பொன்னியின் செல்வன் – இந்தப் புக் படிக்கும் போது, என் மனசுல பல கேள்விகள் ஓடிச்சு. ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆகும்? நந்தினியோட திட்டம் என்ன? இதெல்லாம் நினைக்கும் போது, தூக்கம் கூட வரல. சாயங்காலம் வரைக்கும் படிச்சேன். இப்பதான் புக் முடிச்சேன். என்ன ஒரு முடிவு! என் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல். புக் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் என் இடத்துல இருந்து நகர முடியல. அந்த கதை எனக்குள்ளேயே ஓடிட்டு இருந்துச்சு. சில புக்குகள் சும்மா படிக்கிறதுக்கு, சில புக்குகள் மனசுக்குள்ளே உட்கார்ந்துடும். “பொன்னியின் செல்வன்” ரெண்டாவது கேட்டகிரி. இந்த புக்கை யாராவது படிக்கணும்னு நினைச்சா, கண்டிப்பா படிங்க. ஒரு நிமிஷம் கூட சலிப்பா இருக்காது.
-விழியின் மொழிகள்
சிகாமணி மாணிக்கவேலுவின் தோட்டத்தில் இனி வேலை செய்யப்போவதில்லை என அறிந்தபோது சொல்லவொண்ணா நிம்மதியொன்று மலர்விழிக்குள் பிறந்தது. இனி பெரியம்மா பெரியப்பாவின் கட்டளைக்காக அங்குமிங்கும் ஓடி ஓடி தந்தை வேலை செய்யவேண்டியதில்லை.
ஆனால் இன்னொரு பக்கமோ குடும்பத்தின் வரவு செலவு இடிக்குமே என்ற கவலையும் எழுந்தது. கிட்டத்தட்ட ஏழு நாட்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் காண்பவரிடத்தில் எல்லாம் ஏதாவது கூலி வேலை இருந்தால் சொல்லுமாறு சிகாமணி கேட்பதைப் பார்க்கையில் அவளது கவலை இன்னும் அதிகமானது.
மகளின் முகம் சோர்வது எந்தத் தந்தைக்குப் பிடிக்கும்?
“கவலைப்படாதல. படிச்ச ஆளுங்களுக்கே வேலை சுளுவா கிடைக்குறதில்ல. நான் படிக்காதவன். கொஞ்சம் நாளாகும். ஆனா கிடைச்சிடும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சரிப்பா! நான் வேணும்னா எங்க ஓனர் கிட்ட வேலைக்குச் சொல்லிவைக்கவா?”
“நீ யார் முன்னாடியும் எனக்காகப் பணிஞ்சு நிக்கக்கூடாதுல. அப்பா பாத்துக்கிடுதேன். நீ படிக்குற வேலைய பாரு”
“எங்க ஓனர் நல்ல மாதிரிப்பா”
“தெரியும்ல. அவங்களை என்னத்துக்குச் சிரமப்படுத்திக்கிட்டு? மரம் வச்ச கடவுளுக்குத் தண்ணி ஊத்தத் தெரியாதா?”
சிகாமணியின் நம்பிக்கைக்கு ஏற்றபடி ஈஸ்வரியின் தந்தை பணியாற்றும் பாளை மார்க்கெட்டில் இருக்கும் அரிசி மொத்த வியாபார கடைக்கு அருகே இருக்கும் மளிகை கடையைக் கவனித்துக்கொள்ளும் வேலை அவருக்குக் கிடைத்தது.
ஈஸ்வரியின் தந்தை தட்சிணாமூர்த்தியின் முயற்சியால் கிடைத்த வேலை அது. சிகாமணி அந்தக் காலத்து எட்டாம் வகுப்பு. கணக்கு வழக்கு எல்லாம் தெளிவாகப் பார்க்கத் தெரிந்தவர். மளிகை கடையில் வேலை செய்வதற்கு கை சுத்தம் முக்கியம். கணக்கு வழக்கில் கவனமாக இருக்க வேண்டும். மொத்த சாமான் கணக்கு, விற்பனை கணக்கு எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் ஓரளவுக்குச் சிகாமணிக்கு மாணிக்கவேலுவின் தோட்டத்தில் பூ விற்பனையைக் கவனித்தபோதே பழகிய சமாச்சாரம்.
