சாகர் நிவாஸ், சென்னை…
.கிருஷ்ணராஜசாகரின் அறையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தான் அம்ரித். அதோடு பத்து முறைகளுக்கு மேல் நித்திலாவின் எண்ணுக்கு அழைத்துவிட்டான். முழு ரிங் போய் அழைப்பு ஏற்கப்படவில்லை.
தினமும் நித்திலாவிடம் வீடியோ கால் பேசி இங்கே நடப்பதை ஒப்பிக்கவில்லை என்றால் அம்ரித்துக்குத் தூக்கமே வராது. அப்படி இருக்கையில் இரு தினங்களாக அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும் சோர்ந்து போய்விட்டான்.
கிருஷ்ணராஜசாகர் விக்ரமிடம் விசாரித்ததற்கு நித்திலாவிற்கு அறுவைசிகிச்சை நடப்பதாக பதில் வந்தது. பின்னர் அவளுக்கு அனஸ்தீசியா மயக்கம் தெளியவில்லை என்ற செய்தி கிடைத்தது.
அதற்கு மேல் கிருஷ்ணராஜசாகரும் விசாரிக்கவில்லை. சிகிச்சை முடிந்து நினைவு திரும்பியதும் அவளே பேசுவாள் என நித்திலாவைப் பற்றி மறந்தே போனான்.
ஆனால் அம்ரித் அடிக்கடி நித்திலாவைப் பற்றி தொணதொணப்பான். நர்மதா அவனது கேள்விக்கணைகளைச் சமாளிப்பார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அன்று அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரை அம்ரித்தின் சோகமுகம் யோசனைக்குள்ளாக்கியது.
“அம்ரு குட்டிக்கு என்னாச்சு?” என மகனிடம் ஆதரவாக விசாரித்தான்.
“நித்திம்மா என் கிட்ட பேசல டாடி… நான் ஃபோர் தைம்ஸ் கால் பண்ணிட்டேன்” என்றான் அவன்.
“அம்ரு குட்டி கிட்ட நித்திம்மா எப்பிடி பேசாம இருப்பா? குடு நான் கால் பண்ணி பாக்குறேன்” என்றவன் அம்ரித்தின் டேபில் இருந்து நித்திலாவின் எண்ணுக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்க ஆளில்லை. முழு ரிங்கும் போய் கட்டானது. கிருஷ்ணராஜசாகரும் முயன்று பார்த்துவிட்டு அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் இனி அழைக்கும் முயற்சியைக் கைவிட்டான்.
அம்ரித்தின் சோர்ந்த முகத்தை மாற்றவல்லவர் தனது அன்னை மட்டுமே என்பதை அறிந்தவனாக நர்மதாவிடம் அவனை ஒப்படைத்தான்.
“இன்னைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குமா… அம்ருவ பாத்துக்கங்க… அவன் உங்க பொறுப்பு” என்றவன் ஏதோ யோசித்தவனாக “நித்திலா கிட்ட இருந்து கால் வந்துச்சுனா இனிமே அம்ரு கால் பண்ணுனா உடனே அட்டெண்ட் பண்ண சொல்லுங்க… என் பிள்ளை அவளால கஷ்டப்படுறப்ப எனக்கு இரிட்டேட் ஆகுது” என்று ஜம்பமாக உரைக்க நர்மதாவுக்கு எரிச்சல்.
“ஏன்டா அவ என்ன டூரா போயிருக்கா? சர்ஜரி முடிஞ்சு மயக்கம் தெளிஞ்சுதோ இல்லையோ? நீ அதை விசாரிச்சியா?”
“இல்ல… அவளைப் பத்தி நான் ஏன் விசாரிக்கணும்?”
கிருஷ்ணராஜசாகரின் அலட்சியத்தைப் பார்க்கையில் நர்மதாவின் எரிச்சல் கோபமாக மாறியது.
“அவ மேல அக்கறையில்ல, அப்ப அவளுக்கு ஆர்டர் போடவும் உனக்கு உரிமையில்ல கிரிஷ்… அவ உடம்பு சரியானதும் பேசுவா”
“நர்மும்மா”
“போதும்டா… இந்த வயசுலயும் நர்மும்மா நர்மும்மானு கொஞ்சுறதுக்கு உன் அம்மா உன் கூடவே இருக்கணும்… ஆனா உன் மகன் மட்டும் அவன் அம்மாவ விட்டுத் தூரமா இருக்கணும்… ஒரு வீடியோ காலுக்காக அழுது கரையணும்… நல்ல தகப்பன்டா நீ”
அவரது கோபத்தில் கிருஷ்ணராஜசாகர் திகைத்தான். எனது அன்னையை என்ன மந்திரம் போட்டு மயக்கியிருப்பாள்? அவளா நானா என்று வரும் போதெல்லாம் அவர் பெரும்பாலும் நித்திலா பக்கமே நிற்கிறாரே!
“நான் நல்ல தகப்பன் இல்லனு வச்சுக்கோங்க… உங்க சோ கால்ட் மருமகள் நல்ல அம்மா தானே… பெத்த பிள்ளை கால் பண்ணியும் எடுக்க முடியாத அளவுக்கு அவளுக்கு அப்பிடி என்ன முக்கியமான வேலை?”
நர்மதா எதுவும் பேசாமல் அவனை தலையிலிருந்து கால் வரை பார்த்தார்.
“ஏன் இப்பிடி பாக்குறிங்க?”
“என்னை விட ரொம்ப உயரமா வளந்துட்ட… இல்லனா நீ பேசுற பேச்சுக்கு உன் கன்னத்துல பளார்னு ரெண்டு அறை வச்சிருக்கலாமேனு யோசிச்சேன்”
கிருஷ்ணராஜசாகர் மறுமொழி பகரும் முன்னர் கையுயர்த்தினார்.
“போதும்பா… உன்னை எவ்ளோ குணவானா வளத்திருக்கேன்னு ஆல்ரெடி பூரிச்சு போய் நிக்குறேன்… இதுக்கு மேல எதையும் சொல்லி மனங்குளிர வச்சிடாத”
வெளிப்படையாக கடிந்துகொள்ளாமல் வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்திவிட்டுப் போன அன்னையை என்ன சொல்வதென புரியாமல் அலுலவகத்திற்குக் கிளம்பினான் கிருஷ்ணராஜசாகர்.
முன்பு போலில்லாமல் மனம் இறுக்கம் தளர்ந்து இலகுவாய் இருந்தது. அம்ரித்தோடு செலவளித்த நாட்கள் அவனுக்கு வாழ்க்கையின் இன்னொரு அழகான பரிணாமத்தைக் காட்டியிருந்தது.
எதிலும் கச்சிதத்தை எதிர்பார்ப்பவன் தனது அறையிலிருக்கும் பொருட்களை அம்ரித் கலைப்பதை ரசிக்க ஆரம்பித்திருக்கிறான்.
எனது ஒவ்வொரு நொடியும் டாலர் மதிப்பு கொண்டது என இறுமாப்புடன் திரிபவன் இப்போதெல்லாம் தோட்டத்து குளத்து சுவரருகே அம்ரித்தோடு அமர்ந்து அவனும் அன்னையும் வைத்திருக்கும் தாமரை கிழங்கு முளை விட்டு வருவதை ரசிக்கிறான்.
தேவையில்லாமல் யாரிடமும் பேசாதவன் அம்ரித்திற்கு ‘பெட் டைம் ஸ்டோரிஸ்’ சொல்கிறான்.
குழந்தைகளிடம் எதுவோ மாயாஜாலம் இருக்கிறது. எப்பேர்ப்பட்ட பிடிவாதக்காரர்களையும் சரணடைய வைத்துவிடும் மந்திரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
சிந்தனையினூடே ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் ராந்த்வா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் வந்துவிட கார் தரிப்பிடத்தில் நின்றது.
இறங்கியவன் மேல்தளத்தில் இருக்கும் அவனது அலுவலக அறையை அடைந்த போது அவனுக்காக காத்திருந்தான் இப்ராஹிம்.
“குட்மானிங் சார்”
“குட்மானிங் இப்ராஹிம்… சந்தீப் பத்தி எதுவும் நியூஸ் கிடைச்சுதா?”
“சந்தீப் சார் பத்தி எந்த விவரமும் கிடைக்கல… பட் நேத்து நைட் எனக்கு நயனி மேம் கால் பண்ணிருந்தாங்க”
ஸ்ரீநயனி ஏன் இப்ராஹிமிற்கு அழைத்தாள்?
புருவத்தை உயர்த்தி அவன் பார்க்கவும் இப்ராஹிமே ஸ்ரீநயனி அழைத்ததற்கான காரணத்தைக் கூறிவிட்டான்.
“நித்திலா மேம் பத்தி விசாரிச்சாங்க சார்”
“என்ன விசாரிச்சா?”
“அவங்க எங்க இருக்காங்க? எப்பிடி இருக்காங்க? சர்ஜரி நல்லபடியா முடிஞ்சுதா? இதெல்லாம் கேட்டாங்க”
“வேற எதுவும் நயனி கேக்கலையா?”
கிருஷ்ணராஜசாகர் சந்தேகமாகக் கேட்டான். அவனது தங்கை கொஞ்சம் நியாயவாதி. கட்டாயம் தனது செய்கைகள் அவளுக்குப் பிடித்திருக்காது. சும்மாவே நித்திலா என்றால் அவளுக்கு உயிர். இப்போது அவள் மீது புதிதாக பிறந்த பரிதாபம் வேறு இருக்கிறதே! எனவே கிருஷ்ணராஜசாகரால் ஸ்ரீநயனி வெறுமெனே நித்திலாவின் சேமநலனை விசாரிக்கத் தான் அழைத்தாள் என இப்ராஹிம் சொன்னதை நம்ப முடியவில்லை.
ஆனால் இப்ராஹிமோ சாதித்தான். அதற்கு மேலும் வற்புறுத்தாமல் இத்தனை நாட்கள் குவிந்து கிடந்த அலுவல்களில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
அதே நேரம் ஸ்ரீநயனி விக்ரமின் எண்ணுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள் அவளது சான் ஃப்ரான்சிஷ்கோ அலுவலகத்திலிருந்து.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

