புத்தகம் படிக்கிற பழக்கம் பத்தி நீங்க என்ன நினைக்குறிங்க? எனக்கு அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்ல! ஒரு நாள்ல இத்தனை பக்கம் புரட்டணும்னு எனக்கு நானே ஒரு ரூல் வச்சிருக்கேன். புத்தகத்தோட பக்கங்களைப் புரட்டப் புரட்ட, எங்கேயோ நாம போயிட்டு இருப்போம்! ஒரு நல்ல புத்தகம்னா, அது நம்ம கூடயே பேசற ஒரு ஃபிரெண்ட் மாதிரி. நாம சோகமா இருந்தா ஆறுதல் சொல்லும், உத்வேகம் குடுக்கும், சில நேரம் நம்மளை யோசிக்கவும் வைக்கும். சில கதைகள்லாம், அடேங்கப்பா, திகிலையும் ஆச்சரியத்தையும் காட்டும்! ஒரு புக்கை எடுத்துப் படிச்சா, நம்ம மனசுல ஒரு கதவு திறக்குற மாதிரியும், ஒரு ஜன்னல் வழியா புதுசா ஒன்னைப் பார்க்குற மாதிரியும் இருக்கும். புதுப்புது யோசனைகள் எல்லாம் மனசுக்குள்ள வந்து போகும்.
-விழியின் மொழிகள்
“இப்பிடி ஒரு காரியம் நம்ம ஹோட்டல்ல நடந்துச்சுனு வெளிய தெரிய வந்தா இத்தனை வருசம் என் தாத்தா, அப்பா கட்டிக் காப்பாத்துன தொழிலோட மரியாதை என்னாகும்? தெரியாமச் செய்யுற தப்புக்குத்தான் மன்னிப்பு. பாதிப்பு என்னனு தெரிஞ்சே செய்யுற தப்புக்கு அதிகபட்ச மன்னிப்பே தண்டனை மட்டும்தான். இனி அந்த ஆளுக்கு ஃபினான்ஸ் செக்சன்ல வேலை கிடையாது. செட்டில்மெண்ட் முடிச்சு அனுப்பி வச்சிடுங்க”

அழுத்தமாகத், தெளிவாகக் கட்டளையிடும் தொனியில் ஒலித்தது ஒரு குரல். அந்தக் கோவிலில் ஒலித்துக் கொண்டிருந்த ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற இறைநாமம் காதில் விழுந்த நொடியில் குரலில் இருந்த கோபத்தைத் தணித்துக்கொண்டான் அவன்.
திரும்பி நின்று கோவிலின் கோபுரத்தைப் பார்த்தவனின் கண்களை விட்டுவிட்டு அதற்குக் கவசமாக இருந்த ரிம்லெஸ் கண்ணாடியின் மீது மோதின காலை சூரியனின் கதிர்கள்.
‘ஆதிநாதர் ஆழ்வார் கோவில்’ – நம்மாழ்வார் அவதரித்த ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் அமைந்திருக்கும் திருக்கோவில்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“மாறா!”
குரலில் அன்பைக் குழைத்தால் எப்படி இருக்குமென யாரும் கேட்டால் இந்தக் குரலை உதாரணம் சொல்லலாம் எனுமளவுக்கு மென்மையும் கனிவும் கலந்து அழைத்தபடி வந்து நின்றார் சிவகாமி. ஆழ்வார் திருநகரி அவர் பிறந்த ஊர்.
“பூஜைக்கு எல்லாம் தயார். நீ வந்துட்டனா ஆரம்பிச்சிடலாம்பா” என்றவரை அழைத்துக்கொண்டு வேஷ்டி நுனியைப் பிடித்தபடி பெருமாள் சன்னதியை நோக்கி நடந்தான் மாறா என்று சிவகாமியால் அன்பாக அழைக்கப்பட்ட மகிழ்மாறன். வயது முப்பதைத் தொடப்போகிறது. ஆறடி வளர்ந்தும் திருப்தி இல்லை போல! கூடுதலாகச் சில அங்குலங்கள் வளர்ந்திருந்தான்.
பணச்செழுமையும், அமர்ந்திருக்கும் நிர்வாகத்தின் பொறுப்பும் தனி மிடுக்கைக் கொடுத்திருந்தன அவனது வதனத்துக்கு. அறிமுகமற்றவர்களின் பார்வைக்கு அந்த மிடுக்கு இறுக்கமாகத் தோன்றும் என்பது கூடுதல் தகவல்.
அன்னையும் மகனும் வந்ததும் ஆதிநாதருக்குத் திருமஞ்சனம் ஆரம்பித்தது. பிரபந்தங்கள் பாடுவதைக் கேட்டபடி கண் மூடி நின்றான் மகிழ்மாறன். அவன் அடிபணிந்து நிற்பது இறைவனின் சன்னதியில் மட்டுமே!

அவனருகே நின்று கொண்டிருந்த சிவகாமியின் முகத்திலும் பக்திப்பரவசம்! அது என்னவோ இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டால் அவர் மனம் உருகிவிடும். ஊர் மீது பாசம் அதிகமுள்ளவர்.
எந்தளவுக்கு என்றால், ஆழ்வார் திருநகரியின் முந்தைய பெயரான திருக்குருகூரின் பெயரில் எழுந்த இலக்கியமான ‘திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம்’ என்ற நூலில் வந்த மகிழ்மாறன் என்ற பெயரைத் தனது இளைய மகனுக்கு வைக்கும் அளவுக்குப் பாசம் அதிகம்!
மூத்தவன் புவனேந்திரனுக்குக் கணவர் நரசிம்மன் பெயர் சூட்டிவிட இளையவனுக்குப் பெயர்ச்சூட்டும் உரிமையைத் தன்வசப்படுத்திக்கொண்டார் அவர்.
திருமஞ்சனம் முடிந்து கண் குளிர ஆதிநாதரைத் தரிசித்துவிட்டு மகிழ்மாறனுடன் கிளம்பிய சிவகாமி அன்றைய தினம் கோவிலில் தெய்வத்திடம் வைத்த வேண்டுதல் ஒன்றே ஒன்றுதான்.
‘என் இளையமகனின் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது போல மூத்தமகனின் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக அமைந்துவிடவேண்டும்’
ஆம்! புவனேந்திரனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்! அவனது பொறுப்பின் கீழ் இத்தனை ஆண்டுகள் இருந்த என்.எஸ்.என் கல்வி குழுமத்தின் தலைமையை இப்போது மகிழ்மாறன் ஏற்கப்போகிறான்.
இத்தனை நாட்கள் மகிழ்மாறனின் வசம் இருந்த என்.எஸ்.என் ஓட்டல் குழுமத்தின் பொறுப்பைத் தந்தை நரசிம்மனோடு சேர்ந்து கவனிக்கப்போகிறான் புவனேந்திரன்.
இந்தப் பொறுப்பு மாற்றத்துக்கானக் காரணகர்த்தா நரசிம்மனே! தங்களது கல்வி குழுமங்களின்மீது அரசு இயந்திரத்தின் கெடுபிடி பாயக்கூடாது என்பது அவரது எண்ணம். அதிகாரவர்க்கத்தை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவும், சாதுரியமும் வெள்ளந்தியான புவனேந்திரனை விட மகிழ்மாறனுக்கு அதிகம் என்ற அவரது கணக்கு இந்தப் பொறுப்பு மாற்றத்துக்குக் காரணமாகிப் போனது.
இனி தமையனின் வசம் போகப்போகிற பொறுப்புதானே, தனக்கென்ன கவலையென இருக்காது முந்தைய வாரம் அவர்களின் ரெசிடென்சி ஹோட்டலில் நிதித்துறையில் கையாடல் செய்த மேலாளரை வேலையை விட்டு அனுப்பியிருந்தான் மகிழ்மாறன்.
தென் மாவட்டங்களில் அவர்களின் என்.எஸ்.என் குழுமத்திற்கென ஒரு கௌரவமும் மரியாதையும் உண்டு. அரசியல்ரீதியான உதவிகளுக்குக் கூட அவர்களை அணுகுபவர்கள் ஏராளம். அந்தளவுக்குப் பலம் பொருந்திய குழுமத்தின் பெயர் எந்த விதத்திலும் சேதமடைய அனுமதிக்கக்கூடாதென்ற தீர்மானம் மகிழ்மாறனுக்குள் எப்போதுமே இருக்கும்.
தொழிலின் மீதான மரியாதையும் கௌரவமும் எப்படி குன்றிவிடக்கூடாதென யோசிப்பானோ அப்படியே குடும்பத்தின் கௌரவம் மற்றும் மரியாதையைக் கட்டிக் காப்பதிலும் அவனுக்கு உறுதி அதிகம்.
அவன் வளர வளர இந்த உணர்வு இன்னுமே அதிகமானது என்றால் மிகையில்லை. யார் என்ன நினைத்தால் என்ன என்று தன்போக்கில் வாழ அவன் பழக்கப்படவில்லை. அவன் அப்படி வளர்க்கப்படவும் இல்லை.
அதனால்தானோ என்னவோ நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில நேரம் அவன் எடுக்கும் முடிவுகள் கடுமையானதாக இருக்கும். ஹோட்டல், கல்வி குழுமம் இரண்டையும் தனியொருவனாகக் கட்டிக் காப்பாற்றிய நரசிம்மனையே ஒரு கட்டத்தில் அவனது கடுமையான அணுகுமுறை அசரவைத்துவிட்டது.
“சின்ன தப்புதானே மாறா! மன்னிச்சு விட்டுடலாமே?”
“சின்ன சின்னதா இன்னும் எத்தனை தப்பு நம்ம முதுகுக்குப் பின்னாடி நடந்திருக்குமோ? எனிவே, தப்பு சின்னதோ பெருசோ அதுக்கான தண்டனை நிச்சயமா கிடைச்சாகணும். நாளைக்கு இந்த விவகாரம் வெளிய கசிஞ்சா சொசைட்டில என்.எஸ்.என் குரூப்புக்கு இருக்குற மரியாதை என்னாகும்? எனக்கு உங்க அளவுக்குப் பெரிய மனசு இல்லப்பா. நம்ம ஹோட்டல்களோட பொறுப்பை என் கிட்ட குடுத்தப்ப முழு அதிகாரமும் எனக்குத்தான்னு சொன்னிங்க, ஞாபகம் இருக்குதா? என் அதிகாரத்தை முழுமையா செயல்படுத்த முடியாம தடுக்காதிங்க”
என்.எஸ்.என் ஹோட்டல் குழுமத்தின் சேர்மனாக அவன் அமர்ந்தபோது நிர்வாகத்தில் இருந்த கறுப்பு ஆடு ஒன்றைக் கையும் களவுமாகப் பிடித்து ஆதாரத்தோடு காவல்துறை வசம் ஒப்படைக்க மகிழ்மாறன் முடிவெடுத்தபோது தடுத்த நரசிம்மனுக்கு ‘இனி என் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என்ற அவனது மறைமுகமானப் பேச்சு கட்டளையாகவே தொனித்தது அந்நாளில். அதன் பின்னர் அவரும் ஹோட்டல் குழுமத்தின் எந்த முடிவுகளிலும் தலையிடுவதில்லை.
இரு மகன்களில் நல்வாழ்க்கைக்காக வேண்டிய சிவகாமிக்கு மூத்தவனின் திருமண வேலைகள் தலைக்கு மேல் இருந்தன. போன வாரம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலிருக்கும் அவர்களின் ஆடம்பர சொகுசு ஹோட்டலில் மூத்தவன் புவனேந்திரனுக்கும், ரங்கநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட பெரும் செல்வந்தரான மாணிக்கவேலுவின் இளைய மகள் மதுமதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.
திருமணமும் எவ்வித குறையுமில்லாமல் நடந்தேறிவிட்டால் சிவகாமிக்கு நிம்மதி.
அவர் யோசனைவயப்பட்டவராகப் பயணிக்க “என்ன யோசனைம்மா?” என வினவினான் மகிழ்மாறன்.
“எல்லாம் புவன் கல்யாணத்தை நினைச்சுதான் மாறா”
“அதுக்கென்ன? பெரிய வெட்டிங் ப்ளானர் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருக்கோம். அவங்க பாத்துப்பாங்க”
“இருக்கலாம்பா. ஆனா கல்யாணம்ங்கிறது லேசுப்பட்ட விசயமில்லையே! நம்ம சொந்தத்துல எல்லாருக்குமே நம்ம குடும்பம் மேல சின்னதா பொறாமை உண்டு. அவங்களும் பணத்துல குறைஞ்சவங்க இல்ல. அவங்க நிலமைல நம்ம இருந்தப்ப சந்தோசமா இருந்தாங்க. சமீப காலத்துல அவங்களை விட நம்ம தொழில்ல வளரவும் தாங்க முடியல. அவங்களைத் தாண்டி நம்ம வளர்ந்தா யாருக்குமே பிடிக்காது போல, அப்பிடிப்பட்டவங்க யாரோட கண்ணும் புவன் மேல பட்டுடக்குடாது”
சோகமாய்ச் சொன்ன அன்னையை ஆதுரமாகப் பார்த்தான் மகிழ்மாறன்.
“கண் திருஷ்டி எல்லாம் புல்ஷிட்மா. அதை நம்புறிங்களா? நல்லதும் கெட்டதும் ஒருத்தரோட செயலால வர்றதுதான்”

உறுதியானக் குரலில் கொஞ்சம் புன்னகை பூசிய முகத்தோடு அவன் சொல்லிவிட சிவகாமி அமைதியாகிவிட்டார்.
கார் நெல்லை குலவணிகர்புரத்தில் இருக்கும் அவர்களின் ‘என்.எஸ்.என் நிவாசம்’ நோக்கி பயணித்தது.

அதுதான் நரசிம்மன் பிறந்து வளர்ந்த ஊர். அந்த ஊரில் சிறியதாக மெஸ் ஒன்று ஆரம்பித்து அதை ஹோட்டலாக வளர்த்து பின்னர் பள்ளியில் ஆரம்பித்து இன்று கல்லூரிகள் வரை வளர்ந்து நிற்கும் என்.எஸ்.என் குழுமத்தின் ஆணிவேரான நரசிம்மனின் தந்தை நெடுமாறனின் பூர்வீகமே அதுதான்.
இப்போது நகரமயமானாலும் அதன் பழைய அழகு கெடவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் சூழ்ந்த பங்களா வீடு அது. கார் வருவதைக் கண்டதும் செக்யூரிட்டி கேட் கதவைத் திறந்துவிட்டார்.
மரநிழலில் இருந்த தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கவும் புவனேந்திரனும் நரசிம்மனும் வீட்டுக்குள் இருந்து வரவும் சரியாக இருந்தது.
“பிறந்த ஊர்ல காலடி எடுத்து வச்சா சிவகாமிக்கு நேரம் போறதே தெரியாது போல” என்று சிரிப்போடு நரசிம்மன் கூற
“நேரம் போறது தெரியலைனா எப்பிடி இங்க சரியான நேரத்துக்கு வந்திருப்பேனாம்?” என்று கேட்டபடி ஆதிநாதர் கோவிலில் கொடுத்த துளசியைக் கணவருக்கும் மூத்த மகனுக்கும் கொடுத்தார் சிவகாமி.
“நாங்க கிளம்புறோம். அந்த மேனேஜர் விவகாரம்..” என நரசிம்மன் மகிழ்மாறனைப் பார்க்க
“அது இன்னைக்கு முடிஞ்சிடும்பா” என்றான் அவன்.

தொடர்ந்து “சரி! நீங்க கிளம்புங்க. நானும் காலேஜுக்குக் கிளம்பணும்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டான்.
ஆம்! என்.எஸ்.என் கல்வி குழுமத்தின் கீழ் வண்ணார்ப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே இயங்கிவரும் என்.எஸ்.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குத்தான் அவன் செல்லப்போகிறான். இனி அங்கே கரஸ்பாண்டெண்ட், சேர்மன் எல்லாம் அவன்தானே!
திருச்செந்தூர் அருகே புதிதாக பொறியியல் கல்லூரி கட்டும் யோசனையும் அவனுக்கு இருந்தது. முதலில் இந்தப் பொறுப்பில் அமர்ந்து இதன் நுணுக்கங்களைக் கற்றுவிட்டு அப்புறமாக ஒரு ஸ்தாபனத்தை நிறுவலாமெனத் தீர்மானித்திருந்தான்.
வெண்ணிற சைனீஷ் காலர் சட்டை, கறுமைவண்ணத்தில் சினோஸ் பேண்ட், அதே நிறத்தில் ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி சகிதம் தயாராகி வந்தவனின் நெற்றியில் விபூதி பூசி வாழ்த்தி அனுப்பி வைத்தார் சிவகாமி.
கார் வண்ணார்ப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் அவர்களின் கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோது மாணவர்கள் கூட்டம் கூட்டமாகக் கல்லூரிக்குள் வந்த வண்ணம் இருந்தார்கள்.
மஞ்சள் வண்ணத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த கல்லூரி பேருந்துகளில் இருந்து இறங்கிய கூட்டம் ஒருபுறம்.
கார் நின்றதும் இறங்கியவன் தனக்காகக் காத்திருந்த புவனேந்திரனின் உதவியாளர் தனசேகரிடம் கைகுலுக்கிவிட்டு கல்லூரி முதல்வர் நீட்டிய பூங்கொத்தை வாங்கிக்கொண்டான்.

“வெல்கம் சார்.” என்று இன்முகமாக வரவேற்றார்கள் கல்லூரி முதல்வரும் தனசேகரும்.
பின்னர் கரெஸ்பாண்டெண்டின் அலுவலக அறைக்குள் நுழைந்தான் மகிழ்மாறன்.
பெரிய அலுவலக அறைதான்! கரெஸ்பாண்டெண்டின் மேஜைக்குப் பின்புறம் ‘என்.எஸ்.என் குரூப் ஆப் எஜூகேஷனல் இன்ஸ்டிட்டியூசன்ஸ்’ என்று ஆங்கில எழுத்துகள் பதிக்கப்பட்டிருந்தன.
ஏ.சியின் குளிர்ச்சேவை குறை சொல்லாதபடிக்கு அந்த அரையின் வெப்பநிலையைக் குறைத்திருக்க தனது இருக்கையில் அமர்ந்தான் மகிழ்மாறன்.
கல்லூரி முதல்வர் அமர்ந்ததோடு மட்டுமன்றி கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து அவனிடம் விளக்கினார்.
“அட்டானமஸ் அந்தஸ்துக்கு அப்ளை பண்ணிருக்கோம் சார். அதுக்காக யூனிவர்சிட்டி க்ராண்ட் கமிசன்ல இருந்து நம்ம காலேஜைப் பார்வையிட அடுத்த மாசம் ஒரு குழு வருவாங்கனு டெல்லில இருந்து தகவல் வந்திருக்கு. அதுக்கான வேலைகள் நடந்திட்டிருக்கு.”
“லேடீஸ் ஹாஸ்டல் கட்டுற வேலை எப்பிடி போகுது? யூ.ஜி.சில இருந்து மெம்பர்ஸ் வர்றதுக்குள்ள ஹாஸ்டல் வேலை முடிஞ்சு அதைத் திறக்கணும்” என்றவனிடம் கட்டுமான நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையைக் கொடுத்தார் முதல்வர்.

அட்டானமஸ் அந்தஸ்து கிடைத்த கல்லூரிகளைத் தன்னாட்சி கல்லூரிகள் என்பார்கள். அவர்களது பாடத்திட்டங்களை அவர்களே வடிவமைத்துக் கொள்ளலாம்! தேர்வுகளையும் நடத்திக்கொள்ளலாம்.
அவனது தந்தை தனியார் கல்லூரியாக இதை ஆரம்பித்து பின்னர் அரசு உதவி பெறும் கல்லூரியாக மாற்றினார். அட்டானமஸ் அந்தஸ்தை வாங்க வேண்டிய பொறுப்பு இப்போது அவனிடம் வந்திருக்கிறது.
இதற்கடுத்து பொறியியல் கல்லூரிக்கான அனுமதியைப் பெற வேண்டிய திட்டம் அவன் மனதில் ஓடுகிறது. இப்படி பெரிய பெரிய அடிகளை எடுத்து வைக்க உத்வேகத்துடன் தயாரானவனின் முன்னே அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு சின்ன விசயம் பஞ்சாயத்துக்காக வந்து நின்றது.
பொதுவாகக் கல்லூரியின் அன்றாட அலுவல்களில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிப்பது கல்லூரி முதல்வரின் பொறுப்பு. ஆனால் அன்றைய தினம் முதல்வரும் மகிழ்மாறனுடன் இருந்த காரணத்தால் அந்தச் சின்ன விசயம் அவனது கவனத்துக்கு வந்தது. அது அவனது பொறுப்புக்குப் பொருந்தாத விவகாரமும் கூட.
பொருந்தாதது, பொருத்தமில்லாதது என நாம் நினைக்கும் யாவற்றையும் இணைத்து வைத்து வேடிக்கை பார்ப்பதுதான் வாழ்க்கையின் வாடிக்கை.
நாம் எல்லாவற்றையும் திட்டமிடலாம், கணிக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கை எப்போதும் நமக்குப் புதிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. சில சமயங்களில், இந்த ‘பொருந்தாத’ ‘பொருத்தமற்ற’ இணைப்புகளே வாழ்க்கையில் நமக்குப் புதிய கண்ணோட்டங்களைக் கற்றுத் தரும் ஆசான் ஆகின்றன. நமக்கென நாம் வகுத்து வைத்திருக்கும் எல்லைகளை உடைக்க உதவுகின்றன.
மகிழ்மாறனுக்காக வாழ்க்கை இணைத்து வைக்கத் துடிக்கும் அந்தப் பொருந்தாத இணைப்பு யாரோ!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction