“வசதியான வாழ்க்கை தான் சொர்க்கம்னு மக்கள் ஒருபக்கம் ஓடுறாங்க… ஜில்லுனு பெய்யுற மழையில முழுசா நனையாம காலை மட்டும் நனைச்சு விளையாடுறது, நெய் மணக்க ரோஸ்ட் சாப்பிட்டு முடிச்சதும் கையோட சர்க்கரை கம்மியா டிகாசன் தூக்கலா இனிப்பும் கசப்புமா ஃபில்டர் காபி குடிக்கிறது, யாரும் வீட்டுல இல்லாதப்ப பிடிச்ச சாங்கை ஓட விட்டு கால் வலிக்குற அளவுக்கு டான்ஸ் ஆடுறது இதையெல்லாம் விடவா வசதியான வாழ்க்கை சந்தோசத்தைக் குடுத்துடும்? ஐ டோண்ட் திங்க் சோ”
-நித்திலா
தி வுட்பெக்கர் கபே, லாங்வுட், ஜக்கு மலையடிவாரம்…
மலையடிவாரத்திலிருந்து மேலே வளைந்து செல்லும் பாதையில் பச்சையாக புல் செழித்து வளர்ந்திருந்தது. அந்தப் புல்வெளிப்படலம் முடிவடைந்த இடத்தில் பைன் மரக்கூட்டங்களுக்கிடையே மூன்று முக்கோணங்களை சேர்த்து அடுக்கியது போன்ற வடிவத்தில் மரச்சட்டங்களும், கண்ணாடித்தடுப்புகளும் கொண்டு கட்டப்பட்ட கபே எட்டிப் பார்த்தது.

ஜக்கு மலைச்சிகரத்தின் லாங்வுட் பகுதியில் இந்த ஒரு கபே மட்டும் தான் பிரயாணிகளின் தாகத்திற்கும் பசிக்கும் உணவை ஈந்து கொண்டிருக்கிறது.
அங்கே தரமான சுத்தமான உணவுவகைகள் கிடைப்பதால் ‘வேர்ட் பை மவுத்’ மூலமாகவே பிரபலமான கபே அது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பேக்கிங்கிற்கு இருவர், இந்தியன் சிற்றுண்டி மற்றும் உணவு சமைக்க இருவர், பாரிஸ்டா இருவர், பழச்சாறு மற்றும் சூப் தயாரிக்க ஒருவர், சர்விங்குக்கு மூவர் என பத்து நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அன்று ஜக்கு கோவிலுக்கு வந்த பிரயாணிகளின் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் கபே ஊழியர்கள் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தனர்.
“ஒன் கேரமல் லாட்டே”
“கஹான் மேரா கோல்ட் ப்ரூ?”
“ஜல்தி சே மேரி அமெரிக்கனோ லாவ்”
காபி வகை பானங்களுக்கான தேவை அதிகரித்த நேரம். கபேயின் உரிமையாளினியும் ஊழியர்களை மேற்பார்வையிடுபவருமான சாவித்திரி பரபரப்பானார்.
“பாரிஸ்டா எங்க?”
பாரிஸ்டாவின் உதவியாளினியும் ஜூனியர் பாரிஸ்டாவுமான ரியா ஒய்ட் ஃப்ளாட் காபியின் மேற்பரப்பில் நுரையால் இதய வடிவை கொண்டு வந்தபடியே நிமிர்ந்தாள்.
“ஷீ ஹேஸ் கான் டு டெம்பிள்”
“வாட்?”
“வித் விக்கி”
“ஓ மை காட்! இதுங்க ரெண்டும் ஒன்னா போச்சுனா சீக்கிரம் வராதே”
பதறிய சாவித்திரி சிம்லாவாழ் தமிழ்ப்பெண்மணி. கணவர் தேவராஜன் சிம்லாவின் பிரபல ஹோட்டல் செயின் ஒன்றில் தலைமை செயல் அதிகாரி.
விக்ரம் சாவித்திரியின் ஓரக்கத்தியுடைய மைந்தன். ஓரக்கத்தியும் அவரது கணவரும் இளம்வயதில் மறைந்துவிட குழந்தையற்ற சாவித்திரி – தேவராஜன் தம்பதியினர் அவனை தங்கள் புதல்வனாக சட்டப்படி தத்தெடுத்துக்கொண்டு சிம்லாவுக்கு புலம்பெயர்ந்தனர்.
சாவித்திரிக்கு ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும். அவருக்குச் சமைப்பது பிடிக்கும். பேக்கிங்கில் ஆர்வமுண்டு. எனவே கணவரிடம் அனுமதி பெற்று பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது தான் இந்த கபே. இப்போது அந்த பிராந்தியத்தில் அவ்வளவு பிரபலம்!
எவ்வளவு பிரபலமானாலும் விரிவுப்படுத்தும் எண்ணமோ இன்னொரு கிளை ஆரம்பிக்கும் எண்ணமோ சாவித்திரிக்கு இல்லை.
“ஹனுமனோட ஆசிர்வாதத்தால இந்த கபே நல்ல லாபத்தை குடுக்குது… இது போதும் எனக்கு” என்பார் அவர்.
“அடேய் விக்கி”
சாவித்திரி பற்களை நறநறத்த போது “வந்துட்டேன் மாம்” என்றபடி ஓடி வந்தான் விக்ரம்.
“எங்கடா அவ? இங்க என்னை தொந்தரவு பண்ணுறது போதாதுனு காத்தாலயே கோவிலுக்குப் போய் ஏன்டா அனுமனை தொந்தரவு பண்ணுறிங்க?”
“நானும் வந்துட்டேன் ஆன்ட்டி” என பரபரப்போடு ஓடி வந்த நித்திலாவைப் பார்த்ததும் சற்று சாந்தமானார்.
வந்தவளோ நிற்கும் முன்னர் நிலை தடுமாறி கீழே விழ அவள் அணிந்திருந்த காலணிகள் திக்குக்கு ஒன்றாய் போய் விழுந்தன.
“நித்தி”
பதற்றத்துடன் ஓடி வந்தனர் பெரியன்னையும் மகனும்.
“இட்ஸ் ஓ.கே! நான் எழுந்திருச்சிடுவேன்”
தரையில் கையூன்றி மெதுவாக எழுந்த நித்திலா நிற்க முடியாமல் தடுமாறினாள்.
அவளது ஒரு பாதம் தரையைத் தொட்டிருந்தது. இன்னொரு பாதத்துக்கும் தரைக்குமான தூரம் கிட்டத்தட்ட ஐந்து சென்டிமீட்டர் இருக்கும்.
இரு கால்களும் சமமான உயரமின்றி இருப்பதால் மீண்டும் சரியப்போனவளை ஓடிச்சென்று விக்ரம் பிடித்துக்கொள்ள சாவித்திரி அவளுடைய செருப்பை எடுத்து வந்து வைத்தார்.
ஒரு செருப்பு நாம் அணிவது போல சாதாரண உயரத்திலும் மற்றொன்று ஐந்து செண்டிமீட்டர் உயரம் அதிகமாகவும் இருந்தது.
அதில் காலை வைத்த பிறகு தான் நித்திலாவால் பேலன்ஸ் செய்து நிற்க முடிந்தது.
வந்திருந்த வாடிக்கையாளர்கள் அவளைப் பச்சாதாபத்துடன் பார்க்க நித்திலாவின் முகம் அவமானத்தில் சிவந்தது.
கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அவளுக்கு இருக்கும் குறைபாட்டை ஆங்கிலத்தில் ‘Limb Length Discrepancy’ என்பார்கள். இந்தக் குறைபாடு இருப்பவர்களுக்கு இரு கால்களின் நீளங்களும் சமமாக இருக்காது.
விபத்தில் கால்களில் உண்டான தீவிர எலும்பு முறிவுகள், குணமாகாத எலும்புமுறிவுகள், எலும்புகளில் உண்டாகும் கட்டிகள் போன்றவற்றால் இக்குறைபாடு ஏற்படும்.
இதில் ஒன்று தான் நித்திலாவின் குறைபாட்டுக்குக் காரணம். இக்குறைபாடு உள்ளவர்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகளைத் தான் அவள் எப்போதும் அணிவது வழக்கம்.
மற்றவர்களின் பரிதாபப்பார்வையில் குன்றிப்போனவளைத் தோளோடு அணைத்து தனது அறைக்கு அழைத்துச் சென்றார் சாவித்திரி.
“ரியா காபி ப்ளீஸ்”
அடுத்த சில நிமிடங்களில் சூடான காபி அவள் முன்னே வைக்கப்பட்டது.
கபேயில் தயாரிக்கப்படும் காபி வகையறாவாக இல்லாமல் தென்னிந்திய ஃபில்டர் காபி அது!
“குடி… உனக்கு ரொம்ப பிடிக்குமே”
கண்கள் பனிக்க சாவித்திரியை நோக்கினாள் நித்திலா. பனித்த கண்களில் கண்ணீரோடு நன்றியுணர்ச்சியும் கலந்திருந்தது.
காபியை எடுத்து ஒரு மிடறு அருந்தினாள்.
டிகாசன் கசப்பின் ஆக்கிரமிப்பினூடே துளியாய் தித்தித்த சர்க்கரை நாவின் சுவை மொட்டுகளை மட்டுமன்றி உடலின் உற்சாக நரம்புகளையும் தீண்டியிருக்க வேண்டும்.
நித்திலாவின் கண்ணீர் நின்று புன்னகை பூத்தது அவளது வதனத்தில்.
“ஃபீலிங் பெட்டர்?”
ஆதுரமாய் கேட்ட சாவித்திரியைத் தோளோடு அணைத்தவள் “தேங்க்யூ சோ மச் ஆன்ட்டி… நான் தடுமாறுறப்ப நீங்களும் விக்கியும் தான் எனக்குத் துணையா இருக்கிங்க… இதுக்குலாம் நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல” என்றாள் நன்றி ததும்ப.
“அச்சோ! இதே டயலாக்கை நான் பேசியிருந்தா நீ இந்நேரம் என்னை பூமர் ஆன்ட்டினு சொல்லிருப்பல்ல?”
சாவித்திரி போலியாய் முறைக்க நித்திலா சிரித்தபடி தனது பாரிஸ்டா பணியைத் தொடரச் சென்றாள்.
கபேயின் சமையலறைக்குள் புகுந்தவள் பச்சை வண்ணத்தில் வுட்பெக்கர் கபே என அச்சிடப்பட்ட ஏப்ரனை அணிந்துகொண்டாள்.
ஆர்டர் எடுத்து வந்த அர்னவ் “செண்டர் டேபிள்ல ஒருத்தர் அமெரிக்கேனோவும், ரெண்டு காப்புசீனோவும் ஆர்டர் பண்ணிருக்கார் நித்தி” என்க
“ஃபைவ் மினிட்ஸ்” என்று ஐந்து விரல்களை நீட்டி மடக்கியபடி காபி கொட்டைகளை எடுத்து அவற்றை அரைப்பதற்கான கிரைண்டரில் போட்டாள்.
காபிக்கொட்டைகள் தூளாகி கீழிருந்த திறப்பு வழியாக வரவும் ‘போர்டாஃபில்டர்’ எனப்படும் எவர்சில்வர் வடிகட்டியில் நிரப்பிக்கொண்டாள்.
பின்னர் அந்த காபித்தூளை போர்டாஃபில்டருக்குள் டேம்பர் என்ற அச்சினால் அழுத்திவிட்டு காபி மெஷினில் மாட்டினாள்.

