“நாம் மெய்யாகவே விரும்பினால் மட்டுமே கனவுகள் நிஜமாகும். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று நிலைத்திருக்க வேண்டுமென விரும்பினால் அந்த ஒன்றுக்காக நீங்கள் எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்”
– ஜே.எம்.பேரி
சாருலதா பரமேஷ்வரன் கொடுத்த குறிப்புகளின் அடிப்படையில் காமிக்ஸ் நாவல்களுக்கான வேலைகளை ஆரம்பித்திருந்தாள் வசுப்ரதா.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கான படங்களை உருவாக்கலாமெனத் திட்டமிட்டிருந்தாள். அதற்கு முதல் நாளே சோதனை வந்தது. வேறு யாருடைய வடிவிலும் இல்லை. அவள் காமிக்சுக்காக உருவாக்கிய படங்கள்தான் அவளுக்குச் சோதனையாக அமைந்தன.
அதிலிருந்த கதாநாயகனின் தோற்றம் சாருலதாவுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை.
“நோ நோ! நான் இமேஜின் பண்ணி வச்சிருக்குற ஹீரோவோட ஃபேசுக்கும் இதுக்கும் சுத்தமா மேட்ச் ஆகல வசு… ட்ரை அகெய்ன்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இப்படிச் சொல்லிச் சொல்லி ஒரு நாளில் கிட்டத்தட்ட ஐந்து முறை போராடித் தோற்றாள் வசுப்ரதா. எழுத்தாளருக்குத் திருப்தி வந்தால்தான் அந்த காமிக்ஸ் ஃப்ரேம் இறுதி வடிவம் பெறும் என்பதால் அவளுக்கும் வேறு வழியில்லை.
அன்றைய நாளின் முடிவில் அவளால் கதாநாயகனின் படத்தை உருவாக்க முடியவில்லை. கதாநாயகிக்கான காட்சிகளை மட்டுமே உருவாக்கி முடித்து சாருலதாவின் ஒப்புதலைப் பெற்றிருந்தாள்.
கதைக்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருமே முக்கியம். அப்படிப் பார்த்தால் பாதி வேலைதானே முடிந்திருக்கிறது!
சோர்வாக அமர்ந்திருந்தவளிடம் “பாதி வேலை முடிஞ்சிருச்சு வசு… நாளைக்கு ஃப்ரெஷ்சா ஆரம்பிக்கலாம்… யூ ஹேவ் டன் அ க்ரேட் ஜாப்மா… வீட்டுக்குக் கிளம்பு” என்று உற்சாகமாகப் பேசி அனுப்பி வைத்தார் சாருலதா.
வீட்டுக்கு வந்தவளுக்கோ ஒரு அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது.
‘ஆசுதோஷ் – சிருஷ்டியின் திருமணம்’
தாரணி இதைச் சொன்னதும் வசுப்ரதாவுக்குப் பெரிய அதிர்ச்சி. மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை மணி நேரம் மட்டுமே சிருஷ்டியும் ஆசுதோஷும் உரையாடியிருப்பார்கள். அதற்குள் திருமணப்பேச்சு வரை வந்துவிட்டதா?
“ரூபாவும் நீல் அண்ணாவும் பேசுனப்ப நான் கூட உன்னை மாதிரி தான் யோசிச்சேன் வசு… ஆனா சிருஷ்டியை ஆசு வெளியே மீட் பண்ணி பேசிருக்கான்… இந்தக் காலத்து பசங்களுக்குத் தான் பார்த்த உடனே காதல் வந்துடுதே”
அன்னை இத்துணை இலகுவாகக் காதல் பற்றிப் பேசவும் வசுப்ரதாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
“அப்பா இல்லாத பொண்ணுங்கனு பசங்க உங்க கிட்ட நெருங்கி பேச நினைப்பாங்க… கவனமா இருக்கணும்… படிக்கப் போற இடத்துலயோ, வெளியவோ யாரும் உங்களைத் தொந்தரவு பண்ணுனா அம்மா கிட்ட மறைக்காம சொல்லிடணும்… படிக்குற வயசுல படிப்பைத் தவிர வேற எதுலயும் கவனத்தைத் திருப்பக்கூடாது… நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் ஆளுங்களுக்குப் படிப்பு ஒன்னு தான் சொத்து… அதுலயும் பொண்குழந்தைங்களுக்குப் படிப்பு தான் நம்பிக்கை, பாதுகாப்பு எல்லாமே”
இப்படிச் சொல்லும் தாரணி இன்று காதலைப் பற்றி இயல்பாக உரையாடுகிறார் என்றால் ஆசுதோஷ் மீது அவருக்கு நம்பிக்கை என்றுதானே அர்த்தம்.
வசுப்ரதாவுக்கும் ஆசுதோஷின் ‘கண்ட உடன் காதல்’ கோட்பாட்டில் மாற்றுக்கருத்து பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் சிருஷ்டி இப்போதுதானே கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். பதினெட்டுக்கும் இருபத்தாறுக்கும் இடையே வயது வித்தியாசமும் அதிகம்தானே!
அது வசுப்ரதாவுக்கு உறுத்தலாக இருந்தது.
“அதில்லம்மா இப்ப தானே சிருஷ்டி ஃபர்ஸ்ட் இயர்ல ஜாயின் பண்ணிருக்கா… அதுக்குள்ள கல்யாணம் அது இதுனு ஏன் ஆரம்பிக்கணும்?”
தயக்கமாக அவள் கேட்கவும் தாரணியின் முகமும் யோசனைக்குத் தாவியது. ஆனால் தமக்கையின் இந்தக் கேள்விக்குக் காத்திருந்தாற்போல ஓடோடி வந்தாள் சிருஷ்டி.
“கல்யாணத்துக்கு அப்புறமும் நான் ஸ்டடீசை கண்டினியூ பண்ணுறதுல ஆசுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டார்க்கா” என்றவளின் கண்களில் அத்துணை பிரகாசம்!
வெகுநாட்களுக்குப் பிறகு தங்கையிடம் இவ்வளவு மகிழ்ச்சியைப் பார்க்கிறாள் வசுப்ரதா. ஆனாலும் எதுவோ உறுத்தியது.
“அதில்லடி… நீ படிச்சு சொந்தக்கால்ல நிக்கணும்ல?”
“ஆசுவ கல்யாணம் பண்ணுனா என்னால சொந்தக்கால்ல நிக்க முடியாதா? அவர் என்னைக் கண்ட்ரோல் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்காருக்கா… அவரோட பிசினசும் கன்ஸ்ட்ரக்சன் ஃபீல்ட் தானே? ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் ரெண்டு பேரும் ஒரே ஃபீல்ட்ல இருந்தா அவங்களோட கம்பேட்டபிளிட்டியும் அதிகமாகும்னு சொன்னார்… நான் படிச்சு முடிச்சதும் வேலை தேடி அலைய வேண்டியதில்ல… ஆசுவோட கம்பெனில ஜாயின் பண்ணிக்கலாம்… நமக்கு மேரேஜ் ஆகி போயிட்டோம்னா அம்மாவ யார் பாத்துப்பாங்கனு கவலை இல்ல… என் கூடவே அம்மாவ வச்சுப்பேன்”
அவள் அடுக்கிக்கொண்டே போகப் போக தங்கை திடுமெனப் பெரியவளாகிவிட்ட பிரமை வசுப்ரதாவுக்கு. அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். சிருஷ்டியின் கண்களில் ஆசுதோஷ் மீதான காதலும் நம்பிக்கையும் தெளிவாகத் தெரிந்தது.
காதல் ஒன்றும் பெரிய பாவமில்லை. ஆனாலும் இந்தக் காலத்தில் பதினெட்டில் திருமணம் என்றால் அபத்தமாகவல்லவா இருக்கிறது!
இதை வசுப்ரதா சொன்னதும் சிருஷ்டியின் கண்கள் இடுங்கின. தமக்கையை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தாள் அவள்.
“உனக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் ஆகுதேனு பொறாமையா இருக்குதா?”

வசுப்ரதா இந்தக் கேள்வியில் வாயடைத்துப் போனாள். அவள் பதிலளிக்காமல் சிலையாய் இருக்க, தாரணியோ இளைய மகளை அதிருப்தியாகப் பார்த்தார்.
“என்னடி பேசுற? வசு ஏன் உன்னைப் பார்த்து பொறாமைப்பட போறா?”
“இவளை விட படிப்புல நான் பெஸ்ட்… இப்ப லைஃப்லயும் எனக்குப் பெஸ்டான ஒருத்தன் கிடைச்சிருக்கான்… இவளை விட சின்னவளான நான் எல்லா விதத்துலயும் பெஸ்டா இருக்குறதால என் மேல இவளுக்குப் பொறாமை வருதோனு சந்தேகமா இருக்கும்மா”
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு இறுக்கமான முகத்துடன் சிருஷ்டி ஒரு விளக்கத்தைக் கொடுத்தாள்.
யார் இவளை இந்தளவுக்குப் பேசத் தூண்டுவது என அதிர்ந்து போன வசுப்ரதா சோர்வாக அன்னையைப் பார்த்தாள்.
“அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்மா… என் கிட்ட இனிமே இதைப் பத்தி பேசவேண்டாம்”
என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுத் தனது அறையை நோக்கி சில அடிகள் போனவள் திரும்பி நின்று தங்கையைப் பார்த்தாள்.
இன்னும் சிருஷ்டியின் முகத்திலிருந்த இறுக்கம் குறையவில்லை. அவள் நின்ற தோற்றமும் அவளது உடல்மொழியிலிருந்த சந்தேகமும் வசுப்ரதாவுக்கு வேதனையைக் கொடுத்தது.
தாரணிக்கோ எந்த மகளுக்கு ஆதரவாகப் பேசுவது என்று புரியாத நிலை. இளையவளை ஓரளவுக்கு மேல் கண்டித்தால் அவள் இன்னுமே வசுப்ரதா மீது விரோதத்தை வளர்க்க வாய்ப்புள்ளது எனத் தனது மனக்குமுறலை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டார்.
“எனக்கு உன்னைப் பார்த்து எப்பவுமே பொறாமை வந்ததில்ல சிருஷ்டி… உன் திறமை, உன் அறிவு, உன் காதல் இதெல்லாம் உனக்குச் சொந்தமானது… அதைப் பார்த்து பொறாமைப்படுறதால மட்டும் எனக்கு அதுல்லாம் கிடைச்சிடுமா என்ன? எனக்கு இருக்குற திறமை, அறிவு மட்டுமே எனக்குப் போதும்டி… என்னைப் பொறுத்தவரைக்கும் இதுவே திருப்தி தான்… தன்னைப் பத்தி குறைவா நினைச்சு அதிருப்தியோட வாழுறவங்களுக்குத் தான் அடுத்தவங்க மேல பொறாமை வரும்… உன் வாழ்க்கையில நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு அதுல சம்மதம்… இனிமே நான் எந்தக் கேள்வியும் கேக்கப்போறதில்ல… ஐ அம் ஆல்வேஸ் ஹேப்பி ஃபார் யூ”
வேதனையை வெளிக்காட்டாத குரலில் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள் வசுப்ரதா.
‘மனதை உறுத்திய ஒரு விசயத்தை அழுத்திக் கேள்வி கேட்டதால் என் தங்கைக்கு நான் வேண்டாதவளாகிப் போனேன்’
சிரித்துக்கொண்டாள் அவள். சிருஷ்டி அவளாகப் பேசவில்லை. காதல் அவளை அவ்வாறு பேச வைக்கிறதெனப் புரிந்தாலும் தனது இயல்பு என்னவெனத் தெரிந்தும் அவள் ஐயமாகக் கேட்ட கேள்வி வசுப்ரதாவுக்கு வேதனையைக் கொடுத்தது.
தவநாதன் இருந்தவரை இந்த மாதிரி வேதனைகள் அவளுக்குப் பரிச்சயமாகவில்லை. என்று அவர் மறைந்தாரோ அன்றிலிருந்து எதையோ இழந்தவளாகிப் போனாள் வசுப்ரதா.
அவள் படிப்பில் பின்தங்கியதற்கும் அதுவே காரணம். வீட்டின் மூத்த பெண் குழந்தைகள் தந்தையின் குட்டி இளவரசிகள். அவரது மறைவு மற்ற அனைவரையும் விட அவர்களைத்தான் அதிகம் பாதிக்கும்.
அந்தப் பாதிப்பின் தீவிரம் தன்னை மனதளவில் தாக்குவதைக் கூட உணராதவளுக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்ததும், கவனமில்லாமல் இருப்பதும் மட்டும் புத்தியில் உறைக்குமா என்ன?
அவளது கல்வித்திறன் குறைய இதுவே காரணமாகிப்போனது.
சிருஷ்டியும் தாரணியும் தவநாதனின் மறைவிலிருந்து மீண்டார்கள். ஆனால் வசுப்ரதா மீண்டதுபோல காட்டிக்கொண்டாள்.
இப்போதும் கூட தவநாதனின் கையைப் பிடித்து அழவேண்டும் போல அத்துணை அழுத்தம் அவளுக்குள்! அது நடக்காது என்றதும் இயலாமை இருளைப் போல அவள் மனதைக் கவ்வியது.
எவ்வளவு நேரம் இந்த யோசனைகளில் கழிந்ததெனப் புரியாமல் அமர்ந்திருந்தவளைத் தாரணியின் குரல் நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது.
“சாப்பிட வா வசு… இட்லி ஆறிடுச்சுனா உனக்கு விக்கும்”
அன்னையின் குரலில் அத்துணை ஆதுரம்! இளைய மகளின் வார்த்தைகளால் உண்டான காயத்துக்குத் தனது ஆதுரத்தால் மருந்திட முயன்ற தாரணியின் முயற்சி ஜெயித்தது.
வசுப்ரதா சாப்பிட வந்தாள். சிருஷ்டியை ஏறிட்டுக் கூட பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள்.
கை கழுவிவிட்டு மீண்டும் அறைக்குள் முடங்கப் போனவளைக் கைப்பிடித்துத் தடுத்தார் தாரணி.
“வருத்தமா இருந்தா அம்மா கிட்ட கொட்டிடு வசு… நீ இப்பிடி அமைதியா இருந்தா எனக்குக் கஷ்டமா இருக்கு… இளையவளுக்கு நல்ல வாழ்க்கை அமையப்போகுதுனு சந்தோசப்படுவேனா? உன்னை அவ வேதனைப்படுத்துனதை நினைச்சு வருத்தப்படுவேனா? தர்மச்சங்கடமா இருக்கு வசு”
வசுப்ரதா தனது கையைப் பிடித்திருந்த அன்னையின் கையைப் பார்த்தாள்.
“இது நீ சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்… என்னைப் பத்தி யோசிச்சு அதைக் கெடுத்துக்காதம்மா… சிருஷ்டிக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சுடலாம்… எனக்கு அதுல எந்த வருத்தமுமில்ல… அவ கொஞ்சம் யோசிச்சு வார்த்தைய விட்டிருக்கலாம்னு சின்னதா ஒரு ஆதங்கம்… அது கூட நாளைக்குக் காலையில மறைஞ்சிடும்… நீ போய் தூங்கும்மா… ரூபா ஆன்ட்டி நீல் அங்கிள் கிட்ட சம்பந்தம் பேசணும்ல”
மகள் தன்மையாகப் பேசியதில் ஆசுவாசமுற்றார் தாரணி.
அன்றிரவும் உறக்கத்தில் வந்த சுழலில் தொலைந்து போனாள் வசுப்ரதா.
தொலைந்தவள் வந்து நின்ற இடம் செம்மலையில் அமைந்திருக்கும் ஒரு கார்பரேட் அலுவலகத்தின் ஏதோ ஒரு பெரிய அறை!
அந்த அறைக்குள் சின்ன சின்னதாகத் தடுப்புகள் அமைத்திருந்தார்கள். ஒவ்வொன்றிலும் ரிங் லைட்கள், மைக் செட்டப், ஒரு ஆடம்பர அறைக்கான பின்னணி போல காட்டும் திரைகள் எல்லாம் இருந்தன.
என்ன இடம் இது என்று யோசித்தபடியே நடந்து போன வசுப்ரதா திடுமெனக் குனிந்து தனது பாதங்களைக் கவனித்தாள். அவை உதிரத்தில் குளித்திருந்தன. திரும்பிப் பார்த்தவள் அந்த அறையில் அவள் நடந்த இடமெங்கும் இரத்தத்தாலான பாதத்தடங்கள் இருப்பதைக் கண்டதும் பயந்து போனாள்.
உடனே தனது ஆடையைக் கவனித்தாள். அன்றொரு நாள் நதிக்கரையில் அவளும் மிருத்யுஞ்சனும் அணைத்தாற்போல் நின்றார்களே! அப்போது அணிந்திருந்த அதே வெண்ணிற கவுன் அது!
அன்றிருந்ததை விட இப்போது உதிரக்கறைகள் அதிகமாக இருந்தது அந்த நீண்ட காட்டன் கவுனில்!
தனது பாதத்தையும் கவுனையும் மாறிமாறி பார்த்தவள் பயத்தில் நடுங்கியபோதே “வ…வ….சு..உ….உ” என யாரோ வலியில் முனகுவது போல கேட்டது.
எங்கிருந்து வருகிறது இக்குரல்? கண்களை அலைபாய விட்டவள் அந்தப் பெரிய அறையின் கடைக்கோடியிலிருக்கும் சிறு தடுப்பிலிருந்து குரல் வருவதை அறிந்ததும் அந்தத் தடுப்பை நோக்கி வேகமாக ஓடினாள்.
மீண்டும் தரையெங்கும் அவளது காலடித்தடங்கள் உதிரத்தில் தோய்ந்து படிந்தன.
சரியாக அந்தத் தடுப்பின் அருகே அவள் வந்து நின்றதும் நீண்ட நெடிய கால்களுடன் ஒரு ஆடவன் அங்கே சரிந்து விழுந்திருந்தான்.
அவனது உடலுக்கு அடியில் இரத்தம் குளம் போல கட்டியிருந்தது. அதை மிதித்து யாரோ நடந்த அடையாளம் வேறு இருந்தது.
“வ…. வ…. சு…. உ…”
அவனிடமிருந்து முனகல் வரவும் வசுப்ரதா குப்புற கிடந்தவனைத் தன்னை நோக்கி திருப்பினாள்.
அடுத்த நொடியே “மிருஊஊஊ…” என அவள் அலறிய சத்தத்தில் அந்த அறை அதிர்ந்து போனது.
ஏனெனில் அங்கே இரத்தத்தில் குளித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவன் மிருத்யுஞ்சயன்.
அவனது முகம், உடல் முழுவதும் காயமடைந்ததற்கான அறிகுறி. சாதாரணக் காயங்கள் இல்லை. மரணக்காயம் ஒவ்வொன்றும்.
“மிரு என்னைப் பாரு… யாரு? யாரு உன்னை இப்பிடி அடிச்சது?” என்று அவள் அழுது துடிக்க மிருத்யுஞ்சனோ உதிரம் வழிந்த முகத்தோடு கண்களில் பிரகாசம் மின்ன சன்னமாகச் சிரித்தான்.
உடல் அத்துணை வேதனையை அனுபவித்தபோதும் ஒருவன் சிரிக்கிறான். அந்த வேதனையிலும் கூட அவனது கண்களில் ஒரு தேஜஸ்! எல்லாம் வசுப்ரதாவைக் கண்டதும் அனிச்சைச் செயலாக நடந்தது!
“இங்க இருந்து போயிடலாம் மிரு” என அவள் அழ
“நீ… நீ போயிடு… நான் பிழைக்க மாட்டேன்…” என்று திக்கித் திணறி சொன்னான்.
“நோ! உன்னை விட்டுட்டு நான் போகமாட்டேன்” கண்ணீரைத் துடைத்தபடி சொன்னவள் அவனைத் தூக்க முயன்றாள்.
அவளைத் தடுத்தவன் “நீ…. போய் தான் ஆகணும்… நான் சாகுறதுக்கு… மு…ன்ன்னாடி உன்னைப் பாத்து…ட்டேன்….” என்று சொல்லி மூச்சு வாங்கினான்.
“நீ சாகமாட்ட மிரு…” என்றவள் அவனைத் தூக்கி நிறுத்த முயல மிருத்யுஞ்சனிடமிருந்து விக்கல் ஒலி கேட்டது.
அதில் அதிர்ந்தே போனாள் அவள்.
மனிதனின் இறுதி விக்கல் இவ்வாறு தான் இருக்கும்! தந்தையின் மரணம் கொடுத்த அனுபவம்! அப்படி என்றால் மிருத்யுஞ்சயனும் என்னை விட்டுப் போய்விடுவானா?
அவள் பயத்துடன் அவனைப் பார்க்கும் போதே “ஐ… லவ்… யூ….” என்று திணறலாய்ச் சொன்னவன் அவளது காதுக்குள் இன்னொரு வாக்கியத்தை முணுமுணுத்தான்.
அந்த வார்த்தையில் கண் கலங்க அவள் பார்க்கும்போதே மிருத்யுஞ்சனின் தலை தொய்ந்து விழுந்தது.
“நோ!… நோ மிரு… ப்ளீஸ்”
அழுதபடி அவனது தலையை உலுக்கினாள். அவள் அவனது கன்னத்தில் அடித்தாள். ஆனால் அவன் விழிக்கவில்லை.
மூச்சு நின்று போனவனின் முகத்தை அப்போதுதான் முதல் முதலாகப் பார்ப்பது போல பார்த்தாள் வசுப்ரதா.
இரத்தத்தில் தோய்ந்த முகத்தில் இறுதிச்சிரிப்பு உறைந்திருந்தது. நிலைகுத்திய கண்களில் ஒரு காலத்தில் அவளுக்கானக் காதலைக் கண்டு களித்தவள் இப்போது அதைத் தேடி அழுதாள்.
அவளது அழுகைக்கு இரங்காமல் கண் மூடிக் கிடந்தவன் இனி திரும்ப வரப்போவதில்லை என்று அறிந்ததும் அவளது அழுகை பெருவெடிப்பாக மாறிப்போனது.
“மிருஊஊஊஊஊ”
அந்தப் பெரிய அறை முழுவதும் அவளது அழுகுரலால் நிரம்பியது.
ஆற்றுவாரின்றி அழுதாள்! அவனது முகத்தை மடியில் கிடத்தி எழுப்ப முயன்று தோற்றாள்! இத்துணை நாட்கள் அவளது மனதில் பதியாத மிருத்யுஞ்சயனின் வதனம் மரணக்கோலத்தில் மறக்க முடியாதபடி பதிந்து போனது.
அவள் அழுது கதறியபோதே “வசு என்னாச்சுடி?” என்ற தாரணியின் குரல் கேட்க வானத்தைச் சூழ்ந்த மேகங்கள் மடமடவென கலைவது போல புகைமூட்டமாக ஏதோ ஒன்று கலைய கனவுக்கும் நிஜத்துக்குமாக அலைபாய்ந்து தவித்து ஓய்ந்தவள் கண் விழித்தாள்.
அவளது அறையில் அவளது படுக்கையில் படுத்திருந்தவள் இப்போது இருந்தது தரையில்! கன்னத்தில் கண்ணீரின் ஈரம்! அவசரமாகக் கைகளை ஆராய்ந்தவள் அதில் இருந்த இரத்தத்தைப் பார்த்ததும் “மிருஊஊஊஊ” என்று அலறி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
இந்த முறை மிருத்யுஞ்சனின் முகம் வசுப்ரதாவுக்கு மறக்கவேயில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

