“லைப்ல ஒரு மனுசன் எதை வேணும்னாலும் தியாகம் பண்ணலாம்… ஆனா எதுக்காகவும் யாருக்காகவும் அவனோட சுயமரியாதைய விட்டுக்குடுக்கக் கூடாது… சுயமரியாதைய விட்டுக்குடுத்து கிடைக்கிற சில விசயங்களை ஜெயிச்சு என்ன பிரயோஜனம்? முதுகெலும்பு இருக்குற யாரும் அந்த மாதிரியான குறுகியகால லாபத்துக்காக சுயமரியாதைய இழக்க மாட்டாங்க… அப்பிடி இழக்குறவங்க என்னைப் பொறுத்தவரைக்கும் நடமாடும் நாலறிவு பிராணிகள் தான்”
-ஸ்வீட் டெவிலின் குரல்
ஹோட்டல் ராயல் கிராண்டேவின் பார்ட்டி ஹால்…
உற்சாகத்துக்கும் கூச்சலுக்கும் பஞ்சமில்லை அங்கே. ஃபேர்வெல்டேயின் இறுதி நிமிட சோகம் அனைத்தையும் தூசி போல ஊதித் தள்ளிவிட்டு பார்ட்டியின் கொண்டாட்டத்தில் இரண்டறக் கலந்திருந்தனர் இளவட்டங்கள் அனைவரும்.
சங்கமித்ரா தனது தோழியருடன் பார்ட்டி ஹாலின் ஓரத்தில் கிடந்த இருக்கையில் அமர்ந்திருந்தவள் மொபைலில் சர்வானந்த் அழைக்கவும் “அண்ணா தான் கால் பண்ணுறான்டி… என்னனு கேட்டுட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு பார்ட்டி ஹாலை விட்டு வெளியேறினாள்.
“சொல்லுண்ணா” என்றபடி பேச ஆரம்பித்தவளை மறுமுனையில் சர்வானந்த் கேள்விக்கணைகளால் தாக்கத் தொடங்கினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நாளைக்கு ஈவினிங் எந்த டிரெயின்ல கிளம்புறிங்க?”, “நான் உங்களை பிக்கப் பண்ணுறதுக்கு வந்துடவா?” “கண்டிப்பா உன் ஃப்ரெண்ட் வருவாளா?”, “அவங்க பேரண்ட்ஸ் ஒன்னுமே சொல்ல மாட்டாங்களா மித்து?” என மூச்சே விடாமல் அத்தனை கேள்விகளையும் அவன் கேட்டுமுடிக்கும் வரை பொறுமை காத்தாள் சங்கமித்ரா.
சர்வானந்தோ தான் கேட்ட கேள்வி எதற்கும் தங்கை பதிலளிக்கவில்லை என்றதும் “மித்து லைன்ல இருக்கியா?” என்று அதட்ட “இருக்கேன்ணா… நீ எல்லா கொஸ்டீனையும் கேட்டு முடி” என்றாள் அவள்.
“நான் என்ன குரோர்பதி புரோகிராமா நடத்துறேன்? நீ சொல்லுறத வச்சு தான் நான் தென்காசி ஸ்டேசனுக்கு வரணும் மித்து”
“ஓகே! கூல் ப்ரதர்… நாங்க நாளைக்கு ஈவினிங் பொதிகைல கிளம்புறோம்… நீ கண்டிப்பா மானிங் தென்காசி ஸ்டேசனுக்கு வந்துடு… ரேஷ் கண்டிப்பா என் கூட தான் வருவா… அவங்க பேரண்ட்ஸ் கிட்ட நான் பேசிட்டேன்… ஒன்னும் சொல்ல மாட்டாங்க… போதுமா?”
“ம்ம்… யாரெல்லாம் வர்றீங்க?”
“நான், ரேஷ், ஷாலி, ஷாலியோட அண்ணா, அப்புறம் நரேன் ப்ரோ நாலு பேர் வர்றோம்”
“ஷாலியோட அண்ணாவா? ஆமா யார் நரேன்?”
“ஷாலியோட ப்ரதர் அப்ராட்ல படிக்கிறான்னு சொன்னேன்ல அவன் ஷாலி மேரேஜுக்காக வந்திருக்கான்ணா… நரேன் ப்ரோ அவனோட ஃப்ரெண்ட்”
“ஓ! முன்ன பின்ன தெரியாத பசங்க கூட வர்றீங்க… கொஞ்சம் ஜாக்கிரதை மித்து”
கடமை தவறாத தமையனாக சர்வானந்தின் அன்பும் அக்கறையும் சங்கமித்ராவை நெகிழவைத்தது.
“அவங்களுக்கு அவ்ளோ சீன் இல்லண்ணா… அதோட ஷாலி இருக்கிறப்போ என்ன கவலை?” என்றவளின் பேச்சில் அவன் சமாதானமாகவில்லை.
அது என்னவோ ஆண்களுக்குத் தன் சகோதரி என்று வரும் போது மட்டும் சக ஆண்களை சந்தேகப்பார்வை பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.
சங்கமித்ரா அவனிடம் வித்யாசாகரைப் பற்றி நல்லதாக நான்கு வார்த்தைகள் பேசிவைக்க அதுவும் வேறு விதமாகப் போய் முடிந்தது.
“டூ டேய்ஸ்ல அந்தப் பையனைப் பத்தி இவ்ளோ விசயம் எப்பிடி தெரிஞ்சுகிட்ட?”
அவன் எங்களுடன் தான் தங்கியிருக்கிறான் என்றால் சர்வானந்திற்கு மாரடைப்பு வருவது நிச்சயம்; ஒரே இரயிலில் வருவதற்கே இவ்வளவு வாதிடுபவன் ஒரே வீட்டில் இரண்டு நாட்களைக் கழித்ததை சொன்னால் அடுத்த முறை சங்கமித்ராவின் சென்னை விஜயத்துக்குக் கட்டாயம் முற்றுப்புள்ளி வைப்பது நிச்சயம்.
எனவே சங்கமித்ரா விருஷாலியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகச் சொல்லிச் சமாளித்தாள். சர்வானந்தும் தங்கையின் பேச்சில் சமாதானமுற்றான்.
அவனிடம் பேசிவிட்டு மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் செல்லவிருந்தவளை “ஓய் பப்ளிமாஸ்” என்ற வித்யாசாகரின் குரல் தடுத்து நிறுத்தியது.
இவன் எப்போது இங்கே வந்தான் என்ற கேள்வியுடன் கண்கள் ஆச்சரியத்தில் விரிய நின்றவளை நோக்கி புன்னகையுடன் வந்தவன் “ஷாக்க குறைச்சுக்கோ… அப்புறம் பார்ட்டி எப்பிடி போகுது?” என்று கேட்கவும் அவள் வழக்கம் போல கைகளை கட்டியபடி அவனை ஏறிட்டாள்.
“இன்னும் ரெண்டுமணிநேரத்துல நாங்களே வீட்டுக்கு வந்துடுவோம்… அப்பிடி இருக்கறச்ச சார் இவ்ளோ தூரம் ஏன் வந்திருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”
“தெரிஞ்சுக்கலாமே! இந்த ஹோட்டலுக்கு அடுத்து ஒரு ரெஸ்ட்ராண்ட் இருக்கு… அதோட ஆம்பியன்ஸ் சும்மா அள்ளுது தெரியுமா? அங்க போய் அதை ரசிச்சிட்டு, காப்புசினோவோ அமெரிக்கானோவோ சாப்பிட்டுட்டு பொறுமையா தெரிஞ்சுக்கலாமா?”
அவன் தலை சரித்து கேட்டதில் இளமுறுவல் பூக்கவிருந்த இதழ்களைப் பூட்டு போட்டுவிட்டு முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள் சங்கமித்ரா.
இவன் என்ன தான் நினைக்கிறான்? பழகும் விதம், நடவடிக்கை, பார்வை என அனைத்திலும் கண்ணியம் இருக்கிறது தான்! ஆனால் என்னவோ வெகுநாள் பழகியவனைப் போல அவளிடம் நடந்து கொள்ளும் விதம் தான் உள்ளே இடிக்கிறது!
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வித்யாசாகர் அவளிடம் பழகும் விதம் மூன்று வருடத்திற்கு முன்னர் போகிற போக்கில் கோவிலில் வைத்துப் பார்த்த பெண்ணிடம் நடந்துகொள்ளும் முறையாக அவளுக்குத் தோன்றவில்லை.
அதையும் தாண்டி என்னவோ இருக்கிறது. ஆனால் இவன் சொல்லாமல் தன்னைப் பார்ப்பதும் சிரிப்பதும் கலாய்ப்பதுமாக இருக்கிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன? இருக்கட்டும்! பூனைக்குட்டி என்றாவது ஒரு நாள் வெளியே வந்து தானே ஆகவேண்டும்.
அவளின் இறுக்கமான முகபாவம் வித்யாசாகரைத் துணுக்குற வைத்தது. இருப்பினும் கண்களின் குறும்பையும் இதழின் குறுநகையையும் மறைக்காது அவளை நோக்கியவன் பேச முயன்றான்.
அவன் பேசும் முன்னரே கையுயர்த்தி தடுத்தவள் “எனக்கு அன்-டைம்ல காபி குடிக்கிற பழக்கம் இல்ல… வேணும்னா நீ மட்டும் போய் லிட்டர் லிட்டரா குடிச்சுக்கோ… அண்ட் ஒன் மோர் திங்க், நீ இப்பிடி பாக்குறதும் சிரிக்கிறதும் எனக்கு அன்கம்பர்டபிளா இருக்கு” என்று சொல்லும் போதே “கியூபிட்” என்ற உற்சாக குரலுடன் வந்தான் ஆதேஷ்.
“நீ இங்க தான் இருக்கியா? லெட்ஸ் கோ” என்றபடி சங்கமித்ராவின் கரம் பற்றி உள்ளே அவசரமாக இழுத்துச்செல்ல முயன்றவன் வித்யாசாகரின் பொறுமையை நிரம்பவும் சோதித்தான்.
உள்ளே சுனாமியாய் பொங்கிய எரிச்சலை கட்டுப்படுத்தியபடி “நீ தானே ஆது? உன் கிட்ட பேசுறதுக்கு தான் நான் வந்தேன்” என்றான் இழுத்துப்பிடித்த உதடுகளுடன்.
சங்கமித்ரா கண்களால் என்னவென வினவ அதைக் கண்டுகொள்ளாமல் நின்றவனை உற்றுக்கவனித்த ஆதேஷ் “நான் உங்கள இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே! உனக்குச் சாரை தெரியுமா மித்து?” என வினவ
“இவன் ஷா…” என்று ஆரம்பித்தவளை முந்திக்கொண்டு “நான் விருஷாலியோட பிரதர்… மித்துவோட குளோஸ் ஃப்ரெண்ட்” என்றான் வேகத்துடன்.
ஆதேஷ் பொய்யான கோபத்துடன் சங்கமித்ராவை முறைத்துவிட்டு “இவரைப் பத்தி என் கிட்ட கூட நீ ஒரு வார்த்தை சொல்லல கியூபிட்… நமக்குள்ள அவ்ளோ தானா?” என்று கேட்க இப்போது சங்கமித்ரா சங்கடமே உருவாக மாறிப்போனாள்.
“அவளை ஏன் கேக்குற தம்பி? என்னைக் கேளு… சார் என்னமோ இவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்குறேனு சொன்னீங்களே! குடுத்திட்டீங்களா?” – வித்யாசாகர்.
“அதுக்குத் தான் ப்ரோ இவளைக் கூப்பிட வந்தேன்” என்றவனை உள்ளே இருந்து யாரோ “டேய் ஆது” என்று விளிக்க சங்கமித்ராவிடம் “சீக்கிரமா வா கியூபிட்… ஆல்ரெடி லேட்டாயிடுச்சுடி” என்று அவசரமாக மணிக்கட்டைத் தட்டிக்காட்டி விட்டு நகர்ந்தான் அவன்.
வித்யாசாகர் அவனது ‘டி’யிலும் கியூபிட்டிலும் கடுப்புற்றவன் “டேய் கியூபிட் ஆம்பளைடா… நிக்நேம்கு உண்டான மரியாதையே இவனால போயிடுச்சு” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப சங்கமித்ரா இதற்கு மேலும் சிரிப்பை அடக்க முயலாதவளாக உரக்கச் சிரிக்க ஆரம்பித்தாள்.