மெஷினின் கீழே காபி கோப்பையை வைத்தவள் போர்டாஃபில்டரின் துளைகளிலிருந்து கரும்பழுப்பு வண்ண காபித்திரவம் சொட்டு சொட்டாக கோப்பைக்குள் வடிவதை பார்த்து ரசித்தபடி அதில் கொஞ்சம் காபியை பெரிய கண்ணாடி கோப்பையிலிருந்த வெந்நீருடன் கலந்து அமெரிக்கேனோவாக மாற்றினாள்.
மீதமிருந்த காபி திரவத்தை இன்னுமிரண்டு கோப்பைகளில் ஊற்றியவள் பிட்சர் எனப்படும் சற்று பெரிய கொள்கலனில் பாலை எடுத்து மில்க் ஃப்ராதரில் சூடாக்கியபடி கலக்கினாள்.
அதில் பாலானது கெட்டியாகி நுரை ததும்பி க்ரீம் பதத்திற்கு மாறியதும் காபி கோப்பைகளில் பிட்சரிலிருந்த பாலை மெதுவாகச் சரித்து அரைவட்ட வடிவில் ஊற்றி இறுதியில் பூ வடிவத்தைக் கொண்டு வந்தாள்.
இன்னொரு கோப்பையிலும் அவ்வாறு செய்துவிட்டு நிமிர்ந்தவள் அங்கே அர்னவ் இல்லையென்றதும் மூன்று கோப்பைகளையும் ட்ரேயில் அடுக்கி தானே எடுத்துச் சென்றாள்.
கபேயின் நடுவே இருந்த மரத்தூணின் அருகே போடப்பட்டிருந்த மேஜையில் இரு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் மொபைலை பார்த்தவண்ணம் குனிந்து அமர்ந்திருக்க அவர்களிடம் வந்து ட்ரேயை நீட்டினாள்.
“யுவர் அமெரிக்கேனோ அண்ட் காப்புசீனோஸ்”
இனிமையாகப் பேசியவளிடமிருந்து நிமிர்ந்தவன் கோப்பையை எடுக்க மறந்து “நித்திலா” என்றான். அவன் கிருஷ்ணராஜசாகரே தான்.

அவனருகே அமர்ந்திருந்த நர்மதா திடுக்கிட்டு தலையுயர்த்தி அவளைப் பார்த்து அதிர்ந்தார். கோவிலில் பார்த்த போது வந்த வேதனையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அடுத்த வேதனையா என அவரது மனம் கூவியது.
அவனைப் பார்த்த நித்திலாவின் கண்களில் அதிர்ச்சி! ஆச்சரியம்! விரக்தி!
உணர்வுகளின் கலவையாய் நின்றவளிடம் புன்னகையை வீசியவன் “ஹவ் ஆர் யூ நித்திலா? இட்ஸ் அ ஸ்வீட் சர்ப்ரைஸ்” என இயல்பாக குசலம் விசாரித்தான்.
நித்திலா தன்னைச் சமாளித்துக்கொண்டவள் வேகமாக உணர்ச்சிகளைத் துடைத்தெறிந்துவிட்டு புன்சிரிப்போடு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“ஃபைன்… எங்க கபேக்கு நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்”
அதுவும் கிருஷ்ணராஜசாகருக்குச் சற்றும் சளைக்காத இயல்பான குரலில்!
இப்ராஹிமும் நர்மதாவும் தான் ‘ஙே’ என விழித்தனர்.
“உன் ஹெல்த் கண்டிசன் எப்பிடி இருக்கு?”
“மச் பெட்டர்”
“உன்னை மறுபடியும் பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல… நீ ஃபுல்லா ரெகவர் ஆகிட்டியா?”
கிருஷ்ணராஜசாகரின் கண்கள் அவளை தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்தது.
அப்போதிருந்ததை விட கொஞ்சம் பூசினாற்போல மாறியிருந்தாள்.
