“உன்னோட ஹாஸ்டல் ரூம்ல சில திங்ஸை விட்டுட்டுப் போயிட்ட அருள். அதுல ஒன்னு எக்ஸ் மென் காமிக்ஸ். இன்னும் அது என் கிட்ட பத்திரமா இருக்கு. இப்ப நீ காமிக்ஸ் படிக்குறிய என்ன? தர்மா சித்தப்பா நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்ல?”
-வானதியின் கடிதம்…
நீதிபதி வந்ததும் வழக்கின் வாதம் ஆரம்பமானது. முதலில் வானதி விசாரிக்கப்பட்டாள். அவளது தரப்பு அட்வகேட் அவள் சேகரித்த தரவுகள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.
நிர்வான் வனம் என்பது பொதுப்பார்வையில் இருப்பது போல அழிந்து கொண்டிருக்கும் விலங்கினங்களை ரட்சிக்கும் இடமில்லை; அது உயிரியல் பூங்காவும் இல்லை. மாறாக, அரியவகை விலங்குகளின் டி.என்.ஏக்களைப் பிரித்தெடுத்து அவற்றை கார்பன் காப்பி செய்வதற்காகச் சேமித்து வைக்கும் ‘மரபணு சேமிப்புக் கிடங்கு’ என்று ஆணித்தரமாக நிறுவினார் வானதியின் வழக்கறிஞர்.
எதிர்காலத்தில் அந்த விலங்குகள் முற்றிலுமாக அழியும்போது, அவற்றின் டி.என்.ஏவை பல கோடிக்கணக்கான தொகைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் விதமாய் மான்கடா குழுமம் போட்டிருந்த ‘பயோ பைரசி ஒப்பந்தத்தின்’ நகலையும் வானதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாள்.
இரண்டாவது ஆதாரம், நிர்வான் வனம் பகுதியின் வெப்பநிலையைக் காட்டும் ‘தெர்மல் இமேஜிங்’ முறையில் செய்யப்பட்ட பதிவு. அந்தப் பகுதியின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாய் இருப்பதும், குளிர்ச்சூழலில் மட்டுமே வாழும் அரியவகை மான்கள் இன்னும் சில விலங்குகள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மூன்றாவது ஆதாரமாக நிரஞ்சன் ஷெட்டி அனுப்பிய வீடியோ – அதில் மூச்சுத்திணறலோடு விலங்குகள் காட்டப்பட்டிருந்தன. அவை அங்கே விருப்பமில்லாமல் கொண்டு வந்து அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதே ஜஸ்டிஸ் டுடே மற்றும் வானதியின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம். சாட்சி கூண்டில் நின்ற வானதியை கூரிய விழிகளால் ஏறிட்டான் அருள்மொழி.
“இந்த ஆதாரங்கள் எல்லாத்தையும் திரட்டுறதுக்கு நான் நிறையச் சிரமப்பட்டிருக்கேன். காரணமில்லாம ஒரு பெரிய நிறுவனம் மேல பழிபோடுறது என் நோக்கமில்ல. விலங்குகளுக்குச் சரணாலயம் அமைக்கிறதா சொல்லிக்கிட்டு அதை வியாபாரமா மாத்துனது, அந்த இடத்துல விலங்குகள் வதைக்கப்பட்டதுக்கான ஆதாரங்களோட நான் பேசிட்டிருக்கேன்.”
நீதிபதி அவளைப் போய் அமருமாறு சொல்லிவிட, விக்ரம் மெஹ்ரா இப்போது எழுந்தார். வானதி சமர்ப்பித்த மூன்று ஆதாரங்களில் முதலில் நிரஞ்சன் ஷெட்டி அனுப்பிய வீடியோவுக்குரிய லண்டன் லேப் ரிப்போர்ட்டை அருள்மொழி கொடுக்க, அதை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
“லண்டன் தடய அறிவியல் ஆய்வகத்துல அந்த வீடியோவைப் பரிசோதிச்சு வாங்கப்பட்ட ரிப்போர்ட் இது. அந்த வீடியோ முழுக்க முழுக்க டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் சித்தரிக்கப்பட்டது.”
நீதிபதியும் அறிக்கையை வாசித்தார். அந்த வீடியோவில் மெட்டா டேட்டா மிஸ்மேட்ச், விலங்குகளின் நிழல் விழுந்த கோணம், சூரிய ஒளி விழும் திசை இதெல்லாம் வைத்துப் பார்க்கையில் முழுக்க முழுக்க வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்ட வீடியோவே என்றது அந்த அறிக்கை.
அடுத்து, அரிய விலங்குகளை வானதி சொன்னது போல விற்பதற்கான ஒப்பந்தம் எதுவும் மான்கடா குழுமம் சார்பில் போடப்படவில்லை என்றார் விக்ரம் மெஹ்ரா. அவரும் அருள்மொழியும் கலந்தாலோசித்து குறித்து வைத்த பாயிண்ட்களில் அதுவும் ஒன்று.
“யுவர் ஆனர்! விற்பனைக்கான ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இது ‘Biodiversity Conservation Act’ கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு ‘Backup Genetic Bank’. ஒருவேளை இயற்கைச் சீற்றத்தால் விலங்குகள் அழிந்தால், அந்த இனத்தை மீட்டெடுக்க இந்திய அரசு அங்கீகரித்த ஒரு தற்காப்பு நடவடிக்கை (Species Recovery Program) மட்டுமே இது. இதோ, மத்திய அரசு இதற்கு வழங்கிய ரகசிய அனுமதிக் கடிதம்!”
அடுத்து அருள்மொழி இன்னொரு ஆதாரத்தையும் எடுத்துக் கொடுத்தான். அதுவும் வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் அடங்கிய கோப்பு. அதில் எதெல்லாம் முக்கியமான பாயிண்ட்கள் என அவன் குறிப்பு காட்ட விக்ரம் தலையாட்டியபடியே எடுத்துக்கொண்டார் அந்தக் கோப்பினை.
அதீத வெப்பத்தால் விலங்குகள் சிரமப்படுவது போலச் சொல்லப்பட்ட புகார் முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டிருந்தான் அந்தக் கோப்பில். பூமியின் உட்புற வெப்ப ஊற்றுகள் அந்த வனப்பகுதியில் இயற்கையாகவே உருவானதால் ஏற்பட்டதே வெப்பநிலை மாற்றம். புவியியல் ஆய்வுத் துறை கடந்த வாரம் எடுத்த அறிக்கையில் அந்த விலங்குகள் வெப்பத்தால் சுருண்டு கிடக்கவில்லை, அவை அந்த ஊற்றுகளின் கதகதப்பில் ஓய்வெடுக்கின்றன என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு சிறப்புப் புலனாய்வு குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இடைவேளைக்குப் பிறகு வழக்கின் வாதம் தொடருமென நீதிபதி அறிவிக்க, விக்ரம் மெஹ்ராவுடன் வெளியேறினான் அருள்மொழி.
“சீரியஸ்லி! அவங்க தெர்மல் மேப்பிங் எவிடென்ஸ் எல்லாம் குடுப்பாங்கனு நான் எதிர்பார்க்கல. அது ரிலேட்டடா நீங்க தகவல் சேகரிச்சது இப்ப எவ்ளோ நல்லதா போச்சு.”
அவர்கள் பேசும்போதே எதிர்பட்ட வானதி கேலிப்புன்னகையோடு, “ஜட்ஜ்மெண்ட் வந்ததும் தாஜ்மஹாலுக்குக் கண்டிப்பா போகணும். வருவல்ல?” என்று கேட்க, சட்டென அவனது பார்வை மாறியது.
“நீ கூப்பிட்டா நான் வராம இருப்பேனா? ஆனா ஒன்னு, ஜட்ஜ்மெண்ட் வந்ததும் நீ மனசு மாறிடக்கூடாது” என்றான் நமட்டுச்சிரிப்போடு.
“நான் தாஜ்மஹாலுக்குப் போகலாம்னு சொன்னதே ஜட்ஜ்மெண்ட் வந்ததும் நீ மனசு உடைஞ்சிடக்கூடாதுங்கிற அக்கறைலதான்” என்று சொல்லிவிட்டு அலட்சியமான கண்ணசைவோடு அவர்களைக் கடந்து போனாள் வானதி.
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வழக்கின் வாதம் ஆரம்பமானது. சிறப்புப் புலனாய்வு குழு அறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். அதில் மான்கடா குழுமம் நிர்வான் வனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றே சொல்லியிருந்தார்கள்.
“மான்கடா குழுமம் விலங்குகளின் டி.என்.ஏ-வை வணிக ரீதியாகப் பயன்படுத்தவில்லை. அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சர்வதேசப் பாதுகாப்பு விதிகளின் (CITES guidelines) படி மட்டுமே கையாளப்படுகின்றன. நிர்வான் வனம் அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி வெப்பம் அதிகரித்துள்ளது இயற்கையானது. மான்கடா குழுமம் அமைத்துள்ள தொழிற்சாலைக்கும் இந்த வெப்ப உயர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொழிற்சாலையைப் பொறுத்தவரைக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனைத்து விதிகளையும் அவர்கள் கடைபிடித்துள்ளனர். அதீத வெப்பம் என்பது அந்தப் பகுதியில் இருக்கும் இயற்கையான வெப்ப ஊற்றுகளால் மட்டுமே! அதுவும் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான வெப்பமில்லை.”
சிறப்புப் புலனாய்வு குழுவின் அறிக்கையும், அருள்மொழி மற்றும் விக்ரம் மெஹ்ரா சமர்ப்பித்த தரவுகளும் வானதி கொடுத்த ஆதாரங்களுக்கான விடைகளாக அமைந்துவிட, தீர்ப்பு என்னவோ மான்கடா குழுமத்திற்குச் சாதகமாகவே அறிவிக்கப்பட்டது.
நீதிபதி தனது இறுதித் தீர்ப்பில், வானதி சமர்ப்பித்த வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் அதைத் தள்ளுபடி செய்வதாகவும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையின்படி மான்கடா குழுமம் அனைத்துச் சட்ட விதிகளையும் முறையாகப் பின்பற்றியுள்ளதால் அவர்கள் மீது எவ்விதத் தவறுமில்லை என்றும் அறிவித்தார். முறையான ஆதாரங்களின்றி ஒரு நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக, ‘ஜஸ்டிஸ் டுடே’ சேனல் தனது ஒளிபரப்பில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மான்கடா குழுமத்திற்கு நஷ்ட ஈடாக நூற்றைம்பது கோடி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு வானதியின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருந்தது. நஷ்ட ஈட்டைப் பற்றிய கவலை அவளுக்கு இல்லை. தோல்வியைப் பற்றிய வருத்தமும் இல்லை. ஆனால் உண்மை எடுபடாமல் போய்விட்டதே என்ற நியாயமான ஆதங்கம் இருந்தது அவளுக்குள்.
காருக்குள் ஏறியபோதே விஷ்ணு பிரகாஷுக்கு அழைத்துப் பேசினாள்.
“நான் நம்ம சேனல்ல பொதுமன்னிப்பு கேக்கத் தயாரா இருக்குறேன் சீஃப். நீங்க எதையும் பண்ணவேண்டாம். நான் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கணும்னு தோணுது. நான் வச்ச எல்லா ஆதாரத்தையும் லாஜிக் பாயிண்ட் சொல்லி முறியடிச்சிட்டாங்க. ஆதாரத்தோட உண்மைத்தன்மை மட்டும் நீதிமன்றத்துக்குப் போதும்னு நினைச்சது என்னோட தப்பு. அதுல லாஜிக்கையும் கவனிக்கணும்னு இன்னைக்கு நான் கத்துக்கிட்டேன். என்னோட தவறை நான் ஒத்துக்கணும்ல?”
விஷ்ணு பிரகாஷ் எவ்வளவோ சொல்லியும் பொதுமன்னிப்பைத் தானே கேட்டுக்கொள்வதாகச் சொல்லிவிட்டாள் வானதி. ஹோட்டலை அடைந்தவளுக்குத் தலைவலி.
ரூம் சர்வீஸை அழைத்து காபி மட்டும் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டாள். காபி வரும் முன்னர் அவளது அறைக்கதவு தட்டப்பட்டு உள்ளே வந்தான் அருள்மொழி. வந்தவனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு.
வானதிக்கு அந்தச் சிரிப்புதான் கொதிப்பைக் கொடுத்தது. “ரொம்ப சிரிக்காத. உன்னை யார் இங்க வரச் சொன்னது?” எனச் சிடுசிடுத்தாள் அவனிடம்.
அந்நேரத்தில் ரூம் சர்வீஸ் மூலம் காபியும் வர, அதை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான் அருள்மொழி. அவளது சிடுசிடுப்பை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சோஃபாவில் போய் காபியோடு அமர்ந்து கொண்டான். “ஜெயிச்சவங்களுக்குத்தான் காபி” என்று நமட்டுச் சிரிப்போடு அதை அருந்தவும் செய்தான் அவன்.
தொடர்ந்து, “தோத்துப் போனதுல வருத்தமா?” என ஓரக்கண்ணால் பார்த்தபடி வினவினான்.
வானதி அசட்டையாய் உச்சுக் கொட்டியவள், “நான் தோத்துப் போனதுல எனக்கு வருத்தமில்ல. என் பக்கம் நியாயம் இருந்தும் தோத்துட்டேன்ல, அதான் வருத்தம்” என்றாள் பெருமூச்சுடன்.
“நியாயம் யார் பக்கம் இருக்கோ அவங்க தான் தோத்துப் போவாங்க. இல்ல செத்துப் போவாங்க, என் அப்பா மாதிரி.”
அவன் சாதாரணமாய்ச் சொல்லவும் சுருக்கெனத் தைத்தது வானதிக்கு.
‘இதென்ன மடத்தனமான பேச்சு? நீதியும் நியாயமும் எந்த நிலையிலும் தோற்றுவிடக்கூடாது என்று பேசுவாரே சுந்தர் மாமா. இவன் என்ன இப்படி உளறுகிறான்?’
“உன் பேச்சு மாமாவோட நியாயபுத்தியை கேலி பண்ணுற மாதிரி இருக்கு அருள்.”
“பொழைக்கத் தெரியாத மனுஷனை வேற எப்பிடி சொல்லுறது? சரி அதை விடு. தாஜ்மஹால் பாக்கப் போகலாமா?” என்றபடி எழுந்தான்.
“எனக்கு மைண்ட் அப்செட்டா இருக்கு.”
“தெரிஞ்சுதான் கூப்பிடுறேன்” என்றான் புருவத்தை ஏற்றியிறக்கியவனாக. அவள் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினாள்.
“ஹேய்! மான்கடா குரூப் சி.இ.ஓவோட வீட்டுல லஞ்ச்க்கு இன்வைட் பண்ணுனாங்க. ஈவ்னிங் பார்ட்டி வேற. என் பொண்டாட்டி சோகமா இருப்பாளேனு இங்க ஓடி வந்திருக்கேன் நான். கிளம்பு! கிளம்பு!” என அவளை அவசரப்படுத்தினான்.
“நான்…” என்று மறுக்கப்போனவள், “சரி! நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்” என்றபடி அவளது உடைமைகள் இருக்கும் பேக்கை எடுக்க, அருள்மொழி கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டான்.
கருப்பு வண்ண முழுக்கை டீசர்ட் ஒன்றையும், வெண்ணிற லாங் ஸ்கர்ட்டையும் எடுத்தவள், புடவையின் தலைப்பில் கை வைத்தபடியே திரும்பினாள். அருள்மொழியின் கண்களில் அதீத ஆர்வமும் விஷமமும் தெரிய, சட்டெனப் புடவை தலைப்பிலிருந்து கையை எடுத்துக்கொண்டவள் அவனிடம் வந்தாள்.
“நீ வெளிய போ” என்று கையைப் பிடித்து இழுத்து எழுந்து நிற்க வைத்தாள்.
“ஏன்? எதுக்கு? நான் போகமாட்டேன்” என்றவனிடம்,
“நீயென்ன சொல்லுறது?” என்றபடி அவனை இழுத்து வெளியே தள்ளி கதவை அடைத்தவள், சிரித்தபடி உடையை மாற்றிக்கொண்டாள்.
மீண்டும் கதவைத் திறந்தபோது அருள்மொழி போனில் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேரிட்டது.
“நான் வரல விக்ரம்! கேஸுக்கான ஃபீசை வாங்குன அப்புறம் கிளையண்ட் கூட நான் குளோஸா மூவ் ஆகுறது இல்ல விக்ரம். நீங்க என்ஜாய் பண்ணுங்க. நானும் என் ஒய்பும் ஆக்ரா விசிட்டுக்கு ரெடியாகிட்டிருக்கோம்.”
அழைப்பைப் பேசி முடித்துவிட்டுத் துண்டித்தவன், வானதி தயாராகி நிற்பதைப் பார்த்ததும் “கிளம்பலாமா?” என்றான் உற்சாகமாக.
“ம்ம்.”
டெல்லியின் இறுக்கமானச் சூழலில் இருந்து தப்பித்து, ஆக்ராவின் புழுதி படிந்த சாலைகளில் கார் நுழைந்தபோதே வானதியின் முகம் மலரத் தொடங்கிவிட்டது. ஆக்ராவின் கடைவீதிகளை அவள் ரசிக்க ஏதுவாகக் காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, வானதியோடு சேர்ந்து நடந்தான் அருள்மொழி.
கடைவீதி முழுக்க மனிதர்களின் நடமாட்டமும், ரிக்ஷாக்களின் மணியோசையும், விதவிதமான மசாலா வாசனைகளும் கலந்து ஒரு ஜாலியான களேபரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.
அவர்கள் ஆக்ராவின் குறுகலான சந்துக்களில் நடந்தார்கள். பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட குட்டித் தாஜ்மஹால்கள், வண்ணமயமான வளையல்கள், நாவூறும் ஜிலேபிகள் என ஆக்ராவே அவர்களைக் கொண்டாட்டமாக வரவேற்றது போல ஒரு மாயை.
வானதியின் சோர்ந்த மனநிலை மாறிப்போனது அந்தச் சூழலில். அவள் வழியில் கண்ட ஒரு வயதான கலைஞரிடம் ஒரு சின்ன மண்பாண்டத்தை வாங்கிப் பார்த்தபோதே அருள்மொழி எங்கேயோ போனான். திரும்பி வந்தவன் கைகளில் அவளுக்காகச் சுடச்சுட சமோசாக்களும், இனிப்பான ஜிலேபிகளும் இருந்தன.
“இவ்ளோவா?” என்றவளிடம்,
“பிரேக்பாஸ்ட் சாப்பிட்டியானு தெரியல. கேஸைப் பத்தி யோசிச்சு லஞ்ச் சாப்பிட்டிருக்கமாட்ட. போதாக்குறைக்கு உன் காபியை நான் பிடுங்கிட்டேன். வெறும் வயிறா இருந்தா நீ நீயா இருக்கமாட்ட” என்று கிண்டலாய்ச் சொன்னான் அருள்மொழி.
கடைவீதியில் நின்று சாப்பிட்டு ஓரமாய் கை கழுவிவிட்டார்கள் இருவரும்.
கடைவீதியின் ஆரவாரத்தைக் கடந்து, தாஜ்மஹாலின் பிரம்மாண்ட வாயிலுக்குள் அவர்கள் நுழைந்தபோது ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது போலிருந்தது. கூட்டம் அதிகம்தான். அருள்மொழி அவளது தோளை அணைத்தபடி அழைத்து வந்திருந்தான். தாஜ்மஹாலை ரசிக்கும்விதமாய் சிவப்பு கற்களால் கட்டப்பட்ட மண்டபம் போன்ற இடத்தில் அமர்ந்துகொண்டார்கள் இருவரும்.
அங்கிருந்து பார்க்கையில் அந்த வெண் பளிங்கு மாளிகை, நீல வானத்தின் பின்னணியில் ஒரு கனவு போல ஜொலித்துக் கொண்டிருந்தது.
“அருள், நிஜமாவே தாஜ்மஹால் செம அழகுடா.”
“ம்ம்! காலத்தைத் தாண்டி நிக்குற ஷாஜகானோட காதல் சின்னம். ஆண்களோட காதல் எவ்ளோ தீவிரமானதுனு உலகம் புரிஞ்சிக்க இந்த தாஜ்மஹால் ஒன்னு மட்டுமே போதும்.”
வானதி அவனைத் திரும்பிப் பார்த்தாள். இதழோரம் சிரிப்பு ஒளிந்திருந்தது.
“ஏன் அப்பிடி பாக்குற?”
“ஒன்னும் இல்ல” என்றவள், “உனக்குக் காதல்ல அவ்ளோ நம்பிக்கையா? எனக்கு என்னமோ லவ் எல்லாம் ஓவர் ரேட்டட்னு தோணும்.”
அருள்மொழியின் கண்களில் ஆச்சரியம் மின்னியது. “விமன் ஆர் காம்ப்ளிகேட்டட். உங்களுக்கு எல்லாமே ஓவர் ரேட்டட் தான், உங்க பிடிவாதத்தைத் தவிர” என்றான் விளையாட்டாக.
“ஆம்பளைங்க காதலைப் போற்றிப் பாடுறதே பொம்பளைங்களைத் தங்களோட கண்ட்ரோல்ல வச்சுக்குறதுக்குத்தானே? அதான் இந்தத் தலைமுறைப் பொண்ணுங்க அதை ஓவர் ரேட்டடா பாக்க ஆரம்பிச்சிட்டோம்.”
“உஃப்! பெமினிசமா?” சலித்தக் குரலில் சொல்லிக்கொண்டான் அருள்மொழி.
வானதி சிரிப்போடு தாஜ்மஹாலைப் பார்த்தவள், “ஒன்னு மட்டும் நீ சொன்னதை நான் ஏத்துக்குறேன். ஆம்பளைங்களோட லவ் தீவிரமானதுதான். ஓவர் ரேட்டடா இருந்தாலும் அந்தக் காதலை நாங்க மதிக்குறோம்” என்றாள் மனமார.
“ரியலி?” நம்பாத பாவனையில் சொன்னவனை நோக்கித் திரும்பியவள்,
“அட்ராக்சனா, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டானு இன்னும் ஃபைனலைஸ் பண்ணாத உன்னோட உணர்வுகளையும் சேர்த்துதான் சொல்லுறேன்” என்க, அருள்மொழியின் முகத்தில் பிரகாசம்.
அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டவன், “இதுதான் தாஜ்மஹாலோட பவர். ஓவர் ரேட்டட்னு சொன்ன வாயால காதலை மதிக்கிறேன்னு சொல்ல வச்சிடுச்சு பாரு” என்றான்.

“காதலா? நீ என்னை லவ் பண்ணுறியா? உனக்கே இன்னும் தெளிவா தெரியலையே?” என்று அவள் விழியகல கேட்க,
“நீ என் ஒய்ப். அப்ப நான் லவ் பண்ணுனா தப்பில்லதானே?” என்று பதிலுக்கு வினவினான் அருள்மொழி.
“நீ பேசுறப்ப காதுல தேனும் ஜீராவும் பாயுற மாதிரி இனிப்பா இருக்கு. ஆனா உன் செயல்கள் எல்லாம் அதுக்கு ஆப்போசிட்டா இருக்குதேப்பா. உன்கூட வாழுறது ஆட்டம் பாம் கூட டூயட் பாடுற மாதிரி திகிலா இருக்கு” என்று அங்கலாய்த்தாள் வானதி.
அருள்மொழியால் அவள் சொன்ன விதத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் கண்கள் கனியச் சிரித்ததே வானதியின் அங்கலாய்ப்பைப் போக்கிவிட்டது.
“ஆனா எனக்கு உன்கூட வாழுற இந்த லைஃப் ரொம்ப சுவாரசியமா இருக்கு. நான் பழைய நாட்களுக்குத் திரும்பிப் போன மாதிரி” என்றவனின் வாயைச் சட்டெனப் பொத்தினாள் வானதி.
“தயவு பண்ணி அப்பிடி டைம் டிராவல் பண்ணிப் போயிடாத. மறுபடி நீ முறைக்குறது நான் கத்துறதுமா வாழ்க்கை நகரும். நீ இந்த இரண்டாயிரத்து இருபத்தாறுலயே இரு அருள். இது போதும். இதுக்குள்ளவே நமக்கு ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடு வருது.”
அவள் போலியான பயத்தோடு கண்களில் குறும்பு மின்ன சொல்லவும், அவளது கையை அகற்றியவன் சத்தமாக நகைக்க, வானதியும் அவனோடு சேர்ந்து நகைத்தாள். எதிரெதிராய் நீதிமன்றத்தில் நின்றவர்களை அருகருகே அமர்த்தி இயல்பாக்கிவிட்ட கர்வத்தில் இன்னும் கம்பீரம் கூடித் தெரிந்தது தாஜ்மஹால்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

