“மெச்சூரிட்டிங்கிற போர்வைல மனசுல இயல்பா தோணுற உணர்வுகளை மறைச்சு நாசூக்கா நடிக்கிற மனுசங்க தான் இந்த உலகத்துல அதிகம்! அவங்களுக்கு நம்மளோட இயல்பான குணம் இம்மெச்சூரிட்டியா தோணலாம்! அதுக்காக நாம நம்மளை மாத்திக்கிட்டோம்னா நம்மளோட சுயத்தை இழந்துடுவோம். சுயத்தை இழந்து உலகத்துக்காக முகமூடியோட வாழுற மனுசன் என்னைப் பொறுத்தவரைக்கும் பிணத்iதுக்குச் சமம்”
-க்யூட் கியூபிட்டின் குரல்
பாளையங்கோட்டையின் மகாராஜநகர் பகுதி நகரின் இரைச்சல் மற்றும் பரபரப்பிலிருந்து இருந்து ஒதுங்கி நின்று ஆசுவாசப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த இளங்காலை பொழுது.
செம்பருத்தி செடியும் சீத்தாப்பழ மரமும் வாயிற்காப்போனை போல காம்பவுண்ட் சுவரின் உட்பக்கம் எதிரெதிராய் நிற்க அதன் நடுவே ஓடிய நடைபாதை நீண்டு போர்டிகோவில் முடிவடைந்திருக்க அங்கிருந்து ஆரம்பித்தது அந்த வீட்டின் எல்லை.
போர்டிகோவில் நின்ற டொயோட்டா யாரிசின் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டிருந்தார் மகேந்திரன். அந்த வீட்டின் தலைவர். திருநெல்வேலியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்.
அவரது நிலைக்கு காருக்கு ஓட்டுனரைப் பணியமர்த்தி இருக்கலாம். ஆனால் தன் வேலையை அடுத்தவர் தலை மேல் சுமத்துவது சோம்பேறித்தனத்தின் ஆரம்பப்புள்ளி என்பார். அவருக்கேற்ற தர்மபத்தினியாக அமைந்தவர் மதிவதனி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கணவர் அன்றாட கடமையான காரின் கண்ணாடியைச் சுத்தம் செய்யும் பெரும்பணியை முடித்துவிட்டு வரவும் கை கழுவிவிட்டு காபி கப்பைத் தொடுமாறு பணித்தவர்
“இந்த சண்டே ஷாலியும் மாப்பிள்ளையும் கபேல மீட் பண்ணிக்கப் போறாங்களாம்… எனக்கு இதுல எந்தப் பிரச்சனையும் இல்லங்க… ஆனா மாமா கேள்விப்பட்டா…” என்று கணவரின் மூத்த உடன்பிறப்பான ராஜேந்திரனை நினைவுபடுத்தவும் மகேந்திரனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டுக்கொண்டன.
ராஜேந்திரன் பழங்கால பழக்கங்களில் ஊறிய மனிதர். அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு படித்திருந்தாலும், தன்னைப் போல படித்த மகாலெட்சுமியை மணமுடித்திருந்தாலும் இன்றும் சில விசயங்களில் அவர் பழமைவாதி தான்.
வேலைவாய்ப்புக்கென்று கூட பிறந்த ஊரான கல்லிடைக்குறிச்சியைத் தாண்டாமல் அங்கேயே இருந்து விவசாயம் தோட்டம் துரவு என வாழ்க்கையை நகர்த்தியவருக்கு மகேந்திரன் திருநெல்வேலிக்குப் புலம்பெயர்ந்ததே வருத்தம். அத்தோடு தங்களது அரண்மனை போன்ற வீட்டை விடுத்து இப்படி ஒரு மூன்று படுக்கையறை வீட்டில் அடைபட்டதில் பெரும் வருத்தம்.
ஆனால் சொன்னாலும் கேட்க கூடியவரல்ல மகேந்திரன் என்பதால் அவர் மௌனம் காத்துவிட்டார்.
மகேந்திரனின் வேலை விசயத்தில் வேண்டுமானால் ராஜேந்திரன் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் விருஷாலியின் விசயத்தில் அவ்வாறு நடப்பது கடினமென உணர்ந்தவர் “அர்ச்சனா இருக்குற நம்பிக்கைல தான் நான் ஷாலியும் மாப்பிள்ளையும் மீட் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன் மதிம்மா” என்று சொன்னபடியே காபியைக் காலி செய்தார்.
அர்ச்சனா ராஜேந்திரன் மகாலெட்சுமி தம்பதியினரின் செல்வமகள். ஒரே பெண் என்பதால் ராஜேந்திரனுக்கும் அவள் சொல்லே வேதவாக்கு. அவளது மைத்துனனுக்குத் தான் விருஷாலியைப் பெண் கேட்டிருந்தனர்.
அர்ச்சனாவின் கணவன் கதிரவன் குணத்தில் தங்கம். திருமணமான இரு வருடங்களில் மனைவியைத் தலை பிரசவத்திற்கு மாமனார் இல்லத்திற்கு அனுப்பிவைக்கவே அவ்வளவு யோசித்தவன்.
அர்ச்சனாவின் மீது அவனுக்கு இருக்கும் எல்லையற்றை அன்பே அவனது இளையச் சகோதரனான கர்ணனுக்கு விருஷாலியை பெண் கேட்டதும் மகேந்திரனைத் தலையாட்டவைத்தது.
எந்தத் தந்தைக்குத் தான் அவரது மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் மாப்பிள்ளையை வேண்டாமென மறுக்கத் தோன்றும்? உடனே சம்மதித்தவர் அர்ச்சனாவின் கோரிக்கைப்படியே இருவரும் காபிஷாப்பிலோ கபேயிலோ சந்தித்துப் பேச அனுமதியளித்துவிட்டார்.
அத்தோடு “ஷாலி ஒன்னும் தனியா போகப்போறதில்ல… அவ கூட அவளோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் போவாங்க… சோ நீ ஒரி பண்ணிக்காத மதி… வித்தி கிட்ட விசயத்தைச் சொல்லியாச்சா?” என வினவினார் அவர்.
மதிவதனி இல்லையென தலையாட்டியவர் “அவனுக்கு இது ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கட்டுமேங்க… எப்பிடியும் வித்தி நம்ம பாத்த பொண்ணை வேண்டானு சொல்லப்போறதில்ல! அதனால அவனுக்குச் சர்ப்ரைஸ் குடுப்போம்” என்று முகம் ஜொலிக்க சொல்லவும் மகேந்திரனுக்கு மைந்தன் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்னர் அளித்த வாக்கு நினைவுக்கு வந்தது.
“என் லைப்ல கரியரை மட்டும் நானே சூஸ் பண்ணிக்கிறேன்… என் கல்யாணம் உங்க இஷ்டத்துக்குத் தான் நடக்கும்மா… நீங்க பாத்து யார் கழுத்துல தாலி கட்டச் சொல்லுறீங்களோ அந்தப் பொண்ணை மறுபேச்சு இல்லாம மேரேஜ் பண்ணிப்பேன்” என்று தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தான் வித்யாசாகர்.
அதை நினைவு கூர்ந்தவர் “எல்லாம் உன் இஷ்டம் தான் மதிம்மா… உனக்கு ரக்சனாவ பிடிச்சிருந்தா எனக்கு ஆட்சேபணை இல்ல” என்று கூறியவர் கல்லூரிக்குக் கிளம்ப தயாரானார்.
மதிவதனியும் மகேந்திரனும் அறியாத விசயம் என்னவென்றால் அவர்களின் புதல்வன் வெளிநாடு சென்று படிக்க பெற்றோரைச் சம்மதிக்கவைக்கவே அந்த வாக்கை அளித்தான் என்பது. அது தெரியாது அவனுக்கும் விருஷாலிக்கும் சேர்த்தே திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தனர் இரு குடும்பத்தாரும்.
**************
“இந்த பிங்க் கலர் டாப் ஓகேவாடி?” என ஆயிரத்து ஓராவது முறை கேட்டுச் சங்கமித்ராவின் பொறுமையைச் சோதித்துவிட்டு அதை அணிந்துகொண்டாள் விருஷாலி.
அதன் பின்னர் ரேஷ்மா அவளது தலைமுடியை ஸ்ட்ரெய்னர் கொண்டு நேராக்கி முடிக்க, இன்னும் முக அலங்காரத்தில் உள்ள அனைத்து படிகளையும் தவறாது பின்பற்றி முடித்து விருஷாலியை பூலோக ரம்பையாக மாற்றிவிட்டாள் சங்கமித்ரா.
எல்லாம் முடிந்து கண்ணாடியில் தனது பிம்பத்தை ஆராய்ந்த விருஷாலிக்குப் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.
“என்னடி ஒன் ஹவரா உக்கார வச்சு என்னென்னமோ பண்ணுன… பட் ஒரு வித்தியாசமும் தெரியலயே?” என்று தனது முகவாயில் ஆட்காட்டிவிரலைத் தட்டி ஆராய்ந்தாள்.
சங்கமித்ரா கர்வத்துடன் புன்னகைத்தவள் “தெரியாது ஷாலி… ஏன்னா இது தான் ‘நோ மேக்கப்’ மேக்கப் லுக்… இதோட ஸ்பெஷாலிட்டியே நீ மேக்கப் போட்டிருக்கனு யாராலயும் சொல்லமுடியாது” என்றாள்.
ரேஷ்மா மேலே பார்த்து பெருமூச்சு விட்டவள் “அதுக்கு ஏன்டி மேக்கப் பண்ணணும்?” என்று கேட்க
“மேக்கப் பண்ணுறது ஃபேஸ்ல இருக்குற இம்பெர்பெக்சனை மறைக்கிறதுக்கு தான்… ஆனா இந்த மேக்கப்போ மேக்கப் போட்டதையே மறைக்குது… நாட் பேட் மித்து” என்றாள் விருஷாலி.
சங்கமித்ரா ‘அட அற்ப பதரே’ என்ற பொருள்படும் பார்வையும், ‘அப்பிடி சொல்லுடி ராஜாத்தி’ என்ற பொருள்படும் பார்வையையும் முறையே ரேஷ்மா மற்றும் விருஷாலியை நோக்கி வீசியவள் தானும் கிளம்பத் தயாரானாள்.
அவள் முகத்தைத் திருத்துவதைப் பார்த்த ரேஷ்மா “மித்துவோட ஆலிவ் கலர் ஸ்கின் ரொம்ப அழகுல்ல ஷாலி” என்று தோழியின் ஆலிவ் வண்ண சருமம் மாசுமருவற்று இயற்கையாகவே மினுமினுப்பதை பொறாமையுடன் பார்த்தபடி கூறினாள் விருஷாலியிடம்.
அவளும் பெருமூச்சுடன் “ஹூம்! அது கடவுளோட கிப்ட்… எவனுக்கு குடுத்து வச்சிருக்கோ? ஆனா இவளுக்கு அது புரிஞ்சா தானே… எப்போவும் ஆன்ட்டி கிட்ட நான் குண்டு, கருப்புனு சொல்லியே சண்டை போடுறா” என்று கூறி குறைபட்டுக்கொண்டாள்.
தோழியரின் பேச்சைக் கேட்டு மனதிற்குள் நகைத்துக்கொண்டாள் சங்கமித்ரா. அவளது பேச்சு தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு என எண்ணும் தோழியரை எண்ணிச் சிரிக்காமல் என்ன செய்வாள்?
அவளைப் பொறுத்தவரை தனது சருமநிறத்தையோ பூசிய உடல்வாகையோ என்றைக்கும் குறைவாக நினைக்கும் ரகமல்ல. அதேநேரம் தோழியர் சொல்வதைப் போல கடவுளின் பரிசு என்றெல்லாம் நினைத்ததுமில்லை.
அவளுக்குப் பேசும் கண்களும், உணர்ச்சிகளைக் கொட்டும் முகமும் இயல்பிலேயே வாய்த்திருந்ததால் பள்ளியில் மகாபாரத நாடகத்தில் திரவுபதியாக நடிக்க ஆசைப்பட்டாள். ஆனால் இடும்பி வேடம் தான் தரப்பட்டது.
காரணம் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் திறமை இருந்தாலும், வசனம் நன்றாகப் பேசத் தெரிந்தாலும் அவளது சருமம் சபீனா போட்டு விளக்கிய பாத்திரம் போல பளீரென ஜொலிக்கவில்லை என்பதே.
அச்சம்பவம் சங்கமித்ராவுக்குள் தாழ்வுமனப்பான்மையை விதைப்பதற்கு பதிலாக துணிச்சலையே உண்டாக்கியது.
“ஸ்கின் கலரையும் பாடி ஸ்ட்ரக்சரையும் வச்சு என்னோட அழகை எடை போடுற முட்டாள்களோட பியூட்டி ஸ்டாண்டர்ட் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? ஐ’ம் வெரி பியூட்டிபுல் ஜஸ்ட் த வே ஐ அம்… என் அழகையோ அறிவையோ எந்தக் கொம்பனோ கொம்பியோ அக்னாலெட்ஜ் பண்ணணும்னு அவசியமில்ல”
இந்த வார்த்தைகள் அவளுக்கு அவளே அடிக்கடி சொல்லிக்கொள்பவை தான். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவளுக்குள் நம்பிக்கை பெருகும்.
ஆனால் இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை அழகிற்கான வரையறை மாறாது என்ற நிதர்சனத்தையும் நன்கு புரிந்துவைத்திருப்பவள் என்பதால் அவளுடைய நிறம் குறித்த எந்தப் பாராட்டுகளும் அவளது இதயத்தைத் தொடுவதில்லை என்பது தான் உண்மை.
தோழியரின் இப்போதைய பாராட்டுகள் அவளுக்குச் சந்தோசத்திற்கு பதில் நகைப்பை உண்டாக்கியதற்கு காரணமும் இதுவே.
“திருநெல்வேலிக்காரங்கள பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல மனுசங்க ரெண்டே ரெண்டு கலர் தான்… ஒன்னு கருப்பு, இன்னொன்னு சிவப்பு… நீ சொல்லுற ஆலிவ் ஸ்கின்லாம் அவங்களைப் பொறுத்தவரைக்கும் கறுப்பு தான் ரேஷ்… இதுல நான் வேற ஓவர் வெயிட்” என்று அலுத்துக்கொண்டாள் சங்கமித்ரா.
ரேஷ்மா அவளது தோளை இடித்தவள் “நீ ஒன்னும் ஓவர் வெயிட் இல்ல மித்து! நீ கொஞ்சம் கொழுக் மொழுக்னு ஹன்சிகா மாதிரி பாக்க ஷப்பியா இருக்கடி… எனக்கெல்லாம் உன்னோட கியூட்டான ரவுண்ட் ஃபேஷை பாத்து செம பொறாமை… அதோட நீ ஒன்னும் கறுப்பு இல்ல… நீ டஸ்கி பியூட்டி பேபி… பாத்துட்டே இரு, நீ இப்பிடி உன்னையே குறைவா நினைக்கிறதுக்கு செம ஹாண்ட்சம்மா ஒருத்தன் உன் முன்னாடி வந்து நின்னு என்னை கல்யாணம் பண்ணிக்கோனு சுத்தி சுத்தி வரப் போறான்… மார்க் கை வேர்ட்ஸ்” என்றாள் கண்களில் ஆவல் மின்ன.
“கிழக்குல உதிக்குற சூரியன் மேற்குல உதிச்சா வேணும்னா நீ சொல்லுறது நடக்கும்” என்றாள் சங்கமித்ரா கண்சிமிட்டியபடி கேலியாக.
தொடர்ந்து “அண்ட் ஒன் மோர் திங்க், வெறும் முக அழகை வச்சு எவன் பாராட்டுனாலும் எனக்கு உச்சி குளிராது ரேஷ்” என்றாள் அவள்.
அதன் பின்னர் மூவருமாகக் கிளம்பி சன்ஷைன் கபேயை அடைந்தபோது ஆறுமணியைத் தாண்டிவிட்டது.
விருஷாலிக்கு மணமகனாக வரிக்கப்பட்டவனோ ஒரு மணிநேரத்துக்கு முன்னரே கபேயில் அவர்களுக்காக முன்பதிவு செய்திருந்த மேஜையில் காத்திருந்தான்.
மூவரும் அவனிடம் அசடு வழிந்தபடி மன்னிப்பு கேட்க “இட்ஸ் ஓகே” என்று புன்னகை முகமாகச் சொன்ன கர்ணனை விருஷாலிக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப்போய்விட்டது. அவனை இதற்கு முன்னரும் அர்ச்சனாவின் திருமணத்தில் பார்த்திருக்கிறாள் தான்! ஆம்! அவன் ஒன்றும் முற்றிலும் புதியவன் அல்ல. அவளது பெரியப்பா மகள் அர்ச்சனாவின் மைத்துனன் அவன். அர்ச்சனாவின் திருமணத்தில் பார்த்திருந்தாலும் பேசிப் பழக்கமில்லை.
எனவே சங்கமித்ராவும் ரேஷ்மாவும் அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிகொண்டனர்.
உலகை மறந்த அரைமணிநேர உரையாடல், ஒரு கோல்ட் காபி, ஒரு சாக்கோ லாவா கேக், அவனது இதமான பேச்சு; இது போதும் சம்மதம் சொல்வதற்கு என தனக்குள் சொல்லிக்கொண்டபடி வெட்கத்துடன் கர்ணனுடன் சேர்ந்து தோழிகள் அமர்ந்திருக்கும் மேஜையை அடைந்தாள் விருஷாலி.
அவர்களின் புன்னகையே சம்மதத்தைச் சொல்லிவிட தோழிகள் இருவரும் விருஷாலி கர்ணனின் திருமணத்திற்கு என்ன உடை அணியலாம் என கற்பனையுலகுக்குள் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.
கர்ணன் தன்னவளிடம் இரகசியக் கண்சிமிட்டலுடன் விடைபெற்றுக்கொண்டவன் “பை சிஸ்டர்ஸ்” என்று சொல்லிவிட அக்கணமே அவன் சங்கமித்ராவுக்கும் ரேஷ்மாவுக்கும் உடன்பிறவா சகோதரனாகிவிட்டான் எனலாம்.
“நோ மேக்கப் லுக்கையும் தாண்டி ஷாலியோட ஃபேஸ்ல ஒரு க்ளோ வந்துடுச்சு ரேஷ்” என்ற சங்கமித்ராவின் கேலியும்
“அடியே அதுக்கு பேர் தான் கல்யாணக்களைனு சொல்லுவாங்கடி… ஆக்சுவலா அண்ணா இப்போ பொண்ணு மட்டும் தானே பாத்துட்டுப் போனார்… அப்போ இதுக்குப் பேர் பொண்ணு பாக்குற களைனு தானே சொல்லணும்?” என்ற ரேஷ்மாவின் மொக்கை ஜோக்கும் விருஷாலியை இன்னும் ஆனந்தச்சாகரத்தில் மூழ்கடித்தது என்றால் மிகையில்லை.
ஆனால் அப்போதிலிருந்து மூன்றுமணி நேரத்துக்கு முன்னர் அவளது மூத்தச்சகோதரனான வித்யாசாகரோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். உபயம் ஜிம்மின் ஒர்க் அவுட் பெஞ்சின் மீது படுத்திருந்து இரு கரங்களிலும் டம்பிள்சை ஏந்தியிருந்தவனுக்கு அவனது அன்னையிடமிருந்து வந்த போன் அழைப்பு.
அதைப் பேசிமுடித்துவிட்டு திக்பிரமை பிடித்தவனை போல அமர்ந்திருந்தவனின் புஜத்தைச் சுரண்டினான் நரேன்.
“மச்சி என்னடா ஆச்சு? டம்பிள்ஸ் வெயிட்டை பேலன்ஸ் பண்ண முடியாம தலையில போட்டுக்கிட்டியா?” என்று வினவியவண்ணம் மானிட ஈ.சி.ஜி ஸ்கேனராக மாறி வித்யாசாகரின் தலையில் காயமேதும் ஏற்பட்டுள்ளதா என பரிசோதிக்க வேறு ஆரம்பித்தான்.
இவ்வளவு நேரம் இருந்த திக்பிரமை பிடித்த நிலை மாறி வித்யாசாகர் நரேனை அக்னி குமுறும் விழிகளால் எரித்ததில் அந்த ஆக்டிவ் சென்ட்ரம் ஜிம்மின் வெப்பநிலை உயர்ந்து கொதிநிலையை எட்டி அந்த அனலானது ஆச்சன் நகரிலும் வெப்ப அலைகளை வீசவைத்தது என்றால் மிகையில்லை.
நரேன் எதற்கும் கோபப்படாத தனது நண்பனா இப்படி விஸ்வாமித்ர முனிவரைப் போல கோபத்தில் கொந்தளிப்பது என்று ஆச்சரியப்பட்டவாறே விழித்துவைக்க வித்யாசாகர் விறுவிறுவென அங்கிருந்த டவலால் பெருகிய வியர்வையைத் துடைத்துக்கொண்டவன் உடைமாற்றும் அறைக்குள் சென்றுவிட்டான்.
சில நிமிடங்கள் கழித்து திரும்பிவந்தவனின் வெற்றுத்தோள்களை இப்போது டிராக்சூட்டின் சட்டை கவ்வியிருந்தது. அதன் ஹூடியை பின்னே இழுத்துக் கொண்டவன் நரேனும் உடைமாற்றியிருப்பதைப் பார்த்துவிட்டு
“வாடா நல்லவனே! அண்ட் ஒன் மோர் திங் எனக்கு ஏற்பட்டது ஹெட் இன்ஜுரி இல்ல…. ஹார்ட் இன்ஜுரி… உடனே கார்டியாலஜிஸ்ட் அவதாரம் எடுத்துடாத மகனே… ஐ ஃபீல் டௌன் அண்ட் ஹோப்லெஸ்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவர்கள் தங்கியிருக்கும் இடம் நடந்து செல்லும் தொலைவு தான். நடக்கும் போதும் அவனது முகம் வாடியிருக்கவே நரேன் ஃப்ளாட்டை அடைந்ததும் கேட்டுக்கொள்ளலாம் என அமைதியாக வந்தான்.
ஃப்ளாட்டை அடைந்ததும் வித்யாசாகர் அந்த இரண்டு படுக்கையறை ஃப்ளாட்டின் லிவிங் ரூமின் சோபாவில் சரிந்தவன் தீவிர யோசனைக்குள் ஆழ்ந்துவிட்டான்.
நரேன் இருவருக்கும் சேர்த்தே ஏதோ புரோட்டின் டிரிங்கை எடுத்துவந்தவன் அவனிடம் நீட்ட வித்யாசாகரின் கவனம் அங்கே இருந்தால் தானே!
இதற்கு மேலும் பொறுமை காக்க இயலாதவனாக “டேய் நீ கடல்ல விட்ட டைட்டானிக் டூ பாயிண்ட் ஓ பனிப்பாறைல இடிச்சு கடலுக்குள்ள சமாதி ஆயிடுச்சா?” என்று கேட்க வித்யாசாகர் வெறுமையாய் நோக்கினான்.
“என்னடா எந்தக் கப்பல் கவுந்துடுச்சுனு இன்டேரக்டா கேக்குறீயா?” என அவன் அதே வெறுமையுடன் கேட்க
“இதை விட டேரக்டா யாராலயும் கேக்கமுடியாதுடா” என்று சமாளித்த நரேன் வித்யாசாகரின் அருகில் அமர்ந்து அவனது தோளில் கைபோட்டான்.
“ஜோக்ஸ் அப்பார்ட் வித்தி! வாட் ஹேப்பண்ட்? அம்மாவோட போன்கால் வந்ததுல இருந்து உன் முகமே சரியில்லடா… கேட்டா ஹார்ட் இன்ஜுரி அது இதுனு சம்பந்தமில்லாம உளறுற… என் கிட்ட ஷேர் பண்ணிக்க முடியாத அளவுக்குப் பெரிய சீக்ரேட்டா?” என தண்மையாக கேட்டான்.
“டேய் மச்சி… இவ்ளோ ஃபார்மலா பேசாதடா… என்னால அந்த ஷாக்ல இருந்து வெளிய வரமுடியலடா” என்று பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தான் வித்யாசாகர்.
நரேன் அவனை பொருள்விளங்கா பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“அம்மா எனக்கு மேரேஜுக்கு பொண்ணு பாத்துட்டாங்கடா… அர்ச்சுக்காவோட நாத்தனார் ரக்சனா தான் பொண்ணு… ஷாலிய அவளோட அண்ணாவுக்குக் கேட்டாங்களாம்… அப்பிடியே ரக்சனாவை எனக்குப் பேசிமுடிச்சிட்டாங்களாம்… ஷாலி இன்னைக்கு ஈவினிங் கர்ணாவ கபேல மீட் பண்ணிப் பேசப்போறாளாம்… ஏற்பாடு எல்லாமே முடிஞ்ச மாதிரி தான் வித்தி, நீ ஊருக்கு வந்ததும் ஒரே முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தயும் முடிச்சிடணும்னு அவங்க ஆசையோட சொன்னப்போ என்னால வேண்டானு சொல்ல முடியலடா” என்றான் வித்யாசாகர் ஆற்றாமையுடன்.
ஆனால் அவனது நண்பன் நரேனோ “நீ ஏன்டா மறுக்கிற? அந்தப் பொண்ணு ரக்சனாவ நானும் அர்ச்சுக்கா கல்யாணத்துல பாத்திருக்கேன்… ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தா… சிரிச்சமுகமா எல்லார் கிட்டவும் பேசுனா… முக்கியமா அவளும் நம்ம மேஜர்… சோ நம்ம கஷ்டமெல்லாம் அவளுக்கும் நல்லா புரியும்… அவளை ஏன்டா வேண்டானு மறுக்கணும்? நியாயப்படி இவ்ளோ ஸ்மார்ட்டான பொண்ணு உனக்கு லைப் பார்ட்னரா வரப்போறத நினைச்சு நீ சந்தோசப்படணும் மேன்” என்றான் உற்சாகமாக.
அப்போதும் வித்யாசாகரின் முகவாட்டம் மாறாதிருக்கவே “என்னடா பேச்சிலர் லைபோட ஃப்ரீடம் பறிபோயிடும்னு பயப்படுறீயா? எல்லாரோட வாழ்க்கைலயும் கல்யாணம்னு ஒன்னு கட்டாயம் நடந்தாகணும் மகனே… அப்ராட்ல இருந்தாலும் நம்ம இந்தியன்ஸ் தான்” என்று தவறான நேரத்தில் இந்தியக்கலாச்சாரம் பற்றி வகுப்பெடுக்கும் ஆசிரியராக மாறினான் அவன்.
வித்யாசாகரோ மீண்டும் அவனை முறைத்தவன் “இடியட் இதை தவிர மேரேஜை வேண்டானு சொல்ல எனக்கு வேற காரணமே இருக்கக்கூடாதா?” என்று வெகுண்டெழுந்தான்.
“அடேய் அப்பிடி என்னடா புடலங்கா காரணம்?” என நரேனும் குரலை உயர்த்தினான்.
வித்யாசாகர் அவனை விசித்திரமாகப் பார்த்தான். பின்னர் எழுந்தவன் இடுப்பில் கையூன்றி நின்று தலையை உலுக்கிக்கொண்டான்.
பின்னர் தன்னைச் சமனப்படுத்திக்கொண்டவன் “நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்டா… என்னால எப்பிடி இன்னொரு பொண்ணை மேரேஜ் பண்ணிக்கமுடியும்?” என்று வேதனையுடன் கூறிவிட்டு முகம் கசங்க சிகையை அழுத்திக்கொண்டான்.
அவனை குழப்பத்துடன் பார்த்த நரேந்திரனோ எழுந்து அவனது முகத்தை உற்றுநோக்கினான்.
பின்னர் “சின்னப்பிள்ளைத்தனமா பேசாத வித்தி… ஏன்டா மூனு வருசத்துக்கு முன்னாடி கோயில்ல பாத்தேன், ரதவீதில பாத்தேனு கதை சொன்ன… டெய்லி கனவுல வர்றானு சொன்ன… ஆப்வியஸ்லி சிலநேரம் லவ் பண்ணுறேன்னும் சொல்லிருக்க… ஆனா ஒன்னை மறந்துட்டடா… அந்தப்பொண்ணு இப்போ உன்னை இதே போல நினைச்சு உருகிட்டிருப்பாளா? வாய்ப்பு இல்ல தானே… அவ அவளோட வாழ்க்கைய ஜாலியா வாழ்ந்திட்டுருப்பா வித்தி… ஹூ நோஸ், இப்போ அவளுக்கு மேரேஜ் கூட ஆயிருக்கலாம்” என அவன் நிறுத்தவும் வித்யாசாகரின் முகத்தில் நீண்டநாள் கனவு உடைந்த வலி பரவியது.
நரேன் அவனது தோளில் தட்டிக்கொடுத்தவன் “பீ பிராக்டிக்கல் வித்தி… வாழ்க்கைங்கிறது வெறும் கனவு மட்டுமில்லடா… கனவுல வர்ற எல்லாரும் வாழ்க்கைலயும் வந்துடுவாங்கனு நினைக்கிறது முட்டாள்தனம்… அந்த முட்டாள்தனத்தால நம்ம மேல உண்மையான அன்பைக் கொட்டுறவங்களை நம்ம கஷ்டப்படுத்திடக்கூடாது… நீ தானே உன் கல்யாணம் அம்மாவோட விருப்பப்படி நடக்கும்னு பிராமிஸ் பண்ணுன… நீயே அதை மீறலாமா? இதுல உன் லைப் மட்டுமில்ல, ஷாலியோட வாழ்க்கையும் கலந்துருக்கு… டீனேஜ் பையனாட்டம் யோசிக்காம மெச்சூர்டா திங்க் பண்ணு… நல்ல முடிவா எடு” என்று நண்பனுக்கு அறிவுரை கூறினான்.
வித்யாசாகரால் தான் நரேன் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் வெறும் கனவு மட்டும் தான் என்று அவனால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை.
இரத்தமும் சதையுமாய் அவனது இதயத்தில் பதிந்து போன அவளின் பிம்பத்துடன் மூன்றாண்டுகளைக் கழித்தவனுக்கு இப்போது நிதர்சனம் முகத்தில் அறைவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
அதேநேரம் அவன் அவளை எண்ணி, அவளன்றி இன்னொருத்தியை மணக்கவிருக்கும் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவளுக்கு அவனது உருவம் மறந்துகூட போயிருக்கலாம்.
இவ்வளவு ஏன், நரேந்திரன் சொன்னது போல அவளுக்கு திருமணம் முடிந்து இந்நேரம் மாற்றான் மனைவியாகக் கூட மாறியிருப்பாளோ என்னவோ! நினைக்கும் போதே அவள் இருக்கும் இதயத்தில் ஆயிரம் ஊசிகளைக் கொண்டு குத்துவதைப் போன்ற வலி வித்யாசாகருக்கு!
இரண்டு நாட்கள் இந்த வலியுடன் போராடியவன் வெகுசிரமத்துடன் அன்னையை மொபைலில் அழைத்தான்.

“எனக்கு ரக்சனாவ மேரேஜ் பண்ணிக்கச் சம்மதம்மா” மறுமுனையில் மதிவதனியின் சந்தோசக்குரல் அவனது வலிக்கு மருந்திடுவது போல ஒலித்தது. கூடவே என்றோ ஒருநாள் முதல் பார்வையிலேயே அவனது மனதுக்குள் பதிந்தவளின் பிம்பமும் மங்க தொடங்கியது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

