உறக்கம் மற்றும் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள், கனவு காண்பது என்பது நம் உணர்ச்சிகளைச் சீர்தூக்கிப் பார்ப்பது, நினைவடுக்குகளில் ஒளிந்திருக்கும் சம்பவங்களை நினைவுகூர்வது மற்றும் நமக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வது என மூன்று விதமாக அமையும் என்கின்றன. குறிப்பாக REM வகை உறக்கத்தில்தான் இத்தகைய கனவுகள் அதிகமாக வருகின்றன என்கின்றன அந்த ஆராய்ச்சிகள்.
இலக்கின்றி வெறித்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான் மிருத்யுஞ்சயன். அவனருகே அமர்ந்திருந்த வசுப்ரதாவின் நிலையும் அதுவே.
ஆணுக்குத் தனது சரிபாதியாகச் ஆகவிருந்தவளை இழந்த வருத்தம்! பெண்ணுக்கோ தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறதென்றே புரியாத குழப்பம்!
அவள் செம்மலையில் திடுமெனக் குதித்து அன்றோடு முழுதாய் நாற்பத்தெட்டு மணி நேரம் கடந்திருந்தது. அவளைப் போல உருவமைப்பு கொண்ட வசுந்தராவின் சடலத்தைப் பார்த்ததும் கண்கள் கரித்துக்கொண்டன அவளுக்கு.
யாருமறியாவண்ணம் அவளுக்கு ஈமக்கிரியைகளைச் செய்த மிருத்யுஞ்சயன் மீது பரிதாபம்கூட வந்தது.
வசுந்தராவின் இரட்டை என்று சொல்லுமளவுக்கு உருவமைப்பு கொண்டவள், முகத்தை மறைத்துக்கொண்டு நடமாடுவதை அவளது சொந்தக்காரர்கள் கண்டுகொள்ளவுமில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தங்களில் ஒருத்தியை இழந்த துக்கத்தில் அவர்கள் ஆழ்ந்துவிட, ஹோட்டல் அறையில் முடங்கிக்கொண்ட வசுப்ரதா, இதோ சற்று நேரத்திற்கு முன்னர் மிருத்யுஞ்சயன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவனோடு மீண்டும் தெற்கு மாகாணத்துக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
மனமெங்கும் ஒரே குழப்பம்! வடக்கு மாகாணம், தெற்கு மாகாணம் என அறிமுகமற்ற நிர்வாக அமைப்புகள்! புதிது புதிதாக ஊர்ப்பெயர்கள்! எங்கிருக்கிறேன் நான்?
‘ஒருவேளை இது இணை பிரபஞ்சம் எனச் சொல்லப்படும் Parallel Universe ஆக இருக்குமோ? அல்லது மார்வெல் படங்களில் காட்டுவது போல வேறொரு timeline-க்குப் (காலக்கோடு) நான் வந்துவிட்டேனா?’
எல்லா இணை பிரபஞ்சங்களிலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம். இதே உருவமைப்புடனோ அல்லது சிற்சில மாறுதல்களுடனோ நமது வாழ்க்கை அங்கும் தொடர்ந்து கொண்டிருக்கும்.
ஒரு நபர் தன்னைப் போல இருக்கும் இன்னொரு நபர் வாழும் இணை பிரபஞ்சத்திற்குள் நுழையும் போது குழப்பங்கள் நேரலாம். இது காலக்கோடு எனப்படும் time line-க்கும் பொருந்தும்.
ஒரு இடத்தில் ஒரு வசுதான் இருக்க முடியும். அது வசுப்ரதாவாக இருக்கலாம். அல்லது வசுந்தராவாக இருக்கலாம். இந்தச் சமநிலை மாறுவதைப் பிரபஞ்சங்கள் விரும்புவதில்லை.
இதெல்லாம் முன்னரே சொன்னது போல அறிவியல் புனைவுப் படங்கள் மற்றும் சீரீஸ்களில் சொல்லப்பட்ட கருத்துகள். அதுதான் தனக்கும் நடக்கிறதா என்று யோசித்தாள் வசுப்ரதா.
ஒரு பிரபஞ்சத்தில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்துக்குச் செல்ல ‘Portals’ எனப்படும் வழிகள் வேண்டும்.
