“கானமயிலாட கண்டிருந்த வான்கோழினு அன்னைக்கு யாரோ கேலியா பேச ஆரம்பிச்சாங்க. ஏன், மயில் மட்டும் தான் அழகா? வான்கோழி அழகில்லையா? ரெண்டையும் கடவுள் தானே படைச்சார். தன்னோட படைப்புகள் ஒரே மாதிரி இருக்கிறது பிடிக்காம தான் அவர் ஒவ்வொரு உயிரினத்தையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். இது புரியாம சிலர் அழகு அவலெட்சணம்னு பேசறதை நினைச்சா சிரிப்பா வருது”
-க்யூட் கியூபிட்டின் குரல்
“இதெல்லாம் ரொம்ப ஓவர் ஷாலி… உன்னோட அண்ணா என்ன சின்ன குழந்தையா? இதுக்கு முன்னாடி சென்னைல தானே ஒர்க் பண்ணுனார்னு சொன்ன… ஏர்போர்ட்ல இருந்து தாம்பரத்துக்கு வர தெரியாதா?”
இத்துடன் ஐநூற்று முப்பத்தியாறாவது முறை கேட்டுவிட்டாள் சங்கமித்ரா. விருஷாலியோ அண்ணனை அழைத்து வரச்செல்லும் சாக்கில் தொழில் விசயமாக புதுடெல்லிக்குச் செல்லும் கர்ணனை வழியனுப்பச் செல்லும் ஆவலுடன் தயாராகிக்கொண்டிருந்தாள்.
“நீ கரடியா கத்துனாலும் அவ காதுல விழாதுடி… அவளோட ஆளை பாக்கப்போற குஷில இருக்கா மேடம்” என்று அவளுக்குப் பதிலளித்தாள் ரேஷ்மா.
அன்று ஞாயிறு என்பதால் மூவரும் சேர்ந்தே செல்வதாக முடிவெடுத்திருந்தனர். விருஷாலிக்கு எங்கே சென்றாலும் தோழியரில் யாரேனும் ஒருத்தி வந்தே ஆகவேண்டுமென்ற பிடிவாதம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதனால் வேறு வழியின்றி மூவரும் கிளம்பினர். அவர்கள் விமானநிலையத்தின் இண்டர்னேஷ்னல் அரைவல் டெர்மினலைச் சென்றடைந்த போது கிட்டத்தட்ட மணி ஒன்பதைக் கடந்திருந்தது. அவர்களில் யாருமே காலையுணவைப் பற்றி யோசித்ததாக தெரியவில்லை.
ஆனால் சங்கமித்ராவால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வெறும் வயிற்றுடன் இருக்கமுடியவில்லை. அங்கிருந்த கபே காபிடேயைப் பார்த்தவள் “நீங்க இங்கயே இருங்கடி… அட்லீஸ்ட் ஒரு சாண்ட்விச்சாச்சும் உள்ள இறங்குனா தான் என்னால மூச்சு விடமுடியும்” என்று சொன்னபடி இடத்தைக் காலி செய்தாள்.
எந்நேரத்திலும் வயிற்றுக்கு வஞ்சகம் செய்து பழகியிராதவள் அவள். கபே காபிடேயின் ஸ்பினாச்சும் கார்னும் கலந்த சீஸ் போட்ட சாண்ட்விச் அவளது பசிக்குத் தேவாமிர்தமாக ருசித்தது.
உணவுக்குப் பின்னர் எதாவது குடித்தால் தேவலாம் போல இருக்கவே மெனுவில் இருந்த பானங்களில் பில்டர் காபியா அல்லது வனிலா கேப்புசினோவா என அவள் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்த நேரத்தில் வித்யாசகரும் நரேந்திரனும் தங்கலது RT-PCR டெஸ்ட் ரிப்போர்ட்டைக் காண்பித்து முடித்திருந்தனர்.
எமிரேட்ஸ் ஏர்லைனில் வருவதாகத் தான் வித்யாசகர் தங்கைக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பியிருந்தான். அவன் வந்த விமானம் தரையிறங்கி அரைமணிநேரம் கடந்த பிற்பாடு தான் விருஷாலி தோழியருடன் அங்கே வந்திருந்தாள்.
கர்ணனுக்குப் பத்து மணிக்குத் தான் விமானம் என்பதாலும் விமானநிலையத்தில் கோவிட் 19க்கான அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்துவிட்டு வித்யாசாகர் வெளியேற நேரம் பிடிக்கும் என்பதால் தான் இந்த முடிவு.
எதிர்பார்த்ததை போலவே கோவிட் தொற்று இல்லை என்பதற்கான RT-PCR டெஸ்ட் ரிப்போர்ட் இருந்ததால் பெரிதாக எந்தக் கெடுபிடிகளும் இன்றி வித்யாசாகரும் நரேந்திரனும் வந்துவிட்டனர்.
விருஷாலி அண்ணனையும் நரேனையும் கண்டதும் “அண்ணா” என்று உற்சாகத்துடன் கையசைக்க ரேஷ்மா இருவரையும் முதல் முறை பார்த்தால் மரியாதைநிமித்தம் சினேகப்புன்னகையுடன் நின்றாள்.
வித்யாசாகர் நரேனுடன் தங்கை நின்ற இடத்தை அடைந்தவன் நீண்டநாள் கழித்து அவளை நேரில் கண்டதில் பாசத்துடன் அணைத்துக்கொண்டான்.
“எப்பிடி இருக்கண்ணா? நரேன் அண்ணா ஹவ் ஆர் யூ?” என குசலம் விசாரித்தவள் மறக்காமல் ரேஷ்மாவை அறிமுகப்படுத்திவைத்தாள்.
“ஹாய் அண்ணாஸ்” என்று அவளும் பொதுப்படையாக அழைத்து அறிமுகமானாள்.
கூடவே விருஷாலியின் முழங்கையில் இடித்துவிட்டு “இன்னும் மித்து வரலடி… கால் பண்ணவா?” என வினவ
“சாண்ட்விச் சாப்பிட இவ்ளோ நேரமா? ஒருவேளை நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டு அவ வெரைட்டியா வெட்டுறாளோ?” என்று விருஷாலி குறுகுறு பார்வையுடன் கேட்டு வைத்தாள்.
வித்யாசாகரோ தங்கையும் அவளது தோழியும் அவர்களுக்குள் முணுமுணுத்துக்கொள்வதை சன்னச்சிரிப்புடன் வேடிக்கை பார்த்தான். விருஷாலி வழக்கத்தைக் காட்டிலும் உற்சாகமாக இருப்பதை போல தோன்றியது அவனுக்கு.
பிடித்தவனை மணக்கப்போகிறாள் அல்லவா! அந்தச் சந்தோசம் தான் இந்த உற்சாகத்துக்கு காரணம் என அவனது மனம் தவறான நேரத்தில் சொல்லிக்காட்ட அவனுக்குச் சொத்தென்று ஆனது.
அவனருகே நின்ற நரேனோ “ஏன்டா இப்பிடி பலியாடு மாதிரி முழிக்கிற? நல்லா சிரிச்சு சந்தோசமா இரேன்டா” என்று நேரம் தெரியாமல் அவனை உசுப்பேற்றியவன் வித்யாசாகர் கடுப்புடன் அவனை முறைத்ததில் அமைதியானான்.
“ஷாலிமா கிளம்புவோமாடா?” என விருஷாலியிடம் திரும்பியவனிடம் கர்ணனின் தொழில்முறை பயணத்தைப் பற்றி அவள் கூறவும்
“ஆக மாப்பிள்ளை சாரை பாக்கத் தான் தங்கச்சி பாப்பா வெயிட்டிங்கா?” என்று கேலி செய்யவும் விருஷாலி முகம் சிவந்தாள்.
“ஆமாண்ணா… ப்ரோவ கபேல பாத்த நாள்ல இருந்து மூச்சுக்கு முன்னூறு தடவை கர்ணா கர்ணா கர்ணா தான்… முடியலப்பா” என்று பொய்யாக அலுத்துக்கொண்டு நரேனுக்குப் பதிலளித்தாள் ரேஷ்மா.
அதைக் கேட்டு விருஷாலி வெட்கப்புன்னகை பூத்தவள் எதேச்சையாகத் தனது மொபைலை பார்க்க அதுவோ எமர்ஜென்சி கால் ஒன்லி என்று அவளைப் பார்த்து சிரித்தது.
உடனே ஏர்ப்ளேன் மோடுக்கும் நார்மல் மோடுக்கும் மாற்றி எமனிடமிருந்து சத்தியவான் உயிரைக் காப்பாற்றிய சாவித்திரியைப் போல போராடி தனது போனுக்கு நெட் ஒர்க் இணைப்பு வரவைத்தாள். மொபைலில் நெட் ஒர்க் கிடைக்கவும் கர்ணன் அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.
அவன் முதல் டெர்மினலில் நிற்பதாகச் சொல்லவே விருஷாலி தாங்கள் அங்கே வந்துவிடுவதாக முணுமுணுத்தவள் தமையனிடம் “அண்ணா அவர் ஃபர்ஸ்ட் டெர்மினல்ல தான் நிக்கிறாராம்” என்றாள்.
“அப்போ வாங்க கிளம்புவோம்” என்ற வித்யாசாகரை மறித்தாள் ரேஷ்மா.
“அண்ணா இன்னும் மித்து வரல”
வித்யாசாகர் இப்போது சலிப்படைந்தான். இது யாரடா புதுவரவு என்று ஒரு நொடி எரிச்சல் கூட அவனது வதனத்தில் தோன்றி மறைந்தது.
“அவ எங்க ஃப்ரெண்ட் அண்ணா… காபிடேல லைட்டா சாப்பிட்டுட்டு வர்றேனு போனா… இன்னும் ஆளைக் காணோம்” என்று இழுத்தவளை சங்கமித்ராவே போனில் அழைக்க “அவ தான் கூப்பிடுறா” என்றவள் அவளிடம் பேசிமுடித்தாள்.
நரேந்திரன் சிறிது சிறிதாக பொறுமையிழக்கும் வித்யாசாகரைக் கவனித்துவிட்டவன் பெண்களிடம் திரும்பினான்.
“உங்க ஃப்ரெண்டை அங்க வரச்சொல்லிடுங்களேன்டா… மாப்பிள்ளைக்கு டைம் ஆகுது பாருங்க” என்று அவன் சொல்லவும்
“அவ ஃபர்ஸ்ட் டெர்மினலுக்குப் போயிட்டாளாம்ணா… கர்ணா ப்ரோ இவளுக்குக் கூப்பிட்டப்போ நாட் ரீச்சபிள்னு வந்துச்சாம்… அப்போவே அவளுக்குக் கூப்பிட்டாராம்… அவளும் அங்க போயிட்டாளாம்” என்றாள் ரேஷ்மா.
அதன் பின்னர் விருஷாலியும் ரேஷ்மாவும் தொடர வித்யாசாகரும் நரேந்திரனும் முதல் டெர்மினலை நோக்கி முன்னேறினர். வழியெங்கும் விருஷாலிக்கு தமையனது சோர்ந்திருந்த வதனமே மனதை உறுத்தியது.
வித்யாசாகர் என்றாலே குறும்பு என்று சொல்லுமளவுக்கு வாய் ஓயாது பேசுபவனுக்கு இன்று என்னவாயிற்று என்ற வினாவுடன் நடந்தவள் முதல் டெர்மினலில் நின்ற கர்ணனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.
வித்யாசாகருக்கு அவன் ஏற்கெனவே அறிமுகமானவன் என்றாலும் பேசிப் பழக்கம் இல்லையென்பதால் இருவரும் நாசூக்காக பேசிக்கொள்ள நரேந்திரன் தான் “அட நாளை பின்ன ஒன்னுக்குள்ள ஒன்னா ஆகப்போறீங்க… சும்மா சார் மோர்னு… மச்சான்னு உரிமையா கூப்பிட்டுப் பழகுங்க” என்று மீண்டும் உசுப்பேற்றினான்.
கர்ணன் புன்னகையுடன் அதை ஏற்று உடனே அவனை உறவுமுறை சொல்லி அழைத்துவிட்டான். ஆனால் வித்யாசாகரின் நாக்கில் தான் அந்த வார்த்தை வருவேனா என அடம்பிடித்தது.
ஆனால் விருஷாலியின் விழிகள் பேசிய ஆயிரம் வார்த்தைகளைக் கவனித்த கர்ணனுக்கு வித்யாசாகரின் தடுமாற்றம் பெரிதாகப்படவில்லை.
அந்நேரம் பார்த்து ரேஷ்மா “இந்த மித்து எங்க போனானு தெரியலையே” என்று சங்கமித்ராவை நினைவுறுத்த கர்ணன் அவள் வயோதிகப்பெண்மணி ஒருவரை அங்கிருந்த கபே காபிடேக்கு அழைத்துச் சென்றதாக கூறினான்.
அப்பெண்மணி விமானநிலையம் வரும் அவசரத்தில் சாப்பிடாமல் வந்துவிட வெறும் வயிற்றில் இருந்தவருக்கு மயக்கம் வரவும் தானே அவருடன் சங்கமித்ராவை காபிடேக்கு அனுப்பிவைத்ததாக விளக்கமளித்தான் அவன்.
சற்று முன்னர் தானே இண்டர்னேஷனல் அரைவல் டெர்மினலின் கபே காபிடேயை முற்றுகையிட்டாள், அதற்குள் மீண்டுமா என சங்கமித்ராவை ரேஷ்மாவும் விருஷாலியும் மனதிற்குள் திட்டித் தீர்க்க ஆரம்பித்தனர்.
அப்போது தான் வித்யாசாகருக்கும் காபி குடித்தால் நன்றாக இருக்குமென தோண “நானும் காபி குடிச்சிட்டு வர்றேன்” என நகர்ந்தான்.
முதுகுக்குப் பின்னே தங்கையும் கர்ணனும் பேசிக்கொள்வதைக் கேட்டபடி கபே காபிடேயை அடைந்தவன் காபியை வாங்கிவிட்டு கிளம்பும் தருவாயில் இனிய சிரிப்பொலி ஒன்று சிம்பொனியாய் அவனது செவிகளை மீட்டி அடங்கியது.
யாரென எட்டிப் பாரேன் என அவனுக்குள் மிச்சமிருந்த வாலிபவயதுக்கே உரித்தான குறுகுறுப்பு அவனது மனதை பிராண்டவும் எக்கி பார்த்தான் வித்யாசாகர்.
ஆனால் அவனது கண்களுக்குப் புலப்பட்டதெல்லாம் ஊதாநிற லாங்க் காட்டன் ஷ்ரக் உடை மட்டுமே. ஒரு வயோதிகப்பெண்மணி அவனுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருக்க அந்த ஊதா ஷ்ரக் உடைக்காரி தான் சிம்பொனி இசை சிரிப்புக்குச் சொந்தக்காரி என்று அவனே ஊகித்துக்கொண்டான்.
அவளது முகம் தெரியாது போகவும் மீண்டும் சோர்வு கிளர்ந்தெழ கிளம்பினான். அவன் பின்னோடு அந்தச் சிம்பொனி இசையும் தொடர்ந்தது.
சோர்ந்த மனதுக்குச் சாமரம் வீசுவது போல அந்தச் சிம்பொனி சிரிப்பைக் கேட்டபடி தங்கை நின்ற இடத்தை அடைந்தான் வித்யாசாகர்.
காபியை உதட்டுக்குக் கொடுக்கப் போன நேரத்தில் “ஓகே ஆன்ட்டி… ஹேவ் அ ப்ளசண்ட் ஜர்னி” என்று குழலிசையாய் ஒலித்தது ஒரு குரல். சிம்பொனியும் குழலிசையும் ஒரே இடத்திலா என்று புருவம் சுருக்கியவன் விருஷாலியின் “மித்து” என்ற அழைப்பில் திரும்பினான்.
அங்கே ஆரஞ்சு லாங் டாப் மீது ஊதாநிற ஷ்ரக்கும் அணிந்து தனது சுருட்டிவிடப்பட்ட கூந்தல் கழுத்தை தீண்டிச் செல்ல அந்த முதியப்பெண்மணியைக் கையசைத்து வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா. மூன்றாண்டுகளுக்கு முன்னே வித்யாசாகரின் மனதுக்குள் பப்ளிமாஸ் எனும் பெயரில் நுழைந்தவள்.

அந்தப் பெண்மணி மறைந்ததும் சங்கமித்ரா அதே புன்னகையுடன் தோழியர் புறம் திரும்பியவள் தங்களுக்கு நடுவே கையில் காபி கப்புடன் கண்களில் கோடானுகோடி நட்சத்திரங்கள் ஜொலிக்க நின்ற வாலிபனை யார் இவன் என்ற கேள்வியுடன் நோக்கினாள்.
வித்யாசாகரோ அவளது பார்வை தன்னை தொட்டுச் செல்லவும் இதயம் வேகமாக துடிப்பதைப் போல் உணர்ந்தான்.
இதே போல கேள்வியுடன் தானே அன்றும் நோக்கினாள் என அவன் எண்ணும் போதே சங்கமித்ரா அவனைத் தாண்டிச் சென்று விருஷாலியிடம் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.
அதற்குள் கர்ணனின் விமான அறிவிப்பு வரவே அனைவரும் அவனை வழியனுப்பி வைப்பதில் கவனமாகிவிட வித்யாசாகர் மட்டும் தன்னை ஓரக்கண்ணால் விசாரணைப்பார்வை பார்ப்பவள் கனவா நிஜமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தான்.
கர்ணன் சென்றதும் நரேன் தனது நண்பன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரிப்பதோடு விருஷாலியின் இன்னொரு தோழியை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்ததில் துணுக்குற்று அவனிடம் பேச்சு கொடுத்தான்.
“டேய்! ஷாலியோட ஃப்ரெண்டை பாத்து ஏன்டா இளிக்கிற? அந்தப்பொண்ணு உன்னைப் பத்தி என்ன நினைக்கும்?” என வினவ அதே நேரத்தில் சங்கமித்ராவும் வித்யாசாகரைப் பற்றி தான் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருந்தாள்.
“இந்த வெளிநாட்டு வினோதம் ஏன் என்னைப் பாத்துட்டே இருக்கான்? கண்டிப்பா இவன் ஷாலிக்கு கூடப்பிறந்த அண்ணனா இருக்கமாட்டான்… இவனை எதாச்சும் குப்பைத்தொட்டியில இருந்து தான் எடுத்திருப்பாங்க” என்றெல்லாம் யோசித்து தான் ஒரு தொண்ணூறுகளின் குழந்தை என்று நிரூபித்தாள் அவள்.
வித்யாசாகரோ அவளது முறைப்பைக் கூட காதல் பார்வையாக கருதியவன் நரேனிடம் “ரொம்ப நாள் கழிச்சு நான் லவ் பண்ணுன பொண்ணைப் பாக்குற எக்சைட்மெண்ட்ல இருக்கேன்டா… கண்டுக்காத” என்று சொல்லி அவனது சிறிய இதயத்தில் அடுத்தடுத்த பூகம்பத்தை ஏற்படுத்தினான்.
நரேன் அதிர்ந்து “வித்தி இந்தப் பொண்ணு?” என்று கேள்வியாய் நோக்க
“ஷீ இஸ் மை பப்ளிமாஸ்… த்ரீ இயர்சுக்கு முன்னாடி நான் நெல்லையப்பர் கோயில்ல பாத்தது இவளைத் தான்” என்று புன்முறுவலுடன் முடித்தான் வித்யாசாகர். அவனது பேச்சில் விரவியிருந்த காதல் நரேனை இன்னும் திடுக்கிட வைத்தது.
இது தவறாயிற்றே! இவனை நம்பி திருமண ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்த இவனது பெற்றோர், கர்ணனுடன் தான் தனது வாழ்க்கை என்ற கனவில் வாழும் இவனது சகோதரி, அத்துடன் இவனுக்காக பேசிமுடிக்கப்பட்ட ரக்சனா இவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காது இந்தப் பெண் சங்கமித்ராவை காதல் பொங்க பார்க்கிறானே!
அடுத்த கணம் நரேனின் விழிகள் சங்கமித்ராவை ஆராய்ந்தது. வித்யாசாகரின் கண்களில் இருந்த ஆர்வம் அவளிடம் இல்லையென்றாலும் ஒரு வாலிபனின் ஆர்வம் ததும்பும் பார்வையைக் கண்டுகொள்ளாமல் செல்லுமளவுக்கு அவளது எதிர்ப்புச்சக்திமண்டலம் வேலை செய்யவில்லை என்பதை அவளது குழப்பம் சூழ்ந்த வதனமே தெரிவித்தது.
வித்யாசாகரின் இச்செய்கை எத்தனை பேருக்கு பாதிப்பை உண்டாக்குமோ என பதறி அவனது தோளில் தட்டியவன் “வாட்டர் ஃபால்சை நிறுத்துடா… அந்தப்பொண்ணு அன்கம்பர்டபிளா ஃபீல் பண்ணுறா… அவளுக்கு நீ யார்னே தெரியல” என்றான் கடுப்புடன்.
வித்யாசாகரோ “கரெக்சன்” என்று புருவத்தை ஏற்றியிறக்கியவன் சங்கமித்ராவை விழிகளில் நிரப்பிக்கொண்டபடி “அவ அன்கம்பர்டபிளா ஃபீல் பண்ணல… அவளுக்கு நான் யார்னு தெரியாத கன்பியூசன்… அதை நானே கிளியர் பண்ணீட்டா ப்ராப்ளம் சால்வ்ட்” என்றான் தனது திருமண ஏற்பாடு நிச்சயம் அனைத்தையும் மறந்து இத்தனை நாட்கள் கோமாவில் கிடந்தவனை போல.
“என்னடா ப்ராப்ளம் சால்வ் ஆகும்? இனிமே தான் எல்லாமே ஸ்டார்ட் ஆகும்… வித்தி நீ உன்னோட கல்யாணத்துக்காக தான் இந்தியாவுக்கு வந்திருக்க… இன்னும் ஏழு நாள் கழிச்சு உனக்கும் ரக்சனாக்கும் என்கேஜ்மெண்ட்… இப்போ போய் இன்னொரு பொண்ணை லவ் பண்ணுறேனு இந்த மாதிரி பிஹேவ் பண்ணுறது தப்புடா” என்றான் படபடப்புடன்.
அவன் சொன்னதைக் கேட்டதும் வித்யாசாகரின் முகம் இருளடைந்தது.
ஆனால் அடுத்த கணமே சங்கமித்ராவின் சிம்பொனி சிரிப்பில் மலரும் வதனம் அவன் மனதைக் கொள்ளை கொள்ள “ஐ லவ் மை பப்ளிமாஸ்” என்றான் உருகிய குரலில்.
அதைக் கேட்ட நரேந்திரன் அடுத்து என்ன அனர்த்தம் நிகழுமோ என தலையில் கைவைத்துக்கொண்டான்.
நண்பனின் ஆதங்கத்தை கவனியாதவன் தங்கை வீட்டுக்குக் கிளம்பலாமா என கேட்டதையோ அதன் பின்னர் அவர்கள் அனைவரும் விமானநிலையத்தை விட்டு வெளியேறி ஓலா கேபில் அமர்ந்ததையோ உணர்ந்தால் தானே!
போதாக்குறைக்கு விருஷாலியும் ரேஷ்மாவும் பேச்சு சுவாரசியத்தில் ஒரே கேபில் அமர்ந்துவிட்டனர். நரேந்திரனும் வேறு கேபில் சென்றுவிட சங்கமித்ராவுடன் தனித்துப் பேச கிடைத்த முதல் வாய்ப்பாக எண்ணி அவளுடன் அமர்ந்தான் வித்யாசாகர். ஒருதலையாய் மூன்றாண்டு காதலை மனமெங்கும் நிரப்பி வைத்திருக்கும் வித்யாசாகர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது காதலால் சங்கமித்ராவின் மனதை வெல்வானா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

