“கனவுகள் உங்கள் ஆழ்மனதில் மறைந்திருக்கும் ஆசைகளையும், தீர்வு காணப்படாத பிரச்சனைகளையும் புலப்படுத்தும் ஆழ்மனதின் ஜன்னல்கள்”
-சிக்மண்ட் ஃப்ராய்ட்
வசுப்ரதா வீட்டை அடைந்தபோது தாரணியிடம் எது பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தாள் சிருஷ்டி.
“நீ அக்கா கிட்ட சொன்னா மட்டும் போதும்… அவ எப்பவும் இதெல்லாம் ஒரு செலவுனு நினைக்கமாட்டா.”
“நீ கேட்டா அவ மாட்டேன்னு சொல்லமாட்டாடி… ஆனா அவ நிலைமையைக் கொஞ்சம் யோசி… வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம் தான் ஆகிருக்கு… திடீர்னு இவ்ளோ பெரிய அமவுண்டுக்கு எங்க போவா? இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா நீ பாத்துக்க சிருஷ்டி.”
அவள் சொல்வதற்குத் தாரணி மறுப்பு சொல்வதும், வராண்டாவிலிருந்த காலணிக்கான அலமாரியில் தனது ‘ஃப்ளிப் ஃப்ளாப்’ செருப்பைக் கழற்றி வைத்துக்கொண்டிருந்த வசுப்ரதாவின் செவியில் திவ்வியமாக விழுந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களின் விவாதத்திற்குரிய கருப்பொருள் என்னவென யோசிக்குமளவுக்கு நிதானம் வசுப்ரதாவுக்கு இல்லை. அவள் மனம் எரிமலையாக வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தது. ஆசுதோஷ் மட்டும் எதிரில் இருந்தான் என்றால், அந்த எரிமலையின் மாக்மாவும் லாவாவும் அவனது சாம்பலைக் கூட மிச்சம் வைக்காமல் எரித்துவிடும்! அத்துணை கோபம் அவளுக்கு!
விறுவிறுவென வீட்டுக்குள் வந்தவளின் முகம் சரியில்லை என்பதைச் சடுதியில் கண்டறிந்த தாரணி, பயணக்களைப்பு என்று எண்ணிவிட்டார். சிருஷ்டியோ அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அன்னை மறுத்ததை தமக்கையிடம் கேட்டு வாங்கும் அவசரம் அவளுக்கு.
ஓடோடி வந்து வசுப்ரதாவின் தோளைப் பற்றிச் சலுகையாகத் தொங்கிக்கொண்டவள், “அக்கா எனக்கு ஒரு ட்வென்டி ஃபைவ் தவுசண்ட் வேணும்,” என்று கொஞ்ச, வசுப்ரதாவின் புருவங்கள் ‘ஏன்’ எனக் கேள்வியாய்ச் சுழித்தன.
அதைப் புரிந்துகொண்ட இளையவள், “இன்னும் ரெண்டு நாள்ல ஆசுவோட பர்த்டே வருதுக்கா… அவருக்கு ஏதாச்சும் கிப்ட் வாங்கித் தரணும்னு ஆசையா இருக்கு… அவரோட ஸ்டேட்டசுக்கு ஏத்த கிப்ட் வாங்கிக் குடுக்குற அளவுக்கு நம்ம கிட்ட வசதி இல்ல… அதனால ரோஸ் கோல்டுல சிம்பிளா ஒரே ஒரு டயமண்ட் வச்சு ஜெண்ட்ஸ் போடுற ரிங் ஒன்னு பாத்து வச்சிருக்கேன்.. அது ட்வென்டி ஃபோர் தவுசண்ட்… எப்படியும் ஜி.எஸ்.டி அது இதுனு ட்வெண்டி ஃபைவ் தவுசண்ட் ஆகும்… ப்ளீஸ்கா,” என்றாள்.
ஆசுதோஷின் சுயரூபம் இன்னதெனத் தெரியவில்லை என்றால், கட்டாயம் தங்கைக்காக அந்தத் தொகையைக் கொடுத்திருப்பாள் வசுப்ரதா. ஆனால் இப்போது நிலைமையோ தலைகீழாகி விட்டது. தங்கைக்கு அவன் எப்படிப்பட்டவன் என்று புரியவைத்தே ஆகவேண்டும். காதல் பைத்தியம் முற்றி அவள் ஆசுதோஷிடம் ஒரேயடியாக ஏமாறும் முன்னர் அதைச் செய்தாகவேண்டும்.
மனதின் தீர்மானம் முகத்தில் பிரதிபலிக்க, சிருஷ்டியோ அக்காவுக்குத் தனது பேச்சில் பிடித்தமில்லை என்று எண்ணித் தவிக்க ஆரம்பித்தாள்.
அதைக் கண்டுகொள்ளாமல், “லுக் சிருஷ்டி! உனக்கும் ஆசுவுக்கும் கல்யாணம் நடக்காது… நான் நடக்க விடமாட்டேன்… அவன் உன்னைக் காதலிக்குறதா சொல்லி ஏமாத்தியிருக்கான்… ஹீ இஸ் அ ஸ்பாயில்ட் ப்ராட்,” என்று கோபமாக உரைத்தவள், அன்னையும் தங்கையும் திகைத்து நிற்கவும் கைப்பையை சோபாவில் எறிந்தாள்.
“இன்னைக்குச் சாரு மேடமோட பர்த்டே பார்ட்டியை முடிச்சிட்டுக் கிளம்புறப்ப அவனை அங்க இன்னொரு பொண்ணு கூட பாத்தேன்… ரெண்டு பேரும் நெருக்கமா நின்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க.”
வசுப்ரதா பேசிக்கொண்டே போக, சிருஷ்டியின் முகத்தில் அதிர்ச்சி வெளுப்பைப் பரவ விட்டது. முகம் வெளுக்க இரத்தச்சோகை கண்டவளைப் போலத் தமக்கையைப் பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் நிரம்பியது. அந்தத் தருணத்திலும் அவளது மனம் ஆசுதோசுக்குச் சாதகமாகவே யோசித்தது. அவன் மீது தவறிருக்காதெனத் தமக்கையிடம் வாதிட ஆரம்பித்தாள்.
“நீ பாத்தது வேற யாராவது இருக்கலாம்கா.”
“எனக்குக் கண்ணுல எந்தப் பிரச்சனையுமில்ல… அவன் குரலை என் காதால கேட்டேன்.”
“ஒரு பொண்ணும் பையனும் நெருங்கி நின்னா காதலிக்கணும்னு அவசியமில்ல… ஃப்ரெண்டா கூட இருக்கலாம்.”
“ஆனா ஃப்ரெண்டுனு சொல்லிக்கிற ஆணும் பொண்ணும் பேசனேட்டா கிஸ் பண்ணிக்க மாட்டாங்கடி.”
வசுப்ரதா கோபத்தில் கத்தவும் சிருஷ்டி உறைந்து போனாள். தாரணியோ அன்னையின் முன் மகள்கள் பேச வேண்டிய பேச்சா இது எனத் தர்மச்சங்கடத்தில் இருந்தார். கூடவே மருமகனாக வரப்போகிறவனைப் பற்றி மூத்தவள் கூறிய செய்தி கொடுத்த குழப்பம் வேறு!
சிருஷ்டி சித்தம் கலங்கி நிற்க, வசுப்ரதாவோ அருவருப்போடு, “அவன் என் கண் முன்னாடியே அந்தப் பொண்ணு கரிஷ்மாவத் திட்டுனான்… அப்புறம் கிஸ் பண்ணுனான்… அவங்க லவ் பண்ணுறாங்க சிருஷ்டி… அந்தப் பொண்ணு அவனை உனக்கு விட்டுக் குடுக்கமாட்டேன்னு சொன்னாடி… நான் பொய்யும் சொல்லல… பொறாமையும் படல… என்னை நம்பு,” என்று அங்கே கண்டதைத் தங்கையிடம் விவரித்தாள்.
அவள் சொல்வதைக் கேட்கக் கேட்க, சிருஷ்டிக்கு இதயம் வெடித்துச் சிதறிய உணர்வு. அவளது பதினெட்டு வயது இத்தகைய அதிர்ச்சியைத் தாங்கும் மனப்பக்குவத்தை அவளுக்கு அளிக்கவில்லை. வசுப்ரதா மேற்கொண்டு ஏதோ சொல்லவர, கையுயர்த்தி அவளைத் தடுத்தாள்.
“எதுவும் பேசாத… நான் கொஞ்சநேரம் தனியா இருக்கணும்.”
சொன்னவள் வீட்டை விட்டு வெளியேறிவிட, தாரணி கண்ணீரும் கம்பலையுமாக மூத்த மகளிடம் அவள் சொன்னவை எல்லாம் உண்மைதானா என்று மனத்தாங்கலோடு வினவினார்.
“நீயுமா என்னை நம்பல? அம்மா அங்க நடந்ததை என் கண்ணால பாத்தேன்… அவன் நம்ம சிருஷ்டிய காதலிச்சதா சொன்னதுலாம் பொய்.. ஏதோ ஒரு கட்டாயத்துக்காக அவன் அப்படி சொல்லிருக்கான்… அவன் காதலிக்குறது கரிஷ்மானு ஒருத்தியை.”
“உன்னை நம்பாம இருப்பேனா? ஆனா ஆசு… நம்ம நீல் அண்ணாவோட பையன்… அவன் எப்படி இந்த மாதிரி… ஒருவேளை அவன் முகச்சாயல்ல நீ வேற யாரையும் பாத்துட்டுனு ஆசுனு நினைச்சிட்டியா?”
“ஐயோ! அது அவன்தான்… அந்த நேரத்துல எப்படி ரியாக்ட் பண்ணணும்னு தெரியாம நிலைகுலைஞ்சு போனதால என்னால அவங்களை போட்டோ கூட எடுக்க முடியாத நிலைமை… நீயாச்சும் என்னை நம்பும்மா… சிருஷ்டி இப்ப அவன் கூட பேசத்தான் போயிருப்பா… அவ கட்டாயம் என்னை நம்ப மாட்டா… பொறாமை அது இதுனு கூட சொல்லுவா… நீ என்னை நம்புறல்ல?”
தாரணிக்கு என்ன செய்யவெனப் புரியாத நிலை.
இத்தனை நாட்கள் மகள்களின் எதிர்காலம் பற்றி இருந்த பரிதவிப்பு, பயம் எல்லாம் அடங்கி சில நாட்கள் நிம்மதியாக மூச்சு விட்டார். அது கூடக் கடவுளுக்குப் பொறுக்கவில்லை. கண்ணீரோடு ஹாலின் ஒரு மூலையில் முடங்கிப்போனார் அவர்.
வசுப்ரதா அன்னையிடம் மேற்கொண்டு பேசவில்லை. அவர் யோசிக்கட்டுமென விட்டுவிட்டாள். தனது அறைக்குள் சென்று ஆடையை மாற்றிக்கொண்டவள், தனிமை வேண்டுமெனக் கேட்ட தங்கையைத் தேடி வீட்டிற்கு வெளியே போனாள். ஆனால் அங்கே சிருஷ்டி இல்லை.
எங்கே போயிருப்பாள்?
“சிருஷ்டி” என்று அழைத்துப் பார்த்தாள். வீட்டின் சுற்றுவட்டாரத்தில் அவள் இல்லை. வசுப்ரதாவுக்கு எதுவோ தவறாகப் பட்டது.
“சிருஷ்டி” அவள் உரத்தக் குரலில் அழைத்ததும் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு கணம் எட்டிப் பார்த்தார்.
வழக்கமாகத் தெருநாய்களுக்குச் சோறு வைக்க அந்நேரத்தில் வருபவர், எப்போதும் அண்டைவீடு இந்நேரத்தில் அமைதியாகிவிடுமே, இன்று ஏன் இன்னும் வீட்டின் உறுப்பினர்கள் வெளியே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள் என்ற கேள்வியோடு எட்டிப் பார்த்தார்.
அவரைக் கவனித்துவிட்டாள் வசுப்ரதா.
“சிருஷ்டிய பாத்திங்களா ஆன்ட்டி?” என்று இயல்பானக் குரலில் வினவினாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன்ல பேசிக்கிட்டே நம்ம ஏரியா பார்க் பக்கமா போனாம்மா… நான் அந்த முனைல இருக்குற ப்ளூ க்ராஸ் தொட்டில சாப்பாடு வைக்க போனப்ப என்னைக் க்ராஸ் பண்ணுனா,” என்றார் அந்தப் பெண்மணி.
இந்நேரத்தில் பூங்காவுக்கு ஏன் சென்றாள்? அதுவும் பூங்கா மூடுகிற சமயம் வேறு!
முடிந்த வரை முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாமல் சமாளித்து அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறியவள், தங்கையின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபடியே பூங்காவுக்குச் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாள்.
“நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறொரு நபரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் காத்திருக்கலாம் அல்லது சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளலாம்.”
இதே பதிவு செய்யப்பட்ட குரல்தான் மீண்டும் மீண்டும் வந்தது. ஒருவேளை ஆசுதோஷிடம் பேசிக்கொண்டிருப்பாளோ? வசுப்ரதா நடையில் வேகத்தைக் கூட்டினாள்.
பூட்டியிருந்த பெரிய கேட்டுடன் பூங்கா அவளை வரவேற்றது. சிருஷ்டியும் அவளது அழைப்பை ஏற்கவில்லை.
வசுப்ரதாவுக்கு இப்போது பயம் வந்தது. அந்நேரத்தில் பூங்காவை ஒட்டிய சாலையில் பரபரப்பு தொற்றியிருப்பதை உணர்ந்தவள், அங்கே வேகமாக நடந்து சென்ற ஒரு நபரிடம் ஓடிப்போய் என்ன பிரச்சனை என வினவினாள்.
“அந்தக் க்ராஸ் ரோட்டுல ஒரு பொண்ணு மேல கார் மோதிடுச்சு… ட்ரங்க் அண்ட் ட்ரைவ் போல… பொண்ணுக்குத் தலைல பலமான அடி… ஆம்புலன்சுக்குக் கால் பண்ணிருக்காங்க.”
அவர் அவ்வாறு சொன்னதும் வசுப்ரதாவின் அட்ரினல் சுரப்பிகள் படுவேகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தன. வியர்க்க விறுவிறுக்க குறுக்குச் சாலையை நோக்கி ஓடினாள் அவள்.
‘அது சிருஷ்டியா இருக்கக்கூடாது’ கடவுளிடம் வேண்டிக்கொண்டே ஓடினாள் அவள்.
அங்கே மக்கள் கூட்டமாக நிற்க ஆம்புலன்சில் யாரையோ ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடியவள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது யாரென எட்டிப் பார்த்தாள். அவளது வேண்டுதலுக்குக் கடவுள் செவிசாய்க்கவில்லை. ஏனெனில் இரத்த வெள்ளத்தில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைக்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றிவைக்கப்பட்டவள் சிருஷ்டியேதான்.
“சிருஷ்டி”
அழுது கதறியபடி ஆம்புலன்சின் அருகே அவள் ஓட, அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அவளை விலக்க முயன்றார்கள்.
“என் தங்கச்சி அவ.”
அழுதபடியே சொன்னவளை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டார்கள்.
“அழாம இருங்க… அவங்களுக்குக் கான்சியஸ் (conscious) இருக்கு… உங்க அழுகை அவங்களுக்குப் பிரஷரை (pressure) உண்டாக்கும்.”
மருத்துவ ஊழியர்கள் சொன்னதால் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி, அரைகுறை நினைவோடு உடையெல்லாம் இரத்தக்கறையோடு கிடந்த தங்கையைப் பார்த்தாள் வசுப்ரதா.
தலையில் படுகாயம்! அதிகப்படியான உதிரப்போக்கை நிறுத்தவும், மூச்சு விடுவதில் சிரமமாகிவிடக்கூடாதென ஆக்சிஜனை இணைப்பதிலும் மருத்துவ ஊழியர்கள் மும்முரமாக இருந்தார்கள்.
இதே நிலையைத் தந்தை விபத்துக்குள்ளான போதும் அனுபவித்தவள் வசுப்ரதா. அவளுக்கு அன்றிலிருந்து இரத்தம், மருத்துவமனை என்றாலே பயம். அதைவிட மரணத்தைப் பற்றிய அதீத பயம்! செல்லும் வழியெங்கும் கடவுளிடம் பிரார்த்தித்துக்கொண்டே வந்தவள், அரசு மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் வந்ததும் அடுத்து என்ன எனத் தெரியாமல் விழித்தாள்.
சிருஷ்டியைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தூக்கிச் சென்றார்கள். பின்னர் நடந்தது விபத்து என்பதால் முதல் தகவல் அறிக்கை தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்தார்கள். மருந்து எழுதிக் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்கள்.
இதற்கிடையே தாரணி வேறு நான்கு முறை வசுப்ரதாவின் எண்ணுக்கு அழைத்துவிட்டார். வெறும் இருபது நிமிடத்தில் மூவரின் வாழ்க்கையும் மாறிப்போன உணர்வு வசுப்ரதாவுக்கு. அன்னையிடம் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.
“உன் தங்கச்சி போன் பேசிட்டே வந்திருக்கும்மா… அந்தப் பசங்க மேல தப்பில்ல,” என்றார் ஒரு காவல்துறை அதிகாரி.
“நம்ம கோர்ட் கேசுனு போனா ரொம்ப கஷ்டம்… உன் தங்கச்சி ட்ரீட்மெண்டுக்கு அவங்க பணம் குடுக்குறதா சொல்லுறாங்க… இதை பேசி முடிச்சிடலாம்,” என்றார் யாரோ ஒரு முகந்தெரியாத நபர்.
யார் இவர்கள் எல்லாம் என்று அவள் வேதனையோடு சலிக்கும்போதே அங்கே தாரணியின் உருவம் வருவது தெரிந்தது. அன்னைக்கு யார் தகவல் சொல்லியிருப்பார்கள் என்று வசுப்ரதா திகைக்கும்போதே, தாரணி அழுதபடியே அவளிடம் வந்தார்.
“என்னாச்சு சிருஷ்டிக்கு? அவ மேல எப்படி கார் மோதிச்சு?” என்று மூத்தவளிடம் விசாரித்தார்.
அதற்குக் காவலர், “உங்க மகளாம்மா அட்மிட் ஆகிருக்கு? அந்தப் பொண்ணு டென்சனா போன்ல பேசிட்டு வந்தப்ப காரை கவனிக்காம குறுக்க வந்துடுச்சு,” என்று சொல்ல வசுப்ரதாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“என் தங்கச்சி மேல எந்தத் தப்பும் இருக்காது… குடிச்சிட்டு வண்டி ஓட்டுனவங்களை என்னனு கேக்காம, கான்சியஸ் இல்லாம கிடக்குறவ மேல பழி போடுறிங்க.”
அவள் மனத்தாங்கலோடு பேச, தாரணிக்கோ காவல்துறையினரின் பொல்லாப்பு எதற்கு என்ற பயம் வந்துவிட்டது.
“அமைதியா இருடி,” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றார்.
வசுப்ரதாவுக்குத் தங்கை மீது அவர்கள் போடும் வீண்பழி கோபத்தையும் ஆற்றாமையையும் உண்டாக்கியது.
“ஏன் என்னை அமைதியா இருக்க சொல்லுறம்மா? சிருஷ்டி எந்தத் தப்பும் பண்ணல… அந்தப் பசங்க குடிச்சிட்டு வந்து அவ மேல காரை மோதிருக்காங்க… க்ராஸ் ரோடுல போன எல்லாரும் அதுக்குச் சாட்சி… இவங்க நம்ம நிலைமைய யூஸ் பண்ணி அந்தப் பசங்களைத் தப்பிக்க வைக்க பாக்குறாங்க.”
தாரணிக்கோ இளையவளுக்கு என்னாகுமோ என்ற பயத்தில் மனம் ஒரு நிலையில் இல்லை. ஆண் துணை இல்லாமல் இரு பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பாக எப்படிப் பார்த்துக்கொள்வதென்ற மனவுளைச்சல் வேறு! போதாக்குறைக்கு ஆசுதோஷ் பற்றி மகள் சொன்ன தகவலும், இப்போது அவள் காவல்துறையினரிடம் சண்டைக்குப் போவதும் தாரணியின் பயத்தையும் குழப்பத்தையும் இன்னும் அதிகரிக்க, அதன் விளைவு அவர் மூத்த மகளிடம் வெடிக்க ஆரம்பித்தார்.
“வாயை மூடு…. சிருஷ்டியோட இந்த நிலைமைக்கு நீ தான் காரணம்.”
தாரணி இவ்வாறு சொன்னதும் வசுப்ரதா சிலையாகிப்போனாள்.
“நா…நானா? ம்மா…”
“ஆமாடி… நீ தான் காரணம்…. சரியா தெரிஞ்சிக்காம அவசரப்பட்டு அவ கிட்ட கண்டதையும் நீ சொன்னதால தான் இந்நேரத்துல அவ வெளிய போனா… நீ மட்டும் கொஞ்சம் யோசிச்சு பேசிருந்தா இந்த நிலைமை சிருஷ்டிக்கு வந்திருக்குமா? ஞாபகம் இருக்கா? ‘அரசியல் கட்சி மீட்டிங் இருக்கு, ரோடு மாத்தி விடுவாங்க, வண்டி எல்லாம் ஒழுங்கில்லாம போகும், இன்னைக்கு வெளிய போகாதிங்கனு’ உன் அப்பா கிட்ட நான் சொல்லச் சொல்ல கேக்காம கடைக்குப் போயே தீரணும்னு நீ அடம்பிடிச்சதால தான் இப்ப அவர் நம்மளோட இல்ல… இன்னைக்குச் சிருஷ்டிக்கும் அதே நிலைமையைக் கொண்டு வந்துட்டியே! தயவுபண்ணி இங்க இருந்து போயிடு… என் கண் முன்னாடி நிக்காத.”
தாரணி தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க, அந்த நொடியில் மோசமாகக் காயப்பட்டுப்போனாள் வசுப்ரதா.
சிருஷ்டி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தாரணியை அவ்வாறு பேச வைத்துவிட்டதென இம்முறை அவளால் சமாதானமாக முடியவில்லை. அவளது மனம்தான் குற்றவுணர்ச்சியில் ஆழ்ந்துவிட்டதே!
‘அப்படி என்றால் என்னால்தான் என் தந்தை இறந்தாரா? என் தங்கைக்கு இந்நிலை வருவதற்கும் நான்தான் காரணமா?’
தாரணி தன்னை அங்கிருந்து போய்விடுமாறு சொன்னதும் மனவேதனையோடு மருத்துவமனையிலிருந்து கிளம்பினாள் வசுப்ரதா.
நேசித்தவர்கள் யோசிக்காமல் விடும் வார்த்தைகளுக்கு ‘வெறுப்பு’, ‘உதாசீனம்’ என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளும் நம் மனம். வசுப்ரதாவின் மனமும் அதற்கு விதிவிலக்கு இல்லையே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