சிகாமணிக்கு வேலை கிடைத்ததும்தான் குழலிக்கு மனக்கலக்கம் அகன்றது. மலர்விழியும் நிம்மதியாகக் கல்லூரிக்குச் சென்று வர ஆரம்பித்தாள்.
அதே நேரம் புவனேந்திரன் – மதுமதி திருமணத்திற்காகத் தாலிக்குப் பொன்னுருக்கும் வைபவமும் வந்து விட்டது. அதற்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண்வீட்டார்கள் செல்வார்கள்.
மதுமதிக்குத் துணையாக மலர்விழியை வீட்டில் வைத்துவிட்டு மாணிக்கவேலுவும் நிலவழகியும் மலர்விழியின் பெற்றோரை அழைத்துப் போனார்கள்.
மதுமதிக்கு மலர்விழியோடு இருக்க பிடிக்கவில்லை.
“சும்மா என் கூடவே உக்காந்திருக்காத. உனக்குத்தான் இந்த மண் தரை, தோட்டம் எல்லாம் பிடிக்குமே! அங்க போய் வேடிக்கை பாரு” என்று தோட்டத்துக்குத் துரத்திவிட்டாள்.
மலர்விழிக்குமே அவளது அலட்டல் தாங்க முடியாமல் ஓடிவிடலாமா என்ற எண்ணம்தான். நல்லவேளையாக அவளே துரத்தினாள் என்று எண்ணியபடி தோட்டத்தில் உலாவ ஆரம்பித்தாள்.
அந்தத் தோட்டமும் வீடும் அவளது ஆச்சி தாத்தாவின் மறைவுக்குப் பிறகு அன்னியமாகத் தோன்றவே பெரியப்பா வீடு என்றாலே கசப்புதான்.
ஆச்சி இருந்தவரைக்கும் சாயங்காலத்தில் தவறாமல் அவரது கையைப் பிடித்துக்கொண்டு தோட்டத்தில் உலாவுவாள். மலர்விழிக்காக அவளது தாத்தா தோட்டத்திலிருக்கும் இரு தென்னை மரங்களுக்கு இடையே வலை ஊஞ்சல் ஒன்று வாங்கி மாட்டியிருந்தார்.
அதில் அவளை அமரவைத்து அவள் ஆடும் அழகை ரசிப்பார்கள் தாத்தாவும் ஆச்சியும். அதெல்லாம் ஏதோ முன் ஜென்மம் போலத் தோன்றியது மலர்விழிக்கு.
அவர்கள் குடும்பத்தோடு இந்த வீட்டிலிருந்து நதியூர் வீட்டுக்குச் சென்றது கூட கனவு போலவே இருந்தது. சிறிய வீடுதான். ஆனால் அதையும் நந்தவனம் ஆக்கிவிட்டார் குழலி.
செம்பருத்தி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்ற மலர்ச்செடிகள், காய்கறி செடிகள் என முடிந்தவரை வெறும் நிலமாகக் கிடந்த இடத்தைத் தோட்டமாக்கியிருந்தார்.
அந்தத் தோட்டத்திலிருக்கும் உயிர்ப்பை மாணிக்கவேலுவின் தோட்டத்தில் உணர முடியவில்லை மலர்விழியால்.
‘உன் ஆச்சி தாத்தா இல்லாத வெறுமை இந்தத் தோட்டத்தின் ஜீவனைப் போக்கிவிட்டது’ என்றது அவளது மனசாட்சி.
வீடு என்றால் கட்டிடம் மட்டுமில்லை, அதில் வாழும் மனிதர்களும் சேர்ந்ததுதான். அதே போல தோட்டம் என்றால் மரம் செடி கொடிகள் மட்டுமில்லை, அவற்றை உள்ளார்ந்த அன்போடும் ரசனையோடும் பராமரிக்கும் மனிதர்களும் சேர்ந்ததுதான்.
மலர்விழியின் எண்ணப்போக்கு இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் திடுமென மதுமதி மொபைலுடன் ஓடிவந்தாள்.
“என்ன மதுக்கா?” என்றவளின் கையில் மொபைலைத் திணித்தவள்
“புவன் லைன்ல இருக்கார்னு நினைக்கேன். நீயே பேசிடு” என்று சொல்லிவிட்டு ஓட எத்தனித்தாள்.
அவளை நிறுத்திய மலர்விழி “நீங்க போனிங்கனா நான் பேசமாட்டேன்” என்று சொல்லவும் மதுமதி பற்களைக் கடித்துக்கொண்டு நின்றாள்.
மலர்விழி காதில் மொபைலை வைத்தவள் “சொல்லுங்க சார்” என்றதும் “சாரா? மாமானு சொல்லு” என்று காதைக் கடித்தாள் மதுமதி.
‘இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்று மைண்ட்வாய்சில் பேசிய மலர்விழி “ஹலோ மாமா” என்க
“மலர்விழி எம்.காம் ஃபர்ஸ்ட் இயர்தானே? நீ அங்க என்ன பண்ணுற?” என்று அதட்டலாகக் கேட்டது மகிழ்மாறனின் குரல்.

‘இவனா?’ அதிர்ச்சியில் மொபைலைக் கீழே தவறவிடப்போனவள் சுதாரித்துக்கொண்டாள்.
“ஹலோ” மொபைல் அதிர்ந்தது இம்முறை.
“சார்.. சார் நான்தான்” என்று திணற
“மொபைலோட ஓனர் எங்க? உன் கிட்ட மொபைலைக் குடுத்துட்டு அவங்க என்ன பண்ணுறாங்க?” என்றதும் மொபைலை மதுமதியின் கையில் திணித்துவிட்டு அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டாள் மலர்விழி.
‘நீயாச்சு, உன் கொழுந்தனார் ஆச்சு’ என்ற மைண்ட்வாய்சுடன் சென்றவள் சில நிமிடங்கள் கழித்து கடுப்போடு வந்த மதுமதியைக் கண்டதும் “எதுக்குக் கரெஸ் சார் கிட்ட என்னை மாட்டிவிட்ட?” என்று கேட்க
“புவன் நம்பர்ல மாறன் பேசுவார்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்? ப்பா! எல்லாமே ஆர்டர்தான். அந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கப்போறவளை நினைச்சா பரிதாபமா இருக்கு” என்றாள் அவள்.
“அவருக்குமா கல்யாணம்?” என்று அப்பாவியாய்க் கேட்டாள் மலர்விழி.
“இப்ப இல்ல. என்னைக்காச்சும் ஒரு நாள் ஆகும்ல. அப்ப வரப்போறவ பாவம்னு சொன்னேன்” என்றாள் மதுமதி.
அந்நேரத்தில் மதுமதிக்கு இன்னொரு அழைப்பு வரவும் “சரி! நீ வேடிக்கைய கண்டினியூ பண்ணு. இம்ப்பார்ட்டெண்ட் கால் பேசப்போறேன். என் ரூம் பக்கம் வராத” என்று அலட்டலாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.
‘புவன் சாரிடம் பேசுவதைத் தவிர்ப்பவள் யாரிடம் பேசுவதற்கு இவ்வளவு ஆர்வமாகச் செல்கிறாள்?’
யோசித்தபடியே நின்றுவிட்டாள் மலர்விழி.
அதே நேரம் ‘என்.எஸ்.என் நிவாசத்தில்’ தாலிக்குப் பொன்னுருக்கும் நிகழ்வு முடிந்திருந்தது.
மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டின் சார்பில் இனிப்பும் விருந்தும் பரிமாறப்பட, நிலவழகி வாய்கொள்ளாப்புன்னகையோடு சிவகாமியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சிவகாமி சம்பந்தியம்மாவிடம் பேசினாலும் அவரது பார்வை என்னவோ யாருடனும் பெரிதாக ஒட்டாமல் விலகியே இருந்த சிகாமணி – குழலியின் மீதுதான் இருந்தது.

தாலிக்குப் பொன்னுருக்கியபோது சம்பந்திகளோடு இருந்தவர்கள் விருந்து பரிமாறப்பட்டபோது மூன்றாவது மனிதர்கள் போல ஒதுங்கிக்கொண்டது ஏன் என சிவகாமிக்குப் புரியவில்லை.
இத்தனைக்கும் சம்பந்தியின் உடன்பிறந்த சகோதரன் தானே சிகாமணி! நிலவழகியோ சிவகாமியின் பார்வை போன திக்கை வைத்தே அவரது மனதில் ஓடியதைக் கண்டுகொண்டார்.
“என் கொழுந்தனாரும், அவர் சம்சாரமும் இந்த மாதிரி வசதியான வீட்டு விசேசத்துக்கு வந்து பழக்கமில்ல மதினி. அதனால பட்டும் படாமலும் பழகுறாங்க. வேற ஒன்னுமில்ல” என்று சமாளித்தார்.
“சொந்தத்துக்குள்ள என்ன வசதியானவன், ஏழை பாகுபாடு? புவன் அப்பாவுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது மதினி. அவங்க இப்பிடி ஒதுங்கி நிக்குறதைப் பாத்தார்னா அவர் ரொம்ப வருத்தப்படுவார். வாங்க, சாப்பிட அழைச்சிட்டு வருவோம்” என்ற சிவகாமி கையைப் பிடித்து இழுக்காதக் குறையாக நிலவழகியைத் தன்னோடு அழைத்துப் போய் சிகாமணி – குழலியின் முன்னே நிற்க வைத்துவிட்டார்.
முதலில் திகைத்த இருவரும் பின்னர் புன்னகைத்தார்கள்.
“சாப்பிடாம ஏன் இங்க வந்து நிக்குறிங்க சம்பந்தி?” சிவகாமி மரியாதையோடு கேட்க
“அது… ஒன்னுமில்ல சம்பந்தியம்மா… இவருக்குப் போன் வந்துச்சுனு” என சமாளிக்கப் பார்த்தார் குழலி.
அவருக்கு என்னவோ அங்கே கை நனைக்கப் பிடிக்கவில்லை. எல்லா பணக்காரர்களும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால் என்ற பயம். எங்கே தங்களின் வசதிக்குறைவைச் சுட்டிக்காட்டி தங்கள் பக்கத்து உறவினர்களே கேலி செய்வார்களோ என்ற தயக்கம். சம்பந்தியம்மாளிடம் அதைச் சொல்லவா முடியும்?
“போன் பேசிட்டிங்களா சம்பந்தி? வாங்க சாப்பிடலாம்”
அழுத்தமாகச் சிவகாமி கட்டளையிட, வேறு வழியின்றி விருந்துக்கு அமர்ந்தார்கள் இருவரும். இடையே வந்த புவனேந்திரன் புன்னகைமுகமாக அவர்களிடம் பேசினான். கல்யாண மாப்பிள்ளை எந்தப் பந்தாவும் இல்லாமல் பேசியதில் சிகாமணியும் குழலியும் மகிழ்ந்து போனார்கள்.
“மதுமதி குடுத்து வச்சவ. மாப்பிள்ளை நல்ல குணமானவரா இருக்கார்” என்று குழலி சொல்ல சிகாமணியும் ஆமோதித்தார்.
இக்காட்சி எல்லாம் தந்தையோடு சென்னைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த மகிழ்மாறனின் விழிகளுக்குத் தப்பவில்லை.
மாணிக்கவேலு வீட்டுக்கு வந்ததுமே தம்பியையும் தம்பியின் மனைவியையும் அவனிடம் அறிமுகப்படுத்திவிட்டார். குழலியும் சிகாமணியும் அவனிடம் வணக்கம் சொன்னதோடு சரி! ஒதுங்கியே நின்றார்கள்.
இந்த ஒதுக்கமும் தயக்கமும்தான் மலர்விழியிடமும் இருக்கிறது போல! பெற்றோர் திடமாக இருந்தால்தானே பிள்ளைக்குத் தைரியம் வரும்.
மாணிக்கவேலு, நிலவழகி இருவரும் அவர்களை நடத்திய விதத்தில் போலித்தனம் நிறைந்திருப்பதை அறிந்துகொள்ள அவனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
பணம் வந்துவிட்டால் உடன்பிறந்தவன் யாரோவாகி விடுவானா என்ன? விசித்திரமான மனிதர்கள் என்று நினைத்துக்கொண்டான்.
“இன்னைக்கு ஈவ்னிங் நானும் மாறனும் சென்னைக்குக் கிளம்புறோம். மதியம் இன்விடேசன் வந்ததும் எங்க குலதெய்வக் கோவில்ல முதல் பத்திரிக்கை வைக்கலாம்னு இருக்கோம்” என்று சம்பந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் நரசிம்மன்.
“நல்லது சம்பந்தி. சென்னைக்குப் போறது தொழில் விவகாரமா?” என நைச்சியமாக விசாரித்தார் மாணிக்கவேலு.
“இல்ல சம்பந்தி! கல்வித்துறை அமைச்சர் நமக்கு வேண்டியவர். அவரையும் முதலமைச்சரையும் பாத்து அப்பிடியே பத்திரிக்கை குடுத்துக் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலாம்னு இருக்கோம்”

பெரியவீட்டுத்திருமணங்களுக்கு அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும் வருவது வழக்கமான ஒன்றுதான்! தொழில்ரீதியானச் சிக்கல்களுக்கு அரசியல்வாதிகளின் உதவி பிசினஸ்மேன்களுக்குத் தேவை. அதே பிசினஸ்மேன்களின் செல்வாக்கும் நிதியும் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நேரத்தில் தேவை.
இதெல்லாம் மாணிக்கவேலுவுக்குத் தெரிந்ததுதான். ஆனால் முதலமைச்சரைப் பார்க்குமளவுக்கு நரசிம்மனுக்குச் செல்வாக்கு இருப்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டார். அந்தப் பிரமிப்பு அகலவில்லை வீடு திரும்பும்வரை.
வந்ததும் மதுமதியிடம் அவர் சொன்னது இதுதான்.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நம்ம நினைச்சதைவிட செல்வாக்குலயும் அந்தஸ்துலயும் உசத்தி. போற இடத்துல அவங்களை அனுசரிச்சு வாழ கத்துக்க. பிடிவாதம், சோம்பேறித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிடு இப்பவே. நல்ல மனுசங்க உனக்குப் புகுந்தவீட்டாளுங்களா வாய்ச்சிருக்காங்க. புத்தியோட பிழைச்சுக்க”
மதுமதியின் தலைக்கனம் பற்றி அவர் அறிந்ததுதான். இருப்பினும் திருமணம் பேசி முடித்த நாளிலிருந்து அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை ஊகித்து பொதுப்படையாக இப்படி ஒரு அறிவுரையைச் சொல்லிவைத்தார்.
அவளும் தலையை ஆட்டிவைத்தாள் அசுவாரசியத்துடன். பின்னர் வந்த நாட்களில் புவனேந்திரனுடம் கூட ஒழுங்காகப் பேசினாள். எந்தக் குறையும் அவள்மீது சொல்லாத விதத்தில் நடந்துகொண்டாள்.
சென்னைக்குச் சென்ற நரசிம்மனும் மகிழ்மாறனும் கல்வி அமைச்சரைச் சந்தித்து அவர் மூலமாக முதலமைச்சருக்குத் திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டுத் திருநெல்வேலிக்குத் திரும்பினார்கள்.
வந்ததும் சிவகாமி கேட்டுக்கொண்டார் என்பதற்காக பாளையங்கோட்டை இராஜகோபாலசாமி கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான் மகிழ்மாறன்.
அந்நேரத்தில் தள்ளுவண்டியில் சமோசாக்களை வாங்கிவிட்டு வேகமாகச் சாலையைக் கடக்க முயன்ற மலர்விழி அவனது காருக்குக் குறுக்கே வந்துவிட சடன் ப்ரேக் போட்டுக் காரை நிறுத்தியவன் ஸ்டீயரிங் வீலில் கையைக் குத்திப் பதற்றத்தைத் தணித்து முன்பக்க கண்ணாடி வழியே அவளை முறைத்தான்.
கடை அருகே இருந்த மாடு மிரண்டு வந்ததில் பதறிப்போய் சாலையைக் கடக்கப் போனவள், காரின் குறுக்கே விழுந்து விட இருந்த அதிர்ச்சியில் கையிலிருந்த சமோசாக்களைத் தவறவிட்டிருந்தாள். அதிர்ச்சியில் பேச்சில்லை அவளிடம்.
“ஏம்மா பாத்து ரோட்டைக் க்ராஸ் பண்ண மாட்டியா?”
“மாட்டுக்காரனுவ ஒழுங்கா வீட்டுல மாட்டைக் கட்டிப் போடாம ரோட்டுல அலைய விட்டா இது போல தினமும் நாலு ஆக்சிடெண்ட் நடக்கும்வே”
“மாடு மிரண்டு அந்தப் புள்ளை கிட்ட ஓடுனதும் பயந்துடுச்சுய்யா”
ஆளாளுக்கு ஒன்று சொல்ல மலர்விழி காருக்குள் இருந்தவன் யாரெனப் பார்த்துவிட்ட அதிர்ச்சியில் கதிகலங்கி நின்றாள்.
மகிழ்மாறன் காரிலிருந்து இறங்கி கடுங்கோபத்தோடு அவளை நெருங்கியவன் அவளது முகபாவனையைப் பார்த்ததும் திட்டும் எண்ணத்தைக் கைவிட்டான்.
“ரோட்ல வண்டி எதுவும் வருதானு செக் பண்ணாம உன் இஷ்டத்துக்குக் கிராஸ் பண்ணலாமா? நான் ப்ரேக் போடலனா கார் வந்த வேகத்துக்கு உன்னைத் தூக்கி வீசிருக்கும். எங்க இருக்கு உன் கவனம்?”
அதிகம் கத்தவில்லை. முகத்தின் இறுக்கத்தில் இரண்டு டோஸ் அதிகமாகி தாடை அசைய அவன் கேட்டதில் சற்று முன்னர் விபத்தாகவிருந்த அதிர்ச்சியை விட இப்போது அதிகம் அரண்டு போனாள் மலர்விழி.

“மாடு வந்துச்சு சார்… அதான் பயந்து…”
கண்கள் அங்கே ஓரமாக வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் இருந்து எதையோ இழுத்துத் தின்று கொண்டிருந்த பசுமாடு ஒன்றின் பக்கம் அனிச்சையாய்ப் பார்க்கக் கூறினாள் மலர்விழி.
அவளது முகத்தில் வியர்வை முத்துகள்! மகிழ்மாறன் தரையில் சிதறிக்கிடந்த சமோசாக்களைப் பார்த்தான்.
பின்னர் என்ன யோசித்தானோ “கார்ல ஏறு! உன்னை புக் ஷாப்ல இறக்கிவிடுறேன்” என்றான்.
மலர்விழியும் அவசரமாகக் கார்க்கதவின் கைப்பிடியைத் திறக்க முயற்சித்தாள். பாவம்! அதைத் திறக்கவும் தெரியவில்லை.
அப்பாவியாய் விழித்தவளுக்குக் கார்க்கதவைத் திறந்துவிட்டவன் அவள் அமரவும் கதவை அடைத்துவிட்டுச் சுற்றி வந்து காரில் ஏறிக்கொண்டான்.
அவன் காரைக் கிளப்பியதும் “புக் ஷாப்புக்கு இன்னைக்கு லீவ் போட்டிருக்கேன். என்னை பாளை மார்க்கெட்டுக்குள்ள இறக்கிவிட்டுடுங்க சார். எங்கப்பாவ பாக்க போகணும்” என்றாள் அமைதியாக.
“சார்? அன்னைக்கு மாமானு கூப்பிட்டில்ல நீ”
மலர்விழி திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் ‘ஏன் அப்படி அழைத்தாய்’ எனக் கடிந்துகொள்வானோ என்று தயங்க மகிழ்மாறனோ அந்தக் கேள்வியைக் கேட்டதையே மறந்தவன் போல காரைக் கிளப்பினான்.
அவள் பாளை மார்க்கெட்டில் இறக்கிவிடுமாறு கூறினாளே! அதற்கு சரி என்று சொல்லவில்லை. முடியாது என்றும் மறுக்கவில்லை. கார் பாளை மார்க்கெட்டை நோக்கி பயணித்ததில் அவன் தன்னை அங்கே அழைத்துச் செல்வது உறுதியாகவும், சற்று முன்னர் அவனது கேள்வியால் வந்த தயக்கத்தை மறைத்து அமைதியாகக் காட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கத் துணிந்தாள் மலர்விழி.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction