“வாழ்க்கை நிறைய நேரத்துல நமக்குக் குடுக்குற சர்ப்ரைசஸ் எல்லாம் ரொம்ப அசவுகரியமா இருக்கும்… நம்மளால ஏத்துக்க முடியாததா இருக்கும்… வேற வழியில்லாம நம்ம அதை ஏத்துப்போம்… ஆனா ஒன்னு, சர்ப்ரைஸ் எல்லாமே சந்தோசத்தைக் குடுக்கணும்னு நம்ம எதிர்பார்க்கக்கூடாது… சில சர்ப்ரைஸ் நம்ம வேண்டவே வேண்டானாலும் நமக்கு வாழ்க்கை அதை குடுத்து சங்கடப்படுத்தும்… இப்ப வாழ்க்கை எனக்குக் குடுத்த சர்ப்ரைஸ் சாகர்… யெஸ், அவரைச் சர்ப்ரைஸ்னு சொல்லுறதை விட சங்கடம்னு சொன்னா சரியா இருக்கும்”
-நித்திலா
லாங்வுட், சிம்லா…
சிடுசிடுத்த முகத்தோடு அங்குமிங்கும் உலாவிய நித்திலாவை பீன்பேக்கில் அமர்ந்து யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
தனது வருகைக்கான காரணத்தைச் சொன்ன பிறகு அவளது வதனத்தில் தெளிவு உண்டாகும் என எதிர்பார்த்தான் அவன். ஆனால் அங்கே சிடுசிடுப்பு மிஞ்சவும் ஏமாற்றமாகிப் போனது.
அவனே இறங்கிவந்தால் நித்திலா கொஞ்சம் மனம் மாறுவாள் என ஸ்ரீநயனியும் நினைத்திருந்தாள். ஆனால் தானும் தங்கையும் எண்ணியபடி அவ்வளவு எளிதாக நித்திலாவின் மனதை மாற்ற முடியாது போல!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சலிப்பாக இருந்தது அவனுக்கு. அந்நேரத்தில் மொபைல் வேறு சிணுங்கி எரிச்சல் மூட்டவும் என்னவென எடுத்து தொடுதிரையைப் பார்த்தவன் அழைத்தவன் சந்தீப் என்றதும் புருவச்சுருக்கத்தோடு அழைப்பை ஏற்றான்.
எடுத்ததும் கிருஷ்ணராஜசாகரின் ஆலோசனை தேவையென சொன்னவனை ஏனோ மூத்தவனால் நம்ப முடியவில்லை. இப்படி எல்லாம் சந்தீப் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிறது!
“என்ன சஜசன் கேக்கணும்னு கால் பண்ணிருக்க? உன்னோட டிவோர்ஸ் விசயமா பேசப்போறனா ப்ளீஸ் கட் த கால்… எனக்கு அவ்ளோ பொறுமை இல்ல”
“டிவோர்ஸ் பத்தி தான்ணா”
“ஏன்டா நான் அவ்ளோ தூரம் சொல்லியும் டிவோர்ஸ் முடிவுல இன்னும் நீ ஸ்ட்ராங்கா இல்லையா?”
கடுகடுவென எரிந்து விழுந்தான் கிருஷ்ணராஜசாகர். உணவு மேஜையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த நித்திலாவின் காதில் அவனது குரல் விழுந்தது.
என்னவென நிதானித்து அவனது பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
சந்தீப் மொபைல் அழைப்பில் கிருஷ்ணராஜசாகரிடம் நிஹாரிகா கருவுற்ற விவரத்தைக் கூறினான்.
“சோ அவளை டிவோர்ஸ் பண்ணுற முடிவை மாத்திக்கப்போற?”
எகத்தாளம் நிரம்பி வழிந்தது கிருஷ்ணராஜசாகரின் குரலில்.
“இல்லண்ணா… அந்த முடிவை மாத்திக்க மாட்டேன்”
பின் ஏன் அழைத்தான் என்ற குழப்பம் கிருஷ்ணராஜசாகரின் மனதில்.
“எனக்கு என் குழந்தை வேணும்ணா… பட் நிஹி டிவோர்ஸ் முடிவை மாத்திக்கலனா அபார்ஷன் பண்ணுவேன்னு மிரட்டுறா”
“ஏன்டா அப்பிடி பண்ணுறா?”
“அவளால சிங்கிள் மதரா குழந்தைய வளக்க முடியாதாம் கிரிஷ்… அவளை சொசைட்டி தப்பா பேசுமாம்”
சந்தீப்பின் பதிலில் கிருஷ்ணராஜசாகருக்குச் சிரிப்பு வந்தது. நகைச்சுவைக்குச் சிரிப்போமே அப்படிப்பட்ட சிரிப்பல்ல அது, வெற்றிச்சிரிப்பு.
அப்படி என்ன சந்தீப் சொல்லியிருப்பான் என நித்திலா யோசிக்கும் போதே கிருஷ்ணராஜசாகர் பதிலளித்தான்.
“எல்லாரும் நித்திலா ஆகிடமுடியாது சந்தீப்… ஷீ டசிண்ட் டிசர்வ் யூ… அவ உன்னை எமோஷ்னல் ப்ளாக்மெயில் பண்ணுறா… அவ கிட்ட இருந்து எப்பிடி குழந்தைய வாங்கணும்னு எனக்குத் தெரியும்… அவ கிட்ட வளர்ந்தா அந்தக் குழந்தை வருங்காலத்துல நம்பர் ஒன் அக்யூஸ்டா வளர்ந்து நிக்கும்… அதுக்கு நீ சான்ஸ் குடுக்கக்கூடாது… அட் எனி காஸ்ட், டிவோர்ஸ் தட் விட்ச்… இல்லனா தம்பினு கூட பாக்காம உன்னையும் அவளையும் என்னை கொலை பண்ண முயற்சி பண்ணுனிங்கனு மர்டர் அட்டெம்ப்ட் கேசோட சஸ்பெக்ட் லிஸ்டுல சேர வச்சிடுவேன்”
குழந்தை என்றதும் தான் நிஹாரிகா கருவுற்றிருக்கிறாள் என்பதே நித்திலாவுக்குப் புரிந்தது.
அவளைப் பிடிக்காது என்றாலும் மனம் அவளுக்காக இரங்கியது.
இந்நேரத்தில் கணவனின் அரவணைப்பு மனைவிக்குக் கிடைக்கும் வரம். நித்திலாவுக்கு அந்த வரம் வாய்க்கவில்லை.
நிஹாரிகாவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
இரண்டுக்கும் காரணம் கிருஷ்ணராஜசாகர் எனும் ஒருவன் மட்டுமே!
அநியாயம் செய்கிறானே என மனம் பொருமியது. அதே நேரம் தன் பிள்ளைக்கு நிஹாரிகா செய்த அநியாயம் ஞாபகத்துக்கு வந்தது.
அது நித்திலாவுக்குள் ஊற்றெடுத்த இரக்கத்தை வறண்டு போக செய்துவிட்டது.
“அவ தலையெழுத்துல என்ன இருக்குதோ அதுவே நடக்கட்டும்” என சொல்லிக்கொண்டாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகர் சந்தீப்பிடம் கடுமையாகப் பேசியவன் அவனது மனநிலையைப் புரிந்துகொண்டவனாக இறுதியாக ஒரு அறிவுரையை மட்டும் கூறினான்.
“உன்னோட முன்னாள் மனைவிங்கிற பேர்ல நிஹாரிகாக்கு எவ்ளோ அலிமோனினாலும் குடுத்துடலாம்… பணம் இங்க பெரிய விசயமில்ல சந்தீப்… உன் மனநிம்மதி, உன்னோட சந்தோசம் முக்கியம்… அதுக்கு நிஹாரிகாவை நீ பிரிஞ்சு தான் ஆகணும்… என் மகனுக்காக யோசிச்சப்ப கொஞ்சம் உனக்காகவும் நான் யோசிச்சு எடுத்த முடிவு தான் டிவோர்ஸ்… என் கிட்ட இருக்குற குறைஞ்சபட்ச நல்லவன் சொல்லுற அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான்… அவளை மறந்துடு, ஆனா உன் குழந்தைய இல்ல”
அழைப்பைத் துண்டித்தான் கிருஷ்ணராஜசாகர்.
பீன்பேக்கிலிருந்து எழுந்தவன் அறைக்குள் பிரவேசித்த நித்திலாவின் குற்றம் சாட்டும் பார்வையைச் சந்தித்ததும் நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறிக்கொண்டான்.
“நிஹி செஞ்சது தப்பு தான்… பட் இந்த நேரத்துல கூட சந்தீப்பை ஹர்ட் பண்ணணுமா?”
“அவன் என் கிட்ட சொன்னதை நான் அவனுக்குச் சொல்லுறேன்… இதுல என்ன தப்பு இருக்கு?” என அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்.
“புரியல”
“நீ என்னை விட்டுப் போனப்ப சந்தீப் என் கிட்ட யூ டோண்ட் டிசர்வ் மீனு சொன்னான்… இப்ப நிஹாரிகா கன்சீவா இருக்காளாம்… அதனால் அவனுக்கு டிவோர்ஸ் குடுக்கமாட்டனு முரண்டு பிடிக்கிறாளாம்… காரணம் என்ன தெரியுமா? உன் சிஸ்டருக்கு சிங்கிள் மதரா குழந்தைய வளக்க முடியாதாம்… சொசைட்டி அவளைத் தப்பா பேசுமாம்… சொகுசு வாழ்க்கைக்காக என்னென்ன சொல்லுறா பாரு”
நித்திலா மறுப்பா தலையசைத்தாள்.
“அவ சந்தீப்பை உண்மையா காதலிச்சா… இப்பவும் அதுல எந்த சேஞ்சும் இருக்காது”
“சோ வாட்? அவளோட காதல் என் தம்பியோட பிசினஸ் லைஃபுக்குச் சமாதி கட்டுனா அவனை கைதூக்கி விட நான் இருக்கேன்… என்னால அதை ஈசியா செஞ்சுட முடியும்… ஆனா அவ கூட இருந்தான்னா சந்தீப்பும் அவளை மாதிரி பணத்தாசை பிடிச்ச ஜாம்பியா மாறிடுவான்”
“ஜாம்பி… நாட் பேட்”
“ஜாம்பி மாதிரியே அவளுக்கு மூளை இல்ல… வெறி மட்டும் பிடிச்சிருக்குல்ல, அதை வச்சு சொன்னேன்”
“பட் இந்த நேரத்துல ஹஸ்பெண்டோட அரவணைப்புக்கு ஒவ்வொரு பொண்ணும் ஏங்குவா சாகர்”
“நீ ஒன்னும் ஏங்கலையே”
எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டான் இவன்! அந்நேரத்தில் நித்திலாவின் கண்களில் உண்டான வலி அவள் கருவுற்ற சமயத்தில் எதிர்கொண்ட உளவியல் போராட்டத்தின் அடையாளம்!
தன்னைத் துச்சமாக பேசிய கணவனைத் துறந்து நெடுந்தூரம் வந்த பிறகும், அவனது வாரிசை வயிற்றில் சுமக்கும் செய்தியை சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தவள் அவள்.
சுயமரியாதையும், வீம்பும் வீறாப்பும் மூளைக்கு மட்டும் தான்! பாழும் மனதிற்கு இல்லையே!
ஒவ்வொரு மாதாந்திர பரிசோதனைக்குச் செல்லும் போதும் கணவனை இழந்தவள் என அடுத்தவர் பரிதாபப்படும்போதும், கணவனோடு வரும் கர்ப்பவதிகளைக் காணும் போதும் அவள் மனம் அனுபவித்த வேதனை எத்தனை டெல் என்பதை எந்த டோலரிமீட்டராலும் அளக்க முடியாது.
பிரசவ வலி வந்து துடித்த நேரத்திலும் அவனது அருகாமை கொடுக்கும் தைரியத்துக்காக துடித்தவள் நித்திலா.
ஆனால் இவனோ நீ ஏங்கியிருக்க மாட்டாய் என என்னிடமே அலட்சியமாகக் கூறுகிறான்!
“உங்களால சில மைக்ரோ ஃபீலிங்சை புரிஞ்சிக்க முடியாது சாகர்”
“சொல்லாம இருந்தா மைக்ரோ ஃபீலிங் என்ன, மேக்ரோ ஃபீலிங் கூட என்னனு புரியாது”
“உங்களை மாதிரி ஆளுங்களுக்குச் சொன்னாலும் புரியாது”
நித்திலா அங்கிருந்து செல்ல முயலவும் “அப்ப நீ என்னைத் தேடிருக்க?” என்றான் கிருஷ்ணராஜசாகர்.
அந்த ஒரு கேள்வியில் கொஞ்சம் தடுமாறிப்போனாள் நித்திலா.
பதில் சொல்ல விருப்பமில்லை. அவளது பதிலை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. வாயால் சொல்லாவிட்டாலும் உடல்மொழி தெள்ளத்தெளிவாக கூறுகிறதே, நித்திலா அந்நேரத்தில் எந்தளவுக்குக் கிருஷ்ணராஜசாகரைத் தேடினாள் என்பதை.
