“அப்பாக்கு ரைட்டர் சுஜாதாவோட கதைகள் ரொம்ப பிடிக்கும்… அவரோட சயின்ஸ் ஃபிக்சன்ஸ் மட்டுமில்ல, ஷார்ட் ஸ்டோரிஸ்கும் அப்பா அடிமைனு சொல்லலாம்… உஞ்சவிருத்தினு ஒரு சிறுகதை உண்டு… அதை ஒவ்வொரு தடவையும் அப்பா அவ்ளோ சிலாகிச்சுப் பேசுவார்… அதுல வர்ற் ஓல்ட்மேனோட வைராக்கியம், உஞ்சவிருத்தி எடுக்க ஹெல் பண்ணுன பையனுக்குத் தன்னோட சொத்தை எழுதி வச்ச தயாள உள்ளம்… அப்பா சொல்லுறப்ப எனக்கே படிக்கணும் போல இருந்துச்சு… எதேச்சையா கூகுள் பண்ணுனப்ப ஞாபகம் வந்துச்சு… உடனே தேடி எடுத்துப் படிச்சேன்… அதுல தொச்சுங்கிற பையனுக்கு அந்த ஓல்ட்மேன் தன்னோட சொத்து முழுக்க எழுதி வச்சிட்டுச் செத்துப்போயிடுறார்… கடைசில அவரோட மகன்வயித்து பேத்தியே அந்த தொச்சுவ கல்யாணம் பண்ணிக்கிறா… ஃபைனலி சொத்து குடும்பத்துக்கே மறுபடியும் வந்து சேருது… அந்தப் பொண்ணு சொத்துக்காக கல்யாணம் பண்ணுனாளானு ஒரு கேரக்டர் கேக்கும்… அதுக்கு இன்னொரு கேரக்டர் இல்ல காதலிச்சானு சொல்லும்… அதோட கதை முடிஞ்சிடும்… அந்த இடத்துல ஓல்ட்மேனோட பேத்தி பணத்துக்காக கல்யாணம் பண்ணுனாளா, இல்ல லவ்வானு ரீடர்சே டிசைட் பண்ணிக்கட்டும்னு சுஜாதா விட்டிருப்பார்… ஏன் அப்பாக்குச் சுஜாதா மேல க்ரேஷ்னு இப்ப புரியுது”
-நித்திலா
நித்திலாவிடம் பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போன அம்ரித்தைத் தடுத்தான் கிருஷ்ணராஜசாகர்.
“நான் பேசிட்டுத் தர்றேன் அம்ரு”
அம்ரித்தும் தந்தையிடம் மொபைலைக் கொடுத்துவிட்டு ஓடினான். கிருஷ்ணராஜசாகர் தொடுதிரையில் தெரிந்த நித்திலாவின் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.
அவளுக்கோ அவனைப் பார்க்க விருப்பமில்லை. அழைப்பைத் துண்டிக்கலாமென போனவளை “நித்திலா ஒன் மினிட்” என்ற கிருஷ்ணராஜசாகரின் அதட்டலான குரல் தடுத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இவன் யார் என்னைத் தடுப்பதற்கு? எரிச்சல் மூள தொடுதிரையை முறைத்தாள் அவள்.
“இன்னொரு தடவை அம்ருவை இப்பிடி வெயிட் பண்ண வைக்காத… உன்னால அவன் இன்னைக்குச் சரியா சாப்பிடாம அழுதுட்டே இருந்தான்… என் பிள்ளை இப்பிடி அழுது கரையுறது எனக்குப் பிடிக்கல”
நித்திலாவுக்குச் சுருசுருவென கோபம் மூண்டது. அவனைத் திட்ட துடித்த நாவினைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அதேநேரம் அவனை அப்படியே விடவும் மனமில்லை.
“கொஞ்சநாளுக்கு முன்னாடி நீங்க செஞ்சதை இன்னைக்கு நான் செஞ்சேன்… இதுல என்ன தப்பு இருக்கு?”
“வாட் ரப்பிஷ்? உளறாத நித்திலா”

“சமாளிக்க நினைக்காதிங்க சாகர்… உங்களைத் தேடி என் பிள்ளை அழணும்னு நீங்க திட்டம் போட்டு காய் நகர்த்துனது எனக்குத் தெரியாதுனு நினைக்கிறிங்களா? எல்லாம் தெரிஞ்சும் என் பிள்ளைய உங்க கூட அனுப்புனதுக்கு என்னோட ஹெல்த் கண்டிசன் மட்டும் தான் காரணம்… நீங்க உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணுனிங்கனா அம்ருவ திரும்ப அழைச்சிப்பேன்”
நித்திலா சொன்னதும் ஏதோ ஜோக் சொன்னதைப் போல சத்தமாக சிரித்தான் கிருஷ்ணராஜசாகர்.
“நல்ல ஜோக்… நீ அவனைக் கூப்பிட்டுப் பாரேன்… அவன் வந்தான்னா நோ அப்ஜெக்சன்”
நித்திலாவுக்கு மனம் கொதித்தது. எவ்வளவு மமதை இவனுக்கு? அம்ரித் இவனது வீட்டிலிருக்கும் வசதி வாய்ப்பில் மயங்கிப் போயிருக்கும் திமிர். எத்தனை நாளைக்கு இந்த திமிர் இருக்கப்போகிறது என கறுவிக்கொண்டாள் அவள்.
“ஏன் சைலண்ட் ஆகிட்ட நித்திலா? மகனைப் பிரிஞ்சு இருக்க முடியலையா? நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்லட்டுமா? பேசாம நீயும் இங்க வந்துடேன்… நீ நான் அம்ரு மூனு பேரும் நாம் இருவர் நமக்கு ஒருவர்ங்கிற பிலாசபிக்கு உதாரணமா வாழலாம்”
“இப்பிடி பேசாதிங்க சாகர்… எனக்குப் பிடிக்கல”
“எது பிடிக்கல நித்திம்மா? இங்க வரச் சொன்னது பிடிக்கலையா? இல்ல நாம் இருவர் நமக்கு ஒருவர்னு சொன்னது பிடிக்கலையா? சரி உனக்காக, நாம் இருவர் நமக்கு இருவர்னு கொள்கைய மாத்திக்கலாமா? பட் அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு… நீ இங்க வந்தா தான் அந்த இருவர் பாசிபிள்”
“ஷட்டப்! தேவையில்லாம பேசாதிங்க… ஒரு மனுசன் தெரியாம சாக்கடையில விழலாம்… ஆனா சாக்கடைனு தெரிஞ்சே அதுல விழுந்தா அவன் மனுசஜென்மமே இல்ல… நான் சுயபுத்தி உள்ள மனுசி… உங்களை மாதிரி உணர்வுகளை கேலிக்கூத்தாக்குற மனுசன் கூட வாழுற அளவுக்குப் புத்தி இன்னும் பேதலிக்கல”
கோபக்கனல் கண்களில் வீச முகம் சிவக்க அவள் பேசியதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் வார்த்தைகளின் கூர்மை அதிகம் என்பதால் கிருஷ்ணராஜசாகரால் அதை ரசிக்க முடியவில்லை. அவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
“உன்னை மாதிரி ஈகோ பிடிச்சவளோட உணர்வுகளுக்கு மரியாதை குடுத்தே தீரணும்னு எனக்கு எந்தக் கட்டாயமும் இல்ல… இப்ப நான் மரியாதை குடுத்து பேசுறது நீ என்னோட ஒய்ப்ங்கிற காரணத்துக்காக இல்ல… என் பிள்ளைய கஷ்டப்பட்டு பெத்து நல்லபடியா வளத்திருக்க… அதுக்காக”
“ஒய்ப் இல்ல… எக்ஸ் ஒய்ப்”
அழுத்தமாக உரைத்தவளை மொபைல் தொடுதிரை வழியே கண்கள் பளபளக்க பார்த்தான் கிருஷ்ணராஜசாகர்.
“எக்ஸ் ஒய்ப்… ம்ம்ம்… இதுக்குத் தான் உன்னை ஈகோயிஸ்ட்னு சொல்லுறேன் நித்திலா… எக்ஸ் ஒய்ப்னா என்னனு தெரியுமாடி? வாய்க்கு வந்தபடி உளறாத… இன்னும் நீ மிசஸ் கிருஷ்ணராஜசாகர் தான்… பை த வே உன்னை என்னோட ஒய்ப்னு சொல்லுறதுக்கு நான் தான் யோசிக்கணும்… நானே பெருந்தன்மையா ஒய்ப்னு சொல்லுறேன்… பட் யுவர் டாம் ஈகோ நெவர் அட்மிட் தட் ட்ரூத்”
அவன் எரிந்து விழுந்து கடைசியில் மட்டம் தட்டவும் நித்திலா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல் அழைப்பைத் துண்டித்தாள்.
அழைப்பு திடீரென துண்டிக்கப்படவும் முகத்திலடித்தாற்போல உணர்ந்தான் கிருஷ்ணராஜசாகர். திமிர் பிடித்தவள் என மனதிற்குள் கறுவித் தீர்த்தான்.
கோபத்தில் தாடை இறுக பெருமூச்சை வெளியிட்டு தன்னை இயல்பாக்க முயற்சித்தான்.
என்ன முயன்றாலும் நித்திலா கூறிய ‘எக்ஸ் ஒய்ப்’ என்ற வார்த்தை மட்டும் அவனது காதுகளில் ஒலிப்பது நிற்கவில்லை. இதே அறையில் அவளோடு இருந்த நினைவுகள் எழுந்து அவனைப் பார்த்து கேலி செய்து சிரித்தன.
நித்திலாவை ஒரு எல்லைக்குள் நிறுத்திவைக்காமல் அவளோடு இலகுவாகப் பழகி, அவள் மீது நம்பிக்கை வைத்து, இயல்பான திருமண பந்தத்துக்குள் நுழைந்தது அவன் செய்த மாபெரும் முட்டாள்தனம்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து கரியைப் பூசிவிட்டுப் போனவள் உணர்வுகளைப் பற்றி பேசலாமா? அவனோடு கூடிக் களித்து ரத்தினம் போல பிள்ளையையும் பெற்றுவிட்டு ‘எக்ஸ் ஒய்ப்’ என இகழ்ச்சியாக மொழிகிறாள் என்றால் அவளுக்கு இருக்கும் ஈகோ இந்த நான்காண்டுகளில் இமயமலை அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று தானே அர்த்தம்!
கடுப்பை அடக்க வழியின்றி டீபாயில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த டெரகோட்டா புத்தர் பொம்மையைத் தூக்கித் தரையில் எறிந்தான்.
அப்படியும் கோபம் தீரவில்லை.
மீண்டும் மீண்டும் அவளது குரல் கேட்டுக்கொண்டே இருக்கவும் “டாம் ஐ விஷ் ஐ டிண்ட் மீட் யூ இன் மை லைஃப்” என்று கத்தியபடி டீபாயை பலங்கொண்ட மட்டும் அவன் எட்டி உதைக்க அது சுவரில் மோதி விழுந்தது.
புத்தர் சிற்பம் விழுந்த சத்தம் வேண்டுமானால் கீழே கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால் டீபாய் சுவரில் மோதி டொம்மென விழுந்தது கீழ்த்தளத்தில் பேரனோடு விளையாடிக்கொண்டிருந்த நர்மதாவின் செவியில் நன்றாகவே விழுந்தது.
அம்ரித்தை விளையாடும்படி கூறிவிட்டு வேகமாக மேல்தளத்துக்குச் சென்றார்.
இன்னும் கோபம் குறையாமல் தாடை இறுக கைவிரல்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நெறித்தவாறு அமர்ந்திருந்த கிருஷ்ணராஜசாகரையும் அவனது கோபத்திற்கு பலியான புத்தர் சிலை மற்றும் டீபாயையும் பார்த்தவர் மைந்தனை நெருங்கினார்.
“கிரிஷ்”
அவர் அழைக்கவும் கண்களை இறுக மூடினான்.
“என்னம்மா?”
“கோவம் அறிவுக்குச் சத்துரு… உன் கோவத்தால தான் நீ எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற கிரிஷ்… கோவம் நம்மளை காக்குற கவசமா இருக்கணும், ஆயுதமா மாறுனா அதனால முதல்லா நீ தான் காயப்படுவ”
கிருஷ்ணராஜசாகர் இயலாமையோடு அன்னையை ஏறிட்டான். பின்னர் பக்கென்று நகைத்தான். நர்மதா மைந்தனை அதிர்ச்சியோடு பார்த்தவாறு அவனருகே அமர்ந்தார்.
“கிரிஷ்!”
அவரது ஆதுரமான குரலும் அரவணைப்பான மடியும் அவனுக்கு இப்போது உடனடியாகத் தேவை.
நர்மதாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.

அவனது சிகையைக் கோதி கொடுத்தவர் “வாட்ஸ் ஈட்டிங் யூ கிரிஷ்?” என கனிவாய் கேட்கவும் கண்களை மூடிக்கொண்டான்.
