“இந்த உலகத்துலயே சந்தோசமான விசயம் என்ன தெரியுமா? நமக்காக ஒருத்தவங்க தன்னை மாத்திக்கிறது தான். உண்மையான அன்பு இருக்குற இடத்துல இம்மாதிரியான மாற்றங்கள் சகஜம் தானே! மனுசங்க எல்லாரும் பெர்பெக்டானவங்க கிடையாது. ஆனா தன்னை பெர்பெக்டா மாத்திக்க எல்லாருமே டிரை பண்ணலாம். அதை விட்டுட்டு என்னை நான் மாத்திக்க மாட்டேனு வறட்டுப்பிடிவாதம் பிடிக்குறவங்களை எனக்குச் சுத்தமா பிடிக்காது”
-ஸ்வீட் டெவிலின் குரல்
“நிகழும் ஸ்ரீசார்வரி வருடம் மாசி மாதம்…” என்ற வழமையான வரிகளை தனது கையிலிருந்த நான்கு பக்கங்களிலும் மஞ்சள் பூசிய லக்னப்பத்திரிக்கையைப் பார்த்து வாசித்துக்கொண்டிருந்தார் புரோகிதர்.
அவர் வாசித்து முடிக்கவும் தட்டு மாற்றிக்கொள்ளும் சம்பிரதாயம் இனிதே நடந்தேறியது. அதன் பின்னர் குறுகுறுப்பு மிளிரும் மணமகனின் வதனமும், வெட்கம் மலர்ந்த மணமகளின் வதனமும் புன்னகையை இன்னொரு கோட்டிங் பூசிக்கொண்டு புகைப்படம் வீடியோ எடுப்பவர்களுக்கு தரிசனம் கொடுக்க ஆரம்பித்தன.
அம்பாசமுத்திரத்தின் மரியாதைப்பட்ட குடும்பத்தில் நீண்டநாள் கழித்து நடக்கும் சுபநிகழ்வு அது. மணமகளின் தந்தை அதனாலேயே நிச்சயத்தைத் திருமணம் அளவுக்குப் பெரிய மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
உற்றார் உறவினர்களுடன் இருவரின் தோழமைவட்டங்களும் கலந்துகொண்டு சிறப்பித்த அவ்விழாவின் நாயகியின் அன்னை உடலுக்குக் காஞ்சிப்பட்டையும் முகத்திற்கு கர்வத்தையும் ஆடையாக்கிக் கொண்டு பொன் நகைச்சுரங்கம் போல நடமாடிக்கொண்டிருந்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வந்தோரை வரவேற்பது, மேடைக்கு அழைத்துச் செல்வது, புகைப்படம் எடுத்தவர்களிடம் இன்முகமாகப் பேசி வேலையாட்களை அழைத்துச் சாப்பிட கூட்டிச் செல்லுமாறு பணிப்பது என ஒற்றைப்பெண்மணியாக இத்தனை பொறுப்புகளையும் செய்தபடி ஓடியாடிக் கொண்டிருந்தவர் உறவுக்காரப்பெண்மணிகள் அழைக்கவும் அந்தக் கூட்டத்தை நோக்கி நகர்ந்தார்.
இந்த உறவுக்காரப்பெண்மணிகள் இளையவர்களின் பார்வையில் ஆபத்தானவர்கள். சிங்கிள் சிங்கமாக வாழும் தங்களை நைச்சியமாகப் பேசி இல்லறச்சிறைக்குள் தள்ளும் வார்டன்களான அவர்களை தங்களது அன்னையை நெருங்கவிடும் தவறைச் செய்துவிட்டால் எந்த யுவதியும் திருமதி ஆகியே தீரவேண்டும். விழாவின் நாயகி என்ன தான் சந்தோசப்பட்டாலும் அவர்களை ஒரு சதவிகித கடுப்புடன் முறைத்ததற்கான் காரணமும் இதுவாகவே இருக்கலாம்.
என்ன தான் யுவதிகளுக்கு அவர்கள் சிறை வார்டன்களைப் போல தோற்றமளித்தாலும் அவர்களைப் பெற்ற அன்னையருக்கு ‘பெண்ணுக்குத் திருமண வயது வந்தாச்சே, இன்னும் வரன் பாக்கலயா?’ என்ற செய்தியை நினைவுறுத்தும் நடமாடும் ரிமைண்டர்கள்.
