மற்றும் தெய்வநாயகம் மூவரும் காலில் விழாத குறையாக காட்டியப் பணிவை அனுபவித்தபடி சிவப்புக்கம்பளத்தில் நடைபோட்ட போது கட்சித்தலைமையைக் கைப்பற்றி விட்டதாகவே எண்ணிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
அப்படியே கம்பீரமாக மேடையேறியவருக்கு அங்கிருந்த பிரமுகர்கள் எழுந்து வணக்கம் கூறினர் கட்சிப்பிரமுகர்கள். அவர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
வழக்கம் போல கட்சியின் கடந்த கால புகழ், முடிவடைந்த ஆட்சியின் சாதனைகள், முன்னாள் தலைவர் அவரது மகனது மறைவு என ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்ட மாவட்ட பிரமுகர்கள் பெரிய உரையாக ஆற்றி முடித்தனர்.
தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்களின் உணர்ச்சிகரமான உரையைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் சிலர் வேறு வழியின்றி அமர்ந்திருப்பவர்களைப் போலவே விதியே என்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மாநாட்டு மைதானம் தொண்டர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிய வேண்டுமென ராமமூர்த்தி கட்டளையிட்டிருந்ததால் அந்தந்த மாவட்டத்தலைமையின் கட்டளைப்படி பணம் கொடுத்து அழைத்து வரப் பட்டவர்கள் அவர்கள்! அவர்களுக்குக் கொடுத்த பணத்திற்காக கடனே என மாநாட்டுத்திடலில் அமர்ந்திருந்தனர்.
அடுத்து சிறப்புரை ஆற்ற மாநாட்டுத்தலைவரை அழைத்த தருணத்தில் தான் அந்நிகழ்வு நடந்தேறியது. பெரிய கோபுர வடிவில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டு நுழைவுவாயிலில் வந்து நின்றது ஒரு கார். அனைவரின் தலைகளும் மாநாட்டு நுழைவுவாயிலை நோக்கி திரும்ப அதிலிருந்து பவுன்சர்கள் நாற்புறமும் அரணாய் நிற்க இறங்கி வந்தான் அருள்மொழி.

மாநாட்டுத்திடலில் நடப்பவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அனைத்து தொலைக்காட்சித்திரைகளும் இப்போது மேடையை விடுத்து நுழைவுவாயிலை ஒளிபரப்பத் துவங்கின. எனவே கரம் கூப்பியபடி நடந்து வரும் அருள்மொழியின் உருவம் தொலைக்காட்சியில் வரவும் கண்டதும் அங்கிருந்த தொண்டர்களிடம் சலசலப்பு எழுந்தது.
மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த ராமமூர்த்தியோ வலது பக்கம் இருந்த பெரிய எல்.ஈ.டி திரையில் அவனது உருவத்தைப் பார்த்ததும் இடியோசை கண்ட நாகம் போல அதிர்ந்து போனார்.
இவன் இங்கே என்ன செய்கிறான் என்று அவர் யோசிக்கும் போதே தொண்டர்கள் மத்தியில் உற்சாக குரல்கள் எழும்பியது.
“தலைவர் வாழ்க!”
யாரோ ஆரம்பி வைக்க அந்தக் கோஷம் அடுத்த சில நொடிகளில் மாநாட்டு மைதானமெங்கும் பரவியது. அது நாராசமாக ராமமூர்த்தியின் செவிகளில் ஒலிக்க அவர் முகம் இருண்டது.
அதே நேரம் சந்திரகுமார் தெய்வநாயகத்திடம் கை குலுக்கினார்.
“சும்மா சொல்லக்கூடாதுய்யா… அங்கங்க நம்மாளுங்க வேலைய கரெக்டா செய்யுறானுங்க… ஆனா ஒன்னு இந்தக் கோஷம் எதுவும் புது தலைவரோட மனசைக் குளிரவைக்காது… நம்ம செய்யப்போற வேலை தான் அவர் மனசுல நம்ம பேரை பதிய வைக்கும்”
“வேலையெல்லாம் ஏற்கெனவே ஆரம்பிச்சாச்சு சந்திரா… தலைவர் மட்டும் மேடையில நம்ம பேரை சொல்லி குழு உறுப்பினர்கள் கிட்ட அறிமுகப்படுத்தட்டும்… அப்புறம் பாருய்யா, இந்த தெய்வநாயகத்தோட வேலைத்திறமைய”
“சரி சரி! ராமமூர்த்தி கண்ணு நம்ம பக்கம் திரும்புது… முகத்த சீரியஸா வச்சுக்க”
இருவரும் தங்களிடையே இரகசியமாக முணுமுணுத்துக் கொண்ட நேரத்தில் “தலைவர் வாழ்க” என்ற கோஷத்தின் சத்தம் இன்னும் இன்னும் அதிகரித்தது.
