“காதல் தான் எவ்ளோ வினோதமானது… அதை வார்த்தையால சொல்ல முடியாது… கொளுத்துற வெயிலுக்குச் சில்லுனு ஐஸ் க்ரீம் சாப்பிடுறப்போ உள்ளுக்குள்ள ஒரு ஃபீல் வரும் பாருங்க… அந்த ஃபீலை உங்களால வார்த்தையால விவரிக்க முடியுமா? சோம்பிக் கிடக்குற நேரத்துல திடீர்னு வர்ற சூடான ஃபில்டர் காபியோட வாசனை நாசில நுழையுறப்போ உண்டாகுமே ஒரு ஃபீல் அப்பிடி ஒரு ஃப்ரெஷ்ஷான ஃபீலை குடுக்கும் இந்தப் பைத்தியக்காரக் காதல்… என்னடா ஐஸ் கிரீம் ஃபில்டர் காபினு ஒன்னுக்கொன்னு சம்பந்தமில்லாம பேசுறானேனு யோசிக்கிறீங்களா? அதான் சொல்லிட்டேனே! பைத்தியக்காரக் காதல்னு… அது வந்ததுக்கு அப்புறம் நான் தெளிவா பேசுனா தான் தப்பு”
-ஸ்வீட் டெவிலின் குரல்
கர்ணன் புதுடெல்லியின் பிரபல நட்சத்திர ஹோட்டல் அறையிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நைட் கிளப்பை அடைந்த நேரத்தில் தான் அவனது அன்னை அவனை மொபைலில் அழைத்தார்.
அழைத்தவர் வித்யாசாகர் வந்தது, அவனது மறுப்பு, ரக்சனாவின் குதூகலம் என அனைத்தையும் மறைக்காமல் சொல்லிவிட்டு “இப்போ என்ன செய்யலாம் கர்ணா?” என வினவ அவனுக்குமே திகைப்பு தான்.
ரக்சனாவுக்குத் திருமணத்தில் நாட்டமில்லை என்பதை அவனுமே வழக்கம் போல பெண்களுக்கு வரும் திருமணம் குறித்த தயக்கம் என்றே எண்ணியிருந்தான். அவளும் தன்னைப் போலவே அவளுக்கென ஒரு இலட்சியத்தை வைத்திருந்தாள் என்ற கோணத்தில் கிஞ்சித்தும் யோசிக்கவில்லை அவன்.
இப்போது கேள்விப்பட்ட போது நல்லவேளை அவளின் இலட்சியம் பாழாகும்படி எதுவும் நடந்துவிடவில்லை என்ற நிம்மதி தான் பிறந்தது அவனுக்குள். ஆனால் அவனது அன்னை எதிர்பார்த்தது அதுவல்லவே! தனது மகளை வேண்டாமென மறுத்தவனின் தங்கையைத் தனது மைந்தன் மணமுடிப்பதில் அந்தப் பெண்மணிக்கு இப்போது விருப்பமில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தனது பேச்சை மூத்த மகனும் கணவரும் கறிவேப்பிலை போல ஒதுக்கிவிடுவர் என்பது நன்கு தெரிந்ததால் இளையமகனைத் தூண்டிவிட அழைத்தவர் அவனும் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டபடி ரக்சனாவின் ஐ.ஐ.டி கனவுகளைப் பற்றி பேசவும் ஏமாற்றம் சூழ வாயடைத்துப் போனார்.
குரலில் சுரத்தின்றி பேசியவரின் மனதை அறிந்த கர்ணனோ “ரக்சனாவுக்கே விருப்பமில்லனு தெரிஞ்சதும் இனியும் ஏன்மா பழசை நினைக்கணும்? எனக்கு ஷாலிய பிடிச்சிருக்கு… உங்களுக்கு மருமகன் வரலனா என்ன? அதான் தங்கம் போல மருமகள் வரப்போறாளே” என்று கேலி போல பேசி அவரை சமாதானம் செய்ய முயன்றான்.
அந்த முயற்சியின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் என்றாலும் மகனுக்காக வாய் மூடி மௌனியானார் அப்பெண்மணி.
அதன் பின்னர் அவன் போனில் அழைத்தது விருஷாலியைத் தான். என் தங்கையை உன் அண்ணன் வேண்டாமென்றான் என எடுத்ததும் குற்றம் சாட்டாது பொறுமையுடன் நடந்ததை விளக்கினான் கர்ணன். ஏனெனில் ஏற்பாட்டுத்திருமணமே என்றாலும் விருஷாலி அவனது இதய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியாகி ஆளத் தொடங்கியிருந்தாளே!
அவளை வருத்தப்பட வைக்கும் எண்ணமோ அவளது குடும்பத்தினரை குற்றம் சாட்டும் எண்ணமோ அவனுக்கு இல்லை. ஆனால் விருஷாலி தான் பதறிப் போய்விட்டாள். இன்னும் ஏழே நாட்களில் நிச்சயம், முப்பதே நாட்களில் திருமணம் என்பதால் மனதிலேயே கர்ணனுடன் வாழ ஆரம்பித்திருந்தாள் அவள்.
எங்கே வித்யாசாகரின் இச்செய்கையால் தனது ஆசைகளும் கனவுகளும் கலைந்துவிடுமோ என்ற பயம் அவளது கண்ணீர் சுரப்பிகளை செயல்பட வைத்தது. அர்ச்சனா சொன்ன வரையில் கர்ணன், கதிரவன், ரக்சனா மற்றும் அவர்களின் தந்தை என அனைவரும் அடுத்தவரின் மனதை வருந்தவைக்கும் எண்ணமற்றவர்கள். ஆனால் இந்த மூவரின் தாயார் அப்படிப்பட்டவரில்லை. தமையனின் மறுப்பின் காரணமாக எங்கே அவருக்குத் தன் மீது பிடித்தமின்மை உண்டாகிவிடுமோ என மனதளவில் கலங்கிப்போனாள் விருஷாலி.
இருப்பினும் கர்ணன் வித்யாசாகரின் செயலைத் தவறாக கருதவில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதல். அவனிடம் வழக்கம் போல உரையாடியவள் இரவுவணக்கத்துடன் அழைப்பை பேசி முடித்த தருணத்தில் தான் வித்யாசாகர் நரேந்திரனுக்குக் கையசைப்பது அவளது கண்ணில் பட்டது.
வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க முயன்றவன் தங்கை மாடிப்படியில் நின்று அழைத்ததும் யூடர்ன் அடித்து அவளை நோக்கி சென்றான்.
“என்னாச்சு ஷாலி? இங்க என்ன பண்ணுற? சரி அதை விடு… இன்னைக்கு நைட் பட்டர் சிக்கன் ரைஸ் பௌல் ஸ்விகில ஆர்டர் பண்ணப்போறேன்… உன் ஃப்ரெண்ட் மித்து வெஜிடேரியனு சொன்னேல்ல… அவளுக்கு ராஜ்மா ரைஸ் பௌலா, இல்ல தம் ஆலு ரைஸ் பௌலா?” என கர்மசிரத்தையுடன் தங்கையிடம் விசாரித்தபடி மாடிவராண்டாவை அடைந்தான்.
விருஷாலியோ அதைக் காது கொடுத்தும் கேளாது ஏன் ரக்சனாவை மணக்க மறுத்தாய் என வினவ “மறுபடியும் முதல்ல இருந்தா?” என சலித்துக்கொண்டவன் தங்கையிடம் விளக்க ஆரம்பித்தான்.
“இந்தச் சம்பந்தத்தை பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி எனக்குப் பிடிச்சிருக்கா பிடிக்கலயானு யாராச்சும் ஒரு வார்த்தை கேட்டீங்களா ஷாலி? நீ கூட கேக்கலயே!” என அங்கலாய்த்து தங்கையை அதிர வைத்தான் வித்யாசாகர்.
அண்ணனின் விருப்பமின்றியா அன்னை பேசிமுடித்திருப்பார் என்று அசட்டையாக இருந்தது தவறோ என இப்போது சிந்தித்தாள் அவள். காலம் கடந்த ஞானம்!
இருப்பினும் “ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட நீ கர்ணாவோட சிஸ்டரை மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்னியேண்ணா?” என்றாள் விருஷாலி கண்கள் கலங்க ஆதங்கம் நிரம்பிய குரலில்.
“ஆமா சொன்னேன்… ஆனா இப்போ நானே சொல்லுறேன் அவளை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது… என்கேஜ்மெண்ட் நடக்கும்… உனக்கும் கர்ணாவுக்கும் மட்டும் நடக்கும்… நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்… அவளைத் தான் நான் மேரேஜ் பண்ணிப்பேன்” என்றான் வித்யாசாகர் தோளை அசட்டையாகக் குலுக்கியபடி.
அவனது கடைசி வார்த்தையில் அதிர்ந்த விருஷாலி “என்னது? லவ் பண்ணுறியா? இது எப்போ? டேய் அண்ணா! எப்போவும் போல இப்போவும் நீ விளையாட்டுக்குத் தானே சொல்லுற?” என்று பரிதாபமாகக் கண்ணீர் மல்க கேட்கவும் இல்லவே இல்லையென தலையைப் பலமாக ஆட்டி மறுத்தான் வித்யாசாகர்.
“நான் அந்த ரக்சனாவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்… ஏன்னா நான் என்னோட அமுல் பேபிய ரொம்ப்ப்ப லவ் பண்ணுறேன்… அதுவும் மூனு வருசமா… இது உன் மேல சத்தியம்” என தங்கையின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தவன்
“போய் குட்கேர்ளா கர்ணா கூட கனவுல டூயட் பாடு… நானும் என் அமுல்பேபி கூட டூயட் பாட போறேன்… குட் நைட் ஷாலி” என்று அவளின் சிகையைக் கலைத்துவிட்டு உற்சாகமாகக் கிளம்பினான்.
செல்லும் போதே எப்போதும் போல பாட்டும், அதற்கேற்ப கூட யாரோ ஆடுவது போல கற்பனையாக சில நடன அசைவுகளையும் கொடுத்துக் கொண்டே செல்ல அவனது தங்கை தமையனின் செய்கையில் வாயைப் பிளந்தபடி நின்றாள்.
ஆனால் அதை கவனியாத வித்யாசாகரோ தனது அமுல்பேபியே தன்னுடன் ஆடுவது போன்ற பிரமையுடன் புன்னகை மலர பாடல் வரிகளைச் சத்தமாகப் பாடியபடி நடந்தான்.
“ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி”
அவன் கையை விரித்துப் பாடிவிட்டு அந்த வராண்டாவிலிருந்து வெளியே தெரிந்த வானைப் பார்த்த போது விருஷாலியைக் காண மாடிவராண்டாவுக்கு வந்த சங்கமித்ரா திடீரென அவன் முன்னே பிரசன்னமானாள்.
கற்பனையில் யாருடன் டூயட் பாடினானோ அவளே கண் முன் வந்து நின்ற குதூகலத்தில் வித்யாசாகர் நிற்க அதே நேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பியதிலிருந்து தன்னிடம் வம்பு வளர்க்கும் தோழியின் அண்ணன் இப்படி வினோதமாகப் பாடுவதைக் கண்டு தனது முட்டைக்கண்களை உருட்டியபடி நின்றாள் அவனது அமுல் பேபி எனப்படும் சங்கமித்ரா.
வித்யாசாகர் அவளைக் கண்டதும் மீண்டும் டூயட் பாட ஆரம்பிக்க அவளோ போன் பேசிவிட்டு வருகிறேன் என்று சென்ற தோழியின் முகம் ஏன் கலங்கியிருக்கிறது என்ற கேள்வியைக் கண்ணாலேயே கேட்டபடி அவனைக் கடந்து சென்றாள்.
வித்யாசாகரோ கலங்கிப் போய் நின்ற தங்கையைக் கண்டதும் சங்கமித்ராவின் குற்றம் சாட்டும் பார்வை தன்னைத் தீண்டுவதை உணர்ந்து திருதிருவென விழிக்க ஆரம்பித்தான்.
“என்னாச்சு ஷாலி? ஏன் உன் முகமே சரியில்ல?”
சங்கமித்ரா கேட்டதும் விருஷாலி தனது தமையனை ஏறிட்டவள் ஆதங்கத்தை தாங்க இயலாதவளாக தோழியிடம் அண்ணனின் திருவிளையாடலை சொல்லியேவிட்டாள்.
“வாட்? இன்னும் ஏழு நாள்ல என்கேஜ்மெண்டை வச்சிக்கிட்டு மேரேஜை வேண்டானுட்டாரா? ஏன்?” சங்கமித்ரா அதிர
“ஏன்டி என்னை கேக்குற? அதோ நிக்கிறானே அவனைக் கேளு” என்றாள் விருஷாலி.
இப்போது சங்கமித்ராவின் பார்வை வித்யாசாகரிடம் இடம்பெயர அவனோ “நான் போய் நம்ம எல்லாருக்கும் ஸ்விகில ரைஸ் பௌல் ஆர்டர் பண்ணீட்டு வர்றேன்… இன்னைக்கு நைட் என்னோட ட்ரீட்” என்று குதூகலத்துடன் கண்சிமிட்டிவிட்டு அகன்றான்.
அவனது பேச்சில் திகைத்த சங்கமித்ரா என்னடி இது என்ற ரீதியில் பார்த்துவைக்க விருஷாலி தனது தமையன் யாரோ ஒரு அமுல்பேபியைக் காதலிப்பதாகக் கூறிவிட்டுக் கண்கள் கலங்க பொருமலுடன் நின்றாள்.
“கர்ணா இதை தப்பா எடுத்துக்கலடி… ஆனா ஆன்ட்டியும் அங்கிளும் என்ன நினைப்பாங்களோனு உள்ளுக்குள்ள உதைப்பா இருக்கு மித்து… அவங்க பொண்ணு மனசு கஷ்டப்படுறதை பாத்துட்டு என்னை மேரேஜுக்கு அப்புறம் மோசமா ட்ரீட் பண்ணுனா நான் என்னடி பண்ணுவேன்?”
அவளது கவலை தோய்ந்த குரல் சங்கமித்ராவுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால் திருமணச்செய்தியையே ஆனந்த அதிர்ச்சியாகக் கொடுத்தால் இக்கால இளைஞன் எவனும் இவ்வாறு தானே முடிவெடுப்பான் என்று எண்ணியபடி அதையே சொல்லி தோழியையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
“நீங்க எல்லாரும் உன் ப்ரோ கிட்ட கேட்டுட்டு முடிவெடுத்திருக்கணும்… முடிவெடுத்துட்டு உனக்குச் சம்மதமானு கேக்குறது என்னடி நியாயம்? நீயும் கொஞ்சம் நிதானமா யோசியேன்… கர்ணா ப்ரோக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும்… அவரோட சிஸ்டருக்கும் மேரேஜ்ல நாட்டமில்லங்கிற… அப்புறம் ஏன் உன்னோட இன் லாஸ் உன்னைய கஷ்டப்படுத்துவாங்கனு நீயே முடிவு பண்ணுற? யார் என்ன சொன்னாலும் கர்ணா ப்ரோ உன் பக்கம் இருப்பார் ஷாலி… நீ இப்போ பண்ண வேண்டியது எல்லாமே நாளைக்கு நடக்கப்போற ஃபேர்வெல்லுக்கான காஸ்டியூமை செலக்ட் பண்ணுறது தான்… வா” என்று சொல்லுகிற விதத்தில் சொல்லி அவளைச் சமாதானம் செய்து அழைத்துப்போனாள்.
வித்யாசாகரின் ட்ரீட்டான ரைஸ் பௌல் வந்துவிட நால்வரும் அதைக் காலி செய்துவிட்டு அவரவர் அறைக்குள் முடங்கிப் போயினர்.
சங்கமித்ராவுக்கோ திருமணத்தை நிறுத்திய தயக்கம் கிஞ்சித்துமின்றி ஒரு பருக்கை கூட மிச்சமின்றி ரைஸ் பௌலை காலி செய்த வித்யாசாகரை பற்றி யோசிக்கும் போது வினோதமாக இருந்தது.
தங்கையின் கலக்கம், தமக்கையின் எதிர்காலம் இவையனைத்தையும் விட அப்படி என்ன அந்தக் காதல் அவ்வளவு முக்கியம்? எது எப்படியோ அந்த அமுல்பேபியும் இவனைப் போல வினோத ஜீவராசியாகத் தான் இருப்பாள் என்ற முடிவுக்கு வந்தவள் நித்ராதேவியுடன் கைகோர்த்து உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
மறுநாள் விடியும் போதே மூவரும் மாலை அணியவேண்டிய உடைகள், அணிகலன்களை எடுத்துவைத்தனர். வித்யாசாகர் மூன்று பெண்களிடமும் “நாளைக்கு ஈவினிங் ட்ரெய்ன் ஏறணும்… அதை மறந்துடாதீங்க” என அமர்த்தலாக மொழிந்துவிட்டுப் போனை பார்ப்பது போல பாவனை செய்தபடி சங்கமித்ராவை இரகசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதை அவள் கவனிக்கவில்லை என்றேல்லாம் சொல்ல முடியாது. ஆனால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்படி இருப்பினும் அவன் இன்னொருத்தியின் காதலன் தானே என்ற அலட்சியம்.
அவன் அமர்ந்திருந்த சோபாவில் அருகில் கிடந்த டீபாய் மீது தனது மொபைலை வைத்துவிட்டு மாலை தான் உடுத்தவிருக்கும் கருப்பு நிற லினன் சேலையையும் அதற்கு அணியப்போகும் கருப்பில் இளஞ்சிவப்பும் ஆரஞ்சுமாய் கலம்காரி வேலை செய்த ப்ளவுசையும் தோழிகளிடம் காட்டிக்கொண்டிருந்தாள் சங்கமித்ரா.
அவளது மொபைல் சைலண்டில் கிடக்க அதில் அழைப்பு வருவதை அதன் தொடுதிரை ஒளிர்ந்து வித்யாசாகருக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது.
திரையில் ‘ஆது’ என்று பெயர்ச்சுருக்கம் வரவும் வித்யாசாகரின் மூளையில் அந்த ஆது ஆணா, பெண்ணா, அவர்களுக்குள் என்ன உறவு என்ற வினாக்கள் எழுந்தது.
ஆனால் அவனது மனசாட்சியோ “அடேய் வித்தி அப்புறமா ஹெர்குல் பொய்ரெட் அவதாரம் எடுடா… இது துப்பறியுறதுக்கான நேரமில்ல” என்று இடித்துரைக்க அவனுக்கும் சங்கமித்ரா அமர்ந்திருப்பது சில அடிகள் இடைவெளியில் தான் என்பது மண்டையில் உறைத்தது.
எப்படி செல்பேசியில் அழைப்பவன் யாரென கண்டுபிடிப்பது? ஏன் இவ்வளவு சிரமப்பட்டு யோசித்து குழம்ப வேண்டும்? எடுத்துப் பேசினால் தெரிந்துவிடப்போகிறது.
மூவரும் தன்னைக் கவனிக்கிறார்களா என பார்த்துவிட்டு மெதுவாக சங்கமித்ராவின் மொபைலை எடுத்துக்கொண்டவன் தனது மொபைலை டீபாய் மீது வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்தான்.
மெதுவாக மாடிவராண்டாவுக்கு வந்தவன் அழைப்பை ஏற்ற அடுத்த நொடியே “மித்து நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குடி” என்று மின்னல்வேகத்தில் பேச ஆரம்பித்தான் ஆதேஷ்.
வித்யாசாகர் எடுத்ததும் கேட்ட ஆண்குரலில் திகைத்துப் போனவன் அந்த முகம் தெரியாதவன் சங்கமித்ராவை ‘டி’ போட்டுப் பேசியதில் உணர்ச்சிக்கொந்தளிப்பின் உச்சாணிக்கொம்புக்கே சென்றுவிட்டான்.
சூடாக அவனுக்குப் பதிலளிக்கும் முன்னரே மறுமுனையில் “ஈவினிங் ஃபேர்வெல் டே செலிப்ரேசன் முடிஞ்சதும் நம்ம செகண்ட் எம்.காம் மட்டும் ஹோட்டல் ராயல் கிராண்டேக்குப் போறோம்… என்ஜாய் பண்ணுறோம்… உனக்கு அங்க தான் நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் கியூபிட்” என்றான் ஆதேஷ் உற்சாகம் பொங்கி வழியும் குரலில்.
முதலில் ‘டி’ போட்டு அழைத்தான், இப்போது ‘கியூபிட்’ என்று செல்லப்பெயர் வேறா? யாரடா நீ சிறுவா என்ற ரீதியில் வித்யாசாகர் கடுப்புற்று ஆதேஷைத் திட்ட முயன்ற நேரம் “ஹலோ என் மொபைலை வச்சுக்கிட்டு என்ன பண்ணுற?” என்று அதட்டலுடன் அவன் பின்னே இருந்து ஒலித்தது சங்கமித்ராவின் குரல்.
அந்தக் குரலில் வித்யாசாகருக்குள் பொங்கிய கோபம் சட்டென்று தணிந்தது. இப்போது இவளைச் சமாளிக்கவேண்டுமே!
அசட்டுச்சிரிப்புடன் அவள் புறம் திரும்பியவன் வருவித்துக்கொண்ட ஆச்சரியத்துடன் “அச்சோ! உன்னோட போனா? ஐ அம் சோ சாரி… நான் என் போன்னு நினைச்சு எடுத்துட்டு வந்துட்டேன் பப்… மித்து” என்று சொல்லவே சங்கமித்ரா ஒற்றை புருவத்தை தூக்கியபடி அவனிடமிருந்து போனை வாங்கிக்கொண்டாள்.

அதாவது அவன் சொன்னதை அவள் நம்பவில்லையாம்!
தொடுதிரையைப் பார்த்துவிட்டு அங்கேயே நின்று ஓரக்கண்ணால் அவனை நோட்டம் விட்டபடியே “ம்ம்… சொல்லு ஆதேஷ்” என்றவள் மறுமுனையில் அவன் மீண்டும் ஒரு முறை திட்டத்தை விளக்கவும் முகம் மலர கேட்டுக்கொண்டாள்.
பேசிமுடித்துவிட்டுப் போனை வைக்கும் போது “யார் அது? பாய் ஃப்ரெண்டா?” என்று ஒலித்தது வித்யாசாகரின் குரல்.
எவ்வளவோ முயன்றும் அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஹெர்குல் பொய்ரெட் விழித்துக்கொண்டார். விழித்ததோடு மட்டுமன்றி சங்கமித்ராவிடம் அதிகப்படி ஆர்வத்தைக் காட்டி மாட்டியும் கொண்டார்.
அவள் பொறுமையாக அவனருகே வந்தவள் “அதாவது உன்னோட ஐபோன் ட்வெல்வ் ப்ரோவும், என்னோட கேலக்சி எம் லெவனும் உனக்குக் குழப்பத்தை உண்டாக்கினதால நீ மாத்தி என்னோட போனை எடுத்து என் ஃப்ரெண்ட் கிட்ட ரெண்டு நிமிசம் பேசவும் செஞ்சிருக்க… வாவ்! திஸ் இஸ் தி வேர்ல்ட்’ஸ் டஃப்பஸ்ட் கன்பியூசன்” என்று பொய்யாய் கண்ணை விரித்து ஆச்சரியப்படவும் வித்யாசாகர் நமட்டுச்சிரிப்பை உதிர்த்தான்.
“சோ நான் வேணும்னே தான் எடுத்தேன்னு தெரிஞ்சு போயிடுச்சுல்ல… ஆதுனு நேம் வந்துச்சு… அந்த ஆது பொண்ணா பையனானு டவுட்… அதான் எடுத்தேன்” என்று சொன்னவனின் பதிலில் அவளுக்கு நியாயப்படி கோபம் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை! ஆச்சரியம் தான்!
ஒருவேளை இவனது வினோதச்செய்கைகள் தன்னைப் பாதிக்கிறதோ என்று யோசித்தவள் எதுவும் பேசாமல் தோளைக் குலுக்கிக்கொண்டாள். இருந்தாலும் தன்னை யாரோ அழைப்பதில் இவனுக்கென்ன அக்கறை என்ற கேள்வி குறுகுறுப்பை உண்டாக்கி விட்டதே!
“ஆது கேர்ளா பாயானு தெரிஞ்சுட்டு நீ என்ன பண்ணப்போற?” கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவள் கேட்ட விதத்தில் ஒரு நொடி திகைத்தவன் பின்னர் சிரிப்பை உதிர்த்தான்.
சோம்பல் முறித்தபடியே “பொண்ணுனா பேசி ஃப்ரெண்ட் ஆயிருப்பேன்… பையன்னா டேய் என் லைன்ல குறுக்கவராதடானு வார்ன் பண்ணீருப்பேன்” என்றான் அமர்த்தலாக. அவனது பதிலில் சங்கமித்ரா திகைத்துப் போனாள்.
குழப்பத்துடன் “நீ சொன்னது புரியல” என்றாள்.
வித்யாசாகர் அவளது உயரத்துக்குக் குனிந்தவன் “புரியவே வேண்டாம் பப்ளிமாஸ்… பல நேரங்கள்ல இந்த மாதிரி புரியாத விசயங்கள் தான் லைஃபை இண்ட்ரெஸ்டிங்கா மாத்தும்” என்று சொல்லிவிட்டு அவளது நாசியை நிமிண்டிவிட்டு சீட்டியடித்தபடி கீழே சென்றுவிட்டான்.
சங்கமித்ராவோ அவனது தீண்டலில் திடுக்கிட்டு விழித்தவள் விமானநிலையத்தில் ஆரம்பித்து இப்போது வரை அவனது செய்கைகள் தனக்குள் உண்டாக்கும் குழப்பத்துக்கு விடை தெரியாதவளாக தன் தலையில் தானே குட்டிக்கொண்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