மெல்லிய பழுப்புவண்ணத்தில் கூந்தலின் நிறம் மாறியிருந்தது. ஹேர்கலராக இருக்கலாம். கருநிறவானவில் போன்ற புருவங்களின் மத்தியில் சிறிய கருப்பு பொட்டு, காஜல் அலங்காரத்தில் ஜொலிக்கும் கருவிழிகள், பீச் வண்ண உதட்டுச்சாயத்தை குடியமர்த்தியிருந்த சதைப்பற்றான உதடுகள், ஆப்பிளை நினைவுறுத்தும் கன்னங்கள் என கொஞ்சம் கூட அவள் மாறவில்லை.
உடனே அவனது கண்கள் நித்திலாவின் கால்களைக் கவனித்தது. அவளுக்கென வாங்கிய பிரத்தியேக செருப்பை அணிந்திருந்தாள்.
நித்திலாவின் கண்கள் அவனது ஸ்கேன் செய்த பார்வையால் இடுங்கியது.
“என்னாச்சு சாகர்?”
அவளது சாகர் என்ற அழைப்பில் ஒரு கணம் கிருஷ்ணராஜசாகரின் விழிகளில் பளிச்சென மின்னல் வந்து போனதை நர்மதாவைத் தவிர வேறு யாரும் காணவில்லை.
சட்டென சுதாகரித்தவன் “ஜஸ்ட் உன்னைப் பாத்தேன்… பாக்குறதுக்கு ஏதாச்சும் டாக்ஸ் கட்டணுமா என்ன?” என தலைசரித்து வினவ நித்திலா உதடு பிரியாமல் புன்னகைத்தபடி இல்லையென தலையசைத்தாள்.
“ஹேவ் அ க்ரேட் டே”
வாழ்த்திவிட்டு மீண்டும் சமையலறைக்குள் செல்லப் போனவள் “நித்தீஈஈஈஈ…” என்ற சத்தத்தோடு ஓடி வந்து அணைத்த சிறுவனின் ஸ்பரிசத்தில் சிலையாய் சமைந்து நின்றாள்.
அச்சிறுவனை அங்கிருந்த அனைவரும் பார்த்தார்கள். கிருஷ்ணராஜசாகரும் தான்.
மூன்று அல்லது நான்கு வயதிருக்கலாம். துறுதுறுவென தூக்கிக் கொஞ்ச தூண்டும் தோற்றம் அவனுடையது. நித்திலாவின் முழங்கால்களைக் கட்டியணைத்தவன் கைகளை விரித்து தன்னைத் தூக்கும்படி கூற நித்திலாவும் அவனைத் தூக்கிக்கொண்டாள்.

அவனது குண்டு கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டவள் “அம்ருக்கு என்ன வேணும்?” என கொஞ்சியபடி வேகமாக சமையலறைக்குள் போய்விட்டாள்.
நர்மதா அச்சிறுவனின் முகத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி ஏதேதோ சிந்திக்க கிருஷ்ணராஜசாகரோ காப்புசீனோவை அருந்த ஆரம்பித்தான்.
“குடிங்கம்மா”
அமெரிக்கேனோ இருந்த கோப்பையை அன்னையின் பக்கம் நகர்த்தியவன் அவரது கண்களில் தெரிந்த குழப்பத்தைக் கவனிக்கவில்லை.
மூவரும் எளிமையாக காலையுணவை முடித்துக்கொள்ள அர்னவ் பில் மற்றும் கார்ட் ஸ்வைப்பிங் மெஷினோடு வந்தான்.
பணத்தைச் செலுத்திவிட்டு மூவரும் எழுந்து வெளியே செல்லும் போது விக்ரமோடு அந்தச் சிறுவன் பேசிக்கொண்டு வருவதை நர்மதா கவனித்தார்.
கபேயின் தரிப்பிடத்தை நோக்கி சென்றனர் மூவரும்.
“எனக்கு கேரம் விளையாட சொல்லிக் குடுங்க டாடி”
விக்ரமிடம் கூறிக்கொண்டு வந்தான் அச்சிறுவன்.
“போன வாரம் செஸ் சொல்லிக் குடுக்க சொன்ன அம்ரு… இந்த வாரம் கேரமா?”
