தினசரி கொஞ்ச நேரம் புத்தகம் படிக்க ஒதுக்கிடுவேன். அந்த நேரம் எனக்கு மட்டுமே ஆனது. அந்தச் சத்தம் இல்லாத உலகத்துல, நான் மட்டும்தான் இருப்பேன். அது ஒருவிதமான தியானம் மாதிரி. மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.புத்தகங்கள் நமக்குக் கத்துக்கொடுக்குற விஷயங்கள் ஏராளம். புது உலகங்களை அறிமுகப்படுத்துது, புது யோசனைகளைக் கொடுக்குது, வேற வேற கலாச்சாரங்களைப் பத்தி தெரிஞ்சுக்க உதவுது. ஒரு புத்தகத்தை முடிக்கும்போது, நம்மளோட அறிவு இன்னும் கொஞ்சம் பெருசா ஆன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்.இப்போ இந்த மழையும், காபியும், இந்தப் புத்தகமும்… சும்மா வேற லெவல்! இன்னைக்கு நாள் அவ்வளவுதான். இந்தப் புத்தகத்தோட மீதிப் பக்கங்களை வாசிச்சு முடிச்சிட்டுதான் தூங்கணும். படிக்கிறதை விட ஒரு சந்தோஷம் இந்த உலகத்துல இல்லன்னுதான் சொல்லுவேன்.
-விழியின் மொழி
மலர்விழி அமைதியாய் வரவும் “உங்கப்பாக்கு என்ன வேலை இங்க?” என விசாரித்தான் மகிழ்மாறன்.
“இங்க ஒரு மளிகை கடைல வேலை பாக்காங்க”
மகிழ்மாறன் புருவம் சுருக்கினான். மாணிக்கவேலு தனது தோட்டத்தில் ஒன்றை தம்பியிடம் கொடுத்து மேற்பார்வையிடச் சொன்னதாகவும், அதில் வரும் இலாபத்தில் அவரது குடும்பம் ஓடுவதாகவும் அவனிடம் கூறியிருந்தார்.
இவள் என்ன மளிகை கடையில் வேலை என்கிறாள்?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அப்ப தோட்டத்தை மேற்பார்வையிடுற வேலை என்னாச்சு?”
“அப்பா அந்த வேலைய வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எவ்ளோ நாள் தான் பெரியப்பா குடும்பத்துக்கிட்ட கூலிக்கு வேலை செய்யுறது?”
“கூலிக்கு வேலையா?”
மகிழ்மாறனுக்கு ஒவ்வொரு செய்தியும் திகைப்பைக் கொடுத்தன. எத்தனை பொய்கள்? இப்படிப்பட்ட மனிதரிடம் சம்பந்தம் வைத்திருக்கிறார்களே தனது பெற்றோர்!
அவன் திகைத்தபோதே சிகாமணி வேலை பார்க்கும் கடையும் வந்துவிட்டது. மலர்விழி இறங்க கதவைத் திறந்துவிட்டான் அவன்.
“தேங்க்யூ சார்” அவள் விடைபெறும்போதே மகள் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்துவிட்டச் சிகாமணி ஓடோடி வந்தார்.
“என்னல காருல வந்திருக்க?” எனக் கேட்டவர் காரின் கண்ணாடி வழியே மகிழ்மாறனின் முகம் தெரியவும்
“தம்பி நீங்களா? வாங்க! நல்லா இருக்கிங்களா?” எனக் குசலம் விசாரித்தார்.
“நல்லா இருக்கேன்” என்றவன் மேற்கொண்டு பேசுவதற்குள் “எங்க காலேஜ் கரெஸ்பாண்டெண்ட்பா.” என்று சொல்ல
“அண்ணனோட சின்ன மருமவனாதான் இந்தத் தம்பி எனக்கு அறிமுகம் மலர். வாங்க தம்பி! டீ சாப்பிட்டுட்டுப் போகலாம” என வெள்ளந்தியாக அழைத்தார் சிகாமணி.