அருள்மொழி வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தவன் தன்னருகே நடந்து வந்து கொண்டிருந்த சந்திரகுமாரின் உதவியாளரிடம் “இவ்ளோ பேரையும் ஒரே இடத்துல கூட வச்சது பெரிய விசயம் தான்… உங்க பாஸ் கிட்ட நான் பாராட்டுனேன்னு சொல்லிடுங்க” என்க அவரது முகத்தில் பெருமிதம் மின்னியது.
“தலைவா” என்று அழைத்தபடி ஆங்காங்கே கட்சி சின்னம் பொறித்த டீசர்ட்டை அணிந்து கை நீட்டிய இளைஞர்களிடம் கை கொடுத்தபடியே முன்னேறினான்.
எழுந்து வணக்கம் சொன்னவர்களை அமருமாறு பணித்தபடி மேடையை நெருங்கியவனின் கண்கள் ராமமூர்த்தியை வட்டமிட்டன.
இந்தக் கூட்டத்தின் தலைவன் நான் என்ற எண்ணமே அவனுக்குள் கர்வத்தை உண்டாக்க கம்பீரத்துடன் மேடையேறியவன் கரங்களை உயர்த்தி வணக்கம் தெரிவிக்கவும் மாநாட்டுத்திடல் கரக்கோஷத்தில் அதிர்ந்தது.
அவனைக் கண்டதும் மேடையிலிருந்த பெரிய தலைகள் எழுந்து நின்று வணக்கம் போட வேறு வழியின்றி ராமமூர்த்தியும் கரம் குவித்து வணக்கம் கூறினார்.
அனைவரது வணக்கத்தையும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டவன் கவியன்பனை மட்டும் மார்போடு அணைத்துக் கொள்ள அவரது ஆதரவாளர்கள் உற்சாக கூச்சல் எழுப்பினர்.
“நீங்க இந்த மாநாட்டுக்கு வந்ததுல ரொம்ப சந்தோசம் தம்பி… கட்சித்தலைவரா நீங்க கலந்துக்குற முதல் மாநாடு இது… உங்களோட இந்த சர்ப்ரைஸ் விசிட் எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு”
மனதார கூறிவிட்டு அவர் அமர அப்போது தான் தலைவருக்கான இருக்கை ஒன்று பவுன்சர்களால் கொண்டுவரப்பட்டது.
அதே பவுன்சர்கள் அங்கே அமர்ந்திருந்த அனைவரையும் எழும்ப சொல்லிவிட்டு நடுநாயகமாக கிடந்த ராமமூர்த்தியின் இருக்கை ஓரம் கட்டப்பட்ட இப்போது போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான் அருள்மொழி.
அவன் அமரவும் மீண்டும் கோஷம் எழ இருக்கையின் இரு பக்கமும் கைகளை ஊன்றி நிமிர்ந்து தன் முன்னே குழுமியிருந்த மக்கள் திரளை பார்த்தான். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மனித தலைகள் அவன் முன்னே குவிந்திருந்தன.
இந்த ஜனத்திரளில் எத்துணை நபர்கள் எனக்கு விசுவாசிகள் என்று அறியேன்! ஆனால் காசுக்காக இருந்தாலும் இவர்களை கோஷம் போடவைக்கும் அளவுக்கு என்னிடம் அதிகாரம் இருக்கிறது! கர்வத்துடன் எண்ணிக்கொண்டான் அருள்மொழி!
இப்போது சந்திரகுமார் மேடையிலிருந்த மைக்கின் முன்னே வந்து நின்றார்.
