“வாழ்க்கைல நம்ம இழக்குற ஒவ்வொரு நொடியும் நினைச்சாலும் திரும்ப கிடைக்காது. அதனால அந்தந்த மொமண்டை அப்பப்போ வாழ்ந்து தீர்த்துடணும். முக்கியமா நமக்கே நமக்குனு இருக்குற இந்த குட்டியான லைஃபை நமக்குப் பிடிச்சவங்களோட ஷேர் பண்ணிக்கணும். ஏன்னா மனசுக்குப் பிடிச்சவங்களோட இருக்குறப்போ தான் நமக்கு நடக்குற சாதாரண இன்சிடென்ட் கூட மெமரபிள் மொமண்டா மாறும்”
-ஸ்வீட் டெவிலின் குரல்
மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி…
கிட்டத்தட்ட நூற்றியென்பது ஆண்டு வயது கொண்ட அக்கல்லூரியின் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பொன்விழா கொண்டாடிய வணிகவியல் துறையில் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கான கெஸ்ட் லெக்சர் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இந்த கெஸ்ட் லெக்சர் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது துறையினரின் எண்ணம்.
இந்திய பங்குவர்த்தகத்தை முறைப்படுத்தும் செபியின் தலைமை பொது மேலாளர் நிதித்துறையைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தார். குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவுக்கு அமைதி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
முடியும் தருவாயில் “எப்போவுமே சிங்கிள் இன்கம்மை நம்பியிருக்காம இரண்டாம்கட்ட வருமானத்துக்காக நம்ம மூலதனம் பண்ணணும்ங்கிறது வாரன் பஃபெட்டோட ஃபேமஸான கோட்ஸ்… அப்பிடி மூலதனம் பண்ணுறதுக்கு இந்தியன் ஃபினான்ஷியல் மார்க்கெட்களைப் பத்தி ஆழ்ந்த அறிவு எவ்ளோ அவசியம்னு இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” என்று முத்தாய்ப்பாய் சொல்லி தனது உரையை முடித்துக்கொண்டார் அந்தப் பொதுமேலாளர்.
அதன் பின்னர் வணிகவியல் துறை பேராசிரியை நன்றி நவிழ வழக்கம் போல நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
அது முடிவடையவும் இமை தட்டினாற்போல விழித்தாள் சங்கமித்ரா. அவளருகே அமர்ந்திருந்த ரேஷ்மாவும் விருஷாலியும் கூட பொதுமேலாளர் சொன்னவற்றை குறிப்பேட்டில் குறித்துக்கொண்டனர். அவளோ அவரது பேச்சைக் கவனிக்க மட்டுமே செய்தாள்.
ஒரு கட்டத்தில் அவரது குரல் தாலாட்டு போல ஒலிக்க பின்வரிசையில் அமர்ந்திருந்ததால் யாரும் கவனிக்காது போக சிறிது நேரம் நித்திராதேவியின் சாம்ராஜ்ஜியத்துக்குள் சுற்றுலாப்பயணியாகச் சென்றுவிட்டாள்.
திடீரென ‘ஜன கண மன’ என்ற நாட்டுப்பண் ஒலித்ததில் அவளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த நாட்டுப்பற்று அவளது உறக்கத்தைக் கலைத்து எழுந்து நிற்கவைத்தது.
கடைசி வரியைப் பாடி முடித்த போது தான் தூக்கம் முழுமையாகக் கலைந்து இமை தட்டிப் பார்த்தாள்.
ரேஷ்மாவும் விருஷாலியும் கூட “சூப்பர் லெக்சர்டி… நீ மிஸ் பண்ணீட்ட” என்று உச்சு கொட்டினர்.
“நீ பிசினஸ்மேனோட ஒய்ப் ஆகப் போற ஷாலி… இந்த மேடம் இந்தியன் ஃபினான்ஷியல் சர்வீஸ் எக்சாமுக்குப் பிரிப்பேர் ஆகுறாங்க… உங்களுக்கு இன்வெஸ்ட்மெண்ட் பத்தி, ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கவேண்டிய அவசியம் இருக்கு… என் கனவு புரொபசர் ஆகுறது தான்… அதுவும் எகனாமிக்ஸ் புரொபசர்… சோ பி.ஹெச்.டி பண்ணுறப்போ இதை பத்தி கத்துப்பேன்” என்று தோழியரிடம் தனது உறக்கத்துக்கு என்னென்னவோ காரணம் சொன்னபடி ஹாலை விட்டு வெளியெ வந்தவளின் மேல் மோதிக்கொண்டான் அவளது வகுப்புத்தோழன் ஆதேஷ்.
சங்கமித்ரா ஒன்றும் கல்தூண் இல்லையே! அவன் இடித்ததில் கீழே விழப்போனவள் கடுப்புற்று “அடேய் இடிமாடு! பாத்து வரமாட்டியாடா?” என குரலை உயர்த்த
“சாரி மித்து… நான் உன்னைக் கவனிக்கல… ரியலி சாரி” என்று குரலில் சுரத்தின்றி முகவாட்டத்துடன் உரைத்தான் ஆதேஷ்.
சங்கமித்ராவும் அவளது தோழிகளும் அவனது இந்தக் கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர். குறிப்பாக அவன் மித்து என்று அழைத்ததில் மூவருக்கும் மாரடைப்பே வந்துவிட்டது.
அவர்கள் வகுப்பில் அறுந்தவால் என்றால் அது ஆதேஷ் மட்டுமே. அவன் இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்பும் உற்சாகமும் மட்டுமே இருக்கும்.
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று என குழம்பியவண்ணம் அவனை கேண்னுக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கேண்டினின் சிறப்பம்சமே அங்கே விற்கப்படும் பர்கர்கள் தான்.
ஆளுக்கொரு பர்கருடன் அமர்ந்தனர் நால்வரும். சாப்பிட்டபடியே “ம்ம்! என்ன பிரச்சனை ஆதேஷ்? எதுவா இருந்தாலும் சொல்லு… நான் சொல்யூசன் சொல்லுறேன்” என்றாள் சங்கமித்ரா தாராள மனதுடன்.
ஆதேஷ் பர்கரைக் கடித்தவன் ஒரு துண்டை விழுங்கிவிட்டு “இது உன்னால மட்டுமே தீர்க்க முடியுற பிரச்சனை மித்து… பிகாஸ் நீ தானே லவ் அட்வைஸ்ல பெஸ்ட்… அதோட உனக்கு நான் கியூபிட்னு செல்லப்பேர் கூட வச்சேன்… அதுக்காகவாச்சும் நீ எனக்கு இப்போ ஹெல்ப் பண்ணீயே ஆகணும்” என்று துயரம் நிரம்பிய குரலில் கூறிவிட்டு மீண்டும் ஒரு கடி கடித்து விழுங்கினான்.
கியூபிட் என்பது முதுகலை வணிகவியல் முதலாமாண்டில் சங்கமித்ராவுக்குச் சூட்டப்பட்ட புனைப்பெயர். ஏனெனில் அவள் காதலர்களுக்கு அறிவுரை சொல்வதில் நிபுணி. அவளது இந்த நிபுணத்துவம் நிறைய காதலர்களை சேர்த்து வைத்ததன் விளைவாக ஆதேஷ் விளையாட்டாக அவளுக்குச் சூட்டியது தான் இந்தப் பெயர்.
சங்கமித்ரா பழைய நினைவுகளில் நீந்தி பர்கரை வாயில் அதக்கியபடி “சரிப்பா செல்லப்பெயர் சூட்டிய சிகாமணி! உன்னோட பிரச்சனை என்னனு உன்னோட ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி ஃபேசை பாத்தாலே கெஸ் பண்ணமுடியுது… அனாமிகாவோட மறுபடியும் லடாயா?” என்று கேட்டுவிட்டு கண் சிமிட்ட ரேஷ்மாவும் விருஷாலியும் நமட்டுச்சிரிப்பு சிரித்துவைத்தனர்.
ஆதேஷ் அவர்களை முறைத்துவிட்டு “ஆமா மித்து… என் லைஃபே அவ தான்… ஆனா அவ என்னை புரிஞ்சுக்க மாட்றாளே” என்று மீண்டும் அழுதுவடிந்தான்.
சங்கமித்ரா முழு பர்கரையும் காலி செய்துவிட்டு தண்ணீரைக் குடித்தவள் பொறுமையாக அவனைப் பார்த்தாள்.
“நீ இப்பிடி அழுது வடிஞ்சேனா கூடிய சீக்கிரம் அனாமிகா உன்னை பிரேக்கப் பண்ணுனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல” என்று அவள் சாவதானமாக உரைக்கவும் ஆதேஷின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல மாறியது.
அதே முகபாவனையுடன் பிரச்சனையைக் கொட்டிவிட்டான். அனாமிகாவின் வீட்டில் இவ்வருட இறுதியில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்கும் அபாயம் உள்ளதால் அவளது பெற்றோரிடம் வந்து பேசுமாறு அவள் ஆதேஷை வற்புறுத்த அவனோ இன்னும் படிப்பு முடியாமல் வேலை கிடைக்காமல் அவள் வீட்டில் எப்படி பேசுவது என்ற யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.
அதை அனாமிகாவின் தோழிகள் வேறு விதமாக அவளிடம் தீ மூட்டிவிட அதன் பலன் ஆதேஷின் தலையில் விடிந்தது. அவன் தன்னை வெறுமெனே பொழுதுபோக்குக்குக்காக சுற்றி வருகிறானேயொழிய அவனுக்குத் தன் மீது துளி கூட காதல் இல்லை என கத்திவிட்டு அவள் சென்று இன்றோடு ஒரு வாரம் முடிந்துவிட்டது.
அனைத்தையும் ஒப்பித்தவன் “அனாமிகாவுக்கு பிராக்டிக்கல் லைஃப் பத்தி தெரியல மித்து” என்றான் சோகவடிவமாக.
சங்கமித்ரா அவனையும் தோழியரையும் மாறி மாறி பார்த்தவள் ரேஷ்மாவிடம் “நீ போய் அனாமிகாவ கூட்டிட்டு வா” என்றாள்.
“அவ எங்க இருப்பானு தெரியலயே மித்து” – ஆதேஷ்.
“கெஸ்ட் லெக்சர் நடந்தப்போ எங்களுக்கு முந்துன ரோல தான் இருந்தா… அவ மில்லர்கு போறதா பேசிக்கிட்டா… ரேஷ் நீ போய் கூட்டிட்டு வா”
மில்லர் என்பது மில்லர் மெமோரியல் லைப்ரரியின் பெயர்சுருக்கம். ரேஷ்மா அங்கே சென்றவள் கடனே என புத்தகத்தை விரித்தபடி இருந்த அனாமிகாவைப் பார்த்து கேண்டீனுக்கு அழைத்துவந்துவிட்டாள்.
“என்னை கூப்பிட்டியா மித்து?” என்று கேட்டபடி வந்தவள் ஆதேஷை கண்டதும் விலக முயல மூன்று பெண்களும் அவளை அரும்பாடுபட்டு அமரவைத்தனர்.
சங்கமித்ரா ஆதேஷை முறைத்தவளின் மோவாயைப் பற்றி தன் புறம் திருப்பியவள் உற்றுநோக்கிவிட்டு “ஹூடா பியூட்டி பேச்சிலரேட் பிராண்ட் தானே?” என்று அவளது உதட்டுச்சாயத்தின் நிறத்தை வைத்து கேட்க அனாமிகா இதை ஏன் கேட்கிறாள் என குழப்பத்துடன் தலையாட்டிவைத்தாள்.
“வெல்! கிட்டத்தட்ட ஃபோர் தவுசண்ட் ருபீஸ்… இது யாரோட காசுல வாங்குனது?”
“டாடி குடுத்த பாக்கெட்மனில தான் மித்து”
“ம்ம்… குட்… உன்னோட பியூச்சர் பிளான் என்ன?”
“இப்போதைக்கு எதுவுமில்ல மித்து”
“எக்சாட்லி… உனக்கு ஃபியூச்சர் பிளான்னு எதுவுமே இல்ல… அதோட நீ வாழுற இந்த ஹைஃபை லைஃப்ஸ்டைல் உன்னோட அப்பாவோட சம்பாத்தியம்… கொஞ்சம் யோசி… ஆஃப்டர் மேரேஜ், இதே போல ஒரு லைஃப்ஸ்டைலை உனக்குக் குடுக்கணும்னா ஆதேஷ் கஷ்டப்பட்டு உழைக்கணும்… அதுக்கு அவன் முதல்ல நல்லா படிக்கணும்… நல்ல கிரேட் வாங்கணும்… ஆனா உங்களோட சோ கால்ட் லவ் பிராப்ளமால அவனுக்கு இப்போ படிக்கிற மனநிலையே இல்ல” என்றாள் சங்கமித்ரா.
“மித்து நீ என்னை பத்தியும் கொஞ்சம் யோசி… அப்பா இந்த இயர் படிப்பு முடிஞ்சதும் அவர் பார்ட்னரோட சன்னுக்கும் எனக்கும் மேரேஜ் பண்ணிவைக்குற ஐடியால இருக்குறார்… என்னால ஆதேஷ் தவிர வேற யாரையும் என் ஹப்பியா யோசிக்க கூட முடியாது… ஆனா இவன் எங்கப்பா கிட்ட பேச பயப்படுறான்… அப்போ நான் என்ன தான் செய்யுறது?” என்று அவதியான குரலில் மொழிந்தாள் அனாமிகா.
அவளும் பாவம் தானே! காதலிப்பவன் தந்தையிடம் பேச மறுத்ததை வேறு விதமாக அவள் எண்ணியதில் தவறேதும் இருப்பதாக மித்ராவுக்குத் தோணவில்லை. ஆனால் அனாமிகாவுக்கு நிதர்சனம் புரியவில்லையே!
ஆதேஷ் தந்தையிடம் வந்து பேசியே ஆகவேண்டுமாம். அப்படி அவர் சம்மதிக்காத நிலையில் இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொள்வோம் என்றாள் அவள். அவன் எங்கேயோ வேலை செய்து கொண்டு வரும் பதினைந்தாயிரம் ரூபாயில் சீரும் செட்டுமாக நான் குடும்பம் நடத்திக் காட்டுவேன் என்ற சவால் வேறு!
வெறும் உதட்டுச்சாயத்துக்கு நான்காயிரம் ரூபாய் செலவளிப்பவள் பதினைந்தாயிரம் ரூபாயில் முப்பது நாட்களைக் கழிப்பாளாம்! நினைக்கும் போதே மற்ற நால்வருக்கும் சிரிப்பு தான் வந்தது.
சங்கமித்ரா பொறுத்து பார்த்தவள் கடுப்பில் “அடியே அறிவுகெட்ட மாதிரி பேசாத… நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கை ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல… சும்மா கனவுல கோட்டை கட்டாம பிராக்டிக்கலா யோசி… வெறும் காதலை வச்சு என்ன பண்ணமுடியும்? வயிறு பசிக்கிறப்போ சாப்பாடு வேணும்… அதுக்குப் படிச்சு நல்ல ஜாப்ல செட்டில் ஆகணும்டி… இந்தத் தியாகம் பண்ணுறதெல்லாம் சினிமால வேணும்னா நடக்கும்… பிராக்டிக்கலா இது எதுவும் பாசிபிள் இல்ல” என்றாள்.
அனாமிகா அமைதியானவள் “எனக்குப் புரியுது மித்து… ஆனா அப்பாவ நான் எப்பிடி சமாளிப்பேன்?” என்று ஆற்றாமையுடன் கேட்க

“நீ ஹையர் ஸ்டடீஸ் பண்ணப்போறேனு சொல்லு… நீயும் படி… சும்மா அப்பா காசுலயும் புருசன் காசுலயும் வாழணும்னு நினைக்காம உன்னோட சொந்தக்கால்ல நிக்க ஆசைப்படு… நம்ம உழைச்சுச் சம்பாதிக்கிற சுகமே தனி… அதை ஒரு ரெண்டு வருசம் அனுபவி… அதுக்குள்ள நம்ம ஆதுவும் நல்லவேலை கிடைச்சு ஓரளவுக்கு ஸ்டெடி ஆயிடுவான்… அப்புறம் தைரியமா உங்கப்பா கிட்ட பேசுவான்… அதுக்கு அப்புறம் டும் டும் டும் தான்” என்று பொறுமையுடன் விளக்கியவளின் பேச்சில் காதலர்கள் இருவரின் முகத்திலும் விளக்கெரிந்தது.
அனாமிகாவுக்கு சங்கமித்ராவின் யோசனை பிடித்துப் போய்விட சரியென்றவள் ஆதேஷிடம் மன்னிப்பு வேண்டினாள். காதலர்கள் பேச்சில் தாங்கள் எதற்கு என மூன்று தோழியரும் எழுந்திருக்க ஆதேஷ் சங்கமித்ராவை நன்றியுடன் நோக்கினான்.
கூடவே “உனக்கு நாங்க எல்லாரும் கியூபிட்னு பேர் வச்சது ரொம்ப சரி மித்து… தேங்க்யூ” என்று மகிழ்ச்சியுடன் கூற சங்கமித்ராவும் மற்ற இருவரும் தம்ஸ் அப் அடையாளம் காட்டிவிட்டு நகர்ந்தனர்.
விருஷாலி சங்கமித்ராவின் முழங்கையில் இடித்துவிட்டு “எவ்ளோ அழகா லவ்வர்சுக்கு அட்வைஸ் பண்ணுற… உனக்குக் கட்டாயம் லவ் மேரேஜ் தான் மித்து” என்று சொல்ல ரேஷ்மாவும் அதை ஆமோதித்தாள்.
ஆனால் மூன்றாமவளோ அசட்டையாகத் தோளைக் குலுக்கிவிட்டு “இம்பாசிபிள்… லவ்வர்சுக்கு அட்வைஸ் குடுத்தா நானும் லவ் பண்ணுவேன்னு அர்த்தமா? வாய்ப்பே இல்லடி… எனக்குக் காதல்ல நம்பிக்கை இல்ல” என்றாள்.
“அடியே இவ்ளோ அழகா அட்வைஸ் பண்ணீட்டு காதல்ல நம்பிக்கை இல்லனு சொல்லுற? குழப்பாத மித்து” என்றனர் ஒரே குரலாக.
இருவரையும் ஒரு நொடி நின்று முறைத்தவள் “ஓகே! உங்களுக்குப் புரியுறது மாதிரியே சொல்லுறேன்… சயனைட் ஃபேக்டரி வச்சிருக்கிறவங்க சயனடை சாப்பிட்டே ஆகணும்னு எதாச்சும் கட்டாயம் இருக்குதா?” என்று கேட்க இருவரும் மறுப்பாக தலையசைத்தனர்.
சங்கமித்ரா மெச்சுதலாக “லைக் வைஸ் லவ்வர்சுக்கு அட்வைஸ் குடுக்குற நான் லவ் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்ல… புரிஞ்சுதா?” என்று சொல்லவும் இருவரும் அதற்கும் தலையாட்டினர்.
கூடவே “நான் வாழ்க்கைய பிராக்டிக்கலா பாக்குறேன்டி… பிகாஸ் எனக்கு அனாமிகா மாதிரி கனவுலகத்துல வாழுறதுல இஷ்டமில்ல… எனக்குனு ஒரு ஆம்பிசன் இருக்குது… அது நிறைவேறுனதுக்கு அப்புறம் டைம் இருந்துச்சுனா சயனைட் சாப்பிடுறத பத்தி யோசிப்பேன்” என்று கேலி போல மொழியவும் விருஷாலி அவளின் முதுகில் அடிவைக்கவும் சரியாக இருந்தது.
சங்கமித்ரா வலியில் முகம் சுளிக்கவும் “நீ பேசுற பேச்சுக்கு உனக்குக் காதல் வந்து நீ லோலோனு சுத்தப் போற… இது விருஷாலியோட சாபம்” என்று நீட்டி முழக்கி அவள் சொல்ல ரேஷ்மா அதற்கு குபீரென நகைத்து வைத்தாள்.
சங்கமித்ராவோ அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டு அவர்களுடன் நகர்ந்தாள். இம்மாதிரியான சம்பவங்களுடன் நாட்களும் நகர்ந்தது. இறுதியாண்டு தேர்வு முடிந்ததும் விருஷாலிக்கும் கர்ணாவுக்கும் திருமணம் என்று இருகுடும்பத்தாரும் பேசிமுடித்தனர். அதே முகூர்த்ததில் ரக்சனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருமணம் என்று முடிவெடுத்தனர்.
தேர்வும் முடிவடைய ரேஷ்மாவின் படிப்பையும் தங்களின் ஃபேர்வெல் டேயையும் காரணம் காட்டி சென்னையில் தங்கிவிட்டனர் மூவரும். அச்சமயத்தில் திடீரென ஒரு வெள்ளிகிழமை இரவு மதிவதனியிடமிருந்து விருஷாலிக்குப் போனில் அழைப்பு வந்தது.
ஞாயிறன்று வித்யாசாகர் வரப்போகிறான் என்ற தகவலைப் பகிர்ந்துகொண்டவர் நிச்சயத்துக்கு நாள் அதிகமில்லை என்பதால் அவனுடன் திருநெல்வேலிக்குத் திரும்பும்படி ஆணையிட்டார்.
அதை தோழியரிடம் தெரிவித்தவள் ஞாயிறன்று தனது அண்ணன் வருகிறான் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பகிர்ந்துகொண்டாள். இருவருமே விருஷாலியின் அண்ணனைப் பார்த்ததில்லை.
ரேஷ்மாவுக்கும் சங்கமித்ராவுக்கும் சிறுவயது முதலே பழக்கம் என்பதால் ஒருவர் மற்றொருவர் குடும்பத்தைப் பற்றி அறிவர். ஆனால் விருஷாலியோ சென்னையில் படிக்க வந்த சமயத்தில் தான் அவர்களுக்கு அறிமுகமானவள் என்பதால் இங்கே இருக்கும் அவளின் சொந்தங்கள் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்தவர்கள்.
வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் சகோதரன் பற்றி அடிக்கடி அவள் பேசுவதுண்டு. முகப்புத்தகம் இன்ஸ்டாகிராம் வாட்சப் என்று அவன் அடிக்கும் லூட்டிகளை அவள் புகைப்படமாக வீடியோவாக காட்டியதும் உண்டு. ஆனால் இரு தோழிகளும் அதை உற்றுக்கவனித்ததில்லை.
சங்கமித்ராவும் ரேஷ்மாவும் மீம்களைப் பார்க்க மட்டுமே சமூகவலைதளங்களில் உலவும் ஜீவராசிகள். புகைப்படங்களைப் பகிர்ந்து லைக், கமெண்ட்டுகளை அள்ளும் பழக்கம் அவர்களுக்கு இல்லை என்பதால் வித்யாசாகரும் தங்கையின் தோழிகளை இது வரை புகைப்படத்தில் கூட கண்டதில்லை.
அன்னையின் விருப்பத்திற்காக முதல் காதலை ஒதுக்கிவைத்து திருமணத்துக்குச் சம்மதித்த வித்யாசாகரின் முன்னே மீண்டும் சங்கமித்ரா வந்து நின்றால் அவனது நிலை என்னவாகும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
அதே போல காதலில் விருப்பமற்று இருக்கும் சங்கமித்ராவின் வாழ்வில் வித்யாசாகரின் வடிவில் அந்தக் காதல் நுழைந்தால் காதலைக் குறித்த அவளது எண்ணம் மாறுமா என்பதும் விடை தெரியாத கேள்வியே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

