“சொந்த நாட்டிற்கு எப்போதுமே விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அரசாங்கம் நமது விசுவாசத்திற்கு தகுதியான அரசாங்கமாக இருந்தால் மட்டுமே அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்”
-மார்க் ட்வைன்
முற்போக்கு விடுதலை கட்சியின் தலைமை அலுவலகம், அவ்வை சண்முகம் சாலை…
வீரபாண்டியன் கட்சி பொதுக்குழுவை கூட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள், தொகுதி நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பொதுக்குழு என்றாலே முதலில் தலைமைக்குப் புகழ்மாலை பாடுவது தானே அரசியல் மரபு! அதை மு.வி.க கட்சியினர் வழுவாமல் கடைபிடித்துக் கொண்டிருந்தனர்.
ஒருவர் மாற்றி ஒருவர் முதலமைச்சரும் கட்சித்தலைவருமான வீரபாண்டியனின் புகழைப் பாட அதிலேயே நேரம் கடந்துவிட அப்போது தென்மாவட்டங்களின் நிலை குறித்த விவாதம் ஆரம்பித்தது.
மாவட்ட செயலாளர்கள் தங்களது பகுதியிலுள்ள மக்கள் மனநிலை குறித்து அவரிடம் விவரித்தனர். கூடவே அப்பகுதிகளில் புதிதாக கட்டவிருக்கும் முக்கியமான இரண்டு தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு வலுப்பதாகவும் கூற வீரபாண்டியன் எரிச்சலுற்றார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உங்க மாவட்டத்துக்காரங்களுக்கு வேற வேலையே இல்லைய்யா… கவர்மெண்ட் எப்பவுமே தலைநகரத்தை தான் கவனிக்கிறாங்க… எங்க பகுதிய கண்டுக்கவே இல்ல, வடக்கு வாழுது தெக்கு தேயுதுனு ஒப்பாரி வைப்பாங்க… சரி நாலு ஃபேக்டரி ஆரம்பிச்சா வேலைவாய்ப்பு பெருகுமேனு பெர்மிஷன் குடுத்தா காற்று மாசுபடுது, நிலம் மாசுபடுதுனு கூட்டம் சேர்த்துக்கிட்டு கொடி பிடிச்சு போராட்டம் நடத்த ஆரம்பிச்சிடுவாங்க… உங்களோட மண்டைக்காய்ச்சலா இருக்குய்யா”
சலித்துப் போன குரலில் சொன்னவருக்குத் தானே தெரியும் அந்த இரண்டு தொழிற்சாலைகளை நடத்தும் மாபெரும் தொழிலதிபர்களிடமிருந்து தான் பெருமளவு தேர்தல் நிதியைத் தங்கள் கட்சி பெற்றுக் கொள்கிறது என்பது.
வாங்கிய காசுக்கு விசுவாசத்தை அவர்கள் எதிர்பார்க்க ஓட்டு போட்ட மக்களோ போட்ட ஓட்டிற்கு நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றாலும் கூட கடவுளாய் கொடுத்த நிலத்தையும் காற்றையுமாவது மாசுபடுத்தாமல் இருக்க அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்தனர்.
இதில் மாட்டிக்கொண்டது வீரபாண்டியனின் அரசாங்கம் தான். யார் பக்கம் நிற்பது என்ற குழப்பம். கண் மூடித் திறப்பதற்குள் தேர்தல் வந்துவிடும். இந்நேரம் பார்த்து மக்களது கோரிக்கையை மறுத்தால் அது தேர்தலில் பிரதிபலித்துவிடும். அதே நேரம் தொழிலதிபர்களுக்கு மறுபு கூறினால் கட்சி நிதி பாதிக்கப்படும்.
எனவே நீண்டநேரம் இப்பிரச்சனை குறித்த விவாதமே போய்க்கொண்டிருந்தது. பின்னர் மற்ற மாவட்டங்களின் நிலவரம் குறித்து பேச்சு மாறியபோது எதிர்கட்சியினர் இரண்டு நாட்களாக அமைதி காப்பது குறித்து ஆரம்பித்தார் அமைச்சர் ஒருவர்.
அதை தொடர்ந்து பேச ஆரம்பித்த செங்குட்டுவனோ “நீங்க ப்ரஸ் மீட்ல பேசுனதுக்கு அப்புறம் எதிர்கட்சிக்காரங்க அரண்டு போய் கிடக்காங்க தலைவரே! கொஞ்சம் கொஞ்சமா இந்த விசயத்த பெருசாக்கிட்டா இத வச்சே அவங்கள அடிக்கலாம்” என்றார்.
அதே நேரம் செங்குட்டுவனுக்கும் வீரபாண்டியனுக்கும் இருக்கும் நெருக்கத்தை விரும்பாத அமைச்சர் ஒருவர் தொண்டையைக் கனைத்தார்.
“தலைவரே செங்குட்டுவன் சொல்லுறதுலாம் நேத்தைய கதை… இன்னைக்கு நிலமை மாறி ரொம்ப நேரமாச்சு… நம்ம செங்குட்டுவனுக்கு அரசியல் நிலவரம் உடனடியா தெரியுறதில்ல போல… எதிர்கட்சிக்காரங்க நேத்து நீங்க குடுத்த ப்ரஸ் மீட்டுக்கு பதிலடி குடுக்கல… ஆனா அதுல நீங்க அவங்க மேல சொன்ன குற்றச்சாட்டே தப்புனு சொல்லாம சொல்லிட்டாங்க” என்றார்.
வீரபாண்டியன் இது என்ன புதுகதை என்று அவரை நோக்க அவரோ உதவியாளனை அழைத்து வீரபாண்டியனுக்கு நடந்ததை விளக்கும்படி கட்டளையிட அவரும் மொபைல்போனை காட்டி விளக்க ஆரம்பித்தார்.
ட்விட்டரில் அருள்மொழியின் அபிஷியல் ஐடியில் போடப்பட்டிருந்த ட்வீட்டைக் காட்டினார் அவர்.
“I’m glad to share that these young and talented professionals are working under Indian Political Council to strengthen our journey towards the upcoming election and help to frame plans to get back Tamilnadu’s Glory”
-அருள்மொழி சுந்தரமூர்த்தி @arulmozhi
கூடவே வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார் அருள்மொழியின் அட்மின். அதில் அருள்மொழியுடன் இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சிலின் வெவ்வேறு குழுவினர் உற்சாகத்துடன் உரையாடும் காட்சியோடு சமீபத்தில் இண்டர்ன்ஷிப்பில் இணைந்தவர்களும் பேசுவதும் இடம்பெற்றிருந்தது.
அதில் ஒரு மாணவன் “அரசியல்னாலே ஏதோ வேண்டாத விசயம்னு பாக்குற குடும்பத்துல இருந்து வந்த நான் இப்ப ஐ.பி.சில இண்டர்னா ஜாயின் பண்ணிருக்கேன்… இந்த இண்டர்ன்ஷிப் பீரியட் எனக்கு ஒரு புது அனுபவத்த குடுத்திருக்கு… கூடவே அரசியல் பத்தி நான் வச்சிருந்த பார்வைய இந்த இண்டர்ன்ஷிப் மாத்திருக்கு… ஐ ஃபீல் வெரி ஹேப்பி டு பி த பார்ட் ஆப் ஐ.பிசி” என்றான்.
அடுத்து ஒரு மாணவியோ “நான் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்… இந்த டைம்ல எனக்கு கிடைச்ச ப்ரீசியஸ் சான்ஸ் தான் இந்த இண்டர்ன்ஷிப்… ஏர்ன் வைல் லேர்ன் (Earn while learn) மெத்தட் தான் இங்க… ஐ மீன் நீங்க பாக்குற வேலை மூலமா நிறைய விசயங்கள கத்துக்க முடியும், கூடவே உங்களுக்கு ஸ்டைஃபண்டும் வரும்… இந்த ஸ்டைஃபண்ட் என்னோட புராஜெக்ட் செலவுக்கு யூஸ் ஆகுது… எனி ஹவ், ஐ ஃபீல் வெரி ஹேப்பி டு ஜாயின் ஹியர்” என்று கூறினாள்.
ட்விட்டர் மட்டுமல்ல, அனைத்து சமூக ஊடகங்களிலும் அருள்மொழியோடு இண்டர்ன்ஷிப் மாணவர்கள் உரையாடும் காட்சி தான் அன்றைய தினம் வைரல் ஆகியிருந்தது.
வீரபாண்டியன் செங்குட்டுவனை முறைக்க அவரோ திருதிருவென விழித்தார்.
“போதும்யா… ஏற்கெனவே உள்ள பிரச்சனைல என் தலை வெடிக்குது.. இதுல எதிர்கட்சிக்காரங்க வேற”
எரிச்சலோடு உதவியாளரைச் செல்லுமாறு கையசைத்தார் வீரபாண்டியன். அந்த எரிச்சல் மட்டுப்படாததன் காரணமாக அன்றைய பொதுக்குழுவு கூட்டமும் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஏதோ பேச வர செங்குட்டுவன் வீரபாண்டியனது நிலையை எடுத்துக் கூறி அவரை பாதி வழியிலேயே திருப்பி அனுப்பிவிட்டார். அதன் விளைவை வீரபாண்டியன் தானே இனிவரவிருக்கும் காலங்களில் அனுபவிக்கப் போகிறார்!
அதை அறியாத செங்குட்டுவன் அந்நபர் சென்றதும் வீரபாண்டியனிடம் வந்தவர் “விடுங்க தலைவரே! அவன் சின்னப்பையன்… உங்க அரசியல் அனுபவம் தான் அவனுக்கு வயசு… இந்தப் பிரச்சனைய சமாளிச்சிட்டான்னே வச்சுப்போம்… தேர்தலுக்கு தான் இன்னும் நாலு மாசம் இருக்குதே! அதுக்குள்ள அவன் கட்சியாளுங்களே அவனுக்கு குடைச்சல் குடுப்பாங்க” என்றார்.
அதை கேட்டதும் வீரபாண்டியனின் இதழில் வஞ்சகப்புன்னகை!
“அதுவும் சரி தான்யா… ராமமூர்த்தி அவன் தலைக்கு மேல தொங்குற கத்தி… அது என்னைக்கு இருந்தாலும் அருள்மொழியோட தலைய துண்டாக்கும்… ஆனா அத மட்டுமே நம்புனா இன்னைக்குச் சின்னப்பசங்களுக்குப் பிடிச்சவனா இருக்குறவன், நாளைக்கே நமக்கு போட்டியா வந்து நிப்பான்… எதிரி சின்னதா துளிர் விடும் போதே கிள்ளி எறிஞ்சிடணும்… அவன் வளர்ந்து ஆலமரமா நின்னா வெட்டுறது கஷ்டம்”
யோசனையுடன் சொன்னவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள்! அதில் எதுவும் நல்லெண்ணம் இல்லை என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன!
*************
இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சில் தலைமை அலுவலகம்…
அருள்மொழியோடு சேர்ந்து ஒவ்வொரு குழுவினரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். கூடவே புதிதாக சேர்ந்திருந்த இண்டர்ன்ஷிப் மாணவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்ளவும் அக்காட்சி ஐ.பி.சியின் அபிஷியல் சமூக வலைதளங்களில் இடம்பெற்றது.
கூடவே இதற்கு தானே காத்திருந்தோம் என்பது போல நியூஸ் டி.என் மற்றும் யூனிகார்ன் நியூஸ் சேனல்கள் முந்தைய தினம் வீரபாண்டியன் அளித்த பேட்டி வீடியோடு இணைத்து அருள்மொழியோடு இண்டர்ன்ஷிப் மாணவர்கள் உற்சாகமாக உரையாடும் வீடியோவையும் இணைத்து ஒளிபரப்பினர்.
அது ஒரு பக்கம் நடக்க அன்றைய தினம் அவனோடு கலந்துரையாட வருகை தந்திருந்த ஆகாஷ் கண்ணப்பனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான் அருள்மொழி. அடுத்து வானதி, நிதர்சனா மற்றும் கிஷோர் காத்திருக்கையில் நிதர்சனா மொபைலில் ஓடிய செய்தியை மற்ற இருவருக்கும் காட்டினாள்.
“நேற்று தமிழக முதல்வர் திரு வீரபாண்டியன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்கட்சியான தமிழ்நாடு முன்னேற்ற கழகம் இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சிலுடன் சேர்ந்து மாணவர்களின் உழைப்பை சுரண்டுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று அக்கட்சி தலைவர் அருள்மொழி சுந்தரமூர்த்தியும் ஐ.பி.சியின் நிறுவனர் ஆகாஷ் கண்ணப்பனோடு சேர்ந்து ஐ.பி.சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணியில் இரவு பகலாக ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். அதில் புதிதாக பணியமர்த்தப்பட்ட இண்டர்ன்ஷிப் மாணவர்களும் கலந்து கொண்டனர்”
இதில் செய்தி வாசிப்பாளர் நிறுத்த அந்த இண்டர்ன்ஷிப் மாணவர்கள் பேசிய வீடியோவும் அவர்களுடன் அருள்மொழி பேசும் காட்சிகளும் ஒளிபரப்பானது.
தொடர்ந்து செய்தி வாசிப்பாளரே பேசினார்.
“அரசியலில் இளம்தலைமுறையினர் காட்டும் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாது வெறுப்பு அரசியலில் ஈடுபடும் ஆளுங்கட்சியினரின் இச்செய்கை மக்களிடையே விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஆனால் தங்களது கட்சித்தலைவருக்கு இம்மாதிரியான தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வது ஒன்றும் புதிதில்லை எனவும் ஏற்கெனவே அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கை சுட்டிக்காட்டி பேசிய கட்சிப்பிரமுகர் ஒருவர் இப்போது தங்கள் கட்சியினரின் கவனமெல்லாம் தங்கள் தலைவரான அருள்மொழி சுந்தரமூர்த்தியின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைப்படி வேலைகளை செய்து முடிப்பதே என்று கூறினார்”
செய்தி முடியும் போது வானதியின் இதழில் புன்னகை முகிழ்த்திருந்தது. நிதர்சனாவிடம் உற்சாகமாக ஹைஃபை கொடுத்தவளின் செவியில் “மிஸ் வானதி மகேந்திரன்” என்ற அருள்மொழியின் குரல் விழவும் மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு அவனருகே நின்றாள் அவள்.
புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஆகாஷ் கண்ணப்பனுடன் பேசுவதற்காக அவன் சென்றுவிட சிறிது நேரத்தில் தங்கள் கலந்தாலோசனை முடிந்துவிட்டதாகவும் ஒரு முக்கிய செய்தியை அவளிடம் தெரிவிக்க வேண்டுமென்பதால் தனது அலுவலக அறைக்கு வருமாறு வானதிக்கு அழைப்பு விடுத்தார் ஏ.கே.
அவளும் அவரது அறையை நோக்கி செல்லும் போது இடையே வந்தான் கிஷோர்.
“நதி ஒரு சூப்பர் மேட்டர் சிக்கியிருக்கு… இதை மட்டும் நம்ம கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுனோம்னா ரூலிங் பார்ட்டிய அலற விடலாம்” என்றபடி முகப்புத்தகத்தில் வைரல் ஆகும் வீடியோ ஒன்றினை காட்டினான் அவன்.

அதில் நடுத்தரவயது பெண்மணி ஒருவரும் சற்றே வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரும் அழுது அரற்றும் காட்சி ஓடியது.
“விசாரணை தான் ஒன்றரை மணிக்கூறுல விட்டுருவோம்னு சொல்லி என் புள்ளையயும் புருசனையும் போலீஸ்காரங்க கூட்டிட்டுப் போனாங்க… நேத்து சாயங்காலம் பேசுறப்ப கூட அந்த மனுசன் காத்தால வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னாரு… ஆனா இன்னைக்கு காலைல ரெண்டு பேரும் செத்துட்டாங்கனு சேதி வருது… போலீஸ்காரங்க ரெண்டு பேரையும் லாக்கப்புலயே அடிச்சு கொன்னுட்டாங்கய்யா… கெதியா இருந்த ரெண்டு பேரும் திடுதிடுப்புனு எப்புடி செத்து போவாங்க? ஏன்னு கேக்க ஆளு இல்லனா என்ன வேணாலும் செய்வாங்களா?”
வானதி இச்செய்தியைக் கேட்டதும் கண் கலங்கி சிலையானாள். ஏதோ பழைய நினைவுகளில் இழுத்துச் செல்லப்பட்டு நொடிப்பொழுதில் மீண்டு வந்தவளை “நதி என்னாச்சு? உடம்பு சரியில்லயா?” என்று உலுக்கிக் கொண்டிருந்தான் கிஷோர்.
அவனிடம் ஒன்றுமில்லை என்று தடுமாறியபடியே அவள் உரைத்த காட்சியை சில அடிகள் தொலைவில் ஆகாஷ் கண்ணப்பனின் அலுவலக அறை வாயிலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் அருள்மொழி.
வானதி கிஷோரிடம் கடினமான முகபாவனையுடன் ஏதோ உரைப்பதையும் அவனும் சோகத்துடன் அங்கிருந்து நகர்வதையும் கண்ணுற்றவன் அவள் தன்னை நோக்கி வரவும் மர்மப்புன்னகையுடன் அவளைக் கடந்தான்.
வானதி அவனது புன்னகைக்கு என்ன காரணம் என புரியாது ஏ.கேவின் முன் சென்று நின்ற கணத்தில் அருள்மொழி கிஷோரை தனியே அழைத்துப் பேச ஆரம்பித்திருந்தான்.
அவனது பேச்சின் சாராம்சத்தை மட்டும் வானதி அறிந்திருந்தால் கண்டிப்பாக இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் நடந்திருக்கும். ஆனால் அவளிடம் தான் ஆகாஷ் கண்ணப்பன் தேர்தல் பணிக்காக இனி நிதர்சனாவையும் மற்ற குழுவினரில் திறமையானவர்களையும் சேர்த்து தலைமை பணிக்குழு ஒன்றை அமைக்கும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தாரே!
“ஓகே சீஃப்”
“அவங்க பார்ட்டி ஆபிஸ்ல இருந்து குடுக்குற டீடெய்ல்ஸ் அண்ட் நீட்சுக்கு ஏத்த மாதிரி இங்க ஒர்க் நடக்கணும் வானதி… அப்ப தான் பார்ட்டிக்கும் நம்ம கன்சர்ன்கும் இடையில இருக்குற கேப் குறையும்… கட்சிக்காரங்க என்ன நினைக்கிறாங்களோ அதை நம்ம டீம் நமக்கு ஃபார்வேர்ட் பண்ணுவாங்க… சில வேலைகள அவங்களே செஞ்சு முடிக்கிறதுக்கான அத்தாரிட்டியையும் குடுத்துடுங்க… நீங்க சீக்கிரமா டீம் மெம்பர்சை செலக்ட் பண்ணுங்க… அவங்க லிஸ்டை எனக்கு மெயில் பண்ணிடுங்க… யூ மே கோ நவ்”
ஏ.கேவின் அறையிலிருந்து வெளியே வந்ததும் நிதர்சனாவையும் கிஷோரையும் அழைத்து விவரத்தைக் கூறினாள் வானதி.
“உங்க டீம்ல பெஸ்டான சிலரை எனக்கு சஜெஸ்ட் பண்ணுங்க… நான் அவங்களை கொஞ்சம் பெர்ஷ்னலா இண்டர்வியூ பண்ணிட்டு செலக்சன் புராசஸை ஆரம்பிக்கிறேன்”
இருவரும் வெளியேற எத்தனிக்கையில் கிஷோரை மட்டும் அழைத்தாள் வானதி. அவனும் வர “நீ அந்த வீடியோவ யார் கிட்டவும் காட்டலையே?” என்று வினவினாள்.
“இல்ல நதி… பட்…” என்று அவன் இழுக்கவும்
“ஏன் ஒரு மாதிரி இழுக்குற? யாரும் பாத்துட்டாங்களா? சீஃபுக்கு இன்பர்மேசன் போயிடுச்சா?” என்று படபடத்தாள் வானதி.
இல்லையென கிஷோர் மறுத்து தலையாட்டவும் “அப்ப என்ன தான் ஆச்சுடா? புரியுற மாதிரி சொல்லி தொலயேன்” என்று கடுகடுத்தாள்.
கிஷோருக்கு வானதியின் இந்தக் கோபம் பழக்கப்பட்டது தான். எனவே தவறாக எடுத்துக்கொள்ளாது விசயத்தைக் கூறிவிட்டான்.
“நீ சீஃபோட ஆபிஸ் ரூமுக்குப் போன கேப்ல அருள் சார் என் கிட்ட பேசுனார்… அப்ப அவர் கிட்ட அந்த வீடியோவ காட்டிட்டேன்… அவரோட மொபைல்ல காப்பி பண்ணிட்டு சாரும் கிளம்பிட்டார்”
வானதி அந்த வீடியோவை யாரும் பார்க்கக்கூடாது என்றெல்லாம் நினைக்கவில்லை. அவள் என்ன தான் முயன்றாலும் இன்னும் சில மணி நேரத்தில் வைரலான வீடியோவை யாராவது ஒருவர் பார்த்துவிடுவர் என்பது நிச்சயம்!
ஆனால் இச்சமயத்தில் பார்த்தால் அதை வைத்து ஆளுங்கட்சியை விமர்சித்து எதிர்கட்சி சார்பில் எதையாவது செய்யும்படி தானே அருள்மொழிக்கு ஆலோசனை வழங்கும் நிலை வரும் என்ற கவலை அவளுக்கு!
கிஷோரை செல்லும்படி பணித்தவள் தனது அலுவலக அறையில் வந்து அமரவும் அருள்மொழியிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது.
சுற்றி வளைக்காமல் அந்த வீடியோவைப் பற்றி கூறியவன் “உன்னோட ஃப்ரெண்ட் மிஸ்டர் கிஷோருக்கு என் சார்பா ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸை சொல்லிடு வானதி… இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரைம் நியூஸ்ல இந்த வீடியோ வரும்… சம்பவம் நடந்த இடத்துக்கு எங்க கன்னியாகுமரி ரிப்போர்ட்டர் டீமை போகச் சொல்லி ஆர்டர் போட்டுட்டேன்… டூ டேய்சா என்னை விமர்சனம் பண்ணுன மிஸ்டர் சி.எம்கு இந்த அருள்மொழி யார்னு காட்டுறதுக்கு சரியான வாய்ப்பு இது தான்… இத வச்சு ரூலிங் பார்ட்டிய கலங்கடிக்கிறேன் பாரு”
வானதி அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு “போலீஸ் கஸ்டடில இருந்த ரெண்டு பேர் இறந்துருக்காங்க.. ரெண்டு உயிர் போயிருக்கு… இத வச்சு நீ அரசியல் பண்ணப் போறீயா அருள்?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க
“கண்டிப்பா பண்ணுவேன் வானதி… இத நான் உன் கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்… எங்கப்பா இறந்த துக்கம் தாங்காம சூசைட் பண்ணுனவங்களோட குடும்பத்த மீட் பண்ணுறத கூட வீடியோவா எடுத்து அடுத்தவங்களோட மரணத்துல கூட அரசியல் செய்யலாம்னு எனக்குக் கத்துக் குடுத்த குருவே நீ தான்… ம்ம்… உனக்குக் குருதட்சணை எதாவது குடுத்தாகணுமே” என்று அவன் இலகுவாகப் பேச
“ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என்று சீறினாள் வானதி.
“உனக்கு மகாபாரதம் தெரியுமா? குருதட்சணை குடுக்காம கத்துக்கிட்ட வித்யை சரியான நேரத்துல கை குடுக்காதுங்கிறதுக்கு அதுல ஏகப்பட்ட உதாரணம் வரும்… சோ நான் உனக்கு எதாச்சும் குடுத்தே ஆகணும்.. என்ன வேணும்னு கேளு… எதுவா இருந்தாலும் நான் குடுக்குறேன்” என்றான் அருள்மொழி.
வானதி கடுப்பில் வார்த்தைகளை வெளியிட்டுவிடக்கூடாது என்று முயன்று தன்னை அடக்கிக் கொண்டவள்
“என்னோட மகாபாரத நாலெட்ஜ் ஒரு பக்கம் இருக்கட்டும்… உனக்கு ராமாயணம் தெரியுமா? அதுல தசரதர் கைகேயிக்கு யோசிக்காம வாக்கு குடுத்து மாட்டிக்கிட்டார்… சோ யார் கிட்டவும் நீ என்ன கேட்டாலும் தர்றேன்னு யோசிக்காம வாக்கு குடுக்காத… அப்புறம் பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ” என்று உரைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
எப்படியும் அந்த வீடியோ வெளியாகப் போகிறது! தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் ஐ.டி.விங்கினர் அதை வைத்து ஆளுங்கட்சியின் கோரமுகம் என மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களில் அதை பகிர்ந்து வைரல் ஆக்குவதும் உறுதி! ஆனால் இதில் வேதனையுறப் போவதென்னவோ கணவரையும் மகனையும் இழந்து மருமகளோடு ஆதரவின்றி நிற்கும் அந்த வயதானப் பெண்மணியே! தனது கையாலாகாத நிலையை நொந்துகொண்டபடி வழக்கமான அலுவலில் ஈடுபடலானாள் வானதி.
துன்பத்தில் உழல்பவர்களின் அவலநிலையை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்றால் நீங்கள் மனிதத்தன்மையை இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம்! அவர்களுக்குத் தேவை ஆறுதலும் ஆதரவும் தான்! அதை உங்களால் கொடுக்க இயலாவிட்டால் அவர்களிடமிருந்து விலகி விடுங்கள்! உடனிருந்து கொல்லும் வியாதியாய் அவர்களுடன் ஒட்டியிருந்து அவர்களது துன்பத்தில் நீங்கள் பலன் தேடாதீர்கள்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction