“நமக்கு நடக்குற நிகழ்வுகளை நாம ஃபீல் பண்ணுற மாதிரி மத்தவங்களும் ஃபீல் பண்ணணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். உதாரணமா மழை பெய்யுது, சிலருக்குப் பஜ்ஜி சாப்பிட்டுட்டே அதை ரசிக்கணும்னு தோணும். ஆனா அதே மழையை ஒழுகுற குடிசை வீட்டுல வாழுற ஒருத்தரால ரசிக்கமுடியாது. இதைப் புரிஞ்சுகிட்டா வாழ்க்கையில எவ்ளோவோ பிரச்சனையை அவாய்ட் பண்ணிடலாம்”
-ஸ்வீட் டெவிலின் குரல்
மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வளாகத்தேர்வில் வேலை கிடைத்த கையுடன் திருநெல்வேலிக்கு வந்திருந்தான் வித்யாசாகர்.
மதிவதனிக்கு மகன் பொறுப்பாக படித்து நல்லவேலையில் அமர்ந்த பெருமை பிடிபடவில்லை.
“நாளைக்கு நெல்லையப்பர் கோயிலுக்குப் போய் உன் பேர்ல அர்ச்சனை பண்ணீட்டு வந்துடுவோம் வித்தி” என்று சொன்னவர் மறுநாள் காலையில் வித்யாசாகரையும் விருஷாலியையும் அழைத்துக்கொண்டு நெல்லையப்பர் கோவிலை அடைந்துவிட்டார்.
சுவாமி சன்னதியில் அவர் நுழையும் போதே வித்யாசாகர் கோவில் யானையைப் பார்த்துவிட்டு பின்னடைந்ததை அவர் கவனிக்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“பையனோட ராசி நட்சத்திரம் சொல்லுங்கோ” என்ற அர்ச்சகரிடம் அர்ச்சனைத்தட்டை நீட்டிய மதிவதனி புன்னகையுடன் “வித்யாசகர், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம்” என்று சொல்ல அவர் கர்ப்பகிரகத்துக்குள் சென்று விட்டார்.
அப்போது தான் வித்யாசாகர் அங்கில்லை என்பதைக் கவனித்தவர் அருகில் நின்ற மகளிடம் “வித்தி எங்க போனான் ஷாலி?” என்று கேட்க
அவளோ “வித்தி அண்ணா நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தா எப்போவும் என்ன பண்ணுவானோ அதை தான் பண்ணிட்டிருப்பான்மா” என்றாள் நமட்டுச்சிரிப்புடன்.
மதிவதனியோ அவரது மைந்தன் இருபத்திமூன்று வயதிலும் இன்னும் குழந்தையாக இருக்கிறானே என அலுத்துக் கொண்டபடி நெல்லையப்பரிடம் மகனுக்கு நல்ல புத்தி அளிக்குமாறு வேண்டிக் கொண்டார்.
ஆனால் அவரது மகனோ அங்கே நின்றிருந்த பாவாடை தாவணிப்பெண்ணிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு! இப்போ மட்டும் நீ உன்னோட நம்பரைச் சொல்லலனு வச்சுக்கோ, உன்னைத் தூக்கிட்டுப் போய் அந்த யானை கிட்ட குடுத்துடுவேன்… அப்புறம் அது உன்னை தும்பிக்கையால சுத்தி வளைச்சிடும்” என்று மிரட்ட அவன் எதிரில் நின்றவளோ தாவணி நுனியைத் திருகியபடியே தனது முட்டைக்கண்களை உருட்டி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
அவள் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் இறுதியாண்டு பயின்று கொண்டிருந்த சங்கமித்ராவே தான். அவளது அன்னையுடன் சேர்ந்து கோவிலுக்கு வந்திருந்தவள் பிரகாரத்தில் நடந்து வந்த போது கோவில் யானை திடீரென வரவும் பயத்தில் வேகமாக நகர்ந்தவள் அந்த யானையுடன் செல்பி எடுக்கும் ஆவலில் பின்னே திரும்பி நின்றிருந்த வித்யாசாகரின் மேல் மோதிவைத்தாள்.
அப்போதும் அவள் அமுல்பேபி தான். ஆனால் வித்யாசாகர் நெடுநெடுவென வளர்ந்திருந்தாலும் ஒல்லி ரகம் தான். எனவே எதிர்பாராமல் முதுகில் வந்து சங்கமித்ரா மோதவும் நிலைதடுமாறி விழப்போனவன் எப்படியோ சமாளித்து நின்றான்.
“எவன்டா அது கண் மண் தெரியாம வந்து இடிச்சு என் ஸ்பைனல் கார்டை ரிப்பேர் பண்ணுனது?” என வலித்த முதுகைத் தடவியபடி கடுகடுத்த முகத்துடன் திரும்பியவன் அங்கே தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல திருதிருவென விழித்தபடி பிங்கும் லேவண்டரும் கலந்த நிறத்தில் தாவணி அணிந்து நின்ற பெண்ணைக் கண்டதும் பேச மறந்தான்.

“என்னடா உன்னை இடிச்சவளைப் போய் வாயை பிளந்துட்டு ரசிக்கிற?” என மனசாட்சி கேள்வி கேட்டாலும் “அழகு எங்க இருந்தாலும் ரசிக்கலாம்! தப்பில்ல” என்று தயவுதாட்சண்யமின்றி சமாளித்துவிட்டு ரசனையுடன் அவளை மீண்டும் பார்க்க ஆரம்பித்தான்.
ஆலிவ் நிறம்! வட்ட முகம்! திருத்தமான புருவம்! கிள்ளத் தூண்டும் கன்னங்கள்! செப்பு இதழ்கள் என ரசித்தவனுக்கு காரணமேயின்றி அவளைப் பிடித்துவிட்டது.
“இடிச்ச இடியில முதுகுக்கும் மூளைக்கும் இடையில போற நரம்பு எதுவும் கட் ஆகி உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சாடா?” என்ற மனசாட்சியை ஓரங்கட்டிவிட்டு அவளிடம் பொய்கோபம் காட்டிப் பேச ஆரம்பித்தான் அவன்.
“இடிச்சதும் இடிச்சிட்டு என்ன லுக் விடுற? ஆள் மட்டும் பப்ளிமாஸ் மாதிரி இருந்தா பத்தாது… பின்னாடி யாரும் நிக்கிறாங்களானு பாக்கணும்”
அவனது கோபத்தைக் கண்டதும் அவளது விழிகளில் தோன்றிய மிரட்சி அவனை இன்னும் உற்சாகமூட்ட “நீ இடிச்ச இடியில என் முதுகெலும்புல கண்டிப்பா மைனர் ஃப்ராசர் ஆகியிருக்கும்… ஒழுங்கா என் டிரீட்மெண்டுக்கு ஆகுற செலவை ஏத்துக்கோ” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட சங்கமித்ராவோ வாயடைத்துப் போனாள்.
இன்றைய சங்கமித்ராவாக இருந்தால் கையோடு அவனை மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றிருப்பாள். மூன்று வருடங்களுக்கு முன்னே அவ்வளவு விபரம் இல்லையே! எனவே தயக்கத்துடன் “சாரி சார்” என்றாள் அவள்.
ஆனால் வித்யாசாகர் அவள் பயந்ததில் குதூகலித்துப் போய் “அதெல்லாம் செல்லாதும்மா” என்றவன் மொபைல் எண்ணைக் கொடுக்குமாறும் தான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு செலவு என்ன என்பதை அவளுக்கு அழைத்துச் சொல்லிவிடுவதாகவும் மிரட்டவே சங்கமித்ரா பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றாள்.
எனவே கோவில் யானையிடம் பிடித்துக்கொடுத்து விடுவேன் என்று மீண்டும் மிரட்டினான் அவன்.
“நிஜமாவே தூக்கி யானை கிட்ட குடுத்துடுவானோ? பட் நம்ம இருக்குற வெயிட்டுக்கு இவனால நம்மள எப்பிடி தூக்க முடியும்? இந்த ஒல்லிக்குச்சியால நம்ம கையைக் கூட தூக்க முடியாது… ஆனா ஆச்சி சொல்லுற மாதிரி ஒல்லியா இருக்குறவங்க சாப்பிட்டு சாப்பிட்டு நரம்புல சேத்து வைக்குற மாதிரி இவனும் சேத்து வச்சிருந்தா என்ன பண்ணுறது?” என யோசித்தபடி நின்றாள் சங்கமித்ரா.
வித்யாசாகர் அவள் மொபைல் எண்ணைத் தந்துவிடுவாள் என்ற எண்ணத்துடன் “என்ன லுக்?” என்று கேட்டபடி நமட்டுச்சிரிப்புடன் அருகில் வரவும் அவள் எதிர்த்திசையில் கை காட்டினாள்.
“உங்கள யாரோ கூப்பிடுறாங்க பாருங்க” என்று சொல்லவும் வித்யாசாகர் யாரென திரும்பிப் பார்த்த அடுத்த நொடியில் சிட்டாக அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்தாள்.
வித்யாசாகரோ திரும்பிப் பார்த்துவிட்டு யாருமில்லை என்றதும் “அங்க யாருமே இல்ல… நீ ஒழுங்கா உன் நம்பரைக் குடு” என்று பேசியபடியே திரும்பியவன் அங்கே சங்கமித்ராவைக் காணாது திகைத்தான்.
“பப்ளிமாஸ் என் கவனத்தைத் திசை திருப்பிட்டு எஸ்கேப் ஆயிட்டா… இந்தக் கோயிலுக்குள்ள தான் இருப்பா… தேடு வித்தி” என்று தன்னைத் தானே ஊக்குவித்துக் கொண்டு தேட ஆரம்பித்தான்.
காலை முடிந்து மதியம் பிறக்கும் நேரம் வந்த பிறகும் சங்கமித்ரா அவன் கண்ணில் சிக்குவேனா என போக்கு காட்டிவிடவே வித்யாசாகர் சோர்வுற்று அன்னையும் தங்கையும் அமர்ந்திருந்த இசை தூண்கள் அமைந்திருந்த இடத்தை அடைந்தான்.
அன்று கோவிலில் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மக்கள் அன்னதானம் உண்ணும் இடம் நோக்கி பரபரப்புடன் நகர அந்நேரத்தில் தான் சங்கமித்ராவின் குரல் வித்யாசாகரின் செவியை எட்டியது.
உடனே விழிகள் அலைபாய்ந்து அவள் எங்கே என்று அந்த பிரகாரத்தை ஸ்கேன் செய்தது. அப்போது சங்கமித்ராவின் பிங்க் மற்றும் லேவண்டர் வண்ண தாவணி கண்ணில் படவும் விருட்டென்று எழுந்தவன் அன்னையும் தங்கையும் அழைக்க அழைக்க காது கேளாதவன் போல அவர்களைத் தொடர ஆரம்பித்தான். சங்கமித்ரா அவளது அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“தானம்ங்கிறது இல்லாதவங்களுக்கு இருக்கிறங்க குடுக்கிறது… ஆனா இங்க அப்பிடியா நடக்குது? இவங்க யார் வீட்டுலயுமே சாப்பாடு இருக்காதாம்மா? இவங்களுக்குச் சாப்பாடு போடுறதுக்குப் பதிலா அங்க சன்னதி வாசல்ல கோவில் வாசல்ல நிக்கிற பிச்சைக்காரங்களுக்குப் போடலாமே” என்று ஆதங்கத்துடன் பேசியவளை மெச்சிக்கொண்டான்.
அவள் சொன்னதோடு சொன்னதைச் செய்தும் காட்டினாள். ஆம்! தனக்கும் தனது அன்னைக்கும் அலுமினிய ஃபாயில் தட்டில் கொடுக்கப்பட்ட உணவை அந்தப் பிச்சைக்காரர்கள் வசம் ஒப்படைத்தாள்.
அதைக் காணும் போது அவளைப் பற்றி பெருமிதமாக எண்ணிக்கொண்டான். அதன் பின்னரும் அன்னையும் தங்கையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்ற போது கூட அரைமனதுடன் தான் கிளம்பினான்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு உறக்கத்தில் கூட பப்ளிமாஸ் என்ற முணுமுணுப்பு தான். ஆனால் அடுத்த சில வாரங்களில் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியனாகி விட்டவனை புராஜெக்ட்களும் டெட்லைன்களும் தங்களது வளையத்துக்குள் இழுத்துக்கொள்ள மெல்ல மெல்ல பப்ளிமாசை மறந்தான்.
ஆனாலும் கனவில் அவளது ஆக்கிரமிப்பு தொடரத் தான் செய்தது. அந்த ஆக்கிரமிப்பின் காரணமாக அவன் படிப்புக்காக ஜெர்மனி கிளம்புவதற்காக திருநெல்வேலி வந்த போது கூட அவளுக்காக நெல்லையப்பர் கோவிலில் தினமும் தவமிருந்தான்.
ஆனால் அவனது தவத்திற்கான பலனை மூன்றாண்டுகளுக்குப் பின்னர் தான் கொடுக்கவேண்டுமென நெல்லையப்பர் அப்போதே தீர்மானித்துவிட்டார் என்பதை இப்போது சங்கமித்ராவின் அருகில் அமர்ந்து பயணிக்கையில் உணர்ந்துகொண்டான் வித்யாசாகர்.
அவன் மனம் கிடைத்த இடைவெளியில் மூன்றாண்டுக்கு முன்னர் நடந்த அனைத்தையும் கொசுவர்த்தி சுருள் போட்டு பார்த்து முடித்துவிட சங்கமித்ராவோ தனது போனில் கண்ணைப் பதித்திருந்தாள். இருப்பினும் ஓரக்கண்ணால் தன்னை நோட்டமிடும் வித்யாசாகரரும் அவனது முகத்தில் வந்து செல்லும் வினோதமான உணர்ச்சிக்கலவையும் அவள் பார்வைக்குத் தப்பவில்லை.
எதையும் கண்டுகொள்ளாததை போல அமர்ந்திருந்தவள் சிக்னலில் கேப் நின்ற தருணத்தில் கண்ணாடியைத் தட்டிக் காசு கேட்ட பெண்மணியைக் கண்டதும் முகம் சிவந்து போனாள்.
கையில் குழந்தையுடன் அப்பெண்மணியைக் கண்டதும் சங்கமித்ராவின் மூன்றாண்டுகளுக்கு முந்தைய தானம் பற்றிய சிறிய விளக்கவுரை நினைவுக்கு வர அடித்துப் பிடித்துக்கொண்டு தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளை அவரிடம் நீட்டப்போனான் வித்யாசாகர்.
அதற்கு முன்னர் அவனது கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய சங்கமித்ரா கடுப்புடன் “உங்களை மாதிரி ஆளுங்களால தான் நாட்டுல உழைக்காம சாப்பிடுறவங்க அதிகமாயிட்டாங்க” என்று படபடக்க இப்போது அவன் தான் ‘ஙே’ என்று விழித்து வைத்தான்.
அந்தப்பெண்மணி கைக்குழந்தையுடன் நகர்வதை பார்த்தவன் “ஐயோ பாவம் அந்த லேடி… சாப்பிட காசு இல்லாம தானே கேக்குறாங்க?” என்றான் ஆற்றாமையுடன்.
“ஓ! நீங்க தாராளப்பிரபுவா குடுக்கிற இந்தப் பணத்தை வச்சு அவங்க வாழ்நாள் முழுக்க பசியில்லாம இருக்குறதுக்கு உங்க பணம் என்ன அட்சயப்பாத்திரமா?”
அவளது கேலியில் துணுக்குற்றவன் அவனே! மூன்றாண்டுகளுக்கு முன்னே பேசிய பேச்சென்ன, இப்போது அவனைக் கலாய்ப்பதென்ன!
“ஹலோ நீ தான த்ரீ இயர்ஸ் பிஃபோர் தானத்துக்கு அழகான டெபனிசனைக் குடுத்து உன் சாப்பாட்டோட சேர்த்து உங்கம்மாவோட சாப்பாட்டையும் கோவில் வாசல்ல இருக்குற பிச்சைக்காரங்களுக்குத் தானம் பண்ணுன? அப்போ ஒரு பேச்சு; இப்போ ஒரு பேச்சா? என்னம்மா இது அநியாயமா இருக்கு? ஏன் இந்த சேன்ஜ் ஓவர்?”
“அது சாப்பாடு… அந்தப் பிச்சைக்காரங்களோட வயித்த தான் போய் சேரும்… ஆனா நீ குடுக்குறது பணம்… இது அந்தம்மாக்கு தான் போய் சேரும்னு என்ன நிச்சயம்?”
குழப்பமும் திகைப்புமான அவனது படபடப்புக்கு அவசரமாக ஒருமையில் பதிலளித்த சங்கமித்ராவின் நெற்றியில் திடீரென யோசனைக்கோடுகள்! இது எல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்? அப்போது தான் அவள் வித்யாசாகரை உற்று கவனித்தாள்.
குயிஃப் ஸ்டைலில் கலைந்தும் கலையாமலும் இருக்கும் இந்தச் சிகை, குறுகுறுவென நோக்கும் விழிகள், அழுத்தமான உதடுகளின் கீழே ஸ்க்ரஃபி தாடியுடன் கூடிய கூர்மையான மோவாய் இவையனைத்தும் கலந்து கலவையாய் இருக்கும் இவனை அவள் இதற்கு முன்னரே கண்டிருக்கிறாள்! அத்துடன் தானம் பற்றிய விளக்கம் வேறு!
சில நிமிடங்கள் யோசனையில் கழிய சிக்னலில் நின்ற கார் வேகமெடுக்கவும் நினைவு வந்துவிட “ஏய் என்னை யானை கிட்ட பிடிச்சு குடுப்பேனு மிரட்டுனது நீ தானே?” என்று ஆர்வமாக வினவினாள் சங்கமித்ரா.
வித்யாசாகரோ அது நானே தான் என்பதைப் போல தனது டீசர்ட்டின் ஹூடியை வழக்கம் போல பின்னே இழுத்துவிட்டுக்கொண்டான்.
“இப்போவாச்சும் உனக்கு நியாபகம் வந்துச்சே பப்ளிமாஸ்”
சங்கமித்ராவோ ஆச்சரியத்தில் கண்கள் விரிய “வாட் அ கோ-இன்சிடென்ட்! ஐ காண்ட் பிலீவ் திஸ்… பை த வே, உன்னோட நேம் என்ன?” என ஆர்வத்தில் கேட்க அவனோ மனதுக்குள் வெள்ளையுடை தேவதைகள் சுற்றிவர டூயட் பாடிக்கொண்டிருந்தான்.
“ஐ அம் வித்யாசாகர்” என்று தன்னை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் கையை நீட்டியவனிடம் தயக்கமின்றி கைகுலுக்கினாள் சங்கமித்ரா.
“ஐ அம் சங்கமித்ரா” கன்னம் குழிய புன்னகைத்தவளின் சிம்பொனி சிரிப்பில் மீண்டும் ஒரு முறை வெள்ளையுடை தேவதை சூழ டூயட் ஆரம்பித்தது அவனது மனதில்.
தாம்பரத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்னே இறங்குவரை அதே டூயட் தான்.
மாடியும் கீழ் வீடுமாக இருந்ததைக் காட்டிய சங்கமித்ரா “மேல நானும் ரேஷும் தங்கியிருக்கோம்… கீழ தான் ஷாலி ஸ்டே பண்ணுறா” என்று சொன்னபடி அவனுக்குக் கேட்டைத் திறந்துவிட்டு தானும் உள்ளே நுழைந்தாள்.
வித்யாசாகரின் செவியில் இது எதுவுமே விழவில்லை. அவன் தான் கனவுலகில் டூயட் பாடிக்கொண்டிருந்தானே! ஆனால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற சங்கமித்ரா அவனையும் உள்ளே அழைக்கும் போது நரேன் மொபைலில் அழைத்துவிட்டான்.
அதன் பின்னர் டூயட்டாவது? வெள்ளையுடை தேவதைகளாவது? போன் பேச்சில் செவியைப் பதித்து “சொல்லுடா” என்றவனை மறுமுனையிலிருந்து சுனாமியாய் தாக்கியது நரேனின் அறிவுரை.
அதே நேரம் ரேஷ்மாவும் விருஷாலியும் வந்துவிட சங்கமித்ரா ரேஷ்மாவுடன் தாங்கள் தங்கியுள்ள மாடி அறையை அடைந்தாள்.
கீழே வித்யாசாகர் இன்னும் சுனாமியில் தத்தளித்துக் கொண்டு தான் இருந்தான்.
முடிவாக அவனது வாழ்வில் இனி சங்கமித்ரா இல்லை என்பதை நரேன் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தான். அதை கேட்கும் எண்ணம் வித்யாசாகருக்கு அல்லவா இருக்கவேண்டும்!
அவன் அக்கறையின்றி உம் கொட்டிவிட்டு திடீரென மேல்வீட்டில் சங்கமித்ராவின் குரல் உச்சஸ்தாயியில் கேட்கவும் “டேய் பப்ளிமாஸ் எதுக்கோ கத்துறா… என்னனு பாத்துட்டு வர்றேன்” என அழைப்பைத் துண்டித்துவிட்டு பாய்ந்தோடி மாடியை அடைந்தான்.
மாடிவராண்டாவில் நின்று போனில் பொரிந்து கொண்டிருந்தாள் சங்கமித்ரா.
“எனக்கு இஷ்டமில்லமா… அந்த மாப்பிள்ளைய நீ உன்னோட சொந்தக்காரங்க யாரோட பொண்ணுக்காச்சும் பேசி முடி… இது என்னோட லைப்… அதுல முடிவெடுக்குற அதிகாரம் எனக்குத் தான் இருக்கு… நீ சொல்லுறேனு தாய்ப்பாசத்துல நான் ஒத்துக்கிட்டா நாப்பது ஐம்பது வருசம் எனக்குப் பிடிக்காதவன் கூட நான் தான் குப்பை கொட்டணும்… ஒரே ஒரு தடவை வாழுற வாழ்க்கைய எனக்குப் பிடிச்ச மனுசன் கூட வாழவிரும்புறேன்… என்னை கம்பெல் பண்ணாதம்மா” என்று சிடுசிடுத்துவிட்டு போனை வைத்தவள் வித்யாசாகரை கவனியாது உள்ளே சென்றுவிட்டாள்.
வித்யாசாகரோ அந்த தானம் பற்றிய விளக்கத்தோடு அவளது அன்னையிடம் பேசிய இந்தப் பேச்சும் சேர்ந்துகொள்ள சங்கமித்ராவைப் பற்றி போட்டு வைத்திருந்த அனைத்துக் கணக்குகளும் தவறாகிப் போனதை உணர்ந்தான்.
சில நிமிடங்களில் அவளைக் கண்டதில் என்னென்னவோ கணித்திருந்தவன் இன்று அவளது குணத்தை நேரில் கண்டதும் தனது கணிப்பு மாறிப்போனதில் சற்று திகைத்தான்.
சங்கமித்ராவின் கூற்றுப்படி தாய் மீது கொண்ட பாசத்துக்காக அவன் காதலின்றி ரக்சனாவை மணந்தால் அவனது வாழ்வும் அர்த்தமற்று தான் போகும்! அப்படி நடக்க அவன் ஏன் அனுமதிக்கவேண்டும்?
விருஷாலிக்குக் கர்ணனைப் பிடித்திருக்கிறது. அவர்கள் இணைவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூட கேளாது திடீரென உனக்கு திருமணம் என்று அதிர்ச்சியளித்தால் அவன் என்ன தான் செய்வான்?
இப்போதும் நேரம் கடக்கவில்லை! உடனே செங்கல்பட்டில் இருக்கும் அர்ச்சனாவின் புகுந்தவீட்டுக்குச் சென்று நிலமையை விளக்கி கர்ணன் விருஷாலி திருமணத்தை மட்டும் இப்போதைக்கு நடத்துமாறு பேசிவிடவேண்டும். நிச்சயத்தை கல்லிடைகுறிச்சியில் அவர்களது பூர்வீக வீட்டில் வைத்திருப்பதால் இனி தான் நெருங்கிய சொந்தங்களுக்கே அறிவிக்கவேண்டும் என்று தாயார் சொல்லியிருந்தார்.
அந்த விபரீதம் நடப்பதற்குள் அவன் தடுத்தாகவேண்டும்! தடுத்தால் மட்டுமே அவனது பப்ளிமாஸ் அவனுடைய வாழ்வில் நுழைவாள்.
இதே யோசனையுடன் கீழே சென்றவன் விருஷாலியிடம் ரக்சனாவின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டான்.
தங்கையின் குறும்பு மிளிரும் பார்வையைக் கவனியாதது போல எண்களை தொடுதிரையில் அழுத்தியவன் மறுமுனையில் அழைப்பை ஏற்றதும் “ஹாய் ரக்சனா! ஐ அம் வித்யாசாகர்… இன்னைக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா இருந்தா நம்ம மீட் பண்ணலாமா?” என்று கேட்டபடி தனது உடமைகளுடன் தங்கை இருந்த அறைக்கு எதிர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான்.
அவன் கொடுக்கப் போகும் அதிர்ச்சியை அறியாதவளாக விருஷாலி தமையனுக்கு விருப்பமான ரவா கிச்சடியைக் கிண்டுவதற்கு தயாரானாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

