“காட்! மிசஸ் சம்பூர்ணாவுக்கு யார் இப்பிடிப்பட்ட டயட்ரி சப்ளிமெண்ட்ஸ் பத்தி சொல்லுறாங்கனு தெரியல… இன்னைக்கு ஏதோ மீல் ரீப்ளேஸ்மெண்ட் மிக்ஸ் பத்தி சொன்னாங்க என்னோட மம்மி.. அதை குடிச்சா பசிக்காதாம்… சேம் டைம் உடம்புக்குத் தேவையான எல்லா விட்டமின்ஸ், மினரல்சும் கிடைச்சிடுமாம்… ஐயோ போன மாசம் தான் இந்த மாதிரி டயட்ரி சப்ளிமெண்ட்ஸ் யூஸ் பண்ணுன ஒரு பொண்ணுக்கு லிவர் ஃபெயிலர்னு நியூஸ்ல பாத்தேன்… ஒல்லியாகணுமா உயிரோட இருக்கணுமானு என் கிட்ட கேட்டா நான் உயிரோட இருக்கத் தான் விரும்புறேன் காட்!”
-க்யூட் கியூபிட்டின் குரல்
சன்ஷைன் கபே…
மாலைநேரத்தின் அழகை அதிகரிக்கும் விதமாக அந்த கபேயினுள் மினுமினுத்துக் கொண்டிருந்தன பொன்மஞ்சள் விளக்குகள். அந்த விளக்கொளியும் மிதந்து வரும் மெல்லிசையும் மேஜை மீது இருந்த அமெரிக்கானோவும் முறையே கண்கள், செவி மற்றும் நாவுக்கு விருந்தாய் அமைந்து வித்யாசாகருக்குள் தூங்கிக் கொண்டிருந்த கலாரசிகனை அலாரம் வைத்து உசுப்பேற்றிவிட்டது.
அதை ரசித்தவனின் மனமெங்கும் நிம்மதி மெல்லிய மூடுபனியாய் பரவியிருந்தது. அவன் எதிரே அமர்ந்து மேஜையின் மீதிருந்த அமெரிக்கானோவை குடித்து தொண்டையை நனைத்துக் கொண்டிருந்த நரேனுக்கு இன்னும் அதிர்ச்சி தீரவில்லை.
அந்த அதிர்ச்சிக்குக் காரணமான வித்யாசாகரோ விரல்களால் மேஜை மீது தாளமிட்டவனாக உதடு குவித்து சீட்டியடித்தபடி “இந்த அரேனா செமல்ல மச்சி! ஏன் நம்ம சென்னைல இருந்தப்போ இங்க வரல?” என்று முன்ஜென்மம் போல தோன்றிய தாங்கள் சென்னையில் வேலை செய்த நாட்களை நினைவுபடுத்திக்கொண்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஆமாடா! இது இப்போ ரொம்ப முக்கியம் பாரு… டேய் நீ உன் கல்யாணத்தை நிறுத்திட்டு வந்திருக்கடா… ஆனா என்னவோ மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளையாட்டம் விசில் பறக்குது… இது நல்லதுக்கு இல்லடா”
சொல்லிவிட்டுக் கடைசி மிடறு அமெரிக்கானோவை வயிற்றுக்குத் தாரைவார்த்தவனுக்கு இன்னும் ஆயாசம் தீர்ந்தபாடில்லை.
ஆனால் இவ்வளவையும் செய்து முடித்த வித்யாசாகரோ பெரும்சுமை மனதை விட்டு அகன்ற நிம்மதியுடன் தோரணையாக அமர்ந்திருந்தான்.
நரேன் சொன்னதைப் போல ரக்சனாவிடம் பேசி அவர்களுக்கு நிகழவிருந்த நிச்சயதார்த்தத்தையும் அதைத் தொடர்ந்த திருமணத்தையும் வெற்றிகரமாக நிறுத்திவிட்டான்.
அதன் முதல் கட்டமாக ரக்சனாவைப் போனில் அழைத்து தாங்கள் சந்தித்துக்கொள்ளலாமா என்ற கேட்டவனுக்கு ரக்சனாவிடமிருந்து தயக்கம் மட்டுமே பதிலாக கிடைக்க அவர்கள் இல்லத்திலேயே சந்தித்துக்கொள்ளலாம் என்ற இறுதிமுடிவுக்கு வந்தான் அவன்.
அதற்கு அவளும் சம்மதித்துவிட செங்கல்பட்டில் இருக்கும் அர்ச்சனாவின் புகுந்தவீட்டுக்கு நரேனுடன் விஜயம் செய்தான். அப்பாவி நரேனுக்கு வித்யாசாகரின் மனதில் ஒளிந்திருக்கும் திட்டம் தெரியாமல் போக அவனும் சகோதரப்பாசம் என்று எண்ணி நண்பனுடன் அங்கே வந்துவிட்டான்.
இருவருக்கும் வரவேற்பெல்லாம் பலம் தான். அதிலும் அர்ச்சனா சென்ற முறை இந்தியா வந்த போது அவளின் இஞ்சி போட்ட தேநீரை நரேன் பாராட்டியதை நினைவில் வைத்து அவனுக்கு ஸ்பெஷலாகப் போட்டு நீட்டவும் நரேன் அவளின் பாசத்தில் கரைந்து காணாமல் போனான்.
ஆனால் அடுத்த நொடியே குடித்துக்கொண்டிருந்த தேநீர் புரையேறும் அளவுக்கு வித்யாசாகரின் வார்த்தை அவன் செவியைத் தீண்டியது.
“மாமா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு தோணுது… திடுதிடுப்புனு இப்பிடி ஏற்பாடு பண்ணுனதால என்னால தடுக்கவும் முடியல… நீங்க எல்லாருமா சேர்ந்து இந்த விசயத்தை முடிவு பண்ணுனப்போ நான் ப்ளூ கார்ட் விஷயமா அலைஞ்சிட்டிருந்தேன்… என்னால வேற எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ண முடியாத சூழல்… இப்போ ஊருக்கு வந்ததும் உங்க கிட்ட விஷயத்தைச் சொல்லிடலாம்னு வந்தேன்”
அவன் முடிக்கவும் நரேனுக்குப் புரையேறிவிட்டது. அர்ச்சனாவுக்கோ அழுகை இப்போதோ அப்போதோ என்றிருக்க அவளது மாமனாரும் மாமியாரும் குழப்பத்துடன் வித்யாசாகரைப் பார்த்துவைத்தனர்.
அர்ச்சனாவின் கணவன் கதிரவனின் விழிகளோ மனையாளுக்கு அடுத்து நின்ற தங்கையின் வதனத்தை நோட்டமிட்டது. அவளின் முகத்தில் திருமணம் நின்ற வருத்தத்தை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடவேண்டும் போல!
அந்தளவுக்குச் சந்தோசத்தில் பூரித்துப்போனாள். அதற்கான காரணம் கதிரவனுக்கும் தெரியும் என்பதால் வித்யாசாகர் மீதான கோபம் அங்கே தேவையற்றுப் போய்விட்டது.
ரக்சனா நிம்மதி பெருமூச்சு விட்டவள் “நானும் இதையே தான் சொல்லுறேன் வித்தி… ஆனா பொண்ணுங்க சொல் என்னைக்கு அம்பலம் ஏறுச்சு, சொல்லுங்க… நான் என்ட்ரென்ஸ் எக்சாம்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிருக்கேன்… திருச்சி ஐ.ஐ.டில இடம் கிடைச்சிடும்னு சந்தோசத்துல இருந்தப்போ திடீர்னு கர்ணா அண்ணா கல்யாணத்தோட சேர்ந்து உனக்கும் வித்திக்கும் ஒரே மேடையில கல்யாணம்னு ஷாக் டிரீட்மெண்ட் குடுக்கிறாங்க… எனக்கு எப்பிடி இருந்திருக்கும்? அப்போவே சொன்னேன், ஆனா யாருமே என்னை ஒரு பொருட்டா மதிக்கல” என்றாள் ஆதங்கத்துடன்.
அத்தோடு தனது தாய் தந்தையரிடம் “நீங்க பாத்த மாப்பிள்ளைய நான் வேண்டாம்னு சொன்னேன்னா அதுக்கு அர்த்தம் யாரோ ஒருத்தனை நான் காதலிக்கிறேங்கிறது இல்ல… என்னோட ஆம்பிசன் கூட அதுக்குக் காரணமா இருக்கலாம் தானே… ப்ளீஸ்பா… இப்போவாச்சும் என் பேச்சைக் கேளுங்க… எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்… நான் படிப்பை முடிச்சிட்டு அதுக்கப்புறம் பண்ணிக்கிறேன்” என்று கெஞ்சும் தொனியில் பேச வித்யாசாகருக்கே இந்தப் பெண் எத்தனை முறை இப்படி வேண்டினாளோ என எண்ணி அவள் மீது இரக்கம் பிறந்தது.
ஆனால் ரக்சனாவின் தந்தைக்கு இதற்கு மேல் மகளை வருத்தும் எண்ணமில்லை போல!
“சரிப்பா வித்தி! நானே சம்பந்தி கிட்ட பேசிடுறேன்… எதுக்கும் நீங்க ஒரு வார்த்தை…” என்று இழுக்கவும்
“அவங்க கிட்ட நான் சொல்லலைனாலும் இன்னும் கொஞ்சநேரத்துல நியூஸ் அங்க ஃபார்வேர்ட் ஆயிடும் மாமா” என்றான் அர்ச்சனாவைப் பார்த்தபடியே.
அவளோ இளையச்சகோதரனின் இச்செய்கையால் தன்னை புகுந்தவீட்டினர் என்ன நினைப்பார்களோ என உள்ளுக்குள் கதி கலங்கிப் போயிருந்தாள். அதை அவளது கணவன் உணர்ந்துகொண்டான்.
“விடு வித்தி! அவளுக்கு இன்னும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன ஷாக்கே போகல… இதுல அவ எங்க அத்தை கிட்ட பேசுறது! நானே போன் பண்ணி பக்குவமா சொல்லிடுறேன்” என்றான் தண்மையாக.
கூடவே கர்ணனிடம் பேசும் பொறுப்பை ரக்சனா ஏற்றுக்கொள்ள சிறிதும் சிரமமின்றி வித்யாசாகரின் நிச்சயமும் திருமணமும் ரத்தானது. ஆனால் அர்ச்சனா தான் அவன் அங்கிருந்து கிளம்பும் வரை முகம் கொடுத்து பேசவில்லை.
விடைபெற்றுக்கொள்ள வந்தவனை தனியே அழைத்துச்சென்றவள் தன் தலை மீது அவனது கரத்தை வைத்து “உண்மைய சொல்லு வித்தி… நீ ஏன்டா ரக்சனாவ வேண்டானு சொன்ன?” என்று கேட்க வேறு வழியின்றி அவனும் வாய் திறந்து சொல்லிவிட்டான்.
“நான் மூனு வருசமா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்கா”
கேட்டதுமே அர்ச்சனா அதிர்ந்து போனாள். இந்த மூன்றுவருடக்காதலை மதிவதனி இந்தத் திருமணப்பேச்சை எடுத்த போதே சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கம் ஒரு புறம்!
அத்தோடு இத்தனை ஆண்டுகள் கூடவே இருக்கும் அழகும் அன்பும் அறிவும் நிறைந்த தனது நாத்தனாரை விட எந்தப் பேரழகியை இவன் காதலித்திருக்கப் போகிறான் என்ற எரிச்சல் மற்றொரு புறம்! இவையனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக மாமியாரின் முகவாட்டம் வேறு அவளுக்கு இனி வரும் குத்தல் பேச்சுக்களுக்கான முகவுரை போல தோற்றமளிக்க சராசரி பெண்ணாக நொந்து போனாள் அவள்.
வித்யாசாகரோ “அக்கா நீங்க யாருமே என் கிட்ட ரக்சனாவ மேரேஜ் பண்ணிக்க விருப்பமானு கேக்கலயே! வித்தி உனக்கும் ரக்சனாவுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம்னு தகவல் தானே சொன்னீங்க… என் கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்னு உங்க யாருக்குமே ஏன் தோணல?” என்று வினவ
“டேய் சித்தி தான் கல்யாண விசயத்துல அவங்க என்ன சொன்னாலும் நீ தட்டாம கேட்டுப்பேனு சொன்னாங்கடா… அதை நம்பித் தான் நான் ஒன்னுக்கு ரெண்டா கல்யாணம் நடந்தா சொந்தம் விட்டுப் போகாதேனு நினைச்சேன்” என்றாள் ஆற்றாமையுடன்.
“ஒரு பேச்சுக்கு உங்க இஷ்டப்படி யாரைக் கை காட்டுனாலும் மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்னேன்கா… அது மூனு வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயம்… அதை பிடிச்சிக்கிட்டு எனக்கு செக் வைக்கக்கூடாது” என்று முடிவாக தனது மனதிலிருந்த ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு விடைபெற்றவனின் மனம் நிர்மலமாகிவிட்டிருந்தது.
அதையெல்லாம் எண்ணியபடியே கபேயில் அமர்ந்து அமெரிக்கானோவை உறிஞ்சியவனின் இதயம் ஜங்க் ஃபைல்கள் அழிக்கப்பட்ட கணினியைப் போல சீராக செயல்பட ஆரம்பித்தது.
நரேன் தான் சொல்லி சொல்லி மாய்ந்து போனான்.
“வித்தி அம்மாவ கொஞ்சம் நினைச்சுப் பாருடா”
“மாப்பிள்ளை கோச்சுக்கிட்டார்னா ஷாலியோட நிலமை என்னாகும்?”
“டேய் முதல்ல மித்ரா உன்னை லவ் பண்ணுறாளாடா? நீயா கற்பனை பண்ணீட்டு ரக்சனா மாதிரி புத்திசாலி லைப் பார்ட்னரா வர்றதுல மண்ணள்ளிப் போட்டுட்டியேடா”
இவை அனைத்தையும் கேட்டுவிட்டு வித்யாசாகர் வெறுமெனே சிரிப்பை மட்டும் உதிர்த்தான்.
“எல்லாமே நல்லபடியா தான் நடக்கும்னு என் மனசு சொல்லுதுடா… இன்னும் ரெண்டே நாள் தான்… சென்னைல இருந்து நேரா அம்பாசமுத்திரத்துக்குப் போறோம்… அதுக்கப்புறம் ஷாலியோட என்கேஜ்மெண்ட், மேரேஜ்னு எப்பிடியும் பப்ளிமாஸ் அடிக்கடி ஷாலிய பாக்க வருவா… அந்த டைம் எனக்குப் போதும்டா” என்றான் கெத்தாக.
“அஹான்! அந்தப் பொண்ணோட ஃபேமிலி இப்பிடி அடுத்தவங்க வீட்டுக்கு அடிக்கடி அவளை அனுப்ப சம்மதிக்கணுமே… உங்க ஊர்க்காரங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு மூனு திசைய பாத்து மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுவ… அப்போ மித்ராவோட அப்பா அம்மா மட்டும் எக்செப்சனா?”
“அவ யார் சொன்னாலும் சரினு மண்டைய ஆட்டுற ரகம் இல்லடா… இன்னைக்கு அவங்க அம்மா பாத்த மாப்பிள்ளைய வேண்டாம்னு ஸ்ட்ராங்கா அவ மறுத்துப் பேசுனதை நானே கேட்டேனே” என்று சொன்னபடி அங்கே வந்த சர்வரிடம் பில்லுக்காக பணம் கொடுத்துவிட்டு எழுந்தான் வித்யாசாகர்,.
கூடவே எழுந்த நரேனோ “யாரோ அந்தப் பொண்ணு ரொம்ப கியூட், அம்மா மேல ஓவர் பாசம்னு கொஞ்சநாளுக்கு முன்னாடி சொன்னதா நியாபகம்” என்று அவனது காலை வாரிவிட்டபடி அவனுடன் அந்த கபேயை விட்டு வெளியேறி வாகனத்தரிப்பிடத்துக்கு வந்தான்.
“அது அப்போ… இப்போ அவ நிறைய மாறிட்டா நரேன்” என்றபடி நண்பனின் காரில் அமர்ந்தான் அவன்.
அத்துடன் “ஷீ இஸ் சோ கியூட் மச்சான்… அதை எப்பிடி எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறது? ம்ம்ம்… முன்னாடியும் கியூட் தான்… ஆனா இப்போ வேற மாதிரி” என்றான் வித்யாசாகர்.
நரேந்திரன் அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாமல் தலையைச் சொறிந்துகொண்டபடி காரைக் கிளப்பினான்.
வித்யாசாகர் அவனைப் பார்த்து சிரித்தவன் கார் சாலையில் வேகமெடுக்கவும் நண்பனுக்குப் புரியும் பாஷையில் விளக்க ஆரம்பித்தான்.
“உனக்குப் புரியுற மாதிரியே சொல்லுறேன் நரேன்… முன்னாடி அவ சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி மாதிரி கியூட்… இப்போ கீதாகோவிந்தம் கீதா மாதிரி கியூட்… ரெண்டுமே ஒரு மாதிரி அழகா தான் இருக்கு” என்று ரசனையுடன் கூறிச் சிரித்தான்.
நரேந்திரன் அவனை நக்கலுடன் பார்த்துவிட்டு “அஹான்! இங்க பாருங்க சார், ஹாசினியாச்சும் தலையில முட்டுனதோட விட்டுடும்… ஆனா கீதா பின்னாடி சுத்துனா ஒவ்வொரு மணிநேரத்துக்கும் பளார் பளார் தான்… உடம்பை இரும்பாக்கிக்கோ வித்தி” என்று தனது கன்னத்தில் கைவைத்துக் காட்டியபடி ஸ்டீயரிங் வீலை வளைக்க வித்யாசாகர் நகைத்தான்.

“அதுக்காக தான் மூனு வருசம் ஜிம்முக்குப் போய் உடம்பைத் தயார் பண்ணிருக்கோம்… போடா என் சிப்சு” என்று சொல்லிவிட்டு தனது டீசர்ட்டின் ஹூடியை இழுத்துவிட்டுக்கொண்டான்.
சங்கமித்ராவுக்காக இவ்வளவு தூரம் வித்யாசாகர் யோசித்துச் செயலாற்றிய நேரத்தில் அவளோ ஊரிலிருந்து போனில் அழைத்த அண்ணனிடம் தர்க்கம் செய்துகொண்டிருந்தாள்.
எடுத்ததும் “உன் போனை எதுக்கு அந்தப் பொண்ணு அட்டெண்ட் பண்ணுறா? நீ அவளுக்கு ரொம்ப இடம் குடுக்குற மித்து” என்று கடுகடுத்தான் சர்வானந்த்.
தனது தோழியைப் பற்றி தமையன் கடுகடுக்கவும் சங்கமித்ராவும் சண்டைக்கோழியாகி விட்டாள்.
அது எப்படி நீ என் தோழியை அவ்வாறு பேசலாமென அவள் வாதிட்ட விதத்தில் சர்வானந்த் பேசுவது தனது தங்கையா அல்லது ரேஷ்மாவின் வழக்கறிஞரா என்று சந்தேகப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பது தான் உண்மை.
அப்படி என்ன மாயமந்திரம் செய்து என் தங்கையை மயக்கினாளோ என்று வியந்தவன் ரேஷ்மாவை ஹாரிபாட்டர் படத்தில் வரும் மாயக்காரி பெல்லாட்ரிக்ஸ் லெஸ்ட்ரேஞ்ச் அளவுக்குக் கற்பனை செய்துவிட்டான்.
அத்தோடு மிகுந்த சிரமத்துக்கிடையே சங்கமித்ராவின் அன்புத்தோழியை இனி திட்டமாட்டேன் என அவன் சத்தியப்பிரமாணம் எடுத்த பிறகு தான் அவனது தங்கை அவனிடம் இயல்பாக பேசவே ஆரம்பித்தாள்.
விருஷாலியின் நிச்சயதார்த்தம் அம்பாசமுத்திரத்தில் நடைபெறப்போவதை தெரிவித்தவள் தான் அங்கே சென்று நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு நல்லூருக்கு வரவா என்று கேட்டுவைக்க அதற்கு நூற்று நாற்பத்தி நான்கு தடையுத்தரவு பிறப்பித்தான் அவளது தமையன்.
“என்னடா அண்ணா என் ஃப்ரெண்ட்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா விசயத்துக்கும் நீ நோ சொல்லுற?” என சிணுங்கியவளைச் சமாதானப்படுத்தும் விதத்தில் பேசத் துவங்கினான் சர்வானந்த்.
“குட்டிமா அங்க உனக்கு எல்லா வசதியும் இருக்குமோ என்னவோ? நம்ம வீட்ல ஏ.சி இல்லாம நீ பத்து நிமிசம் கூட இருந்ததில்ல… அதோட அங்க நீ திடீர் திடீர்னு கேக்குற ஃபுட் ஐட்டம்சை செஞ்சு தர யார் இருக்காங்க? ஆச்சியும் தாத்தாவும் நீ எப்போ வருவேனு காத்திருக்காங்க தெரியுமா!” என்றவன் எண்ணியபடியே மற்ற அனைத்துக்கும் விவாதம் செய்த சங்கமித்ரா தாத்தா பாட்டியின் பேச்சை எடுத்ததும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனாள்.
அதை சாக்காக வைத்துக்கொண்டே தங்கையின் அம்பை பயணத்தைத் தடுத்து நிறுத்தும் எண்ணத்தில் போனை வள்ளியம்மா ஆறுமுகத்திடம் கொடுத்தவன் அவர்களின் “ராஜாத்தி” என்ற ஒற்றைவார்த்தையில் அவள் உருகிப்போவதை தாத்தா பாட்டியின் பேச்சிலிருந்தே கண்டுகொண்டான்.
அவனது தங்கையைப் பற்றி அவன் அறியாததா! எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பவள் தாத்தா பாட்டி விசயத்தில் ஹால்மார்க் தங்கம் தான்.
இதுவே அவனது அன்னையைப் போல நமது தகுதிக்குக் குறைந்தவர்களின் இல்லத்திற்கு ஏன் செல்கிறாய் என எடுத்ததும் சிடுசிடுத்திருந்தால் சங்கமித்ராவின் பிடிவாதம் தளர்ந்திருக்காது என்பதையும் அவன் அறிவான்!
வியாபாரத்தில் யாரிடம் எதை பேசினால் வேலை முடியுமென கணக்கிட்டே பழகியவன் அதே தந்திரத்தை தங்கையிடமும் உபயோகித்து அதில் எழுபத்தைந்து சதவிகித வெற்றியை ஈட்டினான். ஆம்! சங்கமித்ரா சென்னையிலிருந்து கிளம்பி நேரே நல்லூருக்கு வர ஒப்புக்கொண்டாள்.
ஆனால் மீதி இருபத்தைந்து சதவிகிதம் அவனே எதிர்பாராத ஒரு அதிர்ச்சி என்று தான் சொல்லவேண்டும்! ஏனெனில் சங்கமித்ரா நல்லூருக்கு வரும் போது தன்னுடன் ரேஷ்மாவையும் அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டாள்.
விருஷாலியின் நிச்சயம் முடிந்த பின்னர் ரேஷ்மா திருநெல்வேலிக்குச் சென்றுவிடுவாள் என்று தமையனிடம் கூறியவள் அதற்கு அவன் சிரத்தையின்றி உம் கொட்டிவிட்டு அழைப்பைத் துண்டிப்பதைக் கவனிக்காது தனது தோழியரிடமும் அதை தெரிவித்துவிட்டாள்.
“ஐய் ஜாலி! ஆனா ஷாலிக்கு தான் உங்க வீட்டுக்கு வர்ற சான்ஸ் இல்லடி” என்று முற்பாதி குதூகலமும் பிற்பாதி சோகமுமாக வார்த்தையை உதிர்த்தாள் ரேஷ்மா.
“டோண்ட் ஒரி! கல்யாணம் முடிஞ்ச கையோட ஷாலிக்கும் கர்ணா ப்ரோவுக்கும் எங்க வீட்டுல விருந்து ஏற்பாடு பண்ணீடுவோம்… நான் ஊருக்குப் போனதும் அப்பா கிட்ட பெர்மிசன் வாங்கிடுவேனே” என சங்கமித்ரா சொல்லவும் விருஷாலி உற்சாகத்துடன் அவளுக்கு ஹைஃபை கொடுத்தாள்.
ஆனால் ரேஷ்மாவோ “க்கும்! அந்தக் கடுவன்பூனை இருக்குற வரைக்கும் உன் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் உன்னோட குளோசா இருக்கவிடாது… இதுல அவன் எங்க விருந்து வைக்க விடப்போறான்? எனக்கு நம்பிக்கை இல்ல” என தனக்குள் சர்வானந்தைப் பற்றி புலம்பிக்கொண்டாள்.
அப்போது விருஷாலிக்குக் கர்ணனிடமிருந்து மொபைலில் அழைப்பு வரவும் தோழிகளின் கிண்டல் தொடர அவள் வெட்கப்புன்னகையுடன் மாடி வராண்டாவுக்குப் படியேறினாள்.
அதேநேரம் வித்யாசாகரும் நரேந்திரனும் காரில் தாம்பரத்தை அடையும் போது நேரமாகிவிட்டிருந்தது. வித்யாசாகர் நண்பனிடம் கையசைத்துவிடை பெற்றவன் வீட்டுக்குள் அடியெடுத்துவைத்தான், இன்னும் சிறிதுநேரத்தில் அவனது ஆருயிர் தங்கை கண்ணீரும் கம்பலையுமாக அவனிடம் வந்து நிற்கப் போவதை அறியாதவனாக.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

