“கனவு காண்பவர்கள் நிலவொளியை வைத்தே தங்களது பாதையை அடையாளம் காண்கிறார்கள். அதற்கான தண்டனையாக அனைவருக்கும் முன்னர் விடியலைக் காணும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்”
-ஆஸ்கார் வைல்ட்
டெக்கான் பதிப்பாலயத்தின் போர்ட் ரூம்…
பதிப்பாலயத்தின் முக்கியமான நபர்கள் மட்டுமே கூடியிருந்த அந்த அறையில் புதிதாக ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுப்ரதா.
வயலட் நிற மங்கலகிரி காட்டன் புடவை, காது கழுத்தில் டெரகோட்டா அணிகலன்கள், தோளைத் தொட்டுப் பளபளத்த கூந்தல், கண்களை அழகாக எடுத்துக் காட்டிய காஜல்! வயது ஐம்பதுகளில் இருக்கலாம்! அந்த வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் மீது பிரமிப்பு உண்டானது அவளுக்கு.
மேலாண்மை இயக்குனர் விஷ்வேஸ்வரன் அந்தப் பெண்மணியுடன் இத்தனை தீவிரமாக உரையாடுகிறார் என்றால் கட்டாயம் முக்கியமான நபராகவே இருக்கவேண்டுமென ஊகித்துக்கொண்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வசுப்ரதாவை அந்த மீட்டிங்குக்கு அழைத்தது தேவையற்றது என பொது மேலாளர் சதீஷிடம் கூறிக்கொண்டிருந்தாள் நிவாஷிணி.
“ஷீ இஸ் ஜஸ்ட் அ ஸ்டாஃப்… இதுக்கு நம்மளை மாதிரி ஹையர் ஆபிசர்ஸ் மட்டும் இருந்தா போதாதா? விஷ்வா சார் இவளை எல்லாம் ஏன் மீட்டிங்குக்குக் கூப்பிடுறாரு?”
அவளது அதிருப்தியை ஏற்றுக்கொள்ளாதவராக அவளை மெதுவாகக் கடிந்து கொண்டார் சதீஷ்.
“எம்.டியோட டிசிசனை கொஸ்டீன் பண்ணுறது நம்ம வேலைக்கு நல்லதில்ல நிவாஷிணி…. உங்களுக்கு வசுப்ரதா மேல என்ன கோவம்னு தெரியல… ஷீ இஸ் வொர்க்கிங் ஆசம்… டோண்ட் ஸ்பிட் அன்வான்டட் வெனம் நிவாஷிணி”
இதற்கு பின்னரும் நிவாஷிணி வாயைத் திறப்பாளா என்ன?
வாயை மூடிக்கொண்டு கடுப்போடு வசுப்ரதாவைப் பார்க்க மட்டுமே முடிந்தது அவளால்.
அவளது பொருமல், கடுப்பு எதையும் அறியாமல் புதுப்பெண்மணி யாரென்ற ஆராய்ச்சியில் இருந்தாள் வசுப்ரதா.
ஒரு வழியாக அனைவரும் வந்துவிட மீட்டிங் ஆரம்பித்தது.
மேலாண்மை இயக்குனர் விஷ்வேஸ்வரன் பேச்சை ஆரம்பித்தார்.
“இந்த மீட்டிங்கோட நோக்கம் நம்ம பப்ளிஷிங் ஹவுசோட அடுத்தக் கட்ட பயணத்தை ஆரம்பிக்குறதுதான்… அதோட முதல் படியைச் சாருலதா பரமேஷ்வரன் மேடமை வச்சு எடுத்து வைக்கப் போறோம்… யெஸ்! சாருலதா மேடமோட ‘மூங்கில் தோட்டம்’ நாவலை காமிக் நாவலா வெளியிடப்போறோம்… இந்த வருசத்தோட பெஸ்ட்செல்லர் நாவலான அதை நம்ம பப்ளிஷிங் ஹவுஸே ஈபுக், ஆடியோ நாவலாவும் வெளியிடப்போறோம்… முதல் வேலை காமிக் நாவல் பதிப்பா இருந்தா நல்லதுனு மேடம் பிரியப்படுறாங்க… இங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் காமிக் நாவலுக்கான வேலையை ஆரம்பிச்சா ஒர்க் பர்டன் அதிகமாகும்… அதை ஸ்மார்ட்டா எப்பிடி செஞ்சு முடிக்கலாம்னு ஒவ்வொருத்தரும் உங்க ஒபீனியனை ஷேர் பண்ணிக்கலாம்”
ஒவ்வொருவரும் தங்களும் கருத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.
“காமிக் ஸ்கிரிப்டை சீன் பை சீனா முதல்ல ப்ரிப்பேர் பண்ணிட்டோம்னா வேலைய குழப்பம் இல்லாம செய்யலாம்”
அந்தப் பெண்மணி சாருலதா பரமேஷ்வரன் அதை ஆமோதித்தார். விஷ்வேஸ்வரனிடம் “அது ஒன்னும் பெரிய வேலை இல்ல ஈஸ்வரன் சார்… கடந்த ஒரு மாசமா காமிக் பத்தி நம்ம பேசிட்டிருக்கோம்ல, நான் அப்பவே சீன் பை சீன் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்கை ஆரம்பிச்சுட்டேன்… கிட்டத்தட்ட முடியுற தருவாய்ல இருக்கு”
அடுத்த நபர் எழுந்து தனது கருத்தைக் கூறினார்.
“ஆர்ட் ஒர்க்கை இத்தனை நாளுக்குள்ள முடிக்கணும்னு டைம் டேபிள் போட்டு ஒர்க் பண்ணுனா குறைஞ்ச நாள்ல வேலைய பெர்ஃபெக்டா முடிச்சிடலாம்”
இது வசுப்ரதாவின் டிப்பார்ட்மெண்ட் ஆயிற்றே. சரியெனத் தலையாட்டினாள் அவள்.
“ஆர்ட் ஒர்க்கை ஃபேமஸ் காமிக் ஆர்ட்டிஸ்ட் வச்சு ஒரு தடவை சரி பார்த்துட்டா நெகடிவான விமர்சனம் வராம தடுக்கலாம்”
இந்தப் பாயிண்டைச் சொன்னவர் யாரென அதிகமெல்லாம் யோசிக்க வேண்டாம். சாட்சாத் நிவாஷிணியே தான்!
சரியாக அந்நேரத்தில் ஒலித்தது எழுத்தாளர் சாருலதா பரமேஷ்வரனின் குரல்.
“ஃபேமஸ் காமிக் ஆர்ட்டிஸ்டை வச்சு சரி பாக்கலாம்னு சொன்னிங்கல்ல, எந்த ஃபேமஸ் ஆர்ட்டிஸ்ட் ஈகோ இல்லாம இந்த வேலைய பாக்க முன்வருவாங்க? அப்பிடியே வந்தாலும் அவங்களுக்கு நீங்க தனியா பே பண்ணனும்… ஏன் வீண்செலவு? என்னோட நாவலுக்கான ஆர்ட் ஒர்க்கை நானே சரி பாக்குறேன்… எனக்குத் திருப்தியாகுற வரைக்கும் உங்க ஆர்ட்டிஸ்டை விடமாட்டேன்… இப்ப உங்களுக்குத் திருப்தியா?”
அவர் கிண்டல் தொனியில் முடித்ததும் நிவாஷிணிக்குச் சுருக்கெனத் தைத்தது.
என்ன இது? அனைவரும் இந்த வசுப்ரதாவுக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள்! போயும் போயும் கணினியில் அமர்ந்து ‘டிஜிட்டல் பெயிண்டிங்கை’ உருவாக்குபவளுக்கு இத்துணை ஆதரவு தேவையா?
அவள் மனம் பொருமியபோது வசுப்ரதா எழுந்தாள்.
“சோ நீங்க தான் புதுசா வந்திருக்குற ஏ.ஐ ஆர்ட்டிஸ்டா?”
சாருலதா பரமேஷ்வரன் ஆர்வமாகக் கேட்க ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் அவள்.
“உங்களுக்குத் திருப்தியாகுற வரை எத்தனை தடவை வேணும்னாலும் ஆர்ட் ரெடி பண்ண நான் தயாரா இருக்குறேன் மேடம்”
“வெல்! இனிமே நம்ம தினமும் மீட் பண்ணி பேசிக்க வேண்டியதா இருக்கும்… யூ நோ ஒன்திங், ஐ வாண்ட் பெர்ஃபெக்ட் ஆர்ட் ஒர்க் ஃபார் மை ஃபர்ஸ்ட் காமிக்ஸ் நாவல்”
“ஐ வில் டூ மை பெஸ்ட் மேடம்”
நிவாஷிணிக்கு வயிறு காந்தியது இந்தக் காட்சியைப்
பார்க்கையில்.
‘க்கும்! இந்தம்மா தமிழ்ல தானே நாவல் எழுதுறாங்க! வாய்ல தமிழே வரல… எப்பவும் இவங்க புக் கவரை அனுப்பி வைக்குறப்ப என் கிட்ட அவ்ளோ ஸ்வீட்டா பேசுறவங்க இப்ப ஏன் வேண்டாத மருமகள் கிட்ட பேசுற மாமியார் டோன்ல என் கிட்ட பேசுனாங்க?’
சாருலதா பரமேஷ்வரனைப் பாரபட்சம் பாராமல் வறுத்தெடுத்தாள் அவள்.
அதன் பின்னர் மீட்டிங் என்பது மாறி எழுத்தாளருக்கும் வரைகலை நிபுணருக்குமான உரையாடலாக மாறிப்போனது.
கடனே என்று பதிலளிக்காமல் ஆர்வத்தோடு ஒவ்வொரு விசயத்தையும் வசுப்ரதா விவரித்த விதம் அங்கிருந்த அனைவருக்கும் வேலை மீது அவளுக்கு இருக்கும் காதலைக் காண்பித்தது.
நிவாஷிணி அவள்மீது வைக்க நினைத்த குற்றச்சாட்டுகள் சதீஷின் மூலம் விஷ்வேஸ்வரன் காதுக்குப் போய் அவரிடமிருந்து சாருலதா பரமேஸ்வரனையும் அடைந்திருந்தது.
வழக்கமாக நிவாஷிணியிடம் நட்பாகப் பேசுபவர் அன்று ஏனோ அவளைத் தவிர்த்தார்.
‘பெண்ணுக்குப் பெண்ணே எதிரி’ என்ற வாக்கியமே அவருக்குப் பிடிக்காது. அதை நிரூபிப்பது போல் நடப்பவளை மட்டும் எப்படி அவரால் நட்பாக அணுகமுடியும்?
மீட்டிங் நல்லபடியாக முடிந்தது.
வசுப்ரதாவின் கேபினுக்குச் சாருலதா பரமேஷ்வரன் செல்வதைப் பார்த்து பொருமியவாறே கடந்தாள் நிவாஷிணி.
அது என்னவோ தனக்கெனத் தனித்திறமையை வளர்த்துக்கொள்ளும் விருப்பமற்றவர்களுக்குத் திறமைச்சாலிகளைப் பிடிப்பதில்லை.
அவர்களை மட்டம் தட்ட தயங்காதவர்கள் சில நேரங்களில் திறமைசாலிகளின் உழைப்பை வெட்கமே இல்லாமல் திருடவும் செய்வார்கள்.
நிவாஷிணி அந்தக் கட்டத்திற்கு போவாளா என்னவென்பதைக் காலம் தானே தீர்மானிக்க வேண்டும்!
ஆனால் தனது திறமை மீது வன்மம் வைத்த வஞ்சக உள்ளம் ஒன்று அந்த அலுவலகத்தில் இருப்பதை அறியாமல் சாருலதா பரமேஷ்வரனிடம் அவரது காமிக்ஸ் நாவலுக்கான காட்சியமைப்புகள் பற்றி பொதுவாக குறிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள் வசுப்ரதா.
“ஹீரோ ஒரு மாசோ மேன் மாதிரி காட்டிக்கிட்டாலும் பயங்கர ஜோவியல்… ‘ஜென் ஜி’யும் ‘மில்லனியல்சும்’ (Gen ‘Z’ and ‘Millennials’) கலந்த கலவை… சோ அது அவனோட தோற்றத்துல கட்டாயம் பிரபதிபலிக்கணும்”
“ஸ்யூர் மேடம்”
அவர் சொல்ல சொல்ல குறிப்பு எடுத்துக்கொண்டாள் வசுப்ரதா.
கதாநாயகனைப் போல கதாநாயகியின் குணநலன், தோற்ற அமைப்பைப் பற்றியும் கேட்டுக்கொண்டவள் தனக்கு இருக்கும் சின்ன சின்ன சந்தேகங்களைக் கேட்க உதவியாக இருக்குமெனச் சொல்லி சாருலதா பரமேஷ்வரனின் மொபைல் எண்ணையும் வாங்கிக்கொண்டாள்.
“என்ன டவுட் இருந்தாலும் எப்ப வேணாலும் நீ எனக்குக் கால் பண்ணலாம் வசு” என்றவர் விடைபெற்றதும் நிம்மதியோடு தனது இருக்கையில் அமர்ந்தாள்.
முக்கியமான மீட்டிங் என முந்தைய தினம் விஷ்வேஸ்வரனின் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்ததை வேறுவிதமாக யோசித்து வைத்திருந்தாள். ஆனால் மீட்டிங்கே அவளது வேலையை மையமாக வைத்து என்றதும் கொஞ்சம் பயம் வந்தது என்னவோ உண்மை.
ஆனால் நிவாஷிணி கிடைத்த சிறு இடைவெளியில் கூட தனது வேலையை மட்டம் தட்டும் விதத்தில் பேசவும் ரோசப்பட்டுச் சாருலதா பரமேஷ்வரனோடு வேலை செய்ய ஒப்புக்கொண்டாள் வசுப்ரதா.
இதைத்தான் நேர்க்காணலின் போதே விஷ்வேஸ்வரன் குறிப்பு காட்டினார் போல.
குருவி தலையில் பனங்காய் போல இரண்டாவது வேலையே கொஞ்சம் பெரியதுதான். இந்த வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டால் எக்காலத்திலும் நிவாஷிணி தனது வேலையை மட்டம் தட்ட முனையமாட்டாள்.
அந்நேரத்தில் சரியாக அவளது கேபின் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் நிவாஷிணி.
“திங்கிங் ஆப் த டெவில்” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் வேண்டாவெறுப்பாகச் சிரித்துவிட்டு “யெஸ் மேம்” என்றதும் நிவாஷிணிக்குக் கொம்பு முளைக்காத குறை.
“சாருலதா மேடம் உன் கிட்ட ஃப்ரெண்ட்லியா பேசுனதும் ஓவரா உச்சி குளிர்ந்து போயிடாத… உனக்கு ஹையர் ஆபிசர் நான் தான்… உன் வொர்க்கோட அவுட்புட் எல்லாம் என்னைத் தாண்டி தான் அங்க போகும்… அதை விடு… இது நம்ம கிட்ஸ் ,மேகசினுக்கு நீ டிசைன் பண்ண வேண்டிய கவர் பத்தின டிஸ்கிரிப்சன்… படிச்சுப் பாரு… எதுவும் புரியலனா கேளு… அப்புறம் நிவாஷிணி மேம் எனக்குத் தெளிவா விளக்கலனு எம்.டிக்கு மெயில் அனுப்பி என்னைப் போட்டுக் குடுத்தாலும் குடுப்ப”
தன்னைப் போல பிறரை நினைக்கும் உள்ளம் போல!
வெளிப்படையாகச் சொல்லாமல் “ஓ.கே மேம்” என்று மட்டும் சொன்னாள் வசுப்ரதா.
அதற்கும் குறை சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் நிவாஷிணி.
அவள் சென்றதும் கையை மடக்கி அவளைக் குத்துவது போல சைகை செய்தாள் வசுப்ரதா.
‘இவள் மட்டும் நேரடி மேலதிகாரியாக இல்லை என்றால் கட்டாயம் இவளது பேச்சுக்கு நான் கற்கால பெண்ணாக மாறி இவளை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பேன்!’
பின்னர் நிவாஷிணியைப் பற்றி யோசிக்க நேரமில்லாமல் சிறுவர் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கான படத்தை உருவாக்குவதில் நேரம் கடந்து போனது.
மாலையில் எந்தளவுக்கு வேலை முடிந்ததென நிவாஷிணியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பியவள் சாருலதா பரமேஷ்வரனிடமிருந்து வாட்சப்பில் செய்தி வரவும் என்னவெனப் பார்த்தாள்.
“உனக்கு டைம் இருந்தா என் வீட்டுக்கு வரமுடியுமா வசு? கதையோட சீன் பை சீன் டிஸ்க்ரிப்சன் ரெடி… உங்க எம்.டி கிட்ட பேசுனேன்… அவர் டேரக்டா உன் கிட்ட பேசிக்கச் சொன்னார்மா”
வாசித்து முடித்தவள் “ஸ்யூர் மேடம்… இன்னும் அரைமணி நேரத்துல நான் உங்க வீட்டுல இருப்பேன்” என்று பதில் அனுப்பிவிட்டு மெட்ரோ ஸ்டேசனுக்குக் கிளம்பினாள்.
சாருலதா பரமேஷ்வரனின் வீடு இருப்பது அரும்பாக்கத்தில். எப்படியும் வீடு திரும்ப தாமதமாகிவிடும் என்பதால் அன்னையிடம் மொபைலில் சொல்லிவிட்டு மெட்ரோ இரயிலில் ஏறியவள் கூகுள் மேப்பின் உதவியோடு ஒரு வழியாக சாருலதா பரமேஷ்வரனின் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டாள்.
நகரின் பிரபலமான கேட்டட் கம்யூனிட்டியில் தான் அவரது வீடு அமைந்திருந்தது. வில்லா மாடல் வீடு என்பதால் மின் தூக்கி ஏறியிறங்கும் வேலை அவளுக்கு மிச்சமானது.
சரியான வீட்டு எண்ணைக் கண்டறிந்து அழைப்பு மணியை அழுத்தியவள் கதவு திறந்து சாருலதாவின் முகம் தெரிந்ததும் புன்னகையோடு “ஹலோ மேடம்” என்றாள்.
“ஹாய்மா! வா வா”
உற்சாகத்தோடு அவளை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டார் சாருலதா. வீட்டின் உள்கட்டமைப்பு நவீன பாணியில் கண்ணை உறுத்தாத வண்ணம் அமைந்திருந்தது.
அறையின் ஒரு மூலையில் சிறிய அலமாரி புத்தகங்களோடு கம்பீரமாக நின்றது. அதனருகே செயற்கையான புல் நிரம்பிய கருப்பு வண்ண மார்பிள் தொட்டி ஒன்றில் செயற்கை நீரூற்று ஒன்றில் சலசலவென நீர் வழிந்துகொண்டிருந்தது. அதனருகே புத்தர் சிலை ஒன்று!
இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம். பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தார் சாருலதா.
லிவிங் ரூமில் பெரும்பான்மையாக அவளது கண்களில் பட்டவை புத்தகங்கள்.
காபி கோப்பையோடு வந்தவரிடம் வீட்டின் உள் அலங்காரத்தைச் சுட்டிக் காட்டி “உங்களுக்கு நல்ல இண்டீரியர் டிசைனர் கிடைச்சிருக்காங்க” என்க
“அப்ப நீ என்னைத் தான் பாராட்டணும்” என்றார் அவர்.
வசுப்ரதாவுக்கு ஆச்சரியம்!
“நீங்க இண்டீரியர் டிசைனரா மேடம்?”
“ஆமா! கடந்த ஏழு வருசமா”
சிரித்தபடி காபியை அருந்த தொடங்கினார் சாருலதா.
“அப்ப ரைட்டிங்?”
“அது ரிலாக்சேசனுக்காக ஆரம்பிச்சது… அப்புறம் ரொம்ப தீவிரமா எழுத ஆரம்பிச்சிட்டேன்”
“ம்ம்ம்! இந்த லிவிங் ரூம்ல மேக்சிமம் புக்ஸா இருக்குதே? புக் வாசிக்கவும் பிடிக்குமோ?”
“வாசிப்பு பழக்கம் இல்லாதவங்க எழுத்தாளரா ஆக முடியாதும்மா… வாசிப்பு ஒரு விதமான லேர்னிங் ப்ராசஸ்… அங்க நான் படிச்சதை என் கதைகளுக்கு நடுவுல புகுத்தி எனக்குக் கிடைச்ச பெஸ்டான தகவலை ரீடர்சுக்குக் கடத்திட்டிருக்கேன்”
வசுப்ரதாவுக்குப் பிரமிப்பு அடங்கவில்லை. அவளது தலைமுறை சமூக வலைதளங்கள், டிஜிட்டல் மீடியா என்று தங்களது சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கிறார்கள்! அப்படிப்பட்டவர்களிடம் புத்தக வாசிப்பைப் பற்றி ஒருவர் சிலாகித்தால் எப்படி இருக்கும்! அதே உணர்வு தான் அவளுக்கு.
காபி அருந்தும் போதே எழுதி வைத்த ஸ்கிரிப்டை அவளது அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார் சாருலதா பரமேஷ்வரன்.
கூடவே அவள் தவிர்க்க வேண்டிய சில பாயிண்ட்களையும் கூறினார்.
“நீ உருவாக்கப் போற ஆர்ட்ஸ் மாடஸ்டா இருக்கணும்… காமிக்ஸ்னாலே ‘பாடி எக்ஸ்போசர்’ இருக்கும்ங்கிற எண்ணத்தை என் கதை உடைக்கணும்… ரொமான்ஸ் சீன்சுக்கான ஆர்ட்ல நீ தாராளமா சென்சார் போடும்மா.. எங்கயும் என் கதையை காமிக்ஸ் நாவலா படிக்குறவங்க முகத்தைச் சுளிச்சிடக் கூடாது”
“கண்டிப்பா மேடம்”
முக்கியமான காட்சிகளைச் சொல்லி அதை எந்த விதமான காமிக்ஸ் ஃப்ரேம்களில் அடக்கினால் கதையைப் படிப்பவர்களுக்கு வாசிப்பனுவம் நேரலையைப் போன்ற உணர்வைத் தரும் என்று சில குறிப்புகளைக் கொடுத்தார் அவர்.
மொத்தத்தில் அவரோடு செலவளித்த முக்கால் மணி நேரம் உபயோகமாகவே கழிந்தது வசுப்ரதாவுக்கு.
சாருலதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப எழுந்தாள் அவள்.
“உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணுனதுல சந்தோசம் மேடம்… ஒர்க்ல டவுட் வந்தா கண்டிப்பா உங்களை கான்டாக்ட் பண்ணுவேன்”
“ஓ.கேம்மா”
அவளை வழியனுப்ப வாயில் வரை வந்தவர் மாடியிலிருந்து “நைட் பிரபா வீட்டுக்குப் போறோம் தானே சித்தி” என்று ஒரு ஆண் குரல் கேட்கவும் மேலே நோக்கி பார்த்தார்.
அந்த ஆண் குரலில் வசுப்ரதாவின் கால்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க மறந்தன.
ஏனெனில் அவளுக்கு நன்கு அறிமுகமானக் குரல் அது!
யாருடைய குரல் என அவள் யோசிக்கையிலேயே “கண்டிப்பா போறோம்டா ஜீவா… உன் அம்மாவும் அப்பாவும் இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவாங்க… நீயும் காபி குடிச்சிட்டு ரெஃப்ரெஷ் ஆகு” என்றார் சாருலதா பரமேஷ்வரன்.
“டன் சித்தி”
இம்முறை அக்குரலைக் கூர்ந்து கவனித்த வசுப்ரதா யோசனையில் ஆழ்ந்தபடியே வீட்டை விட்டு வெளியேறி நடந்தாள்.
‘அந்தக் குரலுக்குரிய நபர் யாராக இருக்கக்கூடும்? ஏன் எனக்குப் பரிச்சயமான குரலாக அது தோன்றுகிறது? ஜீவா என்று சாருலதா அந்தக் குரலுக்குரியவனை அழைத்தார். அந்தப் பெயரில் யாரையும் எனக்குத் தெரியாதே!’
யோசித்தவளுக்குத் தலை வலியெடுத்தது. நெற்றியைத் தடவிக்கொண்டே அடுத்த சில நிமிடங்களில் அந்த கேட்டட் கம்யூனிட்டியை விட்டு வெளியேறியிருந்தாள் வசுப்ரதா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