அப்படிப்பட்ட ரிமைண்டர் கூட்டத்தை நோக்கித் தான் சென்றார் மணமகளின் அன்னை.
முகமெங்கும் புன்னகையில் விகசிக்க “சொல்லுங்க ராணி மதினி… ஏற்பாட்டுல எதுவும் குறை இருக்குதா?” என அக்கறையுடன் அவரை அழைத்த பெண்மணியிடம் விசாரித்தவர் அந்த ரிமைண்டர் கூட்டத்தின் நடுநாயகமாக அமர்ந்திருந்த அடர்பச்சைவண்ண காஞ்சிபுரம் பட்டுப்புடவையை சற்றே கர்வத்துடன் நோக்கினார்.
அந்தப் பச்சைப்புடவைக்குச் சொந்தக்காரியான பெண்மணியோ டாம்பீகமாக தனது கழுத்தில் மரகதமும் ரூபியும் கலந்து மின்னும் டெம்பிள் டிசைன் கழுத்தாரத்தைச் சரி செய்வது போல தொண்டையைச் செறுமிவிட்டுத் திருவாய் மலர்ந்தார்.
“ஏற்பாட்டுல குறை ஒன்னும் இல்ல விசாலாட்சி மதினி… சபைல நம்ம நந்தினிக்கு நீங்க போடுறதா சொன்ன நகைய கேட்டதும் நான் ஷாக் ஆயிட்டேன்… சங்கரன் அண்ணனுக்கு தொழில் நல்லா தானே போகுது? ஏன் கேக்குறேனா, வெறும் நூறு பவுன் நகைனு தான் என் காதுல விழுந்துச்சு” என்றவர் மறக்காமல் தனது காதில் அணிந்திருந்த தோட்டையும் தடவிக்கொண்டார்.
சொல்லிமுடித்தவர் தனது அலட்சியம் ததும்பும் விழிகளால் அந்தப் பெண்மணியை ஏறிட அதற்குள் வார்டன் கூட்டத்தின் உறுப்பினர்களும் வளவளக்க ஆரம்பித்தனர்.
“நானும் கேக்கணும்னு நினைச்சேன் விசாலாட்சி…. ஒரே பொண்ணு தானே… வெறும் நூறு பவுனைப் போட்டு அனுப்புறது நல்லாவா இருக்கு?” என அவர்கள் அங்கலாய்க்க அந்த அங்கலாய்ப்பின் ஆரம்பப்புள்ளியான பச்சை காஞ்சிபுரம் பட்டுப்புடவையை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் எரிப்பது போல முறைத்தார் அந்த விசாலாட்சி.

ஆனால் அடுத்த நொடியே அலட்சியத்தைச் சாயமாகப் பூசிக்கொண்டு அவரது உதடுகள் வளைந்தது.
“நகைய விடுங்க மதினி… என் மகள் படிச்சிருக்கா… அதோட அவ மூக்கும் முழியுமா இருக்கா… அவளோட அழகுக்கே சம்பந்தியம்மா நகையும் வேண்டாம், பணமும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க… துடைச்சு வச்ச குத்துவிளக்காட்டம் பொண்ணைப் பெத்து வச்சிருக்கேன்… ம்ஹூம்… உங்களுக்குத் தான் கஷ்டம், அப்பிடி தானே பூர்ணா மதினி?” என்று விசாலாட்சி நீட்டி முழக்கவும் அந்தப் பச்சைவண்ண காஞ்சிப்பட்டு அணிந்திருந்த பூர்ணா என்ற சம்பூர்ணாவின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.
இவ்வளவு நேரம் அவருக்குத் தாளம் போட்ட வார்டன் கூட்டமோ “ஆமா பூர்ணா… நந்தினியோட அழகுக்கே மாப்பிள்ளைவீட்டுக்காரங்க கொத்தீட்டுப் போயிடுவாங்க… ஆனா நம்ம மித்ரா அப்பிடியா? மாநிறத்துக்கும் கீழ… இப்போவே நந்தினிக்கு அக்கா மாதிரி தெரியுறா… எதுக்கும் சட்டுபுட்டுனு மாப்பிள்ளைய பாத்து முடிச்சு விட்டுடு… இன்னும் வருசத்தைக் கடத்துனா அவளுக்குப் பீமனையும் கடோத்கஜனையும் மாதிரி தான் மாப்பிள்ளை தேடணும்” என்று சொல்லிவிட்டுப் பெரிய ஹாஸ்யத்தைச் சொன்னது போல நகைத்து வேறு வைக்க சம்பூர்ணா சினத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
அந்த விசாலாட்சியின் சவால் விடும் பார்வையில் அவமானமுற்றவர் மனதிற்குள் “எல்லாம் இந்த மித்ராவால வந்தது… அந்த மதுரைக்கார சம்பந்தத்தை வேண்டானு சொல்லலனா இந்நேரம் நிச்சயத்தை முடிச்சிருக்கலாம்… எல்லாருமா சேர்ந்து அவ விருப்பத்துக்கு மரியாதை குடுக்கிறேனு போட்ட ஆட்டத்துல இன்னைக்கு எனக்குத் தான் அவமானம்” என்று அவர் பெற்ற செல்வமகளைப் பற்றி கடுகடுத்துக்கொண்டார்.
விழா முடியும் வரை விசாலாட்சியின் அலட்சியச்சிரிப்பு தன்னைச் சுற்றி வலம்வருவதை உணர்ந்தவர் கிளம்பும் போது கணவரை மொபைலில் அழைத்தார்.
அவர் எடுத்ததும் “எங்க இருக்கீங்க? உங்களோட ஒன்னு விட்ட தங்கச்சி எனக்குச் சிறப்பா மரியாதை குடுத்துட்டா… அதான் நம்ம அந்தஸ்துக்கு ஏத்தவங்க வீட்டு விசேசத்துக்கு மட்டும் போவோம்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன்… என் பேச்சை நீங்களும் கேக்க மாட்டீங்க… உங்களை பெத்தவங்களும் கேக்க மாட்டாங்க” என சிடுசிடுக்க ஆரம்பித்தார்.
ஆனால் மறுமுனையில் கேட்ட அவரது கணவர் சாகித்தியனின் அமர்த்தலான சிரிப்பில் சம்பூர்ணாவின் கோபமெல்லாம் சூரிய ஒளியில் வைத்த பனிக்கட்டியைப் போல உருகி காணாமல் போய்விட “சிரிச்சது போதுங்க… நீங்க வந்து என்னை அழைச்சிக்கிறீங்களா இல்ல சர்வாவ கூப்பிடவா?” என குறைப்பட்டபடி வினவினார்.
“உன் மகன் ஏதோ புதுவகை நெல்லை பத்தி கிள்ளிகுளம் காலேஜ்ல செமினார் நடத்துறாங்கனு அதுல கலந்துக்க போயிருக்கான் பூர்ணாம்மா… நானே வந்து உன்னை அழைச்சிக்கிறேன்” என்று பதிலளித்த சாகித்தியன் சொன்னது போலவே அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் காருடன் அங்கே ஆஜராகிவிட்டார்.
வந்ததோடு நின்றிருந்தால் சம்பூர்ணா அமைதியாக இருந்திருப்பார். ஆனால் அவரோ ஒன்றுவிட்ட தங்கை விசாலாட்சியிடம் நிச்சயம் சிறப்பாக நடந்ததா என விசாரிக்க சம்பூர்ணாவிற்கு அதில் துளி கூட சந்தோசமில்லை.

“என் பொண்ணை பாத்து கேலி பேசுனவ வீட்டு விசேசம் எப்பிடி நடந்தா இவருக்கு என்னவாம்?” என குறைபட்டுக்கொண்டவர் வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தபடியே விசாலாட்சியிடம் சொல்லிக்கொண்டு கணவருடன் கிளம்பிவிட்டார்.
காரிலேறியதிலிருந்து நல்லூர் வந்தடையும் வரை சம்பூர்ணாவின் புலம்பல் ஓயவில்லை. ஈஸ்வர பவனம் என்ற பெயருடன் நின்ற வீட்டை அடைந்ததும் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவர் மனைவியின் வாய் மூடிக்கொண்டதை சன்னச்சிரிப்புடன் பார்த்தபடி வீட்டுக்குள் அவருடன் பிரவேசித்தார்.
குட்டி அரண்மனை போன்ற அவ்வீட்டைக் கட்டியவர் சாகித்தியனின் தாத்தா. ஊரின் பெருந்தனக்காரரான அவர் விட்டுச் சென்ற தொழிலையும் நிலங்களையும் தோப்பு துரவுகளையும் பிற்கால சந்ததியினர் பல்கி பெருக வைத்திருந்தனர்.
அவரது பெயரிலேயே ரைஸ் மில் செயல்பட்டது. அத்தோடு ஒற்றை பெண்பிள்ளை என சங்கமித்ராவின் பெயரின் முற்பாதியை எடுத்துக்கொண்டு ‘சங்கம் பிராண்ட் அரிசி’யை மொத்த வியாபாரம் செய்தனர். அத்தொழிலுடன் செக்கு எண்ணெய் வகைகளையும் இப்போது வியாபாரம் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
இவை அனைத்தையும் சாகித்தியனின் தந்தையான ஆறுமுகமும் சாகித்தியனும் இத்தனை நாட்கள் தங்கள் பொறுப்பில் கவனித்துவந்தனர். இப்போது சாகித்தியனின் புத்திரன் சர்வானந்த் தலையெடுத்த பின்னர் அவனே பொறுப்பேற்றுக்கொண்டான்.
மற்ற இளைஞர்களைப் போல மருத்துவம், பொறியியல் என்று கனவு காண்பதை விடுத்து தங்களின் பசிய வயல்வெளிகளை பொன் விளையும் பூமியாக மாற்றும் விவசாயத்தை பட்டப்படிப்பாக எடுத்தவன் பட்டம் பெற்றதும் படித்ததில் பெற்ற அறிவு அனைத்தையும் தங்களது நிலத்திலேயே கொட்டினான்.
நிலமும் ஒன்றுக்கு நூறாக திருப்பிக்கொடுத்தது என்றால் மிகையில்லை. வெறுமெனே நெல்லை மட்டும் பயிரிடாது எண்ணெய்வித்துகளைப் பயிரிட்டு அவர்களின் செக்கு எண்ணெய் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்டவனும் அவனே.
அவன் விவசாயம் செய்யப்போகிறேன் என்றதும் முதலில் தயங்கியது என்னவோ சாகித்தியன் தான். ஆனால் ஆறுமுகத்தின் பேச்சு தான் அவரது மனதை மாற்றியது.
சாகித்தியன் அந்தக் காலத்திலேயே வணிகவியலில் பட்டம் பெற்று சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றத் தேர்வானவர். ஆனால் ஆறுமுகம் ஒரே மகனை தொலைதூரத்தில் பணிக்கு அனுப்ப மறுத்து தனது கைக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
சாகித்தியனும் தந்தைக்கு அடங்கிய மகனாக இருந்து ஆறுமுகத்தின் மனதைக் குளிர்வித்தாலும் அவ்வபோது மருமகள் சம்பூர்ணாவின் “என்ன இருந்தாலும் கஸ்டம்ஸ் ஆபிசரா இருந்திருந்தா தனி கௌரவம் தான் மாமா” என்ற ஆசை ததும்பும் வார்த்தைகள் அப்பெரியவரை யோசனையில் ஆழ்த்தும்.
அதனாலேயே என்னவோ பேரன் பேத்தியின் விருப்பத்தில் மகனோ மருமகளோ தலையிடுவதை அவர் அனுமதிப்பதில்லை. இக்காரியத்தில் அவரது மனைவி வள்ளியம்மாவும் அவருக்குத் துணை.
சங்கமித்ராவோ தாத்தா செல்லம். எனவே தான் அவள் மறுத்த சம்பந்தம் இனி தங்களுக்குத் தேவையில்லை என்ற முடிவை ஆறுமுகம் துணிவுடன் எடுத்தார்.
இதோ இப்போது விசாலாட்சியின் அலட்சியத்தைப் பற்றி மாமனாரிடம் விவரித்த போதும்
“நம்ம மித்ராவுக்குனு ஒருத்தன் பிறந்திருப்பான் பூர்ணாம்மா… நீ விசனப்படாத… அவனே வந்து உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க அத்தைனு உன் கிட்ட கேப்பான்… அப்போ நானோ வள்ளியோ எதுவும் சொல்லமாட்டோம்… நம்ம மித்ராவ மதிக்காம அவ கொண்டு போற சீர் செனத்திய மட்டும் மதிக்கிற ஒருத்தன் நமக்குத் தேவையில்லமா…. அந்தஸ்துல நமக்கு குறைவா இருந்தாலும் நம்ம பொண்ணை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிறவனா வந்தா போதும்” என்றார் ஆறுமுகம்.
ஆனால் அந்தஸ்து என்ற விசயத்தில் விட்டுக்கொடுப்பவரில்லை சம்பூர்ணா. அதை நன்கு அறிந்தவர் அவரது மாமியார் வள்ளியம்மா. அவர் எதிர்பார்த்ததை போலவே
“எல்லா விசயத்திலயும் நம்ம குடும்பத்துக்கு சமமான சம்பந்தத்தைத் தான் நான் மித்ராவுக்கு முடிப்பேன் மாமா… அந்தஸ்து விசயத்துல என்னால எடுத்தேன் கவிழ்த்தேனு யோசிக்கமுடியாது” என்று முடிவாய் சொல்லிவிட்டு மருமகள் செல்வதைப் பார்த்துவிட்டு மகனையும் செல்லுமாறு பணித்தார்.
இருவரும் நகர்ந்ததும் “உங்களுக்கு பூர்ணாவ பத்தி தெரியாதாங்க? அவ அப்பிடி தான்… நம்ம தகுதிக்குக் குறைஞ்சவங்க கூட பேச்சுவார்த்தை வச்சுக்க விரும்பாத அவளுக்கு மித்ரா எப்பிடி பிறந்தானு எனக்கே சந்தேகம்” என்றார் வள்ளியம்மை கேலியாக.
ஆறுமுகம் மனைவியின் ஹாஸ்யத்தைக் கேட்டு நகைத்தவர் “உன் மருமகளோட பிரதியா தான் உன் பேரன் இருக்கானே” என்றார்.
இவர்களால் இங்கே புகழப்படும் சங்கமித்ராவின் தமையனோ கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியில் நெற்பயிர் பற்றி எடுத்த செமினாரை உற்றுநோக்கியபடி அமர்ந்திருந்தான்.
அவன் சர்வானந்த். இருபத்தியேழு வயது இளைஞன். விவசாயத்தை காதலிக்கும் வினோதமான இக்கால இளைஞன். குணத்தில் சம்பூர்ணாவின் மறுபிரதி தான்.
செமினார் முடிந்து காரை எடுத்தவன் தங்கையின் மிஸ்ட் கால்களைப் பார்த்துவிட்டு அவளுக்கு அழைத்தான்.
“மித்து ஏன் கூப்பிட்டிருந்த?” என்றபடி ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டவன் காரின் ஸ்டீயரிங் வீலை வளைக்க அவனது செவியில் விழுந்தது அவனது தங்கையின் குரலே அல்ல.

“மித்துவும் ஷாலியும் ஃபீனிக்ஸ் வரைக்கும் போயிருக்காங்க… அவ மொபைலை மறந்து வச்சிட்டுப் போயிட்டா… அவ வந்ததும் உங்களுக்குக் கால் பண்ணச் சொல்லவா?” என்று ஒலித்த தேமதுரக்குரல் ரேஷ்மாவுடையது தான்.
அதை சர்வானந்தும் அறிவான். ஆனாலும் அவனுக்கு அவளிடம் பேசப்பிடிக்கவில்லை.
“ம்ம்… இனிமே என் தங்கச்சிக்கு நான் கால் பண்ணுனா நீ அட்டெண்ட் பண்ணாத… எனக்குப் பிடிக்கல” என்று மொட்டை கட்டையாக உறுமிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
ரேஷ்மாவுக்கும் அவனுக்கும் இடையே அப்படி ஒன்றும் ஜென்மாந்திர பகையில்லை. அவளைக் காரணம் காட்டி சங்கமித்ரா சி.பி.எஸ்.சி பள்ளியை விடுத்து ஸ்டேட் போர்ட் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்தாள். அவள் சென்னையில் மேற்கல்வியைத் தொடர்ந்ததால் தான் பாளையங்கோட்டையில் அத்தனை கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பிடிவாதம் பிடித்து சென்னைக்குச் சென்றாள் சங்கமித்ரா.
இதற்கெல்லாம் காரணம் ரேஷ்மாவுக்கும் தங்கைக்கும் இடையே உள்ள நட்பு என்று சர்வானந்திற்கு புரிந்தாலும் அவனது குருட்டுத்தனமான சகோதரப்பாசத்தின் முன்னே நியாய தர்மங்கள் தோற்று போய் ரேஷ்மா அவனைப் பொறுத்தவரை அவனது அன்புத்தங்கையை அவனிடமிருந்து பிரித்த குற்றவாளியாகி விட்டாள்.
இத்தனைக்கும் மூன்றே முறைகள் தான் அவளைக் கண்டிருக்கிறான். முதலில் பள்ளியில் இரட்டை ஜடை அணிந்து, பின்னர் இளங்கலை படிப்பை பாளையங்கோட்டையில் தொடர்ந்த சமயத்தில். மூன்றாவது முறை சென்னைக்குச் செல்ல பெண்கள் இருவரும் நெல்லை சந்திப்பில் அனந்தபுரிக்குக் காத்திருந்த போது.
அந்த அற்ப சொற்பமான தருணங்களிலும் ரேஷ்மாவை முறைத்து மட்டுமே வைத்தவனுக்கு அவளது நட்பு கண்ணுக்குத் தெரியவில்லை.
ஆனால் அதன் பின்னர் அன்னையின் மொபைல் அழைப்பு வந்துவிட ரேஷ்மாவின் மீதான பகைக்கு தற்காலிக விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தான்.
அதேநேரம் அவனால் திட்டப்பட்டவளோ கடுப்பின் உச்சத்தில் இருந்தாள்.
“நான் என்ன இவனோட சாப்பாட்டுல எக்ஸ்ட்ராவா ஒரு ஸ்பூன் உப்பை அள்ளிக்கொட்டுனேனா? இந்தக் கடுவன்பூனை அடிக்கடி என்னைத் திட்டுது… மித்துவோட அண்ணனா போயிட்டானேனு விட்டுவச்சா அடிக்கடி என்னை இரிட்டேட் பண்ணுறான்… பூனைக்குச் சீக்கிரம் மணிய கட்டணும் ரேஷ்… டேட்ட சீக்கிரம் ஃபிக்ஸ் பண்ணு” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.
ஆனால் அதிகநேரம் கடுப்பாக இருக்க முடியாதபடி அடுத்த அழைப்பு விருஷாலியின் வீட்டிலிருந்து வந்தது.
“அட என்னை டெலிபோன் ஆபரேட்டர் வேலைய பாக்கவச்சிட்டு இந்த ரெண்டு மங்கீசும் ஊர் சுத்தப் போயிடுச்சுங்க” என்று சலித்தபடியே அழைப்பை ஏற்றவள் “ஹலோ சொல்லுங்கம்மா” என்றாள் சுரத்தின்றி.
ஆனால் மறுமுனையில் இருப்பவர் சொன்ன நற்செய்தியைக் கேட்டதும் ரேஷ்மாவிற்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.
ஆனந்தம் நிரம்பி வழிந்த குரலில் “சரிம்மா… அவ வந்ததும் நான் உங்களுக்குக் கால் பண்ணச் சொல்லுறேன்… நீங்க ஃபோட்டோவ வாட்சப் பண்ணிடுங்க… பை” என்று படபடத்துவிட்டு போனை வைத்தாள்.
அந்த வீட்டில் அவளும் சங்கமித்ராவும் பூஜையறையாக உபயோகிக்கும் மர அலமாரிக்குள் அடைக்கலமாகியிருந்த பிள்ளையாரின் முன்னே நின்றவள்
“தேங்க்யூ பிள்ளையாரப்பா… மித்துவோட மேரேஜ் அலையன்ஸ் முறிஞ்சதும் என்னடா பங்சனுக்குனு புதுசா வாங்குன மஸ்தானி செட்ட போடுறதுக்கு வாய்ப்பே வராம போயிடுமோனு பயந்தேன்… ஆனா இந்த தடவை மித்துவுக்குப் பதிலா ஷாலி மூலமா என் ஆசைய நிறைவேத்திட்டீங்க… தேங்க்யூ சோ மச்” என்று குதூகலத்துடன் உரைத்துவிட்டு ஊர் சுற்றப் போயிருந்த தனது தோழியர் வீடு திரும்பும் நேரத்துக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்க ஆரம்பித்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

