“உங்கள் கனவுகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள்! ஒருவேளை அந்தக் கனவுகள் மறைந்து போனால் உங்கள் வாழ்க்கை பனியில் உறைந்த தரிசு நிலமாகிவிடும்”
-லாங்ஸ்டன் ஹகிஸ்
வசுப்ரதாவின் அறைக்கதவு தாழிடப்படவில்லை என்பதால் வேகமாக உள்ளே ஓடி வந்தார்கள் தாரணியும் சிருஷ்டியும்.
கால்களைக் குறுக்கிக் கட்டிக்கொண்டு அழுதவளைப் பார்த்ததும் தாரணிக்கு நெஞ்சு வெடித்துப் போனது.
“என்னாச்சு வசும்மா?” என்று அவளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டார் அவர்.
அன்னையின் மார்பில் சாய்ந்துகொண்டவள் “என் கையில… ஃபுல்லா ரத்தம்… அவன்… மிரு… மிருவோட ரத்தம்” என்று நடுங்கிய குரலில் சொல்ல அவளது கண்ணீர் தாரணியின் புடவையை நனைத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சிருஷ்டிக்கும் வசுப்ரதாவின் அழுகையைப் பார்த்ததும் கண்கள் கலங்கிப்போயின.
அவளது தோளைப் பற்றித் தடவிக்கொடுத்தவள் “எல்லாம் கனவுல நடந்திருக்கும்கா… உன் கையில ரத்தக்கறை இல்ல… யாருக்கும் எதுவும் ஆகலக்கா” என்று ஆறுதல் சொன்னாள்.
அவளது மனம் குற்றவுணர்ச்சியில் குறுகுறுத்தது. தனது முசுட்டுத்தனமும் முன்கோபமும் வசுப்ரதாவை வருத்தியிருக்க வேண்டும். அவள் இப்போது இரத்தத்தைக் கண்டதாக அலறியது முன்பு நடந்த சம்பவமொன்றை நினைவுறுத்தியது சிருஷ்டிக்கு.
அவர்களின் தந்தை தவநாதன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கிடைத்த தகவல் அது!
அன்றைய தினத்தின் காலைப்பொழுதில் வசுப்ரதாவும் தவநாதனும் அவரது பைக்கில் காய்கறி வாங்கி வரச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் தவநாதனின் பைக் விபத்தான தகவல் வந்து சேர்ந்தது. அவளும் தாரணியும் கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனையை அடைந்தபோது தவநாதன் இறந்துவிட்டார்.
சின்னச் சின்ன காயங்களுடன் மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்திருந்த வசுப்ரதாவோ அன்னையைக் கண்டதும் அழ ஆரம்பித்தாள்.
“அப்பா…. ம்மா… என் கைய பாரு… எல்லாம் அப்பாவோட ரத்தம்”
அன்றுதான் தந்தையை எண்ணி அவள் இறுதியாக அழுததாகச் சிருஷ்டிக்கு ஞாபகம். அதன்பின்னர் எல்லாம் யோசனைவயப்பட்டுத் தனிமையில் பொழுதைக் கழித்தவளைத் தாரணி கவனிக்கவில்லை.
அவரை முழுவதுமாக விழுங்கிக்கொண்ட துக்கத்தின் தீவிரத்தில் மகளை அவர் கவனியாது போனார்.
சிருஷ்டி தமக்கையின் செயல்பாட்டில் தெரிந்த வித்தியாசத்தை உணர்ந்து அவரிடம் சொன்னபோதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தவநாதனை இழந்த அதிர்ச்சி என்றே எண்ணினார்.
இப்படியே வருடங்கள் உருண்டோடின. இதோ கடந்த ஆறு மாதங்களாகத் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எப்படியோ வசுப்ரதாவுக்கு வந்துவிட்டது.
ஒவ்வொரு விடியலிலும் அவள் குழப்பத்தோடு விழிப்பது வாடிக்கையாகிப்போனது.
இப்போதுதான் புரிகிறது! வசுப்ரதா ஏதோ கனவின் பிடியில் தூக்கத்தில் நடக்கிறாள் என்பது!
வர வர இந்தப் பாதிப்பின் தீவிரம் அதிகமாவது போன்ற உணர்வு!
அழுது அரற்றியவளைத் தேற்றி தாரணியும் அவளோடு படுத்துக்கொள்ள சிருஷ்டி அவளது அறைக்குப் போய்விட்டாள்.
மறுநாள் விடியலில் வசுப்ரதா கண் விழிக்கும்போது இரவு நடந்த அனைத்தும் அவளுக்கு ஸ்பஷ்டமாக ஞாபகம் இருந்தது.
முக்கியமாக மிருத்யுஞ்சயனின் முகம்!
எப்போதும் மறந்து போய்விடும் கனவு இந்த முறை மட்டும் ஏன் நினைவில் பதிந்து போனது?
குழப்பத்தில் தவித்தபடி எழுந்தவள் தனது ஆடையைச் சோதிக்க மறக்கவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவளது உடையிலோ உடலிலோ துளிகூட இரத்தத்தின் கறை இல்லை.
எல்லாம் சரிதான். ஆனால் அவளது மனம் ஏதோ ஒன்றைப் பற்றிச் சிந்தித்துச் சோகமாக இருப்பதை மட்டும் வசுப்ரதாவால் சரி செய்ய முடியவில்லை.
எதையோ இழந்த உணர்வோடு குளித்து ஆடை அணிந்து அலுவலகம் செல்லத் தயாரானாள்.
காலையுணவின்போது சிருஷ்டி கூட முந்தைய தினம் துடுக்காகப் பேசியதை மறந்து இனிமையே உருவாக நடந்துகொண்டாள்.
“ரொம்ப ஸ்வீட்டா பேசாதடி… அது உன் நேச்சர் இல்ல… நீ எப்பவும் போல இரு” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்ப எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தியது தாரணியின் குரல்.
“இன்னைக்குச் சைக்கியாட்ரிஷ்டை பாக்க போகலாம்”
“வேண்டாம்மா”
ஏன் இவ்வளவு பிடிவாதம்? புரியாமல் பார்த்தார் தாரணி. கடந்த ஆறு மாதங்களாக ஏதோ ஒன்று அவளை உறுத்துகிறது. அது என்னவென அறிந்தால் தானே குணப்படுத்த முடியும். வசுப்ரதாவோ ஒரேயடியாக மறுத்தாள்.
“எனக்குக் கனவு வருது… அதோட ஓட்டத்துல என்னை அறியாம நான் தூக்கத்துல நடக்க ஆரம்பிச்சிடுறேன்… அவ்ளோ தான்… கடந்த ஆறு மாசமா தானே இந்தப் பிரச்சனை? அதுக்கு முன்னாடி இப்பிடி எனக்கு ஆனதில்லையே… பாதில வந்த பிரச்சனை பாதில போயிடும்”
“நேத்து நீ அலறி துடிச்சதை பாத்த அப்புறம் தான் அம்மா இப்பிடி கேக்குறாங்க அக்கா… ஒரு தடவை போயிட்டு வந்துடலாமே?”
சிருஷ்டியின் கனிவு வசுப்ரதாவுக்கு இதமாக இருந்தது. புன்னகைத்தாள் அவள்.
“தட் வாஸ் அ நைட்மேர்… வேற ஒன்னுமில்ல… நீ எதையும் போட்டுக் குழப்பிக்காத… கான்சென்ட்ரேட் ஆன் யுவர் ஸ்டடீஸ்… நீல் அங்கிள் ரூபா ஆன்ட்டி கிட்ட நல்லப்பொண்ணுனு பேர் வாங்கு… என்னை நான் பாத்துக்குறேன்” என்றவள் தாரணியிடம் வீட்டுக்குத் திரும்ப தாமதமாகுமெனச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
டெக்கான் பதிப்பாலயத்திற்கு வந்தவுடனே பொது மேலாளர் சதீஷை வந்து சந்திக்குமாறு அவரது உதவியாளர் கூறவும் அவரது அலுவல் அறைக்குப் போனாள் வசுப்ரதா.
காமிக்ஸ் நாவல் வேலையில் எதுவும் சுணக்கமா என விசாரித்தார்.
“மேடமுக்கு இன்னும் ஹீரோவோட ஆர்ட்ல திருப்தி வரல… இன்னைக்கு எப்பிடியாச்சும் அதை கம்ப்ளீட் பண்ணிட்டனா அடுத்தடுத்த ஃப்ரேம்ஸை உருவாக்கிடுவேன் சார்”
“குட்… ரொம்ப லேட் ஆக்கிடாதிங்க… நமக்கு இருக்குறது ஒரு மாசம் தான்… அதுக்குள்ள இந்தக் காமிக்சை முடிச்சு மார்க்கெட்ல இண்ட்ரடியூஸ் பண்ணனும்… இதுக்கு வாசகர்கள் கிட்ட வரவேற்பு இருக்குனு தெரிஞ்சா அடுத்தடுத்து உங்களுக்கு வேலை இருக்கும்… உங்களோட திறமைக்குத் தீனி போடுற மாதிரி வர்ற வேலைகளை நீங்களும் லேட் பண்ணாம முடிப்பிங்கனு நம்புறேன்”
“கண்டிப்பா சார்… என்னை நீங்க முழுசா நம்பலாம்”
அவரிடம் உத்தரவாதம் கொடுத்துவிட்டுத் தனது கேபினுக்குள் வந்து கணினித் திரையை உயிர்ப்பித்தாள்.
சிமேரா மென்பொருளைத் தட்டி எழுப்பியவள் அன்று புதுவித உத்வேகத்தோடு கதாநாயகனுக்கானப் படத்தை வரைவதற்கான உள்ளீட்டை எழுத ஆரம்பித்தாள்.
எழுதும் போதே சாருலதாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“மூத்தவரோட மகன் யூ.எஸ் கிளம்புறான்… அவனை செண்ட் ஆப் பண்ணிட்டு நான் ஆபிசுக்கு வந்துடுறேன் வசு… நீ ஒர்க்கை ஸ்டார்ட் பண்ணிடு”
“ஓ.கே மேடம்” என்றவள் மூத்தவருடைய மகன் என்றதும் அன்று சாருலதாவை ‘சித்தி’ என்று அழைத்த ஜீவா என்ற முகம் தெரியாத நபர் நினைவுக்கு வரவே, அவனது குரல் தனக்குக் கொடுத்த உறுத்தலைப் போக்கிக்கொள்ள விழைந்தாள் வசுப்ரதா.
“யார் மேடம்? அன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப நீங்க யார் கூடவோ பேசுனிங்களே? அவரா?” எனக் கேட்க
“யாஹ்! அவனே தான்! ஜீவன்… சாரோட ஃப்ரெண்ட் ஒருத்தன் யூ.எஸ்ல இருக்கான்… அவனுக்கு அங்க மேரேஜ்… அதுக்குச் சார் கிளம்புறார்… அங்கயே ஜாப் தேடிச் செட்டில் ஆகுற ஐடியா இருக்குதாம் ஐயாவுக்கு… அதான் புத்திமதி சொல்லி வழியனுப்பிட்டு வரக் கிளம்புறேன்” என்றார் சாருலதா.
அதற்கு மேல் அவரிடம் தோண்டித் துருவினால் நாகரிகமாக இருக்காது என்பதால் சரியென்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் வசுப்ரதா.
அதன் பின்னர் சிமேரா மென்பொருளில் வெளியீடாகக் கதாநாயகனின் படம் வரவும் கவனத்தை அங்கே குவித்தவள் அங்கே தெரிந்த முகத்தில் அவளையறியாமல் கண் கலங்கினாள்.
ஏனெனில் அவள் கனவில் கண்ட மிருத்யுஞ்சயனின் முகத்தைத் தான் அங்கே அவள் வெளியீடாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கணினித் திரைக்குள்ளிருந்து அவன் தன்னை நோக்கிச் சிரிப்பது போலத் தெரிந்தது அவளுக்கு.
அடுத்த நொடியே ‘அவனை மீண்டும் நினைக்காதே! நீ கட்டாயம் கண்ணீரில் ஆழ்ந்துவிடுவாய்’ என்று ஆழ்மனம் எச்சரிக்கவும் மற்ற அனைத்தையும் மறந்து வண்ணங்களைச் செறிவூட்டும் வேலையை ஆரம்பித்தாள் வசுப்ரதா.
சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அலுவலகத்துக்கு வந்த சாருலதா பரமேஷ்வரனுக்கு வசுப்ரதா இம்முறை உருவாக்கியிருந்த கதாநாயகனின் படம் பிடித்துப் போய்விட்டது.
“லுக்கிங் ஆசம் வசு… என் கதையோட ஹீரோக்கு இந்த ஆர்ட் பெர்ஃபெக்டா மேட்ச் ஆகும்… யூ ஹேவ் டன் அ க்ரேட் ஜாப்மா”
அவரது ஒப்புதல் கிடைத்ததும் முதல் மூன்று அத்தியாயங்களுக்காக காமிக்ஸ் ஃப்ரேம்களை உருவாக்கும் வேலையை வெகு சிரத்தையாகச் செய்ய ஆரம்பித்தாள் வசுப்ரதா.
மதியவுணவைக்கூட கணினி முன் அமர்ந்து சாப்பிட்டவள் மாலைக்குள் வெற்றிகரமாக மூன்று அத்தியாயங்களுக்கான அனைத்து ஃப்ரேம்களையும் முடித்துவிட்டாள்.
அவற்றை உடனடியாக பொதுமேலாளர், மேலாண்மை இயக்குனர் மற்றும் சாருலதா பரமேஷ்வரனுக்கு மின்னஞ்சலில் அனுப்பி அவர்களின் பதில் மின்னஞ்சலையும் வாசித்த பிற்பாடே வீட்டுக்குக் கிளம்பினாள்.
எப்போதுமே அலுவலகக் கணினியில் அவள் எந்தக் கோப்பினையும் சேமித்து வைப்பதில்லை. அவளது பென்ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜில் அன்றாட வேலைகளுக்கான கோப்பினைச் சேமித்து வைப்பதை வழக்கமாக்கியிருந்தாள். இதற்காக அலுவலகத்தில் அனுமதியும் பெற்றிருந்தாள்.
தனது மேலதிகாரியான நிவாஷிணியின் மீது கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை வசுப்ரதாவுக்கு. வசுப்ரதாவுடைய கணினியின் கடவுச்சொல்லை அவள் நன்கு அறிவாள். அவளது வன்மத்தால் தனது வேலையை எங்கே கெடுத்துவிடுவாளோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் வசுப்ரதா இந்த வழிமுறையைக் கடைப்பிடித்தாள்.
அன்றும் அவ்வாறே முடித்த வேலைகள் அனைத்தையும் கோப்பு ஒன்றில் போட்டு க்ளவுட் ஸ்டோரேஜில் சேமித்து கணினியை ‘ஷட் டவுன்’ செய்தபோது கணினியின் ‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ மெதுவாக ‘ஆப்’ ஆவதற்கான அறிகுறியாகச் சிறு வட்டமொன்று சுழன்றுகொண்டிருக்க அதைப் பார்த்தவளுக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன.

கணினித் திரைக்குள் தெரிந்த வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி மாபெரும் சுழலாகி அவளை விழுங்குவது போன்ற மாயை. அந்தக் காட்சியில் மயக்கம் வந்து விழுந்தவளுக்கு உடல் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பது போன்ற மாயை!
‘என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ என்று கண்களைத் திறந்து பார்த்தவள் தன்னைச் சுற்றியிருந்த இடம் டெக்கான் பதிப்பாலயத்தின் கேபின் இல்லை, அது செம்மலையின் அடர் கானகம் என்று அறிந்ததும் திகைத்துப் போனாள்.
‘இரவுகளில் கனவில் மட்டுமே வரும் அந்த மலைவாசஸ்தலம் இப்போது ஏன் என் கண் முன்னே காட்சியாக விரிகிறது?”
யோசித்தவளின் உடல் மிதப்பதை நிறுத்தியது. அனிச்சையாக அவளது பாதங்கள் பூமியை மிதித்தன.
கானகத்தின் உறுப்பினராக உயர்ந்த இராட்சச விருட்சங்கள் அவ்வப்போது உதிர்த்த இலைகளில் அவள் பாதங்கள் பட்டதும் எழுந்த மெல்லிய ஒலி மட்டுமே அங்கே கேட்டது.
அது ஒரு அழகான மாலை நேரம் என்பதை மறையும் சூரியனின் ஊமையான மஞ்சள் கதிர்கள் சொல்லாமல் சொல்ல கண்களைச் சுழற்றித் தன்னைத் தவிர வேறு யாரேனும் அங்குள்ளார்களா என ஆராய்ந்தாள் வசுப்ரதா.
அந்நேரத்தில் அங்கே சலசலப்பு கேட்டது. யாரெனத் திரும்பிப் பார்த்தவள் அங்கே தன்னைப் போலவே உருவமைப்பு கொண்ட இளம்பெண்ணொருத்தியோடு ஓடி வந்த மிருத்யுஞ்சயனைக் கண்டதும் திகைத்துப் போனாள்.
“இவ… இந்தப் பொண்ணு என்னை மாதிரியே இருக்குறா” தனக்குத் தானே சத்தமாக அவள் பேசிக்கொள்ள அவர்களோ அப்படி ஒருத்தி அங்கே இல்லாதது போல குதூகலமாக அங்கிருந்த மரவீட்டின் படிகளில் துள்ளலாக ஏறினார்கள்.
“ஹேய்! ஹலோ! நான் இருக்குறது தெரியுதா?” என்று கைகளை ஆட்டி வசுப்ரதா செய்த சைகைகளை அவர்கள் கவனிக்கவில்லை.
வசுப்ரதா வேறு வழியில்லாமல் அவர்களைத் தொடர முடிவு செய்தாள்.
“இவங்க கிட்ட பேசுனா என் கனவுக்கான காரணம் தெரிய வரலாம்… ஒருவேளை அது தெரிஞ்சுதுனா இனிமே அந்த மாதிரி கனவு வராம இருக்க என்ன செய்யணும்னு நான் ஒரு முடிவுக்கு வந்துடுவேன்”
தனக்குத் தானே பேசிக்கொண்டவள் மரப்படிகளில் விறுவிறுவென ஏறிச் சென்றாள்.
அங்கே வராண்டா போல விரிந்த அமைப்பில் மிருத்யுஞ்சயன் சரிந்து அமர்ந்திருக்க அவன் மார்பில் தலையைப் பதித்து அவனது அணைப்பில் அமர்ந்திருந்தாள் வசுப்ரதாவின் பிரதிபிம்பமான அந்தப் பெண்.
“ஹலோ கய்ஸ்!”
அவர்கள் முன்னே போய் வசுப்ரதா கத்த அவர்கள் கண்டுகொண்டால் தானே!
“ஒருவேளை இவர்களின் கண்களுக்கு நான் புலப்படவில்லையோ?’
சந்தேகத்தோடு அவள் பார்க்க அங்கிருந்த இருவரின் நடவடிக்கையும் அவளது ஐயத்தை உறுதிபடுத்துவது போலத்தான் அமைந்திருந்தன.
“நான் சொன்னா நீ நம்ப மாட்ட மிரு… பட் சம்திங் ஃபிஷ்ஷி தேர்”
உருவத்தில் மட்டுமல்ல, குரலிலும் அவள் வசுப்ரதாவையே பிரதிபலித்தாள்.
அவளை அணைத்திருந்த மிருத்யுஞ்சயனின் கரங்கள் மெதுவாக அவளை விட்டு விலகிக்கொள்ள அந்தப் பெண்ணின் கண்களில் ஆதங்கம்!
“ஐ பிலீவ் ஹிம்… இன்னொரு தடவை நீ இந்தப் பேச்சை எடுக்காத வசு”
மிருத்யுஞ்சயனின் ‘வசு’ என்ற அழைப்பில் வசுப்ரதா ஸ்தம்பித்துப் போனாள்.
“அப்படினா அந்தப் பொண்ணு நான் தானா?”
அவள் கேட்கும்போதே மிருத்யுஞ்சயனின் வசு விருட்டென எழுந்தாள்.
“நீ எப்ப நான் சொல்லுறதை சீரியசா எடுத்திருக்க மிரு? நீ எதையும் நம்ப வேண்டாம்… ஒரு நாள் நான் சொன்னது எல்லாம் உண்மைனு உனக்குத் தெரிய வரும்… அப்ப நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன்”
கோபமாகச் சொல்லிவிட்டு அவள் விறுவிறுவென அங்கிருந்து கீழிறங்கிச் செல்ல, வேகமாக எழுந்த மிருத்யுஞ்சயன் “வசு நில்லு” என்றபடி தன்னெதிரே நின்றிருந்த வசுப்ரதாவை இடித்துவிட்டு ஓடினான்.
அவன் இடித்ததில் வசுப்ரதா நிலை தடுமாறிய போதே அவளுக்கு மீண்டும் மயக்கம் வந்துவிட்டது.
எல்லாம் சில நொடிகளே!
கண் விழித்துப் பார்த்தவள் கிடந்ததோ டெக்கான் பதிப்பாலயத்தில் அவளது கேபினுக்குள்.
எழுந்து அமர்ந்த வசுப்ரதா தனது தலையைப் பிடித்துக்கொண்டாள்.
முந்தைய நாளிரவு கனவில் இறந்த மிருத்யுஞ்சயன் இப்போது உயிருடன் இருக்கிறான்!
அவனுடன் நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு எனது உருவமும் எனது பெயரும் இருக்கிறது என்றால் அந்தப் பெண் நானா? அல்லது வேறொருத்தியா?
இத்தனை நாட்கள் கனவில் மிருத்யுஞ்சயனோடு இருந்தவள் நான் இல்லையா? அப்படி என்றால் அந்த வசு வேறொருத்தியா? இவர்களது வாழ்க்கை நிகழ்வுகள் தான் எனக்குக் கனவாக வருகிறதா?
குழப்பத்தில் தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக எழுந்தவள் கணினி ‘ஷட்டவுன்’ ஆகியிருப்பதைப் பார்த்துவிட்டு கேபினிலிருந்து வெளியேறினாள். கனவுகள் உண்டாக்கிய குழப்பத்தின் முதல் முடிச்சே இதுதான் என்பதைப் பின்னாட்களில்தான் வசுப்ரதா உணர்வாள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