வேதனையில் சுண்டிய வதனத்தைக் கண்டவன் அவளைத் தன்னருகே இழுத்தான்.
“நீ நிறைய இடத்துல பேசல நித்திலா… கேள்வியும் கேக்கல… அந்த ஒன்-நைட் ஸ்டாண்ட் விவகாரத்துல நீ நினைச்சா என்னோட சட்டைய பிடிச்சு கேள்வி கேட்டிருக்கலாம்… இப்ப சான்ஸ் கிடைச்ச அறையுற மாதிரி அப்பவும் கன்னத்துல பளார்னு அறைஞ்சிருக்கலாம்… ஏதாவது ஒன்னு செஞ்சு ஏன்டா இப்பிடி நம்ம உறவை கொச்சைப்படுத்துறனு கேட்டிருக்கலாம்.. நீ ஏன் கேக்கல?”
“இதெல்லாம் கேக்கணும்னா நமக்குள்ள காதல் இருந்திருக்கணும்… நீங்க என் மேல காட்டுனது இரக்கம்… டிஃபரன்ட்லி ஏபிள்ட் கேர்ள்னு காட்டுன பச்சாதாபம்… இரக்கம் இருக்கிற இடத்துல உரிமையா கேள்வி கேக்க முடியாதுனு தோணுச்சு… என்னோட காதல் உங்க மனசை தொடவேல்லனு வருத்தமா இருந்துச்சு… நான் ஏமாந்துட்டேன்னு நினைச்சேன்”
நித்திலா பேச பேச கிருஷ்ணராஜசாகருக்கு நர்மதாவும் ஜனார்தனனும் அவள் தன்னைக் காதலிப்பதாகக் கூறிய தருணங்கள் நினைவுக்கு வந்தது.
அப்படி என்றால் இவள் தன்னை மெய்யாகவே காதலித்திருக்கிறாள்!
அவளைப் பேசு பேசு என வற்புறுத்தும் நான் அன்று எனது காதலை மறைக்காமல் சொல்லியிருந்தால் இந்தப் பிரிவு நேரிட்டிருக்காதோ?
கிருஷ்ணராஜசாகர் இனியாவது நித்திலாவிடம் முன்பு நடந்ததையும் தனது காதலையும் ஒளிவுமறைவின்றி சொல்ல ஆரம்பித்த நேரத்தில் சாவித்திரியின் இல்லத்தில் ஸ்ரீநயனியும் விக்ரமிடம் முன்கதையைச் சொல்ல ஆரம்பித்திருந்தாள்.
அவர்கள் மூவரும் வீட்டுக்கு வந்து அரைமணிநேரம் கடந்திருந்தது. சாவித்திரியின் ஆர்வப்பார்வையைக் கவனித்த விக்ரம் சற்று முன்னர் அவனிடம் கிருஷ்ணராஜசாகர் விடுத்த எச்சரிக்கையைக் கூறினான்.
“உங்க ஆர்வம் எனக்குச் சோகம்… அந்த பொண்ணோட அண்ணன் மீசை மரு இல்லாத பேட்டை ரவுடி… அவளை என் கூட அனுப்பி வச்சப்பவே வார்ன் பண்ணி தான் அனுப்பிருக்குறான்… என் தங்கச்சி கிட்ட ஏதாச்சும் அட்வான்டேஜ் எடுத்தனு தெரிஞ்சுதுனா விக்ரம்னு ஒருத்தன் வாழ்ந்ததுக்கான அடையாளம் கூட இல்லாம பண்ணிடுவேன்னு சொல்லிருக்கான்… சோ கண்ட்ரோல் யுவர் எமோசன் மாம்”
அவன் சொன்னதைக் கேட்டு சாவித்திரி சிரித்தார்.
“ஒருத்தன் என்னை கொன்னுடுவேன்னு இன்டேரக்டா மிரட்டுறான்… அதை சொன்னா உங்களுக்குச் சிரிப்பு வருதாக்கும்… டூ பேட் மாம்”
“யார் உங்களைக் கொல்லப்போறதா சொன்னது விக்கி?”
கேட்டபடியே வந்து சேர்ந்தாள் ஸ்ரீநயனி.
“வேற யாரு? உங்கண்ணா தான்”
“ஏதோ பேட்டை ரவுடினு சொன்ன மாதிரி கேட்டுச்சு”
நிதானமாகக் கேட்டவளைச் சிரிப்போடு ஏறிட்டுவிட்டு அம்ரித்தைக் கவனிக்க கிளம்பினார் சாவித்திரி.
விக்ரம் பதில் சொல்லாமல் விழிக்கவும் அவனருகே அமர்ந்தவள் “நீங்க தான் யார் வந்தாலும் கல்யாணம் பண்ணி வாழ்க்கை குடுக்குற வள்ளல் ஆச்சே! அதான் அண்ணா உஷாரா உங்களை வார்ன் பண்ணிருக்கார்” என்றாள் கிண்டலாக.

“ஏன் கிண்டல் பண்ண மாட்டிங்க? அப்பிடி ஒரு அண்ணனை வச்சுக்கிட்டு கிண்டலும் பண்ணலாம்… என்னை மாதிரி ஒரு அப்பாவிய மெண்டலும் ஆக்கலாம்”
விக்ரம் சோகமாகக் கூறினான்.
“எப்பிடி இந்த கட்டப்பாவ எங்க நித்தி லவ் பண்ணுனா? வெரி வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோ”
“எங்கண்ணாவ பத்தி என் கிட்டவே கிண்டலா பேசுறிங்களா?”
ஸ்ரீநயனி சண்டைக்கு வந்தாள்.
“அட கிண்டல்லாம் பண்ணல… எனக்கு அவங்க ரெண்டு பேரோட ரிலேசன்ஷிப்ல ஏதோ சின்ன தப்பு நடந்திருக்கும்னு தோணுது… அப்பிடி என்ன தான் ஆச்சுங்க? நீங்களாச்சும் உண்மைய சொல்லுங்க… உங்கண்ணா நித்திய லவ் பண்ணுனாரா?”
விக்ரம் இம்முறை தீவிரக்குரலில் கேட்கவும் ஸ்ரீநயனியும் நான்காண்டுகளுக்கு முன்னர் நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.
“அப்ப நான் யூ.ஜி படிச்சிட்டிருந்தேன்… அந்த டைம்ல என் க்ளாஸ்மேட்டா இருந்தவங்க தான் நித்திலா அண்ணி… அவங்க ஒரு கேன்சர் சர்வைவர்… ரொம்ப போல்டா பேசுவாங்க… எங்களை விட பெரியவங்க கூட… ஆனா நாங்க அவங்க கிட்ட பேச யோசிப்போம்… எனக்கு அவங்களோட ஆட்டிட்டியூட் பிடிச்சுப் போய் அவங்களோட யூடியூப் சேனலை ரெகுலரா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்”
“நித்தி யூடியூபரா அப்ப?”
“யெஸ்… இப்ப கபே வ்ளாகர்… அப்ப பியூட்டி வ்ளாகர்… அவங்களோட பேர்லி பியூட்டி சேனல்ல எல்லா காஸ்மெட்டிக்ஸ், ஸ்கின்கேர் ப்ராடக்ட் பத்தியும் டீடெய்ல்ட் ரிவியூ போடுவாங்க… ஸ்பான்சர்ட் வீடியோனு கண்ட கச்சடா பொருளையும் விளம்பரம் பண்ணமாட்டாங்க… சப்ஸ்க்ரைபர்ஸ் கம்மியா இருந்தாலும் அவங்க வீடியோ ரொம்ப ஸ்டேண்டர்டா நம்பகத்தன்மையோட இருக்கும்… வீக்லி ஒன்ஸ், கொஸ்டீன் ஆன்சர் செஷன் போகும்… அதுல்லாம் எவ்ளோ அழகான நாட்கள் தெரியுமா? அந்த சமயத்துல தான் கிரிஷ் அண்ணா ராந்த்வா ஸ்கின்கேர்ல நியூ ப்ராடக்ட்ஸ் ரேஞ்சை விண்டர் சேல்ஸ்னு அறிமுகப்படுத்துனார்… அந்த டைம்ல தான் அவங்க மீட் பண்ணிக்கிட்டாங்க… பட் அது யூஸ்வலான மீட்டிங் இல்ல”
இங்கே ஸ்ரீநயனியும் அங்கே கிருஷ்ணராஜசாகரும் சொல்லிக்கொண்டிருக்கும் நான்காண்டுகளுக்கு முன்பு கடந்து போன தருணங்களில் நித்திலா பங்கேற்பாளினியாக மாறியிருக்க அத்தருணங்களைக் கேட்கும் ஆடியன்ஸ் ஆகிப்போனான் விக்ரம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

