NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

காதல் யாதெனக் கண்டே...
 
Share:
Notifications
Clear all

காதல் யாதெனக் கண்டேன்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

காதல் யாதெனக் கண்டேன்

 

பெரிய மாமரத்தின் நிழலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த எனது நாசியை வருடியது சமையலறையில் தயாராகிக் கொண்டிருந்த மதிய விருந்து. இது எனது சம்பாத்தியத்தில் நான் வாங்கிய வீடு. ஆறு கட்டுகளும் மட்டப்பாவும் பின்பக்கம் பெரிய விருட்சங்களும், இளநீராய் ஊறும் தண்ணீருடன் கிணறும் அமைந்த அந்தக் காலத்து கட்டைக்குத்து வீடு.

ஒரு காலத்தில் நான் வங்கி ஊழியனாகப் பணியாற்றிய போது நானும் மீனாட்சியும் வாடகைக்குக் குடியிருந்தது இங்கே தான். என் புத்திரச்செல்வங்கள் பிறந்து தவழ்ந்து ஓடி விளையாடியதும் இந்த வீட்டில் தான்.

அவர்களின் திருமணத்திற்கு பிறகு எங்களது ஓய்வு காலத்தைக் கழிப்பதும் இந்த வீட்டில் தான்.

நானும் மீனாட்சியும் உணவுப்பிரியர்கள் இல்லை. வயோதிகத்தில் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றில் முக்கியமானது நாக்கு ருசியும் என்பதால் சமீபத்தில் எளிமையான உணவே எங்கள் வயிற்றை நிறைக்கிறது.

ஆனால் எங்கள் புத்திர செல்வங்களும் பேரன் பேத்திகளும் எங்களைக் காண செங்கோட்டைக்கு வந்திருக்க மகள்களும் மருமகள்களும் என் மீனாட்சியுடன் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சமையல் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

அனைவரும் இங்கே ஒன்று கூடியிருப்பதன் காரணம் நாளை எனக்கும் மீனாட்சிக்கும் திருமண நாள். சஷ்டியப்தபூர்த்தி நடந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்று கூடியிருப்பது இந்தத் திருமண நாளுக்காக தான்.

கடவுள் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்று தான் நான் கூறுவேன். இரண்டு மகன்களுக்கு அருமையான மனைவிகள் வாய்த்து விட்டது நான் செய்த புண்ணியம். இது வரை சிறு முகச்சுளிப்பு கூட என் மருமகள்களிடமிருந்து வந்ததில்லை.

அதே போல தான் மகள்களின் கணவர்களும். மாமனார் வீட்டில் பிடுங்கியது வரை இலாபம் என்று கணக்குப் போடும் அற்பப்பிறவிகள் அல்ல அவர்கள். தங்களது பெற்றோருக்கு நிகரான அன்பையும் மரியாதையையும் எனக்கும் மீனாட்சிக்கும் அளிக்க அவர்கள் தவறியதே இல்லை.

மகன்கள், மருமகன்களுக்கு விடுமுறை வாய்த்ததும், பேரப்பிள்ளைகளின் கல்வி நிலையங்களில் விடுப்பு கிடைத்ததுமாக குதிரைக்கொம்பு நிகழ்வுகள் ஒருசேர நடந்தேறியதால் முழு குடும்பமும் ஒன்று கூடிவிட்டது.

என் பேரப்பிள்ளைகளில் மூத்த மகனின் மைந்தன் பிரகதீஷ் மட்டும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறான். மற்ற அனைவரும் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் வயதினர்.

அனைவரும் முன்வாசல் முற்றத்தில் அவரவர் மொபைலுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க நான் ஓய்வாக பின்பக்கத்து தோட்டத்திற்கு வந்துவிட்டேன்.

தோட்டத்தில் வீசிய குளிர்ந்த காற்றில் கண்ணயரத் துவங்கிய எனது உறக்கத்திற்கு தடையாய் சீறலுடன் ஒலித்தது என் பேரன் பிரகதீஷின் குரல்.

“ஷட்டப்... சும்மா சாக்குப்போக்கு சொல்லாத... நான் உன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்றதால நீ என்னை டம்மியா நினைச்சிட்டல்ல”

“......”

“மறுபடியும் எக்சாம் கோச்சிங் கிளாஸ்னு ஆரம்பிக்காத ரேஷ்மா... நானும் ஜாப்ல சேர்ந்து மூனு மாசம் தான் ஆகுது... எனக்கும் என்னோட கெரியர்ல சாதிக்க வேண்டியது எவ்ளோவோ இருக்கு... அதுக்குனு உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாம இருந்திருக்கேனா? ஆனா உனக்கு என்னை விட உன்னோட ஸ்டடீஸும் செக்யூர்ட் ஃபியூச்சரும் தான் முக்கியமா போயிடுச்சுல்ல... உன்னை மாதிரி செல்ப் செண்டர்ட் பெர்சன்ஸ்லாம் ஏன்டி லவ் பண்ணுறிங்க? கெரியர் தான் முக்கியம்னா அதையே கட்டிக்கிட்டு அழ வேண்டியடிது தானே”

“........”

“ஐ டோண்ட் பிலீவ் யூ... இப்பவே உன்னோட விருப்பு வெறுப்புல இவ்ளோ கீனா இருக்குற நீ ஆப்டர் மேரேஜ் எனக்காக யோசிப்பியா? வாய்ப்பே இல்ல... உன்னை மாதிரி பொண்ணுங்கல்லாம் குடும்பத்துக்குச் செட் ஆக மாட்டாங்க ரேஷ்மா”

படபடத்தவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு புல்தரையில் ஆத்திரம் தீராமல் காலை உதைத்தான்.

எனக்கு மிகுந்த ஆச்சரியம்! நான் குழந்தையாய் தூக்கி வளர்த்த என் பேரனைக் காதல் நோய் தாக்கி அவன் வளர்ந்துவிட்டான் என்பதை என் மனதிற்கு உணர்த்திவிட்டது.

இரு மனமே! அவன் காதலிக்கும் பெண்ணிடம் பேசிய விதம் கொஞ்சம் கூட சரியில்லை! அதை கவனித்தாயா?

மொபைலோடு வீட்டிற்குள் செல்ல எத்தனித்தவனை “பிரகி கொஞ்சம் இங்க வாடா கண்ணா!” என்று அழைத்தேன் நான்.

எனது குரல் கேட்டதும் திடுக்கிட்டான் அவன். காரணம் இவ்வளவு நேரம் யாருமில்லை என்று எண்ணி காதலியிடம் சீறிவிட்டான் அல்லவா! நான் அவன் பேசியதை கேட்டிருப்பேனோ என்ற தயக்கத்துடன் என்னை நெருங்கியவனை என்னுடன் அழைத்துக்கொண்டு அந்த தோட்டத்தில் நடந்தபடியே நாசூக்காக விசாரிக்க ஆரம்பித்தேன்.

“என்னடா கண்ணா, காதலா?”

மீண்டும் திடுக்கிடல் அவனிடம். ஆனால் ஆமென்றோ இல்லையென்றோ எந்த பதிலும் வரவில்லை பிரகதீஷிடமிருந்து.

“தாத்தா அந்தக் காலத்து மனுசராச்சே, காதல்னதும் தாம்தூம்னு குதிச்சு வந்திருக்குற அத்தைப்பொண்ணுங்கள்ல ஒருத்திய உன் தலையில கட்டி வச்சிடுவேன்னு பயப்படுறீயா கண்ணா?”

“ஐயோ இல்ல தாத்தா... இது வேற பிரச்சனை”

பதற்றமும் சலிப்புமாய் கூறினான் என் பேரன்.

“சரி என்ன பிரச்சனைனு சொல்லு... தாத்தா முடிஞ்சா அதுக்குத் தீர்வு சொல்லுறேன்... பிடிச்சா கேளு, இல்லைனா உன் மனசு என்ன சொல்லுதோ அதை செய்”

நான் உறுதியளித்ததும் நடந்ததை கூற ஆரம்பித்தான் பிரகதீஷ்.

அவனுக்கும் அவனது காதலி ரேஷ்மாவுக்கும் கல்லூரி காலத்திலிருந்தே காதல். பெண்ணும் மிக அருமையானவள் தான் என்றான். நன்றாகப் படிப்பாள், காதல் என்ற பெயரில் தனது பாக்கெட்மனிக்கு வேட்டு வைக்காதவள், காதலிக்கிற காலகட்டத்தில் ஒரு குண்டூசியைக் கூட அவனது செலவில் வாங்க சம்மதிக்காத சுயமரியாதைக்காரி என்று அவன் அடுக்கிய யாவும் அப்பெண் மீதான மரியாதையை எனக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஆனால் என் பேரன் என்னைப் போல உணரவில்லை என்றதும் திடுக்கிட்டுப் போனேன்.

“என் ஃப்ரெண்டோட லவ்வர்லாம் அவன் கிட்ட உரிமையா பேசுறா தாத்தா... ஒரு நாள் அவன் கால் பண்ணலைனாலும் உரிமையா சண்டை போடுறா, பொசசிவ்வா இருக்குறா... தனக்கு வேணும்ங்கிறதை இப்பவே அவன் கிட்ட உரிமையா கேட்டு வாங்கிக்கிறா... ஆனா ரேஷ்மா, ப்ச்.... அவ இப்பிடி இல்ல தாத்தா... காலேஜ் டைம்ல எனக்குச் செலவு வைக்கவேண்டாம்னு நினைச்சதுலாம் ஓ.கே... ஆனா இப்ப நான் சம்பாதிக்கிறேன்... இப்பவும் நானும் அவளும் ஒரு காபிஷாப் போனாலும் அவளுக்கான பில்லை அவளே பே பண்ணுறா... ஷாப்பிங் போனாலும் இப்பிடி தான்... அன்னைக்கு ஒரு ஸ்னீக்கர் வாங்குனா தாத்தா...  நான் பணம் குடுக்குறேன்னு சொன்னதுக்குப் பிடிவாதமா அவளே குடுத்தா... இதெல்லாம் பாக்குறப்ப அவ என்னை இன்னும் அவளோட லைப் பார்ட்னரா மனசளவுல நினைக்கலனு தோணுது...

என் கிட்ட எதையும் வாங்கிக்கக் கூடாதுனு ஈகோ அதிகம் தாத்தா... அது கூட பரவால்ல... நான் ஒன் வீக்கா அவளுக்குக் கால் பண்ணலை... அதுக்கு அவளும் எனக்குக் கால் பண்ணலை... ஏன் கால் பண்ணலைனு என் கிட்ட சண்டை போடவும் இல்ல... எனக்கு என்னமோ அவ இந்த ரிலேசன்ஷிப்பை டைம்பாஸா பாக்குறாளோனு தோணுது... கேட்டா எக்சாம்கு படிக்குறேன்னு சொல்லுறா... பேங்க் எக்சாம் கிட்ட வந்துடுச்சுனு சாக்குப்போக்கு வேற... செக்யூர்ட் ஃபியூச்சருக்கு அவளுக்குக் கெரியர் முக்கியமாம்... ஏன் நான் அவளை ராணி மாதிரி பாத்துக்க மாட்டேனா? என் மேல துளி கூட நம்பிக்கை இல்லை தாத்தா... இப்பிடிப்பட்டவ கண்டிப்பா எனக்கு ஒய்பா ஆகமுடியாது”

பிரகதீஷ் பேசி முடித்ததும் அட முட்டாளே என்று சலித்துக் கொண்டேன் நான். இந்தக் காலத்து இளைஞர்கள் காதல் என்றால் இருபத்து நான்கு மணிநேரமும் மொபைலில் உருகுவதும், சமூக வலைதளங்களில் உரையாடுவதும், விலைமதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பரிமாறிக் கொள்வதும் தான் என்று யோசிக்கிறார்களோ!

தன் மீது உரிமையுணர்வு வரவேண்டும் என்று பேசுவதெல்லாம் சரி தான். ஆனால் பாதுகாப்பின்மையை இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த இளையத் தலைமுறை உரிமையுணர்வு என தப்பர்த்தம் எடுத்துக் கொள்ளும்?

சலிப்புடன் நான் நின்று கொண்டிருக்கையிலேயே என் மீனாட்சி கையில் தம்ளருடன் வந்து சேர்ந்தாள். கேழ்வரகு கஞ்சி கொண்டு வந்தவள்

“மணி பதினொன்னு ஆகுது... ராகி கஞ்சி குடிக்காம என்ன பேரன் கூட அரட்டை அடிச்சிட்டிருக்கீங்க?” என்று அவளுக்கே உரித்தான அதட்டல் கலந்த அன்பில் கேட்க

“நானே மறந்தாலும் நீ மறக்க மாட்டியே மீனாட்சி” என்றேன் நான் உள்ளார்ந்த அன்புடன்.

உடனே மோவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள் அவள்.

“இன்னும் எத்தனை நாளுக்கு நான் உங்க கூடவே இருக்க முடியும்? நான் இல்லைனா கூட உங்களால சமாளிக்க முடியணும்... அதுக்கு உங்க வேலைய நீங்க செஞ்சு பழகணும்... நீங்க தானே சொல்லுவீங்க, புருசன் பொண்டாட்டியே ஆனாலும் ஒருத்தர் இன்னொருத்தரை ஒரு அளவுக்கு மேல சார்ந்திருக்கக் கூடாதுனு” என்று கறாராக கட்டளையிட்டு விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

நான் கேழ்வரகு கஞ்சியைக் குடித்தபடி ஓரக்கண்ணால் பிரகதீஷைக் கவனித்தேன். அவன் முகம் இன்னுமே தெளிந்த பாடில்லை.

“பாத்தியா பிரகி? உன் ஆச்சி அந்தக் காலத்து மனுசி... அவளே சொல்லுறா, தம்பதிகளாவே இருந்தாலும் ஒவ்வொரு சின்ன தேவைக்கும் ஒருத்தர் இன்னொருத்தரை சார்ந்திருக்க கூடாதுனு... ஏன்னா அந்த இன்னொருத்தரோட இடம் எப்ப வேணும்னாலும் காலி ஆகலாம்... அந்த நேரம் அவங்களை சார்ந்து இருந்தவங்க வாழ்க்கைய எப்பிடி நகர்த்துறதுனு தெரியாம உடைஞ்சு போயிடுவாங்க கண்ணா... அதுக்குத் தான் தன்னோட தேவைகளை தானே நிறைவேத்திக்கிற அளவுக்கு சுயசார்பா இருங்கனு சொல்லி பசங்களை வளக்குறதே! என்னைக் கேட்டா நீ காதலிக்கிற பொண்ணு ரொம்ப தெளிவா யோசிக்கிறவளா இருக்கணும்... ஏன்னா இந்த ஞானோதயம் எனக்கு ஐம்பது வயசுல தான் வந்துச்சு... ஆனா அவளுக்குச் சின்ன வயசுலயே இருக்கு பாரேன்”

நான் இவ்வாறு மென்மையாய் விளக்கம் கொடுத்து சிலாகிக்கவும் பிரகதீஷின் முகத்தில் சிந்தனை கோடுகள்! ஆனால் எனக்கு இது மட்டும் போதாதே. இத்தனை ஆண்டுகள் மீனாட்சியுடனான என் இல்வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் என்னாலும் மனிதர்களின் செயல்பாடுகளை ஓரளவுக்குக் கணிக்க முடிந்திருந்தது. அதன் அடிப்படையில் என் பேரனின் புரிதல் தவறு என்பதும் அவன் காதலிக்கும் பெண் மனமுதிர்ச்சி கொண்டவளாக இருப்பதும் புரிந்தது.

அதை அவனிடம் விளக்கிவிடும் வெறி! ஏனென்றால் இக்கால இளைஞர்களுக்குக் காதல், காதல் தோல்வி, காதல் முறிவு இதெல்லாம் காபி குடிப்பது போல சகஜமாகியிருக்கலாம். ஆனான் அந்த தோல்விக்கும் முறிவுக்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டுமல்லவா!

அந்தப் பெண்ணைத் தான் நீ திருமணம் செய்தே தீரவேண்டுமென என்னால் பிரகதீஷைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் தவறான காரணத்தால் உன்னதமான காதலை இழந்துவிடாதே என எச்சரிக்கலாம் அல்லவா!

“சரி தாத்தா... ஆனா அவளுக்காக நான் ஒருத்தன் இருக்குறதை பத்தி அவ கவலைப்படுறதே இல்லையே... ஒரு போன் கால் பண்ணுனா யாரும் குறைஞ்சு போகமாட்டாங்க தாத்தா... கபிள்சுக்குள்ள லவ்வர்ஸ்குள்ள கம்யூனிகேசன் முக்கியம்... அது இல்லாத உறவு ரொம்ப ஃப்ரகைலா ஐ மீன் மெல்லிசா பலகீனமா இருக்கும்... அது எப்ப வேணும்னாலும் உடைஞ்சுடலாம்” என்றான் பெரிய மனிதனைப் போல.

மீண்டும் ஏன் இவ்வாறு யோசிக்கிறான் என்ற சலிப்பு எழ இந்த மடையனுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்துவிடு சுந்தரேசா என்று என் மனசாட்சி என்னை அதட்டியது. சுந்தரேசன் யார் என்கிறீர்களா?

இதோ நிற்கிறானே பிரகதீஷ் இவனது தாத்தாவும் என் மீனாட்சியின் பதியுமான நானே அந்த சுந்தரேசன்.

“நான் உன் வயசுல இருந்தப்ப எனக்கும் மீனாட்சிக்கும் கல்யாணமே முடிஞ்சுடுச்சு... உங்களை மாதிரி காதலிச்சுக் கல்யாணம் பண்ணுற சுதந்திரமெல்லாம் எனக்குக் கிடைக்கல... எங்கம்மாவும் அப்பாவும் பாத்துட்டு இது தான் உன் பொண்டாட்டி சுந்தரேசானு கை காட்டுனதும் நான் தாலி கட்டுனேன்...

அப்ப என் கைய பிடிச்சிட்டு எங்க வீட்டுக்குள்ள வந்தவ தான் மீனாட்சி... எங்கம்மா ஒரு நல்ல அம்மா தான், ஆனா சராசரி மாமியார்... அதனால மீனாட்சி விசயத்துல இளகவே மாட்டாங்க... அப்ப என் குடும்பம் முழுக்க ஆலங்குளத்துல எங்க பூர்வீக வீட்டுல இருந்தாங்க... எனக்கு செங்கோட்டை கனரா பேங்குல வேலை... இந்தக் காலம் மாதிரி அந்தக் காலத்துல பேங்க் எல்லாம் கவர்மென்ட் கிட்ட இல்ல... ப்ரைவேட் கிட்ட இருந்த காலம் அது...

என்னால ஆலங்குளத்துக்கும் செங்கோட்டைக்கும் அலைய முடியாது... அதே நேரம் எனக்கு அடுத்து இருக்குற ரெண்டு தங்கச்சிங்களுக்குக் கல்யாணம் பண்ணுறதுக்கு பேங்க் வேலை அவசியம்... வேற வழியில்லாம தான் இந்த வீட்டுல வாடகைக்குத் தங்கி வேலை பாத்தேன்... ஞாயித்துகிழமை மட்டும் ஆலங்குளத்துக்குப் போய் குடும்பத்தைப் பாத்துட்டு வருவேன்... சில நேரம் மாசம் ஒரு தடவை போகுற மாதிரி கூட வேலை அமைஞ்சிடும்...

இதுக்கு இடையில எனக்கு வேலைச்சுமைனா உன் ஆச்சிக்கு புகுந்த வீட்டுச்சுமை... இருபத்து நாலு மணி நேரமும் வீட்டுல வேலை இருந்துட்டே இருக்கு... சில நேரம் நான் வீட்டுக்கு வந்திருக்கப்ப நைட் உன் ஆச்சி தூங்கி விழுந்துட்டே பாத்திரம் கழுவுனதை கூட பாத்திருக்கேன்... ஒரே மருமகள்னு மொத்த வீட்டையும் அவ தான் கவனிச்சிக்கணும்...

ஆனா ஒரு நாள் கூட உன் தங்கச்சிங்க சொகுசா இருந்துட்டு என்னை மட்டும் வேலை வாங்குறாங்கனு மீனாட்சி குறைபட்டதே இல்லை... அதே நேரம் வாரத்துக்கு ஒரு தடவையோ மாசத்துக்கு ஒரு தடவையோ பாக்குறதுக்கு நடுவுல எங்களுக்கு இடையில தகவல் பரிமாறுறதுக்குனு இப்ப மாதிரி போனோ இண்டர்நெட்டோ கிடையாது... வீட்டுப்பெரியவங்க சம்மதிக்காம லெட்டர் எழுதவும் முடியாது... இந்த கம்யூனிகேசன் கேப்லயும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோம்டா கண்ணா... அதனால நிமிசத்துக்கு நிமிசம் போன் பண்ணி கொஞ்சுனாலோ போன் பண்ணலைனு சண்டை போட்டாலோ தான் உண்மையான காதல் இருக்குனு சொல்லுறீயே, அது ஒரு மாயை... அதை மாத்திக்க”

பிரகதீஷோ இன்னும் என் வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

“நீங்க அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணுனவர் தாத்தா... லவ் வித்தியாசமானது... நீங்க சொன்ன எதுவுமே லவ்வுக்குப் பொருந்தாது”

அவன் இவ்வாறு சொன்னதும் கோபமே வராத எனக்கே பொறுமை பறந்துவிட்டது.

“எது லவ் பிரகி? ஒரு சின்ன விசயத்துக்காக காதலிச்ச பொண்ணை எனக்குத் தகுதியானவ இல்லனு சொல்லுறீயே, இதுவா? நானும் மீனாட்சியும் எங்க காதலை வாழ்ந்து காட்டுனவங்கடா, வார்த்தையில காட்டுற இந்தக் காலத்து வித்தை எதுவும் தெரியாதவங்க...

அவ என் மேல வச்சிருக்குற காதல் தான் எனக்காக எங்க வீட்டுல அவளுக்குக் கிடைச்ச கஷ்டமான ஒவ்வொரு அனுபவத்தை முகம் சுளிக்காம தாங்கிக்க வச்சுது... நான் அவ மேல வச்சிருக்குற காதல் தான், கடவுளா நினைச்ச என் அம்மாவ மீறி அவளைத் தனிக்குடித்தனமா இதே வீட்டுக்குக் கொண்டு வர வச்சது... அந்தக் காலத்துல அப்பா அம்மா என்ன பண்ணுனாலும் மகன் எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டான்... ஆனா என் மீனாட்சிக்காக அவ மேல வச்சிருந்த காதலுக்காக எங்கம்மாவோட வசவுல இருந்து அவளைக் காப்பாத்த நான் தனியா அழைச்சிட்டு வந்தேன்டா... வாழ்க்கைத்துணைனு ஒருத்தரை நினைச்சுட்டா அவங்களோட சூழ்நிலைய புரிஞ்சிக்கணும் பிரகி... எப்பவும் நான், எனக்கு, என்னைனு செல்ஃப் செண்டர்டா யோசிக்கக்கூடாது... என் மீனாட்சி என்னைப் புரிஞ்சிக்கிட்டா, நானும் அவளைப் புரிஞ்சிக்கிட்டேன்... அந்தப் புரிதலும் காதலும் தான்டா இத்தனை வருசம் எங்க உறவை பிணைச்சு வச்சிருக்கு”

எனது கோபமான பேச்சில் பிரகதீஷ் வாயடைத்துப் போய்விட்டான். சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. இடையிடையே பேத்திகள் வேறு அங்கே வந்துவிட அந்த அமைதி நீண்டது.

“தாத்தா ரொம்ப நேரம் உக்காந்தே இருந்தா கால்ல வாதநீர் இறங்கி கஷ்டப்படுவீங்களாம்... அதனால கொஞ்சம் எழுந்திருச்சு நடப்பீங்களாம்... ஆச்சியோட டெரர் அண்ட் லவ்வபிள் ஆர்டர்”

உடனே என் பார்வை பிரகதீஷ் பக்கம் சென்று மீண்டது. பார்த்தாயா இது தான் எங்களின் காதல் என்று பார்வையால் கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

பிரகதீஷும் என்னைத் தொடர்ந்தான். அவன் மனதை என் வார்த்தைகள் அசைக்கிறது என்பது முகபாவத்திலேயே தெரிந்தது.

“இங்க பாரு பிரகி, காதலிக்கிறவங்க அல்ப காரணத்துக்காக பிரிய மாட்டாங்க... ஒருத்தர் இன்னொருத்தரோட கனவுக்கும் ஆசைக்கும் தடையா இருக்க மாட்டாங்க... மீனாட்சிக்குச் சங்கீதம் கத்துக்கணும்னு ஆசை... எதேச்சையா ஒரு நாள் அவ பாட்டு பாடுனத கேட்டுட்டு எங்கம்மா அவளை ரொம்ப திட்டிட்டாங்க... ஏன்னா பாட்டு பாடிட்டே சாதத்தை குழைய வச்சிட்டாளாம்... நல்லக் குடும்பப்பொண்ணு பாட்டு பாடுவாளானு சின்ன விசயத்துக்கு அவளை ரொம்பவே காயப்படுத்திட்டாங்க... அப்ப உங்கப்பா அவ வயித்துல இருந்தான்... வாரக்கடைசில வீட்டுக்கு வந்தவனை கூடத்துலயே கட்டிக்கிட்டு அழுதா மீனாட்சி.. அதுக்கும் எங்கம்மாவும் அப்பாவும் திட்டுனாங்க...

வயசுப்பொண்ணுங்க இருக்குற வீட்டுல புருசனை கட்டிப்பிடிச்சுட்டு வெக்கமில்லாம நிப்பியானு என் முன்னாடியே கர்ப்பிணியான மீனாட்சியைத் திட்டுனதும் என்னால தாங்கிக்க முடியல... அதான் கையோட அவளை இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்... அப்ப இருந்து எங்கம்மாவும் அப்பாவும் என் கூட பேசுறதை நிறுத்திட்டாங்க... என் தங்கச்சிங்களுக்குக் கல்யாணம் பண்ணுறப்ப நான் அனுப்புன பணத்தை மட்டும் வாங்கிக்கிட்டாங்க... ஆனா கல்யாணத்துக்கு மீனாட்சி வரக்கூடாதுனு சொன்னதால நானும் போகலை... இதனால என் தங்கச்சிங்களுக்கும் எங்க மேல வருத்தம்... அதுக்கு அப்புறம் எனக்கு மீனாட்சி, மீனாட்சிக்கு நான்னு வாழ ஆரம்பிச்சிட்டோம்” என்றேன் நான் .

பிரகதீஷ் அனைத்தையும் கேட்டுவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். அவன் யோசித்து தெளிவான முடிவுக்கு வரட்டும் என்று மீண்டும் சாய்வுநாற்காலியைச் சரணடைந்தேன் நான்.

கண்ணயர்ந்தவனை என் பெரிய மகளின் பெண் வந்து எழுப்பினாள்.

“சாப்பிட வாங்க தாத்தா... ஆச்சி இஸ் வெயிட்டிங் ஃபார் யூ”

சொன்னதோடு கையோடு இழுத்துச் சென்று கூடத்திற்கு அழைத்தும் சென்றுவிட்டாள் என் பேத்தி.

மகன்கள், மருமகன்கள், பிரகதீஷோடு சேர்ந்து இன்னும் இரண்டு பேரன்கள், பேத்திகள், மகள்கள் என மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க நானும் அங்கே வந்து சேர்ந்தேன்.

உணவோடு அன்பையும் சேர்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் என் மீனாட்சி.

“சாப்பிட உக்காருங்க... உங்களுக்காக தான் தூதுவளை ரசம் செஞ்சிருக்கேன்... ரெண்டு நாளா விடாம இருமுறிங்க”

“நீ ஓடி ஓடி பரிமாறி அப்புறம் மூட்டுவலிய இழுத்து வச்சுக்க போற மீனாட்சி”

“புள்ளைங்களுக்கு என் கையால பரிமாறுனதா சந்தோசம்ங்க”

“அப்ப நானும் அந்தச் சந்தோசத்தை அனுபவிச்சுப் பாக்குறேனே”

பின்னர் என்ன? நாங்கள் இருவரும் பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.

பிறகு நானும் மீனாட்சியும் இலை போட்டு அமர்ந்தோம். மகள்களும் மருமகள்களும் அரட்டை அடித்தபடியே எங்களுக்குப் பரிமாறினர்.

“அந்த மல்லிமொக்கு ஆரத்தை கண்ணுலயே காட்ட மாட்றியேம்மா?” என்று குறைபட்டாள் என் மூத்த மகள்.

மீனாட்சி சாம்பாருடன் துளி நெய்யைக் கலந்து பிசைந்து கொண்டே “அது என் வீட்டுக்காரர் எனக்குனு வாங்கிக் குடுத்ததுடி பாமா... அதான் பத்திரமா பாதுகாத்து வச்சிருக்கேனாக்கும்” என்றாள் கர்வத்துடன்.

இளைய மகளோ “அது சரி... உனக்கு எப்பவும் அப்பாக்கு அப்புறம் தான் நாங்க” என்று விளையாட்டாக கூற

“அதுல என்ன தப்பிருக்குடி ராதா? எனக்கு வாய்ச்ச புருசன் அப்பிடிப்பட்டவரு” என்றாள் பெருமிதமாக என் மீனாட்சி.

அரட்டைக்கு நடுவே மதியவுணவும் முடிந்துவிட பேத்திகள் மீனாட்சியைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டனர்.

“ஆச்சி நீ ஏன் முன்ன மாதிரி பாட்டு பாடுறதில்ல? ப்ளீஸ் ஆச்சி, எங்களுக்காக பாடு”

“தங்கங்களா ஆச்சிக்குப் பழைய பாட்டு தான் தெரியும்”

“பரவால்ல ஆச்சி”

பேத்திகளின் அன்புத்தொல்லைக்காக ‘சிங்காரவேலனே தேவா’ என்று பாட ஆரம்பிக்க பேத்திகளோடு நானும் கண் மூடி ரசிக்க ஆரம்பித்தேன்

இன்னும் குரல் நடுங்கவில்லை அவளுக்கு. பேரன்களுக்கு அதே ஆச்சரியம் தான்.

“ஒரு விசயத்துல நமக்கு ஆர்வம் இருந்தா அதுக்காக சின்ன சின்ன தியாகம் பண்ணணும்டா கண்ணா... என் குரல் நடுங்க கூடாதுனு நானும் சில தியாகம் பண்ணுறேன்” என்றாள் அவள்.

தொடர்ந்து “எனக்குப் பாட்டு கத்துக்கணும்னு ரொம்ப ஆசை... ஆனா எங்க வீட்டுல அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க... கல்யாணத்துக்கு அப்புறம் உங்க தாத்தா தான் என்னை சங்கீதம் கத்துக்க அனுப்பி வச்சார்” என்று பழையகதையை மீண்டும் ஆரம்பித்தாள்.

உடனே இளையமகள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

“ஐயோ மறுபடியுமா? இந்தக் கதைய நீ சொல்லி சொல்லி எனக்குப் போரடிச்சுட்டும்மா”

“அது என்ன கதை சின்னத்தை?” என்று மௌனம் கலைந்தான் பிரகதீஷ்.

அது எங்களின் தனிக்குடித்தனம் ஆரம்பித்த சமயத்தில் நடந்த கதை. மீனாட்சிக்குச் சங்கீதம் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்ததால் செங்கோட்டையில் சங்கீதஞானமுள்ள பெண்மணியிடம் அவள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தேன் நான். இந்த தகவல் எப்படியோ என் பெற்றோரின் காதுக்குப் போய்விட இல்லத்தரசிக்கு சங்கீதம் எதற்கு என வீடு தேடிவந்து வகுப்பெடுத்தனர் இருவரும்.

ஆனால் என் மீனாட்சியின் சின்ன சின்ன ஆசைகளுக்கு மறுப்பு கூற முடியாதென நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டேன் நான். அவர்களுக்கு இது கௌரவப்பிரச்சனையாகி விட தலை முழுகாத குறையாக என்னைத் திட்டிவிட்டுச் சென்றனர்.

இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் வங்கியிலிருந்து பணத்தை இன்னொரு இடத்திற்கு மாற்றும் போது என் பொறுப்பிலிருந்த பதிமூன்றாயிரம் ரூபாய் களவு போனது.

அந்தக் காலத்தில் பதிமூன்றாயிரம் என்பது மிகப்பெரிய தொகை. வங்கியில் அதை நான் கட்டியாக வேண்டிய கட்டாயம். வாடகை வீட்டில் குடியிருக்கும் நான் திடுதிடுப்பென அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே செல்வேன்?

மனம் குமைந்தவனிடம் புகுந்த வீட்டுச் சீராக கொண்டு வந்திருந்த நகைகளை நீட்டியவள் என் மீனாட்சி. அதை விற்று வங்கியில் பணம் கட்டுமாறு பணித்தவளின் நல்ல மனதிற்கு முன்னே சங்கீதவகுப்புக்கு அனுப்பிய நானெல்லாம் எம்மாத்திரம்?

எனக்காக அவள் இழந்த நகைகளை பிற்காலத்தில் எப்படியோ மீட்டுக் கொடுத்துவிட்டேன். மீனாட்சிக்கு புதிய புதிய இடங்களை பார்க்க பிடிக்கும் என்பதால் ஆண்டுக்கொரு முறை பிள்ளைகளோடு சுற்றுலா செல்லவும் ஆரம்பித்தோம்.

இதெல்லாம் எங்கள் இனிய இல்லறத்தின் அழகான தருணங்கள். அதை மீண்டும் பிரகதீஷிடம் சொல்லி முடித்தாள் என் மீனாட்சி.

காதலும் நம்பிக்கையும் பரஸ்பர புரிந்துணர்தலும் கலந்த எங்கள் உறவு எத்தகைய சவால்களைக் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டிருப்பான் என்றே தோன்றியது.

இதற்கு மேல் அவனிடம் எந்த விளக்கமும் கொடுக்கவேண்டியதில்லை என்று மனதிற்கு பட்டது.

இரவில் முற்றத்தில் அமர்ந்து நானும் மீனாட்சியும் பேசிக்கொண்டிருக்கையில் அவளிடம் பிரகதீஷின் காதல் விவகாரத்தை கூறினேன்.

முதலில் திகைத்தாலும் மீனாட்சியும் என்னைப் போலவே பேரனின் காதலி பக்கம் தான். எங்கள் பேச்சுக்கிடையே பிரகதீஷும் அங்கே வந்தான் “ரேஷ்மா உங்க கிட்ட பேசணுமாம் தாத்தா” என்று சொன்னபடியே.

மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்ட நானும் மீனாட்சியும் அப்பெண்ணிடம் உரையாட ஆரம்பித்தோம்.

என் பேரனை ஆழமாக காதலிக்கிறாள் என்பதை கம்மிப் போன குரலில் எங்களுக்கு ஆயிரம் முறை அவள் நன்றி கூறிய போதே தெரிந்தது.

அவள் பேசுவதை அவனும் தான் கேட்கட்டுமே என்று லவுட் ஸ்பீக்கரில் போட்டேன் நான்.

“பிரகிக்கு ஐ.டி ஜாப் தான் ரொம்ப பிடிச்சிருக்கு தாத்தா... ஆனா அந்த ஃபீல்ட்ல ஒரு குறிப்பிட்ட ஏஜுக்கு மேல சஸ்டைன் ஆகி நிக்குறது கஷ்டம்... அந்தச் சமயத்துல அவன் ஃபினான்ஷியலா கஷ்டப்படாம நியூ கன்சர்ன் ஆரம்பிக்கணும்னு நினைச்சா நான் அவனுக்குக் கை குடுக்குற நிலமைல இருக்கணும்... அதுக்கு எனக்கு செக்யூர்ட்டான ஜாப் வேணும்... அதனால தான் தூக்கத்த கூட தியாகம் பண்ணிட்டு படிக்கிறேன் தாத்தா... எனக்கு நிறைய பண்ணணும்னு பிரகிக்கு ஆசை... ஆனா இப்ப சின்ன சின்ன விசயத்துக்காக அவன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசை விரயம் பண்ண எனக்கு இஷ்டமில்ல... இதை அவன் வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டப்ப நான் உடைஞ்சு போயிட்டேன்... ஆனா நீங்களும் பாட்டியும் பேசுனதை கேட்டுட்டு என்னோட காதலை புரிஞ்சிக்கிட்டான் தாத்தா... இதுக்கு உங்களுக்கு எத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னாலும் தகும்”

நெகிழ்ந்து போனோம் நானும் என் மீனாட்சியும். மீனாட்சி தங்களைக் காண கட்டாயம் ஒரு நாள் பிரகதீஷுடன் வரவேண்டுமென அன்புக்கட்டளையிட தேர்வு முடிந்ததும் வருவோமென வாக்களித்தாள் அந்தப் பெண் ரேஷ்மா. இனி அவளும் எங்கள் பேத்தி அல்லவா!

பிரகதீஷின் கண்கள் கலங்கி இருந்தது. யாருடைய காதலில் அவன் சந்தேகம் கொண்டானோ அவளுடைய காதல் யாதெனக் கண்டான் என் பேரன்.

அவனை உறங்குமாறு பணிக்கவும் சென்றுவிட்டான். நானும் மீனாட்சியும் வழக்கம் போல வானத்தைப் பார்த்தபடியே எங்களின் பழைய கதையை மீண்டுமொரு முறை பேச ஆரம்பித்தோம்.

முடிவாக, காதல் என்பது யாதெனில்.... வேண்டாம், நான் சொல்லப்போவதில்லை. நீங்களே அனுபவித்து வாழ்ந்து புரிந்து கொள்ளுங்களேன்! காதலின் விதிகள் பூமி முழுமைக்கும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒத்துப் போவதில்லை. அவை நபருக்கு நபர் மாறுபடும். இது மெய்க்காதல் யாதென தன் மீனாட்சியிடம் கண்டுகொண்ட இந்த சுந்தரேசனின் கூற்று!

********

ஹலோ மக்களே

பிரதிலிபி நடத்துன 'எங்கேயும் காதல்' போட்டிக்கு என்னோட சிறுகதை இது. எப்பவும் யங்ஸ்டர்ஸ் லவ் ஸ்டோரியா எழுதி போரடிக்குதுனு தாத்தா பாட்டி லவ் ஸ்டோரி எழுதுனேன்... அந்தப் பேங்க்ல பணம் திருடு போன சம்பவம் எங்க தாத்தாக்கு நிஜமா நடந்தது... எங்க மம்மி அடிக்கடி சொல்லுற அவங்கப்பாவோட புராணத்துல இதுவும் ஒன்னு... அதை மையமா வச்சு கதையை எழுதுனேன்... 

நன்றி🙏

நித்யா மாரியப்பன்🦋

 

1751201997-WhatsApp-Image-2025-06-29-at-182243_5ebfcf6a.jpg

 

Share your Reaction

Loading spinner
Quote
Topic starter Posted : June 29, 2025 6:29 PM
Kalaiselvi reacted
(@kothai-suresh)
Estimable Member Member

வயசானாலும் இன்னும் இளமையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : June 29, 2025 7:04 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh உண்மை ஆன்ட்டி. அவங்களை எல்லாம் பாத்த பிறகுதான் மேரேஜ், குடும்ப வாழ்க்கை மேல பிடிப்பு வந்துச்சு...

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : June 29, 2025 7:17 PM
 HN5
(@hn5)
Estimable Member Member

Beautiful Love story..... ❤️ ❤️ 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : June 30, 2025 6:11 AM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@hn5 thank you sis

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : June 30, 2025 9:56 AM
HN5 reacted