சின்ன வயசுல இருந்தே நூலகம்னா எனக்கு ஒரு ஈர்ப்பு. அங்கே போனா நேரம் போறதே தெரியாது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டி, அதுல இருக்குற விசயங்களை உள்வாங்கிக்கிட்டா, நாமளே அந்த எழுத்தாளரோட சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொள்ற மாதிரி இருக்கும். சில சமயம் ஒரு பழைய புத்தகத்தை எடுப்பேன், அதோட பக்கங்கள் மஞ்சள் நிறமா மாறி, அதைப் படிச்ச பலரோட விரல் ரேகைகள் படிஞ்சிருக்கும். அதைப் பாக்குறப்ப, இந்தப் புத்தகம் எத்தனை பேருக்கு அறிவையும், ஆனந்தத்தையும் குடுத்திருக்கும்னு யோசிப்பேன்.
-விழியின் மொழிகள்
பகலின் ஓயாத ஆட்டம் அடங்கி, எங்கும் ஒரு மெல்லிய அமைதியான சூழல்! வானில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக எட்டிப்பார்க்க, நிலவு தனது குளிர்ந்த ஒளியைப் பூமியின் மீது மெதுவாகப் படரவிட்டுக்கொண்டிருந்தது.
ஆங்காங்கே விளக்கொளிகள் மின்மினிப்பூச்சிகளாய் கண் சிமிட்ட அவற்றின் நடுவே கம்பீரமாய் நின்ற ‘என்.எஸ்.என் நிவாசத்திற்குள்’ நுழைந்தது மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஒன்று.
அதிலிருந்து இறங்கினான் புவனேந்திரன். இறங்கியவன் மொபைலைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். அவனது முகத்தில் காலையில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை.
காரணம் அவனுக்கு மனைவியாகவிருப்பவள். ஆம்! அன்று காலையிலிருந்து ஏகப்பட்ட முறை மதுமதியின் மொபைலுக்கு அழைத்துவிட்டான். அனைத்து அழைப்புகளும் துண்டிக்கப்பட்ட அழைப்புகளாவே போய்விட்டால் அவனும்தான் என்ன செய்வான்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இந்தச் சம்பந்தம் நிச்சயதார்த்தம் வரை முன்னேறியதற்கு அவன்தான் முக்கியக் காரணம்.
நரசிம்மனும் சிவகாமியும் பெண் வீட்டாரைப் பற்றி கேள்விப்பட்டதில் தலையாட்டிவிட்டாலும் மகிழ்மாறனுக்கு ஏனோ மாணிக்கவேலுவின் அலட்டல் சுபாவத்தில் அத்துணை பிடித்தமில்லை.
“புதுப்பணக்காரங்க அப்பிடித்தான் இருப்பாங்க மாறா” என்று நரசிம்மன் சொன்னபோது கூட அவனுக்கு உடன்பாடில்லை.
‘என் திருமணத்தில் கருத்து சொல்ல நீ யார்’ என்று கேட்கும் ரகமில்லை புவனேந்திரன். அவனுக்கு தாய் தந்தையைப் போல தம்பியின் எண்ணவோட்டமும் முக்கியம்.
புவனேந்திரனுக்கு மதுமதியைப் பிடித்துப்போனக் காரணத்தால் அதன் பின்னர் மகிழ்மாறனும் அவளைத் தனது அண்ணியாக ஏற்றுக்கொண்டான் எனலாம். ஆனால் பேச்சுவார்த்தை எல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. அவன் யாரிடமும் கலகலப்பாகப் பேசுபவனில்லை என்பதால் புவனேந்திரனும் அவனை வற்புறுத்தி தனது வருங்கால மனைவியிடம் நல்லபடியாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவில்லை.
நிலமை இவ்வாறிருக்க பெண் பார்க்க செல்கையில் மதுமதியிடம் இருந்த உற்சாகம் நிச்சயதார்த்தத்தின் போது இல்லை. அதன் பிறகோ சுத்தமாக இல்லை. புவனேந்திரன் முப்பது முறை மொபைலில் அழைத்தால் அவள் மூன்று முறை அழைப்பை ஏற்பதே குதிரை கொம்பாகிப் போனது.
