“காட்! எப்பிடி ஒரு செகண்ட்ல மனுசங்களை நல்லவங்க கெட்டவங்கனு முடிவு பண்ணுறாங்களோ தெரியல. எந்த ஒரு மனுசனோட குணத்தையும் முடிவு பண்ணணும்னா நம்ம அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும், நிறைய பேசணும், அதை விட நிறைய தடவை சண்டை போடணும். இதுக்கெல்லாம் அப்புறமும் அவங்க ஸ்வீட் கெஸ்டரோட பழகுனா கூட அவங்க நல்லவங்கனு டிசைட் பண்ணிடக் கூடாது. பிகாஸ் எந்த ஒரு மனுசனும் தனிப்பட்ட ஒரே ஒரு எமோசனோட வாழுறது இல்லயே! வீ, ஹியூமன் பீயிங்ஸ் ஆர் த பண்டில் ஆப் எமோசன்ஸ்”
-க்யூட் கியூபிட்டின் குரல்
Cafe Middelberg, Aachen, Germany
துள்ளிசையுடன் ஆங்கில பாப் பாடல் ஒன்று மென்மையாய் ஒலித்துக் கொண்டிருந்தது. ஜெர்மனியில் ஆங்கில பாப் பாடலா? கபேயின் உரிமையாளரின் ரசனை அப்படி போல! அந்தக் கபேயின் மாடி அறைகளில் இருந்து பார்க்கும் போது அந்தத் தெரு விளக்கொளியில் ஜொலிப்பது கண்ணுக்கு விருந்தாக இருந்தது.
Spent 24 hours, I need more hours with you
You spent the weekend getting even; ooh
We spent the late nights making things right between us
But now it’s all good, babe
Roll that back wood, babe
And play me close
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
‘Cause girls like you run ’round with guys like me
‘Til sun down when I come through
I need a girl like you, yeah yeah
Girls like you love fun and, yeah, me too
What I want when I come through
I need a girl like you, yeah yeah
ஜன்னலோர மேஜையை முன்பதிவு செய்தது கூட நல்லது தான் போல என எண்ணிக்கொண்டபடி தன்னெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணாடி ஜன்னல் வழியே மாலைநேர நகரின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தவளைத் தனது கண்களால் படம் பிடித்து இதயத்தில் நிரப்பிக்கொண்டான்.

மேஜை மீது ராஸ்பெர்ரி டார்ட் முக்கோணங்கள் முட்கரண்டி சகிதம் தட்டுகளில் வீற்றிருக்க அவள் தனது முட்கரண்டியால் அழகாக அந்த டார்ட் முக்கோணத்தின் குவிந்த முனையை அழுத்தி தள்ளி அதே கரண்டியால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.
டார்டின் சுவையை அனுபவித்து உண்பவளின் விழிகள் மூடிக்கொள்ள “ம்ம்… இவ்ளோ டேஸ்டான டார்டை நான் சாப்பிட்டதே இல்ல” என்றன அவளின் ஸ்ட்ராபெர்ரி இதழ்கள்.
அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே விழி திறந்தவள் தன்னை விழியகற்றாது நோக்கியபடி இதழில் குறுஞ்சிரிப்புடன் அமர்ந்திருந்தவனை என்னவாயிற்று என்பது போல இரு கரங்களையும் விரித்து தோளைக் குலுக்கி வினவ அவனோ ஒன்றுமில்லை என்பது போல இடவலமாக தலையை அசைத்து மறுத்தான்.
பின்னர் அவள் புறம் குனிந்தவன் “ராஸ்பெர்ரியை டேஸ்ட் பண்ணும் ஸ்ட்ராபெர்ரி… பியூட்டிபுல்” என்று மையலாக உரைக்கவும் அவளது விழிகள் கார்ட்டூன் கேரக்டர்களைப் போல மூடி மூடி திறந்தது.
“என்னாச்சு பப்ளிமாஸ்? ஏன் ஷாக் ஆகுற?” என அவன் வினவ
“ஷாக் ஆகலடா… இந்த டார்டை வேஸ்ட் பண்ணணுமானு யோசிக்கிறேன்” என்றாள் அவள் பெருமூச்சுவிட்டபடி.
அவன் ஏன் வீணாக்கப் போகிறாய் என குழப்பத்துடன் அவளை ஏறிட அவளோ
“அவுட்டிங் போவோம்னு கூட்டிட்டு வந்துட்டு ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரினு என்னை இரிட்டேட் பண்ணுறதுக்கு பனிஷ்மெண்ட் குடுக்கணும்ல, அப்போ தான் என்னோட பிரெயின் சொல்லுச்சு மித்து பேசாம இந்த பிளேட்டால இவன் மண்டையை உடைச்சுடுனு… ப்ச்… பட் டார்ட் வேஸ்டாயிடுமே… எனக்கு வேற ஃபுட் வேஸ்ட் பண்ணுறது சுத்தமா பிடிக்காது” என்றாள் அவள் போலியான கவலையுடன்.
அவனோ அவளின் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுபவனாகத் தெரியவில்லை. இருப்பினும் கவனத்துடன் டார்ட் வைத்திருந்த இன்னும் தீராத தட்டை தன் புறமாக இழுத்துக்கொண்டான்.
அதைக் கண்டு அவள் களுக்கென்று நகைக்க அவனது விழிகள் சிரிப்பில் மலரும் அவள் வதனத்தில் நிலைத்தது.
நன்றாகப் பேசுகிறாள்! மிக நன்றாக விவாதம் செய்கிறாள்! இவளிடம் அனைத்தையும் தங்குதடையின்றி பகிர்ந்துகொள்ள முடிகிறது! ஆனால் காதலாய் பேசும்போது மட்டும் கடுமை காட்டுகிறாள்! ஏன்?
அதை அவளிடமே கேட்டுவிட வேண்டியது தான் என முடிவு செய்தவனாகத் தொண்டையைச் செருமிவிட்டு அவளின் கவனத்தைத் தன் புறம் திருப்பினான் அவன்.
“ஓய் பப்ளிமாஸ்! உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்… என் கூட பேசுறப்போ ஸ்பார்க் அடிக்குற உன் கண்ணே அதை எனக்குப் புரியவைச்சிடுச்சு… ஆனா ஏன் நல்ல ரொமாண்டிக் மொமண்ட்ல நான் பிரபோஸ் பண்ண வர்றப்போ அதை நீ ஃபைட் சீக்வன்சா மாத்துற?”
இதைக் கேட்டதும் அவளின் விழிகள் அவனது குழப்பம் சூழ்ந்த முகத்தில் ஊர்வலம் வந்தது. முட்கரண்டியை வைத்துவிட்டு அவனருகே குனிந்தவள் “யூ ஆர் ரைட் மை டியர் டெவில்! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… உனக்கும் அப்பிடி தான்னு தெரியும்… ஆனா” என்று சொல்லி நிறுத்தினாள் அவள்.
“என்ன ஆனா ஆவன்னா? முழுசா சொல்லி முடி… எப்போவும் இந்த ஆனாவோட நிறுத்திடுற நீ… இட்ஸ் அன்ஃபேர் யூ நோ” என அவன் குறைபடவும்
“ஓகே ஓகே! இன்னைக்கு நான் செண்டென்சை கம்ப்ளீட் பண்ணிடுறேன்” என்று சொல்லிவிட்டு அவனை ஏறிட்டவள் “ஆனா அது மட்டும் எனக்குப் போதாது சாகர்” என்றாள் அழுத்தத்துடன்.
இத்தனை நாட்கள் ‘ஆனாலில்’ நின்றவள் இன்று கொஞ்சம் அதிகம் தான் பேசியிருக்கிறாள். அது மட்டும் போதாது என்றால் என்ன அர்த்தம்? தனக்கு அவளை மிகவும் பிடிக்கும் என்ற ஒரு காரணம் மட்டும் அவளுக்குப் போதாது என்பது தானே!
அவசரமாக “தென் வாட் டூ யூ வாண்ட் ஃப்ரம் மீ? டெல் மீ பப்ளிமாஸ்” என அவன் வினவ
“எனக்கு… எனக்கு” என அவள் இழுக்கும்போதே மீண்டும் அந்தத் துள்ளிசைப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
‘Cause girls like you run ’round with guys like me
‘Til sun down when I come through
I need a girl like you, yeah yeah
Girls like you love fun and, yeah, me too
What I want when I come through
I need a girl like you, yeah yeah
ஆனால் சத்தம் தான் கொஞ்சம் அதிகம். சற்று முன்னர் மெல்லிய இசையாக ஒலித்தது இப்போது பெருஞ்சத்தத்துடன் ஒலிக்கவே “ஏய் யாருயா அது நல்ல நேரத்துல வால்யூமை கூட்டுனது? டிகிரீஸ் த வால்யூம் மேன்” என அவன் பெருங்குரல் எடுத்துக் கத்தினான்.
பாடலின் சத்தம் தான் குறைந்தபாடில்லை. கூடவே அவனது பப்ளிமாஸ் பெண் நாற்காலியிலிருந்து எழுந்துவிட “ஹலோ எங்க போற? எங்க போனாலும் உனக்கு என்ன தான் வேணும்னு சொல்லிட்டுப் போ” என அவன் தீவிரக்குரலில் மொழிந்தான்.
ஆனால் அவளோ அவனைக் கண்டுகொள்ளாது எழுந்தவள் விறுவிறுவென அந்த அறையிலிருந்து வெளியேற “பப்ளிமாஸ் போகாதடி… ப்ளீஸ்” என்று உரத்தக்குரலில் சொன்னபடியே எழுந்தான் அவன்.
“பப்ளிமாஸ்” என்று சொன்னவனின் முகத்துக்கு நேரே யாரோ டார்ச் அடித்தது போல திடீரென வெளிச்சம் வர தனது கண்களைக் கசக்கியபடி விழித்தவனின் முதுகில் யாரோ தட்டினார்கள்.
“யார்றா அது? நானே பப்ளிமாஸ் போயிட்டாளேனு கடுப்புல இருக்கேன்”
“டேய் முதல்ல எழுந்திருச்சு உக்காந்து கனவு காணுறதை நிறுத்துடா.. அப்போவாச்சும் உன்னோட பப்ளிமாஸ் உன் பேச்சைக் கேக்குறாளானு பாப்போம்” என்று கிண்டலாக ஒலித்தது இன்னொரு குரல்.
இந்தக் குரல் நரேனுடையது அல்லவா! அவன் எப்போது கபேக்கு வந்தான்? இந்த டார்ச் ஒளி வேறு என புலம்பியபடி கண்களை திறந்தவன் திகைத்தான்.
மிடில்பெர்க் கபேயும் அங்கில்லை! அவனது பப்ளிமாசும் அங்கில்லை! அவன் அமர்ந்திருந்தது ஜெர்மனியின் ஆச்சென் நகரின் குடியிருப்புப்பகுதியிலிருக்கும் அவன் தங்கியிருந்த ஃப்ளாட்டிலுள்ள அவனது படுக்கையின் மீது!
அப்படி என்றால் அவன் இன்றும் கனவு கண்டானா? அவனது பப்ளிமாசுடன் பேசியது இன்றும் கனவாகிவிட்டதா?
அந்த கபே, அங்கே ஒலித்த பாடல் எல்லாம் கனவா? என அவன் திகைத்த போதே இடுப்பில் கையூன்றி முறைத்தபடியே எதிரே நின்ற நரேந்திரன் கனவு தான்டா மடையா என சொல்லாமல் சொன்னான்.
ஏமாற்றத்துடன் சிகையைக் கோதிக் கொண்டான் அவன்! திடீரென மீண்டும் கபேயில் ஒலித்த பாடல் சத்தமாக ஒலிக்கவே திடுக்கிட்டவன் அது தனது மொபைலின் ரிங்டோன் என்பதை தாமதமாக உணர்ந்தான்.
“டேய் வித்தி! அப்போவே இருந்து அம்மா உனக்கு கால் பண்ணிட்டே இருக்காங்கடா… முதல்ல எடுத்துப் பேசு… சும்மா பப்ளிமாஸ் அது இதுனு இல்லாததை இருக்கிறதா நினைச்சு உளறாத” என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சமையலறையை நோக்கிச் சென்றான் நரேந்திரன், சுருக்கமாக நரேன்.
அவன் சென்றதும் போனை காதுக்குக் கொடுத்தான் அவன், வித்தி என்று அழைக்கப்பட்ட வித்யாசாகர்.
“சொல்லுங்கம்மா” என ஆரம்பித்தவன் நடுராத்திரியில் ஏன் அழைத்தீர்கள் என கேட்டுவைத்தான். ஜெர்மனியில் அப்போது காலை ஆறு மணி. இந்தியாவில் அது நள்ளிரவு கடந்த நேரம். இந்நேரம் கண் விழித்தால் உடல்நிலை என்னாவது என்று கடிந்துகொண்டான்.
மறுமுனையில் அவனது அன்னை மதிவதனி படபடத்தார்.
“வித்தி நான் ஒரு துர்சொப்பனம் கண்டேன்டா… அதனால தான் உனக்குக் கால் பண்ணுனேன்… உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?”
படிப்புக்காக கடல் கடந்து வந்த மகனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ என்ற கவலை அவரது பேச்சில் தெளிவாகத் தெரிந்தது. அவருக்கும் வித்யாசாகரின் தந்தை மகேந்திரனுக்கும் அவனைப் பற்றிய சிந்தனை தான் இருபத்திநான்கு மணிநேரமும்.
தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என அரைமணிநேரம் பேசி அவரைச் சமாதானம் செய்தவன் உறங்குமாறு சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
அதன் பின்னர் அவனது சிந்தனையைக் கடன் வாங்கிக்கொண்டாள் அந்த பப்ளிமாஸ்.

“மூனு வருசமா கனவுல மட்டும் வர்றீயே பப்ளிமாஸ்… எப்போ நான் உன்னை நேர்ல மீட் பண்ணுவேனு இருக்கு… ஒரு தடவை ஒரே ஒரு தடவை உன்னை பாத்துட்டேனா அப்புறம் நான் இந்த ஜென்மத்துக்கும் என்னை விட்டுப் பிரிய அலோ பண்ணமாட்டேன்”
மனதுக்குள் வழக்கம் போல சூளுரைத்துக் கொண்டான் வித்யாசாகர்.
பின்னர் விறுவிறுவென குளித்து உடைமாற்றி காலையுணவை நண்பனுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தான் அவன்.
சாப்பிடும் போது நரேன் வழக்கம் போல அந்தப் பப்ளிமாஸ் பெண்ணைப் பற்றி வினவினான். வித்யாசாகரிடம் இருந்து பெருமூச்சு தான் வந்தது.
“அவளை நான் மூனு வருசத்துக்கு முன்னாடி நெல்லையப்பர் கோயில்ல பாத்தேன்டா… ரொம்ப ஸ்வீட்டான கேரக்டர்… கியூட்டான பொண்ணு… அவங்க அம்மா மேல எவ்ளோ பாசம் தெரியுமா? பெரியவங்களை மதிக்குற குணம், பொறுமைனு ஒரே பார்வைல என் மனசைப் பாதிச்சிட்டா அந்தப் பப்ளிமாஸ்” என்று சிலாகித்து முடித்தான் வித்யாசாகர்.
நரேன் அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு “சரி தான்… ஆனா நீ இப்பிடி உருகுற மாதிரி அந்தப் பொண்ணும் உன்னை நினைச்சுப் பாக்கணுமேடா… அதை விடு… இன்னைக்கு இண்டர்வியூ இருக்கு மகனே… இது தான் நம்ம எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகுது… அதுல கான்சென்ட்ரேட் பண்ணுவோம்” என்றான் தீவிரக்குரலில்.
அதன் பின்னர் வித்யாசாகரும் பொறுப்பான மனிதனாக நேர்முகத்தேர்வுக்குக் கிளம்பிவிட்டான். அவன் இந்த ஜெர்மனிக்கு வந்ததே அதற்கு தானே!
ஏதோ பத்தோடு பதினொன்றாக பொறியியல் படித்துவிட்டு மென்பொருள் நிறுவனத்தில் விசைப்பலகையைத் தட்டும் வேலையில் அவனுக்கு விருப்பமில்லை. எனவே தாங்கள் படித்த மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் உயர்கல்வியைத் தொடர அவனும் நரேனும் ஜெர்மனியைத் தேர்வு செய்தனர்.
அதற்கான நுழைவுத்தேர்வுக்காக படித்து வெற்றிகரமாக ஜெர்மனியிலுள்ள பல்கலைகழகத்திலும் அவர்களுக்கு இடம் கிடைத்தது. கடந்த இரண்டாண்டுகளாக இங்கே படிப்பு, பயிற்சி என காலம் கடந்தது.
இதோ படிப்பும் முடிந்து நேர்முகத்தேர்வையும் எதிர்கொண்டால் இங்கேயே படித்த படிப்புக்கேற்ற வேலையைச் செய்துகொண்டு பிடித்த வாழ்க்கையை வாழலாம் என்ற எண்ணம் இரு இளைஞர்களுக்கும்.
நேர்முகத்தேர்வை நல்லபடியாக முடித்தவர்களுக்கு இனி அதன் முடிவு தங்களுக்குச் சாதகமாக வரவேண்டும் என்ற ஒரே ஒரு கவலை மட்டும் தான்.
வேலைக்கான அழைப்பு வருவதற்குள் இந்தியாவுக்குச் சென்றுவந்தால் என்ன என நரேன் கேட்டு வைக்க “முதல்ல இண்டர்வியூ ரிசல்ட் வரட்டும் நரேன்… நான் இந்தியா காலடி எடுத்து வைக்கிறப்போ ஒரு நல்ல ஜாப் ஆபரோட தான் போய் நிப்பேன்” என்றான் வித்யாசாகர் பிடிவாதமாக.
எனவே நரேனும் அவனும் நேர்முகத்தேர்வு முடிவு வரும் வரை ஆச்சனை சுற்றிப் பார்த்து பொழுதைக் கழித்தனர். இதற்கு இடையில் வித்யாசாகரின் கனவில் வரும் பப்ளிமாசுக்கு விடுமுறை என்பதே கிடையாது. தினமும் அவனது கனவில் வந்து செல்பவளைப் பற்றி அவன் ஒரு கணிப்பு வைத்திருந்தான்.
ஆனால் அந்தக் கணிப்புக்குச் சொந்தகாரியோ சென்னையில் கல்லூரி கேண்டீனில் அமர்ந்து யாரிடமோ தீவிரக்குரலில் போனில் விவாதித்துக் கொண்டிருந்தாள்.
“அழகுங்கிறது பாக்குற கண்ணையும் ரசிக்குற மனசையும் பொறுத்தது. இவங்க யாரும்மா எனக்கு பியூட்டி ஸ்டேண்டர்ட் ஃபிக்ஸ் பண்ணுறதுக்கு? இவங்க மேரேஜ் பண்ணி குடும்பம் நடத்த பொண்ணு பாக்குறாங்களா? இல்ல ஃபேஷன் ஷோல கேட்வாக் போறதுக்குப் பாக்குறாங்களா? ஒல்லியா, நிறமா, நீளமான முடியோட தான் பொண்ணு வேணும்னு இவங்க சொல்லுற மாதிரி நானும் ஆறடிக்கு, சுண்டி விட்டா ரத்தம் வர்ற கலர்ல, சிக்ஸ்பேக்கோட தான் மாப்பிள்ளை வேணும்னு டிமாண்ட் போட்டா நீங்கள்லாம் என்ன சொல்லுவிங்க?
ஆம்பளைங்களுக்கு அழகே சம்பாத்தியமும், கண்ணியமும் தான்னு சொல்லுவிங்கள்ல… ஆம்பளைனா குணத்தை முக்கியமா பாக்கச் சொல்லிட்டு பொண்ணுனு வர்றப்போ மட்டும் ஏன் அப்பியரன்சை அளவுகோலா வைக்குறிங்க? அவங்க மட்டும் இல்ல… நீங்களும் ஒரு டபுள் ஸ்டேண்டர்ட் மனுசி தான்மா… இனிமே மாப்பிள்ளை பாக்குறேன்ங்கிற பேர்ல எந்தக் கோமாளிக்கூத்தையும் பண்ணி வைக்காதிங்க… ஏன்னா இதே போல அடுத்தத் தடவை நான் வர்றவங்க கிட்ட பொறுமையா பேசமாட்டேன்”

படபடவென பொரிந்து தள்ளிவிட்டு மறுமுனையிலிருப்பவர் பேசும்போதே இணைப்பைத் துண்டித்தாள் அவள்.
அவள் அருகே அமர்ந்திருந்த தோழியர் இருவர் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அவளைச் சமாதானம் செய்ய முற்பட்டனர்.
“வழக்கமான பொண்ணு பாக்குற படலமா மித்து? விடுடி” என்றாள் நெடுநெடுவென வளர்ந்திருந்த அவளது தோழியரில் ஒருத்தி.
அதைக் கேட்டதும் அந்த மித்துவின் கண்களில் தீப்பொறி.
“நான் ஏன் விடணும் ஷாலி? அந்த மாப்பிள்ளைக்கு எவ்ளோ திமிர் இருந்தா என்னை டயட்டீசியனை மீட் பண்ணச் சொல்லிருப்பான்? அவன் பெரிய அர்னால்ட் பாரு” என்று பொருமித் தீர்த்தாள்.
உடனே மற்றொருத்தி “சொன்னாலும் சொல்லாட்டியும் அவன் பாக்க அர்னால்ட் மாதிரி தான் இருந்தான் மித்து… நீ மட்டும் டயட்டீசியன் கிட்ட போய் இன்னும் கொஞ்சம் ஃபிட் ஆனா அவனுக்கு ஏத்த மாதிரி மாறிடுவடி” என்றாள் நிதானமாக.
“இதை சொல்லுறப்போவே உனக்குச் சிரிப்பு வரலையா ரேஷ்? நான் டயட்டீசியன் கிட்ட போனா மட்டும் சைஸ் ஜீரோவா மாறிடுவேனா? அப்பிடி மாறுனா மட்டும் பையனை பெத்த அம்மாக்களோட டிமாண்ட் ஸ்டாப் ஆயிடுமா? லுக் அட் மீ… நான் ஹெல்தியா தான் இருக்கேன்… எந்த வீணாப்போனவனுக்காகவும் நான் என்னை மாத்திக்க மாட்டேன்… என்னை இப்பிடியே விரும்புற ஒருத்தன் வரட்டும்… வந்தா அவனை மேரேஜ் பண்ணிப்பேன்… அப்பிடி எவனும் வரலனா நான் லைப் லாங் சிங்கிளாவே இருந்துடுவேனே தவிர எவனுக்காகவும் என்னோட அப்பியரன்சை மாத்திக்க போறதில்ல” என்றாள் அவள் பிடிவாதத்துடன்.

கூடவே “மிஸ் விருஷாலி அண்ட் மிஸ் ரேஷ்மா! அதுங்க வைக்கிற டிமாண்டை நான் ஒரு பொருட்டாவே மதிக்கல… நீங்களும் அதை நினைச்சு ஒரி பண்ணிக்காதீங்கடி… வேஸ்ட்ஃபெல்லோஸ்… இனிமே யாரும் பொண்ணு பாக்குறேனு சொல்லிட்டு வரட்டும்… அதுக்கு அப்புறம் இந்தச் சங்கமித்ரா கொலை கேஸ்ல ஜெயிலுக்குப் போறதை யாராலயும் தடுக்க முடியாது” என்று எரிச்சலுடன் மொழிந்தாள்.
அவள் தான் சங்கமித்ரா. அந்தக் கல்லூரியின் வணிகவியல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி. திருநெல்வேலியில் இளங்கலையை முடித்துவிட்டு தனது தோழிக்காக பெற்றோரிடம் சண்டை போட்டு முதுகலை படிப்பை சென்னையில் தொடர்பவள். பேராசிரியை ஆகவேண்டுமென்பது அவளின் இலட்சியம்.
முக்கியமாக வித்யாசாகரால் என்றோ ஒரு நாள் கோயிலில் வைத்துப் பார்க்கப்பட்ட பப்ளிமாஸ் பெண் அவளே! இருபத்திநான்கு வயதாகி விட்டாலே பெண்ணைப் பெற்றவர்களுக்கு வரும் கவலை தான் அவளது பெற்றோருக்கும். என்ன அவர்களுக்குக் கொஞ்சம் முன்னரே பெண்ணின் இருபத்திமூன்றாவது வயதில் வந்துவிட்டது.
அத்தோடு சங்கமித்ராவின் பெற்றோருக்கு இன்னொரு கவலையும் போனசாக உண்டானது அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டினர் உதிர்த்த பொன்மொழிகளின் வாயிலாகத் தான்.
“பொண்ணு பாக்க லெட்சணமா இருக்கா… ஆனா என்ன நிறம் தான் கொஞ்சம் மட்டு… ஆளும் கொஞ்சம் சதை போட்டு இருக்காளா எங்க பையனுக்கு அதுவே தயக்கம் பாத்துக்கோங்க… நான் தான் இந்த ஜிம், டயட்னு என்னவோ சொல்லுறாங்களே, அதையெல்லாம் செய்யச் சொல்லுவோம்னு சமாதானம் பண்ணிருக்கேன் சம்பந்திம்மா… நீங்க போடுறேனு சொன்ன நகையோட கூட ஒரு பத்து சவரன் போட்டுட்டா பிரச்சனை தீர்ந்துடும்” என்ற மாப்பிள்ளையைப் பெற்ற பெண்மணியின் கூற்றைக் கேட்டு சங்கமித்ராவின் அன்னை சம்பூர்ணா முதலில் திகைத்தார்.
பின்னர் அந்தப் பெண்மணி தனது மகளின் நலனில் அக்கறை கொண்டு தானே பேசுகிறார் என எண்ணி மகளிடம் வாய் விட்டு வாங்கிக் கட்டிக்கொண்டார்.
என்னவோ அந்தப் பத்து சவரன் தனது தோற்றத்தில் அந்தப் பெண்மணி கண்டுபிடித்த குறைகளை நிவர்த்தி செய்து தன்னை பால்வண்ணத்தில் இஞ்சி இடையழகியாக மாற்றிவிடும் என்ற ரீதியில் அல்லவா அவரது பேச்சு இருந்திருக்கிறது.
இதை சம்பூர்ணாவால் உணரமுடியாது போகலாம். ஆனால் சங்கமித்ரா இந்த விசயத்தில் கெட்டி. அவரது மைந்தன் சந்தோஷை இங்கே கபேயில் வைத்து சந்தித்த போதே அவனது ஃபிட்னஸ் அட்டவணையைப் பகிர்ந்துகொண்டான். அதை வைத்தே அவனுக்குத் தன்னை கட்டாயம் பிடிக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் சங்கமித்ரா.
பாவி! ஆசையாய் வாங்கிய சீஸ் பர்கரை கூட கலோரி அது இதென்று பேசி அவளைச் சாப்பிடவிடவில்லை. இவனுடன் தனது வாழ்வு பிணைக்கப்பட்டால் தான் ஒரு நடமாடும் ஃபிட்னஸ் அட்டவணையுடன் தான் குடும்பம் நடத்தவேண்டும் போல என பொருமினாள் அவள்.
அவள் எண்ணியது போல அந்த ஃபிட்னஸ் ஃப்ரீக்குக்கு சங்கமித்ராவைப் பிடிக்கவில்லை. ஆனால் அவனது தாயாருக்கோ நல்லூரில் சங்கமித்ராவின் பெயரில் நடக்கும் தொழிலையும் ரைஸ்மில்லையும் தென்னந்தோப்புகளையும் விட மனதில்லை.
அதற்காக அம்மாவும் மகனுமாகப் பேசி எடுத்த முடிவு தான் அதிகமாக பத்து சவரன் என்ற கணக்கு. அதாவது அவரது ஆணழகனான மகன் சங்கமித்ராவைத் திருமணம் செய்வதன் மூலம் பண்ணுகிற தியாகத்துக்கு அந்தப் பத்து சவரன் விலை.
இதைப் புரிந்துகொண்ட சங்கமித்ரா சம்பூர்ணாவிடம் கத்தி தீர்த்துவிட்டாள். இது தான் அவளின் குணம். யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாதவள்! பெரியவர்களேயாயினும் தவறு செய்தால் அதற்கு பெயர் தவறு தான் என்று வாதம் செய்பவள்! முக்கியமாக தனது மனதில் பட்டதை மறைக்காது உரைப்பவள்! அந்த விசயத்தில் பொறுமையை எல்லாம் கடைபிடிக்க மாட்டாள்.
இதை எதுவும் அறியாத வித்யாசாகர் அவளைப் பார்த்த குறுகிய கால நேரத்தில் அவளை ஒரு விதமாக மதிப்பீடு செய்து வைத்திருந்தான். ஆனால் உண்மையில் சங்கமித்ராவோ அவனது மதிப்பீடுகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கும் குணத்தினள்!
இது வித்யாசாகருக்குத் தெரியவரும் போது அவன் எப்படி உணர்வான்? தனக்கான கொள்கைகளில் மாறாதவளான சங்கமித்ரா தன்னை எண்ணி ஒருவன் உருகுவதைக் கேள்விப்பட்டால் என்ன செய்வாள்? இத்தகைய பதில் தெரியாத கேள்விகளுக்கான விடைகளில் தானே வாழ்க்கையின் சுவாரசியமே ஒளிந்திருக்கிறது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

