பண்டைய அமெரிக்கர்கள் கனவுகளை ஆன்மாவின் பயணம் என்றே நம்பினார்கள். கனவுகளின் வாயிலாக ஒருவரின் ஆன்மாவானது அவரது முன்னோர்களின் ஆன்மாவிடமிருந்து அறிவுரைகள், ஆறுதல்கள் மற்றும் ஞானத்தைப் பெறுகின்றது என்று ஆழமாக நம்பினார்கள் அவர்கள்.
“நீ தான் மிருவோட இந்த நிலமைக்குக் காரணம்… நீ வரலனா அவன் இங்க சந்தோசமா இருந்திருப்பான்… வசு இறந்த வருத்தம் இருந்தாலும் அவனால அதைச் சமாளிச்சு வாழ்ந்திருக்க முடியும்… இதெல்லாம் ஏன் நடக்கல? நீ இங்க வந்து அவன் வாழ்க்கையில குறுக்கிட்டதால மட்டும் தான்”
முகம் தெரியாத யாரோ ஒரு ஆடவன் குற்றம் சாட்ட தலைகுனிந்து நின்று அழுதுகொண்டிருந்தாள் வசுப்ரதா.
“அழுறதால மட்டும் எதுவும் மாறிடப்போறதில்ல… நீ போறதுக்கான நேரம் வந்தாச்சு”
அந்த முகம் தெரியாத நபர் அவளை நோக்கி துப்பாக்கியை நீட்ட “நோஓஓஓஓ” என்று கத்திக்கொண்டே எழுந்தாள் வசுப்ரதா.
படுக்கையில் அமர்ந்தவளுக்கு மலை பிரதேசத்தின் குளிர் சீதோஷ்ணத்தைத் தாண்டி முத்து முத்தாக வியர்வை நெற்றியில் அரும்பியிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சே! மறுபடியும் கனவு” எரிச்சலுடன் முணுமுணுத்தபடியே திரும்பியவள் தனது படுக்கையிலிருந்து சில அடிகள் தொலைவில் நாற்காலியில் சட்டமாக அமர்ந்து உதட்டால் காபியையும் கண்களால் தன்னையும் பருகிக் கொண்டிருந்த மிருத்யுஞ்சயனைப் பார்த்ததும் வெலவெலத்துப் போனாள்.
“இந்த ரூம்ல நீ என்ன பண்ணிட்டிருக்க?” அவசரமாகக் கேள்வி பிறந்தது அவளிடம்.
“பாத்தா தெரியல?”
“தெரியுது… தெரிஞ்சதால தான் கேட்டேன்… நீ ஏன் இங்க வந்த? ஒரு பொண்ணு ஸ்டே பண்ணிருக்குற ரூமுக்கு அவளோட அனுமதி இல்லாம வந்து இப்பிடி உக்காந்திருக்குறது எந்த வகையில சரினு நினைக்குற?”
“இந்த வீட்டோட ஓனர்ங்கிற முறையில நான் இங்க உக்காந்திருக்குறது சரி… ஆனா மனசு ஃபுல்லா காதல் நிரம்பி வழியுற நிலமைல கூட ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ போல தூங்குனவளை பாத்து மட்டுமே ரசிச்சது தப்பு”
சொன்னவனின் விழிகளில் விசமம் மின்னியது!
“என்ன?” புரியாத பாவனை அவளது குரலில்.
“உனக்குப் புரியலையா? வேணும்னா நீ ஸ்லீப்பிங் பியூட்டியாவும், நான் ப்ரின்சாவும் ரோல் ப்ளே பண்ணுவோமா?”
மீண்டும் அவனது வார்த்தையில் வழிந்த விசமத்தைக் காட்டிலும் நாற்காலியிருந்து எழுந்தவன் படுக்கையை நோக்கி வந்த வேகத்தில் பதறியடித்துக்கொண்டு எழுந்தாள் வசுப்ரதா.
அதற்குள் அவளை நெருங்கி வந்து நின்ற மிருத்யுஞ்சயன் அவளது பதற்றத்தால் பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
“ஒருவழியா புரிஞ்சிடுச்சு போல”
“ப்ச்! வெளிய போ… நான் குளிக்கணும்”
“நான் அதுக்கு ஹெல்ப் பண்ணணுமா?”
“மிரு”
கண்களை உருட்டி சூடாக ஏதோ சொல்ல வந்தவள் முந்தைய தினம் வடக்கு மாகாணத்திலிருந்து திரும்பிய பிறகு இருக்க இடமும், உண்ண உணவும் கொடுத்த நன்றிக்காக அவனிடம் வார்த்தைகளைச் சிதறடிக்காமல் நின்றாள்.
தனது கைகளால் தலையைத் தாங்கி கண்களை மூடிக்கொண்டவள்
“எனக்கு ஒரே மண்டை காய்ச்சலா இருக்கு மிரு.. ப்ளீஸ் அதை அதிகமாக்காம இந்த ஊர்ல ட்ரஸ் கடை ஏதாச்சும் இருந்தா சொல்லு… உன் வசுவோட ட்ரஸ்சை போடுறது எனக்குக் கம்ஃபர்டபிளா இல்ல” என்று நொந்து போனக் குரலில் சொல்ல, அடுத்த நொடி விருட்டென ஒரு சத்தம்!
திடுக்கிட்டுக் கண்களை விழித்தவள் படுக்கைக்கு எதிரே இருந்த வார்ட்ரோபை மிருத்யுஞ்சயன் வேகமாகத் திறந்ததால் உண்டான சத்தம் தான் அது எனப் புரிந்ததும் அமைதியானாள்.
உள்ளே இருந்தவை வசுந்தராவின் உடைகள்! அதை அவன் காட்டவும் அதிருப்தியாக உச்சு கொட்டினாள்.
“நான் இதெல்லாம் போடமாட்டேன்”
“நான் உன்னை ட்ரஸ் போடுனு கம்பெல் பண்ணவே இல்லையே”
மீண்டும் அவனது விசமக்குரலில் ஒலித்த வாக்கியம் இரட்டை அர்த்தமாகத் தெரிய சுறுசுறுவென கோபம் மூண்டது வசுப்ரதாவுக்கு. அதே நேரம் கோபத்தில் வார்த்தைகளை விட்டெறிந்தால் தெரிந்த ஒருவனையும் விரோதித்துக்கொள்வோமோ என்ற தயக்கம்!
மிகவும் சிரமப்பட்டு வாயை மூடிக்கொண்டு பட்டெனக் கை குவித்தாள்.
“தெரியாம உன் கிட்ட வாயைக் குடுத்துட்டேன்”
“ஓஹ்! வுட் ஹவுஸ்ல நடந்ததைச் சொல்லுறியா? அப்ப நீ எங்க குடுத்த? நான் தானே உன்னோட லி…”
முழுவதுமாக முடிக்கும் முன்னர் வேகமாக அவனை நெருங்கி வாயைப் பொத்தி வார்ட்ரோபில் அவனைச் சாய்த்தாள் வசுப்ரதா.
“நான் குளிக்கப் போறேன்… குளிச்சுட்டு வந்து இதுல உள்ள ட்ரஸ்சையே போட்டுக்குறேன்… இனிமே நோ மோர் ஃப்ளர்ட்டிங், நோ மோர் டபுள் மீனிங் வேர்ட்ஸ், நோ மோர் டர்ட்டி ஸ்பீச்… புரிஞ்சுதா?”
புரிந்தது என்பது போல அப்பாவியாய் தலையாட்டியவன் தனது வாயைப் பொத்தியிருந்த அவளது கரத்தை அப்படியே முத்தமிடவும் “ஐயோம்மா” என்று அதை அகற்றிக்கொண்டாள்.
நமட்டுச்சிரிப்போடு அவள் உயரத்துக்குக் குனிந்தான் மிருத்யுஞ்சயன்.
“இனிமே எனக்கு ஆர்டர் போடுவ?” எனப் புருவத்தை உயர்த்தி அவன் வினவ, மாட்டேன் என மருண்ட விழிகளோடு வேகமாகத் தலையசைத்து மறுத்தாள் வசுப்ரதா.
அந்த மருண்டவிழிப் பார்வையை ரசித்தபடி ஒரு கரத்தால் அவளது கன்னத்தை அழுத்திவிட்டு வெளியேறினான் மிருத்யுஞ்சயன்.
அவன் அங்கிருந்து சென்றதும் ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறை வசுப்ரதாவுக்கு.
டவலோடு குளியலறைக்குள் சென்றவளின் மனமெங்கும் மிருத்யுஞ்சயனைப் பற்றிய எண்ணங்களே!
அவனைச் சமாளிப்பது அத்துணை சுலபமாகத் தோன்றவில்லை அவளுக்கு.
அதோடு சற்று முன்னர் வந்த கனவு ஒருவேளை முன்பு வந்தது போல நிஜமான சம்பவமாக இருந்தால் என்ற சந்தேகமும் உதயமானது.
மிருத்யுஞ்சயனும் வசுந்தராவும் காதலித்திருக்கிறார்கள். ஆனால் அவள் திடுமென அவனிடம் சண்டையிட்டுவிட்டு மாயமாகி வடக்கு மாகாணத்திற்குப் போயிருக்கிறாள்.
ஒருவேளை அவள் போனதற்கு இன்று தனது கனவில் வந்த முகம் தெரியாத நபர் காரணமாக இருக்கலாம் அல்லவா! முன்பு தனக்கு நேர்ந்த யாவும் கனவாகத் தெரிந்தது போல, இப்போது கனவில் தெரிந்த யாவும் வசுந்தராவுக்கு உண்மையில் நேர்ந்த அனுபவங்களாக இருக்கலாம் அல்லவா!
இப்படி எல்லாம் அவள் யோசிக்கும் போதே “ஒருவேளை அது வருங்காலத்துல உனக்கு நடக்கப் போற சம்பவமா இருந்தா? அதை நீ முன்கூட்டியே தெரிஞ்சிக்க வந்த கனவா இது இருந்தா? என்ன பண்ணுவ?” என்று திடுமென அவளைப் பயமுறுத்தியது வசுப்ரதாவின் மனசாட்சி.
இவ்வளவு நேரம் இருந்த சந்தேகம் தொலைந்து பயம் பிறந்தது.
ஒருவேளை கனவில் கண்ட ஆபத்து இனி தான் வரப்போகிறது என்றால் அதை எப்பாடு பட்டேனும் தவிர்த்தாக வேண்டும்.
‘நான் மிருத்யுஞ்சயனோடு இருந்தால் தானே அவனுக்கும் எனக்கும் ஆபத்து. இப்போதே அவனை விட்டு நான் நீங்க வேண்டும். என்னை கானகத்திலுள்ள புல்வெளியில் கொண்டு வந்து தள்ளிய சுழல் மீண்டும் அங்கே உருவாகலாம். அதன் மூலம் நான் மீண்டும் என் உலகத்துக்கே போய்விடவும் வாய்ப்பு இருக்கலாம்’
மிருத்யுஞ்சயனுக்கு அனர்த்தம் நேராமல் தடுக்கவும், தனது உலகத்துகே மீண்டும் செல்லவும் வசுப்ரதாவுக்கு ஒரு உபாயம் தோன்றியது.
மடமடவெனக் குளித்து முடித்தவள் வசுந்தராவின் உடைகளில் இருந்து ஒரு காட்டன் டாப் மற்றும் ஜீன்சை அணிந்து கொண்டாள். கூந்தல் உலர்த்தி நேரத்தை விரயமாக்க விரும்பாதவள் விறுவிறுவென அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
பணக்காரத்தனங்களை எளிமை எனும் போர்வையில் ஒளித்து வைத்திருக்கும் அந்த வில்லாவின் பெரிய அறையை பாதி ஹால், பாதி உணவுண்ணும் அறை என்ற விதத்தில் அமைத்திருந்தார்கள்.
உணவு மேஜையில் அமர்ந்திருந்தவன் அவள் வந்ததும் “சாப்பிடுவோமா?” என்று கேட்க
“இல்ல… நான் கிளம்புறேன் மிரு” என்றாள் அவள்.
“எங்க?” அவன் பார்வையில் கூர்மை ஏறியது.
“எங்க இருந்து வந்தேனோ அங்க போறேன் மிரு… மூனு நாளா என்னைப் பாத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்… பை”
கடகடவென ஒப்பித்துவிட்டு வெளியேறினாள் வசுப்ரதா.
அந்த வில்லா கானகத்தின் வெளியே அமைந்திருந்தது.
மிருத்யுஞ்சயனின் தந்தை அரசாங்கத்தில் அதிகாரியாக இருக்கிறாராம். அதில் வாங்கிய வில்லா என்று முந்தைய இரவில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. போதாக்குறைக்கு தாயாரும் பெரிய நிறுவனமொன்றில் பணியாற்றி லகரங்களில் ஊதியம் வாங்குவதாகச் சொன்னான்.
வசதியான குடும்பம் தான். ஆனால் அது மட்டுமே வைத்து ஆடம்பர வில்லா வாங்குவது சாத்தியமில்லை! ஏனோ அது குறித்து எல்லாம் அவனிடம் கேட்கவில்லை வசுப்ரதா.
கேட்க தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று எண்ணி அமைதியாக இருந்துவிட்டாள்.
அங்கிருந்து வெளியேறுபவளை ஏமாற்றம் கப்பிய விழிகளால் பார்த்த மிருத்யுஞ்சயனுக்கு அவளால் இங்கிருந்து போகமுடியாதென்ற நம்பிக்கை மட்டும் அழுத்தமாக இருந்தது.
இந்த வில்லாவிலிருந்து சிறிது தொலைவில் தான் அவள் வந்து விழுந்ததாகச் சொன்ன புல்வெளி இருந்தது. அங்கே செல்லட்டும்! எந்தச் சுழலும் வராது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளட்டும்! பின் எங்கே போவாள்? இங்கு தானே வந்தாக வேண்டும் என்ற அலட்சியம்.
வசுப்ரதாவோ வெகு நம்பிக்கையோடு வேக நடை போட்டு அந்தப் புல்வெளியை நோக்கி சென்றாள். எல்லாம் கனவில் வந்து போன இடங்கள் தானே! என்ன பெரிதாக ஆபத்து வந்துவிடப்போகிறது?
இத்தனைக்கும் செம்மலையில் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி இல்லை என்ற போது எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னுடைய உலகத்துக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடந்தவள் ஒருவழியாக அந்தப் புல்வெளியை அடைந்தும் விட்டாள்.
அடுத்து என்ன? என்ன செய்தால் அந்தச் சுழல் என் முன்னே தோன்றும்? எதுவும் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ நம்பிக்கை.
“ஏ சுழலே! எங்க போய் தொலைஞ்ச? என்னை இந்த பீஸ்ட் கிட்ட இருந்து காப்பாத்தி என்னோட உலகத்துக்கே கொண்டு போய் விட்டுடு”
வானத்தைப் பார்த்து கத்தினாள் வசுப்ரதா.
பாவம்! சுழல் தான் வரவில்லை!
“மத்த நேரத்துல எல்லாம் நான் கூப்பிடாமலே வருவல்ல? இப்ப என்னாச்சு? மத்தவங்களை மாதிரி உனக்கும் நான் ஈசி டார்கெட் ஆகிட்டேனா? நீயும் என்னை அலட்சியப்படுத்துறல்ல?”
கடைசி வாக்கியத்தைச் சொன்னதும் முணுக்கென கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு.
உடனே அன்னையைக் காணவேண்டும். அவரது மடியில் படுத்துக்கொள்ள வேண்டும். ‘நான் இருக்கிறேன் தங்கம் உனக்கு’ என்ற அவரது சொற்கள் தரும் பாதுகாப்பு உடனே வேண்டும் அவளுக்கு.
அந்தோ பரிதாபம்! இதற்கெல்லாம் அந்தச் சுழல் தானே பதிலாக இருக்க முடியும்! அதுவும் அவளைப் புறக்கணித்துவிட்டது. கத்தி கத்தி தொண்டை காய்ந்தது தான் மிச்சம். சுழல் வரவில்லை.
கண்கள் கலங்க அங்கே நின்றாள் வசுப்ரதா. அவளது முதுகுக்குப் பின்னே ஷூ கால்களின் சத்தம் கேட்டது. அடுத்த நொடி இனம்புரியாத பயம் முதுகைச் சில்லிட வைக்க சட்டெனத் திரும்பினாள் அவள்.
அவளது பயத்திற்கு அவசியமே நேராது என்பது போல அங்கே வந்து நின்றான் மிருத்யுஞ்சயன். முகத்தில் நக்கல் சிரிப்பு ஒட்டியிருந்தது.
“என்ன சுழல் வந்துச்சா?”
குரலில் கேலியும் கிண்டலும் கொட்டிக் கிடந்தன.
“நீ எதுக்காக இங்க வந்த?” தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்று அழுகை வெடிக்க கேட்டாள் வசுப்ரதா.
மிருத்யுஞ்சயனோ “த்சூ! பாவம் பொண்ணு தன்னந்தனியா போனாளே, என்னாச்சோனு அக்கறையோட ஓடி வந்தேன்மா… உனக்கு ஒரு கஷ்டம்னா நான் தானே ஹெல்ப் பண்ணனும்?” என்று போலியான பவ்வியத்தோடு சொல்லவும், தனது உலகத்துக்குச் செல்வோமென வசுப்ரதா வைத்திருந்த கடைசி துளி நம்பிக்கையும் போய்விட்டது.
அழுகை மறந்தது! கோபம் தான் வந்தது!
“எதுக்கு என் பின்னாடியே சுத்துற நீ? என்னால என்னைப் பாத்துக்க முடியும்… நான் உன் கிட்ட வந்து ஹெல்ப் பண்ணுனு கேட்டேனா?”
எரிச்சலோடு சீறினாள் வசுப்ரதா. அவளது சீற்றம் அர்த்தமற்றதாக ஒலித்தது மிருத்யுஞ்சனுக்கு. அவனுக்குள்ளும் கோபம் பரவியது.
“நீ கேட்டா தான் ஹெல்ப் பண்ணணும்ங்கிற அவசியம் எனக்குக் கிடையாது… எனிவேஸ், இங்க என்னைத் தவிர உனக்கு ஹெல்ப் பண்ண எவனும் வரப்போறதில்ல”
அவனது கோபமானது குரலில் ஒருவித அலட்சியத்தை உண்டாக்கிவிட அது வசுப்ரதாவை இன்னுமே சீண்டியது.
“எவனும் வரவேண்டாம்… I am not a damsel in distress… சோ உதவுறதா நினைச்சு என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ணாத… பசங்களோட கண்ணைப் பாத்தே அதுல இருக்குற கள்ளத்தனத்தை என்னால கண்டுபிடிக்க முடியும்… இப்ப உன் கண்ணுல தெரியுதே, அதைக் கண்டுபிடிச்ச மாதிரி”
கண்களைக் குத்துவது போல இரு விரல்களை நீட்டி அவள் சொன்ன விதத்தில் மிருத்யுஞ்சனின் கோபம் கரைந்து போனது.
புதிய இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்ற அவளது எச்சரிக்கையுணர்வு புரிந்தாலும், தன்னிடம் எச்சரிக்கையாக இருந்து இவள் என்ன சாதித்துவிடப்போகிறாள் என்ற எண்ணம் அவனைக் கோபத்தை விடுத்து சிரிக்க வைத்தது.
“மனசுக்குள்ள இருக்குற திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிச்சிட்டா, அதைச் சிரிச்சு சமாளிச்சு திசை திருப்ப நினைக்குறது ரொம்ப பழைய சைக்காலஜி… என் கிட்ட அதை ட்ரை பண்ணாத மிரு”
பெரிய மனோதத்துவ நிபுணர் போல வசுப்ரதா பேசியதில் மிருத்யுஞ்சனின் உதடுகள் மில்லிமீட்டர் சிரிப்பிலிருந்து சென்டிமீட்டர் சிரிப்புக்குத் தாவின.
“எனக்குள்ள இருக்குற நேர்மைய நான் தொலைச்சதுக்கு நீ மட்டும்தான் காரணம்… நான் உன்னை ரசிக்குறது, இம்ப்ரஸ் செய்யணும்னு ட்ரை பண்ணுறது, உன்னை என் கூடவே வச்சுக்கணும்னு நினைக்குறதுக்கு உன் டிக்ஸ்னரில திருட்டுத்தனம்னு அர்த்தம்னா நான் வாழ்க்கை முழுக்க நேர்மையில்லாதவனா இருக்க தான் விரும்புறேன் வசு… சோ இங்க இருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்ணாத… உன்னால போகவும் முடியாது… நீ சொன்னாலும் சொல்லாட்டியும் You are a damsel distress… என்னை விட்டா உனக்கு இங்க யாராலயும் பாதுகாப்பு குடுக்க முடியாது”
அதீத நம்பிக்கையுடன் மிருத்யுஞ்சயன் பேச, ஒருவேளை இதுதான் உண்மையோ என்று ஐயம் கொள்ள ஆரம்பித்தது வசுப்ரதாவின் உள்ளம்.
‘நான் கையறு நிலையில் இருக்கிறேனா? இனி என்னால் அம்மா, சிருஷ்டி, சாருலதா மேடம் என யாரையும் மீண்டும் பார்க்க முடியாதா?’
அந்த எண்ணமே அவளைப் பலவீனமாக்கிவிட்டது. அறிந்தவர் தெரிந்தவர் என யாருமேயில்லாத ஊருக்குப் போனாலே மனிதர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நாட்கணக்காகும்.
வசுப்ரதாவோ கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு இன்னொரு பிரபஞ்சத்தில் வந்து சிக்கியிருக்கிறாள். அவளால் மட்டும் எப்படி இயல்பாக எந்தப் பயமும் இல்லாமல் இங்கே இருக்க முடியும்?
மிருத்யுஞ்சயன் தனது கரத்தை நீட்டினான்.
“என் கூட வா வசு”
வசுப்ரதா கைகளைப் பிசைய தாமதிக்காமல் வலுக்கட்டாயமாக அவளது ஒரு கையைத் தன் கையுடன் பிணைத்துக்கொண்டான்.
“லெட்ஸ் கோ”
கையை விலக்க முயன்ற வசுப்ரதா கலக்கத்துடன் ஏறிடும்போதே “ரொம்ப தூரம் நடந்து வந்ததுல உன்னோட ஸ்டாமினா தீர்ந்து போயிருச்சு போல… டோன்ட் வொரி… ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணி மசில் பில்ட் பண்ணுனதுல்லாம் இந்த மொமண்டுக்காக தான்… ஐ அம் ஆல் யுவர்ஸ் வசு” என்றவன் அனாயசமாக அவளைத் தனது கரங்களில் ஏந்திக்கொண்டான். இத்தனை நாட்கள் அவளைச் சுழட்டிச் செல்லும் சுழல் மனித ரூபம் கொண்டது போல வசுப்ரதாவுக்கு அவன் தோற்றமளித்தான். அது எப்படி அவளைச் சுழட்டி எடுத்து வருமோ அதே போல அள்ளி எடுத்து தனது வில்லாவை நோக்கி நடை போட ஆரம்பித்தான் மிருத்யுஞ்சயன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