வழக்கமான சிம்பொனி சிரிப்பு அவனது கடுப்புற்ற இதயத்திற்குள் மயிலிறகாய் மாறி வருடியதில் வித்யாசாகரின் வதனத்திலிருந்த எரிச்சல் விடைபெற்று மீண்டும் ரசனை வந்து ஒட்டிக்கொண்டது.
“என் பாய் ஃப்ரெண்ட் எனக்குக் குடுக்கப் போற சர்ப்ரைசை பாக்கணுமா?” என குறும்பாக அவள் கேட்க அவனோ இரு கைகளையும் ஜீன்சின் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு தோள்பட்டைகளை ஏற்றி இறக்கி உதட்டைப் பிதுக்கினான்.
இந்த மேனரிசத்துக்கு உனக்கு இஷ்டமென்றால் அழைத்துச் செல் என்று அர்த்தம்! இரண்டு நாட்களில் இது சங்கமித்ராவுக்கு மனப்பாடமாகி விட்டதால் அவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
ஆதேஷ் அவளைக் கண்டதும் உற்சாகத்துடன் அனாமிகாவை அழைத்துக்கொண்டு அவளருகே வந்தவன் “என்ன சர்ப்ரைஸ்னு கேட்டல்ல? நான் எஸ்.பி.ஐயோட பி.ஓ எக்சாம், இண்டர்வியூ ரெண்டையும் கிளியர் பண்ணீட்டேன் மித்து… சோ…” என்று இழுத்து வித்யாசாகரின் பொறுமையைச் சோதித்தான்.
ஆனால் அதிகநேரம் எடுக்காது அனாமிகா இடைபுகுந்து “இவன் ஜாப்ல சேர்ந்ததும் அப்பா கிட்ட வந்து பேசுறேன்னு சொல்லிட்டான் மித்து… இன்னும் கொஞ்சநாள்ல ஜாப்ல ஜாயின் பண்ணிடுவான்… இது எல்லாமே உன்னால தான் மித்து… நீ மட்டும் சரியான நேரத்துல அட்வைஸ் பண்ணலனா இந்நேரம் நாங்க பிரேக்கப் பண்ணீருப்போம்” என்றாள் கண்களில் நீர் பளபளக்க.
“அனி வாட் இஸ் திஸ்?” என்றபடி அவளை அணைத்துக்கொண்ட சங்கமித்ராவை ஆச்சரியத்துடன் பார்த்தான் வித்யாசாகர். இவளுக்கு அந்த ஆது வைத்த பெயர் மிகவும் பொருத்தமானது தான் என்று எண்ணியவன் இது தெரியாமல் அவனை சங்கமித்ராவின் ஆண் தோழன் என்றெல்லாம் எண்ணியதை நினைத்து பின்னந்தலையில் அடித்துச் சிரித்துக்கொண்டான்.
அனாமிகாவைத் தேற்றும் பொறுப்பை ஆதேஷ் ஏற்றுக்கொள்ள அவனது சர்ப்ரைசான இந்நற்செய்திக்கு நன்றி சொல்லிவிட்டு அவனை வாழ்த்தினாள் சங்கமித்ரா.
அதன் பின்னரே இந்தப் பார்ட்டி அனாமிகாவால் கொடுக்கப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. தனது காதலனின் வாழ்வில் அவனுக்குக் கிடைத்த முதல் வெற்றியைச் சிறப்பிக்கும் விதமாகவும் தங்களின் காதலை முறியும் நிலையில் காத்த சங்கமித்ராவுக்கு நன்றி தெரிவிக்கவும் தான் இந்தப் பார்ட்டி என அவள் கூறவும் அவர்களது வகுப்புத்தோழர்களும் தோழிகளும் ஆர்ப்பரித்துவிட்டு ஆதேஷையும் அனாமிகாவையும் வாழ்த்துமழையில் நனைக்க ஆரம்பித்தனர்.
அவர்களை வாழ்த்திவிட்டு வந்த விருஷாலியும் ரேஷ்மாவும் வித்யாசாகரை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சங்கமித்ராவிடம் “இன்னைக்கு அனி ரொம்ப ஹேப்பியா இருக்கா மித்து… இப்போ சொல்லு… இதுக்கப்புறமும் உனக்குச் சயனைட் சாப்பிடுற ஆசை வரலையா?” என்று குறும்பாக கேட்டு வைக்க வித்யாசாகர் புரியாமல் விழித்தான்.
சங்கமித்ராவோ “இல்லவே இல்ல” என்று அநாயசமாக சொல்லிவிட்டு வித்யாசாகரை நோக்கியவள் இவனிடம் தனது மனதில் உள்ள கேள்விகளைக் கேட்டால் தான் என்ன என்ற யோசனையுடன் நின்றாள்.
அவர்கள் இருவரும் விலகியதும் “எனக்கு இப்போ அந்த ரெஸ்ட்ராண்ட் ஆம்பியன்சை பாத்தா நல்லா இருக்கும்னு தோணுது” என்று அவனிடம் மொழிந்தவள் அடுத்தச் சில நிமிடங்களில் அவனுடன் அந்த ரெஸ்ட்ராண்டில் அமர்ந்திருந்தாள்.
வித்யாசாகர் ஆதேஷின் காதலைப் பற்றி அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் இருந்தான். அதே மகிழ்ச்சியுடன் சயனைட் சாப்பிடும் ஆசை பற்றி வினவி சங்கமித்ரா அளித்த பதிலில் அயர்ந்தும் போனான்.
“காதலும் சயனைடும் ஒன்னா? என்ன ஒரு கேவலமான மகாமட்டமான கம்பேரிசன்… உன் அறிவுக்கு நீயெல்லாம் இந்தியால இருக்கவேண்டியவளே இல்ல பப்ளிமாஸ்” என்றான் கடுப்புடன்.
அவளோ அவனைப் போலவே தோள்பட்டைகளை உயர்த்தி உதட்டைப் பிதுக்கிவிட்டு தன் முன்னே வைக்கப்பட்டிருந்த ஐஸ் க்ரீமைச் சாப்பிட ஆரம்பித்தாள்.
வித்யாசாகர் காதல் விசயத்தில் இந்தப் பெண்ணுக்குத் தான் எவ்வளவு அலட்சியம் என்ற கடுப்பு மூள அவளைக் கடுப்பாக்கி பார்க்க ஆசைப்பட்டான்.
“நீ ட்வென்டி ஃபோர் அவர்சும் சாப்பிட்டுட்டே இருப்பியோ? இல்ல, மூனு வருசத்துக்கு முன்னாடி பாத்தப்போ இருந்ததை விட இன்னும் ஷப்பி கேர்ளா இருக்கியே! அதான் கேட்டேன்” என்று தன்னெதிரே அமர்ந்து ஐஸ் க்ரீமை காலி செய்து கொண்டிருந்த சங்கமித்ராவைச் சீண்டினான் அவன்.

அவன் எண்ணியது போலவே அவள் கடுப்புற்றாள். ஸ்பூனை வைத்து விட்டு நிமிர்ந்தவள்
“நானும் ஒரு டவுட் கேக்கவா? நீ ஆள் பாக்க வாட்டச்சாட்டமா இருக்கியே! இந்த மசில்ஸ்லாம் ஸ்டீராய்டு போட்டு ஏத்துனது தானே? ஏன்னா நீயும் மூனு வருசத்துக்கு முன்னாடி பாக்க ஒல்லிக்குச்சியா இருந்த… இப்போ ஆளே மாறிட்டியே” என்று கேட்க இப்போது கடுப்பாவது வித்யாசாகரின் முறை.
“அடியே! இதுல்லாம் நேச்சுரல் மசில்ஸ்டி… மனுசன் மூனுவருசம் ஜிம், ஒர்க் அவுட், டயட்னு கஷ்டப்பட்டு உருவாக்குன உடம்பை ஸ்டீராய்டு போட்டு உருவாக்குனதுனு நாக்கூசாம சொல்லுறியேடி பாவி” என்று பொங்கிவிட்டான் அவன்.
“எப்பிடி குண்டா இருக்குற எல்லாரும் ட்வென்டி ஃபோர் அவர்சும் சாப்பிட்டுட்டே இருப்பாங்கனு பொதுவா நீ ஒரு கருத்து சொன்னியோ, அதே மாதிரி தான் உன்னை மாதிரி ஜிம்பாடி வச்சிருக்கிற எல்லாருமே ஸ்டீராய்டுல உடம்பை வளக்குறாங்கனு நானும் இன்னொரு பொதுவான கருத்தைச் சொன்னேன்… உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா டொமேட்டோ சாஸா?” என்றாள் சங்கமித்ரா விடாக்கண்டியாக.
வித்யாசாகர் தனது கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடு போட்டவன் “தாயே சங்கமித்ரையே! உங்கள தெரியாம கலாய்ச்சிட்டேன்… பெரிய மனசு பண்ணி இந்தச் சின்னப்பையனை மன்னிச்சிடுங்க” என்று சரணாகதி அடைய சங்கமித்ரா அவன் சொன்ன விதத்தில் கிளுக்கிச் சிரிக்க ஆரம்பித்தாள்.
சிரிக்கும் போது விரிந்த அவளின் செவ்விதழும், மலர்ந்த கயல்விழிகளும், குண்டுகன்னங்களில் தோன்றி மறைந்த குழிகளும் வித்யாசாகரின் ரசனை நிறைந்த விழிகளைக் கவர தவறவில்லை.
அதன் விளைவாக அவனது உதட்டிலும் குறுஞ்சிரிப்பு ஒன்று பிறப்பெடுக்க சந்தோச மிகுதியில் அவனது உதடுகள் பாடலைப் பாட ஆரம்பித்தது.
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே
ரசனையையும் குறும்புத்தனத்தையும் கண்ணில் பூசிக்கொண்டு அவன் பாட சங்கமித்ராவுக்குள் வெட்கப்பூக்கள் மலரத் துவங்க அடுத்த நொடியே “இன்னும் ஸ்ப்ரிங் சீசன் வரல… வர்றப்போ நீங்க விரியலாம்” என்று அவற்றை அதட்டிக் கூம்ப வைத்தாள் அவள்.
கூடவே “ஐயா சாமி! தயவு பண்ணி பாட்டு மட்டும் பாடாத! கேக்க முடியல” என்று தனது காதுகளை விரல்களால் மூட
“ஓகே நான் பாட்டு பாடல… அதுக்குப் பதிலா உன் நம்பரை குடு” என்றான் வித்யாசாகர் தனது காரியத்தில் கண்ணாக.
சங்கமித்ரா அவசரமாக “நம்பர்லாம் குடுக்க முடியாது… மூனு வருசத்துக்கு முன்னாடி மாதிரி நீ என்னை மிரட்டவும் முடியாது.. ஏன்னா இங்க யானை இல்ல” என்றாள் மறுக்கும் விதத்தில்.
“ஏய் யானை எதுக்குடி? இப்போ மட்டும் நீ நம்பர் குடுக்கலனு வையேன், இந்த ரெஸ்ட்ராண்டே திரும்பி பாக்குற மாதிரி ‘பப்ளிமாஸ் ஐ லவ் யூ’னு சத்தம் போட்டு பிரபோஸ் பண்ணிடுவேன்… அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்லி அவளை அதிர வைத்தான் வித்யாசாகர்.
“அடப்பாவி ஈவில் மைண்டட் டெவில்” என்ற வார்த்தையை அவளை அறியாது அவளது உதடுகள் உச்சரித்து அடங்கியது
சங்கமித்ரா அதிர்ந்தாளேயன்றி அவனது மிரட்டலுக்குப் பயப்படவில்லை! இவ்வளவு உரிமை எடுத்து இவன் பேசுவதற்கு பின்னே ஏதோ பலமான காரணம் உள்ளது! அது தான் என்ன?
இந்தக் கேள்விக்குப் பதில் அறிந்தவன் வித்யாசாகர் மட்டுமே! ஆனால் இவ்வளவு எளிதில் அதை சங்கமித்ராவிடம் அவன் சொல்லிவிட்டால் அதன் பின்னர் அவர்களுக்கிடையே ஏற்படப்போகிற உறவில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