“நித்திலா”
மருமகளின் பெயரை அவன் கூறவும் நர்மதாவுக்கு தனது ஊகம் உண்மையாகிவிட்டது என்ற எண்ணம்.
“அவளை கோவில்ல பாத்தப்ப ஐ ஃபீல் நத்திங்… பட் என் பிள்ளைக்கு அம்மாவா பாத்தப்ப என்னால அப்பிடி இருக்க முடியல… என் ஒய்பா இருந்த நித்திலா மேல எனக்குத் துளி கூட மரியாதை கிடையாதும்மா… ஆனா என் பையனோட அம்மாவ நான் மதிச்சாகணுமே! அவ என்னை முட்டாள் ஆக்கிட்டு மியூச்சுவல் டிவோர்ஸ் அக்ரிமெண்ட்ல சைன் பண்ணி வச்சிட்டுப் போனதுக்குத் தண்டனையா அம்ருவ அவ கிட்ட இருந்து பொய் சொல்லிப் பிரிச்சேன்… காட் ப்ராமிஸ், அதுக்காக நான் வருத்தப்படல… எப்பவும் வருத்தப்படமாட்டேன்… எனக்கும் அவளுக்கும் இடையில எந்த ஒரு ரிலேசன்ஷிப்பும் ப்ளூம் ஆகிறதை நான் விரும்பல… பட் அவ எக்ஸ் ஒய்ப்னு சொன்னப்ப ரொம்ப கோவம் வருதும்மா… கண்ணுல பாக்குறதை எல்லாம் அடிச்சு நொறுக்கணும் போல இருக்கு… தட் கேர்ள் இஸ் ட்ரைவிங் மீ க்ரேசி”
நர்மதாவுக்கு என்ன சொல்லி மகனை ஆறுதல்படுத்துவதென்று புரியவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டுக் காணாமல் போன மருமகள் மீது அவருக்கும் வருத்தம் இருக்கிறது.
எப்படி அவளால் போகமுடிந்தது? அவளுக்கு கிருஷ்ணராஜசாகர் மீது நேசம் பிறந்ததை தன்னிடம் தானே கூறினாள்! அப்படிப்பட்டவள் பிறந்த நேசத்தோடு சேர்த்து அவனையும் விட்டு பிரிந்தது ஏன்?
மனம் விட்டுப் பேசினால் மணிநேரத்தில் தீர்ந்துவிடக்கூடிய பிரச்சனையை மகனின் கோபமும், மருமகளின் ஈகோவும் நிரந்தர பிரிவாக மாற்றிவிட்டதோ என தாயுள்ளம் துடித்தது.
“ஆன்ட்டி, ஐ ஃபால் இன் லவ் வித் சாகர்”
வெட்கமும் சிரிப்புமாக நித்திலா சொன்னது அவரது கண்ணுக்குள்ளே இருக்கிறது. அந்த நாணமும் புன்னகையும் கட்டாயம் நடிப்பில்லை. காதலிப்பதாகக் கூறியவள் ஒரேயடியாக அவனைப் பிரிந்து சென்ற போது கிருஷ்ணராஜசாகரைப் போல நர்மதாவும் துடித்துப் போனார்.
அவளைத் தேடாத இடமேயில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நட்டநடுராத்திரியில் பொல்லாத கனவுகள் வந்து பயமுறுத்தும் போது எழுந்து தோட்டத்தின் குளத்தைத் தஞ்சமடைய அவர் வரும் போதெல்லாம் கிருஷ்ணராஜசாகரும் அங்கிருப்பான்.
அவனுக்கும் தன்னைப் போல தான் பயம் வந்திருக்குமோ என மனம் நோகுவார் நர்மதா. படிப்படியாக இத்தகைய பயங்களும் பயங்கர கனவுகளும் குறைந்து அறவே வராமல் போய்விட்டன.
ஆனால் மனதில் நித்திலாவின் நினைவு எப்போதுமே நர்மதாவுக்கு இருக்கும். இப்போதும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என துடித்தது அவர் மனம்.
அதே நேரம் கெட்வெல் மருத்துவமனையில் இருந்த நித்திலாவுக்குக் குடித்துக்கொண்டிருந்த சூப் புரையேறியது.
விக்ரம் அவளது தலையில் தட்டினான்.
“மெதுவா குடி நித்தி”
“போதும் விக்கி”
அரைகுறையாய் காலியான கோப்பையை அவனிடம் நீட்டினாள் நித்திலா.
“ஒழுங்கா காலி பண்ணு… வயிறு வலிக்க கத்திருக்கல்ல… எனர்ஜி எல்லாம் போயிருக்கும்” என அதட்டி மீண்டும் சூப் கோப்பையை அவளிடம் திணித்தான் விக்ரம்.
“விக்கி…”
“விக்கி பக்கி ஜக்கினு சமாளிக்காம ஒழுங்கா சூப்பை காலி பண்ணு… இனிமே நீ மிஸ்டர் சாகர் கிட்ட பேசவேண்டாம்… புருசனும் பொண்டாட்டியும் எதுல ஒத்துப்போறிங்களோ இல்லையோ அடிவயித்துல இருந்து குரல் எடுத்து ஆக்சனோட பாலைய்யா மாதிரி வசனம் பேசுறதுல ஒத்துப்போறிங்க”
சலித்துக்கொண்டபடி சாப்பாடு கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்து வைத்தான் விக்ரம்.
“அவன் ஒன்னும் என் புருசன் இல்ல” வேகமாக மறுத்தாள் நித்திலா.
“ரைட்டு விடு… நீ தான் அவரோட பொண்டாட்டி… போதுமா?” என்றபடி பாத்திரங்களை எடுத்து வைத்து சூப் சிந்திய கரங்களைக் கழுவ சென்றுவிட்டான் விக்ரம்.
நித்திலாவுக்கு அதை கேட்க பிரியமில்லை.
என்னவெல்லாம் பேசிவிட்டான் அவன்? அம்ரித்தை அவனோடு அனுப்பி வைத்ததே தவறு! இதில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கொள்கை ஒன்று தான் குறைச்சல்.
“எனக்கு ஈகோவா? எந்த ஃபீலிங்சுக்கும் மதிப்பு குடுக்காத கல்லுனு தெரிஞ்சும் அவனை விரும்பி அவன் கிட்ட என்னை ஒப்படைச்சேன்ல, அப்ப என்னை ஈகோயிஸ்ட்னு தானே சொல்லுவான்… காதல் மாதிரி அழகான உறவைக் கூட கொச்சைப்படுத்துனவனுக்கு என் ஈகோவ பத்தி பேச எந்த தகுதியும் இல்ல”
மீண்டும் கோபம் துளிர்த்தது நித்திலாவுக்குள். கூடவே அவளது ஈகோ பற்றி கிருஷ்ணராஜசாகர் முன்பு கூறியது நினைவுக்கு வந்தது.
மனதின் மெல்லுணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவனுக்கு இல்லையென அப்போது நித்திலா வாதம் செய்து கொண்டிருந்தாள். தனது செயல்களுக்கான அர்த்தத்தை அவள் தான் புரிந்துகொள்ள மறுக்கிறாள் என்பது அவனது வாதம்.
நித்திலா உதட்டைச் சுழித்து அசட்டை செய்யவும் கிருஷ்ணராஜசாகர் அவளருகே அமர்ந்தான்.
“உனக்கும் எனக்கும் இடையில என்ன இருக்குனு தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியும்.. இந்த பில்லோ” நடுவில் கிடந்த தலையணையைக் காட்டி பதிலளித்தாள் நித்திலா.
“இல்ல… உன்னோட ஈகோ… அதை தூக்கியெறிஞ்சிட்டு என்னைப் பாரு… நான் சொல்லுறதோட முழு அர்த்தம் உனக்குப் புரியும்” என்றவன் அந்த தலையணையை அவள் மீது வீசிவிட்டுப் படுத்துக்கொண்டான்.
என்ன அர்த்தத்தில் அன்று சொன்னான் என்பது புரிந்து அவனோடு மனதளவில் நெருங்கிவிட்டதாக அன்றைக்குக் கனவுகோட்டை கட்டிய முட்டாள் தான் இன்றைக்கு இருக்கும் நித்திலா.
அன்றும் இன்றும் எந்த உணர்வுகளையும் புரிந்துகொள்ளாத மூடன் தான் கிருஷ்ணராஜசாகர். அவனை நினைத்தாலே இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிற, ஸ்ரீநயனி விவரித்த திட்டத்தை மனதில் வைத்து தற்காலிகமாக அமைதியானாள் நித்திலா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