அதே நிலை தொடர்வது அவனுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. அவளுடனான வாழ்க்கையை அவன் எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வைத்திருக்கிறான்! அதை அவளிடம் பகிரவேண்டுமென ஆசைப்படுவதில் தவறில்லையே!

வேலையாள் கொண்டு வந்து நீட்டிய காபியை அருந்தியபடி மொபைல் போனை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த தமையனை ஆராய்ச்சியாக நோக்கினான் மகிழ்மாறன். அவனும் அப்போதுதான் முன்னீர்பள்ளத்தில் இருக்கும் அவர்களின் என்.எஸ்.என் பப்ளிக் ஸ்கூலின் முதல்வரிடம் பேசிவிட்டு வீடு திரும்பியிருந்தான்.
அவனது பார்வை உறுத்தியதால் தலை உயர்த்திய புவனேந்திரன் “ஃபர்ஸ்ட் டே எப்பிடி போச்சு காலேஜ்ல?” என்று கேட்க
“நாட் பேட்! உனக்கு?” என்று அவன் கேட்டதும்
“வித்தியாசமான அனுபவம். பட் நல்லா இருக்கு” என்றான்.
“ஆனா நீ நல்லா இருக்குற மாதிரி தெரியலையே”
புவனேந்திரன் அவனிடம் என்ன சொல்லுவான்?
‘என் வருங்கால மனைவி எனது மொபைல் அழைப்புகளைக் கண்டுகொள்வதில்லை’ என்றா சொல்ல முடியும்? அப்படி சொன்னால் அவள் மீது மகிழ்மாறனுக்கு எங்கிருந்து மரியாதை வரும்? ஏற்கெனவே அவர்கள் குடும்பத்தின் மீது அதிருப்யுள்ளவன் ஆயிற்றே!
“ஒரு முக்கியமானக் காலுக்காக வெயிட்டிங்” என்று பொதுவாகச் சொல்லி வைத்தான் அவன்.
மகிழ்மாறனும் எதையும் தோண்டித் துருவி கேட்க விரும்பவில்லை. ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்.
உறவுகளே என்றாலும் அவரவருக்கு என அந்தரங்கமான விசயங்கள் இருக்கும். அதில் சகோதரனாக இருந்தாலும் தலையிடுவது நாகரிகமில்லை என்பது மகிழ்மாறனின் எண்ணம்.
“சரி! கால் வந்தா பேசு. இல்லனா நாளைக்குக் கூட பேசு. எந்த விசயமும் உன் மூளைய குழப்ப விடாத”
தோளில் தட்டிவிட்டுப் போனான் அவன்.
அந்தோ பரிதாபம்! அன்றைய இரவு மதுமதியிடமிருந்து எந்த அழைப்பும் அவனுக்கு வரவில்லை.
“மாப்பிள்ளை கிட்ட பேசுனியா?” என்று நிலவழகி கேட்டதற்கு கூட
“என்ன பேசுறது? புவன் ரொம்ப போர் அடிக்குறார்மா” என்று அசட்டையாகச் சொல்லிவிட்டுப் போனாள் மதுமதி.
புவனேந்திரன் போல கம்பீரமான ஆண் ஒருவன் தனது கடைக்கண் பார்வைக்காகக் காத்திருப்பதில் அவ்வளவு கர்வம் அவளுக்கு! உடனே பதில் சொல்லிவிட்டால் அவன் தன்னைக் குறைத்து மதிப்பிடுவானே! கொஞ்சம் அலையவிட்டு வேடிக்கை பார்ப்போம் என்ற திமிரான மனநிலை.
அதோடு சித்தப்பா குடும்பத்தைப் பற்றி ஏன் மறைத்தாய் எனத் தன்னிடம் விசாரிப்பானோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது.
அவளது பயத்துக்குக் காரணமானச் சிகாமணியின் வீட்டில் அன்னையிடம் தீவிரமானக் குரலில் பேசிக்கொண்டிருந்தாள் மலர்விழி.
“யாருனே தெரியலம்மா. ரெண்டு நாளா கார்ல பின்னாடியே வர்றாங்க. எனக்கும் ஈசுக்கும் இன்னைக்கு அவங்களால சங்கடமா போச்சு. என் கிளாஸ் பசங்க அந்தக் கார் எங்க பின்னாடி ரெண்டு நாளா வர்றதைப் பாத்துட்டுக் கிளாஸ்ல வச்சு யார் என்னனு விசாரிக்குறாங்க”
மகள் சொன்னதைக் கேட்டதும் குழலிக்குத் திக்திக் உணர்வு.
ஒருவேளை ராஜதுரையின் மகன் முரளியாக இருப்பானோ?

மகளிடம் மாணிக்கவேலுவும் நிலவழகியும் வந்து போனச் செய்தியை இன்னும் சொல்லவில்லை அவர். சிகாமணியையும் சொல்லக்கூடாதெனத் தடுத்து வைத்திருந்தார்.
மனதில் எழுந்த பயத்தை மறைத்து “எதேச்சையா அந்தக் கார் வந்திருக்கும் மலர். இந்தக் காலத்துல யாரும் பின் தொடர மாட்டாங்கம்மா. நீ ரொம்ப யோசிக்காத” என்று சொல்லிவிட்டார்.
மலர்விழியும் அரைகுறை மனதோடு படிக்கப் போய்விட்டாள்.
அவள் போனதும் சிகாமணியின் காதைக் கடித்தார் குழலி.
“உங்க அண்ணன் கொண்டு வந்தாரே ஒரு சம்பந்தம், அந்த முரளிப்பய நம்ம மலர் காலேஜுக்குப் போறப்ப எல்லாம் பின்னாடியே காருல வர்றானாம். பொட்டப்புள்ளை கிட்ட இப்பிடி நடந்துக்குறது நல்லாவா இருக்கு?”

“அப்பிடியா? நான் வேணும்னா ராஜதுரை மச்சான் கிட்ட பேசட்டுமா?”
“அவசரப்படாதிய! யாரோ காருல பின்னாடி வர்றாங்கனுதான் அவ சொன்னா. அது முரளிப்பயலானு தெரியல. அவனா இருக்கும்னு நான் நினைக்குறேன்”
“அதுக்குள்ள நீயே ஏன் முடிவுக்கு வர்ற? அண்ணன் நீ மறுத்தப்பவே ராஜதுரை மச்சான் கிட்ட சொல்லிருப்பாரு”
“என்னமோ எனக்குச் சரியா படலைங்க. நாளை பின்ன ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுனா நம்ம பிள்ளை வாழ்க்கை என்னாகும்னு யோசிங்க. எப்பவும் உங்கண்ணனும் மதினியும் நமக்கு நல்லது நினைக்கமாட்டாங்கனு ஒருநாள் உங்களுக்குப் புரியும்”
அன்னையும் தந்தையும் பேசியதை எல்லாம் அறியாமல் போனாள் மலர்விழி.
மறுநாள் அவளும் ஈஸ்வரியும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கல்லூரியை நோக்கி செல்லும்போது மீண்டும் அதே கார் அவர்களைப் பின் தொடரவும் அவளது பயம் அதிகமானது.
அன்னை சொன்னது போல இது எதேச்சையாக நடப்பதாகத் தோன்றவில்லை.
“இன்னைக்கும் அந்தக் கார் பின்னாடி வருது ஈசு”
ஈஸ்வரி திரும்பிப் பார்த்தாள். அந்த ஜாகுவார் கார் அவர்களின் பின்னே தான் வந்து கொண்டிருந்தது.
“ஆமா மலர்! திரும்பிப் பாக்காம காலேஜுக்குள்ள போயிடுவோம்”
இருவரும் விறுவிறுவென கல்லூரியை நோக்கி நடந்தார்கள். கார் ஓரிடத்தில் நின்றுவிட்டது. அப்பாடா தொல்லை விட்டதென இருவரும் முன்னேற பின்னே வேகமாக ஒரு காலடிச்சத்தம்.
வண்ணார்ப்பேட்டையில் வடக்கு பைபாஸ் ரோடு என்பது பரபரப்பான இடம். அங்கே மனிதர்களும் வாகனங்களும் போவதும் வருவதுமாக இருக்க, யாருக்கும் நின்று அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்கவோ, என்ன நடக்கிறதென விசாரிக்கவோ நேரமில்லை.
காலடிக்குச் சொந்தக்காரன் இரு தோழிகளையும் நெருங்கிவிட்டான்.
மலர்விழி வேறு வழியின்றி திரும்பிப் பார்த்தாள்.
டீசர்ட்டும் ஜீன்சும் அணிந்து வந்த ஆடவன் ரேபானைக் கழற்றிவிட்டுப் புன்னகைத்தான். புன்னகைத்த இதழ்கள் சிகரெட்டை அடிக்கடி தீண்டுபவை என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்களோ செவ்வரி படர்ந்து காணப்பட்டன. ஒன்று குடியாக இருக்கவேண்டும். அல்லது இவன் சரியாக உறங்கும் பழக்கமில்லாதவனாக இருக்கவேண்டும்.
புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் மீது ஏனோ மலர்விழிக்கு மரியாதை கிடையாது. அந்த ஆடவனையும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
பிடித்தமின்மை அவளது முகத்தில் தெரிந்தது.
“மலர் தானே நீ?” எடுத்ததும் ஏகவசனத்தில் விசாரித்தவனின் விழிகளில் துளியும் நேர்மை இல்லை.
ஈஸ்வரி முறைப்போடு மலர்விழியின் மடிந்திருந்த துப்பட்டாவைச் சரி செய்துவிட்டாள். பின்னர் அவனிடம் “யார் சார் நீங்க? எதுக்கு வழி மறிச்சு பேசுறிங்க?” என்று சிடுசிடுவென எரிந்து விழ

“மலர் உன் பேர் இல்ல. நான் உன் கிட்ட பேச வரல” என்றான் அவன் எகத்தாளமாக. அவனது விழிகளில் இன்னும் அதிகமாக கள்ளத்தனம் வழிய மலர்விழிக்கே எரிச்சல் வந்துவிட்டது.
“வா ஈசு!” அவனிடம் பேச விரும்பாமல் கிளம்ப எத்தனித்தாள்.
“இரு மலர். உன் கிட்ட கொஞ்சம் பேசணும். நான் முரளி”
“நீங்க யாரா வேணும்னாலும் இருந்துக்கோங்க. இப்பிடி வழிமறிச்சு பேசுறது நல்லா இல்ல. எங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க புரொபசர்ஸ் யாரும் இதைப் பாத்துட்டாங்கனா நான் டிசிப்ளின் கமிட்டி வரைக்கும் அலையணும். என் படிப்பும் பேரும் கெட்டுப் போயிடும். தயவுபண்ணி கிளம்புங்க”
முந்தைய தினம் கட் அடித்துப் பேராசிரியையிடம் மாட்டிய அதிர்ச்சியே அதிகம் அவளுக்கு. தன்னால் ஈஸ்வரியும் மாட்டவேண்டுமா?
அவளது நல்ல நேரமோ கெட்ட நேரமோ அன்றைய தினமும் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது மகிழ்மாறனுக்கு. அவனது கார் அவர்களைக் கடக்கும்போது இந்தக் காட்சி அவனது கண்களில் பட்டுவிட்டது.
ஓட்டுனரிடம் காரை நிறுத்துமாறு பணித்தான்.
“மலர் நான் உன் கிட்ட தனியா பேசணும். இந்தப் பொண்ணைப் போகச் சொல்லு”
“ப்ளீஸ்! யாரும் பாத்துட்டாங்கனா காலேஜ்ல சொல்லிடுவாங்க. எங்கம்மாவும் அப்பாவும் என் மேல நிறைய நம்பிக்கை வச்சு படிக்க அனுப்பிருக்காங்க…”
ஈஸ்வரி எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தவள் தங்களை நோக்கி மகிழ்மாறன் நடந்து வருவதைக் கண்டதும் அரண்டு போய்விட்டாள்.
‘முந்தைய தினமே மலர்விழியின் பெரியப்பா வரை அழைத்து குறுக்கு விசாரணை செய்தவராயிற்றே! இன்று என்ன செய்ய காத்திருக்கிறாரோ?’
“டி மலர்!” தோழியின் சுடிதார் துப்பட்டாவை இழுத்தாள் அவள்.
“என்ன?”
“கரெஸ் வர்றார்டி”
அவ்வளவுதான்! மலர்விழிக்கு உயிர் கையில் இல்லை.
‘நேற்று ஏதோ மயங்கி விழுந்தாள் என்று இரக்கப்பட்டிருப்பார். இன்று அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. கல்லூரிக்கு வருகிறபோது ஆண் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கிறாயா என்று கேள்விகளைக் கேட்டுத் துளைக்கப் போகிறார்’
மலர்விழி மருண்டு போய் விழிக்கையிலேயே அவர்களை நெருங்கிவிட்டான் மகிழ்மாறன்.
முரளி அதைக் கண்டுகொள்ளாமல் வழிந்துகொண்டே இருந்தான்.
“மலர்விழி எம்.காம் ஃபர்ஸ்ட் இயர் தானே நீ?”
அழுத்தமானக் குரலில் கண்ணாடியின் ப்ரேமை அழுத்திவிட்டு மகிழ்மாறன் கேட்ட விதத்தில் இன்னொரு முறை கூட மயக்கம் வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு!
“ஆமா… ஆமா சார்”
அட்டென்சனில் நின்றவளிடம் “காலேஜுக்குப் போகாம இங்க என்ன பேச்சு?” என்று அவன் கேட்க
“அது… இவர்தான்..” என்று திணறினாள் மலர்விழி.
ஆபத்பாந்தவளாக உதவிக்கு வந்தாள் ஈஸ்வரி.
“இவர் நேத்துல இருந்து கார்ல எங்களை ஃபாலோ பண்ணிட்டிருக்கார் சார். இன்னைக்கு மலர் கிட்ட வந்து என்னமோ தனியா பேசணும்னு சொல்லுறார். எங்களுக்கு இவரை யாருனு தெரியாது”
அவள் மடமடவெனச் சொல்லவும் மகிழ்மாறனின் விழிகளில் கடுமை குடியேறியது. யாரென்று தெரியாதப் பெண்ணிடம் இப்படி வழிமறித்துப் பேசுவதே தவறு. அதிலும் அந்தப் பெண் அவனது நிர்வாகத்தின் கீழிருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவி. அவளது பாதுகாப்பும், மரியாதையும் கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பல்லவா!
போதாக்குறைக்கு அண்ணனின் வருங்கால மனைவிக்குத் தங்கை முறை வேறு! எப்படியோ போ என்று விடுவதற்கு மனமில்லை மகிழ்மாறனுக்கு.
அவனது விழிகள் முரளியை ஆராய்ந்தன. ராஜாவீட்டு ஊதாரிக் கன்றுகுட்டி என்று முகத்தில் பச்சை மட்டும்தான் குத்தவில்லை. ஒரே பார்வையில் அவனை ஓரளவுக்குப் புரிந்துகொண்டவன் சொடக்கிட்டு அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
“எங்க காலேஜ்ல படிக்குற பொண்ணு கிட்ட இப்பிடி வழிமறிச்சு பேசுற வேலைய இன்னொரு தடவை வச்சுக்காதிங்க. இது முதல் தடவைங்கிறதால விட்டுடுறேன். அடுத்தத் தடவை இதே போல நடந்துச்சுனு கேள்விப்பட்டாலோ கண்ணால பாத்தாலோ போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்க வேண்டியதா இருக்கும்”

முரளியின் முகம் அவனது எச்சரிக்கையில் மாறிப் போனது. இவ்வளவு நேரம் மலர்விழியிடம் காட்டிய இனிமை பறந்து போனது.
“இவளை நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். அந்த உரிமைல பேசுறேன். நீங்க யார் என்னைத் தடுக்குறதுக்கு?” என்றான் துடுக்காக.
