“இன்னைக்கு எனக்குக் கர்வபங்கம் நடந்த நாள்… சர்வாண்ணா அடிக்கடி முக்கியமான ஃபைலை மறந்துட்டு மில்லுக்குப் போயிவான்… அப்போ அவனை வல்லாரை கீரை சாப்பிடச் சொல்லி அடிக்கடி நான் கிண்டல் பண்ணுவேன்… ஏன்னா என்னோட மெமரி பவர் ரொம்ப கெட்டி… அதுல எனக்கு ரொம்பவே கர்வம்… ஆனா ஷாலியோட அண்ணனை நான் முன்னாடியே பாத்ததை எப்பிடி தான் மறந்தேனோ தெரியல… ஏர்போர்ட்ல என்னைப் பாத்து சிரிச்சப்போ கூட எனக்கு நியாபகம் வரல… சரி விடுங்க, கர்வம்னு ஒன்னு இருந்தா கர்வபங்கம் நடந்தே தீரும்ங்கிறதுக்கு இந்தச் சங்கமித்ராவோட வாழ்க்கை வரலாற்றுல நடந்த இந்தச் சம்பவம் ஒரு சாட்சி”
-க்யூட் கியூபிட்டின் குரல்
கல்லிடைகுறிச்சியில் ராஜேந்திரனின் இல்லம்…
ராஜேந்திரனும் மகேந்திரனும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க அவர்களுக்குச் சமையலறையிலிருந்து ஆவி பறக்க தோசைகளை எடுத்துவந்து பவ்வியத்துடன் பரிமாறினார் மதிவதனி.
மகாலெட்சுமி கணவருக்கு கனமாக தோசைக்கல்லிலும் மைத்துனருக்கு முறுகலாக தவாவிலும் என ஒரே நேரத்தில் தோசைகளைச் சுட்டுக்கொண்டிருந்தார்.
தோட்டத்திலும் வயலிலும் வேலை செய்வதற்கு பணியாட்கள் இருந்தாலும் வீட்டு வேலைகளை மட்டும் வீட்டின் பெண்மணிகள் தான் செய்யவேண்டுமென்பது ராஜேந்திரனின் கொள்கை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மகேந்திரனுடன் இங்கே வரும் தருணங்களில் மதிவதனியும் அந்தக் கொள்கையைக் கடைபிடித்தே பழகிவிட்டார். அத்தோடு அவரது இல்லத்திலும் வீட்டை ஒழுங்குபடுத்துவது, பாத்திரங்கள் கழுவதற்கு மட்டுமே வேலையாளை அமர்த்தியிருந்தவர் சமையலறை சாம்ராஜ்ஜியத்தின் உரிமையை மட்டும் தன்வசமே வைத்துக்கொண்டார். எனவே இங்கே வேலை செய்வதில் அவருக்கு ஒன்றும் சிரமமில்லை.
தமக்கை சுட்டுத் தர தர, எடுத்துவந்து ஆண்களுக்குப் பரிமாறினார் அவர்.
“பிள்ளைங்க என்னைக்கு வர்றாங்க மகேந்திரா? இன்னும் நிச்சயத்துக்கு ஆறு நாள் தானே இருக்கு” என்று கேட்டபடி தோசை விள்ளலை சுவைத்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.
“நாளைக்கு ட்ரெயின்ல கிளம்பிடுவாங்கண்ணா” என அமைதியாகப் பதிலளித்தார் மகேந்திரன்.
“வித்தி என்ன சொல்லுறான்? பையன் வெளிநாடு போயிட்டு வந்ததுல இருந்து ரொம்ப மாறிட்டான் போல… பெரியவங்க பாத்து வச்ச சம்பந்தத்தை அவன் போய் முறிச்சிருக்கானே… நம்ம மண்ணை விட்டுப் போனாலே குணாதிசயமும் மாறிடும் போல” என்று அவர் சொன்ன விதத்தில் வித்யாசாகரின் பெற்றோருக்கு வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.
மகன் செய்த காரியத்தால் தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருப்பது அர்ச்சனா அல்லவா! மகளின் வாட்டம் தந்தையையும் பாதிக்க இப்போது ரக்சனா திருமணம் வேண்டாமென மறுத்ததை அனைவருமே மறந்துவிட வித்யாசாகரின் மறுப்பு தான் பேசுபொருளாகிவிட்டது.
அவனிடம் சம்மதம் கேட்காமல் வெறுமெனே தகவல் மட்டுமே தெரிவித்தது தங்களது தவறு தானே என மதிவதனியும் மகேந்திரனும் நொந்து போயினர். ஏதோ கர்ணன் மற்றும் கதிரவனின் பரந்த மனப்பான்மையும், அவர்களின் தந்தையின் அன்பான குணமும் தான் விருஷாலிக்கான சம்பந்தம் முறியாமல் காத்தது எனலாம்.
ராஜேந்திரனுக்கு அவனது வெளிநாட்டுவாசம் அவனை இன்னும் என்னென்ன துடுக்குத்தனங்கள் செய்யவைக்குமோ என்ற கவலை வேறு! அதைத் தான் இப்போது சொல்லித் தீர்த்துக்கொண்டார்.
சொல்லப் போனால் இதே கவலை மகேந்திரனுக்கும் இருந்தது. மதிவதனிக்கோ மகன் தனக்களித்த வாக்கை ஒதுக்கிவைத்துவிட்டு அவன் இஷ்டத்திற்கு திருமணத்தை நிறுத்துமளவுக்கு அவனது மனதை மாற்றியது எதுவோ எவளோ என்ற குழப்பம்.
இந்தக் குழப்பம் தொடராது நிச்சயதார்த்தத்துக்கான வேலைகளைச் சரியான நேரத்தில் மகாலெட்சுமி நியாபகப்படுத்திவிட்டார். எனவே பேச்சு உறவினர்களை அழைப்பதைப் பற்றியும், நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பற்றியதுமாக மாறிப்போனது.
முக்கியமான உறவினர்களுக்கு ஏற்கெனவே வாட்சப் வழியே தகவல் அனுப்பியாயிற்று. கர்ணனின் குடும்பத்தினர் வந்தால் தங்குவதற்கென அவர்களின் தோட்டத்து வீட்டைச் சுத்தம் செய்து அங்கே பூச்சுவேலைகள் முடிந்துவிட்டது.
இனி உள்ளூரில் இருப்பவர்களை நேரில் சென்று அழைக்கும் வேலை மட்டுமே பாக்கி. நிச்சயத்துக்கான வேலைகளைச் செய்ய அவர்களின் தோப்புகளில் வேலை செய்யும் பணியாட்கள் தயாராக இருந்தனர்.
எனவே நிச்சயதார்த்தப்பெண்ணும் அவளது சகோதரனும் வரவேண்டியது மட்டும் தான் பாக்கி. அவர்களோ சென்னையில் ஃபேர்வெல் டேவுக்குச் செல்வதற்காக பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்தனர்.
வித்யாசாகரோ தனக்கும் நரேனுக்கும் அவர்கள் வேலை செய்யப்போகும் மெர்சிடிஸ் பென்ஸ் தொழிற்சாலை அமைந்திருக்கும் ஹாம்பர்க் நகரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை இணையத்தில் வலை வீசித் தேடிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு ஸ்டெர்ன்சான்சே எனுமிடத்தில் இருந்த டியூப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்று மிகவும் பிடித்துப்போய்விட அது பற்றிய விவரங்களை நரேனுக்கு அனுப்பினான்.
“ஃப்ளாட் ஓகேடா வித்தி… ஆனா காமன் பார்க்கிங் தான் போலயே… ரென்ட்டும் கொஞ்சம் அதிகம்” என நரேன் கொஞ்சம் தயங்கினான்.
“மச்சி ரென்ட்டை பத்தி யோசிக்காதடா… அமெனிட்டிய பாத்தியா? இவ்ளோ வசதியோட ப்ளாண்ட் பக்கத்துல வீடு கிடைச்சதே பெரிய விஷயம்… யோசிக்காம ரியல்டரை கான்டாக்ட் பண்ணிடலாம்” என்றான் வித்யாசாகர்.
அவன் சொன்னதற்கு பிறகு மறுபேச்சு பேசவில்லை நரேன். ஏனெனில் தங்குமிடம் விசயத்தில் தன்னை விட வித்யாசாகர் மிகவும் தெளிவாக யோசிப்பான் என்பது நரேனின் எண்ணம்.
எனவே பேச்சு கல்லிடைகுறிச்சிக்குக் கிளம்புவது குறித்து மாறியது.
“டேய் உன் ஒன்னு விட்ட அத்தை குடும்பத்தை இன்வைட் பண்ணுனீங்களா இல்லையா?” என்று நரேன் தெரியாமல் கேட்டுவிட்டான்.
இவ்வளவு நேரம் இருந்த இலகுபாவம் மாறி வித்யாசாகரின் முகம் சினத்தில் சிவந்து போனது. போனில் பேசியதால் நரேனுக்கு அவன் முகமாற்றம் பிடிபடவில்லை. ஆனால் குரலில் உதித்த பேதத்தைக் கண்டுகொண்டான் அவன்.
“அவங்களை இன்வைட் பண்ணவேண்டாம்னு நான் தான் அம்மா கிட்ட சொன்னேன்… அவங்க ராயல் ஃபேமிலி அந்தஸ்துக்கு எங்க வீட்டுக்கு வந்தா கௌரவம் குறைஞ்சு போயிடுமே… சோ அவங்க வரமாட்டாங்க” அவனது கடித்த பற்களிடையே வார்த்தைகள் அரைபட்டன.
“அப்பிடியே அவங்க வந்தா நானே அந்த அஜயை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுவேன்” என்றான் கோபத்தை அடக்க முயன்ற குரலில்.
“வித்தி இன்னுமாடா அவன் பேசுனதை நியாபகம் வச்சிருக்க?”
“சாகுற வரைக்கும் நியாபகம் வச்சிருப்பேன்டா… என்ன சொன்னான் அவன்? அவன் குடும்பம் பரம்பரை பரம்பரையா வசதிவாய்ப்போட இருந்ததால் நாங்க ஷாலிய அவன் தலையில கட்டிவைக்கப் பாத்தோம்னு எவ்ளோ திமிரா சொன்னான்? அவ்ளோ நாள் மச்சான் மச்சான்னு உரிமையா பேசிட்டுக் கல்யாணப்பேச்சை எடுத்ததும் எவ்ளோ கேவலமா பேசுனான்? ஆப்டர் ஆல் ஐ.டி கம்பெனியில ட்வென்டி ஃபைவ் தவுசண்ட் சேலரிக்கு வேலை பாக்குறவன்லாம் அவனுக்கு மச்சானானு சொல்லி என்னைப் பாத்து கேலியா சிரிச்சான் பாரேன்… அப்பிடியே செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு… ஸ்கூல் காலேஜ்னு எல்லா இடத்துலயும் வித்யாசாகர்னா ஸ்மார்ட்னு பேர் வாங்குன எனக்கு விழுந்த முதல் அடி அது… அவனும் அவனோட பேரண்ட்சும் கல்யாணப்பேச்சை நிறுத்த வேற எதாச்சும் காரணம் சொல்லிருக்கலாம்… ஆனா அவங்க எங்களோட அந்தஸ்தை காட்டி அசிங்கப்படுத்துன விதம் இருக்கே, சுயமரியாதையும் முதுகெலும்பும் உள்ள எந்த ஆம்பிளையும் அதை மறக்கமாட்டான்டா” என்று உறுமித் தீர்த்தவனுக்குள் இப்போதும் அப்போதைய கோபத்தின் சூடு ஆறாமல் இருந்தது நரேனுக்கே வியப்பு.
“கூல் மச்சி! இன்னும் நீ அதை நியாபகம் வச்சிருப்பேனு தெரிஞ்சிருந்தா நான் அவனைப் பத்தி கேட்டிருக்கவே மாட்டேன்டா… சாரி” என்று சொல்லி நண்பனைச் சாந்தப்படுத்த முயன்றான்.
“ம்ம்” என்று மட்டும் முணுமுணுத்துவிட்டு வித்யாசாகர் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
எல்லாம் நடந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனால் தான் அஜயின் தாயாரும் அஜயும் உதிர்த்த வார்த்தைகளை மறக்க முடியவில்லை.
மிகவும் ஜாலியான மனிதன் என கணிக்கப்பட்ட அவனுக்குத் தனது சுயமரியாதையைச் சீண்டியவர்களை மட்டும் மன்னிக்கும் வழக்கமில்லை. அத்தோடு தனது குடும்பத்தினரை அவமதித்தவர்களுடன் எந்த ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ள அவன் விரும்பவும் மாட்டான்.
அவர்கள் வாழும் இந்த உயர்நடுத்தர வாழ்க்கையே அவனுக்குச் சொர்க்கம். எனவே மேல்தட்டினருடன் பழகினாலும் உரிமை எடுத்துக்கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போலவே நடந்துகொள்வான்.
இத்தனை நாட்கள் மறந்திருந்தவனை நரேனின் பேச்சு அந்தச் சம்பவத்துக்குள் மீண்டும் இழுத்துவிடவே இவ்வளவு நேரம் இருந்த இனிய மனநிலை மாறிப்போனதாய் அவனுக்குள் ஒரு பிரமை!
ஆனால் வெகுசீக்கிரத்தில் அந்தப் பிரமையைக் கலைத்தெறிந்தது அவன் முன்னே வந்து நின்ற சங்கமித்ராவின் எழில் கோலம்.
ஃபேர்வெல்லுக்குச் செல்ல தயாராகி வந்தவள் கறுப்புவண்ண லினன் புடவையில் காதில் ஆக்சிடைஸ்ட் ஆப்கன் சந்த்பலி வளையங்கள் மின்ன புடவையை இடக்கரத்தில் ஏந்தி நின்ற தோற்றத்தில் கண் இமைக்க மறந்து போனான் வித்யாசாகர்.
அவன் வைத்த கண் அகற்றாது நோட்டமிட்டதில் சங்கமித்ரா புருவம் சுருக்கியவள் “ஆரம்பிச்சிட்டானா!” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

சிலையாய் நின்றவனின் முன்னே கைகளை ஆட்டியவள் “ஹலோ இந்த உலகத்துல தானே இருக்க?” என வினவ அவன் கவனம் கலைந்து மெல்லிதாக நகைத்தான். கூடவே தனது பின்னந்தலையில் தட்டிக்கொண்டபடி ஒற்றைக்கண்ணை மூடி நாக்கை கடித்த மேனரிசம் சங்கமித்ராவின் இதழிலும் புன்னகையை மலர வைத்தது.
“சார் எங்க கிளம்புறதுக்குத் தயாரா நிக்கிறீங்க?” கன்னம் குழிய தலை சரித்து கேலியாய் கேட்டாள்.
“நானும் உங்களோட ஃபேர்வெல் டே ஃபங்சனுக்கு வர்றேன்” என்று அவன் சொல்லவும் அவள் திகைத்தாள்.
இவன் எதற்கு அங்கே வருகிறான்? மனதில் நினைத்தது கேள்வியாகவும் வெளியே வந்துவிட்டது.
“ஏன் நான் வந்தா உன்னோட பாய் ஃப்ரெண்ட் கோச்சுப்பானா?” என அவனும் அவளைப் போலவே தலையைச் சரித்து வினவ சங்கமித்ரா குழம்பிப்போனாள்.
“பாய் ஃப்ரெண்டா? யார் அது?”
“நேத்து கூட கால் பண்ணுனானே! உன்னோட ஆது” என்று ‘ஆது’வில் அவன் வைத்த அழுத்தத்தில் சங்கமித்ராவின் கண்களில் லாவா குழம்பு பொங்க ஆரம்பித்தது.
கடுப்புடன் “யாரு? அவன் என்னோட பாய் ஃப்ரெண்டா?” என்று மூக்கைச் சுருக்கி அவன் கேட்ட விதத்தில் அப்படி இல்லையடா மடையா என்று சொல்வது போல இருந்தது வித்யாசாகருக்கு.
இருந்தாலும் அவளைச் சீண்டுவதற்காக “ஆமா! இல்லாமலா உனக்கு கியூபிட்னு கியூட்டா நிக்நேம் வச்சிருக்கான்? ஃபேர்வெல் டே முடிஞ்சு உனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வேற வச்சிருக்கானாம்… டேட்டிங்கா? சாதாரண டேட்டிங்கா இல்ல…” என அவன் ராகம் பாடவும் சங்கமித்ரா கடுப்பின் உச்சக்கட்டத்துக்குச் சென்றவள் வித்யாசாகரை பட்பட்டென அடிக்கத் தொடங்கினாள்.
“அவன் என் பாய் ஃப்ரெண்டே இல்லங்கிறேன்… நீ டேட்டிங்கானு கிண்டல் வேற பண்ணுறீயா? சரியான டர்ட்டி மைண்ட்… ஈவில் மைண்ட்… டெவில் டெவில்” என்று கடுப்புடன் அடித்தவளைச் சிரித்தபடி சமாளித்தான் அவன்.
“பாத்தியா உனக்குக் கோவம் வந்துடுச்சு… பாய் ஃப்ரெண்டை விட்டுக்குடுக்காத பொண்ணு” என்று சொன்னபடியே அவளது கரங்கள் இரண்டையும் அவனது கரங்களால் சிறைபிடித்த பிறகு தான் சங்கமித்ரா அடிப்பதை நிறுத்தினாள்.
அவனது கரங்களை வேகமாக உதறியவள் சுற்றும் முற்றும் தேட “என்ன தேடுற பப்ளிமாஸ்?” என்று குறும்பாக வினவியவனை வெட்டுவது போல முறைத்தவள்
“உன் மண்டைய உடைக்கிறதுக்கு வெப்பன் எதாச்சும் சிக்குதானு தேடுறேன்” என்று தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தாள்.
அவளின் கெட்டநேரமோ அல்லது வித்யாசாகரின் நல்லநேரமோ ரேஷ்மாவும் விருஷாலியும் தயாராகி வந்துவிட சங்கமித்ராவின் தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அவர்கள் மூவரிடமும் “போலாமா?” என்று கேட்டவன் மூவரின் ஆராய்ச்சிப் பார்வையை உணர்ந்து “உங்கள காலேஜ்ல டிராப் பண்ணீட்டு கிளம்பிடுவேன் தெய்வங்களே” என்று சொன்னபடி காரை நோக்கி சென்றான்.
அவனைப் பின் தொடர்ந்த சங்கமித்ராவோ “சாரை சைட் அடிக்கவிடலனு கோவம் போல” என்றாள் நமட்டுச்சிரிப்புடன்.
வித்யாசாகர் தலையாட்டி மறுத்தபடி அவளுக்கு முன்பக்க கதவை திறந்துவிட்டவன் “சைட் அடிக்கிறதுல கூட நான் நியாயமா நடந்துப்பேன்மா… ஒரு நேரத்துல ஒரு பொண்ணை தான் சைட் அடிப்பேனாக்கும்” என்றான் அமர்த்தலாக.
அவள் உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு அமர மற்ற இருவரும் இவர்களின் உரையாடலை கேட்டபடி பின்னிருக்கைகளில் அமர்ந்துகொண்டனர்.
வித்யாசாகர் காரினுள் அமர்ந்தவன் “அந்த ஒரு பொண்ணு யாருனு கேக்கலயே?” என்று கேட்டு புருவம் உயர்த்தியபடி காரைக் கிளப்பினான்.
மற்ற இருவருக்கும் அது கேட்காது போய்விட சங்கமித்ரா குறுகுறுப்புடன் யாரென்று கேட்டுவைத்தாள்.
அவனோ “வேற யாரு? நீ தான்” என்று வழக்கம் போல கண்சிமிட்டிச் சொல்லவும் சங்கமித்ரா பட்டென்று அவனது புஜத்தில் அடித்தவள் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
சொன்னபடி அவர்களை கல்லூரியில் விட்டவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பவும் ரேஷ்மா வித்யாசாகரைப் பற்றி சிலாகித்ததில் சங்கமித்ராவின் செவிகள் இரண்டும் வீங்கிப்போய்விட்டது.
ஆனால் முகம்கொள்ளா புன்னகையுடன் தமையனைப் பற்றிய புகழ்மாலையைக் கேட்டபடி நடந்த விருஷாலிக்காக வாயை மூடிக்கொண்டாள்.
ஃபேர்வெல் டே கொண்டாட்டத்தில் அனைவருடன் சேர்ந்து கொட்டமடித்த போதும் குரூப் செல்பி எடுத்தபோதும் ஒன்றும் தோணவில்லை. ஆனால் இந்தக் கொண்டாட்டம் எல்லாம் மீண்டும் தங்கள் வாழ்வில் வரப்போவதில்லை என்பதை உணர்ந்த கணத்தில் அனைவருக்கும் மனச்சோர்வு உண்டானது.
இந்த உற்சாகம், துள்ளல் எல்லாம் மாணவப்பருவத்திற்கே உரித்தான குணங்கள். அந்தப் பருவத்தைத் தாண்டி என்றைக்கு வெளியுலகத்தில் அனுபவப்பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறோமோ அந்தக் கணம் முதலே இக்குணங்கள் பெரும்பாலோரை விட்டு நீங்கிவிடும். நம்மில் முக்கால்வாசி பேர் உற்சாகமாக துள்ளலாக இருப்பது போல காட்டிக்கொள்கிறோமேயன்றி உண்மையாக நம்மால் நூறு சதவிகிதம் அந்தப் பருவத்தின் குணங்களை மீட்டெடுக்க இயலாது.
அதை யோசித்து அனைவரும் காற்றை இழந்த பலூனை போல சோர்ந்த முகத்துடன் இருக்கும் போதே இறுதியாண்டு வகுப்பு தலைவனுடன் வந்து சேர்ந்தனர் அவனது நண்பர்கள்.
அதில் ஆதேஷும் அடக்கம். அவன் சங்கமித்ராவைப் பார்த்து புன்னகைக்க அனாமிகாவும் சேர்ந்து சிரிக்கவும் சங்கமித்ரா குழம்பிப்போனாள்.
“மறுபடியும் எதுவும் சண்டையா?” என தனது தோழியரிடம் முணுமுணுக்க ஆரம்பித்தாள் அவள். ஆனால் வகுப்புத்தலைவன் தாங்கள் அனைவரும் ஹோட்டல் ராயல் கிராண்டேவுக்குச் செல்லவிருப்பதையும் அங்கே ஃபேர்வெல் பார்ட்டி நடக்கவிருப்பதையும் சொல்லவும் அனைவருக்கும் போன உற்சாகம் திரும்பிவந்துவிட்டது.
ஆதேஷ் வேகமாக சங்கமித்ராவிடம் வந்தவன் “கியூபிட் என் சர்ப்ரைஸை பாக்க தயாரா இருக்கியா?” என்று கண்கள் மிளிர கேட்க
“அடேய்! நான் ரெடியா தான் இருக்கேன்… நீ ஏன் இசைமழையில் நனைய தயாரா ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குற?” என்று கலாய்த்தவள்
“எது எப்பிடியோ ராயல் கிராண்டேவோட பார்ட்டி ஹால்ல இன்னைக்கு ஒரு மினி ஃபேஷன் பரேட் நடக்கும் போல” என தனது சகமாணவிகளைக் கலாய்த்தபடி தோழியருடன் கிளம்பினாள் சங்கமித்ரா.
அதே நேரம் ஹோட்டல் ராயல் கிராண்டேவின் லாபியில் ரிசப்சனிஸ்டிடம் கல்லூரி மாணவர்களின் ஃபேர்வெல் பார்ட்டி எங்கே நடக்கிறது என்று விசாரித்துக்கொண்டிருந்தான்.
“நீங்க ஸ்டூடண்டா?” என்று கேட்ட ரிசப்சனிஸ்டுக்கு இல்லையென்ற தலையசைப்புடன் “நோ… நான் புரொபசர்” என்று புன்னகையுடன் பதிலளித்தான் அவன்.
மாணவர்களின் கொண்டாட்டத்தில் பேராசிரியருக்கு என்ன வேலை என குழம்பினாலும் அவனிடம் பார்ட்டி ஹால் இருக்குமிடத்தை தெரிவித்தார் ரிசப்சனிஸ்ட்.
தனது டெனிம் மேல்சட்டையை இழுத்துவிட்டபடி பார்ட்டி ஹாலை நோக்கி நடைபோட்டவனின் மனமெங்கும் அவனது பப்ளிமாசுக்கு அப்படி என்ன சர்ப்ரைஸ் வைத்திருப்பான் அந்த ஆது என்ற கேள்வி தான்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