மலர்விழிக்கோ தர்மசங்கடமானது. மகிழ்மாறனின் குணம் எப்படியென அவளுக்குத் தெரியாதல்லவா!
“அவங்களுக்கு நிறைய வேலை இருக்கும். வாங்கப்பா நம்ம போகலாம்” என்று தந்தையின் கையைப் பிடித்து இழுத்தாள்.

மகிழ்மாறன் காரின் கண்ணாடி அருகே குனிந்து தனது ரிம்லெஸ் க்ளாசை சரி செய்தபடியே “உனக்கு நான் உங்கப்பா கூட பேசுறதுல விருப்பமில்ல போலயே?” என்று கேட்க அவளால் திருதிருவென விழிக்க மட்டுமே முடிந்தது.
“அது சின்னப்புள்ளை! கூறில்லாம பேசும். நீங்க வாங்க தம்பி” என்று சிகாமணி அழைக்கவும் காரைப் போக்குவரத்துக்கு, மக்கள் நடப்பதற்கு தொந்தரவு இல்லாமல் நிறுத்திவிட்டு இறங்கி அவரது கடையை நோக்கி வந்தான் மகிழ்மாறன்.
அதற்குள் “ஏன்பா கூப்பிடுறிங்க? அவங்கல்லாம் பணக்காரங்க. நம்ம விலகி நிக்குறதுதான் மரியாதை” என்று தந்தையின் காதைக் கடித்தாள் மலர்விழி.
அதற்குள் நெருங்கி வந்துவிட்ட மகிழ்மாறன் என்னவென சிகாமணியிடம் விசாரிக்க அவள் சொன்னதை அப்படியே கூறிவிட்டார்.
மகிழ்மாறனின் விழிகளில் யாரோ ஸ்கேன் மெஷினை ஓடவிட்டது போல அடுத்தச் சில நொடிகளுக்கு மலர்விழி உணர்ந்தாள்.
“நீங்களே சொன்னிங்களே, சின்னப்பிள்ளைக்குக் கூறில்லனு. அது சரிதான். வாங்க போகலாம்” என்று சிகாமணியோடு அவன் செல்ல மலர்விழியோ தனக்கு அறிவில்லை என்று சொல்லிவிட்டுச் செல்பவனை ஒன்றும் செய்யவியலாதவளாக நின்றாள்.
கடைக்குப் போன சிகாமணி சத்தமாக “ஏல மலரு! எனக்கும் தம்பிக்கும் டீ வாங்கிட்டு வா” என்று சொல்ல வேறு வழியின்றி அருகிலிருந்த டீக்கடையில் இருவரும் தேநீரை வாங்கிக்கொண்டு கடைக்கு வந்தாள்.
வந்தவளின் பார்வையில் தந்தையோடு புன்னகை முகமாகப் பேசும் மகிழ்மாறன் விழுந்தான்.

‘இதோடு இரண்டாவது முறை’ அவன் சிரித்து அவள் பார்த்த தருணங்களை எண்ணிக்கை வைத்துக்கொண்டவள் பவ்வியமாகத் தந்தைக்கும் அவனுக்கும் தேநீரைக் கொடுத்தாள்.
“என்னல வெறும் டீ மட்டுமா வாங்கிட்டு வருவ?” என அவர் கேட்க
“நான் வர்றப்பவே சமோசா வாங்குனேன்பா. அதுல்லாம் கீழ கொட்டிருச்சு” என்றாள் மலர்விழி.
அடுத்த நொடி மகிழ்மாறன் ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான்.
“என்ன… எதுக்கு?” அவள் திணற
“போய் சமோசா வாங்கிக்க” என அழுத்தமாகக் கட்டளையிட்டான்.
என்னவோ அவளை அங்கிருந்து துரத்தியே ஆகவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது போல பேசுகிறானே!
“வாங்கிக்க” இரண்டாம் முறை குரல் அதட்டலுக்குத் தாவியதும் ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி செய்தாள் மலர்விழி.
“என்னைத்தான் ஈசியா ஏசுறாங்க” என பொருமிக்கொண்டு டீக்கடைக்குப் போனவள் ஆளுக்கொரு சமோசாவை வாங்கிக்கொண்டு திரும்பியபோது மகிழ்மாறனின் முகம் யோசனைக்குத் தாவியிருந்தது.
தேநீர் தம்ளரை அவளிடம் கொடுத்தவன் சமோசாவை அவள் நீட்டவும் “நீயே சாப்பிட்டுக்க. மாமாவுக்குக் குடு” என்று சொல்ல அவன் சொன்னதைச் செய்தாள் மலர்விழி.

“போய்ட்டு வர்றேன் மாமா. கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றவன் “உங்க பொண்ணு கல்யாணத்துக்கு எந்த அவசரமும் இல்லனு உங்கண்ணன் கிட்ட சொல்லிடுங்க. அவளுக்கு லைப்ரரி சயின்ஸ் படிக்கணும்னு ஆசை. படிக்கட்டும். வேலைக்குப் போய் உங்க குடும்பம் ஒரு நிலைக்கு வந்ததும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்ல
“சரிங்க தம்பி. எல்லாம் என் புள்ளை இஷ்டம்தான். நான் கட்டாயப்படுத்தமாட்டேன்” என்று கரம் கூப்பி விடை கொடுத்தார் சிகாமணி.
அவன் காரிலேறி கார் அங்கிருந்து சென்றதும் “ரொம்ப நல்ல தம்பி. பணக்காரங்கனாலும் எவ்ளோ சகஜமா பழகுறாரு” என்று சொல்ல
“ம்ம்! கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்றாள் மலர்விழி.
சிகாமணி சத்தமாக நகைத்தவர் “எப்பிடி? உங்கப்பனைப் போலயா? ஒரு ஆம்பளை சிரிச்ச முகமா இருந்தா நம்மூருல அவனை ஏமாளினு நினைச்சிக்கிடுவானுங்கல. தம்பி எத்தனை காலேஜூ, ஸ்கூலை கவனிக்கணும்! இப்பிடி கறாரா இருந்தாதான் தொழில்ல பொழைக்க முடியும்” என்றார்.
அதுவும் சரிதான் என்று எண்ணியவள் தன் கையைப் பார்க்க, அதில் சமோசமா வாங்கியது போக மிச்சமிருக்கும் நோட்டும் சில்லறையும் அவளைப் பார்த்துச் சிரித்தன.
அடுத்த முறை பார்க்கும்போது இந்த மிச்ச பணத்தை அவனிடம் கொடுத்துவிடவேண்டுமெனத் தீர்மானித்தாள் மலர்விழி.
அதே நேரம் காரில் போய்க்கொண்டிருந்த மகிழ்மாறனோ சிகாமணி சொன்ன செய்திகள் அனைத்தையும் அசை போட்டுக்கொண்டிருந்தான்.
“எங்கய்யன் எல்லா சொத்தையும் சரிபாதியா பிரிச்சாரு தம்பி. அண்ணனுக்கு இருந்த புத்திசாலித்தனம் எனக்கு இல்ல. என் பங்கு சொத்து முழுக்க தொழில் ஆரம்பிக்க வாங்குன நிலத்துல பணமா கொட்டுனேன். அந்த நிலத்துல இருந்த வில்லங்கம் பத்தி தெரியாம செஞ்சுட்டேன். அப்புறம் நிலமும் போச்சு., சொத்தும் போச்சு. போதாக்குறைக்குக் ஐஸ் கம்பெனி வைக்க (கிராமங்களில் விற்பனைக்கு வரும் குச்சி ஐஸ் வகையறாக்களை உற்பத்தி செய்யும் கம்பெனி) நிறைய கடன் வாங்குனேன். அதை அண்ணன் தான் அடைச்சாவ. அவர் இல்லனா என் குடும்பமும் நானும் இந்நேரம் உசுரோட இருந்திருக்க மாட்டோம்”

“நான் தொழில் தொடங்க வாங்குன நிலத்தை அப்புறம் என் அண்ணன் வில்லங்கம் எல்லாம் சரி பாத்து வாங்குனாவ. இப்ப அவரு ரியல் எஸ்டேட்டுல கொடி கட்டி பறக்க காரணம் அந்த நிலம்தான்.”
“அண்ணன் கிட்ட காலம் முழுக்க வேலை செய்யணும்னு தான் ஆசை தம்பி. ஆனா மதினி சரியில்ல. பொம்பளை விசயத்துல தப்பான ஒருத்தனை என் மகளுக்கு மாப்பிள்ளையா பாத்தாவ. குழலிக்கு மனசு ஒப்பல. இந்தச் சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டா. அந்தப் பய காலேஜுக்குப் போற வழில என் மவ கிட்ட வம்பு பண்ணிட்டான். தம்பிக்கு அந்த விவகாரம் தெரியுமே! நானும் குழலியும் அண்ணன் கிட்ட பேசப் போனப்ப மதினி வார்த்தைய தப்பா விட்டுட்டாவ. என்னைய என் பொண்டாட்டிய பேசுனா நாங்க சகிச்சுக்கிடுவோம். என் புள்ளைய காலம் முழுக்க எங்க வீட்டுலயே கல்யாணம் காட்சி இல்லாம வச்சுப்போம்னு சொன்னாவ பாருங்க. அங்க நெஞ்சு வெடிக்காத குறை. எந்தத் தகப்பனால பொறுக்க முடியும்? அதான் இனிமே அவிய தோட்டத்துக்கு வேலைக்குப் போகவேண்டாம்னு முடிவெடுத்து இங்க வேலைக்கு வந்துட்டேன். என் அண்ணன் மவ பவிதரன் அவன் மட்டும் இல்லன்னா முரளிப்பய பிரச்சனை ஓய்ஞ்சிருக்காது. மனசு சொக்கத்தங்கம் அவனுக்கு”
மனதிலிருப்பதைக் கொட்டித் தீர்த்தவரை நினைத்தால் மகிழ்மாறனுக்குப் பரிதாபம் வந்தது. இன்னும் அண்ணன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். தவறெல்லாம் மதினி மீது என்று எண்ணுகிறார். அப்பாவி மனிதர்!
மகிழ்மாறனுக்கு மாணிக்கவேலுவின் குடும்பத்தின் மேலிருந்த மரியாதை இன்னுமே சரிந்து போனது என்னவோ உண்மை!
‘பவிதரன் ஒருவன் நல்லவனாக இருப்பான் போல! அண்ணனை மணக்கவிருப்பவள் இனிமையானவள் என அண்ணன் அடிக்கடி கூறுகிறான். பார்ப்போம்! இதிலும் மாற்றம் வரலாம்’
மனதில் உறுத்தலுடனே தமையனின் திருமணநாளை எதிர்நோக்கியிருந்தான் மகிழ்மாறன்.
உறவுக்காரர்களுக்குத் திருமண அழைப்பிதழ் வைப்பது, அவர்கள் தங்குவதற்கான வசதிகளைப் பார்ப்பது என நாட்கள் ராக்கெட் வேகத்தில் பறந்தன.
திருமணம் நடக்கப்போவது திருநெல்வேலியிலேயே பிரபலமான மண்டபம் ஒன்றில்! வரவேற்பு அவர்களுக்குச் சொந்தமான ஹோட்டலில்!
திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் ஈவென்ட் ப்ளானிங் நிறுவனத்தினர் கச்சிதமாக முடித்திருந்தார்கள்.
திருமணத்துக்குக் கட்டாயம் வருவதாக முதலமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமானப் பதிலும் கிடைத்துவிட்டது. எனவே காவல்துறை பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகப்படுத்தப்பட்டது.
திருமணத்து முந்தைய நாளே பெண்வீட்டார் மண்டபத்துக்கு வந்துவிட்டார்கள். திருமணத்துக்கு முந்தைய மாலையில் சொந்தக்காரர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் என்ற நிகழ்வு சிறியளவில் நடைபெறும்.
அதற்காக மதுமதியைப் பிரபலமான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தயார் செய்து கொண்டிருந்தார். அவளோ மொபைலும் கையுமாக இருந்தாள்.
“டி மது! அந்தப் போனை வையேன்” கடிந்துகொண்ட ஷண்மதியை முறைத்தாளேயொழிய மொபைலைக் கீழே வைக்கவில்லை மதுமதி.
அவள் பிடுங்கவும் “மொபைலைக் குடுக்கா” என்று மதுமதி கோபம் கொள்ள
“இப்ப அசைஞ்சிங்கனா என்னால ஹேர் டூ பண்ண முடியாது மேம்” என்றார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பெண்மணி.
வேறு வழியின்றி அவள் பிடித்து வைத்த பிள்ளையார் போல அமர்ந்தாள். ஆனால் கண்கள் எல்லாம் மொபைல் மீதே இருந்தது அவளுக்கு.
“ம்மா! எனக்குப் பாத்ரூம் வருது” என்று ஷண்மதியின் மகன் வரவும் அவள் மொபைலை மலர்விழியிடம் ஒப்படைத்தாள்.
“நான் வர்ற வரைக்கும் கையில வச்சுக்க”
மலர்விழி சரியெனத் தலையசைக்க மதுமதியோ “அது லேட்டஸ்ட் மாடல் ஐபோன். கவனமா வச்சுக்க. கால் எதுவும் வந்தா என் கிட்ட குடுக்கணும். நீயே அட்டெண்ட் பண்ணிடாத” என்று சிடுசிடுத்துவிட்டுக் கண்ணாடி பக்கம் திரும்பிக்கொண்டாள்.
மலர்விழி அவளை அசட்டை செய்தபடி தன்னருகே இருந்த ஈஸ்வரியின் காதில் கிசுகிசுத்தாள்.
“கரெஸ் வந்துட்டாரா ஈசு? அவரோட மிச்ச காசு என் கிட்ட இருக்கு” மண்டபத்துக்கு வந்ததிலிருந்து அவனைத்தான் தேடுகிறாள். கல்லூரியில் அவனைச் சந்தித்து பணத்தைக் கொடுக்கலாம் என்றால் நாளை மார்க்கெட்டில் கடைசியாக சிகாமணியோடு பேசியதற்கு பிறகு மகிழ்மாறன் என்.எஸ்.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பக்கமே செல்லவில்லை.
“அந்தக் காசை வச்சு அவர் என்ன இன்னொரு காலேஜா கட்டப்போறார்? சும்மா வச்சுக்க” – ஈஸ்வரி.
“அவர் காசு எனக்கெதுக்காம்? போயேன்”
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஷண்மதியும் மகனோடு வந்துவிட்டாள். தங்கையிடம் பேச விருப்பமில்லை அவளுக்கு. இவர்களருகே அமர்ந்துகொண்டு தோழியரின் உரையாடலில் கலந்துகொண்டாள்.

“மாறன் தம்பிய கரெஸ், சார்னு கூப்பிடாத மலர். நம்ம சொந்தக்காரங்க கேட்டா வேணும்னு இடக்குக்குக் கூப்பிடுறதா கதை கட்டுவாங்க. அவங்க வீட்டுச் சொந்தக்காரங்க கிண்டல் பண்ணுறதா நினைச்சுக்கப் போறாங்க. புவன் தம்பிய மாமானு கூப்பிடுறல்ல. அதே போல அவரையும் சின்ன மாமானு கூப்பிடு”
“சின்ன மாமாவா? கேக்கவே நல்லா இல்லக்கா” முகம் அஷ்டகோணலானது மலர்விழிக்கு.
“வேற என்னடி செய்ய? உன் ரவி மாமாவ நான் கல்யாணம் பண்ணிட்டுப் போனப்ப தூரத்து உறவுல ஒரு பிள்ளை என்னை ஆச்சினு கூப்பிட்டுச்சு. அவர் கல்யாணத்துக்கு முன்னாடியே தாத்தா ஆகிட்டார். இருபத்தஞ்சு வயதுல நான் ஆச்சியான கதைய விடவா இது நல்லா இல்ல? உறவுமுறை மாறக்கூடாது. அது பழையகாலத்து ஆளுங்களுக்குப் பிடிக்காது. சின்ன மாமானு சொல்லப் பிடிக்கலனா மாறன் மாமானு கூப்பிடு. இல்லனா மகிழ் மாமானு கூப்பிடு. கரெஸ், சார், மோர்னு கூப்பிடுறது நல்லாவேல்ல”
“நான் மாமானு கூப்பிட்டுக் கரெஸ் கோவப்பட்டுட்டார்னா என்ன செய்ய?”
மலர்விழி தயங்க ஈஸ்வரியும் அதை ஆமோதித்தாள்.
“யக்கா உனக்கு கரேஸ் பத்தி தெரியாது. அவரு ரொம்ப ஸ்ட்ரிக்ட். மலர் பயத்துல நியாயம் இருக்கு”
“அடப்போங்கடி! மாமாங்கிறது என்ன கெட்டவார்த்தையா? அதெல்லாம் அந்தத் தம்பி கோச்சுக்க மாட்டார். ஒழுங்கா முறை சொல்லிக் கூப்பிடு. இல்லனா எந்தக் கெழடு கட்டையும் கேட்டுட்டு அதுக்கு ஒரு பஞ்சாயத்தைக் கூட்டும். என் கல்யாணத்துல இந்த மாதிரியெல்லாம் நடந்துச்சு”
மலர்விழி தலையை ஆட்டிவைத்தாள்.
எதேச்சையாக மணமகள் அறையிலிருந்து மலர்விழி எட்டிப் பார்த்தபோது அந்தப் பக்கமாக மொபைலில் பேசியபடி மகிழ்மாறன் வருவதைக் காண நேர்ந்தது.
உடனே உற்சாகமானவள் “கரெஸ் வந்துட்டார். நான் பைசாவ குடுத்துட்டு வந்துடுறேன்” என்க ஷண்மதி முறைத்தாள் அவளை.
“சரி சரி! மாமா வந்துட்டார். நான் போய் காசைக் குடுத்துட்டு வர்றேன்” என்றவள் புடவை கொசுவத்தைச் சரி செய்துவிட்டு வெளியேறினாள்.
மாடி வராண்டாவில் நின்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான் மகிழ்மாறன். அவனிடம் சென்றவள் “கரெஸ் சார்” என்று சொல்ல வாயெடுக்கையிலேயே இரண்டு உறவுக்காரப்பெண்கள் அங்கே கடக்க, தானாகவே “மகிழ் மாமா” என்று அழைத்துவிட்டாள்.
அழைத்தவள் மகிழ்மாறன் மொபைல் பேசியபடி திரும்பியதும் கப்சிப்பாகிப் போனாள்.
“அப்புறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவன் மலர்விழியை ஆராய்ச்சிப்பார்வை பார்த்துவிட்டு “எதுக்காகக் கூப்பிட்ட?” என்று கேட்க
“அது… வந்து சார்… இந்தக் காசு” என்று திணற ஆரம்பித்தாள் மலர்விழி.
“மகிழ் மாமானு கூப்பிட்டது நீதானே?” என அவன் வினவியதும்
“அது… சாரி சார்… தெரியாம கூப்பிட்டுட்டேன். ஷண்மதி அக்கா தான் உறவுமுறைனு சொல்லி…”

“அவங்க சரியாதான் சொல்லிருக்காங்க. உனக்குத்தான் அது மண்டைல உறைக்கல. உங்கப்பா சொன்னது உண்மைதான்! சின்னப்புள்ளைல்ல! கூறு பத்தல”
அமர்த்தலாக அவன் சொன்ன விதம் தன்னைச் சீண்டுவது போல மலர்விழிக்குத் தோன்றியது. அடுத்த நொடியே இவன் எதற்கு என்னைச் சீண்டப்போகிறான் என்ற எண்ணமும் வந்தது.
அமைதியாய் அவள் நிற்கவும் “என்ன சொல்ல வந்தியோ அதைச் சொல்லு. மகிழ் மாமானு ஆரம்பிச்சியே அதுல இருந்தே சொல்லணும்” என அவன் ஆணையிட
“மகிழ் மாமா! அன்னைக்குச் சமோசா வாங்க காசு குடுத்திங்கல்ல, அதுல மிச்சம் உள்ள காசு. இந்தாங்க”
கடகடவென ஒப்பித்தவள் அவன் முன்னே நோட்டும் சில்லறையுமாக நீட்டினாள்.
“ஓஹ்! இதை இப்ப உன் கையில இருந்து நான் எடுக்கணுமா?” இம்முறை அவளைச் சீண்டும் நோக்கத்தோடுதான் அவன் கேட்டான்.
அதை அவன் மறைக்க நினைத்த இதழோரக் குறுஞ்சிரிப்பு காட்டிக் கொடுத்துவிட்டது.
“இல்ல!” என்று பதறியவளுக்கு அதைக் கவனிக்க எங்கே நேரமிருந்தது?
அவனது கரத்தைப் பற்றி உள்ளங்கையில் பாக்கி பணத்தை வைத்தவள் “நான் வர்றேன் சா… மகிழ் மாமா” என்று சொல்ல, சரியாக அந்நேரத்தில் அவளிடமிருந்த மதுமதியின் மொபைல் சிணுங்கியது.
படாரென மகிழ்மாறனின் கரத்தை விடுவித்தவள் மொபைலின் தொடுதிரையைப் பார்க்க, அதிலோ புதிய எண்ணாகக் காட்டியது.
“மது அக்காக்கு எதோ கால் வருது. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு மலர்விழி ஓடிவிட, மகிழ்மாறன் தன்னை மீறி அரும்பிய புன்னகையோடு மிச்சமிருந்த பணத்தோடு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அடுத்து மணமகன் – மணமகள் நிச்சயதார்த்தம் நடந்தேற இரு குடும்பத்தாரும், மண்டபம் கொள்ளாத அளவுக்கு உறவினர்களும், பட்டும் படாடோபமுமாகக் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்கள்.
புவனேந்திரன் ஆசையாக எடுத்துக்கொடுத்த பட்டுப்புடவையில் அப்சரசாக ஜொலித்த மதுமதி அவனோடு ஜோடியாக புகைப்படங்களுக்குப் புன்னகையோடு போஸ் கொடுத்தாள்.
ஆனால் அவளது கவனமெல்லாம் ஐபோன் மீதே இருந்ததை கவனித்தவர்கள் மகிழ்மாறனும், ஷண்மதியும் மட்டுமே! அவள் போனை அடிக்கடி மலர்விழியிடமிருந்து வாங்கி வாங்கி பார்ப்பது அவர்களுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால் அந்த உறுத்தல் நிச்சயதார்த்த நிகழ்வின் உற்சாகத்தில் கரைந்து போனது!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction