“உங்கள் கனவுகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள்! ஒருவேளை உங்கள் கனவுகள் ஜீவனிழந்து போகுமாயின், உங்களின் நிஜவாழ்க்கை பறக்கும் சக்தியிழந்த சிறகு முறிந்த பறவையாகிப் போகும்”
-லாங்ஸ்டன் ஹியூஸ்
அழகான நீண்ட மலைத்தொடர்! அதன் முகடுகளில் தகதகவென ஆரஞ்சு வண்ணத்தில் எட்டிப் பார்க்கும் கதிரவன்! மெதுமெதுவாகக் கதிரவனின் கதிர்கள் முகடுகளை முத்தமிட ஆரம்பிக்கையில் அவனது அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் விழித்துக்கொண்டாள்.
சுற்றி முற்றிப் பார்த்தாள்! எங்கு நோக்கினும் மரங்கள் நிறைந்த கானகங்கள் அடங்கிய மலையின் கம்பீரத்தோற்றம்! செம்மலை! அதுதான் அவள் தற்போதிருக்கும் மலைவாசஸ்தலத்தின் பெயர்.
இந்தப் பகுதியிலுள்ள மலைக்காடுகளில் செம்மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சூட்டப்பட்ட பெயரை விடுதலைக்குப் பிறகு தமிழாக்கி ‘செம்மலை’ என்று வைத்துவிட்டார்கள்.
அழகு கொஞ்சும் மலைக்காட்டிற்குள் சுற்றுலா என்ற பெயரில் மனிதர்களை அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை. அதனால் அதன் அழகு பாலிதீனாலும், ப்ளாஸ்டிக்காலும் சீரழிக்கப்படாமல் இருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வீசும் காற்றில் கூட அத்துணை புத்துணர்ச்சி!
கண் விழித்தவள் சூரியக்கதிரின் வெம்மை முகத்தில் படவும் காலையாகி விட்டதென்பதை உணர்ந்து தன்னருகே சயனித்திருந்தவனை எழுப்பினாள்.
“டைம் ஆகுது! எழுந்திரு… ப்ச்! கண்ணை முழிச்சு பாரு மேன்”
அவனது புஜத்தில் அவள் அடித்த அடிகள் எல்லாம் வீணாகின. அவன் கண் விழிப்பதாகவே தெரியவில்லை.
“ப்ச்! டெய்லியும் இப்பிடி தான் பண்ணுறான்”
அவள் சலித்துக்கொள்ளும் போதே “வசு” என்று எங்கிருந்தோ ஒலிபெருக்கி அறிவிப்பு போல ஒரு குரல் கேட்டது!
அந்தக் குரல் கேட்டதுதான் தாமதம், இவ்வளவு நேரம் படுத்திருந்த மரவீட்டின் மேல்தளத்திலிருந்து அசுரவேகத்தில் கீழிறங்க ஆரம்பித்தாள் அவள்.
“வசு! எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்… இந்தப் பொண்ணு என்ன பண்ணுறா?”
மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்பு!
“ஐயோ டைம் ஆகிடுச்சு” பரபரத்தவள் மரவீட்டின் ஏணியில் வேகமாக இறங்கியதில் கால் வழுக்கிவிடப் பிடித்திருந்த பிடியை நழுவ விட்டு “ஆஆஆஆ” என்று கத்தியபடியே கீழே விழலானாள்.

கீழே சிறிதும் பெரிதுமாகப் பாறைகள், குத்துச்செடிகள், புதர் எல்லாம் உண்டே! பயத்தில் கண்களை மூடியவளுக்குத் தன்னைச் சுற்றி தெரிந்த கானகம், அதிலிருந்த மரங்கள், இப்போதிருந்த மரவீடு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைவது போன்ற உணர்வு.
அனைத்தும் நீர்ச்சுழி போல சுழல்வது போன்ற பிரமை!
அந்த நீர்ச்சுழி பெரிதாகி அவளையே விழுங்கிவிட “வசு” என்று உச்சஸ்தாயியில் ஒலித்தது ஒரு பெண்மணியின் குரல்.
சட்டென விழிகளைத் திறந்தாள் அவள்! வசுப்ரதா! இவ்வளவு நேரம் செம்மலையின் அடர்கானகத்திலிருந்த மரவீட்டில் யாரோ ஒரு ஆடவனுடன் உறங்கிக்கொண்டிருந்தவள் இப்போது படுத்திருப்பதோ அவளது அறையின் வாயிலில்.
பரபரப்புடன் எழுந்தவள் கண்களைக் கசக்கியபோதே அவள் முன்னே வந்து நின்றார் சற்று முன்னே அவளை “வசு” என்று ஒலிபெருக்கிக் குரலில் அழைத்த தாரணி.
கண்களைக் கசக்கியபடி திறந்திருந்த அறையின் வாயிலில் அமர்ந்திருந்தவளைத் திகைப்புடன் பார்த்தவர் “இன்னைக்கும் கனவு வந்துச்சா வசு?” என்று கேட்க ஆமெனத் தலையாட்டினாள் அவள்.
கலைந்திருந்த அவளது கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டவர் “நம்ம சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போகலாமாடா?” என்று கேட்க மறுப்பாகத் தலையசைத்தபடி எழுந்தாள் வசுப்ரதா.
“ஆப்டர் ஆல் கனவு தானேம்மா! விடுங்க… சைக்கியாட்ரிஸ்டுக்கு வேற தெண்டமா காசை இறைக்கணும்… அதுல நம்ம குடும்பத்தோட ஒரு மாச செலவு”
அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்னொரு இளம் குரல் ஒலித்தது இடையூறாக.
“புதுசா வந்த ஏ.ஐ சாஃப்ட்வேர் கோர்ஸ் படிச்சியே, அது என்னோட மூனு வருச காலேஜ் ஃபீஸுக்கு ஈக்வல்… அதுக்காக படிக்காமலா விட்ட? அதுவும் தெண்டச்செலவு தானே? ஒழுங்கா பி.காமை கம்ப்ளீட் பண்ணிருந்தா அக்கவுண்டண்ட் வேலையாச்சும் கிடைச்சிருக்கும்… தத்தி மாதிரி அதுல அவ்ளோ அரியர் வச்சுட்டு ஏ.ஐ, பி.ஐனு படிச்சுட்டு ஒரு வருசமா எந்த வேலையிலயும் நிலைக்காம சுத்துற”
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியும் அங்கே பிரசன்னமானாள். அவளை அதிருப்தியாகப் பார்த்தார் தாரணி.
“சிருஷ்டி…”
“நீ சும்மா இரும்மா… இவ ஃபர்ஸ்ட் இயர்ல அரியர் வச்சப்பவே நீ கண்டிச்சிருக்கணும்… பொன்னோ பூவோனு நடத்துனல்ல… அதான் அப்பாவோட சேவிங்சை காலி பண்ணிட்டு ஒரு வேலைலயும் நிலைச்சிருக்காம வெட்டியா இருக்கா இவ”
வசுப்ரதாவை முறைத்தபடி சொன்ன சிருஷ்டிக்கு வயது பதினெட்டு. இப்போதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் சிறுபெண். பட்டப்படிப்பு படித்தால் வாழ்க்கை வண்ணமயமாகிவிடும், அதில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டால் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாமென நம்பும் அப்பாவி. கூடுதல் தகுதியாக அவள் நன்றாகப் படிக்கும் மாணவி. பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததால் அவளது கனவான ஆர்க்கிடெக்சரை தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்லூரியில் கட்டணமில்லாமல் படித்துக்கொண்டிருப்பவள்.
அதனால் தானோ என்னவோ சுமாராகப் படிப்பவளான வசுப்ரதா மீது அவளுக்கு எப்போதுமே ஒரு அலட்சியம் உண்டு. அதற்காகத் தமக்கைமீது பாசமில்லாதவள் இல்லை. தந்தை தவநாதன் தங்களைத் தவிக்கவிட்டு மறைந்தபோதிலிருந்து பொறுப்பாக நடந்துகொள்ளும் தமக்கை மீது அவளுக்குத் தனிப்பிரியம் உண்டு. ஆனால் கல்வியை அவள் அலட்சியப்படுத்தியதால் சிறுகோபம். அந்த அலட்சியம் தான் இன்று வரை நிலையாக ஒரு வேலை கிடைக்காமல் வசுப்ரதா தடுமாறுவதற்கு காரணமென அழுத்தமாக நம்பினாள் இளையவள்.
இதெல்லாம் வசுப்ரதாவுக்கும் தெரியும். அவள் ‘வராத படிப்பை வா வானு சொன்னா மட்டும் வந்துடுமா?’ எனும் ரகம். அதற்காக விளிம்பில் தேர்ச்சியடைபவளும் இல்லை. ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து சதம் மதிப்பெண் எடுக்குமளவுக்குச் சுமார் ரகம். அவ்வளவே!
படிப்பு விசயத்தில் இளையவள் மூத்தவளை மட்டம் தட்டுவது தாரணிக்கு எப்போதுமே பிடிக்காது. இப்போதும்தான். கண்டிப்புப் பார்வை பார்த்தவர் “நீ இப்ப கிளம்புனா தான் காலேஜ் பஸ் வர்றதுக்குள்ள ரெடியாக முடியும்” என்று சொல்லி அவளை அன்னையின் கண்டிப்பிலிருந்து காப்பாற்றினாள் வசுப்ரதா.
சிருஷ்டியும் முகம் மாறினாள்.
“ஆமால்ல! டைம் ஏழு ஆகுது… ம்மா! நீ எனக்கு லஞ்ச் பேக் பண்ணு போ… ஹான்! இன்னைக்கு நீ ஒரு இண்டர்வியூக்குப் போறதா சொன்னல்ல வசு… ஆல் த பெஸ்ட்… இந்த வேலையிலயாச்சும் பெர்மனன்டா இருக்குற மாதிரி பாத்துக்க”
படபடவென வெடித்துவிட்டுக் குளிக்க ஓடியது அந்தச் சிறுபறவை.
ஓடியவளைப் பார்த்த தாரணியின் அதிருப்திப் பார்வை அப்படியே வசுப்ரதாவின் பக்கம் திரும்பியது.
“வர வர சிருஷ்டிக்கு வாய் ஓவராகிடுச்சு… நீயும் என்னை கண்டிக்க விடமாட்றடி”
“ம்மா! அவ என்னை விரோதியா பாக்கலயே… ஆக்சுவலி, படிப்ஸா இருக்குறவங்களுக்கு என்னை மாதிரி ஆவரேஜ் ஸ்டூடண்ட் மேல சின்ன கோபம் இருக்கும்… அதை தான் சிருஷ்டி அப்பப்ப வெளிக்காட்டுறா… அவ சொல்லுறதும் சரிதானே? நான் எந்த வேலையிலயும் நிலைச்சு இருந்ததில்ல”
“உன் சூழ்நிலை புரியாம அவ பேசுறாடி”
மனத்தாங்கலைக் கொட்டினார் தாரணி.
“இருக்கட்டுமே… என் தங்கச்சி திட்டுனா நான் குறைஞ்சு போயிடமாட்டேன்”
வசுப்ரதா என்றுமே சிருஷ்டியை விட்டுக்கொடுக்க மாட்டாள். அது தாரணிக்கும் தெரியும். இந்த வேலையாவது மகளுக்கு நிலைக்க வேண்டுமென அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்தார் அவர்.
“சரி… நீ போய் குளிச்சு இண்டர்வியூக்கு வேண்டிய டாக்குமெண்ட் எல்லாத்தையும் தயாரா வச்சுக்க… இன்னைக்கு உனக்குப் பிடிச்ச பெசரட்டு, பூண்டு சட்னி… டக்குனு குளிச்சுட்டு வா”
வசுப்ரதாவுக்கு அன்னை சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறியது. வேகமாக குளிக்க விரைந்தாள்.
குளியலறை ஷவரில் இதமான சுடுநீரில் உடல் நனைந்த போதுதான் காலின் பெருவிரலை அவள் கவனித்தாள். எதிலோ இடித்த காயம் அதில்! இரத்தம் கூட கசிந்திருந்தது. எங்கே இடித்தாள் என்பது அவளுக்கே நினைவில்லை. நெற்றியைக் கசக்கியதில் அன்றைய தினம் வந்த கனவு ஞாபகம் வந்தது.
மரவீட்டின் ஏணிப்படியில் கால் சறுக்கியதே! அப்போது பெருவிரல் வலித்ததாக ஞாபகம்!
கனவில் இடித்தால் நிஜத்தில் எப்படிக் காலில் காயம் வரும்? ஒருவேளை வழக்கம் போல கனவு கண்டபடி உறக்கத்தில் நடந்து சென்று அறைவாயிலில் படுத்தாளே, அப்போது கதவில் கால் இடித்திருக்குமோ?
வசுப்ரதாவுக்கு ஒரே குழப்பம்!
ஏன் ஏணியிலிருந்து வேகமாக இறங்கினோம்? யோசித்தவளுக்குப் படிப்படியாகக் கனவு நினைவுக்கு வந்தது.
மெதுவாகக் கனவு பின்னோக்கி விரிந்தது.
இரவின் தனிமையில் அவள் மரவீட்டில் ஒரு வாலிபனுடன் ஏதோ பேசுகிறாள். மேகங்கள் நகர்வதும், நட்சத்திரங்கள் ஜொலிப்பதும் வானில் ஒரு வர்ணஜாலம் போல நிகழ்ந்து கொண்டிருக்க வானமே குடையாக இருவரும் மரவீட்டின் வெளிப்புறத்தில் படுத்தது வரை அந்தக் கனவு விரிந்தது.
இது போல தினந்தோறும் ஏதேதோ கனவுகள் அவளுக்கு வருகின்றன. கடந்த ஆறுமாத காலத்தில் இது வாடிக்கையாகிப் போனது அவளுக்கு.
கிட்டத்தட்ட நூற்றிருபது நாட்கள் அவள் இப்படி தான் கனவு கண்டு உறக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறாள். அனைத்து கனவுகளிலும் யாரோ ஒரு வாலிபனோடு அவள் பேசுகிறாள்! சிரிக்கிறாள்! இருவரும் கரம் கோர்த்து நடப்பார்கள்! சில நேரங்களில் செம்மலையின் சூரிய ஒளி தீண்டாத கானகங்களில் எதையோ தேடி சலிப்பார்கள்!
இதுநாள் வரை அவனது குரல், ஸ்பரிசம் எல்லாம் அவளுக்குப் பரிச்சயமாகியிருந்தாலும், அவனது முகம் மட்டும் அவளுக்குத் தெரியாது. யார் அவன்?
என்ன யோசித்தும் அவனுடைய முகம் அவளுக்கு ஞாபகம் வராமல் போகவும் ஆக வேண்டிய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் வசுப்ரதா.
“ஆப்டர் ஆல் கனவு தானே”
குளித்து நேர்முகத்தேர்வுக்காக நேர்த்தியாக உடையணிந்து அறையை விட்டு வெளியேறியதும் பெசரட்டின் நறுமணம் அவளது நாசியை நிறைத்தது.
சுடச்சுட பெசரட்டு, காரச்சாரமான பூண்டு சட்னியுடன் காலையுணவை முடித்துக்கொண்டவள் கிளம்பும் முன்னர் தந்தையின் புகைப்படம் முன்னே வந்து நின்றாள்.
“இந்த வேலை எனக்குக் கிடைக்கணும்பா… கிட்டத்தட்ட என்னோட ட்ரீம் ஜாப் இது… தமிழ்நாட்டோட நம்பர் ஒன் பப்ளிஷிங் ஹவுஸ்ல ஆர்ட் டிசைனர் வேலை… இந்த வேலை மட்டும் கிடைச்சுதுனா, அவங்களோட புக் கவர், மேகசின் கவர், அவங்க பப்ளிஷ் பண்ணப்போற சில்ட்ரன் ஸ்டோரி புக்ஸோட பிக்சர்ஸ் எல்லாம் நான் தான் டிசைன் பண்ணுவேன்… உங்களோட ஆசிர்வாதம் எனக்கு வேணும்பா”
தந்தையை வணங்கிவிட்டுத் தாயாரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் வசுப்ரதா.
டெக்கான் பதிப்பாலயத்தின் அலுவலகம் அண்ணா சாலையில் இருந்தது. வீட்டிலிருந்து அதிகத் தொலைவில்லை.
வசுப்ரதா அங்கே போய் நின்ற போது நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்ததும் அவளுக்குக் கண்கள் கட்டியது.
‘இவர்களில் நான் எப்படி தேர்வாகப் போகிறேன்?’
மலையளவு மலைப்பு எழுந்தது மனதில்.
“வசுப்ரதா தவநாதன்”
அவளது பெயர் அழைக்கப்பட்டதும் உள்ளே சென்றாள். அங்கே நான்கு நபர்கள் அமர்ந்திருந்தார்கள். டெக்கான் பதிப்பாலயத்தின் தற்போதைய மேலாண்மை இயக்குநர் விஸ்வேஷ்வரன், பொது மேலாளர் சதீஷ், மனிதவள மேலாளர் சாருபாலா, அட்டைப்படம் தயாரிக்கும் துறையின் மேலாளர் நிவாஷிணி.
அமர்ந்திருந்தவர்களில் விஸ்வேஷ்வரனுக்கு ஐம்பதைத் தாண்டிய வயது. பொது மேலாளர் சதீஷுக்கு நடுத்தர வயது. சாருபாலாவும் நிவாஷிணியும் பின் முப்பதுகளில் இருந்தார்கள்.
வசுப்ரதாவின் கோப்பினைப் புரட்டிப் பார்த்தார்கள். வரைகலைக்கான செயற்கை நுண்ணறிவு கோர்சுக்கான மதிப்பெண் பட்டியலையும் சான்றிதழையும் பார்த்தவர்களின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.
புன்னகையோடு நால்வரும் அவளைப் பார்த்தார்கள்.
“யூ ஆர் செலக்டட்… உங்க ஆபர் லெட்டர் மெயில்ல வரும்… கமிங் மண்டேல இருந்து ஜாயின் பண்ணிக்கோங்க”
சாருபாலா இவ்வாறு கூறியதும் சந்தோஷத்தின் உச்சத்துக்கே போய்விட்டாள் அவள்.
“தேங்க்யூ சோ மச் மேம்… தேங்க்யூ சார்… ஐ வில் டு மை பெஸ்ட்”
சதீஷ் அவளது கையைப் பற்றிக் குலுக்கினார்.
“உங்களுக்குக் குடுக்கப் போற முதல் வேலையே ரொம்ப சேலஞ்சிங்கானது… வெல்கம் டூ டெக்கான் பப்ளிஷிங் ஹவுஸ்”
நம்பவியலாத பூரிப்பும், ஆனந்த அதிர்ச்சிக்கான புல்லரிப்பும் வசுப்ரதாவை ஆட்கொள்ள “ஹேய்” என்று கூவி துள்ளிக் குதிக்க வேண்டும் போன்ற உணர்வு!
நால்வரிடமும் மரியாதைப்பூர்வமாக விடைபெற்றவள் வெளியே வந்தபோது வரவேற்பில் இருந்த பெண்ணிடம் யாரோ தகராறு செய்து கொண்டிருந்தார்கள்.
யாரோ ஒரு நடுத்தர வயது நபர்.
“உங்க பப்ளிஷிங் ஹவுஸ் எனக்குப் பண்ணுன துரோகத்துக்குப் பதில் சொல்லியே ஆகணும்”
ஏனோ வசுப்ரதாவின் கவனத்தை அவரது குரல் ஈர்க்கவில்லை. வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ஏழாவது சொர்க்கத்தில் இருந்தாள் அவள். இனி தரையிறங்குவது அவ்வளவே எளிதில் நடக்காது!

நேர்முகத்தேர்வில் தன்னை நோக்கி கேள்விக்கணைகள் வீசப்படுமென எண்ணியவளுக்கு வெறுமெனே சான்றிதழ் சரிபார்ப்பிலேயே வேலை கிடைத்த மகிழ்ச்சி! அதில் அவள் கவனிக்கத் தவறிய உண்மைகள் இன்னும் சில நாட்களில் அவளைப் பெரும் சோதனையில் ஆழ்த்தப் போவதை அறியாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் வசுப்ரதா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