வசுப்ரதா இங்கே வந்து சேரக் காரணமான ‘portal’ எதுவாக இருக்கக்கூடுமென்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது, தொண்டையைக் கனைத்து அவளது கவனத்தைச் சிதறடித்தான் மிருத்யுஞ்சயன்.
“என்ன?” என்றவளிடம்,
“வசு இறந்தது வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன்,” எனப் பதிலளித்தான் அவன்.
ஏன் என்பது போலப் பார்த்தாள் வசுப்ரதா.
“அது தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்கும்… அவளோட இறப்பு ஒரு விதத்துல நிறைய பேருக்கு ஏமாற்றத்தையும் பாதிப்பையும் குடுக்கும்… அப்படி எதுவும் நடக்கவேண்டாம்.”
‘உன் இஷ்டம்’ என்பது போலத் தோள்களைக் குலுக்கினாள் வசுப்ரதா.
“கடந்த ஆறு மாசமா அவ வீட்டை விட்டு வெளிய வராம ஒரு ரூமுக்குள்ள அடைபட்டு வாழ்ந்திருக்கா… இது அவளோட சித்தி எனக்குக் குடுத்த ஸ்டேட்மென்ட்… அப்ப ஆறு மாசமா என்னைப் பாக்க வந்தது, என் கூட பழகுனது, திடீர்னு மறைஞ்சு ஓடுனது எல்லாம் யாருனு யோசிச்சுப் பாத்தேன்.”
வசுப்ரதாவின் இதயம் இந்த இடத்தில் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது. மிருத்யுஞ்சயன் அவளது நிலையை உணர்ந்தவனாகச் சிரித்தான்.
“அது நீதான்.”
“ம்ம்ம்… எனக்கும் புரியுது… நான் அதெல்லாம் கனவுனு நினைச்சேன்… இப்ப நடக்குறது கூட ஒருவேளை கனவுதானோனு சந்தேகம் வருது… மெட்ரோ ஸ்டேஷன்ல ட்ரெயினுக்காக வெயிட் பண்ணிட்டிருந்த நான் இங்க எப்பிடி வந்திருக்க முடியும்?”
பெருமூச்சுடன் கூறியவள், சற்று முன்னர் தான் யோசித்ததை அவனிடம் பகிர ஆரம்பித்தாள்.
“ஒருவேளை இது பேரலல் யூனிவர்ஸ், ஆல்டர்னேட் ரியாலிட்டி மாதிரி இருக்குமோ? நான் ஒரு வேரியண்டா இருப்பேனோ?”
சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான் அவன்.
“அதுல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷன் மூவீஸ்ல சாத்தியம்… நிஜத்துல வாய்ப்பே இல்ல… எனக்குத் தெரிஞ்சு நீ ஏதோ மெமரி லாஸ் கேஸ்… உனக்கு நீ யாருனு ஞாபகம் இல்ல… அவ்ளோதான்.”
அவன் இவ்வாறு சொன்னதும் வசுப்ரதாவுக்குச் சினம் மூண்டது.
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… இங்க பாரு, இது என் ஜாப் ஐடி.”
கைப்பையிலிருந்து தனது பணி அடையாள அட்டையை எடுத்துக் காட்டினாள் வசுப்ரதா. ஒரு கையால் அதை வாங்கிப் பார்த்தவன் வசுப்ரதாவின் விவரங்களைப் படித்துவிட்டு ‘சென்னை’ என்பதை வாசித்துவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.
திடுமென நினைவு வந்தவனாக, “ஒருவேளை நீ மெட்ராஸ் ப்ராவின்ஸ்ல இருந்து வந்திருக்கியா? அதைத்தான் முன்னாடி காலத்துல சென்னை ப்ராவின்ஸ்னு சொல்லுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்,” என்றான் அவன்.
“வாட்? யூ மீன் மெட்ராஸ் மாகாணம்? இதெல்லாம் என் தாத்தா பாட்டி காலத்துல தமிழ்நாட்டுக்கு இருந்த பேர்… அது சென்னையா மாறி ரொம்ப வருஷம் ஆகுது… நீ என்னமோ சொல்லுற… எப்பா சாமி எனக்குத் தலை சுத்துது… சத்தியமா நான் இங்க உள்ளவ இல்ல… அது மட்டும் உண்மை.”
புலம்ப ஆரம்பித்தாள் வசுப்ரதா.
மிருத்யுஞ்சயனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவளது வார்த்தைகளில் நம்பிக்கை பிறந்ததும் ‘சென்னை’ என்ற பெயரைப் பார்த்த பிறகுதான்.
‘இந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால் இன்னொரு பிரபஞ்சம் இருக்கலாம். அங்கே உள்ள சென்னையில் இந்தப் பெண் வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக அவள் நான் வாழும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அவ்வப்போது வந்து சென்றது உண்மை. அதை இவள் கனவு என்று சொன்னாலும் என் வாழ்க்கையில் நிஜமாக நடந்த சம்பவங்கள் அவை. இவள் எப்படி அந்தப் பிரபஞ்சத்திலிருந்து இங்கே பயணித்து வந்தாள்?’
யோசித்தபடியே காரை ஓட்டியவனுக்கு இன்னொரு குறுகுறுப்பும் தோன்றியது. அதை வசுப்ரதாவிடம் கேட்டும் விட்டான்.
“ரெண்டு வசு மாதிரி ரெண்டு மிரு இருக்க வாய்ப்பிருக்குல்ல?”
“தெரியல… உன்னை மாதிரி ஒருத்தனை நான் அங்க பாக்கல.”
சட்டெனப் பதிலளித்தவள், “இப்ப நான் மறுபடி என் வீட்டுக்குப் போகணும் மிரு… என்னால இங்க இருக்க முடியாது,” என்றாள் தவிப்புடன்.
“இங்க எனக்கு எல்லாமே புதுசா இருக்கு… கொஞ்சம் பயமாவும் இருக்கு… அம்மாக்குக் கோவம் தணிஞ்சா என்னைத் தேடுவாங்க… சிருஷ்டிக்கு ஹாஸ்பிட்டல் செலவு இருக்கு… அதுக்கு யார் பணம் குடுப்பாங்க? எனக்கான மனுஷங்களை விட்டு என்னைப் பிரிச்செடுத்து அந்தச் சுழல் என்னை ஏன் இங்க கொண்டு வந்து தள்ளுச்சு?”
சொல்லி முடிக்கும் போதே கண்களில் கண்ணீர் ததும்பிவிட்டது.
அவளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் மிருத்யுஞ்சயன் இல்லை. அவன் மனம் மதில் மேல் பூனையாக இருக்கையில் எப்படி அவன் ஆறுதல் கூறுவான்? அவனது காதலி இறந்துவிட்டாள். இந்நிலையில் அவனால் பரிபூரணமாக அவளுக்காக வருத்தப்பட முடியவில்லை.
அவள் என்று நினைத்து வசுப்ரதாவுடன் செலவழித்த பொழுதுகள் நினைவுக்கு வந்து தொலைத்தன. வசுப்ரதா அவனுக்குப் பரிச்சயமானவள்! ஆறு மாதங்கள் அவளுடைய இதமான உரையாடல்கள், சீண்டல்கள், நாணம் எல்லாம் அவனுக்கு நன்கு பரிச்சயமே, வசுந்தராவுடையது போலவே!
எல்லாவற்றையும் விட அவனுக்கு வசுப்ரதாவை இழக்கும் விருப்பமில்லை! எவ்வளவு பெரிய சுயநலவாதி நீ என்று மனசாட்சி கழுவி ஊற்றியதையும் பொருட்படுத்தாமல், அவனது மூளை எப்படி வசுப்ரதாவைத் தன்னுடன் வைத்துக் கொள்வதென யோசிக்க ஆரம்பித்துவிட்டது.
இழந்த இடத்தில் நின்று துக்கம் கொண்டாடி வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்ளும் விருப்பமில்லை அவனுக்கு. இருளில் ஒளியாய் ஒருத்தியைக் காலம் அவன் கண் முன்னே நிறுத்தியிருக்கிறது. அவளை இழக்க அவன் என்ன முட்டாளா?
தனது மூளை தீர்மானித்ததை அவளிடம் பகிரவும் ஆரம்பித்தான்.
“லுக்! புலம்புறதை விட்டுட்டு அடுத்து என்னனு யோசி.”
“அதுதான் தெரியலையே,” சோகமாகக் கூறினாள் வசுப்ரதா.
“நீ எங்க இருந்து வந்தியோ அங்க உன்னைத் திருப்பி அனுப்புற வழி என்னனு எனக்குத் தெரியல… அந்த வழியைக் கண்டுபிடிக்குற வரைக்கும் நீ என் கூடவே இரு,” என்றவன் அதோடு முடிக்கவில்லை.
“சப்போஸ் கண்டுபிடிக்க முடியலனா என் கூடவே நிரந்தரமா இருந்துடு.”
மிருத்யுஞ்சயன் இவ்வாறு சொன்னதும் வசுப்ரதாவுக்குத் திகைப்பு.
“ஹவ் இஸ் இட் பாசிபிள்? என் அம்மா, சிருஷ்டி எல்லாரும் எங்க இருக்காங்களோ அங்கதான் நான் இருக்கணும்.”
“மே பி இங்கயும் அவங்க இருக்கலாம்,” ஆசை காட்டினான் அவன்.
வசுப்ரதா தலையை உலுக்கிக்கொண்டாள்.
“என் மூளைய குழப்பாத மிரு… ஆல்ரெடி நான் நிறைய குழம்பி போயிருக்கேன்… பயந்து போயிருக்கேன்… என் நிலமை புரியாம நீயும் பேசாத… ஐ வாண்ட் டூ கோ டூ மை வேர்ல்ட்.”
“தென் வாட் அபவுட் மீ?”
“ஐ டோண்ட் நோ… உன்னைப் பத்தி நான் ஏன் யோசிக்கணும்?”
“இதெல்லாம் என் கூட ஆறு மாசமா பழகி ‘நீ என்னைக் காதலிக்கிற’ங்கிற ஹலுசினேஷன்ல என்னை வைக்குறதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கணும் வசு.”
“விட்டா நான் உன்னைக் காதலிச்சு ஏமாத்திட்டேன்னு கூட சொல்லுவ போல… புரிஞ்சிக்க, உன்னை பாத்தது, உன் கூட பழகுனது எல்லாம் எனக்குக் கனவுல வந்த சம்பவங்கள்.”
“ஆனா அது ஒவ்வொன்னும் எனக்கு நிஜமா நடந்த சம்பவங்கள்… உன் கூட நான் இருந்த ஒவ்வொரு நிமிஷத்துலயும் நான் உன்னைக் காதலிச்சேன்… நீயும் தான்.”
வசுப்ரதா கண்களை இறுக மூடிக்கொண்டாள். கேட்க சங்கடமாக இருந்தாலும் அது உண்மையே! கனவில் வந்த ஆடவனை எங்கே மீண்டும் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் சைக்கியாட்ரிஸ்டிடம் போக மறுத்தவளாயிற்றே!
செம்மலையில் அந்த மரவீட்டில் முகம் தெரியாத நிலையிலும் அவனுடன் கழித்த தருணங்கள் அவளுக்கு இதமாகவே இருந்தது அப்போது. வாழ்க்கைத்துணைக்கான தனது எதிர்பார்ப்புகளோடு அவனது குணம் ஒத்திருந்ததால் அவளுமே கனவுகள் கொடுத்த தருணங்களை ரசித்ததுண்டு. மயங்கிப் போனதும் உண்டு.
மனதிற்குள் ஒளிந்திருந்த ரகசியத்தை இப்படிப் போட்டு உடைத்துவிட்டானே என்று அங்கலாய்த்தவள், “காதலிச்சேன்னு சொன்னேனா? ஒரு பொண்ணு பையன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுனா அவனை லவ் பண்ணுறதா அர்த்தமா?” என்று சாமர்த்தியமாகப் பேச்சை மடை மாற்றப் பார்த்தாள்.
“சத்தியமா இல்ல… ஆனா அந்தப் பையன் ஹக் பண்ணுனாலும் கிஸ் பண்ணுனாலும் மடியில படுத்தாலும் கன்னம் ரெண்டும் ப்ளஷ் ஆகி அதை ரசிச்சா அதுக்கு பேர் என்ன? சிச்சுவேஷன்ஷிப்? ஹூக்கப்?”
“ஹூக்கப்பா?”
அந்த வார்த்தையில் கலங்கிப் போனாள் வசுப்ரதா. கலங்குவது என்றால் கண் கலங்குவது மட்டுமில்லை. ஒட்டுமொத்தமாகக் காயப்பட்டுப் போனாள் என்றே சொல்லலாம்.
‘எப்படி கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டவள் நான்? என்னிடம் இந்த வார்த்தையை உதிர்க்க இவனுக்கு எப்படி மனம் வந்தது?’
“ஐ அம் நாட் க்ரேவிங் ஃபார் செக்ஸ்… நீ என்னை ரொம்ப மட்டமா பேசுற மிரு.”
“அதை விட மட்டமா உன் மனசுல உள்ள ஃபீலிங்ஸை நீ பூசி மொழுகுற வசு.”
“நீ என் மனசுக்குள்ள புகுந்து பாத்தது மாதிரி பேசாத,” அழுகையில் குரல் குளறியது.
“உன் மனசுக்குள்ள புகுந்து பாக்கணும்ங்கிற அவசியம் எனக்கு இல்ல… ஐ கேன் ரீட் ஃப்ரம் யுவர் ஐஸ்… வசுவ பத்தி நான் பேசுற ஒவ்வொரு செகண்டும் உன் கண்ணுல தெரிஞ்ச வேதனைய நான் பாத்தேன்… அழுது சமாளிக்கலாம்னு நினைக்காத.”
இதற்கு மேல் பேசினால் கட்டாயம் அவள் அழுதே விடுவாள் என்பதால் அமைதியாய் கார் ஓட்டுவதில் கவனமானான் மிருத்யுஞ்சயன்.
‘ஹூக்கப்’ என்று சொன்னது சற்று அதீதமான பதிலடிதான் என அவனுக்கும் புரிந்தது. ஆனால் மனதிலுள்ள உணர்வுகளை மறைக்கிறவளிடம் ‘பொன்னே பூவே’ என்று பேசுமளவுக்கு மிருத்யுஞ்சயன் பக்குவமானவன் இல்லை.
இந்த அதிரடிப் பேச்சு, முரடான உடல்மொழி, அலட்சியமான செயல்பாடுகள் இதெல்லாம் அவனது இயல்பு.
கனவில் சில மணி நேரங்கள் செலவழித்த போது ‘ப்ரின்ஸ் சார்மிங்’காகத் தெரிந்தவன் இப்போது ‘பீஸ்டாக’த் தெரிந்தான் வசுப்ரதாவுக்கு.
அவனுக்கு முகம் காட்டாமல் கார்க்கண்ணாடி வழியே வேடிக்கை பார்ப்பது போலக் காட்டிக்கொண்டு மௌனமாக விசும்ப ஆரம்பித்தாள்.
‘என்னை வார்த்தையால் வதைக்கும் போது மட்டும் அனைவரின் நாவுக்கும் அதீத விஷம் ஏறிவிடும் போல. வார்த்தைகளில் உதாசீனமும், ஏளனமும், அடாத பழியும் நிரப்பி என்னைத் தாக்குவதில் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ஏன் நான் இவர்கள் அனைவருக்கும் ‘ஈசி டார்கெட்’ ஆகிப்போனேன்?’
யோசித்தபடியே அழுதவளுக்குத் தனது இயல்பை அனைவரும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் என்றே தோன்றியது.
“ஐ அம் நாட் அ பன்சிங் பேக்… ஏன் எல்லாரும் உங்களோட இயலாமை, ஏமாற்றம், வருத்தத்தை என் மேல கொட்டுறிங்க? எனக்கும் வலிக்கும்.”
மானசீகமாகப் பேசிக்கொண்டே அழுதவள் “இனிமே நான் அடுத்தவங்களோட உணர்வுகளை வாங்கிக்கிற பன்சிங் பேகா இருக்கப்போறதில்ல… போதும்! ரொம்ப பட்டுட்டேன்… ஐ ஹேவ் டு சேஞ்ச் மைசெல்ஃப்,” என்று சங்கல்பம் செய்துகொண்டவளுக்கு அடுத்தடுத்து அந்தச் சங்கல்பத்தை இல்லாமல் செய்யப்போகும் நிகழ்வுகள் காத்திருப்பது தெரிந்தால் தானே!
அதென்னவோ மென்மையான இதயம் கொண்டவர்களை இந்த உலகம் ‘எலியை உருட்டி விளையாடும் பூனையைப்’ போல உருட்டிப் பந்தாடி விடுகிறது. அவர்கள் தங்களை வலிமையாக்கிக் கொள்ள எண்ணினாலும் இந்த உலகம் அதற்கான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