விக்ரம் அங்கலாய்த்தபடி கார்க்கதவை திறக்கப் போனான்.
நர்மதா மனம் பொறுக்காமல் அவனிடம் “உங்க பையனா தம்பி?” என்று கேட்க
“ஆமாம்மா” என்றான் விக்ரம்.
அவர் அச்சிறுவனிடம் குனிந்து “குட்டிக்கண்ணா உன் பேர் அம்ருவா?” என்று கேட்க அவரருகே நின்று கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரோ மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
“அம்ரு என்னோட ஷார்ட் நேம்… என் ஃபுல் நேம் அம்ரித் சாகர்”
சொல்லிவிட்டு விக்ரம் கார்க்கதவைத் திறக்கவும் ஓடினான் அவன்.
அம்ரித் சாகர் என்ற பெயரில் தாய் மகன் இருவரும் அதிர கிருஷ்ணராஜசாகரின் கரத்திலிருந்து நழுவி தரையை முத்தமிட்டது அவனது மொபைல்.
அப்போது “அம்ரு உன்னோட சிப்பர் பாட்டிலை வச்சிட்டுப் போறடா” என்றபடி ஓடி வந்த நித்திலா நர்மதாவும் கிருஷ்ணராஜசாகரும் இன்னும் கிளம்பாமல் நிற்பதை அமைதியின்மையோடு பார்த்தவாறு விக்ரமின் காரை நெருங்கினாள்.
நர்மதாவின் மனம் என்னென்னவோ கணக்கு போட்டது.
அச்சிறுவனையும் மைந்தனையும் மாறி மாறி பார்த்தார்.
கிருஷ்ணராஜசாகரோ நித்திலாவை மட்டும் கூர்ந்து பார்த்தான்.
“தேங்க்ஸ் நித்திம்மா” என்றபடி அவளிடமிருந்து சிப்பர் பாட்டிலை வாங்கிக்கொண்ட அச்சிறுவன் அவளைத் தனது உயரத்துக்குக் குனிய சொன்னான்.
அவளும் குனிய கன்னத்தில் முத்தமிட்டவன் “லவ் யூ” என்று சொல்லிவிட்டு விக்ரமின் காரில் ஓடிச் சென்று ஏறி டாட்டா காட்ட அவனது கார் கிளம்பியது.
நித்திலா ஏதோ உறுத்த திரும்பியவள் நர்மதாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருப்பதை பார்த்தாள்.
அவரது மைந்தனோ வழக்கமான அழுத்தமான பார்வையை வீசிக்கொண்டிருந்தான்.
அவளை நெருங்கியவன் “உன் பையன் பேர் அம்ரித் சாகர்… ம்ம்… நல்ல நேம் செலக்ட் பண்ணிருக்க நித்திலா… ஆனா அவன் அப்பானு கூப்பிடுற ஆள் தான் தப்பு” என்று சொல்ல நித்திலாவின் கண்களில் அச்சம் கவிழ்ந்தது.

“லைப் இஸ் த பண்டில் ஆப் மிராக்கிள்ஸ் அண்ட் சர்ப்ரைசஸ்… எனக்கு இன்னைக்கு கிடைச்சது ஷாக்கா சர்ப்ரைஸானு யோசிச்சிட்டு அப்புறமா உன்னை மீட் பண்ண வர்றேன்… பை”
கிருஷ்ணராஜசாகரின் இலகுத்தன்மை மாறிய குரலில் நித்திலாவின் மனதில் மெதுவாய் கிலி பரவியது.
அதை கண்டுக்கொள்ளாதவனாக “வாங்கம்மா” என தனது அன்னையை அழைத்துக்கொண்டு இப்ராஹிம் கிளப்பிய காரில் ஏறினான். கார் அவளை வட்டமிட்டு விட்டு அங்கிருந்து மலைச்சரிவு பாதையில் செல்ல மனதில் குழப்பம் மண்ட நின்றாள் நித்திலா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