“இங்கே பெரும் சமுத்திரமென குழுமியிருக்கும் தோழர்களே! நமது தலைவர் அருள்மொழி சுந்தரமூர்த்தியை மாநாட்டுக்குத் தலைமை வகிக்க அழைத்த போதே தனக்கு ஆடம்பர வரவேற்புகளில் நம்பிக்கையில்லை என கூறி மறுத்தார். எளிமையின் திருவுருவான அவரை மீண்டும் ஒரு முறை கரகோசத்துடன் வரவேற்போம்”
உடனே கரகோஷம் எழ சந்திரகுமார் அவனைப் புகழும் காட்சியை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த யூனிகார்ன் செய்தி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
அருகே அவளிடம் சமீபத்திய கட்சி நிகழ்வுகள் குறித்து அருள்மொழியின் உதவியாளன் கொடுத்த கோப்புடன் அவளைச் சந்திக்க ஐ.பி.சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிதர்சனாவும் அமர்ந்து அந்த மாநாட்டுக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எளிமையின் திருவுருவாம்! ஷப்பா முடியலடி சனா… அவன் போட்டிருக்குற ரால்ஃப் லாரன் போலோ ஷேர்ட்டோட ப்ரைஸ் லெவன் தவுசண்ட்… இன்னும் அந்த ஒயிட் பேண்ட், வாட்ச், ஷூஸோட ப்ரைஸை கூட்டிப் பாத்தா நம்ம மன்த்லி சேலரில பாதி வந்துடும்… இவன் எளிமையானவனாம்! பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?”
வானதி பொருமித் தீர்க்க நிதர்சனா நமட்டுச்சிரிப்புடன் அவளது புஜத்தில் அடித்தாள்.
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”
“ஊப்ஸ்! அத விடு… நெக்ஸ்ட் வீக் பாட்டியோட இறந்தநாள் வருது… சென்னைல எதாச்சும் ஆர்பனேஜ்ல ஒண்டே மீல் செலவை எடுத்துப்போமா?”
பாட்டியின் பெயரை எடுத்ததும் விளையாட்டுத்தனத்தை விடுத்து பேச ஆரம்பித்தாள்.
“சரிடி… நான் ஆர்பனேஜ் டீடெய்ல்ஸை நெட்ல சர்ஃப் பண்ணுறேன்… நீ உன்னோட வேலைய கவனி… ரொம்ப கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வந்திருக்க… அருள் சார் உன்னோட ப்ளானை ஸ்மெல் பண்ணுனா என்னடி? நீ தான் கிடைச்ச பால்ல சிக்ஸர் அடிப்பியே… உனக்கேத்த மாதிரி பால் வரும்… அது வரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணு”
சொன்னதோடு கோப்பினை கொடுத்துவிட்டு அவள் கிளம்ப வானதி வெறுமெனே தலையாட்டி வைத்தாள். என்னவோ இத்தனை நாள் திட்டமும் சொதப்பிவிட்டதோ என்ற அச்சம் அவளுக்குள் துளிர்த்து வளர்ந்து விட்டது.
இனி தேர்தல் குறித்த வானதியின் திட்டம் எதையும் அருள்மொழி அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டான்! முதலில் ராமமூர்த்தியை எதிர்க்க விரும்பாத அவனது குணம் மாற வேண்டும்! அவரை இன்னும் தனது அரசியல் வாழ்க்கைக்கான எதிர்ப்பாக அவன் கருதவில்லை!
வானதியின் எண்ணத்தை மெய்ப்பிப்பவனாக மாநாட்டு மேடையில் முதலில் தனது சித்தப்பாவைப் புகழ்ந்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தான் அருள்மொழி!
இது அவரது ஆதரவாளர்களுக்கு அவன் வீசும் ஒரு வலை!
“இந்த மேடைல இருக்குற அனுபவசாலிங்க மாதிரி தூயத்தமிழ்ல என்னால பெரிய உரையெல்லாம் ஆற்ற முடியாது… ஏன்னா உங்களுக்கே தெரியும் அரசியல்ல இன்னும் நான் குழந்தை தான்! ஆனா இவங்க எல்லாரும் எனக்குக் குடுக்குற ஆதரவும் நம்பிக்கையும் தான் என்னை துணிச்சலா அரசியல்ல பயணிக்க வைக்குது… என்னோட இந்த அரசியல் பயணம் என் அப்பா அண்ணனோட இறப்புல இருந்து தான் ஆரம்பிச்சுது… அந்த தேதில இருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஆதரவா இருக்குற கட்சியோட அனுபவச்சாலியான பிரமுகர்களுக்கு நான் சொல்லிக்க விரும்புறது ஒன்னே ஒன்னு தான்! நம்பிக்கையோட காத்திருங்க… நம்ம கட்சி இழந்த பெருமைய மீட்கிறதுக்கு இன்னும் கொஞ்சநாள் தான்! அது வரைக்கும் நம்ம கட்சிக்கொள்கைய சாமானிய மக்கள் கிட்ட எடுத்துட்டுப் போகவும், மக்களோட பிரச்சனைகளை பத்தி தெரிஞ்சிக்கவும் நான் மூனு குழுக்களை அமைக்கலாம்னு இருக்கேன்!”
அவனது கடைசி வார்த்தையில் ராமமூர்த்தி யோசனையுடன் பார்க்க அவருக்கு அடுத்து அமர்ந்திருந்த சந்திரகுமார், தெய்வநாயகம் மற்றும் மந்திரமூர்த்தியின் முகங்கள் மகிழ்ச்சியில் ஜொலித்தது.
அருள்மொழி மேடையில் தான் அமைக்கவிருக்கும் குழுவைப் பற்றி விளக்கியவன் அதன் தலைமை உறுப்பினர்களை அறிவித்த போது ராமமூர்த்தியின் முகத்தில் ஈயாடவில்லை.
“திரு சந்திரகுமார் – நெசவாளர் குறை கேட்பு குழு தலைவர்”
மேடையில் அமர்ந்திருந்த சந்திரகுமார் எழுந்து தொண்டர் கூட்டத்தை நோக்கி புன்னகையுடன் வணங்கினார்.
ராமமூர்த்திக்கு முதல் அதிர்ச்சி! கோட்டையின் முதல் செங்கல்லை இவன் எப்போது உருவியிருப்பான்?
“திரு மந்திரமூர்த்தி – விவசாயிகள் குறை கேட்பு குழு தலைவர்”
இப்போது எழுந்து வணங்கியது மந்திரமூர்த்தி.
ராமமூர்த்தியோ “அடப்பாவி தலைவரே தலைவரேனு காலை சுத்தி வந்த நீயுமா துரோகியா மாறிட்ட?” என்று தனக்குள் கொதித்துப் போனார். அடுத்த செங்கல்லும் உருவப்பட்ட கோபம் அவருக்குள் வியாபித்தது.
“திரு தெய்வநாயகம் – மீனவர்கள் குறை கேட்பு குழு தலைவர்”
தெய்வநாயகமும் எழுந்து தொண்டர் கூட்டத்தை வணங்கிவிட்டு அருள்மொழிக்கும் ஒரு கும்பிடு போட ராமமூர்த்தியோ பேசாமல் எழுந்து சென்றுவிடுவோமா என்னுமளவுக்கு விரக்தியின் விளிம்புக்கு வந்துவிட்டார். மூன்றாவது செங்கல்லும் உருவப்பட அங்கே எழுந்த கரகோஷம் அவருக்கு என்னவோ அவரது கனவுக்கோட்டை அஸ்திவாரத்திலிருந்து மடமடவென சரியும் சத்தமாகவே தோன்றியது.
அங்கே அருள்மொழி மூவரது பெயரையும் அறிவித்தவன் சந்திரகுமாரின் உதவியாளரை அழைத்து அவரவர் குழுவினரது பெயரை எல்.ஈ.டி டிஸ்ப்ளேயில் காட்டும்படி பணிக்க அவர் ஒளி மற்றும் ஒலி ஏற்பாட்டாளரிடம் முன்கூட்டியே கொடுத்த பென்ட்ரைவிலிருந்து குழுவினரின் பெயர் பெரிய திரையில் ஒளிபரப்பானது.
அனைவரின் பெயரும் காண்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மைக்கை தன் வசம் கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்த அருள்மொழி
“இந்த மாநாடு வழக்கமான அரசியல் மாநாடா இருந்திருக்காதுனு நான் நம்புறேன்… நமக்குத் தேவை கட்சியோட கடந்தகால ஆட்சிய பத்தின புகழ்மாலைகள் இல்ல… வருங்கால ஆட்சிய பத்தின தெளிவு… அதுக்கு கட்சியோட ஒவ்வொரு தொண்டனும் மக்களோட கருத்தை அவங்களோட எண்ணவோட்டத்த புரிஞ்சுக்க வேண்டியது அவசியம்… அதனால மாநாடு கூட்டம் கூட்டி நேரத்தை வீணாக்காம மாவட்டம், வட்டம், கிராமம்னு ஒவ்வொரு இடத்துலயும் கட்சியோட கொள்கைய கொண்டு போய் சாமானிய மக்கள் கிட்ட சேருங்க… அவங்களோட ஓட்டு நமக்கு வேணும்ங்கிறத விட அவங்களோட நம்பிக்கைய சம்பாதிக்கணும்ங்கிற நோக்கத்தோட வேலைய ஆரம்பிங்க… இந்த பயணத்துல கட்சியோட முக்கிய பிரமுகர்கள் என்னோட கரம் கோர்த்து பயணிக்க தயாரா இருக்காங்க… அதனால தொண்டர்களான நீங்க தனித்தனி கோஷ்டியா பிரிஞ்சு உங்களுக்குள்ள தகராறு செய்யாம ஒன்னா சேர்ந்து கட்சிக்காக பாடுபட ஆரம்பிங்க… நம்ம கட்சி இழந்த பெருமையையும் ஆட்சியையும் மீட்குறதுக்காக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம்… நன்றி!”