அவன் சொன்ன செய்தியில் காதில் தீயள்ளி கொட்டியது போல உணர்ந்தாள் மலர்விழி. இப்படி அநியாயமாகப் பொய் சொல்லுகிறானே என்று கண்கள் கலங்கிப்போக தன்னைச் சமாளிக்க முடியாமல் ஈஸ்வரியின் கையை ஆதரவுக்காகப் பற்றிகொண்டாள்.
அவளது தடுமாற்றம், கலங்கிய விழிகளும், முரளியின் அலட்சியமான உடல்மொழியும் மகிழ்மாறனுக்கு முரளி சொன்னது பொய் என்பதைப் புரியவைத்துவிட்டது. போதாக்குறைக்கு ஈஸ்வரியும் வெடித்தாள்.
“வாய் கூசாம பொய் சொல்லுறான் சார் இந்தாளு. மலருக்குக் கல்யாணம் பண்ணனும்னு அவங்க வீட்டுல இதுவரைக்கும் யாரும் வந்து பேசல. இவன் பொய் சொல்லுறான்” – ஈஸ்வரி.
“ஓஹோ! வேணும்னா உன் பெரியப்பா கிட்ட கேட்டுக்க. என் அப்பா கிட்ட உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்குறதா மாணிக்கம் மாமா வாக்கு குடுத்துட்டார். இப்பவே அவருக்கு நான் கால் பண்ணுறேன்”
மொபைலை எடுத்துக்கொண்டு மலர்விழியிடம் கொக்கரித்த முரளியை மகிழ்மாறன் கடுமையாக உறுத்து விழிக்க, தானாக அவனது கரம் மொபைலைக் காதிலிருந்து இறக்கியது.
“கல்யாணம் பத்தி பேசுறதா இருந்தா வீட்டுப்பெரியவங்க மூலமா பேசச் சொல்லுங்க. அதுவும் வீட்டுல, கோவில்ல வச்சு மரியாதையா பேச வேண்டிய விசயம். இந்த மாதிரி காலேஜுக்கு வர்ற வழில நிறுத்திப் பேசுறது நாகரிகமா இல்ல. உங்களுக்குள்ள காதல் மாதிரி எந்த உறவும் இல்ல. கல்யாணமும் உறுதியாகல. அப்ப எந்த உரிமைல இந்தப் பொண்ணு கிட்ட பேசுறிங்க? கிளம்புங்க.”
அதட்டலாக அவன் சொல்ல முரளிக்கும் வேறு வழியில்லையே! ஆனால் கிளம்பும் முன்னர் மலர்விழியிடம் ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டுத்தான் சென்றான்.
“உங்க பெரியப்பா மூலமா நம்ம கல்யாணத்தைப் பேசி முடிக்குறேன். அப்புறம் உன் கிட்ட எனக்கு எல்லா உரிமையும் வந்துடும்ல”
அவன் கிளம்பியதும் ஈஸ்வரியையும் மலர்விழியையும் கல்லூரிக்குச் செல்லுமாறு பணித்தான் மகிழ்மாறன்.
கலங்கிய விழிகளைத் துடைத்த மலர்விழியின் முகம் அவமானத்தால் கறுத்துப் போயிருந்தது. அவள் கலங்கிய தோற்றத்தோடு ஈஸ்வரியோடு கிளம்பிவிட மகிழ்மாறனும் காரில் ஏறினான்.

முரளி மீது அவனுக்குத் துளி கூட மதிப்பில்லை. இப்படி ஒருவனைத் தம்பி மகளுக்குக் கணவனாகப் பேசிவைத்தாரா மாணிக்கவேலு? என்னமோ அவரிடம் நல்லெண்ணம் வர மறுத்தது மகிழ்மாறனுக்கு.
கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே நகர்ந்த மலர்விழியைப் பற்றி நினைத்தவனுக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. பிடிக்காத ஒன்று நடந்தால் அதை எதிர்த்து இரண்டு வார்த்தைகள் பேசத் தெரியாதவள் கோழையாகத் தெரிந்தாள் மகிழ்மாறனின் பார்வையில்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction