“மேஜிக் மாதிரி சிலரை முதல் பார்வையிலயே பிடிச்சுப் போகுது… அதுவும் அவங்க கேரக்டர் இன்ட்ரெஸ்டிங்கா இருந்தா என்னால அவங்களை அவ்ளோ ஈசியா மறக்கமுடியாது… நாங்க ஃபோர்த் இயர் போனப்போ ஃபுட்பால் டீமுக்கு நியூ கோச் ஒருத்தர் வந்தார்… ரொம்ப கம்பீரமான மனுசன்… அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவரை மாதிரியே இருக்கணும்னு நான் நிறைய கிறுக்குத்தனம் பண்ணுனது கூட உண்டு… இன்ஃபேக்ட் ஃபிட்னெஸ்ல இண்ட்ரெஸ்ட் வந்ததுக்கும் அவர் தான் காரணம்… சரி நமக்கு அந்தக் கம்பீரம் தான் வரல, அட்லீஸ்ட் அவரை போல ஃபிட்டா இருப்போமேனு தான் ஜிம்முக்குப் போகவே ஸ்டார்ட் பண்ணுனேன்… அதை பாதில விட்டது வேற விசயம்.. ஆனா ஜெர்மனிக்கு மூவ் ஆனதும் என்னமோ எடுத்த விசயத்தை பாதில விட்ட ஃபீல்… சோ மறுபடியும் ஜிம், டயட்னு ஆரம்பிச்சிட்டேன்… எனக்கு எந்தக் காரியத்தையும் பாதியில விடுறது பிடிக்காது… அதுல எனக்குப் பிடிச்சவங்க சம்பந்தப்பட்டிருந்தா எவ்ளோ கஷ்டப்பட்டாலும் அந்தக் காரியத்தை கம்ப்ளீட் பண்ணிடுவேன்”
-ஸ்வீட் டெவிலின் குரல்
வித்யாசாகரும் நரேனும் விருஷாலியுடன் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து இன்றோடு இரண்டு தினங்கள் கடந்திருந்தது. அவன் கடைசியாக அங்கே வந்து முழுதாக இரு வருடங்களாகி விட்டது. கோவிட் 19கு முன்பு வந்தவன் அதன் பிற்பாடு ஊரில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பதைக் கவனித்தவாறே நேரத்தைப் போக்கினான்.
தாமிரபரணியில் குளிப்பது, அங்கிருந்த குலசேகரமுடையார் கோவிலில் முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு காணாமல் போய் ஆஸ்திரேலியவாசம் முடிந்து இரு வருடங்களுக்கு முன்னர் திரும்பி வந்த நடராஜரை தினந்தோறும் சென்று வழிபடுவது, ரக்சனாவுடனான திருமணத்தை நிறுத்தியதால் வருத்தத்துடன் இருக்கும் அன்னையைச் சமாதானம் செய்ய விருஷாலியுடன் சேர்ந்து ஏதாவது திட்டம் தீட்டுவது என அவனது பொழுதுகள் ரம்மியமாக நகர்ந்து கொண்டிருந்தது.
மகேந்திரனோ தினந்தோறும் கல்லிடைக்குறிச்சியிலிருந்து திருநெல்வேலிக்குக் காரில் பயணித்து கல்லூரிக்குச் சென்று திரும்புவதில் பெரும்பாலான நேரம் செலவளிந்துவிட வீட்டுக்கு வருபவருக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உறங்கவும் மட்டுமே நேரம் இருக்கவே வித்யாசாகரிடம் தனது மனவருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
கூடவே தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனைத் தோழனாகவே கருதி பழகியவருக்குத் திடீரென எங்கிருந்து அவன் மீது வருத்தம் வரும்! ஆனால் மதிவதனி தான் பொறுக்காது இரண்டு முறை புலம்பித் தீர்த்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதையும் மகாலெட்சுமியின் சமாதானத்துக்குப் பின்னர் நிறுத்திக்கொண்டார். அதன் பின்னர் பெரியவர்கள் யாருமே அவனிடம் அவனது முறிந்த நிச்சயத்தைப் பற்றி கேட்கவில்லை. அத்தோடு அவனது காதலியைப் பற்றி யாருமே விசாரிக்காதது தான் அவனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.
தோழமையான தந்தையாக மகேந்திரன் விசாரிக்காவிடினும் கண்டிப்பான பெரிய தந்தையாக ராஜேந்திரன் தன்னிடம் காதலைப் பற்றி விசாரிப்பார் என எண்ணியிருந்தவனுக்கு அவனிடம் அவர் காட்டிய அமைதி சங்கடமூட்டியது.
பொறுக்கமுடியாது “என் மேல கோவம் இருந்துச்சுனா ரெண்டு அறை கூட அறைஞ்சிடுங்க பெரியப்பா… ஆனா இப்பிடி பேசாம இருக்காதீங்க… நீங்க எல்லாரும் என் மேல வச்சிருந்த நம்பிக்கைய இன்னைக்கு வரைக்கும் நான் உடைச்சது இல்ல… ஆனா என்னோட லவ்வ என்னால விட்டுக்குடுக்க முடியாது பெரியப்பா… முடிஞ்சா என்னால அர்ச்சனாக்காக்கு வந்த சங்கடத்துக்கு நான் அவங்க வீட்டாளுங்க கிட்ட மன்னிப்பு கேக்குறேன்” என்று அவன் சொல்லவும்
“அதெல்லாம் வேண்டாம் வித்தி… நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்… அர்ச்சனாவோட புகுந்த வீட்டுல வேற யாருமே இதை பத்தி நினைச்சு வருத்தப்படல… ஆனா சம்பந்தியம்மா தான் அவ கிட்ட முகம் குடுத்துப் பேசறதில்லனு சொன்னாப்பா… நிச்சயதார்த்தத்துக்கு இங்க வர்றவங்க உன் கிட்ட முன்ன பின்ன நடந்துகிட்டாலும் நீ பொறுத்துப்போயிடு வித்தி… இது கூட நம்ம பொண்ணு வீட்டுக்காரங்கங்கிற அர்த்தத்துல சொல்லல… மருமகன் ரெண்டு பேரும் சம்பந்தியும் தங்கமானவங்க… அந்தப் பொண்ணு ரக்சனாவும் அப்பிடி தான்… அவங்களுக்காக நம்ம பொறுத்துக்கலாம் தானே” என்று பதிலளித்தார் ராஜேந்திரன்.
அவருக்கு வித்யாசாகருக்கு குடும்பத்தினரின் மீது வைத்துள்ள பாசத்தின் மீது முழுநம்பிக்கை இருந்தது. ஆனால் அவரது பயமே அவனுக்குப் புதிதாய் முளைத்த காதல் அவனது இயல்பை மாற்றியிருக்கக் கூடாதே என்பது தான்.
அவரது பயத்திற்கு அவசியமே இல்லையென கூறிய வித்யாசாகர் அர்ச்சனாவின் மாமியார் ஏதாவது பேசினால் கூட பொறுத்துப் போய்விடுவேன் என வாக்களித்தான்.
நரேனுக்கு நண்பனின் குணம் பற்றி தெரிந்ததே அதன் பிற்பாடு தான். குடும்பத்திற்காக இவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்பவனுக்கு அவனது காதல் கிடைத்தால் போதுமென்ற எண்ணம் அவனுக்குள்ளும் இப்போது தோன்றிவிட ரக்சனாவை வேண்டாமென சொல்லிவிட்டாயே என்ற புலம்பலை அவனுமே நிறுத்திக்கொண்டான்.
வித்யாசாகரும் அவனும் கல்லிடைக்குறிச்சி வாசத்தை சொர்க்கலோகம் போல அனுபவித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சங்கமித்ராவைக் காணும் போது அண்ணனின் கண்ணில் தோன்றும் அதிகப்படி ஆர்வத்தைக் கவனித்துவிட்ட விருஷாலி அவன் மனதில் இருப்பது என்ன என்ற கேள்வியுடன் வலம்வந்தாள்.
அந்தக் கேள்வியின் அடிப்படையான சங்கமித்ராவோ ரேஷ்மாவுடன் நல்லூரில் இறங்கிய தினத்திலிருந்து அக்மார்க் நல்லூர்வாசியாக மாறிப்போனாள்.
ரேஷ்மாவோ குட்டி அரண்மனை போல தோற்றமளித்த சங்கமித்ராவின் வீட்டையும், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் பணியாட்களையும், அந்த ஊரில் அவர்களுக்குச் சொந்தமான பசியவயல்வெளிகளையும் தோட்டம் துரவுகளையும் பார்த்து மலைத்துப் போய்விட்டாள்.
இவ்வளவுக்கும் சொந்தக்காரியான இந்தப்பெண்ணா தன்னுடன் பத்து ரூபாய் சமோசாவுக்காக சண்டையிடுபவள் என்ற ஆச்சரியம் அவளுக்கு. தங்களோடு இருக்கும் போது செல்வச்செருக்கை துளி போல காட்டியிருந்தால் கூட இவ்வளவு மலைப்பு வந்திருக்காது! இவ்வளவு சொத்துக்கு எவ்வளவு எளிமை அவளிடம்!
அத்தோடு ஏன் சர்வானந்த் மட்டும் கடுவன்பூனையாக நடந்துகொள்கிறான் என்பதையும் சம்பூர்ணாவின் நடவடிக்கையிலிருந்து கண்டுகொண்டாள் ரேஷ்மா.
சங்கமித்ரா ரேஷ்மாவுடன் பழகுவதில் சம்பூர்ணாவுக்கு பிடித்தமில்லை என்பது அவர்கள் இருவரும் ஊருக்கு வந்த தினத்திலேயே ரேஷ்மாவுக்குத் தெரிந்துவிட்டது. அத்தோடு அப்பெண்மணி அந்தஸ்து பார்த்து தான் பழகுவார் என்பதை அறிந்ததும் சற்று விலகிக்கொண்டாள்.
ஆனால் அதற்கு மாறாக சாகித்தியனும் அவரது பெற்றோரும் பழகுவதற்கு இனிமையாக இருக்க கூடுதல் போனசாக சர்வானந்தும் மதுரைக்குச் சென்றுவிட்டதால் சம்பூர்ணா என்ற ஒற்றை பெண்மணியின் அலட்சியத்தை அவள் கண்டுகொள்ளவில்லை.
அதிலும் ஆறுமுகம் ரேஷ்மாவையும் அவரது பேத்தியைப் போலவே நடத்தினார். வள்ளியம்மாவோ “தலைக்கு எண்ணெய்யே தேய்க்கமாட்டீங்களா?” என்று உரிமையோடு அதட்டியவர் தனது பேத்திக்குத் தலையில் எண்ணெய் வைத்துவிடுவதைப் போலவே ரேஷ்மாவுக்கும் வைத்துவிட அவளுக்குச் சந்தோசத்தில் பேச நா எழவில்லை.
இதோ இப்போது கூட செவ்விளநீர் குடித்தால் உடலுக்கு நல்லது என தோப்பிலிருந்து பறித்துவரச் சொன்னவர் இருவரையும் குடிக்குமாறு சொல்லிவிட்டுத் தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
இருவரும் அந்த வீட்டின் புழக்கடை திண்ணையில் அமர்ந்து இளநீரைக் குடித்துக்கொண்டிருந்த போது ரேஷ்மாவின் போன் சிணுங்கியது. அழைத்தது விருஷாலி தான்.
“சொல்லுடி ஷாலி… கல்லிடைக்குறிச்சிக்காரிக்கு இப்போ தான் எங்க நியாபகம் வந்துச்சா?”
“விளையாடாத ரேஷ்… டூ டேய்சா பெரியப்பா வீட்டுலயே இருந்தார்டி… உங்களுக்கே தெரியும் நான் பயப்படுறது அவருக்கு மட்டும் தான்… அது போக நிச்சயதார்த்த வேலையைச் சாக்கா வச்சு சொந்தக்காரங்க வர்றதும் போறதுமா இருக்குறப்போ நான் போனை வச்சிட்டிருந்தா நல்லா இருக்காதுல்ல?”
“அதுவும் சரி தான்… கொஞ்சம் இரு… நான் லவுட் ஸ்பீக்கர்ல போடுறேன்”
சில நொடிகளுக்குப் பின்னர் மூவருமாய் சேர்ந்து பேச ஆரம்பித்தனர்.
“மித்து உங்க தோப்புல மருதாணி நிறைய இருக்குனு சொல்லிருக்கேல்ல… என்கேஜ்மெண்டுக்கு மெஹந்தி வைக்க சொல்லுறாங்கடி… எனக்கு மெஹந்தி வச்சுக்க இஷ்டமில்ல”
அவள் முகத்தைச் சுளிக்கவும் மெஹந்தி கோனுக்கு அடிபிடி சண்டை போட்ட விருஷாலியா இவள் என்று சந்தேகமாய் இரு தோழிகளும் பார்த்துக்கொண்டனர்.
“ஏய் எதாச்சும் பேசுங்கடி… எனக்கு இப்போ மருதாணி வேணும்… கர்ணா நேத்து பேசுறப்போ சொன்னார், அவருக்கு மருதாணியோட வாசம் ரொம்ப பிடிக்குமாம்”
வெட்கத்துடன் முடித்தவள் திடீரென வித்யாசாகரின் அதிகப்படி ஆர்வம் நினைவுக்கு வரவும் “மித்து நீ மருதாணி பறிச்சு வச்சுட்டு அண்ணாக்குக் கால் பண்ணுடி… அண்ணா வந்து வாங்கிப்பான்… ப்ளீஸ்டி” என்று கொஞ்சலாகச் சொல்லவுமே சங்கமித்ரா சரியென்றாள்.
மூவரும் பேசி முடித்ததும் “நான் போய் மணியண்ணன் கிட்ட மருதாணி பறிச்சுட்டு வரச் சொல்லுறேன் ரேஷ்” என்றவள் முன்வாயிலுக்கு வந்து அங்கே நெல்மூட்டைகள் பற்றி பணியாளரிடம் பேசிக்கொண்டிருந்த மணியண்ணனிடம் விஷயத்தைத் தெரிவித்தாள்.
“சாயங்காலத்துக்குள்ள கொண்டு வந்துடுவீங்களா?” என்று கேட்டவளிடம்
“இதோ ரெண்டே நிமிசத்துல வந்துடுறேன் பாப்பா” என்று சொல்லிவிட்டு அந்தப் பணியாளரை அழைத்துக்கொண்டு அவர்களின் மாந்தோப்பை நோக்கி நடைப்போட்டார் அவர்.
அந்தத் தோப்பின் வேலியோரமாக மருதாணி செடிகள் செழித்து வளர்ந்திருக்கும். அடிக்கடி சங்கமித்ரா தங்கள் ஊரின் இயற்கை அழகை வர்ணித்துப் பேசிய வார்த்தைகள் சரியான நேரத்தில் நினைவுக்கு வந்ததால் விருஷாலியின் மருதாணி கனவுகள் நிறைவேறிவிட்டது.
ஆம்! மணியண்ணன் மருதாணியுடன் திரும்பினார். அவரிடம் நன்றி சொல்லிவிட்டு வித்யாசாகரை அழைத்தாள் அவள்.
அது மதியவுணவுக்கான நேரம் என்பதால் வித்யாசாகரும் நரேனும் ராஜேந்திரனுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கூடவே ஒன்றுவிட்ட மாமா, சித்தப்பா, பெரியப்பா என தூரத்து உறவினர்கள் சிலரும் இருக்கவே மொபைல் ரிங்டோன் ஒலிக்கவும் அனைவரின் கவனமும் அவன் புறம் திரும்பியது.
சாப்பிடும் போது போனை எடுத்தால் ராஜேந்திரனுக்குப் பிடிக்காது. அதே நேரம் உறவினர்களும் அவனைப் பார்த்துவைக்க வித்யாசாகர் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு சாப்பாட்டில் கண் பதித்தான்.
நரேனோ “வித்தி இந்த அரிசி அப்பளம் அமிர்தமா இருக்குடா… என்ன சொல்லு உங்க ஊர் அப்பளத்தை அடிச்சுக்கவே முடியாது” என்று அப்பளத்தைப் புகழ்ந்து தள்ள
அதைக் கேட்ட உறவினர்களுள் ஒரு பெரியவர் “பின்ன கல்லிடைக்குறிச்சினாலே அப்பளம் தானே” என்று பெருமையுடன் சொல்லிவிட்டு தனது நரைத்த மீசையை நீவி விட்டுக்கொள்ள ராஜேந்திரனுடன் அனைவரின் கவனமும் வித்யாசாகருக்கு வந்த போன் அழைப்பை மறந்து மண்ணின் பெருமையைப் பற்றி பேசுவதில் திரும்பிவிட்டது.
அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் கைகழுவி விட்டு போனுடன் நகர்ந்த வித்யாசாகரை மகாலெட்சுமி அழைக்கவும் என்னவென கேட்க சென்றான்.
“வித்தி நம்ம தோப்பு வீட்டுல இருக்குற மோட்டர் ஓடமாட்டேங்கிதுப்பா… அதை சரி பாக்குறதுக்கு ஆளை அனுப்பி வைச்சிடு… நாளைக்கு மாப்பிள்ளை குடும்பம் வந்ததுக்கு அப்புறம் மோட்டர் மக்கர் பண்ணுச்சுனா சம்பந்தியம்மா அதை ஒரு குத்தமா சொல்லுவாங்கடா”
“சரி பெரியம்மா… நான் கணேசனை வரச் சொல்லிடுறேன்” என்றான் அவன். கணேசன் என்பவன் அவர்களது தூரத்து உறவினன் தான். இம்மாதிரி பழுது பார்க்கும் வேலைகளைத் தான் அவன் சொந்த தொழிலாகச் செய்துகொண்டிருக்கிறான்.
சொன்னவன் மீண்டும் போனைப் பார்க்கவும் மகாலெட்சுமியுடன் இருந்த மதிவதனி அதைப் பிடுங்கினார்.
“அப்பிடி இந்தப் போன்ல இருக்கு? இருபத்திநாலு மணிநேரமும் போனும் கையுமா சுத்துற?” என்று அதட்டியவரிடம் தனது பணியிடத்திலிருந்து அழைப்பார்கள் என சொல்லி கெஞ்சி கூத்தாடி போனை வாங்குவதற்கு தனியாக அரைமணிநேரம் பிடித்தது வித்யாசாகருக்கு.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு கையில் கிடைத்த மொபைலில் சங்கமித்ராவுக்கு அழைத்தால் எடுத்ததும் அவள் கடுகடுக்க ஆரம்பித்தாள்.
“எத்தனை தடவை கால் பண்ணுனேன்… ஏன் கட் பண்ணிட்டே இருக்க?”
“ரிலேட்டிவ்ஸ் கூட இருந்தேன்மா… சரி கோச்சுக்காத… என்ன மேட்டர்?” தண்மையாய் வினவினான் வித்யாசாகர்.
“ஷாலி என் கிட்ட மருதாணி கேட்டா… நானும் பறிச்சு வச்சுட்டேன்… அதை வாங்கிக்க முடியுமானு கேக்க தான் கால் பண்ணுனேன்… நீ பெரிய இவனாட்டம் காலை கட் பண்ணுற” சிடுசிடுத்தாள் அவள்.
வித்யாசாகர் அவளது சிடுசிடுக்கும் குரலைக் கேட்டு நமட்டுச்சிரிப்புடன் “உனக்கு மருதாணி பிடிக்குமா?” என சம்பந்தமற்று கேட்கவும் சங்கமித்ரா இப்போது ஏன் சம்பந்தமின்றி இந்தக் கேள்வி என தனக்குள் பேசிக்கொண்டாள்.
“அட சொல்லுமா… உனக்கு மருதாணி பிடிக்குமா?”

“ஆமா… ரொம்ப பிடிக்கும்” அந்த ‘ரொம்ப’வில் குடுத்த அழுத்தம் அவளது மருதாணிக்காதலைப் புரியவைத்துவிட அவனுக்குள் குறும்புத்தனம் முகிழ்த்துக்கொண்டது.
இரண்டு நாட்கள் அவளே பேசுவாள் என்று காத்திருந்தவன் அவளாக அழைக்கும் வாய்ப்பில்லை என்றதும் கிடைக்கும் நேரத்தில் தானே அழைத்துப் பேசலாம் என்று எண்ணியிருந்தான்.
“எதுக்கும் குட்டி செடியா ஒன்னையும் எடுத்து வச்சுக்கோ பப்ளிமாஸ்… நாளை பின்ன நீ இங்க வந்ததுக்கு அப்புறம் மருதாணிக்காக ஒவ்வொரு தடவையும் என்னால நல்லூருக்கு அலைய முடியாதுல்ல”
“வாட்? நீ சொல்லுறது புரியல”
“புரியவே வேண்டாம்… உனக்கு எல்லாமே புரிஞ்சுடுச்சுனா வாழ்க்கைல என்ன சுவாரசியம் இருக்கும்? நீயே சொல்லேன்”
“எனி ஹவ்… நீ எப்போ மருதாணி வாங்கறதுக்கு வர்ற வி…?” என்றவள் அவனது பெயரை உச்சரிக்காது நிறுத்தினாள்.
வித்யாசாகரோ “ஏன் விஈஈனு சொல்லிட்டு நிறுத்திட்ட?” என வினவ
“ஒன்னுமில்ல… எப்பிடி பாத்தாலும் நீ என்னை விட பெரியவன்… ஆனா நான் உன்னை நீ வா போனு கூப்பிடுறேன்… அதுவே தப்பு… இதுல வித்தினு பேர் சொல்லிக் கூப்பிடுறது ரொம்ப பெரிய தப்பு… அதான் சைலண்ட் ஆயிட்டேன்” என்று பதிலளித்தபடியே தனது விரல் நகங்களை ஆராய்ந்தாள் அவள்.
“இதுல என்ன இருக்கு பப்ளிமாஸ்? நீங்க வாங்கனு சொன்னா என்னமோ தூரமா இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது… நீ எப்போவும் போலவே கூப்பிடு… ஆனா வித்தி வேண்டாம்” என்றான்.
“ஏன் வித்தினு கூப்பிடக்கூடாது?” அவளிடமிருந்து கேள்வி கிளம்பியது.
“கம் ஆன்… என்னை எல்லாருமே வித்தினு தான் கூப்பிடுறாங்க… நீயும் அப்பிடி கூப்பிட்டா நல்லா இருக்காதுல்ல… சோ கொஞ்சம் வேற மாதிரி, கொஞ்சம் ஸ்பெஷலா கூப்பிட டிரை பண்ணு ப்ளீஸ்” கெஞ்சலாக ஒலித்தது அவனது குரல்.
அது கெஞ்சலா கொஞ்சலா என சங்கமித்ராவின் ஆறாம் அறிவு கேள்வி கேட்கும் போதே “ஸ்பெஷலா தானே… கூப்பிட்டுட்டா போச்சு… டெவில்” என்றாள் அவள் விஷமமாக.
“டெவிலா?” அடக்கப்பட்ட சிரிப்புடன் ஒலித்தது அவனது குரல். பின்னர் “நாட் பேட்… இது கூட நல்லா தான் இருக்கு… உன்னோட நிக்நேம் கியூபிட்… சான்சே இல்ல! ஏஞ்சல் அண்ட் டெவில் மேட்சிங் சூப்பர்ல” என்றான் பூடகமாக.
“அஹான்? யாரோ கியூபிட் ஆம்பளைனு ஆதுவ கிண்டல் பண்ணுனாங்களே! ஒருவேளை நீ பொடி வச்சு பேசுறீயோ?” சந்தேகமாக வினவினாள் சங்கமித்ரா.
கண்டுபிடித்துவிட்டாளே என்று தோணினாலும் சிரித்தே சமாளித்தான் அவன். சங்கமித்ரா அவனை மருதாணி வாங்க வருமாறு கூற அவனோ மோட்டரை பழுது நீக்கும் தலையாய கடமை தனக்கென காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு அவளையே கொண்டு வருமாறு கூறிவிட்டான்.
“நானா? நான் எப்பிடி கொண்டு வருவேன்?”
“ஏன் நல்லூரோட இளவரசிய அரண்மனைய தாண்டி வெளிய அனுப்பமாட்டாங்களோ? யாரும் கடத்திடுவாங்களோனு பயமா?”
சீண்டலுடன் ஒலித்த அவனது குரலில் அவன் எதிர்பார்த்தபடியே சங்கமித்ரா சிலிர்த்துக்கொண்டாள்.
“நீ என்னை கிண்டல் பண்ணுறீயாடா? நான் ஒன்னும் அதுக்காக சொல்லல… அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணணுமேனு குட்டி சோம்பேறித்தனம்… உடனே பயம் அது இதுனு என் டிக்ஸ்னரில இல்லாத வார்த்தைய சொல்லாத”
“அப்போ நீயே வந்து குடுத்துட்டுப் போ… அதுவுமில்லாம டூ டேய்சா உன்னைப் பாக்காம, உன் குரலை கேக்காம லைப் என்னவோ ப்ளாக் அண்ட் ஒய்ட் மூவியாட்டம் டல்லா போகுது”
“என்னது?” என அவள் சீறவும்
“அட விருஷாலிக்குத் தான் அப்பிடி போகுதுனு சொல்ல வந்தேன்மா… உடனே சீறும் பெண்சிங்கம் அவதாரம் எடுக்காத” என்றவனுக்குமே அவளை நேரில் பார்க்கும் ஆர்வம் தான்.
அத்தோடு கணேசனுடன் தோப்புவீட்டின் மோட்டரைச் சரிசெய்யும் வேலையும் பாக்கி இருப்பதால் அவளே வந்து கொடுக்கட்டுமே என்று யோசித்தவன் அப்படியே சங்கமித்ராவை தனது குடும்பத்தினர் பார்த்தது போலாயிற்று என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் அவளை வருமாறு கூறிவிட்டான்.
சங்கமித்ராவும் விருஷாலியின் ஆசை என்ற ஒரே வார்த்தையில் கல்லிடைக்குறிச்சிக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டாள்.
“வீட்டுல பெர்மிசன் கேக்காம உடனே வர்றேனு சொல்லிட்ட… உங்கம்மா திட்ட மாட்டாங்களா?” வேண்டுமென்றே மீண்டும் சீண்டியவனுக்கு “அதெல்லாம் ஒன்னும் திட்ட மாட்டாங்க… என் விருப்பத்துக்கு என்னைக்குமே அவங்க தடையா இருந்ததில்ல’ என்று அமர்த்தலாக பதிலளித்தாள்.
“எல்லா விசயத்துலயும் இப்பிடியே இருந்தா நல்லது தான்… எனக்குச் சிரமம் இல்லாம இருக்கும்” என்று மீண்டும் பூடகமாக பேச ஆரம்பிக்கவும்
“நீ புரியுற மாதிரி பேசுனா கூட நல்லது தான்… ஆனா நீ செய்ய மாட்ட… ஏன்னா அதுக்கு அப்புறம் சுவாரசியம் இல்லாம போயிடும்னுவ… உன்னோட இந்த வினோதமான பிஹேவியரை உன் வீட்டாளுங்க எப்பிடி தான் சமாளிக்கிறாங்களோ?” என சலித்துக்கொண்டபடி தானும் ரேஷ்மாவும் வருவதாகச் சொல்லிவிட்டு அழைப்பை முடித்தாள்.
அவள் பேசிமுடிக்கவும் சாகித்தியன் மதியவுணவுக்காக வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அவரிடம் தோழியிடம் மருதாணியைக் கொடுக்க கல்லிடைக்குறிச்சிக்குத் தானும் ரேஷ்மாவும் சென்று வரவா என கேட்க “நீங்க மட்டும் தனியாவா போறீங்கடா? அப்பா உங்களை அழைச்சிட்டுப் போகவா?” என வினவினார் அவர் பாசக்கார தந்தையாக.
ஆனால் அவருடன் வந்த மணியண்ணன் “ஐயா ஆறு மணிக்கு திருநெல்வேலிக்கு வர்றோம்னு ஆடிட்டர் கிட்ட சொல்லிருக்கோம்… இப்போ கல்லிடைக்குறிச்சிக்குப் போனா லேட்டாயிடும்” என்று நினைவுறுத்த
“அப்பா நானே போய்ப்பேன்… தனியாவா போறேன்? என் கூட தான் ரேஷ் வர்றாளே” என்று சொல்லவே சாகித்தியனும் அனுமதி கொடுத்துவிட்டார்.
ஆனால் சாப்பிடும் போது சம்பூர்ணா தான் தடையுத்தரவு பிறப்பித்தார்.
“வேணும்னா அவங்க வீட்டுல இருந்து யாரும் வந்து வாங்கிக்க மாட்டாங்களா? நீயே தான் போகணுமா? ஏன்டி நீ என்ன அவங்க வச்ச வேலைக்காரியா? கொஞ்சமாச்சும் நம்ம அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறீயா நீ?”
அவரது பேச்சில் சங்கமித்ரா சண்டைக்கோழியாய் மாறும் முன்னர் வள்ளியம்மா கணவரின் பார்வையை உணர்ந்து வெள்ளைக்கொடியை நீட்டினார்.
“ப்ச் என்ன பூர்ணா நீ இப்பிடி பேசுற? அவ ஃப்ரெண்டுக்கு மருதாணி கொண்டு போறதால என்ன கௌரவம் குறைஞ்சிடும்? நட்புக்குள்ள அந்தஸ்து பேதம் பாக்க கூடாதும்மா” என்றார் தண்மையாக.
சம்பூர்ணாவோ “இப்பிடி நீங்க குடுக்குற செல்லத்தால தான் இவ ஓவரா ஆட்டம் போடுறா… அவ இஷ்டத்துக்கு நடந்துக்கிறா” என்று சொன்னதோடு ரேஷ்மாவையும் பார்த்துவைக்க அவளோ சங்கடத்தில் நெளியத் தொடங்கினாள்.
“அவங்க வீட்டுல எல்லாரும் என்கேஜ்மெண்ட் வேலையில பிசி… ஷாலியோட அண்ணா கிட்ட நா பேசுனப்போ அவனும் எதோ வேலை இருக்குனு சொன்னான்… அதான் நானே நேர்ல வந்து குடுக்குறேனு சொன்னேன்… அப்பிடியே ஷாலியையும் பாத்துட்டு வந்துடுவோம்”
சங்கமித்ரா பிடிவாதமாக உரைக்கவே சாகித்தியன் மனைவியை அமைதிப்படுத்த துவங்கினார்.
“பூர்ணா நம்ம விருப்பத்தை பசங்க கிட்ட திணிக்கக்கூடாது… அவளும் ரேஷ்மாவும் போகட்டும்” என்றார் முடிவாக.
சங்கமித்ரா தந்தையின் அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் குதூகலித்தவள் அன்னையிடம் “அந்த டெவில் அப்போவே உங்கம்மா திட்ட மாட்டங்களானு கேட்டான்… நான் தான் எங்கம்மா என்னோட விருப்பத்துக்குத் தடையா நிக்கமாட்டாங்கனு சொன்னேன்… ஆனா நீ அவன் சொன்ன மாதிரி தான் நடந்துக்கிறம்மா” என்று மனத்தாங்கலுடன் பேசிமுடித்தாள்.
சங்கமித்ரா உபயோகித்த ‘டெவில்’ என்ற புனைப்பெயரை மட்டும் பெரியவர்கள் யோசனையுடன் தனித்து மனதில் பதியவைத்துக்கொண்டதை அவள் அறியவில்லை பாவம்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