அவன் பேசி முடித்ததும் கரகோஷம் ஒத்தக்கடை பகுதியை அதிர வைத்தது. அங்கிருந்த கட்சிப்பிரமுகர்கள் முகத்தில் மகிழ்ச்சி! ராமமூர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் அடுத்தடுத்த மாநாட்டு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்க அவரோ மனதிற்குள் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தார்.
திடீரென அவரது கரத்தின் மீது அருள்மொழியின் கரம் படவும் திடுக்கிட்டு விலக்க எத்தனித்தார். ஆனால் அவனோ இருக்கையின் கைப்பிடியோடு சேர்த்து அவரது கரத்தை இறுக்கி அழுத்தியவன்
“இனிமேலும் இந்த மாதிரி ஓல்ட் டைப் பாலிடிக்ஸ் கேம் விளையாடலாம்னு யோசிக்காதீங்க சித்தப்பா… இந்தக் கட்சில யாரும் எனக்குத் தெரியாம மூச்சு கூட விடமுடியாது… பாத்திங்கல்ல, உங்க விசுவாசிகளை எப்பிடி என்னோட பக்கம் கொண்டு வந்தேன்னு… இப்ப இங்க உங்களுக்காக கூடுன கூட்டம் என்ன நினைக்கும்? ராமமூர்த்திக்கு வேண்டிய ஆளுங்களை கட்சித்தலைவர் முக்கிய வேலைக்கு பயன்படுத்திக்கிறார்னா தலைமைக்கும் ராமமூர்த்திக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லனு அந்தக் கூட்டம் இந்நேரம் நம்பியிருக்கும்… அந்த நம்பிக்கைய உங்களுக்கு எதிரா திருப்புறதுக்கு எனக்கு ரொம்ப நாள் ஆகாது… அந்த எல்லை வரைக்கும் என்னை போக விடமாட்டிங்கனு நம்புறேன்… கவனமா நடந்துக்கங்க” என்று தெள்ளத்தெளிவாக அடிக்குரலில் எச்சரித்துவிட்டு புன்னகைக்க ராமமூர்த்தி திக்பிரமை பிடித்தவரைப் போல தலையாட்டி வைத்தார்.
ஆனால் மனதிற்குள்ளோ வன்மம் பற்றி எரியத் துவங்கியது.
“அண்ணன் மகன்னு இத்தனை நாள் பாவம் பாத்தது தப்பா போச்சு… இவன் கதைய முடிச்சா தான் என்னோட அரசியல் வாழ்க்கை நிம்மதியா போகும்… என் அண்ணனோட சாவுல என்னோட அரசியல் கனவு நிஜமாகும்னு நம்புனேன்… ஆனா அண்ணன் மகனோட சாவுல தான் அது நடக்கணும்னு விதி”
வஞ்சினத்துடன் மனதிற்குள் எண்ணிக்கொண்டவர் அவருக்குத் தேவையற்றவர்களை வேரோடு சாய்க்க உபயோகிக்கும் சூட்சுமத்தை அருள்மொழியின் விசயத்திலும் உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார். வஞ்சகம், பொறாமை, வன்மம் இந்த மூன்றும் பேராசை எனும் சூனியக்காரியின் பிள்ளைகள்! அந்தப் பேராசை சூனியக்காரியின் வசம் சிக்கிக் கொண்டவர்களை இம்மூன்று பிள்ளைகளுக்கும் அவள் இரையாக்கி விடுவாள்! ஒவ்வொரு மனிதனின் மன ஆழத்திலும் அவள் உறங்கிக் கொண்டிருப்பாள்! அம்மனிதன் வளரும் முறை, கற்ற நெறிகள் தான் அந்தப் பேராசை எனும் சூனியக்காரியை அவன் மனதின் அடியாழத்திலேயே மீளா உறக்கத்தில் ஆழ்த்தி வைக்கும். அதற்கு மாற்றாக நெறிகளற்று வளரும் மனிதனை அவள் சுலபமாகத் தன் வசப்படுத்தி தன் பிள்ளைகளுக்குப் பழியாக்கி விடுகிறாள்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction